சானகி நகுவாள்..!
நாம் ஆற்றும் செயல்களில் தோல்வியோ பிழையோ சந்திக்கும்போது அவமானத்தையும் சேர்த்தே எதிர்கொள்ள நேரிடுகிறது.
அத்தகைய அவமானங்களை சிலர் யாருமே காணாத வகையில் தனிமையில் சந்தித்தால் கூட வருந்துகிறார்கள்...
தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்கிற வள்ளுவர் வாசகம் இதற்கும் பொருந்தும்.
மேன்மைமிகு மகான்கள் தன் இழிவுகளை வேறுயாரும் காணாமல் போனாலும் மேலே இருந்து ஒருவன் காண்பதாக உணருகிறார்கள்...!
உன்னையே அறியாமல் நீ ஏதும் நிகழ்த்த கூடும்.. ஆனால் அல்லாஹ் அறியாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை என்கிறது இஸ்லாம்.
அவ்வாறே சமண பௌத்த கிறிஸ்துவ நெறிகளும் நம்மைஅறியாமல்கூட பழிதரு செயலை செய்துவிடகூடாதென போதிக்கின்றன.
ஆக,
தெய்வபக்திமிகு இறைநம்பிக்கையாளர்கள் கூட இறைவனிடம் அவமானப்பட அஞ்சுகிறார்கள்..!
சிலர் அடுத்தவர் பார்வைக்கு மட்டுமே மானமுள்ளவராக தோன்ற விரும்புவர். அவர்கள் தனிமையில் சந்திக்கும் அவமானநேர்வுகளால் கலக்கமடைவதில்லை.
பிரபலமான ஒரு உளவியல் நிகழ்வை நீங்கள் அறிந்திருக்க கூடும்..
கால்இடறி கீழே விழுகிற குழந்தை சுற்றும்முற்றும் பார்த்து யாரும் இல்லை என்று தெரிந்தால் தானே எழுந்து போய்விடும்..!
ஆனால் தன் தாயோ வேறு உறவுகளோ அதை பார்க்க நேர்ந்தால் ஓ ! என்று அழுது அலறி முதலைக்கண்ணீர் வடிக்கத்தொடங்கும்.. இங்கு உண்மையில் வலி வேதனை தரவில்லை! மாறாக அவமானமே வேதனை தருகிறது..! அதுவும் கூட பிறத்தியார் பார்த்துவிட்டதால் அதிகரிக்கிறது.
சான்றோர்கள் உயிரற்ற மூலங்களைவிட தூய்மையாக இருக்க எண்ணுகிறார்கள்.
"திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃது ஆற்றார்"
என்கிறது நாலடியார்.
இன்னும் சிலர் உயிரினங்களிலே தாவரம் விலங்கு என்றுகூட பாகுபாடு பார்ப்பதில்லை..
சங்க இலக்கியத்தில் ஒரு பெண் யாரும்அறியாமல் தன் காதலனை தனிமையில் சந்திக்கும் தருவாயில் ஒரு மரம் அவளை பார்க்கிறதே என்று அஞ்சி நாணுகிறாள்..!
இறுதியாக நம்மில் பெரும்பாலானோர் நமது விரோதிகள் முன்னிலையில் மட்டுமாவது அவமானத்தை தவிர்க்க பெரும் பிரயத்தனம் செய்வோம்.
இக்காலத்திலோ உறவினர் முன்பு அவமானபடுவதை விட விரோதிகளிடம் கையேந்துவதை கௌரவமாக நினைக்கிறார்கள்.
பிடித்தமான ஆசிரியர்முன்போ..,
மனைவி, கணவன் முன்போ
கணவன் , மனைவி முன்போ
ஆண்கள் பெண்ணிடமோ பெண்கள் ஆணிடமோ அவமானபடுவதை மிகவும் வெறுக்கிறார்கள்...
இங்கு அவமானம் என்று சொல்வது உண்மையில் மாற்றார் அதை தரக்குறைவாக நினைப்பதாக எண்ணி தனக்குதானே நொந்துகொள்வதை குறிக்கிறது.
இதையுமே பொய்யாமொழியார்
"புகழ்பட வாழாதான்.. தன்நோவான்!" என்கிறார்..
சரி....... கம்பர் எப்படி இதை கவிநடையில் ராவணன் கொண்டு படம்பிடிக்கிறார் பாருங்கள்...
யுத்த காண்டத்தில்...,
கிளைமாக்ஸ் காட்சியில் ராவணன் படைகளை ராம பாணம் நிர்மூலமாக்கி துடைத்தெறிந்துவிட்டது..
நிராயுதபாணியாக ஏறத்தாழ தோல்வியின் விளிம்பில் நிற்கிறான் ராவணன்.
கதை முடிந்தது என்று எல்லாரும் ஆவலோடு பார்த்திருக்க
எவருமே எதிர்பாரா விதமாக ராமன் தருமநெறிப்படி நிராயுதபாணியை தாக்குதல் வீரனுக்கு அழகல்ல
செத்த பாம்பினை அடித்து எனக்கு பழக்கமுமல்ல..
ஆதலால் நீ திருந்துவதற்கு ஒருநாள் அவகாசம் தருகிறேன் "இன்றுபோய் நாளை வா" என்று சொல்லி அனுப்பி விட்டான்.
எப்பேர்பட்ட வீரப்பெருமகன் சகலகலா வல்லவன் இராவணன்!
கம்பன் வருணனையில் சொல்வதாயின்...
""வாரணம் பொருத மார்பு!
வரைதனை எடுத்த தோள்!
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா!
சங்கரன் கொடுத்த வாள்!! மவுலி(கிரீடம்) பத்து..!!! ""
பெரும் பிராமணருக்கும் மகா ராட்ஸஸிக்கும் பிறந்த பிரம்மாண்டமான "பிரம்மராட்சசன்" அல்லவா அவன்..?
இராவணன் போன்ற மகத்தான வீரனுக்கு இது எத்தனை பெரிய அவமானம்!!!
ச்சே இதற்கு பதிலாக அந்த இடத்திலேயே அவன் கொன்றுபோட்டிருக்கலாம்..!
தலைகவிழ்ந்தபடி நேர்ந்த அவமானத்தை எண்ணி வெற்றுநடை போடுகிறான்...
அப்போது அவன் மனநிலையை அப்படியே படம்பிடித்து காட்டிய பட்டையகிளப்பும் கம்பன் பாடலை பாருங்கள்...
""
வான் நகும் !
மண்ணும் எல்லாம் நகும்!
நெடுவயிரத் தோளான் நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் !
- என்று அதற்கு நாணான்....,
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல்,,, மிதிலை வந்த...
சானகி நகுவாள் !! --என்றே
நாணத்தால் சாம்புகின்றான்!. ""
விளங்க கூறுவதாயின்..
ஈரேழு 14 லோகங்களை கட்டி ஆண்ட ராவணன் சாதாரண மானுடன் ராமனால் தோற்கடிக்கப்பட்ட செய்திகேட்டு..
அண்டசராசரங்களே நகுமாம்..
வானுலக தேவதேவியர் இழிவாக சிரிப்பார்களே..!
மண்ணும் இவ்வுலகில் முளைக்கிற யாவுமே நகுமே.. பல்முளைத்த பாலகன்தொட்டு பல்போன கிழவன்வரை சிரிப்பார்களே..!
வைரம் பாய்ந்த நெடிய தோள்கொண்ட ராவணனாகிய நான் முன்பு கேவலமாக எண்ணி சிரித்த அற்ப பகைவர்கள் எல்லாம் இன்று என்னை கண்டு சிரிக்க போகிறார்களே...!
(அடாடா! இதற்கே ஆயிரம் பொன் பரிசளிக்கலாம் கம்பனுக்கு)
என்று அவன் நினைத்து வருந்துவான் என நீங்கள் கருதினால்...அது தவறு!!!
"என்றதற்கு நாணான்!"
அவன் அதற்கெல்லாம் கூட அவ்வளவு கவலை படவில்லையாம்...!
யாருடைய அழகில் மயங்கி அவள்கருத்தை கவர தான் இத்தனைநாள் முயன்றானோ..,
யாருடைய மனதில் இடம்பெற வேண்டி வீராப்புபேசி கெத்து காட்டி திரிந்தானோ....,
யாரை அடைய வேண்டி பராக்கிரமத்தால் அதர்மகாரியங்களை அடுத்தடுத்து ஆற்றினானோ..,
அத்தகையவள்... கூரிய வேல் ஆயுதத்தையே வெட்கபடசெய்யும் வேல்நகு விழியாள் ஆன..
மிதிலையில் இருந்து வந்துதித்த..
ஜானகி (சீதை) நகுவாளே!!
என்றுதான் இராவணன் மிகமிக நொந்து புலம்புகிறானாம்.
உளவியல் என்றால் இதுவல்லவா உளவியல்....!
சூரியராஜ்
கண்ணனின் கடை பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். என்பார் பாவேந்தர். மாமலை போன்ற இராவணன் அசோக வனத்து சீதையை அடைய நினைத்திருக்கையில் இன்று போய் நாளை வா என்ற இராமனின் வார்த்தைகளால் எத்தனை துன்பத்தை இராவணன் அடைந்து இருப்பான் என்பதை நம்மால் உணர முடிகிறது.
பதிலளிநீக்குகண்ணின் கடைப்பார்வை...திருத்தி படிக்கவும்.
பதிலளிநீக்கு