அண்மை

குறுந்தொகை 14 - பாடலும் கதையும்

 குறுந்தொகை 14

இழிவான காரியம்


kurunthogai-14

கார் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. ஈரப்பதத்துடன் வீசிய பலத்த காற்று  பெரு மழைவரப்போகும் செய்தியை அறிவித்தபடி சென்றது.


தோழியின் வருகைக்காக தெருவை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவாறே வெகு நேரம் வீட்டின் வாசலில் வள்ளி காத்திருந்தாள். வள்ளியை  கண்ட அவளது தாயார் ரங்கம்மாள் "அடியே… வள்ளி. வானம் இருட்டிக்கிட்டு கிடக்குது… நீ மலையேறத்துக்கு தயாரா இருக்க? நாளைக்கு போகலாம்" என்று வைதாள்.


தாயார் பேச்சை வள்ளி காதில் வாங்கிக் கொள்ளவில்லை . "தோழி வரமாட்டாள் போல, நாமே தான் செல்ல வேண்டும்" என்று புலம்பிய படியே வீட்டின் வெளியே வந்தாள். மலமலவென மழைத்துளிகள் மண்ணைநோக்கி படையெடுக்க மீண்டும் வீட்டினுள் சென்றாள்.


ரங்கம்மாள் "நான் தான் சொன்னேனே… நாளைக்கு போகலாம்னு" என்று கூறினாள்.


புறத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது போலவே, வள்ளியின் அகத்தில் பெரும் சோக மழை பொழிந்தது.


அடுத்தநாள் தோழியை சந்தித்த வள்ளி "ஏனடி... நேற்று வரவில்லை?" என்றாள்.


"மழையின் காரணமாகத்தான், அப்பப்பா! என்ன மழை நேற்று!?... பேய் மழை..!"


"நீ முன்பே வந்திருந்தால் மழை வருவதற்குள் சென்று வந்திருக்கலாம்"


"சென்றிருக்கலாம் ஆனால் வந்திருக்க முடியாது"


"ம்...ஏதாவது காரணம் சொல்லிவிடு நீ"


"உனக்கென்ன...மழைபெய்தாலும் காற்று வீசினாலும் காதலனை காண செல்வதற்க்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நானோ உனக்கு துணையாக வந்து மலையில் குரங்குக்கு துணையாக அமர்ந்திருக்கிறேன்" என்று அலுத்துக்கொண்டாள் வள்ளியின் தோழி கவியரசி.


"சரி...சரி...நேற்று செல்லாததால் இன்று அவர் காத்திருப்பார். இன்றை விட்டால் இனி ஒரு வாரம் பிறகு தான் அவரை சந்திக்க முடியும். இன்று உனக்காக காத்திருப்பேன். வந்துவிடு!"


"காதலில் விழுந்த பெண்ணுடன் சிநேகம் கொண்டால் இதெல்லாம் செய்து தானே ஆகவேண்டும்! வருகிறேன்" என்றுச் சொல்லி கவியரசி தன் வீட்டை நோக்கி நடையை கட்டினாள். வள்ளியும் தன் வீட்டிற்கு சென்றாள்.


அன்று, மாலை நேரம் வள்ளி தன் தோழி கவியரசிக்காக காத்திருந்தாள்.கவியரசி வந்ததும் தன் தாயாரிடம் 'மலைக்கோவிலில் உள்ள முருகனை தரிசிக்க சென்று வருகிறேன்' என்று வழக்கமாக கூறும் பொய்யுரையை இன்றும் கூறினாள்.


ரங்கம்மாள் "வாரம் ஒரு முறை முருகனை தரிசிக்க தவறாமல் சென்று விடுகிறாய்… முருகனை வழிபடுவதோடு மட்டும் இரு! அவரை காதலித்து விடாதே! உனக்காக உன்‌ அத்தை மகன் குமரன் காத்திருக்கிறான்…"என்று கேலிக்கை செய்தாள் வள்ளியை.


வள்ளியின் அழகு பொருந்திய இன்பமான முகம் தாயார் கூறிய சொல்லைக் கேட்டு  சிறு சுணக்கம் ஏற்பட்டது. 


பின் தோழியர் இருவரும் கோயிலை நோக்கி புறப்பட்டனர்.


வள்ளியின் காதலன் பெயர் சிலம்பன்.


கிழங்கு அகழ்ந்து அதை பிற நாட்டுக்கு சென்று விற்பனை செய்வான். மிக நல்லவன் ஆனால் அவனுக்கு கூச்ச சுபாவம் மிக அதிகம் யாரிடம் அவன் அதிகமாக பேசமாட்டான்-காதலியை தவிர. இதனாலேயே கவியரசிக்கு இவன் வள்ளியை நல்லபடியாக பார்த்துக்கொள்ள திராணியற்றவன் என்று கருதினாள். ஆனால் வள்ளியின்அத்தை மகன் குமரன் செல்வந்தன், முரட்டுத்தனமான உடல் அமைப்பு உடையவன் அவனே வள்ளிக்கு சரியானவன் என்று நினைத்தாள்‌. அதை வள்ளியிடமும் சொன்னாள். வள்ளி, தோழி கூறியதை பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.


வள்ளியும் கவியரசியும் ஒரு வழியாக மலைக்கோவிலை வந்தடைந்தனர். தன் காதலன் தன் வரவை எண்ணி காத்திருப்பதை அறிந்த வள்ளி. தோழியை காத்திருக்கும்படி கூறிவிட்டு காதலனை நோக்கி சென்றாள்.


காதலர் இருவரும் வெகுநேரம் காதல் உரையாடலை நிகழ்த்தினர். இருள் சூழ்ந்ததால் காதலனிடம் விடைப்பெற்றுக்கொண்டு கவியரசியுடன் வீட்டை நோக்கி புறப்பட்டாள் வள்ளி.


இப்படியே பல மாதங்கள் கழிந்தது. இருவர் காதலும் பல காலம் வாழும் ஆலமரம் போல வேரூன்றி போனது.


பல மாதங்கள் சென்றது…


இவர்கள் காதல் சமாச்சாரம் வள்ளியின் தாயார் ரங்கம்மாளுக்கு ஒரு வழியாக தெரிய வந்தது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட ரங்கம்மாள் வள்ளியை வீட்டை விட்டு வெளியில் செல்ல தடைவிதித்து அவள் வெளியேறாத படி பார்த்துக்கொண்டாள். வள்ளியின் அத்தை மகன் குமரனுக்கும் வள்ளிக்கு திருமண ஏற்பாட்டை விரைவு படுத்தினாள் ரங்கம்மாள்.


இரு வாரங்களாக சிலம்பன் வள்ளியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனான். 'வள்ளியின் தோழி கவியரசியை சென்று பார்த்தால், வள்ளி வராத காரணம்  தெரியவரும்' என்று நினைத்துக்கொண்டு கவியரிசியிடம் சென்று "ஏங்க…இரண்டு வாரங்களாக வள்ளி என்னை சந்திக்க வரவில்லையே? ஏதாவது அவளுக்கு உடம்பு சரியில்லையா!?" என்று கேட்டான்.


"அதெல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் காதல் செய்தி அவளது வீட்டிற்கு தெரிந்துவிட்டது. அதனால் அவளது அத்தை மகனுடன் திருமண ஏற்பாடு நடந்து கொண்டுள்ளது. அவளை வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதென்று விதி செய்துள்ளார்கள்"


கவியரசி கூறியதை கேட்ட சிலம்பனுக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல ஆகிவிட்டது.


"நீங்கள் ஏதாவது உதவி செய்ய முடியுமா?"என்று கவியரசியிடம் கேட்டான்.


அவளோ "உனக்கு உதவி செய்ய விருப்பம் இருந்திருந்தால், முன்பே இந்த செய்தியை உன்னிடம் கூறி இருப்பேனே. உன்னை விட அவள் அத்தை மகன் செல்வந்தன், வீரமுள்ளவன் அவனே வள்ளிக்கு சரியான வாழ்க்கை துணை" என்றாள்.


அவள் கூறிய சொற்களை கேட்ட சிலம்பன் மிகுந்த கோபமடைந்தான். இனி யாரையும் நம்பி பயனில்லை! ஏதாவது செய்தே ஆகவேண்டும்! என்று நினைத்தவன் கோபத்துடன் கவியரசியை நோக்கி "நீங்கள்...உதவில்லை என்றாலும் பரவாயில்லை. என் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்! ஊரார் முன் எருக்கம் பூ மாலையனிந்து வள்ளியின் பெயரை காண்போர் கேட்கும்படி கூவிக்கொண்டு மடலேறவும் தயங்க மாட்டேன்!" என்று கூறிமுடித்தான்.


"அதானே… உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த இழிவான காரியத்தை தவிர?"


"ஆமாம் இழிவான காரியம் தான். ஆனால் அவளுடன் எனக்கு திருமணம் ஆன பின் ஊரார் நல்லவன் மனைவி இவள் என்று பெருமையாக பேசுவார்கள். அப்போது இழிவான காரியம் மறக்கப்படும்" என்று ஆத்திரமாக கூறிவிட்டு. 


தங்கள் காதலின் வெற்றியை நோக்கி ஆகவேண்டிய காரியங்களை செய்ய அதிவிரைவாக கிளம்பினான்.


-குகன்


குறுந்தொகை 14 பாடல்


அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த

வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு

அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,

''நல்லோள் கணவன் இவன்'' எனப்

பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே


1 கருத்துகள்

  1. சென்றிருக்கலாம் ஆனால் வந்திருக்க முடியாது..!

    வார்த்தை ஜாலம் அழகு..!
    அமைந்த இடம் பேரழகு.

    முன்புபோல பாடலின் ஆசிரியர் பெயரையும் குறிப்பிடுங்கள்.. நினைவில் வைத்துக்கொள்ள போவதில்லை என்றாலும் பழந்தமிழர்கள் இப்படியெல்லாம் பெயர்வைத்திருந்ததாவது தெரியவந்து.. தற்கால பெயர் பஞ்சத்தை ஓரளவு போக்கும்..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை