அண்மை

தந்திர உலகம் - 7. மின் மீன்

தந்திர உலகம் 

முதல் பாகம் (புகைக்கூண்டு)

7. மின் மீன்

electric-fish


      மண்திணிந்த கரைகள் இருபுறமும் விரவிக்கிடக்க அவற்றின் கரம்தொட்டு ஓடிக்கொண்டிருந்தது அழகிய அந்த ஆற்றுநீர். ஆங்காங்கே கிடந்த பாறைகளில் மோதி தெறித்து நுரைபொங்க ஓசையெழுப்பி வளைந்தும் நெளிந்தும் பள்ளம்பார்த்து  பாய்ந்துகொண்டிருந்தது... அந்நதி. எனினும் அபரிமிதமான வெள்ளம் இன்றி ஓரளவு தோதான நீரே ஓடுவதால் சேறு கலங்காத அந்த நீரோட்டம் தன் உட்புற ஜல உலகை கண்ணாடிபோல காண்பித்தது..!

 ஓடும் நீரின் உள்ளே இருக்கும் நிலத்தில் கொத்து கொத்தாக கோரைப் புற்கள் மண்டி வெளியே தலைதூக்கி எட்டிப்பார்த்தன. சிலபெரும் பாறைகள் பாதிமூழ்கி மீதி குன்றென குப்புற கிடந்தன.  பசுமையில் வெளிர்மஞ்சள்கலந்த வண்ணத்தில் வழுக்கும்படியான பாசியும் அவற்றில் அநேகம் தென்பட்டது. ஆற்றின் அடிபரப்பில் எண்ணிலடங்காத கூழாங்கற்கள் கிடந்தாலும் அவை ஆற்றின் அடிமண் கசடாலும் பாசிகளாலும் ஆக்கிரமிக்கபட்டு கறுத்துப்போயிருந்தன. கிளிஞ்சல்களும் சங்குகளும் தம்தூய வெண்ணிறத்தால் சட்டென கண்ணை கவர்ந்தன. 

சில ஆழமான இடங்களில் நதியின் தரை கண்ணுக்கு புலப்படவில்லை. வெளிச்சம் பரவிய மட்டும் அவற்றில் ஆங்காங்கே மீன்களின் மேனி பிரதிபலித்து மறைந்தது. ஆமைகளும் நண்டுகளும்கூட அரிதாக அந்த நீரோட்டத்தில்  அமைதியாக நீந்திசென்றன.. ஆற்றோரம் எங்காவது இருக்கும் மரங்களின் கிளைகளில்,, நாரைகளும் மீன்கொத்திகளும் கொக்குவகையறாக்களும் ஆவலோடு அமர்ந்து 'இரை' யை எண்ணி.. தவம்செய்துகொண்டிருந்தன..!

ஓடும் நதிக்கு ஈடுகொடுத்து ஓடிநீந்தும் சிறுமீன் கூட்டம் குறுக்கே கிடக்கும் கற்பாறைகளில் மோதாமல் லாவகமாக துள்ளிபறந்து நீரில் விழும். அப்படி துள்ளிவிழுகிற மீன்களில் ஒன்றை கணப்பொழுதில் கவ்விக்கொண்டு பறந்தது மீன்கொத்தி.! அதைகண்ட நாரை தானும் ஒரு பாறையின் அருகே அமர்ந்து துள்ளுகிறமீனை அள்ளிச்செல்லும் நோக்குடன் - தன் அலகென நீண்ட மூக்குடன் ஆடாமல் அசையாமல் ஆங்கு, காத்திருந்தது.

எண்ணியபடியே மீன்வந்து துள்ள, நாரை ஆசையோடு அதை கவ்வ முனைய ... எங்கிருந்தோ வந்து தாவிய பாம்புபோல நீண்ட மற்றொரு பெரிய மீன்... துள்ளிய அந்தசிறுமீனை ஒரே விழுங்கில் விழுங்கி ஏப்பம் விட்டு தாவிகுதித்து சென்றது. ஏமாற்றமும் கோபமும் கொண்ட நாரை,, திடீரென வந்த அந்த அழையா விருந்தாளியை வைத்தகண் வாங்காமல் பார்த்தது. அது ஒரு விலாங்கு மீன்வகைதான். உடம்பு பாம்புபோல நீண்டிருந்தது. துடுப்புகள் ஏதும் பெரிதாக இல்லை மற்றமீன்களோடு ஒப்பிடுகையில் அதன் நீந்தும்வேகம் குறைவுதான். ஆதலால் இன்னொரு சிறுமீனுக்கு காத்திருப்பதைவிட அந்த பெருமீனை விழுங்கி இன்றைய விரதத்தை முடித்துகொள்ளலாம் என எண்ணிய நாரை சிறகைவிரித்தது...! நீர்ப்பரப்பிலிருந்து நெருக்கம்குறையாமல் தாழ்வாக பறந்தது. அதன் எண்ணம் வீண்போகவில்லை. தெளிந்த ஆற்றின் ஊடாக ஒய்யாரமாய் வளைந்து நெளிந்து நீந்தும் அந்த விலாங்கு மீன் கண்ணில்படவே ஒரே லாவலில் 'லபக்' என கவ்வியது நாரை. இரண்டரை அடி நீளமுள்ள பெருமீனை கவ்வமுடியாமல் கவ்வி உயரேபறக்க முயன்றது.. ஆனால் அந்த மீன் என்னநினைத்ததோ தெரியவில்லை.. திடீரென விசித்திரமாக அசைந்து ஒருவித அதிர்வலையை உண்டாக்கிட,,  அந்த அதிர்வுகள் நாரையின் முகம் கழுத்து வயிறு என உடலெங்கும் விரவிட..! அதைசற்றும் எதிர்பாராத அந்த நாரை ஒருகணம் ஸ்தம்பித்து அதிர்ச்சியில் உறைந்து நாடிநரம்புகள் நடுங்க அதை அப்படியே போட்டுவிட்டு பறந்து ஓடிவிட்டது!  "ங்ஙேய்ங் ..ங்ஙேய்ங்.." என கழுதைகனைப்பது போல வழக்கத்துக்குமாறான நாரையின் ஓலக்குரல் கேட்டு ஏனைய பட்சிகளும் பழந்திண்ணி வௌவால்களும் சற்றே படபடத்து அடங்கின.

மீண்டும் ஆத்துதண்ணீரில் விழுந்த அந்த விலாங்கு மீன் களைப்புடனும் சோர்வுடனும் நீந்தி வெகுதூரம் சென்றது.. ஒரு பெரிய பாறையின் அடியில் நிழல்படர்ந்த பகுதியில் ஓரமாக நின்றுமறைவாக ஓய்வு எடுத்தது.
நீண்டநேரம் கழித்து நீரின் மேற்பரப்பில் ஏதோபூச்சியின் உடல்வந்து விழ.. அதனால் உண்டான சலனமும் நீரில் விரவிய அதன் நாற்றமும் இம்மீனை கவர்ந்தது. மெதுவாக நிழல்பரப்பை கடந்து நீரின் மேற்புறம் நீந்திவந்தது அந்த விலாங்குமீன். 

"ஆஹா... மாட்டிக்கொண்டாய் வா!"

நீர்மட்டத்தை மீன் அடையுமுன்பே மின்னலென சீறி நீரில்பாய்ந்த கவைகொம்பு ஒன்று அவ்விலாங்குமீனை தரையோடு சேர்த்து இறுகபற்றிகொண்டது. எவ்வளவு முயன்றபோதிலும் அந்த கெடுக்குபிடியிலிருந்து விலாங்குமீனால் நழுவிச்செல்ல இயலவில்லை!


'Y' -வடிவில் கிளைத்த ஒரு வலுவான நீண்ட கவை கொம்பு கொண்டு மீன்வேட்டையில் வல்லவனான சென்னி அதை சாதித்திருந்தான்..!

"அடேய் நந்துபயலே ! இங்கே வந்துபார்.. வாளைமீனை பிடிக்கவே வலைவேணும் என்றாயே.. நான் ஒரு வானவில்லையே வளைத்துபோட்டிருக்கிறேன்.. வந்துபார்த்து வாயைபிளக்கபோகிறாய்.. !"
சென்னி எவ்வளவு கத்தியும் கண்டும் காணாததுமாக தொலைவில் ஆற்றுப்படுகையில் கையில் குச்சியை ஏந்தி மணலை கீறிக்கொண்டிருந்தான் நந்து. அவன் தோளில் அமர்ந்திருந்த பஞ்சவர்ணகிளி மட்டும் திரும்பி சென்னியை நோக்கியது.


"வராவிட்டால் போ..! எனக்கென்ன..? வரவர இந்த ஊமையனுக்கு காதும்சரிவர கேட்பதில்லை போலும்.. அவன்கிடக்கிறான்.. கிளிப்பயல்! இன்று இரவு சென்னியின் குடிலில் மீன்குழம்பு மணக்கபோகிறது.. அதுமட்டும் உறுதி...!"

என்று முனுமுனுத்தவாறே இடதுகரத்தால் கொம்பை இறுக பிடித்தபடி வலதுகையினால் அந்த விலாங்கு மீனின் வாலைபிடித்தான். அது துடித்தது... இப்போது கொம்பைவிட்டுவிட்டு அந்த மீனின் தலைப்பகுதியைபிடித்தான் அதன் வாய் பாகம் தட்டையாக சற்று நீண்டிருந்தது. உடலோடு சேர்த்து அணைத்தபடி அதை தூக்கினான் சென்னி. அதன் தாடைபகுதி அவனது மார்பை ஒட்டிஇருந்தது. அப்போது அந்தமீன் மறுபடி அந்த அதிசயத்தை நிகழ்த்தியது. ஆம்! அதன் மேனி சிலிர்க்க ஒருவித அதிர்வலையை உண்டாக்கியது.. அந்த அதிர்வின் தாங்கமுடியாத உறையவைக்கும் மின்அதிர்ச்சி அவன் மேனிமுழுவதும் கணநேரத்தில் தாக்கியது. இனம்புரியாத திடீர் சிலிர்ப்பை சென்னியின் மூளை புரிந்துகொள்ளும் முன்னரே அவனது முதுகெலும்பும் தண்டுவடமும் அனிச்சையாக அந்த மீனை பிடிநழுவ செய்ய.. நரம்புமண்டலம் முழுவதும் ஊடுருவிய அதிர்வலையால் இன்னதென சுதாரிக்கும் முன்னரே பிரக்ஞை தொலைந்துபோய் சிலையென உறைந்துபோய் கீழே சாய்ந்தான் சென்னி..!

தூரத்திலிருந்து இதை கண்ட பஞ்சவர்ணகிளி நந்துவின் தோளிலிருந்து கீச் மூச் என கத்திக்கொண்டு பறந்தது.. கிளி பறந்துபோகும் திசையை நோக்கி தலையை திருப்பினான் நந்து. அவன் கண்களும் புருவங்களும் சுருங்கின.. பார்வையை தொலைவில் குவியச்செய்யும்பொருட்டு விழித்திரை விரிந்தது.. காட்சி கூர்மையானது.. கிளி நேராக சென்று கீழே மணல்தரையில் மல்லாக்காக மயங்கிகிடந்த சென்னி யின் மார்பில் போய் அமர்ந்தது. அப்போதுதான் நந்து அங்கே விபரீதம் விளைந்திருப்பதை உணர்ந்துகொண்டான்..! காற்றாய் புயலாய் சடுதியில் விரைந்தான்.


**************    **************


     வேதியர் குடிலின் உலைஅடுப்பு முன்புபோல ஜெக ஜோதியாக எரிந்துகொண்டிருந்தது..!

இருண்டிருந்த குடிலில் அந்த தீயின் ஒளியில் எதிரில் அமர்ந்தபடி கண்ணைமூடி மெய்மறந்து.. கொட்டாங்கச்சியில் சில நாரிழைகளை இழுத்து கட்டி செய்யப்பட்ட எளிய யாழ் போன்ற தன் இசைகருவியை மீட்டிக்கொண்டிருந்தார் வேதியர்.

ஆக்கூ நன்னன் பதுமன் மூவருமே அதை ஆனந்தமாய் லயித்து கேட்டனர். 
சற்றுநாழி கடந்த பிறகு நன்னன்..,
 " சரிங்க ஐயா !நாங்க கிளம்புறோம் ஏற்கனவே ரொம்ப தாமதமாயிடுச்சு !" என்றான்.

"ஆமாம் பிள்ளைகளா கிளம்புங்க! பத்திரமா வீடுபோய் சேரணும்! வந்தவழியாவே போங்க.. அதுதான் நல்லது..! பதுமா நீ இருப்பாய் தானே..!"

"ஆம் நான் இங்குதான் தாத்தா இருக்க போகிறேன்!"

"நல்லது.., புறப்படுங்கள்!
ஆ...ங்... எங்கே ஒரு நிமிடம் இருங்கள் இதோ வருகிறேன்.."
(என்றவாறு உள்ளே போன வேதியர் இரு பானைகளை எடுத்துவந்தார். ஒன்றை பதுமனிடமும் ஒன்றை தானும் வைத்துக்கொண்டார்)

"என்னது தாத்தா இது?" பதுமன் கேட்டான்.

"வழக்கமாக இந்த நேரம்தான் ஓடையில் தண்ணீ பிடித்து வருவேன். வாங்களேன் ஓடைக்கரை வரையில் சேர்ந்தே போகலாம் வழித்துணையாகவும் இருக்கும்... இன்னும் சிறிது பேசினமாதிரியும் இருக்கும்"
என்றார் வேதியர்.

நால்வரும் மெதுவாக நடைபோடதொடங்கினர்.. பதுமனின் கலத்தினுள் ஏதோ இருந்தது..

"தாத்தா! இதில் ஏதோ சாமான் இருக்கிறது போல தெரிகிறதே.. கொண்டு வைத்துவிட்டு வரட்டுமா!"

"அது ஒன்றுமில்லை கடலைபருப்புதான் பதுமா..! சும்மா சாப்பிட்டு அசைபோட்டபடி போகலாம்.. வா!  ம்... எல்லாருக்கும் கொடு..!"

பதுமன் நீட்டியதை நன்னன் சிறிது எடுத்துகொண்டான் வேதியரும் எடுத்தார். ஆக்கூ அந்த பானையை அப்படியே வாங்கிகொண்டான். அதன்பிறகு அது கைமாறாவே இல்லை!

நால்வரும் நடைபோட ஆரம்பித்தனர்.

குடிலை சுற்றி வேதியர் வைத்திருந்த வேலி அதை தொடர்ந்து ஆங்காங்கே இருந்த சிறுசெடி மரங்கள் அந்த காட்டோடு அறவே தொடர்பின்றி இருந்தன..!

கடலையை புசித்தபடியே ஆக்கூ பேச்சைதொடங்கினான்..

"வேதியரே ! இங்கு காணப்படுகிற மரங்கள் செடிகள் எல்லாம் வித்யாசமாக... புதியனவாக இருக்கின்றன.. சிலவற்றின் பெயர்கூட எனக்கு தெரியவில்லை..
இவற்றை நீங்கள் காட்டின் எப்பகுதியிலிருந்து கொண்டுவந்தீர்கள் என கூறமுடியுமா?" 

"ஹா..ஹா..! இந்த காட்டில் மட்டுமல்ல ஆக்கூ.. இந்த கண்டம் முழுமையும் தேடினாலும் எங்கும் இவற்றை ஒத்த இன்னொன்று உன்  பார்வைக்குகூட  கிட்டாது!"

"பின்னே.. நீங்கள் இதை வானிலிருந்து விழ செய்தீரா அல்லது கடலை கடைந்து எடுத்தீரா..? வேதியரே!" என்று குறுநகை இழையோட ஆக்கூ வினவினான்.

" கடலை 'கடைந்து' அல்ல ஆக்கூ, பெரும் பெரும் கடலை கடந்து எடுத்து வந்தேன்..! இவை யாவும் உலகின் இன்னொரு மூலையில் இருந்து பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டவை!" விழிகள் விரிய பெருமித பதில் அளித்தார் வேதியர்.

"கடல் கடந்து வந்ததா..? அப்படியானால் நாவாய் மூலமாகவா...? வேதியரே!" என நன்னன் குறுக்கிட்டான்.

"ஆமாம்! பிறகு வேறுவழி ஏது?"

"எனில்.. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர கிழக்கிலிருந்து நாவாய் வந்துபோகும் என்று குடிவாசிகள் சொல்லுகிறார்களே அது உண்மைதானா.. ஐயா..?.." நன்னன் பேராவல் பொங்க கேட்டான்.

"12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நாவாய் என்பது... இறைமாட்சி சம்மந்தப்பட்ட விஷயம்.. அதைவிடு!
ஆனால் ஆண்டுதோறும் வணிகநோக்கில் பல பாய்மர கலங்கள் வந்து போய்கொண்டுதான் இருக்கின்றன.. நன்னா!"


"என்ன ஆண்டு தோறுமா...? நிஜமாகதான் சொல்கிறீர்களா வேதியரே? நாங்கள் ஒருமுறைகூட அவற்றை பார்த்தது இல்லையே? வந்துபோனதாக  எங்கள் குடிவாசிகள் யாரும் பேசியது கூட இல்லை..!" 

"நாவாய் என்பவை கடலில் மிதக்கும் ரதங்கள் நன்னா! கடலோடும் நாவாய் நிலத்தில் ஓடாது! அவை கடற்கரையோடு நின்றுவிடும். நீங்கள் அதை காணவேணுமானால் நெய்தல் நிலமாகிய பெருமணல் தீவிற்கு செல்லவேண்டும். அங்கு அருகில் இருக்கும் 'தம்பிரான்' குடிவாசிகளின் இடத்திற்கு போனால் பாய்மரங்களையும் ஓடங்களையும் காணலாம். சதாசர்வகாலமும் அதைப்பற்றி தான் அவர்கள் கதைப்பார்கள். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அங்குதான்அவை வரும்."


  அப்படி என்றால் இந்த ஆண்டு கூட மரக்கலங்கள் வருமா ஐயா?"

"பின்னே அது வராதுபோனால் வரப்போகிற 'முழுநிலவு வைபோகத்திற்கு'  சந்தையில் எதை விற்பார்கள்..? ஆடி பாடி கூத்துநடத்த கலைஞர்கள் ஏது? இசைக்கருவிகள்தான் ஏது?

இவ்விதம் வேதியர்சொன்னதும் ஆக்கூவும் பதுமனும் அதற்குள்ளாக தங்களால் போதுமான மரகத கற்களை சேகரிக்க முடியுமா என கவலைகொண்டனர். அதுபற்றி யோசித்தனர். 

ஆனால் பதுமன் மனதில் வேறு ஆர்வம் ஓடியது...

"ஏன் தாத்தா..! தொடக்கத்தில் நீங்கள்  நாவாய் .. இறைமாட்சி.. என்று ஏதோ சொன்னீர்களே அது என்ன..?"

"ஆகா பதுமா! நீ கூரிய புத்தி உள்ளவன்தான். நான் ஜாக்கிரதையாக இருந்திருக்கவேணும்.."

"ஏன் அப்படி கூறுகிறீர்கள் தாத்தா? நான் என்ன கேட்டுவிட்டேன்.. நீங்கள் சொன்னதைதானே கேட்டேன்.."

"நான் கூறியிருக்க கூடாது பதுமா..!
இளம்பிள்ளைகள் இதுபற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.. கேளுங்கள் பிள்ளைகளா.. இதுபற்றி மேற்கொண்டு வினவவேண்டாம்..
வினவினால் நான் பிறகு உங்களிடம் பொய்யுரைக்கவேண்டி வரும்.. புரிகிறதா..?"

வேதியரின் இந்த மழுப்பலான கண்டிப்பான பதிலால்
பதுமன் முகம் வாடினான். நன்னன் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்தான்.
ஆக்கூ எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.. அவன் கைகள் பானையிலிருந்த கடலைபருப்பை அள்ளி அள்ளி வாயில்போட.. வாய் அசைபோட்டபடி இருந்தது.

சற்றுநேரம் அமைதி நிலவியது.. பேசாமல் நால்வரும் நடந்ததால் அவர்கள் பாதங்கள் சருகுகளை மிதித்து கடக்கிற ஓசைமட்டும் மாறிமாறி கேட்டது.. 

திடீரென ஆக்கூ வேதியரை நோக்கி வினவினான்..
"ஐயா வேதியரே நீங்கள் கடல்கடந்து மெனக்கெட்டு பூச்செடிகளை வாங்கியதற்கு பதிலாக உணவுப்பயிர்களை வாங்கிஇருந்தால் அந்த பிரதேச ஜனங்களின் உணவை இங்கும் உண்டாக்கிஇருக்கலாம். அதன் சுவையாவது எப்படி என தெரிந்திருக்கும்..இல்லையா?"

"எனதருமை ஆக்கூ! உணவுபயிர்கள் எல்லாம் அந்தந்த பிரதேசங்களில் அதனதன் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப இயல்பாக வளர்பவை.. அவ்வவ்விடங்களில் வசிக்கும் உயிரினங்கள் யாவும் அதன்வசிப்பிடத்துக்கு அருகில் எது விளைகிறதோ அதைதான் உண்டுவாழனும். தூரதேசங்களின் உணவுகளுக்கு அவை ஆசைபடநேர்ந்தால் அங்கு தோன்றுகிற நோய்பிணிகளுக்கும் சேர்த்து ஆளாக நேரிடும்."

"ஏன் வேதியரே! உணவு கூட நோய் உண்டாக்குமா என்ன? அப்படியே வந்தாலும் அதான் மருந்து, மூலிகை ,வைத்தியம் என எவ்வளவோ தீர்வு இருக்கிறதே பிறகென்ன கவலை!"

"உலகில் மனிதகுலம் சந்திக்கும் முக்கால்வாசி நோய் உணவால்தான் உண்டாகிறது. அளவை மிஞ்சுவதாலோ போதிய அளவைவிட குறைவதாலோ நோய் தோன்றும் ஆக்கூ..! நீ சொல்வது போல மருந்து வைத்தியம் இருக்கிறதுதான்.. ஆனால் அவை வானத்திலிருந்து வந்து விழவில்லை. அவையும் உணவு வகையிலிருந்தே பெறப்படுகின்றன. ஆதலால் உணவே மருந்தாகவும் பங்களிக்கிறது..!"

"அப்படி என்றால் நாம் நமது பகுதி உணவை உண்பதாலும் கூட நமக்கு நோய் வரும் என்கிறீர்களா?"

"நிச்சயமாக வரும் பிள்ளாய்! ஆனால் அதை தீர்க்க தேவைக்கு அதிகமாகவே நம்மிடம் மருந்தும் இருக்கும். ஆனால் அந்நிய உணவுப்பதார்த்தங்களால் விளைகிற நோய்களுக்கு நமது மருந்து பலனளிப்பது சந்தேகம் தான்."

"அந்நிய உணவுகளால் விளைகிற நோய்களுக்கான மருந்து நிச்சயமாக அந்த அந்நிய பிரதேசத்திலேயே இருக்குமல்லவா வேதியரே? அங்குள்ள வைத்தியரை கேட்டால் தரமாட்டாரா என்ன?"

"ஆஹா... அப்படிதான் நாங்களும் முதலில் நினைத்தோம் ஆக்கூ‌.! அதனால்தான் அங்கிருந்து இந்த மருத்துவ தாவரங்களை தேடித்தேடி பெரும் சிரத்தையோடு இங்கு கொண்டுவந்தேன். ஆனால் இயற்கையின் கணக்கு இன்னும் துல்லியமானது..! நாங்கள் எண்ணியது பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்நிய மருந்து அந்தஅந்நிய உணவை காலம்காலமாக தின்றுபழகிய அந்த அந்நியமனிதர்களுக்கு பலனளித்ததே தவிர புதிதாக தின்று பழகிய நம் ஆட்களுக்கு அது வீரியமானதாக இல்லை. மாறாக மேலும் சிக்கலை வருவித்துவிட்டது.  அதாவது எப்படி மாறுபட்ட உணவு உடம்பிற்கு ஒத்துபோகவில்லையோ அப்படியே மாறுபட்ட மருந்துவகையறாவும் உடலுக்கு ஒத்துபோகவில்லை! "

"எனக்கு தலையே சுற்றுகிறது வேதியரே..! மனிதகுலத்துக்கு மட்டும் ஏன் இந்த சோதனை!"

"அட இது நம்மால் ஏற்பட்ட சிக்கல்தானப்பா! ஆனால் இது நம்மைமட்டுமல்ல மற்றஜீவராசிகளையும் திண்டாடவைத்ததுதான் பெரும் சங்கடமாக போயிற்று."

"சற்றே புரியும் படி சொல்லுங்கள் தாத்தா..!" என்றான் பதுமன்.

"கேளுங்கள் பிள்ளைகளா! தூரதேசத்திலிருந்து நான் கொண்டுவந்த சிலசெடிகளில் அங்குள்ள புழுபூச்சிகளின் முட்டைகளும் இருந்திருக்கின்றன. அதுதெரியாமல் இங்கு நட்டு வளர்த்தபோது அதன் இலைகளை சாப்பிட்டு செடியோடு அந்த பூச்சிகளும் வளர்ந்தன. கண்ணிற்கு எளிதில் புலப்படாத பொல்லாத சில பூச்சிகளின் வரவு அவை பெருக்கமடைந்து.. இங்கு காலம்காலமாக இருந்த பெரும் பெரும் மரங்களை வேருடன் அரித்து சாய்த்துவிட்டது. சில பட்டாம்பூச்சிகள் கூட இங்கு ஏற்கனவே இருந்த பட்டாம்பூச்சிகளோடு இனக்கலப்பாகி புதியரக வண்ணத்து பூச்சிகள் இந்த பிரதேசம்பூராவும் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. இதனால் ஏற்கனவே இருந்த பழைய பட்டாம்பூச்சிகளின் விஷேஷ குணம் காணமல்போய்விட்டது."

வேதியர் பட்டாம் பூச்சி பற்றி கூறியதும் ஆக்கூ விற்கு கவனமெல்லாம் தன் இடையில் இருந்த மூங்கில்குழாய் பக்கம் போனது. அதை ஒருமுறை தொட்டுபார்த்துவிட்டு பிறகு கேட்டான்..,  "விஷேஷ குணம் என்றால்..?"

"அது ஒருவித தற்காப்பு தகவமைப்பு ஆக்கூ! இயற்கை அளித்த கொடை! இந்த கண்டத்தின் பூர்வீக வண்ணத்துபூச்சிகளின் இறகுகளில் உள்ள வண்ணத்துகள்களின் ரசாயனவாடை அதன் எதிரிகளான ஊர்வன இனத்தை சேர்ந்த ஓணான், பாம்பு, பல்லி ஆகியவற்றுக்கு கிஞ்சுற்றும் ஆகாத நஞ்சாக உள்ளது. விரும்பத்தகாத இந்த வாடையை அவை நுகர்ந்தால் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடும். முன்பு கண்டம்முழுதும் சுற்றிதிரிந்த இந்தவகை வண்ணத்துபூச்சிகளால் கட்டுப்பட்டிருந்த விஷஜந்துகளின் நடமாட்டம்.. தற்போது புதியரக பட்டாம்பூச்சி வரவால் மறுபடி தலைதூக்க தொடங்கி இருக்கிறது. ஊர்வனவும் காட்டிற்கு அவசியம் ஆனால் அவை அதிகமாக நடமாடுவது ஏனைய பிராணிகளின் வாழ்வியலை கடுமையாக பாதிக்கும்..!..…....."


(வேதியர் மேலும் ஏதேதோ தொடர்ந்து பேசினார்.. ஆனால் ஆக்கூ தன் மனதோடு பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தான்.)

 "அடாடா!  நாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம். ஓடையில் நாகத்திடமிருந்து நம்மை காப்பாற்றியது விரலில் ஒட்டிஇருந்த அந்த பட்டம்பூச்சியின் வண்ணத்துகள் தான். அரிதாகி விட்டதாக வேதியர் குறிப்பிடும் அந்த வண்ணத்துபூச்சியைதான் நான் மூங்கில் குழாயில் இவ்வளவு நேரமாக அடைத்துவைத்திருக்கிறேன்! இப்போது அதை எடுத்துகாட்டுவோமா? இல்லை வேணாம்..! அதை என்ன காரணத்திற்காக அடைத்துவைத்தேன் என்றறிந்தால் அவர் என்னை தவறாக அல்லவா நினைப்பார். ஐயயோ! இந்த நன்னன் பயல் வேறு எதையாவது சொல்லிவிடுவானே..!...."

அவன் நினைத்தவாறே.. நன்னன் அடுத்த கேள்வியை இவ்விதம் கேட்டான்.. "ஏன் ஐயா! பூர்விக வண்ணத்துபூச்சிகள் புதியவரவான மரஞ்செடிகளை நாடாது அல்லவா?"

"மிகச்சரி..பிள்ளாய் நன்னா!  அவை இந்த கண்டத்திற்கே உரித்தான பூர்வீக நீல மலர்களிலும் செம்பருத்தி செடிகளிலும் மட்டுமே சுற்றித்திரிந்து.. காணகிடைக்கும்.. !
அவை செம்பழுப்பு நிறத்திலும் கருமைவிரவியும் தோற்றமளிக்கும். துரதிருஷ்டவசமாக காட்டின் அடர்ந்த ஒருசில பகுதிகளில் நீர்பாங்கான இடங்களில் மட்டுமே ரத்தசிவப்பான அந்த செம்பருத்தி செடிகள் வளருகின்றன. இங்குள்ள ஓடைபக்கம் நான் நடவுசெய்து பார்த்தேன்.. அது வளரவில்லை! "

அதுவரை சுதாரிக்காத நன்னன் தற்போது புத்தியில் பொறிதட்டவே... "ஆஹா..! அதே போன்றதொரு பட்டாம்பூச்சி யை நாங்கள் வழியில் கண்டோமே.. கண்டதென்ன.. அதை ஆக்கூ....................."

(நன்னனின் வாயை பொத்தினான் ஆக்கூ.. நன்னன் ஆக்கூவின் இடையில் இருந்த மூங்கில் குழாயை தொடமுயல.. அதையும் தட்டிவிட்ட ஆக்கூ, வேண்டுமென்றே குறுக்கிட்டு
பேச்சை மாற்றிவிட முயன்றான்)

"ஏன் வேதியரே! நான் அளவுக்கு அதிகமாக உணவை நுகர்கிறேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா..? எனக்கு அதிகமாக சாப்பிட்டு கொண்டே இருக்க தோன்றுகிறதே!! என்ன செய்வது?"

ஆக்கூ வின் கூற்று நன்னனையும் பதுமனையும் சிரிப்பும் வியப்புமாய் மேலும் கவனிக்கச்செய்தது..

ஆக்கூ ஏதோ வேடிக்கையாக பேச்சை மாற்றுவதற்காக இதை கேட்டபோதிலும் வேதியர் அதனை சற்று முக்கியமானதாகவே கருதி ஆழ்ந்த விளக்கம் சொல்லத்தொடங்கினார்...,

"ஆக்கூ ! இயற்கை எனும் பெருவணிகன் நமக்கு வேண்டியதை அளித்து தனக்கு வேண்டியதை பெற்றுகொள்கிறான். ஆச்சரியம் தரும்வகையில் அவன் எறும்புக்கும் தேனீக்கும் உணவளந்ததை போல யானைக்கும் எருதுக்கும் கூட உணவளிக்கிறான். உள்ளபடியே அவற்றிடமிருந்து தனக்கு தேவையான இயக்கத்தை அவற்றின் செயல்களால் நிறைவேற்றிக்கொண்டு ஆற்றலை திரும்ப பெறுகிறான். எங்களை காட்டிலும் நீ அதிகம் புசிக்க முடிகிறதெனில் அதற்கேற்ப உன்னால் அதிகம் செயலாற்றவும் முடியும். நீ ஆற்றும் அந்த செயல் எங்களுக்கானதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது இயற்கைக்கானது..! நீ வழங்க மறுத்தாலும் அது உன்னிடமிருந்து தனக்கு வேண்டியதை உட்கிரகித்துவிடும்..!
ஆதலால் நீ உனது உணவுமுறை அளவீடு பற்றி கவலைகொள்ள வேண்டியதில்லை!
இது ஒருபுறம் இருந்தாலும் மனிதர்களாகிய நாம் ஒரு குழுமிய சமூகக்கட்டுப்பாடுகளோடு வாழ நம்மைநாமே பழக்கப்படுத்தி இருக்கிறோம்... இந்த செயற்கையான கட்டுப்பாடுகள் காரணமாக இயற்கையான மற்ற விலங்குககளைபோல தான்தோன்றிதனமாக நாம் செயலாற்ற இயலாது! வளர வளர நாம் நமது செயல்படு ஆற்றலை கட்டுப்படுத்தியே வாழ நேரிடும். நீயும் அப்படி மெல்ல மெல்ல சமூகவாழ்வில் அடியெடுத்து வைக்கும்போது உன்செயல்பாடுகளுக்கேற்ப உணவை கட்டுப்படுத்த வேண்டிவரும். அதை நீயே உணரும்படி உன் உடலே உனக்கு முன்கூட்டி சொல்லிவிடும். இன்னொருவரின் அறிவுரை தேவைபடாது.. ஆகையால் இப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தாராளமாக செய்.. வீணே கவலை கொள்ளாதே!"

வேதியரின் நீண்ட பிரசங்கம் முடிகிற தருவாயில் ஆக்கூ நிம்மதி அடைந்தான். நன்னனும் பதுமனும் ஒருவித புரிதலை உணர்ந்தனர். இதற்கிடையே அந்த ஓடைக்கரையும் வந்தது.  ஓடையில் முதலில் இறங்கி ஆக்கூவும் நன்னனும் நீர்பருகி ஒரு சுரைகுடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு எழுந்துவந்தனர்.
முன்னதாக தன்னிடம் இருந்த பானையை பதுமனிடம் ஒப்படைத்தான் ஆக்கூ. பதுமன் அதை வாங்கி பார்த்தபோது அது வெறும் காலி பானையாக இருந்தது.

வந்ததும் ஆக்கூ கேட்டான்.. "ஐயா வேதியரே! உங்களிடம் கனிதரு மரங்களும் அவற்றில் நாட்படு தேறலும் மிதமிஞ்சி இருப்பதாக கேள்வி பட்டேன் அது மெய்யா? பொய்யா?"

வேதியர் சற்றே புன்னகை புரிந்தவாறு...சொன்னார்,
"அடுத்தமுறை வரும்போது உங்களை எனது தோட்டத்திற்கு அழைத்துச்செல்கிறேன். அங்கு நீ எதிர்பார்ப்பவை இருக்கும் ஆக்கூ!"

ஆக்கூ சொல்லுதற்கரிய உவகை கொண்டான். கனவுலகில் கற்பனையில் சஞ்சரிக்க தொடங்கினான்.

"நன்றி ஐயா! தற்போது நாங்கள் விடைபெறுகிறோம்..! "
 
(வேதியர் ஆசி தருவதுபோல இருவரின் தலையையும் வருடிக்கொடுத்தார்.)

பூனைகுட்டி போல பதூஉசாக  நின்றிருந்த பதுமனை பார்த்த நன்னன்...,
"பதுமா! பார்த்து ஜாக்கிரதையாக இரு..! அடுத்தமுறை வரும்போது உன்னையும் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் செல்கிறோம். அதற்குள் உன் பணிகளை முடித்து தயாராக இரு...! என்ன ,, வரட்டுமா?"

"போய்வாருங்கள் நன்னன் அண்ணா! கட்டாயம் மீண்டும் சந்திப்போம்!"

(இருவரும் புறப்பட்டனர்)

ஆக்கூ கையை அசைத்துக்காட்டி விடைபெற்றான்.. பதுமனும் பதிலுக்கு கையினால் சைகை செய்தான்.

பிறகு நன்னனும் ஆக்கூவும் வடதிசை மார்க்கத்தில் விரைவாக நடைபோட தொடங்கினர். அவர்கள்போவதை சிறிதுநேரம் பார்த்திருந்த வேதியர் பிறகு மெல்ல ஓடையில் இறங்கினார்.. பதுமனும் அவரோடு இறங்கிட இருவரும் பானையில் நீர் சேகரித்துக்கொண்டு குடிலை நோக்கி திரும்பி நடந்தனர்.


******* **     **********   **********

ஆக்கூ நன்னனுடன் வேகவேகமாக நடந்து வடக்கில் பாதி தொலைவை கடந்தான். வழியில் அவர்கள் செம்பருத்தி செடிசூழ்ந்த புதரை கண்டனர். இருவரின் நான்கு கால்களும் ஒருகணம் அப்படியே நின்றன.

நன்னன் ஆக்கூவவை நோக்கி எகத்தாளமான ஒரு பார்வையை வீசினான்.

ஆக்கூ அதைபுரிந்தபடி தலையை கவிழ்ந்தபடி நாணி.. பிறகு தன் மூங்கில் குழாயை எடுத்து மூடியிருந்த தக்கையை திறந்தான். திறந்ததுமே பட்டாம்பூச்சி தயாராக ஓடும் என்று இருவருமே எண்ணி ஏமாந்தனர். அது குழாயினுள்ளே அசைவற்று இருந்தது.

"அடப்பாவி பாதகா அதை கொன்றே விட்டாயா?" என்றான் நன்னன்..

"இல்லை இல்லை....இல்லவே இல்லை..! .." என்றபடி குழாயை கவிழ்த்து உதறினான் ஆக்கூ..

இப்போது அந்த பட்டாம்பூச்சி பறந்துபோய் புதரருகே சென்று படபடத்து சிவந்த மலர்களினூடே புகுந்து காணாமல் போனது...!

வெற்று மூங்கில் குழாயை ஆக்கூ நன்னனிடம் திருப்பித்தர... அதை வாங்கிய நன்னன் தன்னிடமும் தற்போது வைப்பதற்கு கல் எதுவும் இல்லாததால் 'எதுக்கு இது?' என்பதுபோல கையை காட்டிவிட்டு
அதை இடுப்பில் சொருகிவிட்டு பயணத்தை தொடர்ந்தான்.


இருவரும் மாறிமாறி உரையாடியும் பாட்டுபாடியபடியும் உற்சாகம் குன்றாமல் கதிர்சாயும் முன்பாக மலைசிகரம் அருகே வந்தனர்.. பிறகு மறுபடி வடகிழக்கில் பயணித்து சில நாழிகையில் ஆற்றங்கரையையும் அடைந்தனர்.
பொதுவாக ஆற்றங்கரை மணற்படுகையில் எந்தமூலையில் நின்றிருந்தாலும் கண்ணில் தென்படுகிற மாதிரி ஓரளவு சமவெளியாகவே இருக்கும். இன்று ஏனோ சென்னியும் நந்துவும் இருக்கிறமாதிரி கண்ணுக்கெட்டியமட்டும் தென்படவே இல்லை..!


சற்று தூரத்தில் ஆற்றின் மறுகரையை மறைத்தவண்ணம் குறுக்கேஇருந்த ஒரு பெரிய பாறையை பார்த்த நன்னன் ஆக்கூவை அங்கு சென்று தேட சொல்லிவிட்டு தான் வேறுதிசையில் சென்று கூப்பாடு போட்டான். ஆனால் அதற்குள் ஆக்கூ கைதட்டி நன்னனை அழைத்து இருவரும் இங்கே இருக்கிறார்கள் என அழைத்தான்.

நன்னன் வந்து பார்த்தான் பாறைக்கு அடியில் கல்தரையில் படுத்தபடி சென்னி சிரித்திருந்தான். அவனுக்கு உள்ளங்கைகளை சூடுபறக்க நந்து தேய்த்துவிட்டான்.

"இங்கு என்ன நடக்கிறது சென்னி? அடேய் நந்து! உன்னை கல்லை சேகரிக்க சொல்லி போனால்.. இவனுக்கு கைகால் அமுக்கி சேவை செய்துகொண்டு இருக்கிறாயா.. ச்சீ எழுந்திருங்கள் இருவரும்!"

"ஏனப்பா நீ கேட்கமாட்டாய்? உயிரோடு இருக்கிறேனல்லவா..?
கொஞ்சம் அசந்திருந்தால் அந்த மின்சார மீன் என்னை பரலோகம் அனுப்பியிருக்கும். நந்துவுக்கும் அவனை அழைத்துவந்த அந்த கிளிக்கும்தான் இனி என் உயிர் சொந்தம். என் தாய்தந்தைக்குகூட கிடையாது! " என்றான்.

" என்னது மின்சார மீனா?"

"ஆமாம் ஆக்கூ! மின்னலின் சாரம் அதில் அப்படியே இருந்தது. நாடிநரம்புகளை ஒருகணம் உலுக்கி யாரோ உருவி இழுப்பதுபோல இருந்தது.... சரி அதை விடு.. நீங்க போன காரியம் என்னவாயிற்று..?."


நான்கு நண்பர்களும் ஆற்றங்கரை யில் அந்திபொழுது கடந்த பிறகும் கூட தத்தமது வீரதீர சாகச அநுபவங்களை பரஸ்பரம் பரிமாறி கொண்டிருந்தனர்..

இவ்விதமாக அவர்கள் பேசிக்கொள்வதை... கேட்கமுடியாத தொலைவில்,,, ஆற்றின் மறுகரையில் இருந்த ஒரு அத்திமரத்தின் மேலிருந்து ஒரு தலைப்பாகை அணிந்த உருவம் கவனித்துகொண்டிருந்தது...!

- சூரியராஜ்

கருத்துரையிடுக

புதியது பழையவை