அண்மை

எட்டாவது வள்ளல் - கம்பன் என்றொரு மானுடன்

 

எட்டாவது வள்ளல்....!



பாரி , திருமுடிக்காரி, அதியமான் நெடுமான் அஞ்சி,பேகன், ஆய் நள்ளி என எழுவரை தமிழ்கூறும் நல்லுலகம் உதாரண வள்ளல்களாக ஊழிகள் பலகடந்தும் கொண்டாடி வருகிறது.


இவர்களெல்லாம் வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களும் கூட.... ஆனால் இவர்களை காட்டிலும் காலத்தால் பிந்திய  ஒருவர்,,, கம்பன் என்கிற "கவிகாலச்சக்கரம்" கொண்டு காலப்பயணம் மேற்கொண்டு...,,

இரு யுகங்களுக்கு முந்திச் சென்று

எவரும் எட்டாத உயரத்தில் புகழ்கொடி நாட்டி இருக்கிறார்... இந்த

எட்டாவது வள்ளல்.....!


கம்பனை புரந்த வள்ளல்..யார்?


ஆறாம் வகுப்பு மாணவன் கூட கேட்ட உடனே சொல்லிவிடும் அளவு பிரசித்தி பெற்ற பிரபலம்..


"திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்."


மகத்துவமான காரியங்களுக்கு பின்புலத்தில் ஒரு வலுவான வினையூக்கி எவரேனும் கட்டாயம் இருக்கவேணும்...


திறமை இருந்தும் sponsor கிட்டாததால்தான் சரியான வீரர்களை ஒலிம்பிக் மாதிரியான உலக போட்டிக்கு அனுப்பமுடியாமல், வெறும் ஒற்றை இலக்க பதக்கங்களுக்கே 130 கோடி பேர் உக்காந்து அங்கலாய்க்க வேண்டியுள்ளது.


அந்தவகையில் கம்பன் எப்படியோ பிழைத்துக்கொண்டான்....!


மிஞ்சிபோனால் மூன்றுமணிநேரம் ஓடும் திரைப்படத்திற்கே குழுவாக பலர் வருஷகணக்கில் மெனக்கெடுகிறார்கள்.. 


கம்ப காவியம் 10,000 பாடல்களை கடந்து 

4 லட்சம் சொற்களை கொட்டி செய்யுளில் அணியுற யாத்து விருத்த பா கொண்டு  விருந்தமைக்கப்பட்டுள்ளதாயின் அது எப்பேர்பட்ட தவ முயற்சி?!!!


வாழ்நாளில் கம்ப சித்திரத்தை ஒருவர் முழுதாக படித்து ருசிப்பதே பெரும் சாதனையாக இருக்கும் எனில் அதை படைத்த கம்பனுக்கு எத்தனைகாலம் தேவைபட்டிருக்கும்?


அத்தனை காலமும் அன்றாட சோத்துக்கு பிழைப்பு தேடி திரியும் ஒருவனால் இதை முதலில் நினைத்துதான் பார்க்க முடியுமா??

பிழைப்பு நடத்தும் ஒருவனால் வாழ்நாளில் இதை சாதிக்கதான் இயலுமா?


அதற்குதான் சடையப்பன் போன்ற வள்ளல் பெருமகன் தேவை..!


ஒரு தனிப்பாடல் இதை அழகாக சொல்கிறது....


"வில் கிடந்தது மிதிலையின் நகரிலே..


கல் கிடந்தது கானகம் தன்னிலே..


நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே..


சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே..


உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ..!!"


நான்கு 'ல்' களில் முழு கம்பராமயணம் எழுந்த வரலாறு நிற்பதை பாருங்கள்..!


தன் படைப்பினை பாருக்கு வழங்க பொருளுதவி நல்கிய வள்ளலின் பெருமையை நூறு பாடல்களுக்கு ஒன்றென ராமகதையில் போகிறபோக்கில் அள்ளித்தெளித்திட்டான் கம்பன்..


ஆனால் அரங்கேறும் வேளையில் பல பண்டிதர்கள் "நீ ராமன் புகழ் பாடுறியா? இல்ல சடையன் புகழ் பாடுறீயா ?? ரொம்பவும் காக்காய் பிடிக்காத ஓய்..! வேணுனா ஆயிரம் பாட்டுக்கு ஒருக்க துதிபாடிக்க.. அதுவும் உனக்காக.. " என்று அறிவுறுத்தவே.. பாவம் சடையருக்கும் சற்றே வருத்தம் எட்டிப்பார்த்தது.. குறுகிப்போனார்.


 அதை கண்ட

கம்பன் சொன்னானாம்.., " நான் கூட வெண்ணெயூர் சடையனை நூற்றில் ஒருவராக தான் நினைத்தேன்..ஆனால் பெரும்பண்டிதர்களான நீவீரோ அவரை 'ஆயிரத்தில் ஒருவனாக'  சொல்லிவிட்டீர்..! அப்படியே ஆகட்டும்" என்றிட


சடையன் முகத்தில் இழந்த பொலிவு மீண்டது.. மீசையை முறுக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தாராம்..!


உண்மையில் கம்பராமாயணத்தை ஆராய்ந்தால் சடையனை சகட்டுமேனிக்கு ஏதோ கதம்ப பூச்சரம் தொடுத்தது போல கம்பன் பாடி வைத்திருக்கிறான்..!! அதற்கு ஒரு அளவீடுலாம் இல்லை..! 


உதாரணமாக இங்கு மூன்றை மட்டும் காணலாம்...


1)காவியம் கர்ப்பம் தரித்த இடம்


உலகம் யாவையும் என முதற்பாடலை தொடங்கிய கம்பன் அடுத்த பத்தாவது பாடலில்(11) அது தோன்றிய இடத்தை சொல்லிவிட்டான்... (எங்கே பின்னாளில் சோழனோ , ஆழ்வார்களோ சொந்தம் கொண்டாடிடுவார்களோ என்கிற அச்சத்தில் ஒரு copyright விளக்கம்)


"நடையின் நின்றுயர் நாயகன்   தோற்றத்தின்...


இடைநிகழ்ந்த இராமவதார பேர்த்


தொடை நிரம்பிய தோம்அறு மாக்கதை...


சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே..!"



பொருளுணர....


'சிவனே' என்றில்லாமல் மனிதன் எப்படிலாம்  வாழ வேணும் என்பதை விஷ்ணு தன் மூன்று அவதாரங்களில் தானேநடந்து உயர்ந்து காட்டினார்.. (நடையின் நின்றுயர் நாயகன்)


அம்மூன்றுமே ராம அவதாரம்தான்

பரசுராமன்

ஸ்ரீ ராமன்

பலராமன்

அதில் இடை அவதாரத்தை இராமாவதாரம் என பேர் இட்டு..,


செய்யுள் தொடையணி நிரம்பிய குற்றமற்ற இக்கதை 


சடையப்ப வள்ளலின் வெண்ணெய் நல்லூரில் இயற்றி தந்ததாகும்!!



2)சேது பந்தனத்தில் ஒருகாட்சி


சென்ற முறை சேதுபந்தன கட்டமைப்பை விரிவாக பார்த்தோமல்லவா..? அதில் ஒன்றை விட்டுவிட்டேன்..


மேகஞ்சூழ்ந்த நெடியமலைகளை கடிதினில் (சித்தாள்)வானரங்கள் செங்கல் போல அள்ளி எறிந்து வீச வீச அதை நளன் (கொத்தனார்) வாஞ்சையோடு வாங்கி பிடித்து பாலத்தை கட்டினானாம்.

அவன் அப்படி பெரியமலைகளை வாஞ்சையோடு வாங்கியது,, தஞ்சம் என்றுவருவோரை சடையப்பன் தாயன்போடு தாங்கி அரவணைப்பது போன்றிருந்ததாம்!!



"மஞ்சினில் திகழ்தரும் மலையை மாக்குரங்கு,


எஞ்சுறக் கடிதுஎடுத்து எய்தவே!! -                                                                 -நளன்

 

விஞ்சையில் தாங்கினன் -சடையன் வெண்ணெயில்,


'தஞ்சம்' என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்.."



3) வரலாற்றில் வள்ளல் வம்சம்


இதுவரை வள்ளல் சடையனை உவமைக்காக மட்டுமே பயன்படுத்திய கம்பர் இந்த ஒரு பாடலில் எவருமே எதிர்பாராத சற்றும் சிந்திக்கமுடியாத ஒரு அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார்.

ஒரு புலவன் நினைத்தால் காலம் இடம் கடந்தும்  மாயாஜாலத்தை நிகழ்த்த முடியும் என்பதை நிறுவிஇருப்பார்.


ராமர் பட்டாபிஷேக விழாவில் சடையனையும் கொளரவிக்க வேண்டும்.. என்பது அவரது உள்முடிவு.


அதேநேரம் வால்மீகி வகுத்த வரலாற்றை மாற்றிட இயலாது. அதை அறிஞர் நிறை சபையும் ஒருபோதும் ஒப்பாது!


என்ன செய்யலாம்...?


கம்ப ரஸத்தை காணுங்கள்...


(திருமுடி சூட்டுப்படலம்)



"அரியணை அனுமன் தாங்க...

அங்கதன் உடைவாள் ஏந்த...


பரதன் வெண்குடை கவிக்க..

இருவரும் கவரி வீச..


விரைசெறி குழலி ஓங்க,

வெண்ணெயூர்ச் சடையன் தங்கண் மரபுளோர் கொடுக்க வாங்கி,,


 வசிட்டனே புனைந்தான் மௌலி..!"



பொருளுணர,,,,


எந்த ஒரு காட்சியை காண அண்டசராசரங்கள் ஏங்கி இருந்தனவோ அந்த காட்சி அரங்கேறியது...


அதோ ராமனும் சீதையும் பட்டாபிஷேக கோலத்தில் மணிமுடி தரிக்க பொன்னிழை பூண்டு அரியணையில் பெருமிதமோடு அமர்ந்திருக்கிறார்கள்.....!


அரியணையை ஆஜானுபாகுவான அனுமன் தாங்கி நிற்கிறான்!!


வாலியின் மைந்தன் அங்கதன் உடைவாள் ஏந்தி உயர்த்திபிடித்தான்...


லட்சுமணன் சத்ருகணன் ஆகிய இரு இளவலும் கவரி(சாமரம்) வீச...


பரதன் வெண்கொற்றகுடை தாங்கிபிடிக்க...


நறுமணம் கமழும் செறிகூந்தலாள் சீதை கற்புக்கரசியென ஓங்கி விளங்க..


வசிஷ்டமாமுனிவர் மௌலி-யை (கிரீடம்) ராமனுக்கு சூட்ட போகிறார்...,,,


இந்த இடத்தில் தான் கம்பன் விளையாடினான்...


மகுடத்தை அணிவித்தது என்னமோ வசிட்டர்தான் ஆனால் அதை அவருக்கு எடுத்து கொடுத்தது.. திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளலின் மரபில் முன்தோன்றிய முன்னோர்களாம்...! அவர்கள் கொடுத்ததை வாங்கி வசிட்டர் முடிசூட்டி வைத்தாராம்!!


எப்படி கதை..?!! கவனித்தீரா?


சடையனின் வம்சமரபே கதிமோட்சம் அடைந்துவிட்டது கம்பரால்!


ஆங்கிலத்தில் "Allo history" என்றொரு பதம் உண்டு.. அதாவது நிஜமான வரலாற்றின் ஊடே கற்பனை கதையை நிஜம் பாதிக்காத வண்ணம் நிழலாக சொருகிவிடுவது..!


தமிழில் "ஹேராம்" என்ற கமல் படம் அந்த வகையானது..!

(காந்தி கொல்லப்பட்ட அன்று வழிபாட்டு கூடத்துக்கு 2 நிமிடம் தாமதமாக வந்தார் என்கிற உண்மையை,,, அது ஏன் என்ற கற்பனை காரணத்தை புனைந்த திரைக்கதை அது...!)


அவ்வகையில்

கமலுக்கும் ஹாலிவுட்டுக்கும்...

கம்பன் முன்னோடி ஆவான்!!


-சூரியராஜ்

கருத்துரையிடுக

புதியது பழையவை