அண்மை

தந்திர உலகம் - 5.ஊது உலை

 

 முதல்பாகம் - புகைக்கூண்டு

5. ஊது உலை..!




வான் மேகங்களுக்கிடையே தன் விரிசிறகை அசைத்து ஒய்யாரமாய் பறந்து கொண்டிருந்தது ஒரு பெட்டை பாறைகழுகு.. அதற்கு சிறிது இடைவெளிவிட்டு பின்னால் பறந்து கொண்டிருந்தது மற்றொரு ஆண் கழுகு..! இரு பாறைகழுகுகளுமே வாயில் ஒரு குச்சியை கவ்விக்கொண்டு பறந்தன..  பெட்டை கழுகு சீரான வேகத்தில் பறந்தாலும் பின்னால் வந்த ஆண்கழுகு அவ்வாறு இல்லாமல் திடீரென தன்வேகத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாக இருந்தது.. அது ஒருநேரம் பெட்டைகழுகின் தலைக்குமேலே பறக்கும்.. சட்டென திசைமாறி.. அதற்கு கீழே வந்து பறக்கும்..! ஒருசமயம் முன்னால்...அடுத்த நாழி பின்னால்... என அந்த ஆண்கழுகு இல்லாத வேலையெல்லாம் செய்துகாட்டி பெட்டைகழுகை ஈர்க்க முயன்றது.. விரட்டி விரட்டி வானில் வட்டமடித்தது..!
ஆனால் இவை எதற்கும் கவனம் சிந்தாமல் தானுண்டு தன் வானம் உண்டுஎன அந்த பெட்டை கழுகு விரைந்து சென்றுகொண்டிருந்தது... 
தன் பம்மாத்து லீலைகள் எதுவும் பலன்தராத காரணத்தால் தற்சமயம் சற்று விசித்திரமான சாகசத்தில் இறங்கியது ஆண்கழுகு.. தான் வாயில் கவ்வியிருந்த மரக்குச்சியை மிக உயரத்திற்கு எடுத்து பறந்து.. வேண்டுமென்றே கீழே நழுவ விட்டது. இது முற்றிலும் அசட்டுத்தனம் ஆகும்..ஏனெனில் இந்த ஒற்றை குச்சியை எடுக்க அந்த பிரத்யேக மரத்தைத்தேடி அதுகடந்திருக்கும் தொலைவு மிக அதிகம்... அப்படி சிரத்தையோடு தேடி..கண்டு.. கொண்டு போவதை பாதிவழியில் பறிகொடுக்க யாருக்குத்தான் மனம்வரும்..? இதை கவனித்த பெட்டை கழுகு சற்று ஸ்தம்பித்தது. சிறகை அசைத்து முன்னேறாமல் நின்றநிலையில் காற்றிலேயே மிதந்தது. மிக உயரத்திற்கு சென்றுவிட்டால்  கழுகுகளும் பருந்துகளும் அந்தரத்தில் சிலநாழி அசையாமல் மிதக்கும் சூட்சமம் அறிந்தவை..!
"என்ன இந்த மடையன் இப்படி நழுவ விட்டுவிட்டானே..!"என்று அப்பெட்டை கழுகு திகைப்போடு நோக்க.. ஆண்கழுகு அந்த அற்புதத்தை அப்பொழுது நிகழ்த்தியது.. கீழே நழுவிய குச்சி காற்றின் வேகத்தால் சுழன்றபடியே கீழே வேகமாக விழ...அதை விட வேகமாக விரைந்த ஆண்கழுகு உடலை வில்லென வளைத்து வெகு லாவகமாக கீழ்நோக்கிப்பறந்து கண்இமைக்கும் நொடியில் அந்த குச்சியை மறுபடி பற்றிக்கொண்டது,,, தன் கால்களால்...!
அதை பார்த்து சற்று அசந்துதான் போனது பெட்டைகழுகு...எனினும் அப்படி காட்டிக்கொள்ளாமல் தன் பயணத்தை அது தொடர்ந்தது...! ஆண்கழுகு விடாமல் மறுபடி மறுபடி இந்த உத்தியை செய்து காட்டியபடியே இருந்தது. தானே உயரே பறந்து குச்சியை நழுவவிடுவது..பிறகு தானே கஷ்டப்பட்டு போய் அதை பிடிப்பது என்று வசீகரிக்கும் சாகசங்களை செய்துகொண்டே பெட்டைகழுகை பின்தொடர்ந்தது.... ஆண்கழுகின் இடையூறு தாங்காமல் மெல்ல மெல்ல உயரம் தாழ்ந்து ஒரு மலை முகட்டின் அளவு க்கு பறந்தது பெண் கழுகு...  பிறகு..இரண்டுமே மேலும் தாழ்வாக பறந்தன.. இப்போது ஆண்கழுகு முந்திக்கொண்டது... ! அப்படியே வேகமாக முன்னேறி பறந்தபடி சட்டென்று திரும்பி பார்த்தால், பெட்டைகழுகு வேறு திசையில் போய்க்கொண்டிருந்தது..! இந்த திடீர் ஏமாற்றத்தால் ஒரு கணம் விக்கித்து போய்.. பிறகு தானும் வால்சிறகை திசைமாற்றி திரும்பி சற்று உயரமாக பறக்க எத்தனித்தது...., 

அப்போது அதன் அலகில் இருக்கும் நாசி துவாரம் வழியாக ஏதோ சகிக்கமுடியாத நாற்றத்தை உணர்ந்தது..! மேலும் முன்னேறிய போது அது ஒருவித புகை மண்டலத்துக்குள் நுழைந்து விட்டதை உணர்ந்தது.. பார்வையும் மங்கலானது.. மேகங்களுக்கிணையாக பறந்துகொண்டே மண்ணில் ஊர்கிற எறும்பைகூட இனம் காணும் அதன் கூரிய விழிகள்.., இப்போது.. இவ்வளவு தாழ்வான உயரத்தில் பறந்தும் அதனுடைய அலகின் நுனியை கூட தெளிவாக காணமுடியாமல் தவித்தன.! எப்படியோ திசையில்லா வானின் ஏதோ ஒரு திக்கில் பறந்து அந்த புகைமூட்டத்தை விட்டு வெளியே வந்தது..! முடியாமல் சிரமப்பட்டு சிறிதுதூரம் பறந்தது என்றாலும்.. அதன் சுவாச மண்டலம் முழுவதிலும் வியாபித்திருந்த நச்சுபுகை அதன் குட்டிமூளையை ஏதோ செய்து முடக்கிவிட... திக்கி திணறி பறந்து கொண்டிருந்த அந்த பாறைகழுகு, அந்தரவெளியிலிருந்து மிக வேகமாக பொத்தென கீழே சரிந்தது...! இம்முறை அதன் கால்களில் இருந்த குச்சி உண்மையாகவே நழுவியது..!

            ******************

பொடியனான பதுமனின் நுண்ணறிவையும் அவனது யூகங்களையும் அடுத்தடுத்து கண்டு திகைத்து போன நன்னன்.., " எப்படி...? எப்படி உன்னால் என் பெயரை சரியாக யூகித்து சொல்ல முடிந்தது..? தயவு செய்து சொல்லிவிடு தம்பி.., இல்லையென்றால் என்தலையே வெடித்துவிடும்.!. சொல்..சொல்..!"

"அட சற்று பொறுங்கள்.. நன்னன் அண்ணா..! இதில் ஒரு யூகமும் இல்லை...! சற்றே நாவுக்கு ஓய்வளித்து செவிக்கு வேலை கொடுங்கள் உங்களுக்கே பதில் கிட்டும்..!"

நன்னன் நச்சரிப்பதை நிறுத்தி,,, அது என்ன சத்தம் என உற்று கவனித்தான்... 
மிக மெல்லியதாக தூரத்திலிருந்து... ஒலித்தது... அந்த குரல்..

"நன்னா...! எங்கே இருக்கிறாய்..? எங்கிருக்கிறாய் நன்னா...!?…!? நன்னா...! எதாவது குரல்கொடு..."


அது ஆக்கூவின் குரல்தான்..! தன்னை தேடித்தான் கத்தியபடி வந்துகொண்டிருக்கிறான் என்பது நன்னனுக்கு புரிந்தது... 

பதுமன் பேச்சைத் தொடர்ந்தான்..

"இங்கு நாம் இருவர்தானே உள்ளோம்.. என்பெயர் நன்னன் இல்லை.. நிச்சயமாக தேடிவரும் அந்த மூன்றாவது ஆளின் பெயரும் அதுவாக இருக்கபோவதில்லை! எனில் தேடப்படும் அந்த நன்னன் நீங்கள் தான்!"

நன்னன் குறுநகை புரிந்தவாறே ஆம் என்பதுபோல தலையசைத்தான்.. தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாலும் இந்த பொடியன் சுற்றிலும் நடப்பவற்றில்  விழிப்புடன் இருக்கிறதை எண்ணி வியந்தான்.... பதுமனின் தோளில் பெருமிதமாக தட்டிக்கொடுத்தான்.. பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு சத்தமாக..


"ஆக்கூ...! நான் இங்கிருக்கிறேன்..! நேராகவே வா..!" என கத்தினான்..

"ஆ..! நன்னா நீ தானா.. எங்கே எங்கே இன்னொருமுறை கூறு...!"

" ஆம் நானேதான்..! எங்கும் திரும்பாதே சரியாகத்தான் வருகிறாய்..! நேராக வா..ஆக்கூ..!"

சிறிது நேரத்தில்.... மூவரும் சங்கமித்தனர்.

ஆக்கூ நன்னனிடத்து தனக்கு நேர்ந்தவற்றை சொல்ல ஆவலாய் இருந்தான்.. ஆனால் புதியவன் ஒருவன் முன்னிலையில் அதை சொல்ல விரும்பவில்லை..தயங்கினான்.. ஆதலால் சொல்லவந்ததை விட்டு வேறு மாதிரி தொடங்கினான்...

"என்ன ஆயிற்று நன்னா..? ஏன் இப்படி திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாய்..? இந்த பையன் யார்..? இங்கு எப்படி..?"

"ஆக்கூ அது ஒரு பதைபதைக்கும் அநுபவம்..! இதோ இருக்கிறானே.. இவன் பெயர் பதுமன்! இவன் இங்கு எப்படி என்றா கேட்டாய்..? இவன்மட்டும் தற்சமயம் இங்கு இருந்திராவிட்டால் நீ என்னை உயிருடனே பார்த்திருக்க மாட்டாய்..!"

"என்ன சொல்கிறாய் நன்னா.. அப்போ அந்த கருஞ்சிறுத்தைக்கிட்ட நீ மாட்டிக்கொண்டாயா என்ன?"

என ஆக்கூ கேட்டதும் மறுபடி நன்னன் குழம்பினான்.. "இவனுக்கு எப்படி கருஞ்சிறுத்தை வந்தது தெரியும்.. நாம் ஓடுகிறபோது கூட இவன் பார்த்திருக்க வாய்ப்பில்லையே... சிறுவனை பற்றி விசாரிப்பான் என்றுபார்த்தால் சிறுத்தையைப்பற்றி கேட்கிறானே..!"என சிந்தித்துக்கொண்டிருந்தான்...

"நன்னா உன்னைத்தானே கேட்கிறேன் என்ன யோசிக்கிறாய்..?"

"அது.. ஒன்றுமில்லை..வந்தது சிறுத்தை என எப்படி சொன்னாய்..? நீ பார்த்தாயா என்ன?"

"ஆமாம் ..! உன்னைத் தேடி வரும்போது எதிரில் கண்டேன்.. ஆனா அபாயம் ஒன்றும் இல்லை..! நல்லவேளையாக சுதாரித்து.. ஓடிச்சென்று...ஒரு புதரில் ஒளிந்து கொண்டேன்...!"

"ஆகா.. நல்ல வேலை செய்தாய் ஆக்கூ...! அது சமான்யப்பட்டது அல்ல..! பற்கள் தேவை இல்லை பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும்..!. அப்பப்பா...!அந்த கருஞ்சிறுத்தையின் கண்களில் தெரிந்த வெறி இருக்கிறதே.. அதை ஜென்மத்திற்கு மறக்கமாட்டேன்.. அதன் கூரிய நகங்களை என் மார்பில் பதித்தது.. அது ஒன்றும் பெரிதாக பதியவில்லை..! ஆனால் அதன் வெறிகொண்ட வெஞ்சின விழி இரண்டும் என் மார்பை ஊடுருவி ஆழமாக பதிந்துவிட்டது..!"

" ஓ!.. அந்தசமயம் இந்த பொடியன் வந்து கருஞ்சிறுத்தையின் கழுத்தைநெறித்து கவட்டையில் உதைத்து விரட்டியடித்தானா..?"

"அப்படி பேசாதே ஆக்கூ..! பதுமனை பார்த்தால் உனக்கு என்ன வேடிக்கையாய் இருக்கிறதா..?"

"ஐயோ.. இல்லவே இல்லை..! தெரியாமல் சொல்லிவிட்டேன்..  இவன் தோற்றத்தை பார்த்தே சிறுத்தை சிதறி ஓடியிருக்கும்..!
ஏண்டா அம்பி..! உங்கள் பகுதியில் யாரும் ஓவியத்தை பாறைசுவரில் வரைவதில்லையோ... உன் மேனி பூராவம் இப்படி வண்ணம் வழிகிறதே..!"

"நிறுத்து ஆக்கூ..! பதுமனை கேலிசெய்தாயானால் உன்னை பிரியவேண்டிவரும்... அவ்வளவுதான்..சொல்லிட்டேன்!"

தனக்காக நன்னன் வாதம் செய்வதை கண்டு பதுமன் பேசலானான்..
"இருங்கள் நன்னண்ணா! அவர் கேட்பதற்கு பதிலிருக்கிறது..

ஆக்கூ அண்ணா! கேளுங்கள்.., எங்கள் குடிகள் சிறுத்தைப்புலிகளை தெய்வமாக வணங்கி வழிபடுவர்கள்.. நாங்கள் ஒருபோதும் அவற்றை அவமதிப்பதில்லை..! ஒதுங்கி அரவணைத்து வாழ்கிறோம்.. அவையும் நாங்களும் ஒரே வனமகளின் பிள்ளைகள் என்பதன் அடையாளமாக இப்படி வண்ணங்களை பூசிக்கொள்வோம்!
இது கூட சிறுத்தைகளை ஏமாற்றுவதற்காக அல்ல.. நாங்கள் யார் என்பதை மறக்காமல் இருக்க...!"

பதுமனின் பேச்சால் கவரப்பட்ட ஆக்கூ.... ஆஹா நல்ல புத்திசாலி பிள்ளைதான்.. என மனசுக்குள் நினைத்துக்கொண்டு,,, "அதுசரி.. பிறகு சிறுத்தை எப்படி உங்களை விட்டு அகன்றது....?" என கேட்டான்.

இதற்குள் நன்னன் இடைமறித்து.. "அதை நான் சொல்கிறேன் ஆக்கூ..!" என்றபடி பதுமனின் கழுத்திலிருந்த அந்த கொம்பை எடுத்து கணமாக ஊதினான் நன்னன்.

".......ப்..பூ...பூ..ஊ.ஊ..போ...ம்....ம்.."

என காடதிர காதை கிழித்தது..அவ்வொலி..

"ஐயோ...! அட நிறுத்து நன்னா..! புரிந்துவிட்டது..நிறுத்து!"

நன்னன் கொம்பு ஊதுவதை நிறுத்தினான்.. பிறகு மூவரும் நடந்துகொண்டே பேச்சை தொடர்ந்தனர்.. 

"ஏன் ஆக்கூ.. நீ எப்படி இந்த திசையில் சரியாக வந்தாய்..?" நன்னன் வினவினான்

" முதலில் ஒன்றும் புரியாமல்தான் தடுமாறினேன்.. பிறகு உன்னுடைய பொருளெல்லாம் இந்தபக்கமாகத்தான் இறைந்து கிடந்தன.. அதனால் இவ்வழியை தேர்ந்தெடுத்தேன்... இந்தா எல்லாம் சரியாய் இருக்கிறதா பார்...!"
என்றபடி நன்னனது பொருள்களை ஆக்கூ ஒப்படைத்தான்..

" முதலில் அந்த தண்ணீரை கொஞ்சம் கொடு.. இந்த பிள்ளை முன்பே கேட்டான்..!" என்றபடி சுரைகுடுவையை வாங்கி பதுமனிடம் தந்தான் நன்னன்.

பதுமன் ஆவலோடு அதை வாங்கி மடக் மடக் கென குடித்து தீர்த்தான்..!

"அப்பாடா..! சுவையான நீர்..! தாகம் தீர்ந்தது..!"

அவன் தண்ணீர் அருந்துவதை இருவரும் இளநகையுடன் கண்டுகளித்தனர். பிறகு நன்னன்,

"ஏன் ஆக்கூ... இன்னொன்று எங்கே..?"

"சுரைக்குடுவையா.. அது உடைந்துவிட்டது.. நன்னா..! பிறகு சொல்கிறேன்.. போகட்டும்....நீ அந்த கல்லை பத்திரமாக வைத்திருக்கிறாயா..?அதை எங்கும் காணவில்லை..!"

"இதோ இருக்கிறது ஆக்கூ..! கவலைவேணாம்.. நீ நினைத்தது போலவே இதை நான் தவறவிட்டுவிட்டேன்.. இதையும் இந்த பதுமன் தான் எடுத்து தந்தான்..."

"ஆச்சரியம் தான்..! இந்த கல்லின் மகிமை இவனுக்கும் தெரிந்திருக்கிறதா என்ன?"

"இவனுக்கு தெரியாதது என உலகில் எதுவுமில்லை ஆக்கூ.. உன் விடைகாணா ஐயங்கள் எதைவேணுனாலும் இவனிடத்து கேள்... தக்க பதில்சொல்லி உன்னை ஆச்சரியம் கொள்ள செய்வான்!"

"ஏதேது..? நன்னா.,,. சற்றுநாழி சந்தர்ப்பத்தில் இந்த பொடியன் உன்னை இந்த அளவுக்கு வசீகரித்து விட்டானே!"

"உண்மைதான் ஆக்கூ...! இன்னொன்றையும் கேள்.. இவன் ஒசகுமலைவாசி..!"

"என்ன...? " ஆக்கூ வியப்போடு பதுமனை நோக்க.. அவன் ஆமாம் என்பதுபோல தலையசைத்தான்..

பிறகு.. அதிகம் பேசவில்லை.. மூவரும் பொடிநடையாக நடந்து அந்த கானகநடுவினில் அமைந்த வேதியர் குடிலை அடைந்தனர்...!

         **********.          .**********

மரங்கள் சூழ்ந்த இடம். ஆயினும் காட்டிலிருந்து இது தனித்து தெரிந்தது. காரணம் ஒழுங்கான மரவரிசை அமைவு... நீண்டகாலமாக மனித கைபட்டு கிளைகள் கழிக்கப்பட்ட இயல்பற்ற மரங்கள் மற்றும் செடிகள்.. புற்களோ சருகுகளோ அதிகம் இல்லை.. அடிக்கடி கால்தடம் பதிந்து பதிந்து மண் தரையாக கெட்டிபட்டு உருவாகிருந்த பாதை.
மூங்கில் வேலியால் சூழப்பட்ட ஒரு கற்குடில்! மலையடிவாரங்களில் கொட்டிக்கிடக்கும் தட்டையான சிறுசிறு பாறாங்கற்களை கொண்டுவந்து வெறுமனே அடுக்கி கட்டியெழுப்பப்பட்ட வீடு.! கோரைப்புற்களால் வேயப்பட்ட அதன் மேற்கூரை  
மிகவும் பழசாகி, அதன் மேல் பெயர்தெரியாத பல காட்டுக்கொடிகளும் விரவியிருந்தன. அவை பூ பூத்து , பார்க்கவே மிக ரம்யமாக இருந்தன..!

அந்த கற்குடிலை சுற்றி ஏராளமான பானை ஓடுகளும் சங்குகளும் கொட்டாங்கச்சி ஓடுகளும் சிதறி புதைந்தும் புதையாமல் கிடந்தன. எரிந்து அணைந்த கரிபடிந்த விறகுகள்... மூங்கில் கூடைகள்.. என பலவித பொருட்கள் கேட்பாரின்றி இறைந்து கிடந்தன.

வேலிக்கும் வீட்டுக்கும் இடையே ஒரு குட்டையும் இருந்தது. அதில் போதிய நீர் இருந்தாலும் அது தெரியாதபடி அல்லி இலைகளும் மலரும்..பாசியும் படர்ந்திருந்தன.

மூவரும் அந்த குடிலின் வேலியைகடந்து வாசல் முன்பு போய் நின்றனர். 

"ஆக்கூ ! நீயே அவரை கூப்பிடு! உன்னைதான் அவருக்கு நன்றாக தெரியும்...!" என்றான் நன்னன்

ஆக்கூ நன்னனை முறைத்துப் பார்த்தான்.. பிறகு எதையோ யோசித்தவன் .. சரி என ஒப்புக்கொண்டு.. அவரை அழைத்தான்..

"கிழவரே...! கிழவரே..! உள்ளே இருக்கீறா..?"

அதற்கு.. எந்த பதிலுமில்லை..,
 அதனால் மறுபடி கத்தி கூப்பிட்டான்..

"ஐயா.. கிழவரே..! நாங்கள் நந்துவின் தோழர்கள்... வந்திருக்கிறோமய்யா..! உள்ளே வரலாமா..?" என்றான் சத்தமாக..

எந்த பிரயோஜனமும் இல்லை..!

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பதுமன் கேட்டான், "ஒருவேளை ஆள் இல்லையோ என்னவோ! சற்றுநாழி காத்திருந்து பார்ப்போமா?"

"அதுவும் சரிதான்....  எதற்கும் இன்னொரு முறை சற்று உள்ளே புகுந்து கூப்பிடு ஆக்கூ..!" என்றான் நன்னன்.

ஆக்கூ உள்ளே போனான்.. உள்புற படிகட்டு கீழ்நோக்கி இறங்கியது...குகையை போல.. ஆக்கூ இதனை எதிர்பார்க்கவில்லை.. அப்படியே நின்றபடி மீண்டும் கூப்பிட்டான்..

"ஐயா.. கிழவரே..!..நாங்க......."

"யாரப்பா.. அது..?  உள்ள வா! நான் ஒரு வேலையாக இருக்கிறேன்.. இப்ப வெளிய வரமுடியாது... நீ உள்ள வா..! பாத்து பத்திரமா இறங்கிவா..!" என்று குரல்மட்டும் வந்தது.

ஆக்கூ பின்னால் திரும்பி இருவரையும் வரச்சொல்லி சைகை செய்தான்..
இருவரின் புருவமும் உயர்ந்தது. பிறகு ஒருவித உவகையோடு குடிலுக்குள் நுழைந்தனர்.

 மூவரும் மெல்ல இறங்கி உள்ளே புகுந்தனர். ஐந்து படிகள் கீழே இறங்கியதும் அகண்ட தரை வந்தது..அந்த உச்சி வெயில் பொழுதிலும் அவ்விடம் இருளடர்ந்து இருந்தது. ஆனாலும் ஓரளவு மங்கிய வெளிச்சம் இருக்கத்தான் செய்தது. வெளியிலிருந்து பார்த்த கல்லடுக்குகளை விட உள்ளே ஒரு அதளபாதாள குகையே இருந்தது! நல்ல விஸ்தாரமான இடம்தான். ஆனால் எத்திசைநோக்கினும் ஏதேதோ சாமான்கள்.. குவளைகள்.. அகப்பை கரண்டிகள்..கற்சட்டிகள்.. விறகு குச்சிகள் என சிதறி கிடந்தன... சுற்றிலும் இருந்த கற்சுவரில் விதவிதமாக கிறுக்கி எழுதபட்டிருந்தது.. அவை குறியீடுகள் மற்றும் சின்னங்கள் என்பதை பதுமன் பார்த்தமாத்திரத்தில் அறிந்துகொண்டான். நன்னனுக்கு அவை கோலங்களாகவும் வரையத்தெரியாதவன் வரைந்த ஓவியமாகவும்தான் தெரிந்தன...


அங்கு ஒரு உயர்ந்த மேடைபோன்ற இடம் இருந்தது.... அங்கு உச்சியில் நல்லசிவப்பாக வெளிச்சம் வந்தது அது ஏதோ நெருப்பு எரிவதை உணர்த்தியது. அங்குதான் அந்த கிழவேதியர் இருக்கிறார் என்பதை மூவரும் புரிந்துகொண்டனர்.

"ஐயா..! நாங்கள் நந்துவின் தோழர்கள் வந்திருக்கிறோம்...!" என்றான் ஆக்கூ அண்ணாந்து பார்த்து..

"அடடே... அப்படியா..? இங்கே மேலே ஏறி வாருங்கள்..! பின்பக்கமாக ஏணிஇருக்கிறது... அதில் ஏறி வாருங்கள்..இங்கே!"

வீட்டுக்குள் பள்ளம்.. பள்ளத்தில் ஒரு உயர்ந்தமேடை என சுத்தகோமாளித்தனமாக இருந்த வடிவமைப்பை நினைத்து நன்னன் திகைத்தான்.. பிறகு ஆக்கூ முதலில் ஏணியில் ஏற அவனைத்தொடர்ந்து நன்னனும் பதுமனும் ஏறினர்..

அங்கே பிரகாசமாக சிவந்து ஒளிர்ந்த அக்னிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு ஒரு கல்சட்டியில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி அதனை  இடுக்கிபோல நீண்ட குச்சியால் பிடித்துக்கொண்டு அந்த தீ ஜூவாலையில் காட்டி அதனை சூடுபடுத்திக்கொண்டிருந்தார்.. அந்த வேதியர்.

இவர்கள் மேலே வந்தும்கூட அவர் திரும்பி பார்க்காமலே.. பேச்சை தொடர்ந்தார்...
" என்னப்பா விஷயம்...? இந்த கிழவன தேடி இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க..? நந்து பய வரலையா..? வரமுடியாதுனுட்டானா...?.."

"அப்படி இல்லைங்க ஐயா..! அவன் அம்மா வனப்பயணம் செய்ய ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.... தெரிந்தால் வைவார்கள்!" என்றான் ஆக்கூ

"ம்..ம்..வைவாள் வைவாள்..! ஏன் வையமாட்டாள்.. அவள் விட்டாலும் அவனது பாட்டியாள் இருக்கிறாளே சூனியக்கார கிழவி அவள் விடவே மாட்டாள்..! பாவம் அந்த பிள்ளை!"

வேதியர் இப்படி சொன்னதும் ஆக்கூவுக்கும் நன்னனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஏனெனில் அவர் சூனியக்காரி என்று திட்டுவது அவரது மனைவி மூலி பாட்டியைத்தான். அவர் சொல்வதுதான் உண்மையும்கூட..!

மறுபடியும் அவரே பேச்சைத் தொடர்ந்தார்..

"நான் அவள் மகனை பொல்லாத பணிகளை செய்யச் சொல்லி கொன்றுவிட்டேனாம்...அந்த கோபம் அவளுக்கு..! எங்காவது அப்பனே பிள்ளையை கொல்வானாப்பா..? அது எதிர்பாராத விபத்து என்று புரிந்துகொள்ளாத மூடங்கள் இரண்டும்... என்னை குறை சொல்லி பேரனையும் அழைத்துக்கொண்டு பிரிந்து போய்விட்டன..! போவட்டுமே எனக்கென்ன..?"

"ஆனால் நந்து உங்கள் மீது இன்றளவும் பிரியமாகத்தான் இருக்கிறான் ஐயா..! நீங்கள் குடியிருப்பு பக்கம் சந்தைக்கு வரும்போதுலாம் ஒளிந்து கொண்டு பார்ப்பான்....!"

"ஒளிந்து கொண்டு பார்ப்பானா..? நானென்ன பூதமா பிசாசா? ஹா...ஹா...ஹா! " என்று கேட்டபடி.. சத்தம் போட்டு சிரித்தார் வேதியர்.. பிறகு கையிலிருந்ததை கோவமாக கீழே போட்டு,,
"ச்சீ.. எவ்வளவு நேரமாக உக்காந்திருக்கேன் இது கொதிக்கவே மாட்டேங்குதே..! கல்சட்டி என்பதால் சூடு போதவில்லை..! இன்னும் விறகை எடுத்து போடணும்" என்று சொல்லியபடி எழுந்து திரும்பினார். அம்மூவரையும் அப்போதுதான் பார்த்தார்.. அவர்களும் அந்த நீண்டதாடி கிழவரின் முகத்தை அப்போதுதான் பார்த்தனர்.

அவருக்கு ஆக்கூவைதான் சட்டென அடையாளம் தெரிந்தது.. "அட தடிப்பயலே நீதானா..? நான் யாரோ என்னவோ என்று பேசிக்கொண்டிருக்கிறேன்..! அடடா உன்னை போல வாட்டசாட்டமாக ஒரு ஆள் உதவிக்கு இருந்தால் எனக்கு எவ்வளவு சௌகரியமாக இருக்கும்...!" என்றார்..

ஆக்கூ முகம் புன்னகை சிந்தினாலும் உள்ளே அகம் கொப்பளித்துகொண்டிருந்தது..
"நம்மை பார்த்தாலே இந்த கிழவனுக்கு எதாவது வேலை வாங்கத்தான் தோணும்போல... !"
என குமுறினான்.  அவனுக்கு உதவிசெய்வது இயல்பாக பிடிக்கும் ஆனால் தான் அதற்குமட்டுந்தான் சரிபடுவேன் என மற்றவர் நினைப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது! 


நன்னன் சொன்னான்,,"ஐயா இந்த பையன் பெயர்.. பதுமன்! உங்களுக்கு ஏதோ செய்திசொல்ல ஒசகுமலையிலிருந்து வந்திருக்கிறான்.."

"என்ன...ஒசகுமலையிலிருந்தா.. ? அடேயப்பா எவ்வளவு தூரம்..? மற்கலி அனுப்பினானா?.. சீடனை அனுப்புவதாக சொல்லியிருந்தான்..! உன்னையா அனுப்பினான்? இவ்வளவு சிறுவயதிலேயே மற்கலியிடம் சீடனாகிவிட்டாயா பிள்ளாய்..!?"

"ஆமாம்.. தாத்தா..! " என்றான் கனிவுடன் பதுமன்.

"என்ன...தாத்தா என்றா அழைத்தாய் !? ஆஹா எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? என்னை வேதியர் என்றும்.. கிழவர் என்றும் ஏன் பித்துக்குளி என்றுகூட  குடிவாசிகள் அழைப்பார்கள்.. என் பேரன்கூட தாத்தானு கூப்பிட்டதில்லை.. உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது..பிள்ளாய்.. உன் பேர் என்ன சொன்னாய்?"

"பதுமன்" தாத்தா..!

"பதுமன்....ம்.. நல்ல பெயர்.. ! நல்ல பெயர்..!  சரி சரி.. வா உனக்கு சாப்பிட பழங்கள் தருகிறேன்.. நீங்களும் வாருங்கள் பிள்ளைகளா.." என மூவரையும் அழைத்தார்..

அதுவரை ஆக்கூ வுக்கு அவர்மீதிருந்த வெறுப்பு அறவே நீங்கிற்று... ஆகா.. வந்ததும் பழங்கள் தரப்போகிறாரே..! என மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தான்..

ஆனால் பதுமன் குறுக்கிட்டு, " சற்று பொறுங்கள் தாத்தா! நீங்கள் இவ்வளவுநேரம் மெனக்கெட்டது வீணாகிவிடும்.. அந்த திரவம்  முக்கால்வாசி கொதித்து விட்டது போலிருக்கிறது...இன்னும் கொஞ்சம்தானே..!அதை மறுபடி அந்த அடுப்பில் வையுங்கள் நான் கீழே சென்று விறகுகளை போட்டு தீயை பெரிதாக மூட்டுகிறேன்.. !" என்றான்..

"அடடே இந்த சிறுவயதிலேயே உனக்கு எத்தனை ஞானம்.. கெட்டிக்கார பிள்ளைதான். சரி நீ சொல்வதும் சரிதான்! ஆனா நீ போக வேணாம் இரு....  ஏய் தடிப்பயலே! நீ போய் அந்த விறகுகளை 'ஊதுஉலை' யில் தள்ளிவிடு போ...!" என்றார்..

ஆக்கூ விற்கு இனம்புரியா வெறுப்பு பிரவாகம் எடுத்தது.. அதைஅடக்கி கொண்டு ,, "ஐயா வேதியரே! என் பெயர் ஆக்கூ.. தடியனல்ல..!" என்றான்.

அவன் இப்படி சொன்னதும்  வேதியருக்கு சிரிப்பு வந்தது.. "சரி..சரி.. இனி அப்படி சொல்லமாட்டேன் தம்பி..!  'ஆக்கூ '
என்றே அழைக்கிறேன்...! உன் மீது அளவுகடந்த உரிமை இருப்பதாக எண்ணி சொல்லிவிட்டேன்... "

அவர் இப்படி சொன்னதும் மறுபடி ஆக்கூவிற்கு அவர்மீது மரியாதை பிறந்தது.. அடடா நம்மை எவ்வளவு நெருக்கமாக நினைத்திருக்கிறார் இந்த மனிதன்..! என பெருமிதம் கொண்டான்.  

" நீங்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் உங்களுக்கு என்மீது சகல உரிமை உள்ளது ஐயா! எங்கே என் பெயரையே மறந்து விடுவீர்களோ என்று ஞாபகப்படுத்தவே சொன்னேன்..! சரி சரி..
 இதோ போகிறேன்..! எவ்வளவு சூடேற்றவேண்டும் சொல்லுங்கள் இந்த குடிலையே பஸ்பமாக்கிடவா? !"

"ஐயோ! எதையாவது ஏடாகூடமாக செய்துவிடாதே..! எரியக்கூடிய பொருளை மட்டும் சற்றுகூடுதலாக அந்த உலையில் போடு.. போதும்! போட்டுவிட்டு 
அங்கேயே இரு.. முடிந்தவுடன் கூப்பிடுகிறேன்.."

ஆக்கூ ஏணி வழியாக கீழே இறங்கி ஊதுஉலை அருகே போனான்.அங்கே ஏற்கனவே நிறைய விறகுகள் சுள்ளிகள் கட்டிக்கிடந்தன.. அவற்றை உருவி எடுத்து ஒவ்வொன்றாக உலையில் போட்டான்.. அடியில் இது தகதகவென எரிந்தாலும் அதன் வெப்பம் மொத்தமும் மேலே போகும்வண்ணம் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. 

ஒரு விசிறியை எடுத்து காற்றோட்டத்துக்காக அதனருகே விசிறினான்... அது புகையாமல் தொடர்ந்து எரிந்தது..! 

அப்போது மேலிருந்து வேதியர் சொன்னார், " தம்பி ஆக்கூ! விசிறாதே தீ பொறியாக கிளம்பும்.. அருகில் ஊதாங்குழல் இருக்கிறது பார்.. அதை கொண்டு வாயால் ஊது...!.ஊதிவிடு!"

ஆக்கூ அருகிலிருந்த மூங்கிலால் ஆன ஊதாங்குழலலை எடுத்து ஊதினான்... அவன் எதிர்பார்த்ததை விட தீ ஜூவாலை தழல் என கிளம்பியது..

மேலே நன்னனும் பதுமனும் வேதியரை வியப்போடு பார்க்க.. அவர் கையிலிருந்த இடுக்கியும் சூடாகி அவரை வருத்தியது..கையை மாற்றி மாற்றி பிடித்தார்.. அதீத சூட்டில்
கல்சட்டியின் திரவம் திடீரென பொங்கிவிட்டது.. ! சிறிதளவு வழிந்தது..!
பதற்றத்தோடு  அதை வேதியர் வெடுக்கென  அடுப்பிலிருந்து எடுக்க அது மேலும் சிந்திவிட்டது..
சிந்திய துளிகள் கீழே எரிந்த உலையில் விழ அது "புஸ்......ஸ்." என்ற ஓசையுடன் புகையத் தொடங்கிற்று.. அதீத நெடியும் புகையும் அந்த குடிலில் விரவ.. ஆக்கூ அங்கிருந்து அகன்று மேலே வந்தான்..! 


வேதியர்..," பிள்ளைகளா! உடனே குடிலைவிட்டு வெளியேறுங்கள்.. இது நெடியேறுகிறது.. அது சுவாசிக்க நல்லதல்ல.. ம்.. உடனே போங்கள்..!"

"ஐயா..! நீங்கள்??" என்றான் நன்னன்.

"இதோ வருகிறேன்.. அதற்கு முன்பாக இந்த திரையை விலக்கிவிடணும்..!  இதை அகற்றினால் புகைஎல்லாம்  புகைபோக்கிவழியாக மேலே போய்விடும்! நீங்கள் போங்கள் இது எளிதான வேலைதான்!"

மூவரும் குடிலைவிட்டு வெளியேறினர்.. இருமிக்கொண்டே... !  


வேதியர் ஒரு குச்சியை எடுத்து நாணல்புற்களை நெய்துசெய்திருந்த அந்த திரையை அகற்றினார்... அது நேராக கீழே உலையில் விழுந்து அதுவும் பற்றி எரிந்தது..! என்றாலும் அவர்நினைத்தபடியே புகை எல்லாம் மெல்ல மெல்ல அந்த புகைபோக்கி வழியாக மேலே போக தொடங்கியது.. பிறகு அவரும் குடிலைவிட்டு வெளியே வந்தார்.. இதுபோல பலமுறை நடந்த அநுபவத்தால் அவருக்கு இருமல் எதுவும் வரவில்லை...!

வரும்போது ஒரு பானையை தூக்கிக்கொண்டு வந்தார்.. அதில் பப்பாளி, வாழை, சீதாப்பழம், முதலிய பல வண்ணக்கனிகள் நிறைந்திருந்தன...

எல்லோரும் வேலியைத்தாண்டி போய், சாய்வாக விழுந்த ஒரு மரநிழலில் சென்று நின்றனர்.

"சிறிதுநேரம் இங்கே அமருங்கள்.. பசியாறலாம்.." என்றுகூறி பானையை தந்துவிட்டு 'இதோ வந்திடுறேன்.'.என்றுசொல்லி குட்டை இருந்த பக்கமாக அவர் போய்விட்டார்.

ஆக்கூ ஆவலோடு பானையை வாங்கினான். உண்ணும் வரைமுறை எதுவுமின்றி தோலோடு சேர்த்து அதை புசித்தான்.. பதுமனும்  அமர்ந்து ஒவ்வொன்றாய் தேர்ந்தெடுத்து சாப்பிட்டான்.. நன்னன் மட்டும் அந்த கல்வீட்டின் மேலேயிருந்த புகைபோக்கியை பார்த்தபடி இருந்தான்... "அடடா.. அது எவ்வளவு அழகான காட்சி!  கரிய புகையை அதுவே கக்குவது போல இருக்கிறதே..!

"நீயும் வா நன்னா..! கனிகள் எல்லாம் சுவைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன! "
என்றான்..ஆக்கூ.

நன்னனும் வந்து அமர்ந்தான்.... அவன் ஒரு பப்பாளியை எடுத்து கீற்றாக அரிந்து கருமணிபோன்ற அதன் விதைகளை நீக்கி, ஒழுகும் கனிச்சாற்றோடு திரண்ட அதன் சிவந்த பொன்மஞ்சள் நிற சதையை தன் வாயருகே கொண்டுபோனபோது....,

வானிலிருந்து வந்து 'பொத்'தென அவன் மடியில்  விழுந்தது.. நச்சுப்புகையால் மயங்கிய அந்த பாறைக்கழுகு!

-சூரியராஜ்

கருத்துரையிடுக

புதியது பழையவை