விகடன் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை
100 நாட்களுக்கு மேலாக ஹரியானாவிலும் பஞ்சாபிலும் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் உள்ள தேசியக்கொடியை கழற்றி அங்குள்ளோர் செய்த ஆர்ப்பாட்டத்தை உலகமே கண்டது. இத்தனை கடுமையாக எதிர்க்கும் அளவிற்கு அந்த சட்டங்களில் என்ன இருக்கிறது என்று ஆய்ந்து பார்க்கும் போது, தினப் பத்திரிகைகளில் இருக்கும் இரண்டாம் பக்கத்திற்கும் ஆறாம் பக்கத்திற்கும் உள்ள தொடர்பு போல நமக்கு ஒன்று புரிகிறது.
சட்டம் 1 - விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் ( மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
இச்சட்டம் விவசாயிகளின் விளைபொருட்களை மாநிலங்களின் உள்ளும் புறமும் இந்திய எல்லைக்குள் விற்க அனுமதிக்கிறது. முன்பெல்லாம் விளைவித்த பொருட்களை மண்டியில் கொடுத்து இடைத்தரகர்களிடம் ஏமாந்துபோன விவசாயிகள் இனி அதிக லாபத்தை ஈட்டலாம் என்று அரசு சொல்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மண்டிகளில் தான் விற்க வேண்டும் என்னும் கட்டாய சட்டம் ஏதும் முன்பு இருந்ததா? அல்லது மாநிலங்களுக்கு வெளியே பயிர்களை விற்கக்கூடாது என்று யாராவது சொன்னார்களா? இல்லவே இல்லை, அப்படியிருக்க ஏன் இந்த சட்டம்? முன்பே இருக்கும் E-Nam, E-Choupal (ITC) போன்று விவசாயிகளின் பயிர்களை இணையவெளியில் சந்தைப்படுத்துதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். ஆனால் நாட்டில் இருக்கும் 86% சிறுகுறு விவசாயிகள் இது போன்ற இணையவழி சந்தைகளை பயன்படுத்தினாலும் கூட போக்குவரத்து செலவுகளின் மூலம் லாபத்தை இழக்க நேரிடும். விவசாயிகளின் இந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டே சில கட்சிகள் 'மண்டிகள் மூடப்படும்' என்ற வதந்தியை பரப்பியது. அதற்காகவே தான் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 'APMC மண்டிகள் எப்போதும் போல இயங்கும்' என்று அறிக்கை வெளியிட்டார்கள். எல்லா விவசாயிகளாலும் எளிதில் பயன்படுத்தக் கூடிய சட்டமாக இது இருந்தாலும், பெரு விவசாயிகளுக்கு மட்டுமே பலனளிக்கும்.
சட்டம் 2 - விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை
இந்த சட்டம் ஒப்பந்த விவசாயத்தையும் பயிர் பாதுகாப்பையும் ஊக்குவிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் இந்த சட்டத்தை எதிர்த்தே இன்றளவும் போராடி வருகிறார்கள். காரணம் குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP) இல்லாததால். இதற்கு போராடுவதைக் காட்டிலும் இன்னொரு ஆபத்தான விஷயம் இந்த சட்டத்தில் உள்ளது. 95% மக்களுக்கு மேல் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறார்கள். எந்தவொரு கார்ப்ரேட் நிறுவனமும் நாட்டின் வளங்களை பற்றி கவலைக் கொள்ளாது, அதற்கு தேவையானது லாபம் மட்டுமே. வேளாண் துறைக்குள் புகும் கார்ப்ரேட் நிறுவனங்களும் விவசாயிகளின் நிலத்தைப் பற்றியும் இந்திய நாட்டின் வளத்தைப் பற்றியும் கவலைக் கொள்ளாது, அதற்கு தேவை அதிக விளைச்சல் அதிக லாபம். குறைந்த காலத்தில் அதிக விளைச்சலை தரக்கூடிய எந்த செயற்கை உரங்களையும் ஒப்பந்த விவசாயிகளிடம் கார்ப்ரேட் நிறுவனங்கள் கொடுக்கும். ஒப்பந்தமிட்ட விவசாயியும் என்ன? ஏது? என்று கேள்வி கேட்காமல் அந்த செயற்கை உரங்களை பயன்படுத்தியே ஆக வேண்டும். மீறி பயன்படுத்தவில்லையானால் அந்த ஒப்பந்தம் பேசும். குறைந்த காலத்தில் அதிக விளைச்சலால் விதைதந்த கார்ப்ரேட் நிறுவனத்திற்கும் விளைவித்த விவசாயிக்கும் அதிக லாபம் கிடைத்தாலும், பயிர்களில் செழிப்பு இருக்காது, மண்ணிற்கும் கூடிய விரைவில் உயிர் இல்லாமல் போகும். என்றைக்கு இந்திய மண்ணானது உயிரிழந்து, உரங்களை பயன்படுத்தியும் விளைச்சலை தரமுடியாமல் போகிறதோ அன்றைக்கே இந்த கார்ப்ரேட் நிறுவனங்களும் வேளாண் துறையை விட்டு விலகிவிடும். காரணம், இனி பயிரைப் பார்க்க முடியாது, லாபம் பார்க்க முடியாது. ஒப்பந்த விவசாயத்தால் விளைவிக்க தேவையான பொருள் கிடைக்கும், மாதமானால் சம்பளம் கிடைக்கும், விளைந்த பொருட்களுக்கு விலை கிடைக்கும் ஆனால் நிலத்தின் வளமானது சீர் கெட்டுப் போகும். பயிர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் காப்பீடு மூலம் கார்ப்ரேட் நிறுவனம் ஈடுகட்டிக் கொள்ளும், உயிர் போன மண்ணைக் கொண்டு மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா?
சட்டம் 3 - அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
முன்பெல்லாம் வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள் போன்ற பொருட்களை பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இனி விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை பதப்படுத்தி சேமித்து வைத்து விலையேற்றம் அடையும் போது கூட விற்கலாம். இது அவர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும் என்று அரசு சொல்கிறது. இதில் பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் போன்றவை அடங்கும். பஞ்சம் பேரழிவு போன்ற விதிவிலக்கான காலங்களில் இந்த சட்டம் பொருந்தாது என்று அரசு கூறுகிறது. இந்த சட்டத்தால் பொருள் பதுக்கல் அல்லவா அரங்கேறும், பொருட்களை பதுக்கினால் விவசாயிகளே தட்டுப்பாட்டை உருவாக்கிவிட முடியுமே என்று ஒரு சாரர் கூறுகின்றனர். இந்த சட்டத்தால் விவசாயிகள் அதிக லாபம் பெறுவர் என்று இன்னொரு சாரர் கூறுகின்றனர்.
இப்போது இந்த சட்டங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கூறுகிறேன். இந்த மூன்று சட்டங்களுமே விவசாயிகளுக்கு குறைவாகவும், ஒப்பந்தத்தின் மூலம் விவசாயம் செய்யவரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிகமாகவும் நன்மை அளிக்கக் கூடியது. எப்படியென்றால், குறைந்தபட்ச ஆதார விலை (MSP) இல்லையானாலும், ஒப்பந்தத்தின் போது 'கிலோவுக்கு இவ்வளவு விலை' தரப்படும் என்று கையெழுத்திடப்படுகிறது. ஆனால் வியாபாரம் மற்றும் வர்த்தகம் சட்டப்படி, பொருட்களை பெறும் கார்ப்ரேட் நிறுவனமானது இந்தியாவில் எந்த மாநிலத்தில் அந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அங்கே கொண்டு அதனை அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முடியும். சிறு விவசாயிகளிடம் தாங்கள் விளைவிக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைக்கும் படியான இருப்பிடம் இருக்காது ஆனால் கார்ப்ரேட் நிறுவனத்திடம் இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் சட்டத்தின் படி கார்ப்ரேட் நிறுவனங்களினால் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள் போன்ற பொருட்களை பதுக்க முடியும். பதுக்கலால் தட்டுபாடு ஏற்படும், தட்டுப்பாட்டால் விலை ஏற்றமாகும், கார்ப்ரேட் லாபம் பார்க்கும், ஒப்பந்த விவசாயிகள் லாபமடைவது போல ஏமாற்றப்படுவார்கள்.
இதற்கான தீர்வு ஒப்பந்த விவசாயத்தை மட்டும் புறக்கணிப்பதாகும் மற்ற இரண்டு சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை தராது. கார்ப்ரேட் நிறுவனங்களின் வியாபாரத்திற்காகவே மற்ற இரண்டு சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்தது போல தெரிகிறது. ஆனாலும் கூட தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடாத விவசாயிகளுக்கு இவ்விரண்டு திட்டங்களால் ஆபத்தில்லை. முதலில் இதில் எந்த சட்டங்களையும் அரசானது விவசாயிகளின் மீது திணிக்கவில்லை. 'விரும்பியவர்கள் பயன்படுத்தலாம்' என்றே சொல்கிறது. முன்மே இருக்கும் வேளாண் சட்ட நடைமுறைகளோடு இந்த புதிய சட்டங்களை இணைத்துள்ளதே தவிர பழயனவற்றை கைவிடவில்லை. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் MSP க்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் தருவதாக சொல்கிறார். இந்த மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள குறைகளை விவசாய பெருங்குடிகள் எதிர்ப்பது நியாயம் தான், ஆனால் இத்தனை கடுங்குளிரிலும் உடலை வருத்திக்கொண்டு உயிர் போகும் அளவிற்கு போராடுவது தேவையில்லை.
- தென்றல் ஆசிரியர்
மேலும் படிக்க
இந்த கட்டுரை சற்றேகாலத்தால் முந்தியதாகவும் பத்திரிகைகளுக்கே உரித்தான பட்டும்படாமல் இருதரப்பினருக்கும் ஒத்துஊதுகிற மாதிரி தெரிகிறது...
பதிலளிநீக்குமூன்று சட்டங்களுமே திட்டவட்டமாக மறுக்கப்படவேண்டியவை..
வேளாண் பொருட்கள் என்பவை சகல உலகியல் நிகழ்வுகளுக்கும் மூல ஆதாரமானவை!
எப்படி பெட்ரோல் விலை உயர்வானது போக்குவரத்தை மட்டுமின்றி அதுசார்ந்த /சாராத மற்றநடவடிக்கைகளையும் மறைமுகமாக பாதிக்கிறதோ அதேபோல்.. அதைவிடவும் தீவிரமாக வேளாண்பொருள் விலைகளில் ஏற்படும் சிறுசிறு மாற்றமும் மொத்த தேசத்தின் நடவடிக்கைகளையும் தலைகீழாக புரட்டிபோட்டுவிடும்!
இதில் கூறப்பட்டுள்ளதுபோல கார்பரேட்களுக்கு கொள்ளை லாபமும் விவசாயிகளுக்கு இப்போது கிடைப்பதைவிட பத்து மடங்கு அதிக லாபமே கிடைப்பதாக கொண்டாலும்...
அதை அவர்களால் அனுபவிக்க முடியாது...!
ஏனெனில் எல்லா பொருள்களுக்கும் மூலகர்த்தாவான அவர்களே போட்டியில் இறங்கி விலையை ஏற்றி லாபம்பார்க்க ஆரம்பித்தால் மற்றவர்கள் சும்மா வேடிக்கை பார்த்துகொண்டா இருப்பார்கள்? எல்லா சந்தை மதிப்புகளுமே (பண்டங்கள்&சேவைகள்) சத்தமின்றி எகிறிவிடும்.
ஆதலால் காரல் மார்க்ஸ் சொன்னபடி இதுவெறும் எண்மதிப்பின் உயர்வாக இருக்குமே தவிர சமூக/சந்தை மதிப்பின் உயர்வாக ஒருபோதும் இருக்காது!
இன்னும்
புரியும்படி கூறபோனால்..
ஒரு விவசாயி கடைக்கு சென்று கடலைமிட்டாய் வாங்க ஆசைபடுகிறான். அவனிடம் இன்று 5 ரூபாய்தான் இருக்கிறது. இன்று அதன் விலையும் 5ரூபாய் என்பதால் அவனால் ஒன்றுதான் வாங்க முடியும்!
இந்த சட்டம் அமுலான சில வருடங்களில்..
நாளை அதே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் எளிதாக புழங்கினாலும் அவன் கடைக்கு சென்றால்.. அப்போதும் அவனால் ஒரே ஒரு கடலை மிட்டாய் தான் வாங்க முடியும்..
ஏனெனில் அப்போது ஒரு கடலைமிட்டாயின் விலையும்
5000 மாக இருக்கும்!!