அண்மை

கம்பன் என்றொரு மானுடன் - எள் இருக்கும் இடம்

 எள் இருக்கும் இடம்...


தினை, ரவை,கடுகு, வரகு, குன்றிமணி,எள் போன்றவை யாவுமே சின்னஞ்சிறு பொருளை ஒப்பிட்டு அளவிட சிந்துவெளி காலந்தொட்டு பயன்படுத்தபட்ட பழந்தமிழ் அளவைமுறைகள்..!


தினைத்துணை நன்றி செய்யினும் பனைதுணை யாக கொள்வர் என வள்ளுவரும்..


தினையளவு போதா சிறுபுல் நீர் என கபிலரும்..


கடுகை துளைத்து ஏழ் கடலை புகட்டி என இடைக்காடனாரும்


பாடிவைத்துள்ளனர்...



தேரோட்டம் தெப்போற்சவம் போன்ற திருவிழாசமயங்களிலோ பேருந்திலோ கூட்டத்தில்சிக்கி கொண்டு கண்எதிரே தவறிவிழும் காசையும் காலணியையும் திரும்ப எடுக்கமுடியாமல் தோற்றுதிரும்பிய அனுபவமும் என்றாவது நம் ஒவ்வொருவருக்கும் வாய்த்திருக்கும்..


இதை நம் முன்னோர்..


எள் விழவே இடமில்லா அளவு நெருக்கம் என கூட்டநெரிசல் குறித்து கூறுவர்.


இதை கம்பகாவியத்தில் பல இடங்களில் காணலாம் என்றாலும் சிறப்பான ஒரு இடம்.. உண்டு... வாருங்கள் காண்போம்..!


******.         ******. ******


கள் இருக்கும் மலர்க்கூந்தல் 


யுத்த காண்டம்...கடைசியில்..


போர்முடிந்தது... சங்கநாதம் ஓதி ஓய்ந்தது...!


அண்டசராசரங்களை நடுநடுங்க வைத்த அரக்கன் ராவணனின் சரீரரம் தன் தசசிரங்களும் துண்டுபட மண்ணில் சரிந்துவிழுந்து கிடந்தது.


இலங்கை வேந்தனின் திண்தோள் ஊறிய உதிரங்கள் மண்ணில் சிந்துவதை கண்ட லங்காபுரி பேரரசி ராவணனின்  மனையாள் மண்டோதரி வந்து அவன் உயிரற்ற உடலை மடியில் கிடத்தி ஒண்தமிழ் சொல்லினால் ஒப்பாரி பாடுகிறாள்.....


"

வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி... மேலும் கீழும்


எள் இருக்கும் இடனின்றி உயிர்இருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ..?


கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்...


உள் இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி...!!!

பொருளுணர...

-------------------------------


வெள் எருக்கஞ் சடைமுடியான் = வெள்ளை எருக்கம் பூ வினை சடையில் அணிந்தவன்...(சிவன்)

சிவனுக்கு உகந்த பூக்களில் வெள்ளெருக்கு பிரதானமானது!


வெற்பெடுத்த திருமேனி = மலையை பெயர்த்தெடுத்த மேனி


இழைத்தவாறே = தைத்தபடி /நெய்தவாறு


வாளி = அம்பு (ராம பாணம்),


அதாவது..


வெள் எருக்கம்பூவை சடையில் சூடி முடிந்த ஈசனின்..... கைலாய மா மலையையே கையோடு பெயர்த்தெடுத்த பெருமைக்குரிய புஜங்களை கொண்டவன் ராவணன்..!


அவன் திருமேனியில் எள் அளவுகூட இடம் விடாமல் துளைத்து தைத்து  நையப்புடைத்து.... உயிரைத் தேடித் தேடி ஊடுருவி துழாவி தேடுகிறதாம் ராமன் விட்ட ஆயிரமாயிரம் வலிய சுடுசரம்..!


ஏன் தெரியுமா..?

அதையும்

மண்டோதரியே சொல்லி புலம்புகிறாள்... பாருங்கள்..,


கள் இருக்கும் மலர்க்கூந்தலை உடைய ஜானகியை மனத்தால் சிறைவைத்து கரந்த காதல் ராவணன் உடலில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு உயிர்அணுவில் செல்களில் மிச்சம்மீதி இருக்குமோ...? என்ற சந்தேகத்தில்.. அப்படிகூட ஏதும் விட்டுவைக்க கூடாது  என்ற எண்ணத்தில் அந்த ராமன் இப்படி என் கணவனை சரமழை தொடுத்து சல்லடையாய் துளைத்துவிட்டான்.. என்று கதறுகிறாள்...!


அடடா என்ன ஒரு கற்பனை..!

எத்தனை துயரம்..!

வெளிச்சிறையிலிருந்து ஒருவரை மீட்கமுடியும்..! ஆனால் ஒருவரின் மனச்சிறையிலிருந்து எவரையேனும் மீட்கமுடியுமா..?

அது ராமனாகவே இருந்தாலும்..?


"கள் இருக்கும் மலர்க்கூந்தல் "


என்ற ஒற்றை வரியை படித்துவிட்டு கம்பனுக்கு அடிமையானோர் தாம் எத்தனை..! எத்தனை...!


(ஒரு பெண் இன்னொரு பெண்ணை வருணிக்கிறாள் என்றால் ஏதேனும் உள்குத்துகட்டாயம் இருக்கும்

கள் இருக்கும் என்றுகூறுவதினால் அதுஅளவுக்கு மிஞ்சினால் அதன் போதை அறிவைகெடுக்கும் என்ற இன்னொரு உட்பொருளையும் உணர்க...!)


இறுதிச்சொல்லையும் இலக்கிய அறிஞர்கள்.. "ஒருவன் வாளி" அல்ல...அது. "ஒரு  வன்வாளி"(வலிய அம்பு) என்பர்..!


துக்கவீடுகளில் ஒப்பாரி பாடுவதை நோக்கினால் ஒன்றுவிளங்கும்.. அவர்கள் தொடக்கத்தில் மாண்டவரின் மாண்புகளை அருமைபெருமைகளை முதலில் அடுக்கி பாடிவிட்டுதான்.. "அப்படிபட்ட ராசாவே.. மலையே.. ஆல மரமே இப்படி சாஞ்சுபோச்சே..!" என வந்து முடிப்பர்..


அவ்வகையில்..,

முதல்வரியிலேயே அமைந்திருக்கும்.. மோனை நயம் ராவணன் பெருமையைகூறுவதோடு.. எத்தனையோ தமிழ் செய்யுளில் எண்ணிலா மோனைகளை நான் கண்டிருந்தும்கூட.., இந்த "வெள்ளெருக்கஞ்சடைமுடியான்

வெற்பெடுத்த திருமேனி"

என்னை ஏனோ திக்குமுக்காடவும் செய்கிறது..!


இதை ஒப்பாரியாக பாடினாலும் சரி..!

ராவணமிடுக்கோடு பாடினாலும் சரி...!


சுவைகுன்றாத இன்னரும் தமிழ்ப்பாடல்....


இந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டு ஹேமநாத பாகவதரை போல நீங்கள் துணிந்து எந்த நாட்டிற்கு வேணுனாலும் போங்கள்..! போட்டி வைத்தால் அந்த நாடே உங்களுக்கு அடிமை..! ஆம்.. உலகின் எந்த தேசத்திலும் எந்த மொழியிலும் எத்தகைய புலமைவாய்ந்தவனாலும் இதன் பாதிக்கு பாதிஅளவுகூட இணையான நயம்கொண்ட இன்னொரு கவிதையை எடுத்துக்காட்ட இயலாது! ஒருபோதும் இயலாது..!


அதான் கம்பன்! அதுதான் தமிழ்!


-சூரியராஜ்

2 கருத்துகள்

  1. இதை படிக்கும்போது கம்பனை முழுவதும் கற்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை நீங்கள் கம்பனை படிக்க தொடங்கி கவிபோதையில் அதற்கு அடிமையாகி விட்டால்.. அதற்கு தென்றல் இதழ் பொறுப்பாகாது.

      நீக்கு
புதியது பழையவை