அண்மை

சூடப்படாதப்பூ குறுந்தொகை 9 சிறுகதை - குகன் (kurunthogai 9 story)

சூடப்படாதப்பூ

சற்று மங்கிய வெளிச்சத்துடன் கூடிய மாலை நேரம். இரு நீண்ட கொம்புகளை உடைய இரு காளைகளை பூண்ட மாட்டு வண்டியை ஒரு அழகிய பணக்கார தோற்றம் கொண்ட பெண் இயக்கி வந்தாள். பெரிய தூண்கள் உடைய மாளிகை போன்ற வீட்டின் முன் மாட்டு வண்டியினை நிறுத்தி வேலைக்காரனிடம் மாட்டிற்கு தண்ணீர் காட்டும் படி கூறி பின் வீட்டின் உள் நுழைந்தாள். 


story-kurunthogai

'வைதேகி… வந்துவிட்டாயா!!.. சந்திரமதியை பார்க்க சென்றாயே அவள்   நலமாக இருக்கிறாளா ?' 


என்று வைதேகியின் அம்மா அவளை பார்த்து கேட்க. பூ போல இருந்த வைதேகியின் முகம் வாடி இருப்பதை கண்டாள்.


'ஏனம்மா உன் முகம் வாடி இருக்கிறது..?' என மேலும் கேட்டாள்.


'எல்லாம் என் தோழி சந்திரமதியை நினைத்து தான்' என்று சுனக்கமாக கூறினாள்.


'ஏன் அவளுக்கு என்ன..? கருதறித்து வேறு இருந்தாளே?...'


'ஆமாம்.. அது தான் கவலையாக இருக்கிறது!'


'என்ன சொல்கிறாய்?'


'ஆம் அம்மா.. இந்நேரத்தில் அவள் கணவன் ஆழிங்கன் மீன்பிடி தொழில் விசயமாக வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறான். அவள் ஏக்கத்தால் உடல் நலிந்து காண்கிறாள்'


'வேறு நாட்டுக்கா.. அவளை விட்டு அவன் கூப்பிடு தூரம் கூட செல்ல மாட்டானே..  அவளவு காதல் பித்து சந்திரமதி மீது கொண்டிருந்தானே' என்று புன் முறுவலுடன் அவள் அம்மா கூற. வைதேகி


' அவள் இவ்வாறு சொல்ல.. ஊரார் வேறு கதை சொல்கிறார்கள்' என்றாள்.


'என்ன கதை?'


'ஆழிங்கன் பல நாட்களாக வேறு பெண்ணிடம் தவறான தொடர்பு கொண்டுள்ளான் இதை சந்திரமதி அறிவாள் ஆயினும்  யாரிடமும் அதை ஒப்புக்கொள்ளாது தன் கணவனை பற்றி நல்ல விதமாகவே கூறிகிறாள் என்று ஊரார் கூறுகின்றனர்'. என்றாள் வைதேகி.


'இதென்னமா...அவள் இதை உன்னிடமும் கூறவில்லையா?'


'என்னிடமும் மறைக்கிறாள் அவள்'


'சரி மீண்டும் அவள் வீட்டுக்கு செல்லும்போது உண்மையை தெரிந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறி வா..!'


'சரியம்மா…'


அன்றய ரா பொழுது அவளுக்கு பழய சிந்தனை வந்தது. அது சந்திரமதி ஆழிங்கன் திருமணம்‌. பல ஆண்டுகளாக சந்திரமதியும் ஆழிங்கனும் காதல் செய்து வந்தனர் அதை இவளே துணையாக நின்று நடத்தி வைத்தாள். இப்போது தனது தோழியின் வாழ்க்கை இவ்வாறு ஆனதை எண்ணி மனம் வருந்தினாள். பல நாட்கள் சென்றது. 


ஒரு நாள் வைதேகி மீண்டும் சந்திரமதி வீட்டிற்கு சென்றாள். கேள்வி பட்ட விசயத்தை நேரடியாக  கேட்காமல் சுற்றிவளைத்து கேட்டாள். ஆனால் அந்த கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் சந்திரமதி தவித்த தையும் கண்டு கொண்டாள். இறுதி வரை சந்திரமதி உண்மையை கூறவில்லை  இருப்பினும் 'மீன்பிடி தொழில் விசயமாக வேறு நாட்டிற்கு சென்ற ஆழிங்கன் விரைவில் வந்து விடுவான்.. கவலை படாதே' என்று ஆறுதல் கூறி சிறு தொகையும் தந்து தன் வீட்டிற்கு திரும்பினாள்.


இரு நாட்கள் சென்றது வைதேகி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாள் அப்போது ஒரு ஆஜாகு பாகுவான தோற்றம் கொண்ட ஒருவன் அவள் முன் பேச வந்தான் அவன் வேறு யாரும் இல்லை அது ஆழிங்கனே!


'வைதேகி நில்... உன்னால் எனக்கொரு காரியம் ஆக வேண்டும்'


'என்ன காரியம்…?? ' என்று கோபத்துடன் கேட்டாள்.


'நான் என் காதல் மனைவியை தவிக்க விட்டு வேறு பெண்ணுடன் தவறான உறவு கொண்டேன் இதனால் அந்த கடவுள் என்னை மன்னிக்க மாட்டான். சந்திரமதி என்னால் பல துன்பங்களை அடைந்திருப்பாள் அவள் என்மீது மிகுந்த வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பால்  ஆகவே நீ, நான் திருந்திவிட்டேன் என்றும் அவளுடன் மட்டுமே தான் இனி வாழ்வேன் கனவில் கூட வேறு பெண்ணை எள்ளளவும் எண்ணமாட்டேன் என்று அவளிடம் நீ சொல்லவேண்டும்.' என்று கண்ணீர் மல்க ஆழிங்கன் கூற


'இவ்வளவு சுலபமாக அவள் நிலமையை நீ கூறிவிட்டாய்!.. ஆனால் அவள் வெகு நாட்கள் பெட்டியில் இருக்கும் சூடப்படாத பூ போல உடல் மெலிந்து நலிந்து காணபடுகிறாள். கூட்டமாக மீன்களை உடைய நீர் பரப்பில் வெள்ளம் அதிகரிக்கும் போது திரண்ட காம்பை உடைய நெய்தற்பூக்கள் குளத்தில் முழுகும் மகளிரது கண் போல இருக்கும் அத்தகைய துறையை உடைய தலைவனான நீ செய்ததை எண்ணி அவள் வேதனையுற்று மனம் வருந்தினாள். ஊரார் உனைப்பற்றி ஏதும் கூறினாலும் அவள் உன்னை விட்டுக்கொடுக்காமளே பேசுகிறாள். நீ செய்த கொடுமையை உள் வைத்து யாரிடமும் நிகழ்ததை கூற மறுக்கிறாள்' என்று வைதேகி கூறியதை கேட்ட ஆழிங்கன் கண்கள் மேலும் கலங்கின மேலும் வைதேகி


'இருப்பினும் உன் மீது அவள் கோவமாக இல்லை. நீ திருந்தி அவளுடன் வாழ்வாய் என்று சொன்னால் நிச்சயம் அவள் உன்னை ஏற்றுக்கொள்வாள். ஆகவே நீயே நேர செல்' 


என்ற உடன் ஆழிங்கன் சற்று நிம்மதி அடைந்தான்.


இனியாவது நமது தோழியின் வாழ்க்கை நலமாகட்டும் என்ற படி வைதேகி கோயிலுக்கு புறப்பட்டாள்.


-குகன்


குறுந்தொகை 9 பாடல்


யாய் ஆகியளே மாஅயோளே

மடை மாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய் சாயினளே;

பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்

இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம் முன் நாணிக் கரப்பாடும்மே


ஆசிரியர் - கயமனார்

கருத்துரையிடுக

புதியது பழையவை