அண்மை

எனது கொரோனா அனுபவம்

 

எனது கொரோனா அனுபவம்


 

'மது அருந்தாதே' என்று காந்தி அடிகள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு என்று கண்ணதாசன் அவர்கள் சொல்வார். சொல் அறிவை காட்டிலும் அனுபவ அறிவே சிறந்தது.


கரோனா வந்தால் இந்தெந்த அறிகுறிகள் வரும் அதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் இந்தெந்த பக்கவிளைவுகள் வரும் என்று ஒரு செய்தியாளன் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கும். காரணம், அவன் கேட்டறிந்தவன் நான் பட்டறிந்தவன்.


இந்த உண்மை கதையிலிருந்து உங்களுக்கு கரோனாவின் தீவிரம் சரிவர தெரியாவிடினும் நோயை குணப்படுத்தும் மருத்துவமனைகளின் நிலையினை நீங்கள் நிச்சயமாக புரிந்துகொள்ளலாம். அதுவே உங்களை கரோனாவிடமிருந்து அச்சத்தின் மூலம் விலக்கும் என்று நம்புகிறேன்.


காலை ஆறு மணி இருக்கும். எனது மொபைல் திரும்ப திரும்ப அடித்துக் கொண்டே இருந்தது. அந்த இதமான புல்லாங்குழல் ஓசை என்னை மீண்டும் மீண்டும் 'தூங்கு' என்று சொல்வது போன்றே இருந்தது. முன்பே எழுந்திருந்த என் அண்ணன் ஸ்ரீராம் போனை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே சென்றான். அவன் பேசியதை நான் கவனிக்கவில்லை. 


பேசி முடித்துவிட்டு வீட்டுக்குள்ளே வந்த என் அண்ணன் எப்போதும் போல இயல்பான முகத்துடனே, 'உனக்கு பாசிட்டிவ் ஆகிட்டு' என்றான். 


இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் அண்ணனும்  'கொரோனா டெஸ்ட்' கொடுத்திருந்தது எனக்கு நினைவிற்கு வந்தது. படுக்கையிலிருந்து எழுந்தேன். என் அம்மா அதிர்ச்சியோடு அண்ணன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். 


'நாங்கள் வண்டி அனுப்ப வேண்டுமா? இல்லை, நீங்களே வந்துவிடுவீர்களா?' என்று போன் செய்தவர்கள் கேட்டதாகவும் அதற்கு என் அண்ணன், 'நாங்களே வந்து விடுகிறோம்' என்று சொன்னதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.


என் தந்தை நான் கரோனா டெஸ்ட் எடுப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார்கள். எனக்கு பரிசோதனை முடிவுகள் வந்த நான்கு நாட்களுக்கு முன்பே என் தந்தை கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டும் இருந்தார்கள்.


டெஸ்ட் எடுத்து வந்த பிறகு வீட்டில் நானிருந்த இரண்டு நாட்களும் முககவசம் அணிந்தே தான் இருந்தேன். 


கடந்த ஒருவாரமாக எனக்கிருந்த தொண்டைவலி, நீட்டித்த கண்வலி, தலைவலி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள், 'கொரோனாவாகத்தான் இருக்கும்' என்று 80 சதவீதம் என்னை தயார் படுத்தியது. என் அண்ணன் சொல்லியதை கேட்டவுடன் எனது சந்தேகம் ஒழிந்ததே தவிர அதிர்ச்சி ஏற்படவில்லை.


நானும் மருத்துவமனைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். நேரம் எட்டு மணி ஆகியிருக்கும். என் அண்ணன் தந்தைக்கான காலை மதிய இரவு உணவுகளை எங்கள் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு தினமும் கொண்டு சென்று கொண்டிருந்தான்.


எப்போதும் போல என் அண்ணன் வீட்டிலிருந்து உணவு எடுத்து சென்ற சிறிது நேரத்தில், எனக்கு மீண்டும் ஒரு போன் வந்தது. 


'ஜெகதீசன் இருக்காங்களா?' 


'நான் தான் ஜெகதீசன், சொல்லுங்க'


'தம்பி, நான் உன் வீட்டுக்கு கீழே தான் நிக்குறேன். நீ எப்போ கொரோனா டெஸ்ட் எடுத்த?' 


நான் அவரது கேள்விக்களுக்கு விடை சொல்லியவாறே என் வீட்டின் முன்புறம் இருக்கும் பகுதிக்கு வந்தேன். அங்கிருந்து சாலையில் நடப்பதை முழுவதுமாக காணலாம். 


சாலையில் நின்று கொண்டிருந்த அந்த நகராட்சி அலுவலர் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த என்னை கண்டுவிட்டார். அவர் போன் மூலமே தொடர்ந்தார்,


'தம்பி, ஒருத்தவர் உங்க வீட்டுக்கு வந்து மருந்தடிப்பாரு ஏதாவது முக்கியமான பொருள் இருந்தா அத மூடி வச்சிடுங்க'


அவர் போனை கட் செய்தார். இந்த முக்கிய அறிவிப்பை என் அம்மாவிடம் சொல்வதற்கு முன்பாக அந்த மருந்தடிப்பவர் எங்கள் வீட்டின் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தார். முதுகில் பெரிய மிஷினை துமந்து கொண்டு வந்த அந்நபர் கொஞ்சம் கூட நேரம் கடத்தாமல் எங்கள் வீட்டினுள் நுழைந்து எங்கு பார்த்தாலும் அந்த மருந்தை அடித்தார். 


என் அம்மா 'சாப்பாடு வைத்துள்ளேன், இப்படி அடிக்காதீர்கள்' என்று சொன்னதை கொஞ்சம் கூட செவிமடுக்காமல் சமையலறை விடாது எங்கும் அம்மருந்தை தெளித்தார்.


ஐந்து நிமிடம் வரை இடைவிடாது மருந்தை தெளித்த அவர். மிஷினை நிறுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.


'நீதான் கொரோனா-வா?' என்றார். நான் 'ஆம்' என்றேன். 


'ஏதாவது கொடுங்கள்' என்றார். எனக்கு நன்றாகவே புரிந்தது. 'முடியாது' என என்னால் சொல்ல முடியவில்லை. 


என் அம்மாவிடம் வந்தேன் 'அவர் பணம் கேட்கிறார்' என்றேன். அம்மா ஒரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கொடுக்க நகர்ந்தார்கள்.


'உங்கள் பையனிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்றார் அவர். 


வீடு முழுவதும் மருந்து தெளித்திருந்த படியால் தரை வழுக்கும் படியாக இருந்தது. 


நான் அந்த ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு அவரையடைந்தேன். இப்போது தான் என் கையில் இருந்ததை கண்டார் போலும்,


'ஐம்பது தானா? நூறு கொடுங்கள்' என்றார்.


'இது போதுமே' என்றேன் மெல்லமாக.


அவர் கிளம்பிவிட்டார். அன்றைக்கு திருவாரூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக மிக குறைவு. இன்று அவர் தினமும் ஆயிரம் ரூபாயாவது சம்பாரிப்பார் என்று நம்புகிறேன்.


கொரோனா டெஸ்ட் எடுக்கும் பலரும் ஏன் வீட்டு முகவரியை மாற்றிக் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது.


என் மாமா எனக்காக காரை எடுத்துக் கொண்டு வந்தார்கள். நான் அத்தியாவசிய தேவையான உணவு உடை எடுத்துக் கொள்ளாத நிலையில் வீட்டிலிருந்து 400 ரூபாய் பணம் மற்றும் எனது மொபைலுடன் புறப்பட்டேன். 


விளமலிலிருக்கும் 'திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியின் தேர்வு கூடத்திற்கு' அழைத்துச் செல்லப்பட்டேன். அதன் வாயிலில் நின்று கொண்டிருந்த சீருடை அணிந்த காப்பாளர் ஒருவர், 'என்ன பாசிட்டிவா? மெசேஜ் இருக்கா?' என்றார்.


என் அண்ணன் எனக்காக முன்னமே புற நோயாளிகளுக்கான சீட்டை வாங்கியிருந்தான். RTPCR TEST எடுத்த அனைவருக்கும் அவர்கள் கொடுத்த எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும். அதை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்  கொரோனா நோயாளிகளிடம் இரண்டு முறை கேட்பார்கள்.


என் அண்ணனிடம் அப்பாவை கொரோனா வார்டில் சேர்த்த அனுபவம் அதிகம் இருந்தபடியால், என்னையும் அங்கு சேர்ப்பதற்குறிய முன்னேற்பாடுகளை நான் வருவதற்கு முன்னமே செய்து வைத்திருந்தான்.


என்னை மட்டும் அந்த காப்பாளர் உள்ளே போகச் சொன்னார். நானும் உள்ளே நுழைந்தேன். மதிய நேரத்திலும் இருள் நிறைந்த அப்பகுதி செயற்கையான விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 


அங்கு ஒரு நான்கு பேர் நின்று கொண்டிருந்த வரிசை இருந்தது. அதில் என்னை நிற்கச் சொன்னார்கள். நானும் நின்றேன். 


30 வினாடிகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு திசைகளிலிருந்து வெவ்வேறு ஸ்சுவரங்களில் இருமல் சத்தம் அங்கு கேட்டுக் கொண்டே இருந்தது. சுமார் ஐம்பது கொரோனா நோயாளிகள் அந்த கூடத்தில் இருந்திருக்ககூடும்.


சிறிது நேரத்திலே புரிந்து கொண்டேன். அவர் என்னை X-RAY எடுப்பதற்காக அந்த வரிசையில் நிற்க சொல்லி இருக்கிறாரென்று. 


சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எனக்கான வாய்ப்பு கிடைத்தது. 


'உங்கள் பெயர் என்ன?' 


அந்த X-RAY எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.


'ஜெகதீசன்' என்றேன். திடீரென்று அண்ணன் சொல்லியனுப்பியது என் நினைவிற்கு வந்தது. 


'என் பெயர் ஜெகதீசன் மாரிமுத்து' என்று முன்பிலிருந்து கொஞ்சம் மாற்றிக் கூறினேன்.


ஒரே பெயர் கொண்ட இருவர் இருப்பதால், சில மருத்துவ சிக்கல்கள் நம் அரசு மருத்துவமனைகளில் நிகழ்வது வழக்கம் தானே.


அவர் 'கொஞ்சம் இருங்கள்' என்று சொல்லி எங்கோ சென்றார். இரண்டு நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் வந்தார். 


'உங்கள் பெயர் என்ன?' மீண்டும் கேட்டார்.


'மா ஜெகதீசன்' என்றேன் இம்முறை.


'அங்கே மெசேஜ் மற்றும் இதர விவரங்களை கொடுத்துவிட்டீர்களா?' 


அவற்றை என் அண்ணன் முன்பே கொடுத்ததை நானே கண்டேன். அதனால் 'கொடுத்துவிட்டோம்' என்றேன் உறுதியாக


'கொஞ்சம் இருங்கள்' மீண்டும் அதே வார்த்தையை சொன்னார் அவர். 


ஒரு மணி நேரம் கடந்தது. எனக்கு பின் வந்த அனைவருக்கும் அவர் X-RAY எடுத்துக் கொண்டிருந்தார்.


அவ்வப்போது என்னைப் பார்த்து, 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


இவன் தான் இந்த மெடிக்கல் காலேஜ்-க்கு வந்த சோதனை போலும் என நினைத்துக்கொண்டு 'ஜெகதீசன்' என்று பதில் தந்து கொண்டிருந்தேன்.


இடையில் ஒருமுறை என் விவரம் அங்கு இருக்கிறதா? என்று நான் அங்கிருந்த டாக்டரிடம் கேட்டபோது கூட 'இதோ இங்கு, இதோ' என்ற சமாளிப்பு பதிலே கிடைத்தது.


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே இருந்த நோயாளியான எனக்கு கால்களெல்லாம் வலிக்கத் தொடங்கியது. தலை வியர்த்துக் கொட்டியது.


அப்போது ஒரு டாக்டர் என்னைக் கூப்பிட்டார்கள். வேறு ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். 


'கொரோனா தானே?' என்றார்கள்


'ஆம்' என்றேன். 'சட்டையை கழட்டிவிட்டு இங்கே படு' என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். இரண்டு கிளிப்-களை எடுத்து என் நெஞ்சில் பொருத்தினார்கள். இரண்டு பல் இல்லாத நாய்கள் என் மார்பில் கடித்தது போல் இருந்தது அந்த உணர்வு. ஒர் ஐந்து நிமிடம் வரையிலும் நான் அப்படியே இருந்தேன். (பின் ஐந்து நாட்கள் வரையிலும் அந்த தடம் என் மார்பிலே இருந்தது)


பின் என்னை 'நீ கிளம்பலாம்' என்றார் அந்த பெண் டாக்டர். நானும் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். அங்கிருந்து வெளிய வந்த பிற்பாடு தான் இதற்கு பெயர் ECG என்பதை தெரிந்து கொண்டேன்.


மீண்டும் X-RAY எடுக்கக் கூடிய இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில், ஒரு கண்ணாடி அறையின் உள்ளிருந்து இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்னை அழைத்தார்கள். அவர் டாக்டர் இல்லை என்றும் ஒருவேளை இதே கல்லூரியில் மருத்துவராவதற்காக படிக்கலாம் என்றும் எனக்கு அப்போது தோன்றியது.


'ECG எடுத்து விட்டீர்களா?' அந்த பெண் என்னை மரியாதையோடு கேட்டார்கள்.


'எடுத்துவிட்டேன்' (ECG என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன்)


உடனே அந்த பெண், என்னை அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமரும்படி சொன்னார்கள். நானும் சகஜமாக அமர்ந்தேன்.


அவர் ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து 10 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு ஊசியை பொறுமையாக எடுத்தார்கள்.


'ஊசி…. எதற்கு?' நான் தயக்கத்துடன் கேட்டேன்.


'நாங்கள் கொரோனா நோயாளிகளின் இரத்தத்தையும் பரிசோதனை செய்வோம்' 


அவர் இந்த பதிலை சொன்னபடியே என் இடது கையை பிடித்து நரம்புகள் தெரிகிறதா என்று தட்டிப் பார்த்தார்.


நான் கடைசியாக ஊசி போட்டுக் கொண்டது எனது நடுநிலை பள்ளிப்படிப்பின் போது என்பது எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது.


சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக என் உடலில் ஊசி பாயவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக நான் எந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டதே இல்லை. (பின் இந்த கொரோனா நோயினால் தினமும் 8 முதல் 10 மாத்திரைக்கள் பத்து நாட்களுக்கு எடுத்துக் கொண்டேன்)


அந்த பெண் இரண்டு மூன்று முறை தட்டிப்பார்த்தும் என் இடக்கையில் அவரால் நரம்புகளை கண்டறிய முடியவில்லை. அதனால் என் வலது கையை பிடித்தார். அதில் அவருக்கு நரம்பை தட்டிப் பார்த்து கண்டறிய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. 


தோராயமாக ஐந்து வருடங்களுக்கு பின் என் உடலின் வலக்கரத்தில் இரத்தத்தை எடுக்க வேண்டி ஊசி நுழைந்தது.


அந்த பெண் என்னிடமிருந்து 10ml இரத்தத்தை எடுத்து ஒரு தனி சிறு கண்ணாடி நீள் குழாயில் இட்டார்கள். அதில் என் பெயரை கேட்டு எழுதியும் கொண்டார்கள்.


ஊசி போட்ட இடத்தில் ஒரு பஞ்சை வைத்து கையை நன்றாக மடக்கி வைத்துக் கொள்ளும் படி கூறினார்கள். நானும் அவர் சொன்னபடியே செய்தேன்.


சரியாக அந்த அறையை விட்டு வெளியேறும் போது X-RAY எடுக்கும் இடத்தில் யாருமே இல்லை. அப்போது எனக்கு மீண்டும் ஒரு போன் வந்தது.


'ஹலோ ஜெகதீசனா? நான் நகராட்சியிலிருந்து பேசுறேன்' 


அது ஒரு வயதான பெண்மணியின் குரல். அந்த குரலில் ஒரு கண்டிப்பு தெரிந்தது.


'ஆமாம்' நான் பணிவாகவே சொன்னேன்.


ஒரு பத்து வினாடி அமைதியாக இருந்தது. எந்தவித எதிர் பதிலோ கேள்வியோ வரவில்லை.


'இப்போ எங்க இருக்கீங்க?' அவரது குரல் மீண்டும் கேட்டது.


'கொரோனா வார்டில்' நான் சட்டென்றே சொல்லிவிட்டேன். மீண்டும் X-RAY எடுப்பதற்காக ஒரு மணி நேரம் நிற்க நான் விரும்பவில்லை.


மீண்டும் ஒரு பத்து வினாடி அமைதி நிலவியது. நான் சொல்வதை எல்லாம் உட்கார்ந்து மெல்ல எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.


'உங்கள் வீட்டில் எத்தனை பேர்'


'நாலு'


பத்து வினாடி மௌனம்


'யார் யார்?'


நான் அப்பா அம்மா அண்ணன்


மீண்டும் பத்து வினாடி மௌனம்


'வீட்டில் எல்லாரும் டெஸ்ட் எடுத்துவிட்டீர்களா?'


'அம்மா மட்டும் இன்னும் எடுக்கவில்லை'


மீண்டும் பத்து வினாடி மௌனம்


எனக்கு அப்போது பொறுமை இல்லை. 'மேடம், நான் கொரோனா வார்டில் சேர்வதற்காக வந்திருக்கிறேன், கொஞ்ச நேரம் கழித்து நானே போன் செய்யுறேன்' என்றேன்.


'அப்பாவும் அண்ணனும் டெஸ்ட் எடுத்துட்டாங்களா?' அவர் அடுத்த கேள்வியை தொடங்கினார்.


நான் அவமரியாதையாக அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் போனை கட் செய்தேன்.


என்னை அந்த இளைஞன் மீண்டும் பார்த்தான். எனக்கு நான்றாக தெரியும் அவர் என்ன கேட்பாரென்று.


'உங்க பெயர் என்ன?' நான் நினைத்தபடியே கேட்டார். 


'ஜெகதீசன்'. அவர் என்னை உள்ளே அனுமதித்தார். X-RAY எடுத்தாயிற்று. 


இவற்றின் ரிப்போட்டுகள் வர கொஞ்சம் நேரம் எடுக்கும் அதுவரை வெளியே இருக்கவும் என்று என்னையும் அங்கு சேரவிருக்கும் சக நோயாளிகளையும் வெளியே அனுப்பினார்கள்.


நான் காலையில் வந்திருந்தேன். வெளியே வந்தபோது மதியம் ஆகியிருந்தது. சுமார் ஐம்பது நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியே நின்றுக் கொண்டும் கிடைத்த இடத்தில் அமர்ந்தும் இருந்தார்கள். 


அரை மணி நேரத்திற்கு பிறகு என்னை உள்ளே அழைத்த மருத்துவர். எனது நடுவிரலில் Pulse Oximeter-ஐ எடுத்து மாட்டிக்கொள்ளும் படி சொன்னார். 


முககவசம் அணிந்திருந்தும் ஆக்ஸிஜன் அளவு 98 இருந்தது. எனக்கு இருந்த அறிகுறிகளை கேட்ட அந்த மருத்துவர். இதே மருத்துவ கல்லூரி தேர்வு கூடத்தில் என்னை சேரும் படி சொன்னார். அங்கிருந்த ஒரு செவிலியும் என்னை ஏதாவதொரு அறையில் சென்று இருக்கும் படி கூறி ஒரு மெலிந்த துணி ஒன்றையும் கொடுத்தார்கள். 


அதை எடுத்துக் கொண்டு நான் உள்ளே சென்று கொண்டிருக்கும் போது என் அண்ணன் எனக்காக துணி மற்றும் உணவை எடுத்துவர கிளம்பினான்.


அன்றிலிருந்து ஏழு நாட்கள் நான் கொரோனா வார்டிலே தான் இருந்தேன். அது எனக்கு உண்மையிலே புது அனுபவமாக இருந்தது.



-தீசன்


கருத்துரையிடுக

புதியது பழையவை