அண்மை

பிரிவில் இல்லை கவலை குறுந்தொகை 12 சிறுகதை - குகன் (kurunthogai 12 Story)

 பிரிவில் இல்லை கவலை



அழகிய காலை நேரம். ரங்க நாடு, மக்களின்றி வெறிச்சோடி காட்சி அளித்தது. மக்கள் அதிகம் வந்து போகும் இடமான வணிகர் இடத்திலும் ஒருவர் கூட இல்லை. ஆனால் ஒர் இடத்தில் மட்டும் மக்களின் கூட்டம் குவிந்தவண்ணம் இருந்தது. அது அரசவை விழா மண்டபம்.


பேரரசர் அனந்த ரங்கன் வெகு காலம் உடல் நலம் குன்றி இருந்தார். ஆகவே தனது மகன் ராஜரங்கனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவாக ஏற்பாடு செய்து திருமணத்திற்கு நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்தார். ஆதலால் அன்று நாட்டு மக்கள், அரசவை விழா மண்டபத்தில் கூடினர்.


நாட்டுமக்களின் நல்லாசியுடனும் அரச விருந்துடனும் அரசர் ராஜரங்கனின் திருமணம் நடந்து முடிந்தது.


அன்றிரவு ராஜரங்கன் மனம் விட்டு தனது மனைவி பத்மாவதியுடன் பேசினார். காதலை வாரிப்பொழிந்தார்.


ராஜரங்கனுக்கு வீரமும், திறமையும் மட்டும் அதிகமன்று அவருக்கு காதலும் அதிகம் என்பதை அன்றய இரவு புரிந்து கொண்டாள் பத்மாவதி.


இருவரும் காதல் வெள்ளத்தில் மிதந்தனர்.


மறு நாள் காலை அரசவையில் அரசரை சந்திப்பதற்காக வணிகர்கள் காத்திருந்தனர்.


அரசர் ராஜரங்கன் வந்தவுடன் அவரிடம் 'அரசே…  பெருங்கொள்ளை நடந்திருக்கிறது' என்றனர்.


'கொள்ளையா?'


'ஆம் அரசே… நேற்று தங்கள் திருமணத்திற்கு நாடே இங்கு கூடிய நிலையில் அந்த பொழுதினை பயன்படுத்தி பாலை நில கொள்ளையர் கூட்டம் வந்து எங்களது மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்'


'காளையனின் ஆட்களா?'


'ஆமாம். அரசே அவனது குறியீடான செந்நாயின் குறியீட்டை விட்டுச்சென்றிருக்கின்றனர். நாங்கள் பாலை நிலத்தின் வழியே செல்லும் போது அவன் எங்களிடம் கைவரிசை காட்டுவது வழக்கம் ஆனால் தற்போது….'


'நாட்டிலே புகுந்து கொள்ளையடிக்கும் அவளவுக்கு தைரியம்!…. ம்.. இனி கொள்ளை என்ற பேச்சிக்கே இடம் இல்லாதவாறு அவனையும் அவனது கூட்டத்தையும் கொன்று புதைத்து வருகிறேன்!...நீங்கள் செல்லுங்கள்' என்றார்.


வணிகர்கள் சென்றனர்‌. அரசர் பேரரசரின் அனுமதி பெற சென்றார். பேரரசரோ 'எனக்கோ உடல் நலம் சரியில்லை இன்னும் கொஞ்ச காலம் தான்‌. உனக்கு கல்யாணம் தற்போது தான் ஆகி இருக்கிறது. ஆகவே, இந்த விடயத்தை மந்திரியின் பொறுப்பில் விட்டுவிட்டு நீ உன் மனைவியுடன் ஆனந்தமாக இரு‌. முதலில் நம் குலத்திற்கு ஒர் வாரிசு வேண்டும்'

என்றார். ராஜரங்கன் முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பேரரசரின் சொல்லே இறுதி ஆதலால் அவர் சொல் படி செயல்படலானார்.


மந்திரி தீவிரமாக செயல்பட்டு கொள்ளையை கட்டு படுத்தினார்.அதலால் நாட்டில் அமைதி நிலவியது.


அரசி பத்மாவதியும் அரசர் ராஜரங்கனும் அடிக்கடி மக்களுக்கு விஜயம் செய்வது வழக்கமாக இருந்தது.


அரசி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார்.


இதை கண்ட மக்கள் 'அரசியின் சிரிப்பினில் அரசர் சிக்கித் தவிக்கிறார்' என்று வேடிக்கையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.


அரசவையில் பணி செய்யும் பெண் அரசிக்கு நெருங்கிய தோழியானாள். அவள் மக்கள் வேடிக்கையாக சொன்னதை அரசியிடம் கூற,  இந்த செய்தி அரசியை வெட்கம் கொள்ள வைத்தது.


பல மாதங்கள் சென்றன ஆயினும் அரசிக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை. இது நாட்டு மக்களின் இடையே விமர்சனமாக்கபட்டது‌. இருப்பினும் அரசி மகிழ்ச்சியாகவே இருந்து வந்தார்.


ஒரு நாள் அரசவைக்கு கண்ணீருடன் கடிதம் ஒன்றினை மந்திரி எடுத்துவந்தார். என்ன நடந்தது? என்றபடியே கடித்தை வாங்கிப் பார்த்தார் அரசர்.


அதில், 'நீ எடுத்த பல நடவடிக்கையால் எங்களால் நிம்மதியாக கொள்ளையடிக்க முடியவில்லை. ஆதலால் உன் குழந்தையை கடத்தி இருக்கிறோம். உன் குழந்தை உயிருடன் வேண்டுமெனில் நீயும் உன் நாட்டு அரசன் ராஜரங்கனும் எங்கள் இடத்திற்கு நடந்தே வர வேண்டும். படையுடன் வந்தால் உன் மகன் பரலோகம் சென்றுவிடுவான். சென்று உன் அரசனிடம் கூறு' என்று எழுதி இருந்தது செந்நாயின் சின்னமும் அதில் இருந்தது.


இதை கண்ட அரசர், விஷயத்தை பேரரசரிடம் எடுத்துக்கூறி அனுமதி பெற்றார். மனைவியிடம் நடந்தவற்றை கூறினார் மேலும் 'நாங்கள் அந்த பாலை பகுதியில் சென்றுவர ஒரு வார காலம் ஆகும். ஆகவே நீ, தந்தையையும் நாட்டும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்' என்றும் கூறிச் சென்றார்.


அரசரும் மந்திரியும் மூன்று நாட்கள் பயணம் செய்து கொள்ளைக்கூட்ட தலைவன் காளையனை சந்தித்தனர். 


காளையன், மந்திரியிடம் அரசரை என்னிடம் ஒப்படைத்து விட்டு உன் மகனை அழைத்துச்செல் என்றான். அரசரும் நான் சரணடைகிறேன் குழந்தயை எடுத்துச் செல்லுங்கள் என்று மந்திரியிடம் கூறினார். மந்திரி தயக்கத்துடன் குழந்தையை கையில் எடுத்தார். அந்நேரம் காளையன் தனது வாளினை அரசரை நோக்கி செலுத்த குறுக்கே விழுந்து தன் உயிரை கொடுத்து அரசனது உயிரை காப்பாற்றினார் மந்திரி. அருகில் விழுந்த குழந்தை அழுக ஆரம்பித்தது. அரசர் தனது பலம் கொண்டு காளையனின் கையில் இருந்த வாளினை லாவகமாக பிடுங்கி அதனை காளையனின் மார் மீது செலுத்த, அவன் உயிர்விட்டான். காளையனின் கூட்டாளிகளையும் கொன்று விட்டார்.


அங்கேயே மந்திரிக்கு இறுதி சடங்கை செய்து விட்டு என் உயிரினை காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் வகையில் இனி மந்திரியின் குழந்தையே என் வாரிசு என்று மனதில் நினைத்துக்கொண்டு மந்திரியின் மகனை தோளில் வைத்தபடி உடல் காயங்களால் சரியாக நடக்க முடியாது தடுமாறி நடந்தபடியே தன் நாட்டை நோக்கி புறப்பட்டார்.


நாட்டில் அரசி மக்களின் நிலமையை தெரிந்துவர அடிக்கடி நாட்டைச் சுற்றி வருவது வழக்கமாக இருந்தது.


முன்பு போல் அரசி மகிழ்ச்சியாக இல்லை. எப்போதும் சோகமாகவே இருந்து வந்தார்.


இதை கண்ட மக்கள் அனைவரும் எப்போதும் அரசர் பக்கத்தில் இருந்ததால் அரசி மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது அவர் பிரிவினால் தவிக்கிறார் என்று பலவாறு பேசிக்கொண்டனர்.


இந்த செய்தியை அரண்மனை தோழி அரசி பத்மாவதியிடம் வேடிக்கையாக கூற 'நான் அவர் பிரிவினால் கவலை கொள்ளவில்லை! எப்படியும் பகைவனை வென்று விரைவில் திரும்புவார். ஆனால், பாவம் அவர், எப்படி அந்த பாலை நிலத்தின் வெப்பத்தை தாங்குவார்? எறுப்பின் அளவே தண்ணீர் இருக்கும் அந்த பகுதியில் எப்படி தாகம் தணிப்பார்? என்றே நான் கவலைக் கொள்கிறேன். ஊராரோ அவர் படும் துன்பத்தை அல்லாது பிரிவை குறித்தே பேசுகின்றனர் ' என்றார் தோழியிடம்.


அரசர் படும் துன்பத்தை எண்ணியே அரசி இத்தனை நாட்களாக கவலை கொண்டிருந்தார் என்பது தோழிக்கு புரிய வந்தது.


-குகன்


குறுந்தொகை 12


எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்

கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;

அது மற்று அவலம் கொள்ளாது,

நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே

கருத்துரையிடுக

புதியது பழையவை