முதல் பாகம். ( புகைக்கூண்டு )
8. அருவிக்கரை.. ஓவியக்குகை..!
பூமிப்பந்தின் மிகநீண்ட மலைத்தொடர்களுள் முதன்மையானதாக விளங்கும் அதன் பக்கவாட்டில் சிற்சில குன்றொத்த முகடுகளும் நொருங்கிய பாறைகளும் ஆங்காங்கே பரவிகிடந்தன.. மழைக்காலங்களில் மலைகளின் மேற்பரப்பில் பெய்கிற மழைநீர் யாவும் பாறைமணலில் விரைவாக ஊடுருவி கீழ் இறங்கி பள்ளமான இடங்களில் சேகரமாகும்...
அப்படி சேகரமான எண்ணற்ற பெரும் பெரும் மலை ஏரிகளை அம்மலைதொடர் மையப்பகுதியில் காணலாம்.
எப்படி நாம் உண்ணும் உணவு ஒரேநாளில் ஜீரணித்து உதிரமாக மாறிவிடாதோ.. அவ்வாறே ஓரிருநாள் கொட்டும் மழைநீர் யாவும் அப்போதே ஏரிகளில் சேகரமாகிவிடாது!
முதலில் நேரடியாக பெய்கிறமழை வேண்டியமட்டும் ஏரியில் நிரம்பும்..
மலையின் முழுப்பரப்பிலும் தூறாலாக தூறி ஊடுருவிய நீர் யாவும் மிக மிக மெதுவாக உயரத்திலிருந்து சரிவுகளை நோக்கி எறும்புகள் ஊர்வது போல ஊறி இறங்கும். மலைச்சாரலில் செழித்தோங்கி நிற்கும் கணக்கற்ற மரங்களும் கொடிகளும் மண்டிகிடக்கும் புற்களும் அவற்றின் வேர்களும் தங்களால் முடிந்த அளவு அந்த ஊடுருவு நீரை, தாங்கி.. தேக்கி.. சிலகாலம் நிற்கசெய்யும்.
இப்படி சிறுக சிறுக சேர்ந்த அந்த சிறுதுளிகள்தான் பெருவெள்ளமாக மலைமேனி முழுவதும் வியாபித்து மறைந்துகிடக்கும்..
மழைகாலம் முடிந்தபிறகும் ஆண்டுக்கணக்கில் தவணைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக தாம்தேக்கிய மழைநீரை நிலத்தடி நீராக்கி, சுனையாக்கி, ஓடையாக்கி, ஊற்றுப்பெருக்காக்கி ஓடிச்சென்று பள்ளப்பகுதிகளான ஏரிகளில் சென்று சேர்க்கவும் செய்யும்.
அந்த ஏரிகளும் மெல்ல மெல்ல நிரம்பி வழிந்து,, இரண்டாம்கட்ட நதிப்பெருக்கை மலையடிவாரங்களில் உண்டாக்கி ஓடச்செய்யும்.. அவ்வாறு ஓடும் அந்த ஆறுகள் வழியில் குறுக்கிடும் கற்பாறைகளை அரித்து சிதைத்து வழி ஏற்படுத்தி செல்லும்.. சில நேரங்களில் திடீரென ஓடு பாதை முடிவடைந்து மலைவிளிம்பை ஆற்றுநீர் அடையும்போது வந்தவேகத்தில் அப்படியே ஆர்ப்பரித்தபடி கீழே கொட்டிவிடும்..
அதைத்தான் காலங்காலமாய் 'அருவி' என்று அழகுத்தமிழிலும்... 'நீர்வீழ்ச்சி' என மொழிபெயர்ப்பு தமிழிலும் நாம் சொல்லிவருகிறோம்!
வெள்ள காலங்களில் செம்மண்சேர்ந்த பழுப்பு நிறத்தில் கற்துகளோடு கலந்து கொட்டிடும்.
மேலும் மேட்டுநிலத்திலிருந்து தாழ்வான சமவெளிபரப்புகளில் விழுவதால் தொடர்ந்து வேகமெடுத்து தன் நதிநடையை நிறுத்தாமல் முன்னேறி போய்க்கொண்டே இருக்கும்.. காட்டாறாக.. கடும் புனலாக.. கரைகடந்த நுரையாக.. முடிவில் கடல்நாடி சென்றடையும் கழிமுகக் கடையாக..!
இவ்வளவாக உருமாறி ஓடும் முன்னர்..
சற்று உயரத்திலிருந்து கொட்டுவதால் தான் கீழே விழும் இடத்தை குழிவாக்கி பள்ளம்பறித்திருந்தது அந்த அருவி. இவ்வாறு தோன்றும் அருவியடி பள்ளங்களின் சிறப்பம்சம் யாதெனின்... முழுகோடை காலத்தில்,, அருவியிலும் நதியிலும் ஒருதுளி நீரும் இல்லாத போழ்திலும் கூட அவை தன்னகத்தே தெளிந்த நீரை எப்போதும்போல தேக்கி வைத்திருக்கும்..! அச்சமயங்களில் அவை தனி குளம்போல காட்சியளிக்கும். எண்ணற்ற மீன்கள் அந்த ஒற்றை குளத்துநீரையே சார்ந்திருந்து, பல்வேறு பிராணிகளுக்கும் பலவித பட்சிகளுக்கும் பலகாரமாக மாறிப்போகும்...!
இன்று அப்படியல்ல..
இதமான சூழல் நிலவுகிறது...
அளவோடு ஆறு ஓடுகிறது..
அழகே உருவாக அருவி பொழிகிறது..!
தற்போது அருவி மென்மையாக வெண்மை தோய்ந்த ஒருநிறமற்ற பனிப்படிகமென கண்ணாடிபோல விழுந்தோடி கொண்டிருக்கிறது..!
தேங்கிய நீர்த்தம்ப மட்டங்களில் விழுகிற தாரைகள் 'ஜலதரங்கம்' போல இன்னிசையை எழுப்பித் தருகின்றன...!
தெறித்து சிதறும் நூறாயிரம் நீர்த்துளிகள்.. துகள் துகளாக காற்றில் கதிரொளியில் புதைந்தெழுந்து,,, எட்டும்தூரத்திலேயே வானவில்லை மிஞ்சுகிற ஒரு மாயபிம்பத்தை அந்த வானாந்திர சூழலின் எழிலாடும் பொழில்சோலையின்கண் மிக ரம்மியமாக ஏற்படுத்திக் காண்பிக்கின்றன...!
அங்கேயே மெய்மறந்து நிற்கும் வாசகர்களை மெதுவாக கொஞ்சம் அழைத்துச்சென்று.. கொட்டும் அருவியின் நீர்த்தாரைகளின் அருகில் இருந்து நோக்க செய்வோமேயானால் அவர்களின் விழிகள் வியப்பினால் விரிவதை காணலாம்..!
திரைச்சீலை போல மேலிருந்து விழும் பளிங்கு படிக நீரினை ஊடுருவிப்பார்த்தால் கீழிருந்து பாதி உயரத்தில் நீர்வீழ்ச்சிக்கு பின்புறமாக உள்ளார்ந்த மலையினை குடைந்த ஒரு பெருங்குகை இருந்தது!
அருவியில் முற்றிலும் நீரற்ற சூழலில் மட்டுமே அந்த குகை சாதாரணமாக தென்படும்..!
வெள்ளம் பெருக்கெடுத்து அருவி ஆர்ப்பரித்தால் அங்கு குகைஒன்று இருப்பதற்கான சுவடே தெரியாது!
குகையானது எந்த நேரமும் இருண்டு தான் கிடக்கும்.. ஆனால் தற்சமயம் அதன் உள்ளே இருக்கும் மனித ஜந்துகள் ஏதோ ஒரு தீச்சட்டியில் நெருப்பை உண்டாக்கி வைத்திருப்பதால் வெளியிலிருந்துபார்க்க,, திரவத்திரையின் பின்புலத்தில் மங்கிய தீபஜோதி ஜாலமிடுவதை காணமுடிகிறது.
ஒருவேளை இது இரவு பொழுதாக இருந்தால் அந்த காட்சி இன்னும் கூட அறிவுக்கு புதிர்போட்டு மனதைமயக்குவதாய் இருந்திருக்கும்..!
ஆனால் அது எதுக்கு நமக்கு?
மனித மனம் இப்படித்தான் எப்போதும் இருப்பதைவிட்டு இல்லாததை எண்ணி ஏங்குகிற அற்பதனமான இயல்பை கொண்டிருக்கும்!
இந்திர உலகமே இறங்கி வந்தாற்போன்ற இந்த மாயாஜால காட்சியை வாசகர்கள் மட்டுமல்ல இன்னொரு வானரமும் பார்த்துக்கொண்டிருந்தது..!
ஓங்கி உயர்ந்து பருத்திருந்த 'கியூபிராக்கோ' மரத்தின் உறுதியான கிளைகளில் ... அந்த வானரம் அமர்ந்திருந்ததாக நினைத்தால் அது தவறு...!
அந்த வானரம் தலைப்பாகையும் உடல்மறைத்த ஆடையும் அணிந்த
ஒருவனது தோள்மீது அமர்ந்திருந்தது..! அந்த ஆள்தான் அம்மரத்தின் கிளைகளில் உட்கார்ந்திருந்தான்..! மேலும் அவன் மிக அநாயசமாக ,, ஊஞ்சலாடுவதுபோல கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தான்.
அவனை நெருங்கி சென்று அவன்முகத்தை காட்ட முடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் அவன் யாரை எதிர்நோக்கி ஆங்கு காத்திருக்கிறானோ அவர்கள்.. அந்த இருவர்.. அதோ வந்துகொண்டிருக்கிறார்கள் ..!
அவர்களில் ஒருவன் ஒருகையில் ஒரு மட்கலமும் மறுகையில் ஈட்டியும் வைத்திருந்தான். இன்னொருவன் கரங்களில் வண்ண மலர்கொத்துகளும் இலைதழைகளும் இருந்தன. அவன் தோளில் பஞ்சவர்ணகிளியும் இருந்தது.
அட அவர்கள் நாம் நன்கறிந்த சென்னியும் நந்துவும் தான்..! அவர்கள் அந்த மர்ம மனிதன் இருந்த மரத்தினை கடந்து போகும் போது அவன்தோளில் இருந்த குரங்கு எழுப்பிய சிறு ஒலியை கேட்டு கீழே போய்க்கொண்டிருந்த நந்துவின் கிளி அண்ணாந்து திரும்பி பார்த்தது. அது அந்த ஆளையும் குரங்கையும் ஏறத்தாழ பார்த்தே விட்டது..! அது தங்களை பார்த்துவிட்டதை எண்ணி அந்ந ஆளும் அவனது வானரமும் ஒரு கணம் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எனினும் அந்த பஞ்சவர்ணகிளி எவ்வித அசட்டையும் செய்யாமல் எதையும் காட்டிக்கொள்ளாமல் அலட்சியமாக மறுபடி திரும்பிக்கொண்டு அமைதியாக நந்துவின்தோளில் அமர்ந்தவாறு பயணத்தை தொடர்ந்தது..!
அவர்கள் அந்த அருவியின் குளக்கரையை நெருங்கினார்கள்.. சென்னி தன் பொருட்களை கீழே வைத்துவிட்டு இருகரங்களால் குளத்து நீரை ஆவலோடுஅள்ளி பருகினான். நந்து அந்த தடாகத்தின் மேலே தெரிந்த திரவத்துகள்களின் வண்ணப்பிரிகையை ரசித்தான்..
சென்னி திரும்பிவந்து நந்துவிடம், "இவற்றை என்னிடம் கொடு.. நீயும் போய் நீர் அருந்தி வா..! எத்தகைய களைப்பையும் தீர்த்து புத்துணர்வை மீட்டுத்தரும் அற்புத பானம் இதைவிட வேறு ஏது?" என்றான்.
ஆனால் நந்துவோ "இல்லை வேணாம்!" என்பதுபோல தலையை அசைத்து மறுத்தான்.
" வேணாமா?..சரி..வா! மேலே போகலாம்.." என்றபடி சென்னி தன் மட்கலத்தையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அருவியை ஒட்டியிருந்த பாறைக்குபின்னால் இருவரும் போய்சேர்ந்தனர். சிறிது நேரம்கழித்து இருவரது தலையும் வேறுஒரு இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மீண்டும் மறைந்தது.
தூரத்திலிருந்து இதை பார்த்த தலைப்பாகை மனிதன் அந்த குகைக்கு போவதற்கான வழி இந்த பாறைக்கு பின்புறத்திலிருந்து தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டான்.
"அவர்கள் திரும்பி வந்ததும், அநேகமாக அதில் மூவர் ஆற்றங்கரைக்கு போவார்கள்... ஒருவன் மட்டும் குடியிருப்பு பக்கம் போவான். நாம் அந்த ஒருவனை பின்தொடரவேண்டும் புரிகிறதா?"
என்று அந்த வானரத்தை பார்த்து சொன்னான். அதுவும் என்னமோ அதற்கு புரிந்துவிட்டதை போல "ஆம்!" என தன் கோரமான பல்லைக்காட்டி மேலும் கீழுமாய் தலையசைத்தது..!
*******. *******. *******. *******
குகையின் உள்ளே இருந்த தீச்சட்டியில் நெருப்பு மெ..ள்..ள.. மங்கியது.. குகையும் இருளில் விழத்தொடங்கியது..
சட்டென ஒரு சருகுச்சுருளை எடுத்து அதில் போட்டு வாயால் வேகமாக ஊதினான்... நன்னன்.
'குப்'பென புகையும் பிறகு தீயும் எழுந்தது.. இருள்வற்றி, வெளிச்சம் பிறந்தது.!
"அடேய் நன்னா ! என்ன சிறுபிள்ளைபோல விளையாடுகிறாய்... இதற்கு முன் நெருப்பையே பார்த்ததில்லையா..நீ..?"
,,,,,, திரும்பிநின்று முதுகைக்காட்டிகொண்டே ஆக்கூ கோபமாக கேட்டான்.
ஆக்கூ நன்னனை விட வயதில் பெரியவன் தான். ஆனாலும் அவன் நன்னனை மரியாதை குறைவாக பேசுவதோ அதட்டுவதோ இல்லை. உண்மையாகவே சினமோ எரிச்சலோ மிகுந்தால் மட்டுமே இப்படி வாடா போடா என அழைப்பான். ஆனால் நன்னன் ஆக்கூவிடம் மிகுந்த உரிமையோடு 'வாடா போடா' என்றே பேசுவான்!
குகையின் சுவரில் மும்முரமாக எதையோ சித்திரமாக வரைந்துகொண்டிருந்தான் ஆக்கூ. அவன் ஓவியகலையின் மகத்தான அடிமை. அந்த குகை முழுவதிலும் கை வைக்கவே இடமில்லாத வாறு ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. எல்லாமேவும் ஆக்கூ வரைந்தது இல்லை..! பன்னெடுங்காலமாக மனிதகுல மூதாதையர் யார்யாரோ வரைந்திருந்த சில காட்சிகளும் கோடுகளும் கிறுக்கல்களும் அதில் இருந்தன. எனினும் அங்கிருக்கும் பெரும்பாலான சித்திரங்கள் ஆக்கூவால் படைக்கப்பட்டவையே! அவ்வாறு வரைந்துகொண்டிருக்கும் போதுதான் நன்னன் வேண்டுமென்றே தீயை மங்கச்செய்வதும் பிறகு எரியவிடுவதுமாய் செய்துகொண்டிருந்தான். இது ஆக்கூவால் கூர்ந்து பார்த்து வரையமுடியாமல் இடையூறுசெய்தது.
"நன்னா! நீ இன்னமும் தடையாகவே இருக்கிறாய்..! முதலில் அந்த தீச்சட்டியை விட்டு நகர்ந்து போ.. அதன் அருகில் நீ இருப்பதால் உனது நிழல் பூதாகரமாக உருவெடுத்து இங்கு வெளிச்சம்வரவிடாமல் தடுக்கிறது..!"
"கோபம் கொள்ளாதே ஆக்கூ..! உனக்கு உதவிதான் செய்கிறேன்... சருகுச்சுருள் குறைவாகவே இருக்கிறது... ஒவ்வொன்றாக சிக்கனமாக போட்டால்தானே நீ வரைந்துமுடிக்கும்வரை தீயை நீடித்து வைக்க இயலும். ஒரேயடியாக காலிசெய்துவிட சொல்கிறாயா..என்ன? "
வரைந்துகொண்டிருந்த ஆக்கூ சற்று நிறுத்தி , திரும்பி, நன்னனை பார்த்து,, (கேலியாக கும்பிட்டபடி..)
"ஓ..! அப்படியா செய்தி..? நன்னன் பெருமானே! தங்கள் உதவிக்கு ஒரு பெரிய வந்தனம்..! நெருப்பு தீருமோ என நீங்கள் அஞ்ச தேவையில்லை! நான் நேற்றே சென்னியிடம் சொல்லிவிட்டேன். அவன் ஏராளமான எண்ணெய்விதைகளோடு விரைவில் வந்துவிடுவான். ஓரிருவிதைகளை தீயில்போட்டாலே சிலநாழிகை நேரம் தீ அணையாமல் எரியும்! ஆதலால் நீங்கள் சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் செய்யாமல் தாராளமாக சருகை அள்ளி போடுங்கள்.. அதற்கு முன்பாக சற்று தூரமாக தள்ளி அமருங்கள்! என்ன.. செய்வீர்கள்தானே?..."
"ஓகோ..! எனக்குதெரியாமல் கூட்டுச்சதி செய்திருக்கிறாயா...? முன்பே சொல்லியிருந்தால் நான் அருவியையாவது வேடிக்கை பார்த்திருப்பேன்.. இந்த புகையோடு திண்டாட எனக்கு வேண்டலா என்ன??"
என்று சொல்லிவிட்டு கடுகடுப்போடு...நன்னன், இருந்த இலைசருகுகளை மொத்தமாக அள்ளிப்போட்டான்.. மளமளவென தீ பிரமாதமாக எரிந்தது.
அப்போதுதான் எதேச்சையாக ஆக்கூ வரைந்த புது சித்திரங்களை உற்று கவனித்தான் நன்னன். அவன்விழி ஏமாற்றம் ஆதங்கம் அழுகாறு எல்லாம் கொண்டதாக ஆவேசமாய் ஆக்கூவை சுட்டது!
"அடேய் தடிப்பயலே..! துரோகி..! நயவஞ்சகா..! ...."
திடீரென நன்னனின் வசைபாடலை எதிர்பாராத ஆக்கூ குழப்பமோடு ,, "ஏய்! நன்னா நிறுத்து.. உனக்கு என்னவாயிற்று?"
"என்னவா..? இதோ இது என்ன..?"
(பாறைசுவரில் இருந்த ஓவியத்தை சுட்டிக்காட்டினான் நன்னன். அதில் ஆக்கூ வரைந்த பதுமனின் பிரமாதமான சித்திரம் தீ ஜூவாலையால் பிரகாசமாக ஒளிர்ந்தது! )
ஆக்கூ வும் நல்லவெளிச்சத்தில் தான் வரைந்த ஓவியம் மெருகேறி காட்சிதருவதை கண்டு பெருமிதமாக....
"ஆஹா..! எப்படி நல்லா வந்துருக்குல நன்னா..?" என்றான் ஆவலோடு ஆக்கூ
"ஏன்டா பாவி! நினைவு தெரிந்த நாளாக உன்னோடு நட்பு பாராட்டி திரியும் என் உருவத்தை ஒருநாளேனும் இப்படி வரைந்து காட்டியிருக்கிறாயா? நேற்று ஒருநாள் பார்த்த பதுமனை வரைந்து வைத்திருக்கிறாயே..!
அடேய் மூர்க்கனே! 'நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீருக்குள் பாசிபோல் வேர்கொள்ளாதே' என்கிற முதுமொழியை இன்று நீ நிரூபித்துவிட்டாய்!. அவ்வளவுதான் இனி உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை!"
நன்னன் கூறியதை கேட்டு ஆக்கூ சிரிக்கத்தொடங்கிவிட்டான்.
"ஹா..ஹா.. நன்னா நீ பொறாமைபிடித்தவன் என்பதறிவேன். ஆனால் இத்தனை தீவிரமாய் எதிர்பார்க்கவில்லை.
மேலும் நான் அழகானதும் அரிதானதும் அதிசயமானதுமான உருவங்களையே சித்திரமாக்க விரும்புவேன்.. ஒன்றுசெய் நீயும் பதுமனை போல உடலெல்லாம் வண்ணம்பூசி வரிகோடுகள் வரைந்து வா..! உன்னையும் இதேகுகையில் சித்திரமாக்குகிறேன்..!"
"புழுகாதே பூதமே! நிறுத்து.. உன் கொள்கையை.. நீ வரைந்திருப்பவைகளில் எது அரிதானதாது? எது அதிசயமானது?
இங்கேபார்..( ஓரிடத்தில் வண்ணக்குழம்பில் இடதுகையை நனைத்து எடுத்து சுவர்முழுவதும் நூற்றுகணக்கில் உள்ளங்கையின் ஐந்துவிரல்களைமட்டும் பதித்துவைத்திருந்தான் ஆக்கூ..)
இது என்ன கண்றாவி..? வெறுமனே கைகளை கறை கறையாக பதித்திருக்கிறாய்.. அவலட்சணமாக இருக்கிறது.
அதோ அங்கே பார்...( அம்பு எய்து மான்களை வேட்டையாடும் காட்சி)
வெளிமான் களை வரைகிறேன் பேர்வழி என்று வெட்டுக்கிளி பறப்பதுபோல எதையோ வரைந்துள்ளாய்... இதெலாம் தான் அரியவையோ...?"
"நிறுத்து நன்னா ! பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. எவரையும் பரிகாசம் செய்யாதே!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருபொருள் அரிதானதாக தோன்றும்.. எனது கண்ணோட்டமும் உன்னுடையதும் ஒத்திருக்கவேண்டிய அவசியமில்லை..! நீ காண்பித்தாயே ..,
அவையாவும் ஆரம்பகாலத்தில் நான் பழகிபயிற்சி செய்தபோது வரைந்தவை.. எதையும் ஓரளவு உள்ளதை உள்ளபடிவரைய இப்போது என்னால் இயலும்.. "
என விளக்கமளித்தான் ஆக்கூ.
"அப்படியானால் என் உருவையும் பதுமன் பக்கத்தில் வரைந்து காட்டு.!" சொல்லிவிட்டு புருவத்தை
உயர்த்தி காட்டினான் நன்னன்.
"முடியாது..! முடியவே முடியாது!"
"அப்படியானால் நீ ஒன்றும் சிறந்த ஓவியனில்லை வெறும் மூர்க்கன் என்பதை ஒப்புக்கொள்..!"
"ப்பூ..! உன்னை வரைந்துதான் நான் ஓவியன் என்று நிரூபிக்கவேண்டிவந்தால் அப்படிஒரு கௌரவம் எனக்கு தேவையே இல்லை!"
ஆக்கூ மிகுந்த வெறுப்பில் கூறினான்.
(திடீரென வெளிச்சம் மங்கியது.. தீச்சட்டி நெருப்பின்றி அணைய ஆயத்தமானது..)
"பார்த்துக்கொண்டே நிற்கிறாயே..! அணைவதற்கு முன்பு எதையாவது அதில் போடு!" என்று சத்தமிட்டான் ஆக்கூ..
"மடையனே! சற்றுமுன்புதானே தாராளமாக அள்ளிபோட சொன்னாய்.. நான் எச்சரித்தபோதும்,, சென்னியிடம் சொல்லியிருக்கேன்.. பன்னியிடம் சொல்லியிருக்கேன்.. என்றாய்! இப்போது ஏன் பதறுகிறாய்?"
"நன்னா என்னை வீணே சினமூட்டாதே..!"
" என்னை நொந்து பயனில்லை ஆக்கூ..! செல்.. சென்று, உன் சொல்கேட்டு நடவாத சென்னியை போய் நொந்துகொள்..!"
"யாரும் யாரையும் நொந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை நன்னா..! நான் வந்துவிட்டேன்..!"
சட்டென வந்த கணீர் குரல் ஆக்கூவையும் நன்னனையும் திடுக்கிட செய்தது.
அங்கே சென்னியும் நந்துவும் பிரவேசித்தனர்..!
நன்னன் சற்றே தலைகுனிந்தான்.
சென்னி தன் கலசத்தில் வைத்திருந்த விதைகளில் ஒன்றிரண்டை எடுத்து நன்றாக கசக்கிவிட்டு தீச்சட்டியில் போட்டான்.. நுரைநுரையாக அவ்விதை உருகி பொங்கி வெடித்தது..பிறகு தீ நன்றாக சுடர்விட்டு ஒளிர்ந்தது. குகை மீண்டும் ஒளிமயமானது!
சிறிதுநேர அமைதிக்குபிறகு..
நந்துவிடமிருந்த மலர்களையும் இலைகளையும் வாங்கிய சென்னி ஆக்கூவிடம் சென்று, "இந்தா ஆக்கூ..! நீ கேட்ட வண்ணம் தரும் மலர்கள். வா வண்ணசாயம் தயாரிப்போம்."
"இல்லை சென்னி ! எனக்கு சித்தம் சரியில்லை. இன்று என்னால் மேற்கொண்டு வரைய இயலாது..! விடு இன்னொரு நாள் பார்க்கலாம்"
என்றபடி ஆக்கூ நேராக குகையின் அகண்ட வாயிலின் முன்புறமாக அருவி விழுகிறதை போய் அமைதியாக பார்த்தான்.
சென்னியும் நந்துவும் தாங்களே வண்ணசாயம் தயாரிக்கும் பணியில் இறங்கினர். ஏற்கனவே அதற்கான அம்மிக்கல், குடக்கல் எல்லாம் அக்குகையின் மூலையில் வைக்கப்பட்டிருந்தன.
நன்னன் மெதுவாக வந்து நந்துவிடம் வந்து பேச்சுகொடுத்தான்.. "எங்கே நந்து உன் கிளியை காணும்..?"
சென்னியும் அதை இப்போதுதான் கவனித்தான்.. "அட குகைக்குள் நுழையும்வரையில் அவன்தோளில் இருந்ததே" என மனதில் நினைத்தான்.
நந்து கைகளை விரித்து பறப்பதுபோல சைகை காட்டினான்.
"ஓ.. பறந்து போயிட்டுதா..? ஆமாம் இங்குதான் நிறைய வௌவால்கள் இருக்கின்றனவே.. அவை கிளம்பிவிட்டால் அதற்கு சங்கடமாய் போய்விடும். சரி விடு!வெளியே போனதும் திரும்பி வந்துரும்.
ஆமாம் நந்து .., நேற்று நாம் பேசியதை பற்றி என்ன முடிவு செய்துள்ளாய்? நாளை நீ என்னுடன் வருகிறாயா?"
"வருகிறேன்" என்பதாக தலையசைத்தான் நந்து.
"என்ன நிஜமாகவா உன் அம்மா எதுவும் சொல்லவில்லையா? அனுமதித்துவிட்டாரா?"
நந்து ஒருகண்ணை மட்டும் சிமிட்டி. தலையை ஒருபுறமாக தூக்கி அசைத்தான். இதன் பொருள்..
'அவர்களிடம் சொல்லாமல் தெரியாமல் போய்வரலாம்' என்பதாகும்.
இதை நன்னன் புரிந்து கொண்டபோதிலும் அது சரியா என குழம்பி அமைதியில் உறைந்தான்.
பிறகு சென்னியை நோக்கி, "ஏன் சென்னி நீ என்ன நினைக்கிறாய்..?"
"நான் என்ன நினைக்கிறேனா?
இன்னும் நான்கு தினங்களில் விழா தொடங்கிடும்.. மூன்றாவதுநாளிலேயே வணிகர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள். நாம் இன்னும் இரண்டு கற்களை சேகரித்தாலே போதும். நேற்று ஒன்று கிடைத்துவிட்டது. நீயும் வந்தால் இன்றே கூட மீதம் இரண்டு கற்களையும் சீக்கிரம் தேடி எடுத்துவிடலாம்.. அதை விடுத்து நீங்கள் வேதியர் காட்டுக்கும் பக்கத்து பெருமணல் தீவுக்கும் போவது எனக்கு சரியாகபடவில்லை..! அவ்வளவுதான்."
"உனக்கு எப்படி புரியவைப்பது என தெரியவில்லை சென்னி..! வேதியர் சொன்னபடி பார்த்தால் நம் ஊரில் நடப்பது ஒரு விழாவே அல்ல..! பெருமணல் தீவில் நிஜ நாவாயே வந்து இறங்குமாம். அங்கு வணிகர்களின் கூட்டமும் அவர்களின் பொருட்களும் பாய்மரங்களிலிருந்து நேரடியாக இறக்குவதை காணலாம். நாம் என்ன வாங்குவது என்பதை அங்கு குவிக்கப்படும் கோடிக்கணக்கான பொருட்களிலிருந்து கண்ணால் பார்த்தபிறகு கூட முடிவுசெய்துகொள்ளலாம்...!
அநேகமாக அதற்கு விலையாக அதிக கற்கள் தரவேண்டியிராது!
கடல்கடந்த மனிதர்களை நீ இதற்கு முன் பார்த்திருக்கிறாயா..? அவர்களின் ஆடைகளை பற்றி கேள்விபட்டிருக்கிறாயா?
ஒருவாரகாலம் விழாநடக்குமாம் முழுநிலா எழுகிற நாள்தொட்டு மூன்றுதினங்கள் நாவாய் அங்கே நிற்குமெனவும் முன்பு கேள்விபட்டிருக்கேன்... வேதியர் சொன்னதிலிருந்து அது உறுதியாகிவிட்டது. நாம் இப்போது விட்டால் இன்னும் ஓராண்டு காலம் இதை எண்ணி ஏங்க வேண்டி இருக்கும்..!"
"நீ சொல்வதை கேட்க இனிப்பாகதான் இருக்கு நன்னா! அப்படியே செய்தாலும் எதற்காக நாளை மறுபடி வேதியர்குடிலுக்கு போகணும்.?"
"மூன்று காரணம் இருக்கிறது.
முதலாவது அவரிடம் அந்த கருப்புக்கல்லின் மதிப்பைபற்றி அறியணும். தெரிந்தால் நாம் மேற்கொண்டு இரண்டு சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டாவது நந்துவை அழைத்துவருவதாக வேதியருக்கு மானசீகமாக வாக்களித்திருக்கிறேன்.
மூன்றாவது நாம் பெருமணல் தீவிற்கு நால்வராக அல்ல ஐவராக செல்லவிருக்கிறோம்!"
"ஐவராக...வா..! ஓ அந்த பொடியன் பதுமனை சொல்கிறாயா? அவனை நான் இன்னும் பார்க்ககூட இல்லை.. அவனோடு பயணமா? அவன் எதற்கு?"
" அவன் விஷயவாதி! நம்மைவிட அதிகம் அறிந்தவன். மேலும் வடக்கத்தியான்..! நீ அவனை பார்க்கணுமா...? இதோ பின்னால் பார்...!"
(ஆக்கூ வரைந்திருந்த பதுமனின் படத்தை காட்டினான் நன்னன். )
"ஓ..! இவன்தான் அந்த பதுமனா..?
ஏன் நன்னா..! பார்க்க புலிபோல இருக்கிறான்.. இந்த பன்னி யிடம் பேசுவானா..? "
சென்னி இவ்விதம் சொன்னது நன்னனுக்கு முதலில் புரியவில்லை.. பிறகுதான் ஆக்கூவிடம் விவாதம்செய்தபோது தான் சென்னியை பன்னி என்றது நினைவுக்குவந்தது. அதை குத்திக்காட்டி சென்னி பேசுவதை உணர்ந்த நன்னன் வருந்தினான்.
"ஆ..! ஐயோ என்னை மன்னித்துவிடு சென்னி.. நான் வேண்டுமென அப்படிகூறவில்லை ! ஆக்கூவிடம் ஏட்டிக்குபோட்டியாக ஏதோ உளறிவிட்டேன். நிச்சயமாக உன் மீது எவ்வித தவறான அபிப்ராயமும் எனக்கில்லை..! தயவுகூர்ந்து அதை மறந்துவிடு.!"
சென்னி சிரித்தவாறே.. ,"இதே போல நான் ஆக்கூவை வசைபாடி இருந்தால் அவன் என்னை இரண்டாக கூறுபோட்டிருப்பான். நீ என்பதால் மனம்உடைந்து போய் உக்கார்ந்திருக்கான் பாரு.. போ முதலில் அவனை தேற்று..!"
சித்திரம் தீட்டியதன் பலனாக கைகளில் ஒட்டியிருந்த கரி மற்றும் வண்ணசாந்துகளை குளிர்ந்த அருவி நீரில் கழுவிக்கொண்டிருந்தான் ஆக்கூ.
எனினும் முகம் அனலென இருந்தது..!
"ஐயோ.. கிராதகன் கடுங்கோபத்தில் அல்லவா இருக்கிறான். எதாவது செய்து முதலில் சாந்தபடுத்த வேண்டுமே..!"என மனதில் சிந்தித்தான் நன்னன்.
நன்னன் மெதுவாக சென்று ஆக்கூவின் முதுகில் கைவைத்து , "ஆக்கூ நீ என்னை வரையாவிடில் என்ன நானே என்னை வரைந்துகொள்கிறேன் பார்..! அதுவும் நீ வண்ணத்துப்பூச்சியை வரைய எண்ணியமுறைப்படி..!"
இவ்விதம் கூறியபடி ஓடிச்சென்று நந்துவும் சென்னியும் அரைத்துசெய்த வண்ணசாயத்தை எடுத்து உடம்பெல்லாம் கண்டமேனிக்கு வழிய வழிய பூசிக்கொண்டான் நன்னன்.
ஆக்கூ திரும்பி ஓரக்கண்ணால் நோக்கி இவன் செய்யும் கிறுக்கு தனத்தை எண்ணி திகைத்தான்..
பிறகு நன்னன் மிக வேகமாக ஓடிச்சென்று பாறைசுவரில் வேகமாக 'டம்' என மோதி பல்லியை போல ஒட்டிக்கொண்டான். அடுத்தநொடி அப்படியே சரிந்து கீழே விழுந்தான்.
நந்து சென்னி ஆக்கூ மூவருமே அதிர்ந்து ஓடிப்போய் பார்த்தனர். அவனை குப்புற கிடத்திபோட்டனர்.
நல்லவேளை பலத்த அடி எதுவுமில்லை ஆனால் தலைஅதிர்ந்து போனதில் ஏதோ உளறினான்.. "அருமை நண்பா ஆக்கூ.. உன் தோழனை இனி இந்த பாறையில் ஓவியமாக பார்த்து கண்ணீர்விடு.. நான் நிறைவேறாத பல ஆசைகளோடு இதோ சாகிறேன்..!" என்றவன் மயங்கிவிட்டான்.
நந்து வேகமாகசென்று அருவிநீரை கொண்டுவந்து நன்னன் முகத்தில் தெளித்தான்..
மெல்ல மெல்ல சுயநினைவடைந்த நன்னன்.. ஆக்கூவை நோக்கினான்.
"நன்னா !இனியொருமுறை இந்த கிறுக்குதனத்தை செய்தால் நிஜமாகவே உன்னை நான் இப்படிசெய்துவிடுவேன் நினைவில் கொள்!"
என ஆக்கூ உரிமையோடு மிரட்டவே.. எல்லாரும் புன்முறுவல்பூத்தனர்.
பிறகு நன்னன் கேட்டான், " என் ஓவியம் எப்படி ஆக்கூ..?"
"உன் சித்திரம் சற்றே விசித்திரம்தான்...! இதை பார்த்ததும் எனக்கு வேறுசில சின்னங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.."
என்ற ஆக்கூ மறுபடியும் போய் சில எழுத்துகளை அதில் எழுதினான்.
என்ன செய்கிறாய் ஆக்கூ என சென்னி கேட்க..
"வேதியர் குடிலில் இதுபோல பல முத்திரை சின்னங்கள் இருந்தன. இவற்றை குறியீடுகள் என்று அவர் சொன்னார். ஞாபகசக்தியால் இப்போது என் நினைவில் இருக்கிறது. நாளடைவில் அது மறந்துபோக கூடும்..! ஆனால் இங்கு வரைந்துவைத்தால் எப்போதும் இது இருக்குமல்லவா?"
"நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கும் அங்கு வர ஆவல் எழுகிறது..!"
"இல்லை சென்னி! இல்லை! திட்டப்படி நீ முதலில் குடியிருப்புக்கு செல்.. பயணத்துக்கு தேவையான பொருள்களை இங்கு கொண்டுவந்துவிடு. மேலும் நீ உனது குடிலில் மறைத்துவைத்துள்ள இதர கற்களையும் பத்திரமாக இங்கு எடுத்து வா..! நாளை முழுநாளும் நீ இங்கே காவல் காக்க வேண்டும்..!"
"இங்கே கொண்டு வரவா? ஏன் அவசரம்.. இரவு இவ்விடம் வைப்பது பாதுகாப்பும் இல்லையே..? நாளை நீங்கள் திரும்பி வந்தபிறகு எடுத்தால் என்ன?"
"ம்ஹூம் ! அதுசரிபடாது .. குடிவாசிகளுக்கு நேராக அடிக்கடி எடுத்துவைப்பது சந்தேகத்தை கிளப்பிவிடும்... மேலும் நாளை நாம் பயணம் புறப்படுவதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பார்கள்..! அப்போது நீ மறைவாக எடுத்துவருவது கடினம்.. அதான் இன்றே கொண்டுவர சொல்கிறேன்..! பாதுகாப்பு பற்றி கவலை வேணாம் சென்னி! நானும் ஆக்கூவும் இரவு முழுக்க இங்குதான் இருப்போம்.. நாளை காலை நீ வந்து எங்களை விடுவித்தால் போதும்..!"
"பலே நன்னா பலே..! திட்டம் தீட்டுவதில் நீ அதீத திறமைசாலி!"
"திட்டம் போடுவது ஒரு பெரிய விஷயமல்ல சென்னி.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதை கையாள்வதில்தான் திறமை இருக்கிறது..! என்னை கேட்டால் அதில் நீதான் கைதேர்ந்தவன்..!
அதனால் தான் உன்னை நம்பி தனியாகவே போய் வர சொல்கிறோம்..!"
"சென்னியிடம் சொன்னால்.. அவை சிந்தாமல் நிகழும்! ஜெயத்தோடு திரும்பி வருகிறேன்....! புறப்படட்டுமா..நன்னா?"
"ஆகட்டும் சென்னி.. எதற்கும் எச்சரிக்கையாக இரு..!"
ஆக்கூ.. முத்திரைகளை வரைந்துவிட்டு எதுவும் பேசாமல் சென்னி யின் முதுகில் திடமாக தட்டிக்கொடுத்தான்.
சென்னி ஈட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்..
போகும்முன் , "ஏய் நந்து.. நான் போய்வருகிறேன்.. அதற்குள் இந்த இலைகளின் சாயத்தையும் வடித்துவை...!" என்றான்.
பதிலுக்கு நந்து தலையசைத்தான்.
"நீங்கள் இருவரும் ஆற்றங்கரை பக்கம் போனால்.. சண்டைபோடுவதை விட்டு கற்களை தேடுகிற வழியை பாருங்கள்...!"என்று அறிவுறுத்தினான்..
"சரிங்க ,, கோமுடி கருங்கோட்சென்னி..! தங்களின் உத்தரவு படி நடக்கிறோம்..!" என்று ஆக்கூ கைகட்டி குனிந்து கேலிசெய்தான்.
( உண்மையில் சென்னி யின் முழுப்பெயரும் அதுதான்..!)
சென்னி நாணி கோணி வேகமாக வெளியேறினான்..
குகையை விட்டு கீழிறங்கி வெளியே வந்து தென்மேற்கில் நடைபோட்டான்..
( அவன் போவதை குகையின் அருவிவிழுகிற வாயில்வழியே நீர்த்தாரைக்கு பின்னால் நின்று நன்னனும் ஆக்கூவும் பார்த்தனர்.
சிறிதுநேரம் சென்று ஆக்கூ நன்னனை வெளியே சென்றுவரலாமே என அழைத்தான்... நன்னன் நந்துவையும் கூப்பிட்டான்.
முதலில் நந்து வர மறுத்தாலும் பிறகு விரைவில் திரும்பிடலாம் எனும் நன்னனது உறுதிமொழியின் பேரில் ஒப்புகொண்டு அவர்களோடு அவனும் குகையை விட்டு இறங்கி வந்தான்.. மூவரும் குளக்கரை வரை வந்தனர்.. அங்கிருந்து அந்த நதிபுறப்படும் திசையிலேயே மூவருமாய் காலாற பேசிக்கொண்டே நடக்கலாயினர்...)
முல்லையும் மகிழமும் மணந்த அந்த அத்துவான அடர்ந்த கானகத்தில் ஏந்திய வேலுடன் வீரநடையும் துள்ளல் ஓட்டமுமாய் கானம் இசைத்தபடி அதேநேரம் வீண்சலனமின்றி சென்னி புகையென புகுந்து சென்றுகொண்டிருந்தான்..!
போகும்வழியில் சென்னி சட்டென தன்னையாரோ பின்தொடர்வதுபோல உணர்ந்து திரும்பிபார்த்தான். கீழே யாருமில்லை. மேலே மரக்கிளைகளில் ஒரு குரங்கு இருப்பதை கண்டான்.
"ச்சீ ! இந்த அற்ப வானரம் என்னை பயமுறுத்திவிட்டதே !" என நாணம்கொண்டு மீண்டும் துள்ளல்நடை போட்டான் கையில் ஈட்டியுடன்.
சென்னியை அந்த வானரம் மீண்டும் பின்தொடர்ந்தது..!
சற்று தூரம் தள்ளி...,
அந்த வானரத்தை தலைப்பாகை அணிந்த மனிதன் சாதூர்யமாக பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்...!!
ஆனால் அம்மனிதனை அவனறியாவண்ணம் நாம்நன்கறிந்த ஒரு பட்சி..! அதான் அந்த பஞ்சவர்ணகிளி பின்தொடர்ந்தது..!!!
-சூரியராஜ்
வேடிக்கையும் மர்மமும் இந்த அத்தியாயம்
பதிலளிநீக்கு