அண்மை

துணிந்த காதல் - குறுந்தொகை 17 கதை

 துணிந்த காதல்


சென்னை மாநகரின் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள- உயர்ரக வர்ணங்கள் பூசப்பட்ட பல அடுக்குகளை கொண்ட வீடுகள் அமைந்த தெரு ஒன்றில் இளமை ததும்பும் முகமும் ஒல்லியான மேனியும் சற்று படித்தவன் போல முக அமைப்பையும் உடைய வாலிபன் ஒருவன் அங்கு இருக்கும் பாதாள சாக்கடையை நோக்கிச் சென்றான். பணக்கார வர்க்கம் வாழும் அந்த தெருவில் பெரிதாக யாரும் நடமாட வில்லை. ஒரு சிலரே உடலை சீராக்க 'வாக்கிங்' செய்து கொண்டிருந்தனர். இவன் முகம் அங்கு வாழும் சில மக்களுக்கு பரிட்சயமான முகமே!. பாதாள சாக்கடையின் அருகில் சென்ற அவன் அதனுள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினான். இவன் முக அமைப்பும் இவன் தோற்றமுமே இவனுக்கு இந்த வேலைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை சொல்லியது. ஆனாலும் அவன் தொடர்ந்து பல மணிநேரம் கழிவுகளை தன் இரு கைகளாலேயே சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவனை ஏற்கனவே கண்டுள்ள சிலர் ஒரு ஏளன பார்வை அவன் மீது வீசி விட்டு தன் வழியே சென்றனர்.  அவனை அங்கு அலைந்து திரியும் நாய் கூட, அசட்டு பார்வையே பார்த்தது. அந்த வழியாக வந்த ஒர் பெண் அவனை பார்த்து 'இதெல்லாம் உனக்கு தேவையா? இப்பகூட சொல்றேன் இதெல்லாம் உன்னால முடியாது. போய் உன் வேலைய பாரு! ' என்று வஞ்சக சிரிப்புடன் கூற. அவனோ ஏதும் பேசாமல், எதையோ சாதிக்க நோக்கம் கொண்டது போல தொடர்ந்து கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தான்.


ஒரு வருடத்திற்கு முன்பு…


ராகவன் '24×7 பீட்சா அன்டு ஃவ்புட்' என்ற கடையில் இருந்து டெலிவரி செய்ய வேண்டிய உணவு பொருளை; பாதுகாப்பாகவும் சூடு தணியாமலும் வடிவமைக்கப்பட்ட ஒரு பையில் வைத்துக் கொண்டு காதில் 'ஹெட் ஃபோனை' மாட்டிக்கொண்டு வீடுவீடாக 'டெலிவரி' செய்ய புறப்பட்டான். இந்த 'டெலிவரி' செய்யும் வேலையில் சேர்ந்து ஒரு மாதமே ஆகிறது. சிறிது கடினமான வேலை சம்பளம் குறைவு என்றாலும்,தனக்கும் கணவனை இழந்த ஓட்டை குடிசையில் நொண்டி காலுடன் உள்ள தன் தாய்க்கும்- சம்பளம் போதுமானதாகவே இருந்தது.


வீடுவீடாக சென்று உணவுகளை டெலிவரி செய்யும் அவனிடம் மக்கள் பல விதமான அணுகுமுறையில் நடந்துகொள்வார்கள். சிலர் அலட்சியமாக பேசுவார்கள்; சிலர், உணவு கொடுக்க தாமதம் ஆனால் வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசுவார்கள் அதையெல்லாம் கேட்கும் அவன் மனம் அதிகம் காயம் அடையும் ஆனால் சிலரின் கனிவான நடத்தையும், பேச்சும் அந்த காயத்திற்கு மருந்தாக அமைந்ததாலே! இது வரையில் அவன் இந்த வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். 


அன்று ஆயிரம்விளக்கிலிருந்து 'பீட்சா' ஆர்டர் வந்ததால் அதை டெலிவரி செய்ய சென்றான். அங்கு சென்ற பின் எந்த வீடு என அறிந்துகொள்வதற்க்காக ஆர்டர் செய்யப்பட்டது எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.


"ஹலோ யாரு?"ஒரு பெண்ணின் குரல் புல்லாங்குழலில் இருந்து வரும் இனியகீதம்  போல இருந்தது‌. பெரிதாக அவன் ரசிக்கவில்லை ஆர்டரை கொடுத்தால் போதும் என்ற மனநிலையே இருந்தது.


"ஹலோ மேம்! பீட்சா ஆர்டர் பண்ணி இருக்கீங்க எங்க வீடுனு கொஞ்சம் சொன்னீங்கனா டெலிவரி பண்ணிடுவேன்!?"


"ரகுராமன் வீடு எதுனு கேட்டாலே சொல்லுவாங்க!"


"சரி மேடம், இதோ வந்துடுவேன்" அழைப்பை துண்டித்து விட்டு. ஒரு வழியாக விசாரித்து அந்த வீட்டினை அடைந்தான். அந்த வீட்டில் பிரபல கட்சியின் சின்னம் வரையப்பட்டிருந்தது. கண்ணாடிகளால் அமைந்த மாடி சுவர், உள்ளே இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட மர ஊஞ்சல்களை இவன் கண்டான்.அதிலிருந்தே இது  கட்சியில் பெரிய ஆளாக உள்ளவரின் வீடு என்று தெரிந்தது‌. ரகுராமன் என்ற பெயர் பொரிக்கப்பட்டிருந்த சுவற்றின் மேல் உள்ள 'காலிங் பெல்லை' அழுத்தினான் ராகவன். கதவு திறந்தது ஒர் பெண்; இல்லை தேவலோகத்து தேவதை! ஆம் அவளை கண்ட அவனுக்கு அப்படித்தான் தெரிந்தது.


மேலை நாடு உடை பாணியில், உடை அணிந்திருந்த அவள் பணத்தை தந்து உணவை வாங்கிக்கொண்டு ராகவனிடம் "ரோம்ப தேங்ஸ்" என்றாள். வெயிலில் வந்ததாலும் இவளை பார்த்த உணர்வினாலும் ராகவனுக்கு நாக்கு மேல் அண்ணத்தை வறுட சற்று தயங்கியவன் பின்பு "கொஞ்சம் வாட்டர் கிடைக்குமா?" என்றான் அவளிடம். "ஒன் மிநிட்" என்று கூறி அவள் உள்ளே சென்றாள். அவள் உள்ளே செல்லும் வரை இமை மூடாமல் அவளையே விழித்து பார்த்துக்கொண்டிருந்தான்.


"ஏ.. ஹர்சினி எங்க உள்ள போற?"


"குடிக்க வாட்டர் கேட்டாங்க அதான்.."


"வேற எங்கயாவது குடிக்க வேண்டியது தான? பொருள கொடுத்தோமா போனோமானு இல்லாம தண்ணீ கேக்குறான்?" என்று ராகவனை திட்டித்தீர்தாள் ஹர்சினியின் சக பணக்கார தோழி  சசீகா. 'பாட்டிலில்' பிடிக்க பட்டிருந்த நீரை எடுத்துக் கொண்டு வெளியில் நின்ற அவனிடம் தந்தாள். ராகவனும் தண்ணீர் குடிப்பது போல சிறிது நேரம் அவளை கண்களால் விழுங்கும் படி பார்த்தான். பின்பு  தன் பணியை செய்ய புறப்பட்டான். சில நிமிட ஒர் காதல் உணர்வு முடிவுக்கு வந்தது.


சில நாட்கள் கழித்து மீண்டும் அதே வீட்டுக்கு உணவு கொடுக்க சென்றான். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளிடம் அதிக நேரம் பேசி ஒர் நட்பை ஏற்படுத்திக் கொண்டான். பின்பு அழைபேசியில் நட்பாக பழகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒரு வருடங்கள் இருவருக்குள்ளும் காதல் ஆழமானது. அடிக்கடி அவளை சந்திக்க அவளது வீட்டு வழியாக செல்வான். அவளும் இவனை சந்திக்க தெரு முனையில் காத்திருப்பாள்.  ஹர்சினியின் தோழி சசீகாவுக்கு அறவே இவர்களது காதல் பிடிக்கவில்லை " போயும்… போயும்‌… ஒரு டெலிவரி மேன லவ் பண்ற, இதெல்லாம் நம்ம ஸ்டேடஸ்க்கு செட் ஆகாது" என்று ராகவனை பற்றி தர குறைவாக பேசுவாள். ஆனால் ஹர்சினியன் காதல் உள்ளப்புர்வமாக ஆனதால் அவனது வசதி பற்றி கருத்தில் கொள்ளவில்லை அவள்.


அவன் அடிக்கடி அங்கு வருவதை பார்த்த சக தெருவாசிகள் மூலம் ஹர்சினியின் தந்தை ரகுராமனுக்கு இவர் காதல் விசயம் காதுக்கு எட்டியது. அதனால் ஹர்சினியை வேறோரு வீட்டிற்கு கூட்டிச்சென்று ஒர் அறையில் பூட்டிவிட்டு அவளது 'செல் ஃபோனையும்' பறித்துக் கொண்டார். அது முதலே ராகவனால் ஹர்சினியை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. அவளை பார்பதற்க்காக அவள் வீட்டுக்கு வந்தான். அங்கு அந்த வீட்டின் கதவு அடைக்கப்பட்டு அதில் பூட்டும் தொங்கியது. அது அவன் காதலுக்கு போட்ட பூட்டுடாகவே தோன்றியது. 


இப்படியாக தொடர்ந்து அவள் வீட்டை நோட்டமிட்டான்; ஏமாற்றமே மிஞ்சியது. ஒர் நாள் எதர்ச்சியாக ஹர்சினியின் தோழி சசீகாவை பார்த்தான். பெரிதாக இவன் அவளிடம் பேசியதில்லை ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் உதவி கேட்க அவளை அனுகினான் "ஏங்க ஹர்சினி எங்கனு சொல்லுங்க? அவள ரொம்ப நாளா பாக்க முடியல! கால் பண்ணாலும் ரீச் ஆக மாட்டுது எப்புடியாது ஹெல்ப் பண்ணுங்க" 


"உனக்கு நான் ஏன் ஹெல்ப் பண்ணணும்"


"அப்புடி சொல்லாதிங்க… அவளுக்கு என்ன ஆச்சுனாவது சொல்லுங்க?" என்று ராகவன் கேட்க அவளும் நடந்தவற்றை கூறி நகர்ந்தாள். தொடர்ந்து பின் சென்ற அவன் "அவுங்க அப்பாக்கிட்ட நான் பேசுறன்! நான் பேசி சம்மதம் வாங்குறேன்! அவருக்கு கொஞ்சம் கால் பண்ணி தாங்க பிலிஸ்" 


முதலில் மறுப்பு தெரிவித்த அவள் பின்பு 'கால்' செய்து தந்தாள்.


"ஹலோ… சொல்லும் மா?"


"ஹலோ சார்!.. நான் ராகவன் பேசுறன் சார். ஹர்சினிய நான் நல்லா பாத்துபேன் சார். எங்கள சேர விடுங்க சார்!"


"டேய்… என்னடா என் பொண்ண நல்லபடியா பாத்துக்குற அளவுக்கு பணக்காரனா நீ? ஒழுங்கா ஓடிடு இல்ல உசுரு இருக்காது!"


"சார் நம்புங்க சார் அவளுக்காக என்ன வேனா செய்வேன் சார்"


"ம்ம்.....என்ன வேணாலும் செய்வியா!?"


"ஆமா சார்"


"ஃபோனை சசீகா கிட்ட கொடு" என்று அவர் சொல்ல - வாடிய முகத்துடன் அவளிடம் செல்போனை தந்தான். 'போலிஸிடம் சென்றாலும் வேலைக்கு ஆகாது. ஏனென்றால் அவருக்கு செல்வாக்கு அதிகம். ஆகவே அவர் சொல்வதை செய்து அவர் மனதில் இடம் பிடிப்பது தான் நல்லது' என்று அவனுக்கு தோன்றியது.


"ஹலோ அன்கிள்"


"அம்மா‌… அவளுக்காக என்ன வேனா செய்வானாம், நம்ம ஏரியாவுல உள்ள எல்லா டிரைனேஜயும் அவன் ஒத்த ஆளா சுத்தம் செய்ய சொல்லு. ஒன்னு அத செய்ய முடியாமல் ஓடிடுவான் இல்ல 'பாய்சன் கேஸ்'  தாக்கி செத்துடுவான் எப்புடியும் லாபம் நமக்குத்தான்! சரிமா வச்சிடுறன் கட்சி மீட்டிங் போனும்"


"சரி அன்கிள்"


"என்ன சொன்னாங்க? என்ன சொன்னாங்க? " படபடப்பு கலந்த ஆர்வத்துடன் ராகவன் கேட்டான்.


"அவ வீட்டுக்கு பக்கத்துல உள்ள எல்லா டிரைனேஜயும் நீ சுத்தம் பண்ணா உன்ன ஹர்சினியோட சேத்து வைக்குறதா சொன்னாரு, இதெல்லாம் உன்னால செய்ய முடியாது ரிஸ்க் அதிகம் ஒழுங்கா நீ அவள் மறந்துடுறது தான் நல்லது" 


"இல்ல அவள என்னால மறக்க முடியாது. அவளுக்காக நான் எதையும் செய்வேன். இத செய்யமாட்டனா! இத செஞ்சாவது நான் அவள கல்யாணம் பண்ணிப்பேன்!" புத்தி தடுமாறி உளறுவது போல அவன் உளற அதை கேட்ட சசீகா ' என்ன செஞ்சாலும் அது நடக்காது' என்று மனதில் நினைத்தபடி சென்றாள்.


ராகவனும் காதலுக்காக அதை  செய்ய முழு மனதுடன் தயாரானான்.


-குகன்


குறுந்தொகை 17 பாடல்


மா என மடலும் ஊர்ப; பூ எனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;

மறுகின் ஆர்க்கவும் படுப;

பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே


பேரெயின்முறுவலார் பாடல்


கருத்துரையிடுக

புதியது பழையவை