அண்மை

காந்திஜியா? நேதாஜியா?

 காந்திஜியா? நேதாஜியா

Gandhi-vs-nethaji


உலகில் இருவகையான மனநிலை கொண்டோர் உள்ளார்கள். 


வானில் பறக்கும் பறவையை கண்டு மகிழ்வோர் ஒரு ரகம்; கூண்டில் அடைத்து பேசும் கிளியை ரசிப்போர் இன்னொரு ரகம்.


வாடும் ஏழைக்கு வலிந்து உதவி உளமாற மகிழ்வோர் ஒரு ரகம்; கல்லுக்கு பாலை ஊற்றி கடமை முடிந்ததாய் நினைப்போர் இன்னொரு ரகம்.


மோனை எதுகை அணி நயம் பாராட்டி யாப்பு என்னும் இலக்கணம் கட்டி துள்ளல் நடையோடு கொஞ்சும் தமிழ் கொண்ட அக்கால பாடலைக் கேட்போர் ஒரு ரகம்; ராக தாள இலக்கணமின்றி தமிழ் தெரியாதோர் பாடும் தமிழ் பாடல்களையும் ரசித்து கேட்போர் இன்னொரு ரகம்.


சன்மானத்தை முதன்மையாக கொண்டு வேலை தேடுவோர் ஒரு ரகம்; தன்மானத்தை முதன்மையாகக் கொண்டு வேலை தேடுவோர் இன்னொரு ரகம்.


நாக்கிற்காக உண்பவர்கள் ஒரு ரகம்; வயிற்றுக்காக உண்பவர்கள் இன்னொரு ரகம்.


இப்படியாக,

மண்ணை, பெண்ணை, பொன்னைத் தேடுபவன் ஒரு ரகம்;

தன்னைத் தேடுபவன் முற்றிலுமாக வேறொரு ரகம்.


அதுபோலத் தான், அமைதி வழியை தேர்ந்தெடுத்த காந்திஜி ஒரு ரகம்; வன்முறையை கையிலெடுத்த நேதாஜி இன்னொரு ரகம்.


'யாரால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது?' இந்த கேள்வி இணையத்தில் பரவலாக உள்ளது.

அதற்கு பெரும்பாலான இந்தியர்களின் விடைகள்  'நேதாஜி தான்' என்றே உள்ளது.

சரி இருக்கட்டும், அத்தோடு விட்டார்களா? 'காந்தியின் கொள்கை அணுவளவும் நம் நாட்டிற்கு உதவவில்லை' என்ற மனநிலையோடும் பலர் தங்களது கருத்துகளை வெளியிடுகிறார்கள்.


முதலில் காந்தியின் கொள்கை உங்களுக்கு தெரியுமா?


  1. கொல்லாமை 
  2. கள் உண்ணாமை
  3. அஞ்சாமை
  4. உண்மை
  5. உடலுழைப்பு
  6. நாவடக்கம்
  7. பிறர் சொத்து கேளாமை
  8. தாய்நாடு பேணுதல்
  9. ஐம்புலனையும் அடக்குதல்
  10. தீண்டாமை அகற்றுதல்
  11. உறுதி மனம் உடையோராய் விளங்குதல்


இதை வெறும் வெற்று வார்த்தைகளாய் மட்டும் காந்தி சொல்லிவிட்டு போகவில்லை, வாழ்ந்து காட்டினார்.


சாதாரண மனிதனானவன் இறந்த பிறகு வழிபடும் அளவிற்கு உயர்கிறான். காந்தி வாழும் போதே மகாத்மா ஆனவர்.


பரமஹம்ச யோகானந்தர், 'வாழும் போதே மகாத்மாவாக உயர்ந்தவர், அதுவும் இந்த பட்டம் மகா குருக்களால் வழங்கப்படவில்லை, படிக்காத பாமர மக்களாலே தரப்பட்டிருக்கிறது. எத்தனை சத்தியமான வார்த்தைகள்' என்று காந்தியை புகழ்கிறார்.


காந்தி உலகில் உள்ளோர் அனைவரும் அமைதியாகவும் மகிழ்சியாகவும் வாழ வேண்டும் என்று விரும்பினார். வன்முறையால் எதற்கும் தீர்வு கிடைக்காது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் உண்மையும் கூட.


நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் இதை சிந்தித்து பாருங்கள், உலகில் உள்ள அனைவரும் காந்தியைப் போன்று அமைதி வழியை விரும்பினால், இரண்டு நாட்டிற்கிடையில் எல்லைகள் வேண்டியதில்லை, இராணுவங்கள் இருக்காது, தளவாடங்கள் தேவையில்லை, ஆயுதங்கள் அர்த்தமற்றதாகிவிடும். உண்மையான அன்புமயமான உலகம் அங்கே உருவாகும். 


இதே, 'ஒரு அடி கொடுத்தால் பதிலடி கொடுப்பேன்' எனும் மனநிலை இருக்கும் வரையில் உலகிற்கு வாழ்வில்லை. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டோரை உயர்த்துவோனுக்கு எப்படி அமைதிப் பண்பு இருக்கும்?


தன்னூன் பெருக்கத்திற்கு தான்பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்


என்கிறார் வள்ளுவர். 'தன்னூன் பெருக்கத்திற்காக பிற உயிரின் ஊனை உண்பவன் எப்படி கருணை உள்ளவனாக இருக்க முடியும்?' என்பதே இதன் பொருள்.


அதுபோலவே, வன்முறை உணர்வை ஊக்குவிக்கும் ஒரு சமூக கூட்டத்தினிடையே எப்படி அமைதி என்னும் உயர் நோக்கம் இருக்க முடியும்?


கூடி வாழ்வதில் உள்ள அமைதி, நான் தான் உயர்ந்தவன் என்று மார்தட்டி பிரிவதால் கிடைத்துவிடாது.


ஜீவகாருண்யத்தையும் உயிர்நேயத்தையும் மேடைக்கு மேடை பேசுவது மட்டும் போதாது, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை வழுவாது வாழ்ந்து காட்ட வேண்டும்.


அக்னியில் எழுந்த உலகம் இன்றும் எரிந்து கொண்டே இருந்திருந்தால், உயிர்கள் இல்லை. எதற்கும் ஒரு தீர்வை அமைதியே தருகிறது. அஹிம்சையே அதை ஆக்குகிறது.


கவிஞர் கண்ணதாசன் சொல்வார், 'உன்னை ஒருவன் 'முட்டாள்' என்று திட்டுகிறான் எனில் 'ஆம், நான் முட்டாள் தான்' என்று ஒதுங்கிவிடு' அதுவே அமைதியை தரும்.


'இல்லை, நான் முட்டாள் இல்லை' என்ற வீண் முழக்கத்தால் வாரியார் சுவாமிகள் சொன்னது போல் 'பன்றியை உரசிய யானை' கதையாகிவிடும்.


காந்தியின் மேன்மையான கொள்கைகளை புரிந்து கொள்ளாது, அவரைப் பற்றி தவறாக பதிவிடுவது எவ்வகையில் சரியாகும்?


பலரது பதிவுகள் நேதாஜியை உயர்ந்தவராய் காட்டுவதில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை, காந்தியின் உயர்வான கொள்கைகள் இன்றும் நம் நாட்டில் பலருக்கும் புரியாமல் இருப்பதே வருத்தமளிக்கிறது.


மகாத்மா காந்தி அவர்கள், அவருடைய உயர்ந்த கொள்கையை பற்றி இந்திய மக்களுக்கு எடுத்துரைக்கிறார்:


அழிவிற்கு மத்தியில் வாழ்வும் கட்டாயமாக இருந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். ஆதலால் அழிவிற்கும் மேலாக உயர்ந்ததொரு நெறி இருக்கத்தான் வேண்டும். அப்படிபட்ட நெறியின் கீழ் மட்டுமே நல்ல ஒழுங்கான சமூகம் அர்த்தமுள்ளதாகவும், வாழ்வதற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.


அதுதான் வாழ்கை நெறி என்றால் தினசரி வாழ்வில் நாம் அதை கடைப்பிடித்து நடக்க வேண்டும். எங்கு போர் நிகழ்ந்தாலும், எந்த இடத்தில் நமக்கு எதிரிகள் தென்பட்டாலும் அவர்களை அன்பினால் வெல்ல வேண்டும். நான் என் சொந்த வாழ்வில், நிச்சயமான அன்பு நெறி எனக்கு விடை அளித்தது. அழிவு நெறி என்றுமே செயல்பட்டதில்லை என்பதை கண்டிருக்கிறேன்.


அஹிம்சை (ஜீவகாருண்யம்) மனோநிலையை அடைவதற்கு மிகவும் கடுமையான பயிற்சி தேவையுள்ளது. ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைப் போன்று அது ஒரு நியமத்துடன் கூடிய வாழ்க்கையாகும். சத்தியம் மற்றும் அஹிம்சை நெறியை நம் வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க தொடங்கினால் ஒவ்வொரு பிரச்சனையும் தானாகவே விடுபடத் தொடங்கிவிடும்.


மகாத்மா கூறியவை சத்தியமான வார்த்தைகள் ஆகும். நான் இன்றதை அனுபவபூர்வமாக காண்கிறேன்.


காந்தி அமைதியை பற்றி உலகிற்கு சொன்னதில் ஒரு சிறு குறிப்பு:


ஜனாதிபதி வில்ஸன் தன் அழகிய பதினான்கு குறிப்புகளைப் பற்றிக் கூறினார். ஆனால் அவர், எல்லாவற்றிற்கும் பிறகு இந்த முயற்சி சமாதானத்தை நிலை நாட்ட உதவவில்லையானால், இருக்கவே இருக்கின்றன, உதவிக்கு நம் யுத்த தளவாடங்கள், என்றார். நான் அந்த நிலையை தலை கீழாக மாற்ற விரும்புகிறேன். என் பாரதம் மற்ற நாடுகளை எரித்த சாம்பலிலிருந்து எழுவதை நான் விரும்பவில்லை. நம் தளவாடங்கள் ஏற்கனவே தோற்றுவிட்டன. நாம் சத்தியமாகிய கடவுளையும் அன்பின் சக்தியையும் முயல்வோம்.


(இவை காந்தியின் கட்டுரைகள்; யோகியின் சுயசரிதத்திலிருந்து)


வர்தாவில் காந்தியின் ஆசிரமத்திற்கு பரமஹம்ச யோகானந்தர் வந்திருந்த போது, இரவு படுக்கைக்கு செல்லுகையில் காந்தி பரமஹம்சரிடம் வந்து ஓர் எண்ணெயை தந்து, 'எங்கள் ஆசிரமத்தில் இருக்கும் கொசுக்களுக்கு ஜீவகாருண்யத்தைப் பற்றி தெரியாது ஸ்வாமிஜி' என்றாராம்.


மகாபெரியவர் அட்டை பூச்சியின் உணவிற்காக குளத்தில் இறங்கியதிலும், பட்டாடை அணியாதே என்று போதனை செய்ததிலும் எத்தனை உயர்வான ஜீவகாருண்யம் மிளிர்கிறது. அதன்படி காந்திஜியும் அவ்வரிசையில் அமர்கிறார்.


'கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்' என்னும் மனநிலையுள்ள தலைவனையோ மக்களையோ கொண்ட சமூதாயத்தால் எப்போதும் இளவேனிற் காற்று மெல்லிலையை வருடுவது போன்ற அமைதியை அனுபவிக்க முடியாது.


இன்றும் உங்களுக்கு காந்தியின் கொள்கையை விடவும் நேதாஜியின் கொள்கைகளே உலகை காக்கும் என்ற எண்ணமிருந்தால், நாம் அமைதி என்னும் சுவாசத்தை, உயிர் அணையும் வரையிலும் காண மாட்டோம்.


தன்னை அடித்தால் பதிலுக்கு திருப்பி அடிப்பது மிருக இயல்பு, மிருகத்திடமிருந்து மனிதனை வேறுபடுத்தும் உண்மையான பகுத்தறிவு ஒருவனுக்கு செயல்படுமாயின் அங்கு மன்னிக்கும் குணமே வேரூன்றி இருக்கும். தான் செய்தது தவறு என்று பகைவனுக்கு புரிய வைக்கக் கூடிய ஆற்றல் இருக்கும்.


நேதாஜியை போன்று லட்சக் கணக்கான மக்களை இன்றும் காண முடியும், காந்தியைப் போன்று ஒருவரை காணுதல் அரிதாகும்.


ஐன்ஸ்டீன் அன்றே காந்தியைப் பற்றி சொன்னதை எண்ணி வியக்குகிறேன்,


'நிஜமாகவே இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்தார் என்பதை எதிர்கால சந்ததிகள் நம்ப மறுக்கும்'


-தீசன்

2 கருத்துகள்

  1. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தீசன் பாணி கட்டுரையை படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்...

    ஒரு நல்ல கட்டுரை ஆரம்பத்தில் ஈர்க்கவேண்டும்.

    நடுவில் தர்க்கம் செய்யவேண்டும்

    முடிவில் தான்சொல்ல வந்ததை நிரூபித்து வாசகனை வெல்ல வேண்டும்.

    இதுவும் வெல்லக்கூடிய பதிவுதான்.

    பதிலளிநீக்கு
  2. காந்தியை தேசப்பிதா /தேசத்தந்தை
    Father of our nation
    என்று பட்டம்சூட்டி அழைத்த முதல் மனிதரே நேதாஜி தான்.

    காந்தியை வெறுத்து ஒருவன் நேதாஜியை நேசிக்கிறான் என்றால் தான் அந்த வீரபுருஷரையும் சேர்த்தே நிந்தனை செய்கிறோம் என்பதை அறிய தவறுகிறான் என்று பொருளாகிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை