பழமொழி பரிகாசம்
முன்றுறை அரையனார் என்கிற 'ராஜகவி' ஒருவர்.., இன்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு "பழமொழி நானூறு" என்கிற நூலை இயற்றினார்..!
அந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றென தமிழன்பர்களால் இன்றளவும் போற்றி படிக்கப்படுகிறது...!
உதாரணமாக,,
"பாம்பின் கால் பாம்பறியும்"
"தவளை தன் வாயால் கெடும்"
"தனிமரம் தோப்பு ஆகாது"
"நாய்வாலை நிமிர்த்த முடியாது"
"தூங்குகிற புலியை தட்டிஎழுப்பாதே.."
"ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.."
"முள்ளை முள்ளால் எடுத்தல்"
"கோழி மிதித்து குஞ்சு முடம் ஆவாது..!"
"நிலவை பார்த்து நாய் குரைத்ததாம்"
ஆகியன இன்றளவும் வழக்கில் உள்ளது..
கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்..,, ஈராயிரம் ஆண்டுகளுக்குமுந்தி.. ஒருவர் தன் மொழியில் காலங்காலமாய் தம்முன்னோர் வழங்கிய சொற்றொடரை 'பழமொழி' என்று குறிப்பிட்டு... அதற்கென ஒரு தனிநூலினையே இயற்ற முனைகிறார் என்றால்.. அது எத்தனை ஊழிக்காலங்களை கடந்து வந்த பழம்பெருமை கொண்ட மொழியாக இருந்திருக்கும்...?
ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னரே அது பழமொழி என்றால் இன்றைக்கு அது எத்தனை புராதனமானது...? அவர்கூட 400 வெண்பா-க்களில் கூறி அதோடு விட்டுட்டார். அதில் கூறாத எத்தனையோ பழமொழிகள் மக்களிடையே காலம்கடந்தும் உலாவருகின்றன.
இப்படி ஒரு நூல் இயற்றி 1200 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் ஆங்கிலம் என்ற ஒரு மொழியே உருவெடுத்திருக்கிறது...அவர்களும் கூட தங்கள் பழமொழிகளை proverb என்பதாக வகைபடுத்துகிறார்கள்..
ஆனால்...
உண்மையில் பழமொழிகள் எல்லாம் பழமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!
மூதுரை /முதுமொழி ,பொன்மொழி, புதுமொழி, தத்துவம், பஞ்ச் கருத்துகள் போன்றவை எந்த நோக்கில் சொல்லப்படுகிறதோ அதே நோக்கத்தில் தான் பழமொழியும் கூறப்படுகின்றன.
வாழ்விற்கு தேவையான ஆழமான அறிவுரைகளை ரத்தின சுருக்கமாக,, சொன்னவுடன் புரிந்துகொள்கிற உவமைகளை கொண்டு கட்டமைக்கபட்டவையாக பழமொழித்தொடர்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
சர்வ நிச்சயமாக அவை அனைத்துமே அர்த்தம் பொதிந்தவை...!
இவை ஏனைய இலக்கியங்களை போலன்றி வெகுஜன மக்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் வாய்மொழியாகவே பரம்பரை பரம்பரையாக அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படுவது இதன் தனிச்சிறப்பு..!
தமிழ் மொழி பேசுகிற தொனி ஊருக்குஊர் வட்டாரத்துக்கு வட்டாரம் வரம்போடு மாறுவதைபோல... ஆங்காங்கு வழங்கும் பழமொழிகளிலும் எல்லை வரம்புகள் இருந்தன..
ஆனால் இந்த இடைக்கால பழமொழிகள் ஊடகவெளிச்சம் பட்டது முதல்.... இலக்கிய நூல்கள், புதினங்கள், திரைப்பட வசனங்கள் என பரிணாம வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி கண்டதோடு வரம்பை தகர்த்து உலகளாவிய தமிழர்களின் உள்ளங்களையும் சென்றடைந்து கொள்ளைகொண்டுவிட்டன.
ஆனால் சமீப காலத்தில் தமிழ்வளர்த்த சான்றோர்களாலேயே சில அனர்த்தங்களும் விளையத்தொடங்கின..!
மேடைகளில் ஊர்ஊராக சென்று தனித்தனியே சொன்னவை எல்லாம்
ஊடகங்களால் ஒரேயடியாக ஒளிபரப்ப பட்டதினால் அரைத்தமாவையே ஒவ்வொரு மேடையிலும் அரைக்க தொடங்கியது அம்பலமாயிற்று..!
கேட்டதையே திரும்ப கேட்டு புளிச்சுபோனதால் மக்களுக்கு கேட்கும் ஆர்வம் குறைந்தது..
நம் ஜனங்கங்களுக்கு எதாவது புதிதுபுதிதாக காட்டிக்கொண்டோ பேசிக்கொண்டோ இருக்கனும்...
திருப்புமுனைகளையும் / மர்ம புதிர்களையும் அதிகம் நாட தொடங்கிவிட்டார்கள்..
அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அந்த சரக்கு நல்லதோ கெட்டதோ உண்மையோ பொய்யோ வாரி வழங்கிட இங்கு வள்ளல்களும் பலர் வந்துவிட்டார்கள்...
அப்படியாக சில மேதாவிகள் பழமொழிகளுக்கு புது விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று அதை அதன் தோற்றுவாயையே திரிந்துபோக செய்கிறார்கள்..
அதை ஏதோ புதுமையாகவும் மர்மம்விலக்கி எதையோ கண்டுபிடித்ததாகவும் பெரிதாக சாதித்ததை போலவும் ஞானோபதேசம் செய்வதற்கு பல பிரபல மேடை பேச்சாளர்களும் கிளம்பிவிட்டது வருத்தமளிக்கிறது..
1) "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்..?"
இது சரியாகவே உள்ளது மக்களும் சரியான சமயத்தில்தான் இதை உபயோகிக்கிறார்கள்...
கழுதைக்கும் கற்பூரத்துக்கும் என்ன தொடர்பு? தொடர்பே இல்லைங்கிறதுதான் இதன் உள்ளர்த்தம்..
அறிவிலிகளிடம்/அற்பர்களிடம் மதிப்புள்ளதை போய் நீட்டாதே.. அது வீண்.
என்பது இதன் கருத்து..
இதே பழமொழி ஆங்கிலத்திலும் (Bible) உண்டு..
(cast not pearls before swine)
பன்றிக்கு முன் முத்துகளை கொட்டாதே!
அது தெரியாம.. இதனை 'கழு தேய்க்க தெரியுமாம் கற்பூர வாசம்' என்பதாக பிரித்து புதுவிதமான விளக்கம் சொல்லுகிறவரை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது..
கழு என்கிற ஏதோ மூலிகைசெடிய தேச்சா கற்பூரவாசம் வருமாம்..
வரட்டுமே.. இதில் என்ன கருத்துஇருக்கிறது..? சாதாரணமான விஷயம் எப்படி பழமொழி ஆகும்? சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதுபோல் இதுவும் இயல்பே. இதை போய் பழமொழினு வெச்சுக்கலாமா?
2)"ஊரான் பிள்ளைய ஊட்டி வளத்தா தன் புள்ள தன்னால வளரும்!"
பிறர்உயர்வுக்கு பாடுபடு உன்னை இறைவன் உயர்த்துவான் என்பது இதன் சாரம்சம்..
ஆனால்
இதன் சிறப்பையே சீர்குலைக்கும் விதமாக ஊரான் புள்ளை என்பது மனைவி என்றும் அவளை ஊட்டி வளத்தா அவள் வயிற்றில் உள்ள உன் புள்ள நல்லா வளரும் னு புது அர்த்தம் சொல்கிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தனமாக இருக்கிறது.. எங்காவது இதில் சிறப்பு இருக்கிறதா..என்ன?
இப்படியா நம் முன்னோர் சொல்லிருப்பார்கள்..? வெட்க கேடு.
3) "ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்"
எதிர்மறை பொருள் தொனித்தாலும் அது சொல்வது அதைத்தான்..!
trial & error method என்கிற முயன்று தவறி கற்றல் என்பது இதன் நுட்பமான உள்ளர்த்தம்..
'கீழ விழாம மிதிவண்டி ஓட்ட கற்க முடியாது' என்றுகூட சொல்லி கேட்டுருப்பீர்கள்..
எடிசன் ஆயிரம் முறை தோற்றுதான் மின்விளக்கை கண்டறிந்தார்...!
மருத்துவமும் அப்படித்தான் வளர்ந்திருக்கும்..
ஞானமும் அநுபவமும் ஒருவன் தன்வாழ்நாளில் சந்திக்கிற மற்றவர்களின் மரணங்களிலிருந்து அதிகம் உதிக்கிறது.
நம் பாட்டன்களும் பாட்டிகளும் சொல்லும் வைத்தியங்கள் யாரோ யாருக்கோ சொன்னதை கேட்டவை அல்ல தானே அநுபவித்து மீண்டுவந்த நோய்சிகிச்சை பற்றியவை..
அதை விடுத்து
'ஆயிரம் "வேரை" கண்டவன் அரைவைத்தியன்'
என்று திருத்துகிறார்களாம்..
அப்போ ஈராயிரம் வேர்களை கண்டவன் முழுவைத்தியனா..?
கொரனாவுக்கு மருந்து குடுப்பானா..?
சிறுபிள்ளை தனமாக தோன்றவில்லை..?
4)"நாயை கண்டால் கல்லை காணும்..
கல்லை கண்டால் நாயை காணும்.."
சிலநேரங்களில் நமக்கு தேவைபடுகிற இரு பொருட்களை ஒரே நேரத்தில் கிட்டாது. ஒன்று இருக்கும் போது மற்றொன்று இல்லாமல் போகும். அப்போது நொந்துபோய் சொல்வது இப்பழமொழி..
ஆனா இதை..., நாய்வடிவ தத்ரூப சிலையை கண்டால் நிஜ நாயாகவே தெரியும். சிலையா பாத்தா அதிலிருக்கும் நாய்உருவம் தெரியாது என்பதாக பொருள் மாற்றி சொல்கிறார்கள்..
இதுவும் சுவாரஸ்யமான பொருள் தான் ஆயினும்...
கல்லை கண்டால் கடவுள் தெரியாது
கடவுளை கண்டால் கல் தெரியாது!
(தசாவதாரம் பாடல் நினைவுக்கு வருதா?) என்கிற மரியாதையான தனி பழமொழி ஒன்று இருக்கிறது என்பது தெரியாமல் இதை அதனோடு
குழப்பிக்கொள்ளவது அபத்தம் ஆகும்.
5) "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி"
இதோடு இன்னொரு பொன்மொழி
வீட்டை கட்டிப்பார்..! கல்யாணம் பண்ணிப்பார்..!
என்பதையும் கவனியுங்கள்.
இவ்விரண்டையும் செய்ய ஒருவன் முற்படுவது (குறிப்பாக சடங்குளில் ஊறிய இந்தியர்களுக்கு) பத்து கின்னஸ் சாதனையை ஒருநாளில் படைப்பதற்கு சமம்.
இரண்டுமே செலவுமிகுந்தவை..!
பலரை திருப்தி செய்ய முயன்று கடைசியில் எவரையுமே திருப்திபடுத்த முடியாது போகும்..!
எடுத்த நற்பெயர்கள் கலங்கமாகும்.
கடன்பெற வைக்கும்..!
வணங்காமுடியாக வலம் வந்தவனையும் கூனி குறுகிட செய்யும்..!
இருப்பதை மறைத்தும் இல்லாததை நிரூபித்தும் பல காரியம் ஆற்ற வேண்டி வரும்..
இதில் எத்தனை பெரிய அரிச்சந்திரன் ஆயினும், பொய் என்பது ஒரு பொருட்டே இல்லாமல்
புனைய வேண்டி வரும்..!
ஆக
இது சரியான பொருளில்தான் திரைப்படங்களிலும் மக்கள் பேச்சிலும் உலாவுகிறது..
ஆனா இதை திருத்த முயன்றவர்கள்..
'ஆயிரம் முறை போய்சொல்லி கல்யாணத்தை முடி'
.......என்கிறார்கள்.
அதாவது உறவினர்கள் யாரையும் விடுபட்டிடாமல் ஒன்றுக்கு ஆயிரம் தடவை போய் கூப்பிட்டு வந்து கூடி நின்று திருமணத்தை நடதத்தணுமாம்..
அப்போ காதுகுத்துக்கு வராட்டினா பரவாலயா..? வளைகாப்பு சடங்குனா உறவு தேவை இல்லையா??
ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் ஆயிரம் தடவை அலைஞ்சா கல்யாண வேலைய எவன் பார்ப்பான்?
(என்னென்ன கதையெல்லாம் சொல்லி சமாளிக்கிறானுங்கறீங்க..)
இதுமாதிரி இன்னும் நூற்றுகணக்கில் ஒரு புதுமொழி பட்டியலே இணையவெளியில் உலா வருது.. தயவுசெய்து அதை படித்து யாரும் தடம்புரள வேணாம்.
ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கே அதன் பொருளற்ற போக்கு புரிந்துவிடும். அவர்கள் கூறும் அர்த்தங்களை கொண்டு அப்பழமொழிகளை எங்குமே பயன்படுத்த இயலாது...!
"இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து"
என்பார் வள்ளுவர்.. இவர்களை இப்போதே களையாதுவிட்டால் வாழையடி வாழையாக வந்த இந்த பழமொழி மரபு வெறும் பரிகாச பேச்சாகவே மிஞ்சும்.. அதுவும் பயன்பாட்டில் இல்லாது போவும்..
ஆதலால் வலைதளத்தில், WhatsApp ல் உலாவரும் புது உரையாசிரியர்கள் தங்கள் வியாக்யானங்களை நிறுத்துவது சாலவும் நன்று.
(அண்மையில் ஒரு youtube காணொலியில் கனடா நாட்டில் குடியேறிய தமிழர்சந்ததி வந்த இரு பொடியர்களின் பேட்டியை பார்த்தேன்.. அந்த நாட்டின் உணவு பதார்த்தங்களை பற்றி அதில் விளக்கினார்கள்.. முடிவில் 'அவரவர் பிழைக்கப்போன நாட்டின் உணவுகளையும் பானங்களையும் உண்டு பழகிக்கொள்ளணும்,, எதையும் வெறுத்து ஒதுக்க கூடாது' என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு பொடியனில் ஒருவன்
இப்படி சொன்னான்....
"நண்டு திங்கிற தீவுக்கு போயிட்டோம்னா...அங்க நடுத்துண்டு எனக்குத்தான் னு உக்காந்துடணும்...!!!" என்றானே பார்க்கலாம்... அசந்துட்டேன்..!
இத்தனை ஊழிகடந்தும் ஒருமொழி இப்படி நிற்கிறது... எவ்வாறெனின்,,
அது அவர்களின் உயிரிலும் உணர்விலும் உள்ளூறி போனதினால்தான்....!
சூரியராஜ்