கடவுள் வாழ்த்து | கவியுரை
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கவியுரை
அகரமே
எழுத்தின்
முதல் போல
ஆதிமூலனே
அகிலத்தின்
முதலாவான்….
அகர முதல எழுத்தெல்லாம்
அகரம் என்பதே எழுத்துகளின் முதல் ஆகும்.
சிறப்பினும் இனத்தினும் செறிந்துஈண்டு அம்முதல் நடத்தல் தானே முறையா கும்மே - நன்னூல்
ஆதி பகவன் முதற்றே உலகு
அதுபோல, மூல முதல்வனான இறைவனே உலகிற்கு முதலாவான்.
இங்கு பகவன் என்பது 'இறைவன்' என்ற பொதுப் பெயரிலே பரந்த நோக்குடனே குறிக்கும். ஆதலால், 'எந்த இறைவன்?' என்ற கேள்விக்குள் இச்சொல்லை உட்படுத்த முடியாது.
'பகம்' என்ற ஆறு குணங்களை கொண்டவன் என்று நோக்கினாலும் அதிலும் அனைத்து மத கடவுளரும் அடங்குவர்.
புதுமையாக இக்குறளை நம் அறிவியல் பார்வைக்குள்ளும் கொணரலாம்.
ஆதிபகவன் முதற்றே உலகு
இதில் 'பகவன்' என்ற சொல்லை பகவு+அன் என கொள்ளலாம்.
'பகவு' என்பது வெடிப்பை குறிக்கும் எனக் கொண்டால், (சான்று: குறள் 889)
'அன்' என்பதை வினையாலணையும் பெயராக கொள்க.
அப்படியானால் இவ்வுலகிற்கே தொடக்கமானவன் "வெடிப்பை ஏற்படுத்தியவன்" ஆவான்.
அறிவியலும் இந்த பெரு வெடிப்பு கொள்கை பற்றி பேசுகிறது.
அண்டம் விரிவடைவதால் தான் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்பது உறுதியானால், ஆதிபகவன் என்ற சொல்லின் உட்பொருளை இன்னும் அதிகமாகவே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்
கவியுரை
கற்றென்ன பயன்?
தூய முற்றறிவன்
பாதம்
பணியாதிருந்தால்?
செல்வத்தின் பயனே ஈதல் போல கற்பதன் பயனே அடக்கமாகும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் - குறள் 121
கற்பதனால் வரும் பயனென்பது,
தூய அறிவுடையவனை சேர்ந்து, பணிந்து பண்புடனே நடந்து கொள்ளும் போது அதிகம் மிளிர்கிறது.
குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
கவியுரை
மனமென்னும்
மலரேறிய
மகானடி
சேர்ந்தால்,
நிலமண்ணில் நீ
நீடு வாழலாம்!
இறைவன் எங்கு இருக்கிறார்? மனமென்னும் மலர் மேலே நடந்து கொண்டிருக்கிறான் இறைவன். அவர்பால் அன்பு கொண்ட அன்பர்களது நெஞ்சத்தில் நீங்காது குடிகொண்டுள்ளான். அவ்வகையில் தம் மலர் போன்ற நெஞ்சில் குடியிருக்கும் அந்த நிமலனை நித்தமும் நினைக்கின்றோர் நிலம் மேல் நீடு வாழ்வர்.
தாமரையில் வீழ்ந்த திரவம் போன்று இக மற்றும் பர வாழ்வின் விருப்பு வெறுப்புகளை கடந்து இச்சை தரும் மனதிலேறி நடந்தவன் என்றும் கொள்ளலாம்.
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்மை இல
கவியுரை
பற்றில்லா
பண்பனது
பாதங்களை
பணிவோர்க்கு
எத்தீங்கும்
என்றுமில!
'பற்றுக பற்றற்றான் பற்றினை' - ஏறத்தாழ இக்குறளும் இதையே தான் கூறுகிறது.
விருப்பு வெறுப்பு அற்ற ஒருவனிடம் சரணாகதி அடைந்தோமானால், எந்த துன்பமும் நம்மிடம் சேருவதில்லை. காரணம், துன்பத்தை ஒதுக்கித்தள்ளும் அலட்சியம் விருப்பு வெறுப்பற்ற நிலையுள்ள தூயவரிடமிருந்து நமக்கும் கிடைக்கப்பெற்றுவிடுகிறது.
குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கவியுரை
மயக்கும்
இருவினையும்
சேரா,
மெய்
பயக்கும்
இறைவனை
புகழ்வோர்க்கு!
இறைவன் நல்வினை தீவினை இரண்டுக்கும் அப்பாற்பட்டவனாகிறான். அப்படியிருக்க, அம்மெய்யவனை புகழ்வோர்க்கு, அஞ்ஞானத்தால் போற்றக்கூடிய இருள் சேர்க்கும் இருவினையும் சேராது.
குறள் 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கவியுரை
புலன் வெறி
துறந்து,
பொய் குறி
மறந்து,
ஒழுக்க நெறி
நிற்பவனே
உயர் வாழ்வான்!
ஐம்புலன் வாயிலாக பிறக்கும் இச்சைகளை அவித்தவன் எவனோ! பொய்யினை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவன் எவனோ!
அவனே நீடு வாழ்வான்.
குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கவியுரை
தன்நிகரில்லா
தானடி
பணியார்க்கு
விளை துன்பம்
களைவதரிது!
ஒரு மனிதன் தான் தமக்கு நிகரில்லாதவனாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது இயற்கையாக கூட இருக்கலாம்.
வள்ளல் பெருமான் ஜோதி வடிவத்தையே இறைவனாக கொண்டவர். கருணை வடிவையே கடவுளின் வடிவங்களாக கருதியவர். அவர் துறவியான பிறகும் கூட துன்பமற்று வாழ்தாரா? என்றால், இல்லை. ஆனால், அந்த துன்பத்தால் நேரிய மனக்கவலை அவரிடத்திலே கிடையாது. காரணம், 'தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்' அவர். அதையே கடவுளென்று வழிபட்டார்.
குறள் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது
கவியுரை
அறமென்ற
கடலான
அறவோனை
சேராதோர்,
பிறவென்ற
கடலிலே
வாழ்தல் அரிது
'அந்தணர் என்போர் அறவோர்' - குறள் 30
அறம் செய் என்று ஆணையிடாமல் 'அறம் செய்ய விரும்பு' என்று கூறியது ஔவை பாட்டி. அதன்படி அறம் செய்வோர் அனைவருமே அந்தணரே என்பதை வள்ளுவரே விளக்கியிருக்கிறார்.
நம் பிறவிக்கு தேவை அறம். அந்த பிறவிக்கே தேவையான அறத்தை ஒருவர் செய்கிறாரானால் அவருடையதுமான பழக்கம் எத்தனை மேன்மை தரும். அத்தகைய மேன்மை கொண்டோரை அடைந்தால் நம் வாழ்வே நற்கதி பெறும்.
குறள் 9
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கவியுரை
குறியில்லா
பொறியுள்ள
குணமில்லா
மனிதன்,
எண் குணத்தோனை
பணியாதவன்
எண் குணத்தோன் என்பது கடவுளர்களையும் சித்தர்களையும் யோகிகளையும் துறவிகளையும் பொதுப்படையாக குறிக்கும் ஒரு குணப்பெயர் ஆகும்.
அற குணங்களும் உலகின் எல்லா நல்ல குணங்களும் ஒன்றடக்கிய இறைவனையோ இறைவன்பால் பற்று கொண்ட துறவியையோ பணியாத ஒருவன், எதற்கும் பயன்படாத ஐம்பொறிகளை கொண்ட வெற்று உடலாகவே குணமில்லாதவனாய் கருதப்படுவான்.
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார்
இறைவன் அடிசேரா தார்.
கவியுரை
பிறவென்ற
கடலிலும்
நீந்துவர்
நிமலனை
நினையாதோர்
அதிலும்
மூழ்குவர்!
பிறவென்ற கடலில் நீந்த நமக்கு பிடிமானம் ஒன்று தேவை!
அது கல்லாகவும் இருக்கலாம்!
காய்ந்த புல்லாகவும் இருக்கலாம்!
நம்பிக்கை என்ற ஒன்று,
நரரான நமக்கு வேண்டும்.
அது உருவ நம்பிக்கையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதல்ல, எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார்,
"மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும் அது இயற்கையின் மீதோ, அறிவியல் மீதோ, கடவுளின் மீதோ கூட கட்டாயம் இருத்தல் வேண்டும். அந்த நம்பிக்கை உங்களை காக்கும்"
வள்ளுவர் சொல்கிறார், 'பிறவென்ற கடலில் நீந்த தூய்மை பொருந்திய நம்பிக்கை நமக்கு தேவை. அந்த நம்பிக்கையே இறைவனாகும்'
இறைவனை உருவங்களாக வழிபடுவதற்கு காரணம், 'அருவங்களோடு நம் மனம் அதிகம் ஒன்றுவதில்லை. ஒன்றாத மனம் நமக்கு நம்பிக்கையை தருவதில்லை'.
- தீசன்
மேலும் படிக்க