காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை இப்படி சொன்னார்...
"நிஜமாகவே இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்தார் என்பதை எதிர்கால சந்ததிகள் நம்ப மறுக்கும்..!"
இத்தனைக்கும் காந்தி அப்படி ஒன்றும் செய்யமுடியாத மந்திர தந்திரங்களை செய்துவிடவில்லை... இருந்தும் ஜகம் புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அப்படி சொல்ல காரணம் இருக்கிறது..
நம் பாரதத்தின் பழம்பெரும் புராண கதை மாந்தர்களாயினும் சரி.. கார்டூன் கதாபாத்திரங்களானாலும் சரி... அல்லது ஹாலிவுட் / மார்வெல் ஸ்டூடியோ சூப்பர் ஹீரோக்களாயினும் சரி.. மக்களுக்கு தொண்டுசெய்ய வேண்டுமாயின்
அட்சயபாத்திரமோ..
ஆம்னிடிரிக்ஸோ..
அதிசயசக்திகளோ....அவசியம் தேவை என்று காலம்காலமாக மனதில் பதியவைக்கப்படுகிறது.
வெகுஜனங்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்... கண்ணெதிரே அக்கிரமம் நடந்தால் கூட அதைதட்டிகேட்க அவதாரபுருஷன் யாராவது விஷேஷ சக்திகளோடு விண்ணிலிருந்து இறங்கி வரமாட்டானா என்றுதான் நினைப்பார்களே தவிர தாமாக முன்வருவதை பற்றி நினைக்கவே மாட்டார்கள்.
காந்தி வந்தார்.. அவர் தடியெடுத்துவந்தது சிலம்பாட்டம் ஆடுவதற்கு அல்ல.. தன் தள்ளாட்டத்தை தவிர்ப்பதற்காக..
அவர் எதிர்த்தது தனிநபரையோ ஒரு நிறுவனத்தையோ அல்ல அன்றைய காலத்தில் ஆதவன் அஸ்தமிக்காத அதிகாரபேரரசாக பாற்கடல்போல பரந்து விரிந்துகிடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை...
முடிவில் வென்றும் விட்டார்..!
ஆனால் ஐன்ஸ்டீன் இதற்காக அவரை பாராட்டவில்லை..
பின் எதற்காக..
தனக்கென ஒரு கொள்கை.. அதில் பிடிவாதம்.. கோடிக்கணக்கில் மக்கள்செல்வாக்கு.. உலகம்முழுவதிலும் புகழ்.. ஆனால் உடுத்தியதோ அரைகஜ ஆடை.. உண்பது கூழோ கஞ்சியோ.. முழுக்க முழுக்க ஒரு தற்சார்பு வாழ்க்கை, சுய கட்டுப்பாடு, ஆத்ம ஒழுக்கம்.
இதனை ஒரு மதகுருவோ ரிஷிமுனிவரோ செய்தால் அதில் ஆச்சரியம் இல்லை.. உலகமக்களோடு மக்களாக இயங்கிகொண்டு.. தேசவிடுதலை எனும் பெரும்பொறுப்பை குறிக்கோளாக கொண்டு இயங்குபவன் இதையெல்லாம் எப்படி கடைபிடிக்க இயலும்..?
வளையவேண்டிய இடத்தில் வளைந்துகுடுக்காமல்.. தளர்த்தவேண்டிய இக்கட்டான சூழலில்கூட தளர்ந்துவிடாமல் நின்றுகாட்டி வென்றார் அல்லவா அந்த கிழவர்.. அதற்காக..!
நம்முன்னோர் மிக சாதாரணமாக அன்றாடம் செய்த பல செயல்கள் இன்று நமக்கு கடினமாக தோன்றுகின்றன..
மின்சாரம் இல்லாமல்...
மின்விசிறி இல்லாமல்... விரைந்துபோக ஒரு
மிதிவண்டி கூட இல்லாமல்..
அம்மி கல்& ஆட்டுகல்லில்லில் அரைத்துக்கொண்டு..
உலக்கை வைத்து குத்திக்கொண்டு..
வாழ்ந்ததை எண்ணிப்பார்க்க வியப்பாய் இருக்கிறது..
எதிர்காலசந்ததிக்கு இணையம் அலைபேசி சமூகவலைதளம் இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றதாக தோன்றும்..!
அப்படிபட்டவர்களுக்கு கண்டிப்பாக காந்தி என்றொரு மனிதர் பொய்பேசாமல் மது அருந்தாமல் தன் துணியை தானே நெய்து உடுத்தி,,, அருவருப்பான விமர்சனங்களுக்கு ஆளாகாத உலகதலைவராக இல்லற துறவியாக வாழ்ந்தார் என்பதை நம்பமுடியாமல்.. போகும்..!
அதனால்,,
'சுதந்திரபோராட்டம் என்ற காப்பியத்தில் கற்பனையாக புனையபட்ட ஒரு கதாபாத்திரம் காந்தி! ' என்றுகூட அவர்கள் தங்களை சமாதானபடுத்திக்கொள்ளகூடும்!.
என்பது ஐன்ஸ்டீன் கூற்றின் சாரம்சம்.
சரிவிடுங்கள்... விஷயம் அதுவல்ல!
அற்புதமான இந்த சிந்தனை ஒப்பீட்டை ஐன்ஸ்டீனுக்கு சில தசாப்தங்கள் முன்பே நம்ம முண்டாசுகவி பாரதி தீட்டியிருக்கிறார்....
"கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்..
காளிதாசன் கவிதைபுனைந்ததும்...."
என தொடங்கும் அற்புதமான பாடல் அது...!
எகிப்து பிரமீடுகளையும்
மயன் கல்லறைகளையும்
தஞ்சைகோயிலையும் பார்த்து வியந்து இவற்றை ஏதோ ஏலியன்தான் கட்டிஇருக்கின்றன என்றுகூறும் இழிநிலைக்கு மனிதன் தாழ்ந்துவிட்டதைபோல...
எங்கே கம்பர் கவி கூட வேறு ஏதோ கருந்துளையிலிருந்து வந்து விழுந்த ஏலியன்களின் சங்கேதமொழியாக இருக்கும் என்று தமிழர்களே நினைத்துவிடுவானோ என்று அஞ்சி கம்பன் என்றொரு மனுஷன் வாழ்ந்தாண்டா...னு ஆரம்பிக்கிறாரு பாரதி...!
இதை ஏதோ தமது தமிழ் முன்னவன் என்பதற்காக பாரதி சொல்லவில்லை. அவன் வடமொழியிலும் பாண்டித்யம் பெற்றவன். ஆங்கில கவிகளின் அருமைபெருமை உணர்ந்தவன்.
ஆயினும் அவன் கம்பனை கண்டுதான் மலைத்துபோகிறான்.
அள்ள அள்ள குறையாத தமிழ்பருகவேணுமானால் கம்பன் பெருங்கடலில் அவ்வபோது மூழ்கி எழவேண்டும்..
கம்பன் கொட்டிய கவி காட்டாற்றில் ஆங்காங்கே இழையோடும் நயங்களை புகழ்பெற்ற பாக்களை வாய்ப்பு கிட்டும் சமயத்தில் அவ்வபோது பகிர்ந்து கொள்வது நமக்கு ஆகச்சிறந்த ரசனைபண்பை தரும்..
காந்திஜியே கூட கம்பரை ருசிக்கவேண்டி , ராஜாஜிகிட்ட கேட்க அவர் ரசிகமணி டிகேசியை கைகாட்ட...
டிகேசி காந்தி யிடம் இப்படி சொன்னாராம்..
"நீங்கள் கம்பனை முழுமையாக ருசிக்க வேணுமானால் அடுத்த பிறவியில் தமிழனாக பிறந்துவிடுங்கள்...வேறு வழியே இல்லை!!"
நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்கும்... அதுபோதும் கம்பனை ருசிக்க..! பெரிய இலக்கியவாதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவன் ஒன்றும் சங்க காலபுலவன் இல்லை பத்துநூற்றாண்டுக்கு முந்திய தமிழன்தான்.
கம்பன்
புரட்டும்போதெல்லாம் புல்லாங்குழல் இசைப்பவன்..!
படிக்க படிக்க பரவசம் தருபவன்..!
தோண்டதோண்ட வரும் தங்க புதையல்..!
வெட்டி முடியாத வெள்ளி மலை..!
அள்ள குறையாத அமுத ஊற்று..!
தமிழர்கள் யாவரும் பாக்யசாலிகளே..! அதை அநுபவிக்க தெரிந்தவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பர்.
கதை கேட்க யாருக்குதான் பிடிக்காது? அதுவும் கம்பன் சொல்லுங் கதை என்றால்.....,
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழிகிறது.. நனைய தவறாதீர்கள்..!
நல்லோர் உரை
விஸ்வாமித்திரர் ஒரு ராஜரிஷி..!
யாகம் இயற்றவேண்டி கானகம் வருகிறார். அங்கு தாடகை என்றோர் பாதகி வசிக்கிறாள். அரக்கியான அவளால் வேள்வி தோல்வி யுறும் என்றஞ்சி, துணைக்கு ராம லக்ஷமணரை தசரதனின் ஒப்புதலோடு அழைத்து வந்திருந்தார்.
யாகம் சூடுபிடித்தது. ரிஷி ஆழ்ந்த மந்திர உச்சாடனம் செய்யலானார்..
வேள்வி தீ வானை தொட்டது.. கூடவே அதன் புகையைபோல இருண்ட சரீரத்தோடு விண்ணைத்தாண்டி வளர்ந்த தாடகையும் அவ்விடம் வந்துசேர்ந்தாள்...!
குரு விஸ்வாமித்திரர் அவளை வதம்செய்ய பணித்தார்.
சத்ரியனாக ராமன் எதிர்கொள்ளும் முதல் எதிரி...! ஆனால் அவளொரு பெண்.
ஒரு பெண்ணை வதைப்பது பாவம். குரு சொல்லை புறக்கணிப்பதும் பாவம்.. என்ன செய்வது? இதுதான் தர்மசங்கடம்! ராமன் தயங்கினான். ராமன் தயக்கத்தை புரிந்துகொண்ட குரு சொன்னார், "ராமா! இவள் உருவம் பெண்தான். ஆனால் பெண்மை சிறிதும் அற்றவள். தயங்காதே. எடு வில்லை ; கொல் அவளை!"
ராமன் வில்லேந்தினான். பாணம் தொடுத்தான்.
சொல் ஒக்கும் கடியவேக சுடுசரம்
கரிய செம்மல்...
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்... வயிரகுன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று..
கல்லா புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே...!"
உலகிலேயே ஒருசண்டைகாட்சிக்கு அறிவுரையை உதாரணம் சொன்ன ஒரே ஆள் நம்ம கம்பநாடன் தான்.!
இந்தகாதில் வாங்கி.. அதை அப்படியே அந்த காதால் விடுறதுபோல.. என்று ஆசிரியரிடம் வசைவாங்கியதுண்டா...?
கல்லாத புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என...போயிற்றாம் எது...?
தாடகையை வதைக்க ராமன் விட்ட அம்பு அவளது கல் ஒத்த கனத்த நெஞ்சை (கல் நெஞ்சக்காரி) ஊடுருவி அப்புறமாக (முதுகுவழி) வெளியேறியதைதான்.. அப்படி சொல்றாரு கம்பரு..
ஆரம்பத்திலேயே சொல் ஒக்கும் கடியவேக சுடுசரம்...
என்று கூறி.. சொல்லை விரைந்து தாக்கும் சரம் ஆகிய அம்பிற்கு உவமை கூறி கலக்கிவிட்டார்..
கரிய செம்மல் என ராமனை சொல்லிவிட்டு..
அரக்கியை அல் ஒக்கும் நிறத்தினாள்... என்கிறார்..
ராமன் கருப்பாம். தாடகை இருட்டுநிறமாம்...!
வளிமண்டலம் இருப்பதால்தான் ஒளிசிதறி பூமியில் பகல்நேரம் ஒளிமயமாய் தெரிகிறது. உண்மையில் விண்வெளிக்கு போய்விட்டால் சூரியனே இருந்தாலும் ஒளி இருளால் உட்கிரகிக்கப்பட்டுவிடும். அண்டம் யாவும் இருளின் சாம்ராஜ்யம்தான்.
ஒளியையே விழுங்ககூடிய இருள் எப்படி இருக்கும்? கம்பன் எத்தகைய கற்பனாவாதி....!
-சூரியராஜ்
லன்டனில். வட்ட மேஜை மாநாடு நடந்த போது வேட்டியும் துண்டு மட்டும் அணிந்து வெறும் உடம்போடு கலந்து கொண்ட காந்தியை மதிதது அவர் கருத்துகளை காது கொடுத்து கேட்டவன் வெள்ளைக்காரன். காந்தியின் கதையை முடித்துவிட்டால் சுதந்திர உணர்வை நசுக்கி விடலாம் என்று அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. 1947 வரை அவரை பொக்கிஷமாக பாதுகாத்து நம் கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டான். ஆனால் சுதந்தரம் வாங்கிய நம்மால் ஒரு வருடம் கூட அவர் உயிரை பாதுகாக்க முடியவில்லை. சித்தர் போல வாழ்ந்த மகாத்மா சுட்டுக் கொல்லப்படவில்லை என்றால் இன்னும் ஐம்பது வருடங்கள் கூட நம்மோடு இருந்திருப்பார். என்ன செய்வது. இதுதான் இந்தியா.
பதிலளிநீக்கு