அண்மை

தந்திர உலகம் - 6.வேதியர் ஒழுக்கம்

 

முதல்பாகம் - புகைக்கூண்டு
6. வேதியர் ஒழுக்கம்




அது ஒரு மரமல்லிகை மரம். மரத்தின் கிளைகொப்புகள் எல்லாம் அழகிய நீண்ட காம்புடைய வெண்ணிற மலர்களை கொத்துகொத்தாக பூத்துவைத்திருந்தன.. அதிகம் பருத்திடாத ஆனால் உயர்ந்து வளர்ந்திருந்த அம்மரத்தின் வேர்களையொட்டி தரையினில் எறும்பு புற்று ஒன்று இருந்தது. அத்தனையும் கருநிற கட்டெறும்புகள்..! கூம்பென மணலை குவித்திருந்த புற்றிலிருந்து சாரைசாரையாக சுறுசுறுப்பாக வெளிவருவதும் உள்ளே போவதுமாய் இருந்தன. மரத்தடியில் உதிர்ந்து விழுந்த நூற்றுக்கணக்கான நறுமண மலர்களிலிருந்து அவை எதையோ எடுத்து சேகரித்தன. அதுபோதாதென இன்னொரு எறும்பு வரிசை மரத்தின் மேல் ஊர்ந்துபோய் நேரடியாகவே பூக்களைமொய்த்து தேன்பருகி அதன் காம்பு மொட்டுகளை கடித்து மீச்சிறுநுண் பாகத்தை எடுத்துக்கொண்டு திரும்பின. புற்றின் வாயில் அருகே எறும்புகூட்டம் மிகுதியாக இருந்தது. அவை ஒன்றையொன்று ஒருகணம் எதிரெதிர் சந்தித்து ஏதோ நுகர்வதுபோல் சமிக்ஞை செய்துவிட்டு பிறகு நகர்ந்து வரிசைமாறாமல் சென்றன.

   அந்த சமயத்தில் அந்த எறும்பு புற்றின் மீது ஒரு சிறு கிளைக்குச்சி விழுந்தது. விழுந்தது என்னவோ சிறுகுச்சிதான். ஆனால் எறும்பின் நிலையிலிருந்து நோக்கினால் அது வளர்ந்த ஈச்சமரம் ஒன்று வானிலிருந்து வந்து நாம் வசிக்கும் குடிசையின்மீது விழுந்தது போலிருக்கும். உயரத்திலிருந்து விழுந்ததால் அது புற்றை சற்றே சேதப்படுத்தி விட்டது. எறும்புகள் சிதறி ஓடின.. அவற்றின் ஒழுங்கு  சீர்குலைந்தது..! 
சற்றுநாழி ஆனவுடன் பழையபடி அவை ஒன்றுசேர்ந்தன. புற்றினை மறுகட்டமைப்பு செய்தன.., இம்முறை வேறுபக்கமாக துவாரம்(வாயில்) வைத்து...!!

தங்களுக்கு சம்மந்தமில்லாத ஒரு அந்நிய பொருள் அருகிலிருப்பதை விரும்பாத அந்த எறும்புக்கூட்டம் தங்களின் காவல்துருப்புகளை அனுப்பி அந்த மரக்குச்சியை அப்புறப்படுத்த முயன்றன. பத்து பதினைந்து கட்டெறும்புகள் மட்டுமே சேர்ந்து அந்த குச்சியை அலேக்காக தூக்கி எடுத்துச்சென்றன..!. எறும்புகளின் இந்த காரியம் உருவ அளவில் மனிதர்களோடு ஒப்பிட இயலாத ஒன்று.. ஒப்பிட முயன்றால் அது மிகப்பெரிய செம்மர போத்தினை முப்பது நாற்பது பேர் சேர்ந்து தூக்குவதற்கு சமம்.! அப்போதுங்கூட கருவிகளின் உதவிஇன்றி வெறுங்கைகளால் மனிதர்களுக்கு அது சாத்தியப்பட்டிராது.

          *****.         ******.        *****.  

      பப்பாளியை ஆவலோடு புசிக்க முயன்றவன் மடியில் பறவை வந்து விழுந்ததால் பதறியடித்து எழுந்தான்..நன்னன்! அவனோடு உடனிருந்த ஆக்கூவும் பதுமனும் கூட எழுந்துவிட்டனர்..!

"ஆ..! ஐயோ.. என்ன கருமம் இது..!"

"இது...ஏதோ காட்டுக்கோழி...அல்லது வல்லூறு..!"

"இல்லை..! இல்லை..! இது ராசாளி..!"

"ஏதோ ஒன்று..! விடுங்கள் அதுவா முக்கியம்.‌..? என்னவாயிற்று அதற்கு..?"

"வேடர்கள் அம்பு எய்திருப்பர்... இல்லாவிடில் வானில் வட்டமடிக்கும் இதற்கு அடிபட வாய்ப்பே இல்லை....!"

"என்ன பேசுகிறாய்..? ஆக்கூ..! இங்கு ஏது வேடர்கள்..? அதுபோக இதன் உடலில் அம்போ..காயங்களோ எதையும் காணுமே?"

மயங்கினாலும் மண்ணில் கிடந்து சிறகை படபடவென அடித்து துடித்தது அந்த கழுகு.. மனிதர்கள் தன்னை சூழ்ந்துகொண்டதால் அதிகம் அச்சமடைந்தது!

அப்போது வேதியரும் அங்கு வந்தார்..

"என்ன பிள்ளைகளா..! என்ன விவாதம் நடக்கிறது...அங்கே?"

"இங்கு ஒரு பறவை குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கிறது.. தாத்தா! "

"என்ன..எங்கே..? நகருங்கள்...!. அடாடா ! இது பாறைகழுகாயிற்றே..! இதற்கு என்ன நேர்ந்ததாம்..?"

வேதியர் அக்கழுகினை காலை பிடித்து தூக்கி கையிலெடுத்து அதனை நன்றாக தடவி புரட்டி புரட்டி பார்த்தார்..

"நல்ல வேளை ஒன்றும் காயம் இல்லை.. ஆனால் கீழே விழுந்தில் சிறகு ஒடிந்திருக்ககூடும்..!."

"அச்சச்சோ..!" என்றான் நன்னன்.

"ஆனால் தாத்தா! அது ஏன் கீழே விழுந்தது?" பதுமன் கேட்டான்.

"சரியாக தெரியவில்லை பதுமா..! சிலநேரம் இரு கழுகுகள் சண்டைபோட்டு ஒன்றையொன்று கொத்தியபடி கீழே விழுவதுண்டு.. ஆனால்.. இது சண்டை போட்டாற்போலவும் தெரியவில்லை..!"

இவ்விதம் கூறிக்கொண்டே அண்ணாந்து..  வானைப் பார்த்து நோட்டமிட்ட வேதியர்.., மெல்ல தலையை சாய்த்து தன் குடிலையும் பார்த்தார்... "அடடா..! ஒருவேளை இதுதான் காரணமோ..? அவ்வாறாயின் எத்தனை விபரீத தவறு செய்துவிட்டேன்..!" என்றபடி.. 
நன்னனிடம் அந்த கழுகை தந்துவிட்டு..,
"ஆக்கூ ! அந்த பானையை கொடு என்னிடம்... தண்ணீ பிடிக்கனும்" என கூறி வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அதிலிருந்த மிச்ச பழங்களை மண்தரையில் கொட்டிவிட்டு குட்டையை நோக்கி ஓடினார்..

"என்னவாயிற்று இவருக்கு..?  இப்படி ஓடுகிறாரே..! இப்ப எதுக்கு தண்ணீர்.. ? பழங்களை வேறு கீழே போட்டு விட்டார்.."  என குறைபட்டுக்கொண்டு,,, ஆக்கூ கீழே இறைந்த பழங்களை கைகளில் எடுத்துக் கொண்டான்..

கழுகை கையில் ஏந்திய நன்னனுக்கு அதன் வலிய அலகும் கூர்மையான கால்நகங்களும் விகாரமாய் தோன்றின. மேலும் அது அரைமயக்கத்தில் அவ்வபோது விட்டு விட்டு துடித்தது அவனுக்கு அசௌகரியமாய் இருந்ததால் அதை மெதுவாக தரையில் வைத்துவிட்டான்...!

பதுமன் எதுவும் பேசாமல் நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

வேதியர், பானையோடு சென்று குட்டையில் இறங்கி மேலே மிதந்த இலைகளை நகர்த்திவிட்டு நீரை மொண்டு எடுத்துக்கொண்டு வேகமாக குடிலுக்குள் நுழைந்தார்...
உள்ளே நேராக எரியும் உலையருகே சென்று நீரை வாரி இறைத்து நெருப்பை அணைத்தார்.
'இஸ்...ஸ்...' என்ற ஓசையுடன் அதன் செந்நிற அக்னி யாவும் நொடியில் கரிகட்டைகளாக மாறின.

வெளியிலிருந்து இதை பார்த்த மூவரின் ஆறுவிழிகளும் ஏக காலத்தில் மேலேயிருந்து புகையைக் கக்கும் புகைபோக்கியை அடுத்தபடியாக நோக்கின.
முன்பைவிட கரிய அடர்புகையை சிறிதுநேரம்
கக்கிவிட்டு பிறகு முற்றிலுமாய் நின்று அடங்கி போனது..!

சற்று நேரத்தில் வெளியே ஓடிவந்த வேதியர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.. தொடர்ந்து விடாமல் இறைக்க இறைக்க அவர் மூக்காலும் வாயாலும் வேகவேகமாக சுவாசிப்பதைபார்த்து , குடிலின் உள்ளே நுழைந்தது முதல் வெளியேறும் வரை அவர் மூச்சை விடாமல் அடக்கிக்கொண்டு இருந்திருக்க கூடும்..என்பதை புரிந்துகொண்டனர், இவர்கள் மூவரும்..!

பிறகு அவரே வந்து பேசினார்...

"இந்த புகைதான் அந்த பறவைக்கு பகையாகி விட்டது!"

"இவ்வளவு புகையை வரவழைக்கும் விதமாக அப்படி என்ன செய்தீர்கள் வேதியரே..!"

"வலிநிவாரணி தயாரிக்க முயன்றேன்... கடைசியில் அது இப்படி ஊறு விளைவிக்கும் என எதிர்பார்க்கவில்லை...!" என்றார் சலிப்புடன்..

"வலி நிவாரணியா எதற்கு ? யாருக்காக தாத்தா? " என்று பதுமன் கேட்டான்.

"எனக்காக தான் பிள்ளாய்! வயதாகி விட்டபடியால் முன்பு போல அதிகம் வேலைசெய்ய முடியவில்லை..! கொஞ்சம் அதிகமாக எதிலாவது நேரம் செலவிட்டாலே கடுமையான வலி கைகால் மூட்டுகளில் வந்துவிடுகிறது.. காலையில் எழுவதே சிரமமாகிவிடுகிறது..! அதற்காகத்தான் இந்த வலிநிவாரணி தைலம் தயாரித்தேன்..! இதை போட்டால் வலி வந்த இடம் தெரியாமல் போய்விடும்..!"

"நீங்கள் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் வேதியரே...?"
என கேட்டான்.. ஆக்கூ.


"இது காலங்காலமாக நம்மவர்கள் பயன்படுத்தி வருகிற மூலிகைதான்...! இலைகளை கொண்டுதானப்பா முதலில் உருவாக்கினேன்... ஏற்கனவே பலமுறை இதை செய்திருக்கிறேன். என்றாலும் இவை நிவாரணம் தர ஒருநாள் போல அவகாசம் எடுக்கும்.. நான் கூடுதலாக இம்முறை இதனோடு சில அரிய மரப்பட்டைகளை கனிமத்துகளோடு உடன்சேர்த்து தைலமாக்கி கொதிக்க வைத்தேன்.. அப்படி செய்தால் உடனடி நிவாரணமாக  தைலம்போடும் அந்த இடமே சட்டென மரத்துபோய் உணர்ச்சியற்றதாகிவிடும்..! அதனால் வலியும் உடனடியாக பறந்தோடிவிடும்...அல்லவா?"

"நீங்கள் சொல்லும்படி செய்திருந்தால் அந்த தைலம் ஏன் நெருப்பில் பட்டதும் இப்படி புகையை கக்குகிறது...ஐயா?"

"எந்த ஒரு தைலமாயினும் அதன் மூலப்பொருள் கலவையை முறைப்படி அளவில் கலந்து செய்வது மிகவும் அவசியம்... நானும்கூட சரியான விகிதத்தில் செய்கிறேன் என்றுதான் எண்ணினேன்... நன்னா!  எனினும் ஏதோ தவறு நேர்ந்து விட்டது போல தெரிகிறது..! அதனால்தான் இந்த புகை நெடியேறி மயக்கமூட்டுகிறது...! இனி இந்த விபரீத முயற்சியில் ஈடுபடகூடாது.! எல்லாம் வீண் வேலையாகிவிட்டது.!"

"அப்படி சொல்லாதீர்கள் தாத்தா..! நீங்கள் இப்போது ஒரு 'மயக்க மருந்தை' கண்டுபிடித்திருக்கிறீர்கள்..!"
என்றான் பதுமன்.

சட்டென வியந்த வேதியர் பிறகு ஐயம் கலந்த நமட்டு சிரிப்புடன்,,, கேட்டார்,

"நீ என்ன பிள்ளை சொல்கிறாய்..? மயக்க மருந்தா..? மயக்கத்திலிருந்து ஒருவனை மீட்பது தான் மருந்து!. மயக்கத்தை தருவதே மருந்தாகிவிடுமா என்ன?"

"ஆம் தாத்தா! மயக்கமடைய செய்வதும் ஒரு மருத்துவமுறைதான்!. எங்கள் ஒசகுமலை பகுதியில் இதை கண்டுபிடிக்க எத்தனையோ ரசவாதிகள் இரவுபகலாக பிரம்ம பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நீங்களோ உங்களுக்கே தெரியாமல் தற்செயலாக  ஒரு விபத்தில், இதை தயாரித்தேவிட்டீர்கள்! நிச்சயமாக இது வீண்போகவில்லை.!"

பதுமன் சொன்னதை கேட்டு சற்று சிந்தித்த வேதியர்,,

"ஆஹா...! பிள்ளாய் பதுமா.! நீ சொல்வதிலும்தான் எத்தனை ஆழமான அர்த்தம் உள்ளது..! உண்மைதான்...
நாம் வீண் என்று நினைப்பதுகூட மற்றொரு கோணத்தில் பார்த்தால் எத்தனை அவசியமானதாக இருக்கிறது! " என்று பெருமிதம் கொண்டார்.

இவ்விதம் இவர்கள் உரையாடிய சமயம் பதுமனின் கால்பின்புறமாக அந்த கழுகு தன்சிறகால் அடித்தது.
திரும்பி பார்த்து, கீழே குனிந்து அதை கையோடு அணைத்து தூக்கிக்கொண்டான் பதுமன்..

"தாத்தா.! இதை என்ன செய்வது..?"
என வினவினான்.. 

வேதியர் பதில்கூறுமுன் குறுக்கிட்ட ஆக்கூ..வேறுஒரு கேள்வியை கேட்டான்,
"ஐயயோ! வேதியரே நெருப்பை முழுவதும் நீரை ஊற்றி அணைத்து விட்டீர்களா...என்ன? கொஞ்சம் கூட கனலே இல்லையா?" 

"இல்லை..! ஆக்கூ. துளிகூட இருக்காது..ஏன்?"

"இரவு நெருப்பின்றி எப்படி இருப்பீர்கள்..?"

" இந்த புகையில் நச்சு நெடி அதிகமாகிவிட்டபடியால் உலையை அணைக்கவேண்டியதாயிற்று... ஆக்கூ! இனி அதில் இருக்கும் நீரில்நனைந்த விறகையும் சாம்பலையும் அப்புறப்படுத்தி உலையை சுத்தம்செய்து விட்டுதான் பற்ற வைக்கணும். நெருப்புக்கு வேறு ஒன்றை புதிதாகத்தான் உருவாக்கணும்..! நெருப்பின்றி எனக்கு ஒருவேலையும் ஓடாது ஆக்கூ!  ஆனாலும் இப்போதெல்லாம் இரவில் எனக்கு நெருப்பு தேவைப்படுவதே இல்லை!"

"என்ன கூறுகிறீர் வேதியரே! இரவில் தானே நெருப்பு அவசியம் தேவைப்படும்.. நெருப்பின் வெளிச்சமின்றி எப்படி காண்பீர்கள்?"

ஆக்கூ வின் இந்த கேள்வி மற்ற இருவருக்கும் கூட நியாயமாக பட்டதால்,, நன்னனும் பதுமனும் வேதியர் பதிலை ஆர்வமுடன் எதிர்நோக்கினர்.

வேதியர் சோகம் இழையோட அநுபவ சிரிப்பொன்று சிரித்தார்..
பிறகு.., " பிள்ளைகளா கேளுங்கள்!
எனக்கு நினைவு தெரிந்தநாளாய் தொடர்ந்து இந்த குடிலில் வேதியனாக பணிபுரிகிறேன். இந்த வேதி தொழிலை என் தாத்தா எனக்கு கற்பித்தார். அவர் காலத்தில் வெறும் நான்கைந்து கற்களை சதுரமாகவோ வட்டமாகவோ வைத்து அதனுள் வேள்வி வளர்த்து அதில் மட்கலன்களை சூடுபடுத்தி மூலிகை மருந்துகளையும் ரசாயன உருக்கு திரவங்களையும் தயாரிப்பார். அவருக்கு பிறகு நான் இந்த ஊதுஉலையை உருவாக்கி பெரிய அளவில் ரசாயன உருக்குகளையும் வேதி திராவகங்களையும் தயாரித்து வருகிறேன்.. தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்படி தீயின் முன்னால் அமர்ந்துகொண்டு எரிகிற ஜூவாலையை பார்த்து பார்த்து... எனது இருவிழிகளும் பழுதாகிவிட்டது! சில காலமாகவே எனக்கு அந்திப்பொழுது கடந்துவிட்டால் பார்வை புலப்படாது. எரிகிற நெருப்புகூட எனக்கு மங்கலாகவே தெரியும். பிறகு அது தருகிற சொற்ப ஒளி ஏம்மாத்திரம்?  இந்த பகல்பொழுதிலும் கூட குடிலுக்குள் எனக்கு பார்வைதிறன் குறைவுதான். ஏதோ பழகிய பரீட்சயத்தால் பொருட்களை இனம்கண்டு கொள்கிறேன்...! "

"ஆ..! ஐயா.! இந்த விசித்திர புது வியாதி
எப்போதிலிருந்து இருக்கிறது?" என நன்னன் கவலையோடு கேட்டான்.

"ம்... இது விசித்திர வியாதிதான்.. ஆனா புதிது அல்லப்பா.. ! மனிதன் தானாக வெளிச்சத்தை படைக்க கற்ற கணமே இந்த வியாதியும் உண்டாகிவிட்டது..! இயற்கை நமக்கு ஒருநாளைக்கு இத்தனை மணிநேரந்தான் கண்ணிற்கு வேலைதரவேண்டும் என்ற நோக்கில்தான் இரவு பகல் என ஒரு நாளை பங்கிட்டு வைத்திருக்கிறது.. இயற்கை யின் இந்த ஒழுக்கவிதிக்கு உட்படும் எந்த பிராணிக்கும் பார்வைகோளாறு தோன்றுவதில்லை! விதியைமீறுகிற மனிதனுக்குத்தான் இதுமாதிரி வியாதிகள் சகஜம். எனக்கு இந்த கோளாறு வந்து இதுவரை முந்நூறு பிறைகள் கடந்துபோய்விட்டன....!"

"என்ன முந்நூறு பிறைகளா? அப்படியானால் ஏறத்தாழ 25 ஆண்டுகாலமாக இப்படி பார்வையின்றியா இரவை கழிக்கிறீர்கள்?" என்று வியப்பாக கேட்டான் ஆக்கூ..


"ஆமாம் ஆக்கூ..! பார்வை இருந்த காலத்தில் அதை அளவுக்கு அதிகமாகவே இரவிலும் பயன்படுத்தி கழித்து முடித்துவிட்டேன் அல்லவா.. ஆதலால் எஞ்சிய காலத்தை இருளில் இருந்து கரைப்பதுதான் சரி!"

"இதை குணப்படுத்த வழியே இல்லையா ஐயா?" 

" இருக்கும் நன்னா! முயன்றால் முடியாதது என ஏதும் உண்டா என்ன? நான் முயலவில்லை அவ்வளவுதான்..! எனக்கு இந்த இரவின் முழுமையான இருள் பிடித்திருக்கிறது... தேவையும்படுகிறது... என் கண்களுக்கு கடைசிகால ஓய்வு இது.! இரவின் தூய இருளை ருசிப்பதில் அலாதி சுகம் இருக்கிறது..."

"அட போதும் தாத்தா.. உங்கள் இரவு துதி..! முதலில் இந்த பறவைக்கு ஒரு வழி சொல்லுங்கள்...!" என பதுமன் இடைமறித்தான்.

"ஓ ! அதுவும் சரிதான். எங்கே அதை எடுத்து வா... குடிலுக்குள்.." என்றவாறு நேராக குடிலுக்குள் நுழைந்தார் வேதியர்.

பதுமனும் பறவையை தூக்கிக்கொண்டு பின்சென்றான். நன்னனும் ஆக்கூவும் வெளியிலேயே நின்று தாங்கள் வந்த வேலையை எண்ணி பேசிக்கொண்டனர்.

"என்ன நன்னா! நீ அந்த கல்லை பற்றி அவரிடம் கேட்கிறமாதிரி தெரியவில்லையே?"

"சற்று பொறு ஆக்கூ.. இந்த வேதியர் காட்டில் தனியாக பொழுது போகாமல் கிடப்பார் என்று நினைத்தேன்.. ஆனால் இந்த மனிதர் இவ்வளவு பணிகளை அடுத்தடுத்து ஆற்றிக்கொண்டு பொழுது போதாமல் அல்லவா இருக்கிறார்!!
சாவகாசமாக கேட்க சந்தர்ப்பமே இராது போலயே?"

"நீ சாவகாசம் பார்த்தாயே யானால் நம்மால் சாயங்காலம் கூட ஆற்றங்கரை போக இயலாது.... இன்னும் சற்றுநாழிக்குள் நாம் புறப்படணும்.. மேலும் இந்த பொடியன் வேறு ஏதோ முக்கிய ரகசிய விஷயமாய் வந்துள்ளான் போல தெரிகிறது. அவன் முந்திகொண்டால் நமது வேலை மேலும் தாமதப்படும். ஆதலால் இப்போவே போய் கேள்..!"

"இதோ..! நானும் அதையேதான் நினைத்தேன்..வா போகலாம்!".

இருவரும் குடிலுக்குள் பிரவேசித்தனர். இரண்டு படிகள் இறங்கினர்.. அப்போது வேதியரும் பதுமனும் உரையாடியதை கேட்க நேர்ந்தது.

"வயதான காலத்தில் எந்த அசட்டுத்துணிச்சலில் இப்படி வனாந்திரத்தில் தனியாக இருக்கிறீர்களோ எனக்கு தெரியவில்லை..தாத்தா.!"

"அன்பு பதுமா! இன்று உனக்கு இது வனாந்திரமாக தெரிந்தாலும் என் சிறுவயதுதொட்டு நான் வாழ்ந்த குடியிருப்பே இதுதான். அவர்கள் எல்லோரும் போய்விட்டாலும் இந்த இடம் எனக்கு ஒருநாளும் அந்நியப்பட்டு போய்விடவில்லை.!
இங்கு தெரிகிற எல்லா தாவரகொடிகளும் மரஞ்செடிகளும் காலங்காலமாய் என் தோழர்கள்.
சொல்லபோனால் இங்கிருக்கும் சில மரங்களுக்கே என்னைவிட வயது குறைவுதான்.! பறவைகளும் பிராணிகளும் பின்பற்றுகிற பருவகால கால ஒழுங்கை நானும் பின்பற்றுகிறேன். அதிகாலை ஆதவன் எனக்கு பிறகுதான் எழுவான். பட்சிகள் இரைதேட புறப்படும் சமயம் நான் குச்சிகளை சேகரித்து திரும்பியே விடுவேன். தினம் சரியாக அருகிலுள்ள ஓடையில் நீர்பிடித்து வருவேன். நான் நகர்ந்த பிறகு சில நரிகளும் சிறுத்தபுலிகளும் அதே கரையில் நீர் அருந்த புகும். இந்த குட்டையில்தான் குளிப்பேன். பகலில் பழங்கள் தின்பேன். பிற்பகல் கிழங்கு சமைத்து உண்பேன். இரவில் ஆகாரம் ஆகாது! குடிலைச்சுற்றிலும் தேவைபடுகிற மாதிரி மரங்கள் செடிகளை தேடி தேடி நட்டுவளர்த்திருக்கிறேன்.. சிறிது தொலைவில் ஒரு பரந்த வெளியில் உழுதநிலத்தில் காய்கறிகளும் எண்ணெய்வித்துகளும்  வைத்துள்ளேன்.. அவை தவிர எப்போதாவது மேற்கில் மலையடிவாரம் வரை போய் வருவேன். சிலர் எப்போதாவது தேடிவந்து கேட்கும் உதவிக்காக அவசிய தேவை பொருட்டு வடக்கில் உள்ள குடியிருப்புவாசிகளின் சந்தைவரை போகவேண்டிவரும்.  சிலநேரம் எனக்கே மனிதர்களை பார்க்க.. பேச.. வேணும் போல தோன்றும் அப்போது எதன்பொருட்டுமின்றி 
சந்தைக்கு நானாக வந்துபோவேன். குளிர் காலங்கள் மட்டும் சற்று கடக்க கடினமாய் இருக்கும். மற்றபடி இயற்கையின் மொழிபுரிந்து காலமறிந்து நடக்கும் என் ஒழுக்க நடத்தையே எனக்கு தினசரி துணிச்சலை தருகிறது.!  பிள்ளாய்..! நீயும் வாழ்வினில் ஒரு ஒழுங்கை கடைபிடித்தாயானால் உனக்கு வேறு எவர் துணையும் தேவையிராது!"


"அதுசரி...நீங்க ஏன் தாத்தா உதவிக்கு வேறு ஆள் வைத்துக்கொள்ளவில்லை? யாரையேனும் சீடனாக வைத்திருந்தால் இந்த வேதிகலை உங்களுக்கு பிறகும் பலரை சென்றடையும் அல்லவா?"

"வாஸ்தவம் தான் பிள்ளை.. ! இருந்தாலும் என் சொந்த குடும்பமே என்னை நம்பி உடன் இல்லாத போது வேறு யார் துணிந்து என்னிடம் வருவார்கள் கூறு?"

இவ்விதம் பேசிக்கொண்டே எரிந்து அணைந்துபோன விறகுகட்டை ஒன்றை சூட்டோடு எடுத்து நொறுக்கி நாணல்துணியில் சில இலைதழைகளுடன் சேர்த்து கட்டி 
அந்த கழுகின் இறகுகளில் ஒத்தடம் கொடுத்தார்.. அப்படி செய்யும் போது கழுகு படபடக்காமல் இருக்க பதுமன் அதை  கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

சிறிது சாம்பலை அள்ளி அதன் மாந்தளிர்நிற இறகுகளில் பூசினார் வேதியர். ஒரு மூங்கில் கூடையை எடுத்து கழுகை உள்ளே வைத்து கவிழ்த்து மூடிவிட்டார்.

" இது குணமாக இருதினங்கள் ஆககூடும்.. அதுவரை இரவுகளில் ஏதும் வேட்டைமிருகங்களிடம் மாட்டாமல் இருக்க இது கூடைக்குள் இருப்பதே நல்லது.!"
என்றார் வேதியர்.

"இங்கு கூட மிருகங்கள் வருகிறதா தாத்தா?"

"நெருப்பு எரிகிறபோது பிராணிகள் உள்ளே வராது. பூச்சிகள் தொல்லை மட்டும்தான். ஆனால் இன்று இரவு நெருப்பு இருக்காதல்லவா?"

"ஏன் ஏற்படுத்திக்கொண்டால் போகிறது..! வேதியருக்கு வேள்வி வளர்க்க சொல்லியா தரணும்? "

"இல்லை பதுமா.. அது முடியாது. இதோ தீ உரசி கட்டை இருக்கிறது. ஆனா அதில் உரசுவதற்குதான் சரியான குச்சி இல்லை... போன மழைகாலத்திலேயே அது தீர்ந்து போய்விட்டது.!  மறுபடி சேகரிக்காமல் இருந்துவிட்டேன்."

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த ஆக்கூ
இப்போது குறுக்கிட்டான்...

 " காட்டில் கிட்டாத மரமா கிளையா குச்சியா..? இப்போதே போய் எடுத்து வரட்டுமா வேதியரே?" 

" எனதருமை ஆக்கூ..! இந்த கிழவனுக்கு உதவுவதில், உனக்குத் தான் எத்தனை விருப்பம்? நீ மட்டும் என்னருகில் இருந்திருந்தால் நான் இன்னும் எத்தனையோ சாதித்திருப்பேன்.."

"அட அதற்கென்ன... இனி உங்களுடனே இருந்துவிட்டு போகிறேன்... இப்போது என்ன செய்யட்டும் சொல்லுங்கள்..  ஓடிச்சென்று நொடிப்பொழுதில் விறகுக்குச்சிகளை பொறுக்கிவரட்டுமா?"

"ஹா...ஹா..ஹா..  விறகு குச்சி அல்ல ஆக்கூ.. அதைதான் குடிலுக்கு பின்னால் குன்றென குவித்து வைத்துள்ளேனே..! அதைமட்டும் வைத்து என்னசெய்ய..?  நான் சொல்வது அதை பற்றவைக்கும் தீ மூட்டி கட்டைகள்..பற்றி...!"

"தீ மூட்டும் கட்டைகளா..? அது என்ன வேதியரே..?" என்றான் நன்னன்.

"இளம் பிள்ளைகளா நீங்களெல்லாம் குடியிருப்பில் பக்கத்து பக்கத்தில் வீடுகள் அமைந்து ஒன்றாக வசிப்பதால் உங்களுக்கு தீ மூட்டி கட்டைகளின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கிறது..! உங்கள் வீடுகளில் திடீரென அடுப்பு முழுவதுமாக அணைந்து போய்விட்டால் என்ன செய்வீர்கள்? ஓடிப்போய் எதிர்வீட்டிலோ பக்கத்திலோ அவர்களின் அடுப்பிலிருந்து கொள்ளிக்குச்சி வாங்கிவந்து பற்றவைத்து கொள்வீர்கள் அல்லவா? ஒருவேளை உங்கள் குடியிருப்பு முழுவதிலும் ஒருசேர என்றைக்காவது நெருப்பே சுத்தமாக இல்லாமல்போய்விட்டால் என்ன செய்வீர்கள்?"

"அதுமாதிரி இதுவரையில் நடந்ததேயில்லையே ஐயா..!"

"நடந்துவிட்டால்.... ?"

"…..............."


"நானே சொல்கிறேன்... கேளுங்கள்...பிள்ளைகளா..! ஆதியில் திடீரென காட்டுத்தீ உண்டான போதுதான் நம்முன்னோர் நெருப்பை முதன்முதலில் பார்த்தனர். அதில் வெந்து இறந்த தாவர மற்றும் பிராணிகளின் ஊன் சதையை புசித்து, அதில் சுவைமாற்றத்தை கண்டறிந்தனர். ருசிகண்டு ஏங்கி மீண்டும் நெருப்பை எதிர்பார்த்து தவம்கிடந்தனர்.. சிலநேரம் இடிமின்னலின்போதும் தீ தோன்றி.., நாள்முழுவதும் ஒருமரத்தை கொழுந்து விட்டு எரிந்து அணைந்தது. அப்போது அதன் வெந்த தனலில் வேறுசில விறகுகளை சருகளை அள்ளிப்போட்டு எரிதழலை உருவாக்கி தொடர்ந்து பல நாட்களுக்கு அந்தத்தீ அணையாமல் பாதுகாக்கும் வித்தையை அறிந்தனர். வேகமாக வீசும் காற்று தீயை மேலும் வளர்க்கும் எனும் வித்தையும் புரிந்தது. என்றாலும் குறிப்பிட்ட நாளில் மழைகாலங்களில் தீ மறுபடி மறைந்துவிட்டது. பின்னொருசமயம் கூர்மையான கற்கருவிகள் செதுக்கி செய்யும்போது இரு கற்கள் உரசியதால் தீப்பொறி உருவானது. மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்பின் தருணம் அது.. எளிதில் பற்றிஎரியும் நார்தூசுதுகள், சருகுகள், பஞ்சுகளை அருகில் வைத்து... கற்களை உரசி தீப்பொறி எழச்செய்து நெருப்புத்தழலை செயற்கையாக உண்டாக்கினர் நமது முன்னோர் அதன்பிறகு அவர்கள்  தீயை வணங்கி தெய்வமாகவே வழிபட்டனர்.. தீ எனும் சொல்லே தெய்வம் என்றானது! சங்கடம் என்னவென்றால் எல்லாகற்களிலும் அது சாத்தியப்படவில்லை..! அந்தகுறிப்பிட்ட கற்கள் எல்லாஇடங்களிலும் கிட்டுவதுமில்லை.. அந்தகற்களுக்காகவே பல இனக்குழுக்களிடையே மோதல் நடந்துள்ளது..! கடைசியில் அதற்கு வேறு மாற்று உபாயம் கிடைத்தது.
அதுதான் தீ மூட்டி கட்டைகள்..! 

காட்டின் சில மரங்களின் காய்ந்த கட்டைகள் ஒன்றில் ஒன்று தொடர்ந்து வேகமாக உரசும்போது புகைந்து புகைந்து நெருப்பு தோன்றிவிடுகிறது! அந்த கட்டைகள் தான் தீ மூட்டி கட்டைகள். இவை ஓரளவு எல்லா பிரதேசங்களிலும் இருக்கிறது. எல்லா இனக்குழு குடிவாசிகளும் தெரிந்துவைத்திருக்கிற ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் அடிக்கடி தேவைபடும். இப்போது ஆட்கள் பல்கிபெருகிவிட்டதால் ஒருவருக்கு ஒருவர் உதவி நெருப்பைவளர்த்து அதன் தோற்றுவாயே தெரியாமல் செய்துவிட்டார்கள்.!  ஆக தீ யை உண்டாக்க தீ மூட்டி வேணும்.. என்னிடம் அதன் ஆதார கட்டை இருக்கிறது. அதில் உரசுவதற்கான குச்சி கட்டைதான் இப்போது இல்லை...! பிரச்சனை எதுவென இப்போது புரிந்ததா?"
என்று தன் நீண்ட பிரசங்கத்தை முடித்தார் வேதியர்.


"அந்த கட்டை எந்த மரத்தில் கிட்டும் வேதியரே..?"

" முன்பு அவ்வகை மரங்கள் ஏராளம் இருந்தன.. வணிக போக்குவரத்து அதிகமானபிறகு அவை வெட்டிவிற்கபட்டு அரிதாகிவிட்டன. கடைசியாக மேற்கு மலை குன்றுகளின் அடிவாரத்தில் அவ்வகை மரத்தை கண்டேன்.. உறுதியாக அங்கு கிடைக்கும்."

"பெயரை சொல்லுங்கள் வேதியரே இப்போதே புறப்படுகிறேன்.."

"உனக்கு தெரிந்த மரங்கள்தான்... ஆக்கூ... வாதாங்கொட்டை காய்க்கிற வாதுமை மரம், இலவம்பஞ்சு வகையறா, கேதுரு மரம்.... இன்னும் சில இருக்கின்றன... எனினும் இப்போது நீ போக வேணாம்..!"

"என்ன வேதியரே? ஏன் ஏன் ஏன்.?"

 "அது சற்றுதூரம் அதிகம்..!மேற்குமலை குன்றுகள்வரை போகவே பொழுது சாய்ந்துவிடும்... திரும்புவதற்குள் இருட்டிவிடும்.. அது சரிபடாது. அதற்கு பதிலாக நீங்கள் இருவரும் உங்கள் வீட்டிற்கு திரும்புவதே நல்லது. அதிலும் இப்போதே புறப்படுவது உசிதம்..!"

நன்னன் ஒருகணம் யோசித்தான்,, அவனுக்கும் அவர் சொல்வதே சரி என பட்டது.. ஆனால் ஆக்கூ வேதியரிடம் வேறுவிதமாக முறையிட்டான்.

"ஏன் ஐயா.. எங்களை அவசரமாக திருப்பி அனுப்ப பார்க்கிறீர்..? நாங்கள் எதற்கு வந்தோம் என்றுகூட நீங்கள்
விசாரிக்கவில்லை. வந்தநோக்கம் நிறைவேறாமல் நாங்கள் போவது எப்படி?"

"அடா டா...! நீங்கள் பதுமனுக்கு வழிகாட்டும் பொருட்டு துணைக்கு வந்தீர்கள்..என்றல்லவா நினைத்தேன்..? இல்லாவிடில் வேறு எதற்காக..?"

" என்ன சொன்னீர்? இந்த பொடியனுக்கு நாங்கள் வழிகாட்டுவதா..? இவன் சிறுத்தை புலிக்கே தண்ணீ காட்டிய பயல்..! இவனல்லவா எங்களுக்கு துணை!"

என கூறிவிட்டு பதுமனை நோக்கினான் ஆக்கூ..

உடனே பதுமனும் அவர்களுக்காக வேதியரிடம் சிபாரிசு செய்தான்..
"ஆம் தாத்தா! ஆக்கூ அண்ணன் சொல்வது போல அவர்கள் வேறுவிஷயமாக உங்களை காண வந்திருக்கிறார்கள். நான் இக்குடிலுக்கு சமீபத்தில்தான்.. அவர்களையே சந்தித்து, உடன் சேர்ந்துகொண்டேன்."

"ஓ... அப்படியா விஷயம்! எனில் என்னிடம் உரைப்பதற்கு உங்களிடம் ஏராளமான கதை இருக்கிறது என சொல்லுங்கள்..."

"ஆம் வேதியரே! முதலில் இதை கொஞ்சம் பாருங்கள்... "

(நன்னன் தன்னிடம் இருந்த அந்த கருப்பு கல்லை வேதியரிடம் நீட்டினான் பிறகு தொடர்ந்தான்..)

"இது மற்ற கற்களில் இருந்து விநோதமாக தெரிகிறது.  இதை என்னவென்று உங்களால் விளக்கிசொல்ல முடியுமா..?"

(வேதியர் அந்த கல்லை கையில் வாங்கி உற்று பார்த்தார்; விரல்களால் தட்டினார்; பிறகு நகத்தால் கீறி சுரண்டி பார்த்தார்;
குடிலுக்குள் சரியாக பார்க்கமுடியாததால் வெளியே வெளிச்சத்துக்கு வந்து பார்த்தார். திருப்பி புரட்டி கவிழ்த்து பார்த்தார்.)

"ஆஹா... இது எப்படி கருப்புநிறத்தில் இருக்கிறது...! நீ இதை எங்கிருந்து எடுத்தாயப்பா நன்னா?"

"ஆற்றுபடுகையில் வழக்கமாக  கற்கள் சேகரிக்க செல்லும்போது கண்டெடுத்தது இது...! ஏதும் அடையாளம் தெரிகிறதா வேதியரே?"

"எனக்கும் புதிதாகவே தெரிகிறது நன்னா.. இன்னது என ஊகிக்க இயலவில்லை... ஓரளவு இது 
மரகத கற்களோடு ஒத்துபோகிறது.!"

நன்னனும் ஆக்கூவும் சற்றே திகைத்தனர். பிறகு ஆக்கூ கேட்டான்.. " ஐயா! மரகதம் பச்சை நிறமல்லவா..? இது கருமையாக இருக்கே?"

"ஆமாம்.. அதுதான் எனக்கும் புரியவில்லை ஆக்கூ...! எனக்கு வேறு ஏதோதோ கூட தோன்றுகிறது. அது உங்களுக்கு சொன்னால் புரியாது. முடிவாக இன்னது என கூறுவதற்கு  இதை இன்னும் நன்கு சோதித்து பார்த்துதான் சொல்லமுடியும்."

"எனில் இதை நீங்களே வைத்திருங்கள் வேதியரே நாளைக்கு வந்து கேட்டுத்தெரிந்துகொள்கிறோம்!"

"நாளையா..? ம்ஹூம். வேணாம் நன்னா! நாளைதான் நெருப்பு க்கு ஏதாவது வழிசெய்யணும். நெருப்பில்தான் சில சோதனைகளையும் செய்துபார்க்க முடியும். ஆக நீங்கள் நாளை மறுதினம் வாருங்கள்.. அதற்குள் கண்டுபிடித்து சொல்கிறேன்."

"ஆகட்டும் வேதியரே! நல்லது . அப்போ நாங்கள் புறப்படுகிறோம்..!
உங்களுக்கு எதாவது காரியம் எங்களால் ஆக வேண்டி உள்ளதா?"

"இருக்கட்டும் பிள்ளைகளா ! அதான் பதுமன் இருக்கிறானே.. நான் சமாளித்துகொள்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்!"

(அப்போது ஆக்கூ குடிலின் உள்ளே நோக்கினான். எல்லாம் அலங்கோலமாக கிடந்தது. ஊதுஉலை சாம்பல் கரிகட்டையாக நீரில் நனைந்து அசிங்கமாக இருந்தது. அப்படியே விட்டுவர அவனுக்கு மனம் ஒன்றவில்லை!)

"நன்னா ! சற்றுபொறு. இந்த இடத்தை கொஞ்சம் சுத்தப்படுத்திவிட்டு போவோம். மூவரும் செய்வது சுலபம். சீக்கிரத்திலும் முடித்திடலாம்! என்ன சொல்கிறாய்?"

"நானே கேட்போம் என்றிருந்தேன் ஆக்கூ..! நீ முந்தி கொண்டாய். நான் போய் இன்னும் நீரை கொண்டுவருகிறேன். நீ இந்த உலையை சுத்தபடுத்தி வை.!"

"இதோ என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் நன்னன்அண்ணா! நான் மற்ற பொருட்களை எடுத்து அடுக்கி வைக்கிறேன்."

"ஆஹா..அடடா.. ! சபாஷ் பிள்ளைகளா! உங்களுக்கு இந்த கிழவன் என்ன கைம்மாறு செய்வேன்?"

"இருக்கிறது ஐயா! நீங்கள் உங்கள் ஆராய்ச்சி யை தொடருங்கள்... மேலும் எங்களுக்கு கொஞ்சம் உங்களது வலிநிவாரணி மருந்தை தாருங்கள். எங்கள் வீட்டுப்பெரியவர்களுக்கு தேவைபடும்." 

"இவ்வளவுதானா..? இதோ இந்த மரபீப்பாய் முழுவதும் இருக்கிறது. எத்தனை பானைகளில் வேணுமானாலும் மொண்டுசெல்லுங்கள்." 

மூவரும் சேர்ந்து குடிலை அழகுற செம்மை செய்தனர். ஊதுஉலை நன்றாக கழுவி மறுபடி மணலால்நிரப்பி உலர்த்தப்பட்டது. குடிலெங்கும் இறைந்துகிடந்த சாமான்கள் வரிசைபடுத்தப்பட்டன. சுவர்களில் கரியால் கிறுக்கிஇருந்த எழுத்துகளை அழிக்கவா என ஆக்கூ கேட்டான் வேதியர் கூடவே கூடாது என்று மறுத்துவிட்டார். சில நாழிகையில் எல்லாம் முடிந்தபோதிலும் ஒருவித துர்நாற்றம் மட்டும் குடிலைவிட்டு போகாமல் உறுத்திக்கொண்டே இருந்தது.

"என்ன பதுமா! குடிலை சீர்படுத்தி ஆயிற்று. இன்று இரவை நீ கவலை இன்றி ஓட்டிவிடலாமல்லவா?" என்றான் நன்னன்.

"எங்கே! நெருப்பு இல்லாமல் இரவு சற்று பயத்தோடு தான் நகர்த்தவேண்டி இருக்கும்.. இல்லையா பதுமா?"என்றான் ஆக்கூ..

"வெளிச்சம் பற்றிகூட கவலை இல்லை ஆக்கூ அண்ணா! சற்று வெப்பம் இருந்தால் நல்லா இருக்கும். பரவாயில்லை. ஆனால் இந்த புகை வாடைதான் ஒருமாதிரி இருக்கிறது..."


" என்ன செய்வது..இவ்வளவு அலசியும் இந்த புகை நாற்றம் போகவில்லையே?"

"ஆண்டாண்டுகாலமாய் அடுப்பு புகைந்த இடம். ஒரு நாளில் சரியாகிடுமா என்ன?"

"அதற்கு நான் ஒரு வழிசொல்கிறேன்...பிள்ளைகளா!" என்றார் வேதியர்.

மூன்று ஜோடி விழிகளும் சட்டென அவரை நோக்கின.

"தேவையற்ற ஒன்றை அகற்ற வேண்டுமாயின் அதைவிட சிறந்ததை புகுத்த வேண்டும்.!"

"சற்று விளங்க கூறுங்கள் தாத்தா!"

"வெளியே வேலி ஓரம் ஒரு மரமல்லிகை மரம் இருக்கிறது. அதன் சுகந்த நறுமணமலர்களை எடுத்துவந்து இங்கு ஆங்காங்கு தூவி விடுங்கள். பிறகு பாருங்கள் என் குடிலின் நறுமணத்தை...!"

"ஆஹா பிரமாதமான யோசனை.! வேதியர் வேதியர் தான்..! வா நன்னா ..போய் எடுத்துவரலாம்.."


ஆக்கூ நன்னனோடு வெளியேசென்று மரமல்லிகை மரத்தில் ஏறி கிளைகளை வளைத்து மலர்களை கொய்தான்.
கீழே விரவி கிடந்த பூக்களையும்கூட எடுத்துகொண்டான்.. அப்போது சற்றுகவனிக்காமல் அங்கிருந்த எறும்பு புற்றில் கால்வைத்து மிதித்திட அவை திபுதிபுவென பெருகி காலை கடிக்கத்தொடங்கின. ஆக்கூ உடனே அவசர அவசரமாக பூக்களை அள்ளிஎடுத்துகொண்டு நகர்ந்துசென்று குதித்து காலை உதறினான். அப்போதுசில பூக்கள் சிந்திவிழ மறுபடியும் அவற்றை மண்ணோடு வாரி அள்ளினான். எடுத்துக்கொண்டுவந்த மலர்களை குடிலின் மூலைமுடுக்குகளில் தூவினான். பிறகு உள்ளே இருந்த உயர்ந்த மேடையிலும் ஊதுஉலை அருகிலும் வேதியர் அமர்ந்த இடத்திலும் கூட தூவினான். அப்போது எதிர்பாராத விதமாக அதனோடு சேர்த்து தான் அள்ளிப்போட்டு கொணர்ந்த ஒரு குச்சியும் வந்து விழுந்தது.

"ஆக்கூ..! மலரோடு கீழேகிடந்த  குச்சி சருகு குப்பைகூளங்களையும் சேர்த்து பொறுக்கிவிட்டாயோ..?"
என நன்னன் கேலிசெய்தான்.

"ச்சே ..! இதுலாம் எப்படி வந்துது..! இப்போதுதான் கூட்டி அள்ளினோம். மறுபடி குப்பையா? கையோடு தூக்கி எறிந்திடு நன்னா..!"

நன்னன் அந்த குச்சியை எடுத்தான். வெளியே வீச முயன்றவனை தடுத்தார் வேதியர்.

"நில்..நன்னா! எங்கே அதைகாட்டு!"

நன்னனின் நெற்றி புருவம் சுருங்க கையில் எடுத்த குச்சியை வேதியரிடம் தந்தான்.

அதை வாங்கி ய வேதியர் உற்று பார்த்து மோந்துவிட்டு மகிழ்ச்சி யில் துள்ளினார்.. 
"ஆஹா..! அற்புதம்..மகாஅற்புதம்! ஆனந்தம்..பேரானந்தம்..! ஆக்கூ நீ நிஜமாகவே பரோபகாரம் செய்துவிட்டாய்!"

வேதியரின் திடீர் மகிழ்ச்சி மூவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"என்னவாயிற்று தாத்தா..? இந்த சிறுகுச்சியில் என்ன அற்புதம் இருக்கிறது?" என்று பதுமன் வினவ..

"சிறு குச்சிதான் பதுமா! ஆனால் இந்த சிறுகுச்சியில் இந்த குடிலுக்கே ஒளியூட்டும் சக்தி இருக்கிறது. ஏன் இந்த காட்டையே தின்று அழிக்கும் ஆற்றல் இருக்கிறது...! "

வேதியர் உரைத்ததை கேட்டதும் மூவருக்கும் ஒருவாறு அவர் சொல்லவருவது விளங்கிற்று.

"ஓ...! இதுதான் தீ மூட்டி கட்டையா? "

"ஆம் பதுமா.. இதுதான்."


"ஆனால் நீங்கள் என்னிடம் மரமல்லிகை பற்றி முதலில் சொல்லவில்லையே வேதியரே?"

 "இல்லை ஆக்கூ! இது மரமல்லிகை 
குச்சியே இல்லை. மரமல்லிகை தீ மூட்டவும் உதவாது. இது கேதுரு மரத்தின் குச்சி. எனது ஆதாரகட்டையும் கூட இதே மரத்தால் ஆனதே. ஒரே மரத்தின் கட்டைகளை உரசும்போது விரைவாக தீ மூளும்!"

"ஆனா இதனை மரமல்லிகை மரத்தடியில் தானே எடுத்தேன்.!"

"ஒரு பொருளை ஓரிடத்தில் கண்டெடுப்பதால் அது அந்த இடத்திலே தோன்றியது என்றுஆகாது! ஆக்கூ! இது வேறு எப்படியோ இங்கு வந்திருக்கிறது."


"எப்படியோ வந்தது நமக்கு நல்வாய்ப்பு..! இல்லையா வேதியரே."

"ஆம் நிச்சயமாக இது நமது அதிர்ஷ்டம் தான். இல்லாவிடில் யார் அந்த மலையடிவாரம்வரை நடப்பது?"

"சரி போகட்டும்.. எங்கே இதை கொண்டு எங்களுக்கு முன்பாக தீ மூட்டி காட்டுங்கள் வேதியரே!" நன்னன் ஆவலோடு கேட்டான்..

"ஆகட்டும் வாருங்கள்..."

வேதியர் சில விறகுகளையும் சருகுகளையும் உலையில் போட்டார்.  தீ மூட்டும் ஆதாரகட்டையை எடுத்துக்கொண்டார். சில நாரிழைகள், மரத்தூள்களை அதில்மணலோடு கலந்து போட்டார்
பிறகு இந்த குச்சியை பட்டை நீக்கி தரையில் முதலில் தேய்த்து சொரசொரப்பாக்கியபிறகு ஆதாரகட்டையில் வைத்து மெல்ல தேய்க்க தொடங்கினார். வேகத்தை கூட்டினார். உருட்டினார்.. தேய்த்தார் சுரண்டினார்...உரசினார். 

மெல்ல மெல்ல புகைய தொடங்கியது. மேலும் வேகம்கூட்டினார். சட்டென தீ பொறி பறந்தது. சருகுதூள்..பஞ்சுஇழைகளை அருகில் இட்டு ஊதிஊதி மறுபடி உரசினார். புகை பெரிதாகி உஷ்ணம் தெரிந்தது. நெருப்பு பொறி தெறித்தது.


தீப்பிடித்துக்கொண்டது....!

-சூரியராஜ்

2 கருத்துகள்

  1. வெட்டவெளியில் நின்று இப்பதிவை படிப்போர்கள் கூட தன்னைச் சுற்றி காடும் வேதியர் குடிலும் இருப்பதாகவே எண்ணுவார்கள்.

    வீட்டு வாயிலில் நின்று படிக்கும் எனக்கப்படியே இருந்தது....

    நுட்பமான சூழல்களை எளிமையான வார்த்தைகளால் அனுபவிக்கும் படியாக புரிய வைக்கும் விதம் அருமை...

    இப்படிக்கு
    அடுத்த தொடருக்காக ஏங்கும் அடியேன்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை