அண்மை

சேது பந்தன படலம்

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்



சேது பந்தன படலம்


சேது என்றால் இருநிலபரப்பை சேர்க்கிற இடம்../நீட்சி/தொடர்ச்சி


குறிப்பாக "பாலம்" என்பதை சுட்டுகிறது..!


பந்தனம் என்பது கயிறு /பிணைப்பு/கட்டுதல்-கட்டுமானம்/உறவு(பந்தம்)


இந்தியவரைபடத்தில் பார்த்தீர்களேயானால் தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை உள்ள நீலக்கடலில்.., நீண்ட திட்டுத்திட்டான மணல்மேடுகள் இருப்பதை காணலாம்...!


ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்த இந்திய இலங்கை நிலப்பரப்பினுள் கடல்நீர் உட்புகுந்து ஈழத்தை தனிதீவாக பிரித்துவிட்டதை எடுத்துக்காட்டுகிற இயற்கை தொன்மத்தின் மிச்சங்கள் இவை...


தவளையைப் போல தாவி குதிக்கிற ஆற்றல் மனிதர்களுக்கு இருந்தால்  இந்த மணல்திட்டுகளில் தாவித்தாவியே இலங்கையை எளிதாக சென்றடையலாம்..! அந்த அளவிற்கு கடலின்கண் பாலமிட்டதைபோன்று இது அமைந்திருக்கிறது..


இதனால் இந்த குறிப்பிட்ட கடல் பகுதிமட்டும் "சேதுசமுத்திரம்" என அழைக்கப்படுகிறது!


புவியியல் ரீதியாக பாலத்தின் தென் பக்கத்தை "மன்னார் வளைகுடா.." என்றும் வடபகுதி "பாக் ஜலசந்தி " என்றும் அழைக்கப்படுகிறது.. இது உலகின் ஆகச்சிறந்த கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்கோள வள மையம் ஆகும்!!


மேடாக இருக்கும் இவ்விடத்தை சற்றே சிரத்தையெடுத்து ஆழப்படுத்தினால் பெரும்பெரும் கப்பல்களை இவ்வழியே போக-வரச்செய்து உட்கார்ந்த இடத்திலிருந்தே தமிழகம் கோடிகோடியாக சம்பாதிக்க முடியும்..! ( "சூயஸ் கால்வாய்" & "பனாமா கால்வாய்" அப்படித்தான் உருவாக்கப்பட்டு பலனளித்து வருகிறது..)


என்றாலும் அரசியலில் இது அநேக சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு "சேதுசமுத்திர திட்டம்" என்ற பெயரை மட்டும் தந்து, மற்றவை அந்த கடலோடு கடலாக கரைக்கப்பட்டுவிட்டது!


இதற்கு மாற்றாக இயற்கையிலேயே இருக்கிற மணல்திட்டை சற்றே நவீன கட்டுமானதொழில்நுட்பங்களை புகுத்தி ஒரு பிரமாதமான பாலம் அமைத்துவிட்டால்..., ஈழமும் தமிழகமும் /இந்தியாவும் இலங்கையும் இணைந்தது போலாகிவிடும். இருநாடுகளும் பரஸ்பர பொருளாதார- தொழில்நுட்ப -சுற்றுலா-மனித வளங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..! (நுண்ணிதின் ஆராய்ந்தால் உலகவங்கிக்கே கடன்தருமளவு தமிழக பொருளாதாரம் உயர வழியுண்டு.!)


"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்...!


சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்..!"


என்கிற பாரதியின் கனவும் நினைவாகும்.. 



அற்புதமான இந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோமோ இல்லையோ... வடமொழியில் வால்மீகியும் தண்தமிழில் கம்பனும் இதை தங்கள் காவியங்களில் மிகநேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டார்கள்..!


* * * * * * * * * * * * * * * * * * 


யுத்த காண்டம்...


சீதை இலங்கை தீவில் இருப்பது தெரிந்துவிட்டது. மூவுலக அதிபதி ராவணனை எதிர்த்து அவளை மீட்க வேணுமாயின் முதலில் இந்த முந்நீர் பெருங்கடலை நீந்தி கடக்கவேண்டும். எல்லோராலும் அனுமனை போல ஒரே தாவலில் அங்கு போய்வர இயலாது... (குற்றாலீசுவரன் போல நீந்தவும் தெரியாது ) மேலும் டன் டன்னாக படைகருவி ஆயுதங்களை உணவுபொருட்களை அக்கரைக்கு கொண்டுபோகணும்.. இதற்கு ஒரே தீர்வு பாலம் அமைப்பது.. அதுவும் கடலின்குறுக்கே அணையிட்டு பாலத்தை கட்டமைக்க வேண்டும்..! நடக்கிற காரியமா..? முயன்றால் எதுவும் முடியும்!!


சுக்ரீவன் நளனை அழைத்தான். நளன்தான் வானர தச்சன் !(அந்த கால Architect). வேலைகளை பகுத்து கொடுத்தான்.. நான்குதிசைகளிலும் புகுந்த வானரபடைகள் கண்ணில் பட்ட கல்  மண் பாறை மலை மரம் எல்லாவற்றையும் அடியோடு பெயர்த்து கொண்டுவந்து நளனிடம் தருகிறார்கள்...


இங்கு சில உதாரண காட்சிகளை மட்டும் வரிசை படுத்துகிறேன்..

அதன்பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள்...


எது விஞ்சியது.


கம்ப சித்திரமா..? ஹாலிவுட்-ன் கிராஃபிக்ஸா...? என்பதை,,,



     * * ********************** * *


காட்சி 1

---------------

கணக்கின்றி பல கிலோமீட்டர் தொலைவு நீண்ட கருத்த மலைத்தொடர்களை கைகளிலும் தோள்களிலும் தலையிலும் ஏந்தியபடி வெள்ளமென வானரப்படை திரண்டு வந்தனவாம்..

அப்படி அவை வந்த காட்சியானது.. ஒரே ஒரு (வங்க) கடலை அடைக்க உலகின் ஏனைய எல்லா பெருங்கடல்களும் ஒன்றுதிரண்டு வந்தது போல இருந்ததாம்!!



"கருவரை காதங்கள் கணக்கு இலாதன...!

இருகையில் தோள்களில் சென்னி ஏந்தின..!

ஒருகடல் அடைக்க மற்றொழிந்த 

வேலைகள் வருவன ஆமென வந்த வானரம்....!"


(கருவரை - கரிய மலை

காதங்கள் -தூர அளவீடு

சென்னி -தலை

வேலை - கடல் )



காட்சி 2

----------------


படையென வரும் ஒவ்வொரு வானரமும்.... கால்களால் ஒருமலையை football போல உருட்டிக்கொண்டும்., இன்னுமிரு மலைகளை இருகைகளில் மாத்திமாத்தி போட்டு விளையாடியும்.., விண்ணைமுட்டியபடி முகில்கள்சூழ்ந்த மற்றொரு மலையை வாலில் கட்டி இழுத்துக்கொண்டும் வந்தனவாம்...!

(ஆக, ஒவ்வொன்றும் தலா 4 மலைகள்...)


" காலிடை ஒருமலை உருட்டி...

                                        கைகளின்

மேலிடை மலையினை வாங்கி..,

                                    - விண்தொடும்

சூலுடை மழைமுகிழ் சூழ்ந்து                                                             சுற்றிய,,

வாலிடை ஒருமலை ஈர்த்துவந்த வால்...!"




காட்சி 3

-----------------


வானர படைத்தலைவர்கள் பெரும் பெரும் மலைகளை பெயர்த்து நடுக்கடலில் தூக்கி வீசினராம்.. அப்படி வீசும்போது ஒன்றின்மேல் ஒன்றுவிழுந்து  உரசி தீப்பொறி எழுந்ததாம்..!! (இரு கருங்கல்லை எடுத்து உரசினாலே தீப்பொறி வரும்.. , இரண்டு கிரானைட் குவாரிமலைகளையே ஒன்றோடொன்று மோதி உரசினால்...?!!) அவ்விதம் எழுந்த திடீர் தீப்பிழம்பை கண்டு 'இங்க எவன்டா தீ வெச்சது?' என கடல்தேவனான வருணனே கலங்கினானாம்..!


"வேருடை நெடுங்கிரி தலைவர் வீசின..

ஓரிடத்து ஒன்றின்மீதொன்று சென்றுற...

நீரிடை நிமிர்பொறி பிறக்க.., 'நீண்ட ஈது..

ஆருடை நெருப்பு..?' என வருணன் அஞ்சினான்..!"



காட்சி 4

----------------


ஆனிறக் கண்ணன் என்ற வானரவீரன் உள்ளங்கையில் ஒரு காடழிந்த மலையை பெயர்த்து வந்து கடலில்வீச, அதுவிழுந்த வேகத்தில் அந்த கரிய கடலின் நீர்திவலைகளும் அடிஆழத்திலிருந்த தூய வெண்முத்துகளும் சிதறிஎகிறி வானில் சென்றுபோய் விழுந்தனவாம்... அதைதான் நாம் இரவில் விண்மீன்களாக காண்கிறோமாம்..!


"ஆனிறக்கண்ணன் என்றொருவன்

                 ‌‌                         அங்கையால்,

கானிற மலைகொணர்ந்தெறிய                                                   கார்க்கடல் ,

தூநிற முத்தினம் துவலையோடும் 

                                                 போய்,

வான்நிறை மீனோடு மாறு                                                          கொண்டவே...!!"



காட்சி 5

----------------

(மிக நுட்பமான ஈடிலா கற்பனை..)


 முன்பே சில வானரங்கள் பளிங்குமலையை கொண்டுவந்து கடலில் வீசிட, அது நீரில் அமிழ்ந்து ஒளிஊடுருவும் கண்ணாடி மலை (glass Mount)போல தோன்றினவாம். ஆதலால் பார்ப்பதற்கு கடலின் நடுவே காலியான வெற்றிட பள்ளம் போல அதுதோற்றமளித்ததாம்..!


இதை அறியாத பிறகுவந்த அநேக வானரங்கள்.. தம்பங்கிற்கு ஒரு பெரிய மலையை கொண்டுவந்து அந்த வெற்றிட இடைவெளியை நிரப்ப முயன்றனவாம்..!!


(உங்களால் இந்த மகத்தான காட்சியை புரிந்து கொள்ள முடிகிறதா..? முடியாவிடில் அது என்னுடைய போதாமையே அன்றி கம்பன் குறையல்ல..! குறுக்கே கண்ணாடி இருப்பதுதெரியாமல் முட்டிக்கொண்டு அநுபவபட்டிருக்கிறீரா..?)


"பளிக்கு மால்வரை முந்திப் படுத்தன...


ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்..,


வெளிக்கு மால்வரை வேண்டுமெனக் கொணர்ந்து


 அளிக்கும் வானர வீரர் அநேகரால்! "




காட்சி 6

---------------


கடலில் ஆரவாக்கிலும் நீளவாக்கிலும் ஆயிரம் யோஜனை அளவு உருண்டு திரண்ட ஒரு நீலத்திமிங்கலம் இருந்ததாம் வானரவீரன் ஒருவன் பெயர்த்தெறிந்த நெடுங்கிரி ஒன்று திமிங்கலத்தின் மேல்விழ பாரம்தாங்காமல் திமிங்கலம் புரண்டு விழ...அந்த அசைவிலேயே கடல்நீர் மலைகளோடு கரைகடந்துபெயர்ந்ததாம்..!


"ஆர ஆயிரம் யோசனை ஆழமும்


தீர நீண்டு பரந்த திமிங்கலம்!


பார மால்வரை ஏறப்பதைத்து உடல் ‌‌                                              

பேரவே குன்றும் வேலையும்                                                        பேர்ந்தவால்..!"



காட்சி 7

---------------

ஆயிரம் யோசனை உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துவிழுகிற அருவியை உடைய நெடுங்கிரியை ஒருவன் கடலில் வாரி வீசிட...

பொங்கி எழுந்த கடல்நீரானது விண்ணுயர் கோபுர கொடிகள்கொண்ட இலங்கை மாநகரின் தெருக்களில் வெள்ளமாக ஓடி உலாவியதாம்!!


"ஒருவன் ஆயிரம் யோசனை                                               ‌‌ ‌‌ ‌‌ ஓங்கிய


அருவி மால்வரை விட்டெறிந்து                                                         ஆர்த்தலால்


மருவு வான்கொடி  மாடஇலங்கை                                                             யில்


தெருவெலாம் புக்குஉலாய                                            தெண்ணீர் அரோ...!"



****      **** ‌.   **** ‌. *****


இங்ஙனம் உருவான பாலம் ஆதிசேஷ நாகமே கடலில்படுத்து கிடந்ததை போலவும்...


இலங்காதேவியே கரம்நீட்டி தழுவுவதுபோலவும்...


இருந்தது என்றெல்லாம் கம்ப சித்திரம் காட்டுகிறது.,!



மேலைநாட்டு

வரைபடவியலார் இந்த சேது பந்தனத்தை "ஆதாமின் பாலம் " என்றாலும்....


நம்மை பொறுத்தமட்டில் அது என்றுமே...


"இராமர் பாலம்" தான்!!  


-சூரியராஜ்

கருத்துரையிடுக

புதியது பழையவை