சிலேடை சேட்டை
தமிழ் ஒரு விசித்திரமான மொழி. ஏனைய பிற மொழிகள் அடிக்க உடையுமானால், தமிழ் வளையும். பிடிக்க அழுந்துமானால், தமிழ் நழுவும். அதன் இலக்கிய வளம், இலக்கண வடிவமைப்பு அப்படி.
எனது படைப்பிலக்கிய-இலக்கண ஆசிரியர் அருமைதாஸ் அவர்கள், என்னிடமொரு கேள்வி கேட்டார். அதுவொரு 'அறிவினா'
தமிழில் முதலில் தோன்றியது 'இலக்கணமா? இலக்கியமா?'
'சூத்திரம் இருந்தால் தானே கணக்கு போடமுடியும் என்பது என்னுடைய மனநிலை'. கொஞ்சம் கூட யோசிக்காது 'இலக்கணம் தான்' என்றேன்.
'இல்லை, இலக்கியம் தான் முதல்' என்றார் அவர். நான் விளக்கம் கேட்டேன்.
'இலக்கியங்களால் தான் இலக்கணம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு செய்யுளும் இயல்பாகவே எவ்வாறு அமைகிறது என்பதை வகை செய்து, 'எழுத்து சொல் பொருள் யாப்பு அணி' என்று பின்னைய ஆசிரியர்கள் பாடினார்கள். அதனாலே தான் ஒவ்வொரு இலக்கண பாடலிலும் 'எம்மனார் புலவர்' எனும் வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கும்' என்றார் அவர்.
தென்னை வளரும் போதே, 'நான் இளநீர் தருவேன், தேங்காய் தருவேன், கீற்று தருவேன், எண்ணெய் தருவேன்' என்று சொல்வதில்லை. பலகாலம் பழகி பயன்படுத்த தெரிந்த நமக்கு அது இயல்பாகவே புரிந்துவிட்டது. இயற்கையாகவே முன்பே தோன்றிய ஒரு ஆற்றலை அல்லது பொருளை நாம் எப்படி இப்போது புதியவையாக கொண்டு ஆய்வு செய்கிறோமோ அதே போல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய நம் தமிழை ஆய்வு செய்து குறிப்புரை தந்தவர்களே அகத்தியரும் தொல்காப்பியரும் ஆவார்கள்.
அப்படி கண்டுகொண்டால் தமிழின் தொன்மையோடு அகத்தியர், தொல்காப்பியர் காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் அற்பமாகவே தெரிகிறது. ஆனால் நமக்கோ அகத்தியரே ஆச்சரியமாக தெரிகிறார்.
ஓங்கி வளர்ந்த மரத்தின் மூலமான ஒற்றை விதையை தேடுவது தான் தமிழிலக்கணம். இப்போது நீங்கள் அதில் நடக்கத் தொடங்கினால் 'நரைக்கூடி கிழப்பருவம் எய்துகையில்' வெற்றிகரமாக ஓரடி தாண்டிடலாம்.
விண்வெளி போலவே தான் தமிழும் இருப்பதாக நான் காண்கிறேன். அது விரிவடைகிறது. இருபதாம் நூற்றாண்டில் இரண்டு லட்சம் வார்த்தைகளை கொண்ட தமிழ், இன்று பத்து லட்சம் வார்த்தைகளை கொண்டுள்ளது. பத்து லட்சம் தானென்றும் கூறி முடிக்கப்படவில்லை. அது வளர்கிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு பிறகு அரை கோடி வார்த்தைகள் கூட நம்மிடம் இருக்கக் கூடும்.
சமைத்த உணவின் ருசியை கொண்டு எப்படி சமைக்கப்பட்டது என்று ஆய்வது போலத்தான் இலக்கியத்திலிருந்து இலக்கணம் வந்தது. இதே முறையிலே நாம் அந்த சூத்திரத்தை படித்தோமானால் இலக்கணமும் இனிக்கும்.
இலக்கணப் பாடத்தின் புரிதல் வேண்டி, செய்யுளொன்றை எடுத்துக்காட்டாய் போடுவதை காட்டிலும், அன்றாட நிகழ்வுகளிலிருந்து இலக்கணத்தை கற்பித்தால், கற்கும் பிள்ளைக்கு கற்கண்டு போலிருக்கும் என்பது என் பணிவான கருத்து. எடுத்துக்காட்டாக சிலேடையை பார்ப்போம்.
சிலேடை
கலைஞர்
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒருமுறை தன் விரலில் ஒரு புது மோதிரமொன்றை அணிந்திருந்தார். அதை கண்ட சக கழக நண்பர் ஒருவர், 'என்னயா இது?' என்று கேட்க. அதற்கு கலைஞர்,
'இது மந்திரிச்சி போட்ட மோதிரம்' என்றார்.
'கடவுளே இல்லை என்ற கொள்கையை முழங்குபவரா மந்திரிச்சி போட்ட மோதிரத்தை அணிந்துள்ளார்' என்று ஆச்சரியமுடன் கழக நண்பர் கண்களை விரித்து மேலும் விசாரிக்க,
"ஆம்...நான் இப்போது மந்திரியாக உள்ளேன், அப்படி பார்த்தால் என் மனைவி மந்திரிச்சி தானே. என் மனைவி போட்டு விட்ட மோதிரம் இது' என்று சொல்லி சிலேடையை உதிர்த்தார்.
கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவரது கடைசி மேடைப் பேச்சில் சொன்ன கதை இது,
ஒரு ஊரில் 96 புலவர்கள் கூடும் மடம் ஒன்று இருந்தது. அன்றும் 'புலவர் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் மடத்தில் சரியான கூட்டம். மடாதிபதி அனைவரையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். 95 புலவர்கள் வந்துவிட்டார்கள். 96 வது நபர் வர மிகவும் நேரமானது. நீண்ட நேரத்திற்கு பிறகு 'கடைமடை' என்னும் ஊரிலிருந்து புலவர் ஒருவர் வந்தார். அவரை கண்ட மடாதிபதி.
"வாருங்கள் கடைமடையரே" என்று வரவேற்றார்.
வரவேற்பை கேட்ட அந்த புலவர், மடாதிபதியை நோக்கி, "வணக்கம் மடத்தலைவரே' என்று கூறி அமர்ந்தார்.
கிருபானந்த வாரியார்
வாரியார் சுவாமி அவர்கள் ஒரு சமய கூட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சுவரில் 'திருநீறு இட்டார் கெட்டார்' என்றும் 'திருநீறு இடாதார் வாழ்ந்தார்' என்றும் எழுதி இருந்தது.
வாரியார் சுவாமிகளோடு நடந்து வந்து கொண்டிருந்தவர், இதை படித்ததும் ஆத்திரமடைந்தார்.
இதை கண்ட வாரியார் அவர்கள், 'ஏன் கோபம்? அவர்கள் சரியாகத்தான் எழுதியுள்ளார்கள். நாம் தான் அதை சரியாக பதம் பிரித்து படிக்க வேண்டும் என்று கூறி
"திருநீறு இட்டு யார் கெட்டார்" என்றும் "திருநீறு இடாது யார் வாழ்ந்தார்" என்றும் படித்து காண்பித்தார். இதை கேட்டு சுவாமிகளோடு வந்தவர் மகிழ்ச்சியானார்.
கி.வா.ஜகந்நாதன்
'கி.வா.ஜ சிலேடைகள்' எனும் நூலே ஒன்று உள்ளது. சிலேடைக்கு கி.வா.ஜ என்று கூட சொல்லலாம். அவர் அரங்கேற்றிய ஆயிரம் சிலேடைகளில் இரண்டு குறிப்பிடுகிறேன்.
ஒருமுறை கி.வா.ஜ தலைமையில் ஒரு இலக்கிய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஒரு விவாதம் வெடித்து வலுவானது. சிறிது நேரத்தில் இருதரப்பினர்களாக பிரிந்து ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளவும் தொடங்கினார்கள். பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது மழை தூற துவங்கி இருந்தது. உடனே கி.வா.ஜ சொன்னார்,
"உள்ளேயும் தூற்றல், வெளியேவும் தூற்றல்" என்று
இன்னொரு சமயம், கி.வா.ஜ ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார். அதுவொரு காலை நேரம், அப்போது கூடினோர் கி.வா.ஜ-வை மாலையிட்டு வரவேற்றனர். அதற்கு கி.வா.ஜ, "அடடே, காலையிலே மாலையும் வந்துவிட்டதே" என்று சிலேடை சொன்னார்.
நான் மேலே குறிப்பிட்ட சில உண்மை நிகழ்வுகளிலிருந்து சிலேடை என்பது என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆம், ஒரு சொல் இரண்டு விதமான அல்லது பலவிதமான பொருளை தந்தால் அது சிலேடையாகும். அதனால் தான் அதை 'இரட்டுற மொழிதல்' என்கிறார்கள்.
இந்த சிலேடையில் வரும் சொல்லானது பிரிவு படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை தருமாயின் அது 'செம்மொழி சிலேடை' ஆகும்.
அதாவது, கலைஞர் சொன்னதும் கி.வா.ஜ சொன்னதும் செம்மொழி சிலேடையாகும்.
இதே சொல் பிரிக்கப்பட்டு பல பொருள் தந்தால் 'பிரிமொழி சிலேடை' என்று பெயர்.
அதாவது, கண்ணதாசன் சொன்னதும் வாரியார் சுவாமிகள் சொன்னதும் பிரிமொழி சிலேடையாகும்.
வேறு எந்த மொழியிலும் அதிகமில்லாத இந்த வார்த்தை விளையாட்டு நம் தமிழில் ஏராளம் தாராளம்.
அன்று இலக்கியங்களிலிருந்து இலக்கணத்தை எவ்வாறு ஆய்வு செய்தனரோ அதே வகையில் இக்கால நடைமுறை உரைநடையிலிருந்து இலக்கணத்தை பயிலும் போது இலக்கணம் என்பது ஒரு சட்ட திட்டம் போல் தோன்றாமல் விளையாட்டாக தெரியுமென்று நான் நம்புகிறேன்.
சென்ற பனிக்கால நிலவொளியில் ஒரு கவிதை பிறந்தது, இலக்கிய வாசத்தை நுகரும் போதெல்லாம் அக்கவிதை என்னை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.
ஓ… வெண்ணிலவே
உன் வயதுதான் என்ன?
தமிழை விட
வயதானவளா நீ?
-தீசன்
ஒரு குறுநூலொன்று முழுவதுமாய் வாசித்ததை போல உணர்ந்தேன்..
பதிலளிநீக்கு