வஞ்சமகள் வந்தாள்...!
ஆரண்ய காண்டம்..
வனவாசம் வந்த ராமனும் சீதையும் லட்சுமணன் கட்டமைத்த புற்களால்வேயப்பட்ட குடிலில் (பர்ணசாலையில் ) தங்கியிருந்தனர்..
சீதை உள்ளே ஏதோ வேலையாய் இருக்க.. வெளியே லட்சுமணன் காவலிருக்க ராமன் குடிலின் வாசலில் அமர்ந்தபடி எதையோ எண்ணி அரைமயக்கத்தில் இருந்தான்...
அச்சமயம் அவ்விடம் உலாவந்த ராவணன் தங்கையும் சமீபத்தில் கணவனை இழந்திருந்த விதவையுமான அரக்கர் குல தோன்றல் சூர்ப்பனகை.., ரகு குல தோன்றலாம் ஸ்ரீராமரை காண்கிறாள்..
புதிதாய் ஓர் ஆணழகனை கண்டமாத்திரத்தில் காதலில் விழுந்தவள் அவனருகே செல்ல விரும்பினாள்.. சட்டென ஒரு தயக்கம்.. தன்மேனி அத்தனை சௌந்தர்யமாக இல்லையே.. ! அதனாலென்ன இதோ நொடிப்பொழுதில் ஒப்பனை செய்துகொண்டால் போயிற்று!
அரக்க தேகம் தேவலோக அரம்பை போல மாறிற்று..!
மேல்நகையும் மேகலையும் போட்டு
மேனகை போல மின்னினாள் அந்த மேனா மினுக்கி!
ஒயில் ஆடும் மயிலை போல
படமெடுத்தாடும் நாகம் போல
நெளிந்து சுழிந்து மிளிர்ந்து நிமிர்ந்து மேகமென மிதந்து பணிந்து மிக பௌவ்யமாக போகிறாள்.. இதுதான் காட்சி..!
இவ்விதம்..
அன்ன நடை போட்டு வரும்போது
சூர்ப்பநகை யின் கால் கொலுசும் சலங்கையும் ஜல் ஜல் என ஒலி எழுப்புமல்லவா..? அந்த ஒலியையே சந்ததாளமாக போட்டு நம்ம கம்பநாடான் போட்டான் பாருங்க ஒரு பாட்ட...,,
தம் தனன.. தம் தனன.. தம்தனன.. தம் தம்..!
"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க..
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியளாகி..
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென மின்னும்..
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்...! "
பொருளுணர..
பஞ்சு இரு குணாதிசயங்கள் கொண்டது மென்மை மற்றும் தூய வெண்மை...
பல்லவம் என்பது புதிதாக துளிர்விடும் இளந்தளிர் இலைகளை குறிக்கும்..
( "பல்லவர்" என்கிற தொண்டைமண்டல நாடாண்ட அரசவம்சமே இப்படித்தான் பெயர்பெற்றது..!
மணிபல்லவம் என்றொரு தீவுதேசம் சங்ககால கதைகளில் தனிப்புகழ் கொண்டது!)
அனுங்குதல் = வாடுதல்/ வருந்தல்/ சினுங்குதல்/சுருங்குதல்
செஞ்செவிய கஞ்சம் = செக்கச் சிவந்த கஞ்சமலர்(அல்லி/தாமரை)
சீறடி = சிறு அடி
அஞ்சொலிள மஞ்ஞை = அம் சொல் இள மஞ்ஞை(மயில்)
வஞ்சி = தாவர கொடி வகை
அதாவது...
பஞ்சுபோல ஒளிர்கிற பாதங்களை கொண்டு அந்த கானக புல்வெளியின் பனிஉறங்கும் இளந்தளிர்களின் மீது நடந்துவருகிறாள்..சூர்ப்பனகை. இளந்தளிர் இலைகளை விஞ்சிய அவளது குளிர்ந்த மென்பாதம் இதனால் நோகிறதாம்..!
இதை வேறுமாதிரி யாக இப்படிகூட பொருள் கொள்ளலாம்..
பஞ்சென ஒளிர்வதும் மிதமிஞ்சிய குளிரானதுமான மென்தளிர் இலைகளே வெட்கத்தால் அனுங்குகிறதாம்...! ஏன் ? அதனை விட மெல்லிய சூர்பனகையின் பாதம் தொட்டதால்..,
( "காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்..." என்கிற குறட்பா வினை இங்கு ஒப்பு நோக்குக..)
செக்கச்சிவந்த இதழடுக்கிய தாமரைமலரே குளத்திலிருந்து எழுந்து வருவதுபோல...
குதிகால் நிலத்தில் படாமல் நுனிபாதம் மட்டும் பதிய சிறிய அடிகள் எடுத்துவைத்து,, (தற்காலத்தில் ஹீல்ஸ் காலணி போட்டுநடக்கும் பெண்மணிகளை போல..)
குரலையும் அழகியதாக மாற்றிக்கொண்டு..,,,
தோகை இளமயில் எனவும்,
அன்னம் போன்றும்
மின்னல் நடையிட்டு...
வஞ்சிகொடி போல...
நஞ்சினை நெஞ்சில் புதைத்த வஞ்சகம் நிறைந்தவளாம் சூர்ப்பனகை வந்தாள்....!
அலைமகள், திருமகள், கலைமகள், மலைமகள், மணமகள், பூமகள் என்பது போல கம்பன் 'வஞ்சமகள்' என்றொரு பதத்தை உருவாக்கி இருக்கிறான் பாருங்கள்..!
மறைந்த மகத்தான கவிஞர் நா.முத்துக்குமார்.... (அயன் பட பாடலில்)
"புலன்களை அடக்கி வைத்தால்,, தினம் புதுபுது சுகம் கிடைக்கும்..!."
என்பார்..
அதுபோல கம்பன் கவியை நீங்கள் உள்ளுக்குள் பாடப்பாட உங்களுக்கு புதுபுது பொருள் கிடைக்கும்...!
சூரியராஜ்
ஒரு வருடத்திற்கு முன்பு இதுபோன்ற ஒரு விளக்க நூலை கம்பராமாயணத்திற்காக தேடிக் கொண்டிருந்தேன். பிறகு 'அது போன்ற ஒரு விளக்க நூலை நாம் எழுதினால் தான் உண்டு' என்று நீங்கள் சொன்னீர்கள். இன்று அது உண்மையாகிறது.
பதிலளிநீக்குஇப்பணி தொடர வேண்டும்.