அண்மை

விதை-கலாம்

 

விதை-கலாம்

2018 முதல் 2019 ஆய்வின் படி ஒரு வருடத்திற்கு சராசரியாக உலகில் 30,36,642 மரங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் அதனை சரியாக்கும் அளவிற்கு மரங்கள் நடப்படுகிறதா? என்றால், விடை கேள்விக்குறியோடு நின்றுவிடுகிறது. 


சமீபத்தில் சர்வதேச அளவில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது, 'ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு எத்தனை மரக்கன்றுகளை நட வேண்டும்?' என்பது தான் அது.


அதற்கு Macrame Corridor-ரின் நிறுவனர் சுர்பி கியா என்பவர் ஒரு தோராய கணக்கு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அதன்படி,


கனடா-வில் வாழும் ஒவ்வொரு மனிதனும் 8,953 மரங்களையும், ரஷ்யாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் 4,461 மரங்களையும், ஆஸ்திரேலியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் 3,266 மரங்களையும் என பட்டியலை நீட்டிக்கொண்டே சென்று இறுதியில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனும் வருடத்திற்கு 28 மரங்களை நட்டாலே போதும் உலகம் செழிக்கும் என்று முடித்திருந்தார். 


காரணம், இந்தியாவின் மக்கள் தொகை அப்படி. இந்தியாவில் ஒரு மனிதன் வருடத்திற்கு 28 மரங்களை நட்டால் இந்தியாவின் மக்கள் தொகை கணக்குப்படி 38,92,00,00,000 மரங்களை நம்மால் நடமுடியும்.


'பெட்டர் மீட்ஸ் ரியாலிடி' நிறுவனத்தின் தோராய ஆய்வு படி ஒரு வருடத்திற்கு உலகிற்கு தேவையான மரங்கள் 13,00,00,00,000 ஆகும்.


ஒரு இந்தியன் வருடத்திற்கு 15 மரங்கன்றுகளை நட்டால் கூட உலகின் மொத்த ஆக்ஸிஜன், நீர் மற்றும் இதர இயற்கை தேவையை நம்மால் நிச்சயமாக பூர்த்தி செய்ய முடியும். 


இன்னும் யோசனை செய்து பார்க்கும் போது, நாம் செய்ய நினைக்கும் வேலையில் பாதி வேலையை இயற்கையே பறவைகளின் வழியாக செய்து கொண்டுதான் உள்ளது. அதனால் நமது சிறு முயற்சி கூட இயற்கைக்கு எழில் சேர்க்கவல்லது.


அந்த சிறு முயற்சியில் ஒரு சிறு துவக்கமே இந்த விதை-கலாம் அமைப்பாகும். இதன்படி, தென்றல் இதழ் வெளிவரும் ஒவ்வொரு வாரமும் எங்களால் முடிந்த அளவிற்கான மரக்கன்றுகளை நடவுள்ளோம். 


அப்துல் கலாம் ஐயா-வின் நினைவு தினத்தை முன்னிட்டும் நடிகர் விவேக் அவர்களின் லட்சியத்தினை எதிர்நோக்கியும் இந்த வாரத்திலிருந்து விதை-கலாம் அமைப்பானது ஐந்து மரக்கன்றுகளோடு துவங்கப்பட்டுள்ளது.


ஒரு வருடத்திற்கு எங்களால் 1000 மரக்கன்றுகளை நட முடிந்ததானால், வருடத்திற்கு 66 மனிதன் செய்யக்கூடிய பணியை ஒரு குழுவாக செய்ததில் மகிழ்ச்சியடைவோம்.


இந்த முதல் வாரப்பணியில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்த 'மனோஜ் குமார்' அண்ணனுக்கு தென்றல் இதழ் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சமூகப்பணி என்ற வார்த்தையை கேட்டாலே ஓடி வரும் அவரது உடலும் உள்ளமும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். 


நன்றி 'மனோஜ் குமார்' அண்ணன்

என்ன தான் சொன்னாலும் இந்த முதல் வார பணிக்கு நான் தான் செலவு செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்ற நண்பர் குறள்மகன் அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தென்றல் நிர்வாகம் இதை ஒரு சீரிய நோக்கத்துடனும் மன நிம்மதிக்காகவும் செய்கிறது என்றாலும் இதை பொதுவெளியில் சொல்லக் காரணம்,


ஒன்று, நாங்கள் இதை எப்போதும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது தான் (வாக்கு கொடுத்தால் தான் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கும்)


இரண்டு, நாங்கள் எவ்வளவு தான் மரக்கன்றுகளை வாங்க முடிந்தாலும் அதை நடக்கூடிய இடம் எப்பொழுதும் இம்முறை கிடைத்தது போல கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நீங்கள் திருவாரூர் அல்லது அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உங்களிடம் இடமிருந்தாலோ அல்லது மரங்கள் குறைவாக இருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தாலோ எங்களிடம் தெரிவிக்கலாம். நாங்கள் உங்களுக்கு நேரிலே வந்து மரக்கன்றுகளை கொடுக்கிறோம். நீங்கள் அதனை பக்குவமாய் நட்டு பராமரித்தாலே போதுமானது.


குளம் மற்றும் இதர நீர் நிலை இருக்கும் பகுதிகளுக்கு சமீபத்தில் நட்டால் நலம்

இடமிருக்கும் வேறு பகுதியில் கன்றுகளை நட்டீர்களானால் அருகில் வாழும் மக்களிடம் 'தினமும் நீர் ஊற்றி பராமரிக்க' சொல்லிவிட்டு வர வேண்டும், முடிந்தால் நீங்களே சென்று தினமும் நீர் விட்டு பராமரிக்கவும்.


எல்லா தொண்டு நிறுவனங்களும் செய்யும் தவறை நாங்கள் செய்ய விரும்பவில்லை.


மரக்கன்றுகளை பெறுவதற்கான படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, விருப்பம் இருப்பவர்கள் நிரப்பலாம். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம். (ஆரூர் பகுதியினருக்கு மட்டும்)





மேலும் விவரங்களுக்கு விதை-கலாம் வலைதளத்தை காணவும்.


இப்படிக்கு,

தென்றல் எழுத்தாளர்கள்

1 கருத்துகள்

  1. ஆஹா..
    எத்தனை சீரிய முயற்சி..!

    வாழ்த்த வார்த்தைகள் போதவில்லை..!

    இடத்தை காட்டுங்கள் மரத்தை தருகிறோம் என்கிறீர்கள்.
    அடடா கரும்பு தின்ன கூலி தருவதுபோல இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை