குகனும்.. கும்பகர்ணனும்..
இயல் இசை நாடகம் என முத்தமிழும் முகிழ்த்து விளையாடும் மைதானமாக கம்பன் காவியம் அமைந்திருக்கிறது..
தமிழுக்கு கதியே கம்ப ராமாயணமும் திருக்குறளும் தானே...!
எனினும் துரதிருஷ்ட வசமாக இன்று பள்ளிபாடங்களிலும் மேடைகளிலும் கம்பன் கவி , முதல் தமிழோடு... அதாவது இயல் உடன் நின்றுவிடுகிறது..
இசை எனும் இரண்டாவது தமிழை சுவைக்க தவறிவிடுவதால் நமக்கு சில அமுதம் நிகர்த்த பாடல்கள் கூட ஏதோ வேப்பம்பூ ரசம் போல வெறுமனே சுவைக்கப்படுகின்றன.
நம் முன்னோர்கள் நம்மைவிட பாக்யசாலிகள் தான். ஏனெனில் அவர்கள் மூன்றாவது தமிழாகவும் (நாடகமாக) இந்த கம்பகாவியத்தை சுவைத்திருக்கிறார்கள்..
நம்காலத்தில் இது சாத்தியமில்லை.. பொன்னியின் செல்வன் கதையை எடுப்பதற்கே
இங்கே பற்பல தடைகள் தடுமாற்றம் பற்றாகுறை..நிலவுகிறது. இதில் எங்கிருந்து கம்பராமாயணத்தை சாரம் குறையாமல் நாடகமாக்குவது??
என் அன்புக்குரியவர் சொன்னார் நாயன்மார் பாடல்களை விட ஆழ்வார்களின் பாசுரங்களில் இசைத்தமிழ் அதிகம் மிளிர்கிறது என்று.. அது உண்மைதான்.
( கரடுமுரடான மலைகளில் கொடியமிருகங்களை விரட்ட பாடிய பூதகணங்களின் வாத்யங்களுக்கும்... கானகசோலைகளில் பசு முதலிய வீட்டுவிலங்குகளை வசீகரிக்க பாடிய ஆயர்பாடியர் கானங்களுக்கும் வித்யாசம் இருக்கதானே செய்யும்..! அது குறிஞ்சி முல்லை என்ற அவரவர் நிலம்சார் வாழ்வியலின் வெளிப்பாடே அன்றி வேறுஇல்லை. நம்மில் பெரும்பாலானோர் குறிஞ்சிநில தொடர்பை விட்டுவிட்டதால் அதன் இசை ரசனையும் நம்மிடமிருந்து சற்றே நகர்ந்திருக்கலாம்...) அரைகுறை இசையறிவோடு அணுகும் நமக்கே ஆழ்வார் பாசுரங்கள் இனிக்கிறது என்றால் சகலாகலா வல்லவரான கம்பருக்கு எப்படி இருந்திருக்கும்?! அந்த அத்தனை ஆழ்வார்களையும் மொத்தமாய் ரசித்து குடித்துவிட்டுதான் கம்பன் காட்டாற்று வெள்ளமென தனது இதிகாசத்தை இசையால் நிறைத்து வைத்திருக்கிறான்...
இங்கு இரு முரசுகொட்டு பாடல்களை கவனிப்போம்..
முதலாவது அயோத்யா காண்டத்தில்....
வனவாசம் புறப்பட்ட
இராமன், லக்ஷ்மணன், சீதை மூவரும் கங்கை கரை குகனின் பாதுகாப்பில் ஓரிரவு தங்க நேருகிறது.. அவர்களுக்கு இறைவனுக்கு நிகரான பணிவிடைகள் செய்துகொடுத்த பின் மிகுந்த கர்வமிடுக்குடன் குகன் குடில்வாசலில் காவல் இருக்கிறான்..
அப்போது கங்கைபேராற்றின் தூரத்து மறுகரையில் காரிருளில் தீபங்கள் அணிவகுக்க எண்ணமுடியாத சேனை படைதிரண்டு வருவதை காண்கிறான்.. கருங்குன்றுகள் எழுந்தாடி அசைந்துவருவதுபோல யானைகளின் நெடும்படை யும் கூட புவிஅதிர புழுதிகிளப்பி வருகிறது.
இந்த நேரத்தில் இத்தனைபெரிய சைன்யம் யாருடையது..?
வருவது யுவராஜர் பரதன் என அறிகிறான் குகன்..!
ஓஹோ..! கைகேயின் மைந்தனா!
என் தலைவன் ராமரை அரண்மனையை விட்டு துரத்தியது போதாதுஎன்று எங்கள் கங்கையை விட்டும் துரத்திட இத்தனை பெரிய படையோடு வருகிறானா..?
என்று தானே மனக்கணக்கு போட்டு... எதிர்வரும் பரதனுக்கு அறைகூவல் விடுவது போல ஒரு புகழ்பெற்ற சந்த தாளம் ஒலிக்கிற பாடல் இது....
"ஆழ நெடுந்திரை - ஆறு
கடந்திவர் போவாரோ..?
வேழ நெடும்படை -கண்டு விலங்கிடும் வில்லாளோ..?
தோழமை என்றவர் சொல்லிய
சொல்லொரு சொல்லன்றோ..?
ஏழமை வேடன் இறந்திலன்
என்றெனை ஏசாரோ..? "
என்று மார்தட்டி சூழ்உரைக்கிறான்..
ஆனால் உண்மையில் பரதன் ராமனை ராஜமரியாதையோடு முடிசூட்டி திருப்பி அழைத்துசெல்ல வந்து , ராமன் மறுக்கவே.. பாதகைகளை மட்டும் தலையில் சுமந்து சென்று அரியணையில் அமர்த்தி ராமகதையில் தான் ராமனைவிடவும் நல்லவன் என நிரூபிப்பது வேறுவிஷயம்...
(பொருள் உணர...
இமயத்தின் வற்றாபெருநதிகளான கங்கை சிந்து பிரம்மபுத்திரா மூன்றும் நினைத்துப்பார்க்க முடியாத பிரம்மிப்பூட்டும் ஆழமும் ஒரு யோஜனை அகலமும் பல தேசம்தாண்டி ஓடுமளவு நீளமும்
உடையவை..
அப்பேர்பட்ட கங்கைநதியின் காவலன் குகன்..
சொல்கிறான்..
அடேய் பரதா..! என் Area வ தாண்டி உள்ள வந்துடுவியா நீ..! இல்ல வந்துட்டுதான் திரும்பி போயிருவியா?
உன் வேழ நெடும்படை கண்டு ஓடிஒளிகிற கோழை னு நினைச்சியா என்னைய..? வீரன்டா வில்வீரன்!
என் தலைவன் ராமன் என்னை தனது தோழன்னு சொல்லிருக்கான்.. அந்த ஒரு வார்த்தை போதும்.. பொளந்து கட்டிடுவேன் எவன் வந்தாலும்..!ஜாக்கிரதை!
இதையும் மீறி உங்கள உள்ளவிட்டா "ச்சீ ! இந்த வக்கற்றவன் பேசாம செத்துருக்கலாம்!" என இந்த உலகத்தார் என்னைய தூற்ற மாட்டாங்களா...? )
ஓடக்காரன் குகனுக்குதான் எத்தனை ஒப்பற்ற வீரவசனம்....
அந்த பிரபலபாடலை சந்தமொடு பாடி பாருங்களேன்...
அடுத்தது யுத்தகாண்டத்தில் கும்பகர்ணன் பற்றிய ஒரு காட்சி..!
சீதாபிராட்டி கோப்பையை வெல்வதற்காக இலங்கையில் நடந்த யுத்தகள போட்டியில்..
காலிறுதி சுற்றிலேயே மண்ணைக்கவ்வி விட்ட ராவணன் படைகள் செய்வதறியாது திகைத்தன. கொக்கரிக்கும் வானர படைகளுக்கு தக்க பாடம் புகட்ட துடித்த ராவணன் தானே களம்புக முயன்றபோது தளபதி ஒருவன் வேறு ஐடியா தருகிறான்..
உறங்கும் ஊன்பிண்டமும் மாமிச மலையுமான உங்கள் சகோதரர் கும்பகர்ணனை வரவழையுங்கள்..! அவர் ஒருவரே தனி ஆளாக நின்று கொக்கரிக்கும் வானரங்களை கொத்தவரங்கா வற்றல்போல நொருங்க மென்று தின்றுவிடுவார்..!
அடடா அருமையான யோசனை! என்ற ராவணன் கும்பகர்ணனை அழைத்துவர ஆணையிட்டான்.
உண்மையில் இந்த ஆணை கும்பகர்ணனின் படைவீரர்களுக்கே பெருங்கவலை தந்தது.. உறங்கும் அவனை எழுப்புவது இமயத்தை பெருச்சாளிகள் குடைவது போன்றது.. வானமே இடிந்துவிழுந்தாலும் பூமி இரண்டாக பிளந்தாலும் அவன் குறட்டை ஒலி ஓயாது!
வேறு வழி இல்லை.. இலங்கை வேந்தன் கட்டளையை எவரேனும் மீற முடியுமா??
உலக்கை ஈட்டி வேல் முரசு மத்தளம் ஏணி என எல்லாம் கொண்டுபோய் அடித்து உதைத்து குத்தி குடைந்து அவனை வீரர்கள் எழுப்ப முயலுகிறார்கள்..
உலக்கையால் கும்மி கும்மி முரசு கொட்ட கொட்ட பிரமாதமான இந்த சந்தபாடலை பாடுகிறார்கள்....
"உறங்குகின்ற கும்பகன்ன ! உங்கள் மாயவாழ்வெலாம்..
இறங்குகின்றது இன்றுகாண்!
எழுந்திராய்..! எழுந்திராய்..!
கறங்குபோல வில்பிடித்த
காலதூதர் கையிலே...
உறங்குவாய்..! உறங்குவாய்..!
இனிக்கிடந் துறங்குவாய்..! "
(காது என பொருள்படும் கர்ண என்ற வடசொல்லை அதன் மூலதமிழ் சொல்லான கன்னம் என்பதை கொண்டு
கர்ணண் - கன்னன் எனவும்
கும்பகர்ணன்- கும்ப கன்னன் எனவும் புலவரால் கையாளப்பட்டுள்ளது தெளிக..!)
பொருள் உணர...
உறங்குகிற கும்பகர்ணரே! இதுகாறும் ஏறுமுகமாகவே வளர்பிறைபோல விரிந்த உங்களது மாய வாழ்வு எல்லாம் இதோ இனி இறங்கி சுருங்கத்தொடங்கிவிட்டது..!
எழுந்திருங்கள்..!
வில்லினை கரங்களில் ஏந்தி காற்றாடி (கறங்கு) போல சுற்றிக்கொண்டுதிரியும் எமதூதர்கள் உம்மைத் தேடுகிறார்கள்..!
போ...!இனி போய் அவர்கள் கையில் படுத்து தூங்கு..எழுந்து போ..!
இப்பாடலை ஏறத்தாழ மாயாபஜார் படத்தில் கண்டசாலா பாடும் பிரபலமான "கல்யாண சமையல் சாதம் .." பாட்டின் மெட்டுபோல பாடலாம்..
அல்லது "குந்தலவராளி" ராகம் தெரிந்தால் அதில் பாடலாம்..
சந்த நயத்தோடு தாளம்கொட்டி
உங்கள் விருப்பம் போல எப்படியோ பாடுங்களேன்...!
சும்மா பாடிதான் பாருங்களேன்.. காசா பணமா..?
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே பாடும் பொழுது..
நீங்களும் நானும் பாடமுடியாதா?
-சூரியராஜ்
உண்மையில், நீங்கள் குறிப்பிட்டது போல வகுப்பறைகளில் வேப்பம்பூ ரசம் போல வெறுமனே சுவைத்த கம்பனின் கவியை அமுதம் போல சுவைக்க வைத்துவிட்டீர்கள் தங்களது கட்டுரையின் மூலம்..
பதிலளிநீக்குநன்றி !!
நீக்குதமிழ் என்ற சொல்லிற்கே இனிமை என்பதுதான் பொருள்.
வடநாட்டினர் முன்பு இதை 'மதுர பாஷை' என்றழைத்ததன் காரணம் மதுரை எனும் நகரின் பாஷை என்பதால் அல்ல. மதுரமான(தேன்) மொழி என்பதால்...
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு அயல்நாட்டுபயணி தனது குறிப்புகளில் மலையாளதேசத்திற்கு பின்னால் வசிக்கிற கருப்பின மக்களின் சாதாரண உரையாடலே ஏதோ கானம் இசைப்பது போல இருக்கிறது என்கிறார்..
நம்முடைய மொழிஇலக்கண கட்டமைப்பு அத்தகையது!
சங்க இலக்கியம் தொட்டு செய்யுள் பாங்கில் எழுதப்பெற்ற எல்லா இலக்கியங்களுமே பாடல்களாக பாடபட்டவையே...
அவை அதற்கே உரிய பண்ணில் இசைக்கபட்டு பாடபட்டால்தான் முழுமையான இன்பம் நுகரப்படும்.
பாரதியார் தன் கவிதைகளை இன்ன இன்ன மெட்டில் ராகத்தில் பாடவேணும் என தலைப்பிலேயே எழுதிவிட்டு தான் பாடிஇருக்கிறார்.அதை அநேக பாரதியார் கவிதை நூல்களில் பாடலின் வலது/இடது ஓரத்தில் அச்சடித்துள்ளனர்.
இருந்தபோதிலும் பிரபல கர்னாடக சங்கீதபாடகர்களும் திரைப்படங்களிலும்
முறை தவறி தங்கள் இஷ்டங்களுக்கு மாற்றி பாடுகிறார்கள்.
தாளம்கொட்டி கம்பீரமாக பாடவேண்டியதை ஜவ்வுபோல இழுப்பதும்..
இனிமைதழுவுகிற மெல்லியல் பாடலை இரைச்சல் கொட்டி கெடுப்பதும் என அழகழகான பாடலை
நாராசமாய் ஆக்கிவிடுகிறார்கள்.
இசைகுறித்த அறிவை வெகுஜனமக்களிடையே பரவலாக்க வேண்டும்..
ஒருவேளை என்றாவது எனக்கு இசை பற்றி கடுகளவு தெரியவந்தாலும்.. அதை கடலளவு திரட்டி முடிந்தவரை எல்லாருக்கும் பகிர்ந்தளிப்பேன்..
சரியோ தவறோ எதுவாயினும் அடுத்ததலைமுறைக்கு கடத்தபட இசைப்பாடல்கள் உயிரோடு இருக்கவேணும்..
அதன் ஜீவிதத்தை காக்கவேண்டியாவது நாம் பழங்கால இசைநுணுக்கங்களை அறிந்துகொள்ள முயல வேண்டும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதமிழாய்ந்த தமிழின் தலைமகனை தமிழாசிரியனாக்காது பொறியாளனாக்க நினைத்து புறப்பட்டவர்களை கண்டால் கோபம்தான் வருகிறது.
பதிலளிநீக்கு