( முதல் பாகம் ) புகைக்கூண்டு
10. ஆக்கூவின் அதகளம்
குரவம், பாதிரி, குருக்கத்தி, ஊமத்தை என,,, மணங்கொள் - மென் வண்ண - பல்வடிவ மலர்கள்.... கானகமெங்கும் மடல்பூத்து .... அணிநிரல் ஒழுங்கில் மகரந்தம் ஏந்தி நிற்க,, அதை சிறிதும் பொருட்படுத்தாது, கீழே... தரையோடு தரையாக மண்டி கிடக்கும் சிறுநெருஞ்சிப் பூவின் பொன்மஞ்சள் துளி இதழையும் சில தும்பைச் செடிவகையறாவின் வெண்ணிற பூத்தளத்தையும் தேடித் தேடி வட்டமிட்டிருந்தது அந்த ஈக்களின் கூட்டம். அவை தேனையே தேடித்தேடிப் பருகியபோதிலும் அவை தேனீக்கள் அல்ல...! மேலும் அவற்றின் உருவளவு 'கடுகு'க்கு சிறகுமுளைத்தது போலதான் இருந்தது..! அதன் நிறம் வெந்தயத்தின் நிறத்தை ஒத்திருக்கும். நீரார்ந்த அந்த இடத்தின் எந்த கரையோரமும் இருக்கும் ஈரநில பசுந்தாவர புற்செடிகளின் பக்கம் கூர்ந்து நோக்கினால் இவற்றை காணமுடியும்.. காட்டுப் புற்களின் பூக்களிலும், கனிந்து கீழே விழுந்து கிடக்கும் கனிகளின் மீதும் கும்பலாக மொய்த்தபடி மேலும் கீழுமாக வட்டமடிக்கும்...! ஆதலால் அவற்றை "பழவண்டு" என்றுகூட சிலர் கூறுவதுண்டு! அவற்றையும் கூட கவ்வி பிடிக்க ஏராளமான எதிரிகள் அங்கு இருக்கத்தான் செய்தன.. தவளைகள், தேரைகள், ஓணான்கள், பச்சோந்திகள், அரணைகள், பல்லிகள், பாம்புகள், உடும்புகள் என அவற்றிலும் தான் எத்தனை ரகம்...!
தரையோடு உடல்இருத்தி, மண்ணோடு கண்வைத்து புல்வெளி பரப்பில் நாம் மெல்ல புரளுவோமே யாயின்,,
மண்ணிலிருந்து வெறும் ஒரு சாண் உயரத்திற்குள் இருக்கிற விவரிக்க முடியாத விந்தைமிகு தனிஉலகின் பிரத்யேகமான அழகிய சூழலியலை,,, அணு அணுவாக காணலாம்..!
ஒருவேளை நம்மால் எறும்பாக மாறி புற்களின் இடைவெளிகளில் உலவ முடிந்தால்,,, எண்ணில் அடங்கா அளப்பரிய உயிரினங்களையும் அவற்றின் வடிவழகையும், தகவமைப்பையும், செய்தியை செப்பும் பொருட்டு ரீங்காரமுடன் அவை ஆடும் நடனத்தையும், அவற்றின் போராட்டமயமான வாழ்வையும், வெகு சுலபத்தில் அற்பத்தனமாக எதிரிகளிடம் அவை கபளீகரம் ஆவதையும் அருகிலிருந்தவண்ணம் காணமுடியும்..!
சொற்ப ஆயுளில் அற்பமாக மடிந்தாலும்... நல்லவேளையாக, இயற்கை அவற்றிற்கு இணையற்ற இனப்பெருக்கத் திறத்தை அள்ளிக் கொடுத்திருப்பதால் அவற்றில் ஒன்று பிழைத்திருந்தாலும் முழு பூமியை நிறைக்கும் அளவு புதல்வர்களை பெற்றுத்தள்ளிவிடும் ஆற்றல் பெற்றிருந்தன !!
இருந்தென்ன...,
அவற்றிலும் பிழைக்கபோவது என்னவோ ஒன்றோ இரண்டோ தான்..! அப்படியிருந்தும் இவ்வுலகில் தான் எத்தனை கோடி பூச்சி இனங்கள்..!! வகைமாண்ட அவற்றின் தொகையை நினைத்தால் யாருக்குத்தான் திகைப்பாக இருக்காது?
சரி வர்ணனைகளை நிறுத்தி கதைக்குள் வருவோம்..,
நெருஞ்சிப் பூவையும் தும்பை மலரையும் வட்டமிட்டிருந்த ' ஈ ' வண்டுகளில் ஒன்று எதேச்சையாக சற்று உயரம் ஏற்றி பறந்து போக,, துரதிருஷ்டவசமாக ( நான் மேலே குறிப்பிட மறந்த அவற்றின் முக்கிய எதிரியான ) சிலந்தி விரித்த வலையில் சென்று சிக்கிக்கொண்டது..!
கணப்பொழுதில் நிலைமாறும் வாழ்வை என்னவென்று சொல்வது? மலர்களில் மது உண்டு மதிமயங்கி திரிந்த அந்த ஈ - யினது கர்ம பலனோ...? அல்லது
விடாமுயற்சியுடன் தினந்தோறும் வலையமைத்து இரை எதிர்நோக்கி வாரக் கணக்கில் பசித்திருக்கும் சிலந்தியினது தவப்பலனோ..? யார் அறிவார்..??
சிக்கிக்கொண்ட 'பழ வண்டு' தப்பிவிடும் நோக்கில் சிறகடித்து துடிக்கத் துடிக்க அது மேன்மேலும் மோசமாக சிக்கிக்கொள்ள நேர்ந்தது. அதுவரை தவம்காத்த சிலந்தி,, வலையின் அதிர்வலைகளை உணர்ந்த மாத்திரத்தில் சட்டென தவம்கலைந்து நகர்ந்தது... விரைந்துசெயலாற்றி தன் மணிவயிற்றின் நுனிமுகட்டிலிருந்து சுரந்த திரவ இழைகளை தன் எண் கரங்களாலும் எழிலுற எடுத்துநெய்து கண்ணிமைக்கும் நேரத்தின் கால்பங்கு கணத்திற்குள் பட்டுப்புழு கூடுபோல அந்த கடுகளவு பூச்சியை மூட்டையாகக் கட்டி எச்சில்சிறை எடுத்தது... இந்த எட்டுக்கால் பூச்சி!!
இரை கிடைத்தது என்பதற்காக உடனே பாய்ந்து சப்புக்கொட்டி தின்றுவிடவில்லை சிலந்தி.. ஏனெனில் அடுத்த இரை எப்போது கிட்டும் என சொல்ல முடியாது.. கிடைத்த இந்த இரையை வைத்துதான் மீத காலம் சமாளிக்க வேணும்.. ஆதலால் மேற்கொண்டு பசியை எவ்வளவுகாலம் பொறுத்திருக்க இயலுமோ அதுவரை காத்திருந்துவிட்டு பிறகு இந்த ஈ - ஐ ருசிபார்க்கலாம் என்ற எண்ணம் அதற்கு இருந்தது போலும்..! விரித்த வலையில் இரை வந்து விழுந்தது உழைப்புக்கேற்ற ஊதியமாய் கருதி ஊக்கமும் உற்சாகமும் பெற்ற சிலந்தி அடுத்தபடியாக தன் பேரரசின் எல்லையை விஸ்தரிக்க தொடங்கியது... அதாவது ஒரு தக்காளிச்செடியின் இரு இலைகாம்புகளுக்கு இடையில் மட்டும் பின்னப்பட்டிருந்த அதன் வலை இப்போது இரு கிளைகளுக்கு இடையிலென பரவலாக வளர்ந்தது... அறுகோண வடிவ வலை பன்னிரு கோணங்களாயின... எட்டுத்திசைகளிலிருந்தும் அதற்கான பற்றுக்கம்பிகள் உறுதுணையாக அதை தாங்கி பிடித்தன..
ஓரிடத்தில் வெகுநேர்த்தியாக பற்றுகம்பியில் ஒன்றை இழைத்து இழுத்துப்பின்னிய போது அந்த பயங்கரவிபத்து நேர்ந்தது. அவ்வழியே நடந்துபோன மானிடன் ஒருவன் கையில்ஏந்திய நீண்ட கவை கம்பு அந்த தக்காளிச்செடியினை உரசியவாறு சென்றது. அந்த விநாடிநேர உரசலில் நுண்மான் நுழைபுலமென நேர்த்தியாக பின்னப்பட்ட சிலந்திவலை சின்னாபின்னமாகி ஒடுங்கி பிய்ந்துபோய் ஒட்டடையாக தொங்கியது... பிய்ந்து போன மற்றொரு பாகம் அந்த கவை கம்புடன் ஒட்டிக்கொண்டு சேர்ந்து நகரத்தொடங்கியது.. அதனோடு அந்த சிலந்தியும் தொற்றிக்கொண்டு செல்லவேண்டியிருந்தது...!
வாசகர்கள் இனி,,
ஒரு சாண் உயர உலகிலிருந்து... எண்சாண் உயர உலகிற்கு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு, இனி வரும் காட்சிகளை காணலாம்.
அருவிக்கரை குகையிலிருந்து வெளியே வந்த ஆக்கூ, நன்னன், நந்து மூவரும் பொடிநடையாக நதியோரமாக நடந்து உலாவினர்..
நந்து முன்னே செல்ல.. ஆக்கூவும் நன்னனும் தீவிரமாக எதையோ விவாதித்தபடி வந்தனர்..
" நீ என்ன சொல்கிறாய் நன்னா!!அப்படியானால் பதுமன் நம்மோடு வர விரும்ப மாட்டான் என்கிறாயா..?"
"அவன் விருப்பத்தை பற்றி நான் கூறவில்லை ஆக்கூ..! அவன் நம்மோடு வருவதற்கான வாய்ப்பு குறைவு.. என்கிறேன்.. அவன் வேதியருக்கு கொண்டுவந்த செய்தி அத்தனை முக்கியமானதாக தோன்றுகிறது"
"அவன் தான்வந்த வேலையைப்பற்றி நம்மிடம் மூச்சு கூட விடவில்லையே... நீ ஏதும் தெரிந்துகொண்டாயா என்ன..?"
"எனக்கும் முழுசாக அதுபற்றி தெரியவில்லை ஆக்கூ..! ஆனால் அன்று நீ வேதியர்குடிலில் மரமல்லிகை மலர்களை எடுத்துவர வெளியே போன பிறகு.. வேதியர் பதுமனிடம், இன்னும் சிலநாட்கள் அங்கேயே தங்கும்படி கூறினார். மேலும் எக்காரணம் கொண்டும் அவனைப் பற்றிய சொந்த விவரத்தை அந்நியர் யாரிடமும் பகிரவே கூடாது என்றும் வலியுறுத்தினார்.. அதனால் அவ்வளவு சுலபத்தில் அவனை நம்முடன் அவர் அனுப்ப மாட்டார்!"
"ஓ..அப்படியா சங்கதி.. அதுசரி! பிறகு ஏன் அவனையும் நம்முடன் அழைத்துச்செல்ல வேண்டும் என நீ ஒத்தகாலில் நிற்கிறாய்.. என்றுதான் எனக்குப் புரியவில்லை.. நன்னா!
"காரணம் இதுதான்.. ஆக்கூ! எனக்கு எப்படியாவது அவர்கள் நம்மிடம் மறைக்கிற ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது..! நம்காட்டை தாண்டியும் இந்த அகண்ட உலகம் ஏதேதோ அதிசயங்களை கொண்டிருக்கிறாற்போல் தெரிகிறது.. அதில் சிறிதளவேணும் தெரிந்துகொள்ளாமல் செத்துபோய்விடக்கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்...!"
"ஆஹா..! அடா..அடா.! அப்படிச் சொல்லடா என் இனமே..! நானும் இருதினங்களாக அதுபற்றியே சிந்தனையில் மூழ்கிக்கிடந்தேன்..
எனக்கு எப்படியாவது வாழ்க்கையில் ஒரேஒரு முறையேனும் கடல்பயணம் செய்துவிட வேணும்.. கடலுக்கு அப்பால் இருக்கும் இன்னொரு தேசத்தை எப்பாடு பட்டேனும் பார்த்துவிட வேண்டும். வேதியர் பாய்மரங்களை பற்றி சொன்னதும் அந்த ஆசை வெறியாகவே மாறிவிட்டது.. எனக்குள்..!"
"ஓஹோ..! ஆக்கூ உன் ஆசையை கேட்டதும் எனக்கும்கூட என் ஆசையை மாற்றிக்கொள்ளளலாமா என்று தோன்றுகிறது.. ஹா..! ..ஹா..!"
இருவரும் மனம் திறந்து பேசுவதை கேட்டு முன்னே நடந்துகொண்டிருந்த நந்து, நின்று திரும்பி பார்த்தான்.
"என்ன நந்து! உனக்கும் இதுபோல ஏதும் ஆசை இருக்கிறதா..? இருந்தால் சொல்... ! ஆசைகளை வாய்விட்டு சொல்லினாலே பாதி பலித்துவிடும்...! அதுவும் இந்த மரங்களுக்கு முன்பு சத்தமாக சொன்னால் கட்டாயம் நடக்கும் என்று என் தாத்தா சொல்லுவார்.." என உற்சாக மிகுதியில் ஆக்கூ கூறினான்.
அதுவரை ஆவலோடு இருந்த நந்து.. ஆக்கூ இப்படி சொன்னதும் தன்னால் வாய்விட்டுச் சொல்ல இயலாது என்பதை எண்ணி நொந்து முகத்தை திருப்பிக்கொண்டான்.
நந்துவின் முகவாட்டம் ஆக்கூவிற்கு சங்கடத்தை உண்டாக்கியது.. "அச்சச்சோ தெரியாமல் உளறிட்டேன்.! நன்னா எதாவது சொல்லி சமாளியேன்!" என்று நன்னனை நோக்கி கும்பிட..
நன்னன் மெல்ல நந்துவிடம் சென்று..தோளில் கை வைத்து,, " இதோ பார் நந்து..! நம் ஆசைகளுக்கு ஆசி வழங்குபவை இந்த இயற்கைதான். இந்த மரங்கள்தான் நமக்கு வரங்களை தரப்போகிறது. வாய்விட்டு சொல்லவேண்டிய அவசியமில்லை.. இந்த மரங்களுக்கு பேச வாயுமில்லை! சொன்னால் கேட்க காதுகளுமில்லை! ஆனால் உணர்வுகள் உண்டு. நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும்... அவை அதை புரிந்துகொள்ளும். போ..நந்து! உன் உணர்வை வெளிக்காட்டு.. அவை நிச்சயம் புரிந்து கொள்ளும்!!" என நன்மொழி உரைத்தான் நன்னன்.
சற்றே முகமலர்ந்த நந்து ஓரிரு அடிகள் முன்னே சென்று இரு கைகளை அகட்டியபடி கண்களை மூடிக்கொண்டு பறவை போல பறந்து காண்பித்தான். மெதுவாக சுழன்று சுழன்று அங்கிருந்த அநேக மரங்களை செடிகளின் இலைகளை முத்தமிட்டான். ஒரு மரத்தை கட்டித்தழுவினான். பிறகு மீண்டும் கைகளை அசைத்து பறவை போல சைகைசெய்து கொண்டே பழைய இடத்தில் வந்து நின்றான்..!
அதை பார்த்த ஆக்கூ மெல்ல நன்னன் அருகில் சென்று அவன் காதில்,,
"பார்த்தாயா நன்னா ! இந்த நந்துவிற்கு பறக்கவேண்டும் போல ஆசையாம்! நடக்கிற கதையா ? " என்றான் .
"சும்மா இரு ஆக்கூ..! அவரவருக்கு அவரவர் ஆசை.. நியாயமானதே! அதில் இருக்கிற நம்பிக்கையும் உறுதியும் எதையும் நிறைவேற்றும்! ஏதும் சொல்லி அவனை மேலும் நோகசெய்யாதே!"
"மாட்டேன்.. மாட்டேன்.. ! அது நிறைவேறினால் உண்மையில் அவனைவிடவும் நான் அதிக மகிழ்ச்சி கொள்வேன்!"
மீண்டும் மூவரும் அருவிக்கரையைநோக்கி திரும்பி நடக்க தொடங்கினர்..
அதற்கு சற்று முன்னதாக..., நந்து கைகளை அகட்டி பறவைபோல சைகை செய்த போதுதான் எதேச்சையாக அந்த சிலந்திவலையை அவன் வைத்திருந்த கவைகம்பு மோதி உருக்குலைத்தது. அதன்பிறகு அந்த சிலந்தி அவன் இடையிலும் பின் படிப்படியாக முதுகிலும் ஊர்ந்து மேலேறியது.. கானகத்தில் உலாவும்போது இலைகளும் சருகுகளும் சில உதிர்கிற மலர்களும் இப்படி அடிக்கடி மேனியில் உரசி உரசி பழகிப்போனதால் நந்துவுக்கு இந்த பூச்சி மேனியில் ஊர்ந்தது ஒரு பொருட்டாக தெரியவில்லை..!
ஆனால் பின்னால் வந்துகொண்டிருந்த ஆக்கூவின் கண்களில் இது அகப்பட்டுவிட்டது..!
"ஆ...! நந்து... நந்து.. அசையாதே அப்படியே நில்..!" ஆக்கூ படபடப்போடு எச்சரித்தான்.
நந்துவும் நின்றுவிட்டான்.
நன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை..
ஆக்கூ தன் ஒருகையில் அகலமான இலையையும் மறுகையில் கீழேயிருந்து ஒரு சிறு குச்சியையும் எடுத்துக்கொண்டு நந்துவை நெருங்கினான். நந்து என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலுடன் திரும்பினான்.
"ச்சீ.. திரும்பாதேடா மடையா! சற்று பொறுமையாக இரு..!"
மிக லாவகமாக அந்த குச்சியால் சிலந்தியை தட்டிவிட்டு இலையில் விழ செய்தான். சிலந்தி ஏதோ தானாக தாவுவது போல அந்த இலையில் குதித்து பின்புறமாக சென்று ஒளிந்து கொண்டது..
ஆக்கூ இப்போது இருவரிடமும் அந்த சிலந்தியை காட்டினான்.
இருவரும் சற்று திகைப்படைந்தனர்..
"ஆ..! ஐயோ விஷ சிலந்தி!" நன்னன் கத்தினான்.
ஆக்கூ சிரித்தான்.. இலையோடு சிலந்தியை வைத்து விளையாட்டு காண்பித்தான்.
நந்து தன் முதுகை மீண்டும் தடவிப்பார்த்தான். இன்னும் ஏதோ ஊர்வதுபோல ஒரு பிரம்மையான உணர்வு இருந்தது அவனுக்கு...
பிறகு ஆக்கூ அந்த இலையை கரையோரமாய் இருந்த பாறையில் வைத்துவிட்டு,, இன்னொரு கல் ஒன்றை கையில் எடுத்து அந்த சிலந்தியை அடிப்பதற்காக கை ஓங்கினான்... ஓங்கிய கரத்தை நன்னன் கெட்டியாக பிடித்து தடுத்துவிட்டான்...
"நிறுத்து ஆக்கூ..! என்ன செய்ய பார்க்கிறாய்..!"
"ஏன்..? சாகடிக்க போகிறேன்.. கூடாது என்கிறாயா?"
"கூடாது.. கூடவே கூடாது!"
"ஏன்..கூடாது. உனக்கென்ன பைத்தியமா..? இது விஷ ஜந்து நன்னா! கொஞ்சம் விட்டிருந்தால் நந்துவிற்கு ஆறாத சிரங்கு புண்ணை உண்டு பண்ணியிருக்கும்..! கையை விடு.."
"அது விஷ ஜந்து தான் ஆக்கூ..! இதைவிடவும் நஞ்சுகொண்ட பிராணிகள் இங்கு வசிக்கத்தானே செய்கின்றன... அவை எல்லாவற்றையும் கொல்லப்போகிறாயா என்ன? "
(நன்னன் ஆக்கூவின் கையை விடுவதுபோல தெரியவில்லை..)
"ஆமாம் அவையும் என் வாழ்வில் குறுக்கிட்டால் கொல்வேன்தான்..!
இதோ இப்போது இது அபாயம் நிகழ்த்த பார்த்ததே..!..அது செய்த குற்றத்துக்கான தண்டனை இது என்று வைத்துக்கொள்..!!"
"அபாயம் நிகழ இருந்தது உண்மைதான் ஆனால் நீதான் நல்லவேளையாக அது நேராமல் காப்பாற்றிவிட்டாயே.. இப்போது அது பாவம் செய்யாத பூச்சி தானே..
பிறகு ஏன் நீ தண்டிக்க நினைக்கிறாய்..?""
"ஏனென்றால் இந்த வழியாக மறுபடி அதிகமுறை நான் நடமாட வேண்டிவரும்... அப்போது இது என்றாவது என்னை கடிக்க கூடுமல்லவா..? அதற்கான முன்னெச்சரிக்கைதான் இது"
"அடடே.! அறிவுக்கொழுந்து ஆக்கூ அவர்களே.. நீங்கள் பிறந்தது முதல் எத்தனையோ முறை இந்தப்பக்கம் வந்து போயிருக்கிறீர்கள்.. இத்தனை வயதுவரை உங்களை தீண்டாத விஷ ஜந்துகளா இனிமேல் தீண்டிடபோகிறது..?"
"அட ! என்ன இப்படி அசட்டுத்தனமாக இந்த சின்ன பூச்சிக்காக என்னுடன் தர்க்கம் செய்கிறாய் நன்னா..! சரி விடு.. நான் இதை ஒன்றும் செய்யவில்லை.. போதுமா..!"
"போதாது ஆக்கூ..! இந்த பூச்சிக்காக உன்னுடன் வாதாடவில்லை.. நான் உன் மனதில் எழுகிற கொலைவெறி யைத் தணிக்கப் பார்க்கலாமே என்றுதான் வாதாடுகிறேன்.."
"என்னை பார்த்தால் கொலைவெறி பிடித்தவனாக தோன்றுகிறதா.. உனக்கு?"
"இன்னும் வெறி பிடிக்குமளவு போகவில்லை.. ஆனால் நீ விளையாட்டாகவே எவ்வித காரணமும் இன்றி தான்தோன்றித்தனமாக உயிர்வதை செய்து திரிகிறாய்....!"
"என்ன...? நானா..? அதுசரி..அப்படி பார்த்தால் சென்னி கூடத்தான் வேட்டையாடுகிறேன் என்றுகூறிக்கொண்டு துடிக்கத் துடிக்க மிருகங்களை கொல்கிறான்.. அதற்கு உன் அகராதியில் என்னவென்று பெயர்வைத்துள்ளாய்..?"
"அவனுக்கு உண்மையில் கொலைசெய்வதில் நாட்டம் இல்லை..ஆக்கூ.! அவன் நோக்கமும் திருப்தியும் வேட்டையாடுவதில் இருக்கிறது..! ஆனால் நீ கொல்வதில் தான் அதிக விருப்பம் கொண்டிருக்கிறாய்.. அதுவும்
உன்னை விட அற்பமான வலுகுறைந்த ஜீவன்களிடம்... பலத்தை காட்டுகிறாய்..! அற்ப காரணங்களுக்கெல்லாம் அடிக்கடி தன் பலத்தை இவ்வாறு காட்டுவதற்கு என் அகராதியில் 'பலாத்காரம்'
என்று பெயர் வைத்திருக்கிறேன்..."
"நிறுத்து நன்னா ! போதும்... உன் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி!"
என்று சொல்லியபடி ஆக்கூ தன் இன்னொரு கரத்தால் அந்த சிலந்தி இருந்த இலையை அப்பால் வீசி எறிந்தான்.. அது அங்கிருந்த புதரில் போய்விழுந்து மறைந்தது..
நன்னன் தற்போது ஆக்கூவை தன் பிடியிலிருந்து தளர்த்தினான்.
இங்கு இவ்வளவு நடந்துகொண்டிருக்க நந்துவோ வேறு ஒரு திசையில் மேலும் கீழுமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான்.. நன்னன் இப்போது அவனிடம் சென்று "என்னவாயிற்று நந்து...?" என வினவ..
"உஷ்.....!!!" என ஓசையுடன் உதட்டில் விரலை வைத்து சைகை செய்தான் நந்து..
அவன் எதையோ கூர்ந்து செவிமடுத்தவாறு இருந்தான்..
முதலில் என்னவென்று புரியாமல் இருவரும் குழம்பிநிற்க.. பின்பு ஆக்கூ எளிதாக இனம் கண்டு சொன்னான்..
"இதுநம் கிளி எழுப்புகிற ஒலி அல்லவா..!"
சட்டென நந்து ஒரு குறிப்பிட்ட திசைநோக்கி வேகமாக நடந்தான்.. அவன் எடுத்து வைத்த மூன்றாவது அடியில்.. அந்த பஞ்சவர்ணகிளியே எதிர்கொண்டு
வந்து அவன் மீது மோதி படபடத்தது..
"வா... வா... !""
""சின்னி.. சின்னி.!!."
என அது பேசிக்காட்டியது.. சிறகடித்து மீண்டும் படபடத்தது
சென்னிக்குதான் ஏதோ ஆபத்து என்பதை நந்து புரிந்துகொண்டான்.
அப்போதும் ஆக்கூ நன்னன் இருவரும் புரியாமல் விழித்தனர்..
"இது எங்கிருந்து இப்போது வந்தது..?" என்றான் ஆக்கூ
"யாரையோ எதையோ பார்த்து பயந்திருக்கிறது..!." என்றான் நன்னன்.
நந்து இருவரையும் தன்னை பின்தொடருமாறு சைகையில் சொல்லி முன்னே விரைந்தான்....
இருவரும் அவ்வாறே பின்தொடர்ந்து ஓட..
பஞ்சவர்ணகிளி அவர்களுக்கு வழிகாட்டியது...
**** **** **** **** *** ****
ஆஜானுபாகுவான ஆட்கள் சென்னியை துரத்திச்சென்று பிடிக்க முயன்றனர். சென்னி பாதையை விட்டு நகர்ந்து காட்டின் குறுகிய புதர்களிலும் புகுந்து போனதால் அவனை அவ்வளவு எளிதில் அவர்களால் பிடிக்க முடியவில்லை..! ஆனால் அந்த குரங்கினை அவர்கள் விடுவித்துவிட்டதால் அது மரங்களில் கிளைகளில் உயரத்தில் ஏறிநின்று சென்னி எங்கு ஓடுகிறான் என்பதை எளிதில் கண்டறிந்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டது. பிறகு அவர்கள் மூவரும் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்று சென்னியை ஒரு கட்டத்தில் சுற்றி வளைத்து விட்டனர். சென்னி தன் ஈட்டியை தயாராக இறுகப் பற்றிக்கொண்டான். சண்டை தொடங்கியது.....!
மூன்றுபேருமே சென்னியை விட உயரமானவர்கள் வாலிபத்திலிருந்து நடுத்தரவயதை தொடப்போகிறவர்கள்.. பலமுறை சண்டைகளில் வேட்டைகளில் ஈடுபட்டு அநேக காயங்களை தழும்புகளை உடலில் உடைபோல பெற்றிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்ட பாஷையும் புரியாததாக (அந்நியமாக) இருந்தது. ஆனால் சென்னி தன்னிடம் தான் எதையோ சொல்லி மிரட்டி கேட்கிறார்கள் என்பதை அவர்களின் கொடிய பார்வையையும் உடல்மொழியையும் வைத்து புரிந்துகொண்டான்.. இருந்தும் ஏதும் புரியாதது போல ,,
"யார் நீங்கள் வழியை விடுங்கள்!"
என்றே பேச்சை தொடங்கினான்.
அதற்கு அவர்களிடமிருந்து ஒரு 'உதை'தான் பதிலாக கிடைத்தது..!
கீழே விழுந்த சென்னி தன்னை உதைத்தவன் கண்களில் மண்ணை வாரி வீசினான். அவன் கண்களை கசக்கிய கணத்தில் தன் ஈட்டியால் அவனை அடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்தான். ஆனால் அதற்குள்ளாக மற்ற இருவரும் கைகளில் ஒரு வலுவான கயிறை கொண்டு சென்னியை சுற்றிவளைத்து கட்டி இறுக்கினர். சென்னியால் அவசரத்துக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. பிறகு அவனை மரத்தில் கட்டிவைத்துவிட்டு அவனது இடையில் இருந்த தோல்பையை அவர்கள் அபகரித்துக்கொண்டனர்.
அதிலிருந்த மரகத கற்களை ஒருவன் எடுத்து எண்ணினான். மற்ற இருவரும் அவனது மூட்டையில் எதாவது இருக்கிறதா என ஆராய்ந்தார்கள். இந்த சமயத்தை பயன்படுத்திய சென்னி தன் வலது காலை மடக்கி அதில் சொருகி இருந்த கற்கத்தியை கையில் எடுத்தான். தன்னை கட்டியிருந்த கயிறை அவர்கள் அறியாத வகையில் மெதுவாக அறுத்தெறிந்தான். அவர்கள் அதை கவனிக்காத போதிலும் அந்த வானரம் அதை நோட்டமிட்டு கூச்சலிட.. அவர்கள் சென்னி தப்பிக்க முயலுவதை கண்டுகொண்டனர். ஒருவன் மட்டும் கையில் பெரிய மூங்கில் கழியோடு சென்னியை நோக்கி சென்றான். சென்னி தன் ஈட்டியால் அவனை தடுத்து நிறுத்தினான். மூங்கில் கழியும் சென்னியின் ஈட்டியும் மாறிமாறி சுழன்றன.
"டிங்...டடக்.. டிங் டடக்.. மொடக் கடக்.."
என நீண்டநேரமாக அவர்களின் சண்டை ஒலியெழுப்பிய வண்ணம் தொடர்ந்தது. சென்னி சிறப்பாகவே யுத்தம் செய்தான். ஆனால் இன்னொரு ஆளும் வந்து சென்னியை தாக்க தொடங்க அவனால் சமாளிக்க முடியவில்லை. மேலும் அந்த ஆள் கையிலிருந்த சாட்டையை சொடுக்கிட அது சென்னியை 'சுளீர்'
என அடித்து காயப்படுத்தியது...! சென்னி சுருண்டு விழுந்தான்.
பிறகு அந்த ஆள் சென்னியின் ஈட்டியை பிடுங்கி அதனை கொண்டே அவனை குத்திவிட அதை ஓங்கினான்....,,
ஓங்கியவன் பின்மண்டையில் அடுத்தடுத்து இரு கருங்கற்கள் பின்புறமிருந்து பாய்ந்தன...
கதிகலங்கி போன அந்த ஆள் ஈட்டியை கீழே போட்டு தலையை பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தான்..
நந்துவும் நன்னனும் அங்கே பிரவேசித்தனர்....!
இவர்களின் வருகையை சற்றும் எதிர்பாராத கறுத்த அந்த
ஏனைய இரு முரட்டு ஆட்களும்
சட்டென சுதாரித்துக்கொண்டு தங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர்..
நன்னன் அவர்களிடம் ஏதோ பேச முயன்றான்.... ஆனால் அவர்கள் அதற்கு அவகாசமே தராமல் கயிறுகளில் சுருக்குபொறி மாதிரி முடிச்சுபோட்டு சுழற்றி வீச அது சரியாக நன்னனை சுற்றிவளைத்தது... நந்து அதிலிருந்து தப்பித்தாலும் இன்னொருஆள் தன் ஈட்டியால் அவனை தடுத்து நிறுத்தினான்.
பிறகு மற்றவர்களை பார்த்து அவன் சொன்னான், "தேடிவந்தது கிடைத்து விட்டது..! இவர்கள் மூவரையும் இங்கேயே தீர்த்துவிடு நாம் புறப்படலாம்..!" என்றான்.
அந்த ஆள் உரைத்ததை கேட்டதும் நன்னனும் சென்னியும் நடுநடுங்கி போனார்கள்.. ஆனால் நந்து அங்கு இன்னொருவனின் வருகையை எதிர்பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான்..!
அதற்கேற்ப சற்று காலதாமதமாக அந்த இடத்திற்கு ஆக்கூ வும் வந்து சேர்ந்தான்.
ஒருகணம் அங்கிருந்த சூழலை நோட்டமிட்டான்..
ஏழடிஉயர நடுத்தரவயது கருத்த தடியர்கள் மூன்றுபேர் புதிதாக நின்றிருந்தனர்... ஒருவன் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இன்னொருவன் கையில் மூட்டையும் தோல்பையும் கையில் சாட்டையுடன் இருந்தான்.
மூன்றாவது ஆள் ஈட்டியை ஏந்தி நந்துவின் மார்பில் குத்திவிடுவதுபோல பிடித்திருந்தான்.. கீழே சென்னி அரை மயக்க நிலையில் மிகுந்த களைப்பில் சோர்வடைந்து கிடந்தான். நன்னனை அவர்கள் கயிறுகொண்டு சுருட்டி கட்டிப்போட்டிருந்தனர்...
நன்னனை பார்த்த ஆக்கூவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
"என்ன நன்னா! இப்படி..கூட்டுப்புழு கூடுகட்டியதுபோல கிடக்கிறாய்..!!"
"ஏன் கேட்க மாட்டாய்..? எல்லாம் என் நேரம்.. சரி சரி இந்த மூன்று ராட்சதர்களை அடித்துவிரட்டி எங்களை காப்பாற்று... சீக்கிரம்!"
"பொறு பொறு.. முதலில் பேசி பார்ப்போம்...!"
"அடேய் ஆக்கூ..! பேச்சுவார்த்தைக்கு இது நேரமில்லை.. அவர்கள் அதற்கு தயாராகவும் இல்லை..! பேச முயன்ற என்கதியை பார்க்கிறாய் அல்லவா?.. அதனால்தான் சொல்கிறேன் உன் பலத்தை பிரயோகித்து எங்களை காப்பாற்று..!"
"ஆனால் நீதானே சொன்னாய்.. அடிக்கடி அற்பதனமாக பலத்தை காட்டகூடாது என்று.... அநாவசியமாக பலத்தை பிரயோகிப்பது பலாத்காரம் என்றாயே...?"
"அடா..டடா..! உன்னை விட பலவீனமானவர்களிடம் உன் பலத்தை காட்டுவதைதான் 'பலாத்காரம்' என்றேன். உனக்கு இணையானவர்களுடன் மோதுவது பலாத்காரம் ஆகாது..!
அதன் பெயர் 'பராக்கிரமம்'....! ஆக்கூ நீ பராக்கிரமசாலி.... சீக்கிரம் எங்களை விடுவி!"
நன்னன் அவ்வளவு சொல்லியும் ஆக்கூ செயலின்றி சிந்தித்திருந்தான்.. அதை பார்த்த சென்னி கேட்டான் "அதான் நன்னனே சொல்லிவிட்டானே இன்னும் என்ன தயக்கம் ஆக்கூ..?"
"ஒன்றுமில்லை இவர்கள் எனக்கு இணையானவர்களா என்று யோசிக்கிறேன்... அப்படி தோன்றவில்லையே..?"
ஆக்கூ சொன்னதை கேட்டு நன்னனும் சென்னியும் வாயடைத்து போக..
நந்து தன்னை ஈட்டிமுனையில் நிறுத்தியவனை உதாசீனம் செய்துவிட்டு சென்னியை கைகொடுத்து தூக்கிவிட்டான்.
அவ்வளவு உரையாடலையும் கேட்டிருந்த மூன்று ராட்சதர்களும் தங்களுக்குள் ஏதோ சம்பாஷித்துவிட்டு ஆக்கூவை நோக்கினர்... அதில் ஒருவன் ஆக்கூவிடம் வந்து,,
" நீ என்ன காட்டின் காவல் வீரனோ..?" என்றபடி ஈட்டியை நீட்டினான்.
ஆக்கூ அவன் கையிலிருந்து அதை வெடுக்கென பிடுங்கி இரண்டாக முறித்து எறிந்துவிட்டு சொன்னான்.
" இல்லை..,, நான் காட்டில் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்பவன்...! இடுகாட்டின் இளவரசன்...! "
திகைப்படைந்த அந்த ஆட்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு ஒன்றாக சேர்ந்து அவனை அடிக்க முயன்றனர்.. ஆக்கூ முதலில் சாட்டை வைத்திருந்தவனிடமிருந்து அதை லாவகமாக பறித்து அவனை முதலில் 'சுளீர் சுளீரென' வெளுத்து வாங்கினான்... அதற்குள் இன்னொருவன் ஓடிவந்து பின்புறமாக ஆக்கூவை பிடித்துக்கொள்ளவே.. ஆக்கூ அப்படியே பின்பக்கமாக வேகமாக நிலத்தில் விழுந்தான்,, பின்னால் பிடித்தவனின் முதுகெலும்பு ஆக்கூவின் எடை பாரத்தால் விலகி விரிசலடைந்தது..!
இன்னொருவன் கயிறுகொண்டு ஆக்கூவை பிடிக்க முயன்றான். ஆக்கூ அந்த கயிற்றை பிடித்து வீசியவனையே இழுத்து தள்ளிவிட்டு ஏறி மிதித்தான்...!
இதற்கிடையே அங்கிருந்த மரத்தின்கிளையில் அந்த வானரமும் கிளியுடன் சண்டைபோட்டபடி இருந்தது.. அதைகவனித்த நந்து அங்கு விரைந்து கிளியை கூப்பிட்டான் பஞ்சவரணம் பறந்துவந்து அவன்தோளில் அடைக்கலமானது.
பிறகு அந்த குரங்கை நோக்கி கண்களால் ஏதோ சைகைசெய்து மூக்கை புடைத்து காட்டினான் நந்து. குரங்கு வாயை பிளந்து தன் கோரபற்களை காட்டியது. நந்து பதிலுக்கு அதை முறைத்து கொறிப்பது போல வாயை அசைத்தான்.. நாக்கை துருத்தி ஏதோ விதவிதமான ஊமை ஒலி எழுப்பினான்... அவ்வளவுதான் அந்த வானரம் தலைதெறித்து ஓடிவிட்டது.. திரும்பி வரவே இல்லை..!
அவர்கள் மூவரும் தனித்தனியாக எத்தனை விதமாக முயன்றாலும் ஆக்கூவை சீண்ட கூட முடியவில்லை. அவன் அநாயசமாக அவர்களை அடித்து துவம்சம் செய்தான். மூவரையும் தரையில் மறுபடி மறுபடி வீழ்த்தி சாய்த்தான்.
தங்களைவிட வயதில் குறைந்த ஒரு இளைஞனால் வீழ்த்தப்படுவதை விரும்பாத அவர்கள் கொதிப்படைந்து போய் அதீத ஆவேசத்துடன் ஏதேதோ புரியாத மொழியில் வசைமொழிந்தபடி கயிறுகளை இணைத்துக் கட்டி ஆக்கூவின் மீது வலைபோல வீசி மாட்ட செய்தார்கள்.. உடன் இன்னொருவன் கிளைத்த தடிக்கம்பு ஒன்றால் ஆக்கூவை பலமாக அடி அடி என அடித்து தாக்கினான்.. ஆக்கூ மேனியிலிருந்து உதிரம் லேசாக கசிந்தது...
சென்னியும் நன்னனும் பதறிப்போனார்கள்.. ஆனால் அது ஆக்கூவை நினைத்து அல்ல....!
"அட மூடர்களே.. ! நீங்கள் உங்கள் வாழ்வின் மாபெரும் தவறை செய்து விட்டீர்கள்...! உடனடியாக ஓடிவிடுங்கள்..!" என்று நன்னன் எச்சரித்தான்.
இது விசித்திரமாக தோன்றியது அம்மூன்று தடி மாந்தர்களுக்கும்..
ஆனால் அடுத்த சில விநாடிகளில் தங்கள் தவறை அவர்கள் உணர்ந்தனர்...
எதிர்பாராத பலமான அடியால் ஆக்கூ திடீரென ஒருவித மயக்கநிலை அடைந்தான்.. அவன் குரல்வலையிலிருந்து... ஓ..ஓ...!! என்ற ஓலக்குரல் சங்கின் முழக்கம்போல வெளிவந்தது.. பிறகு புலியினை போல பலமாக உறுமினான்.. மூடி இருந்த கண் இமைதிறந்தபோது ரத்தம் வழியாத குறையாக விழித்திரை சிவந்திருந்தது.. கிட்டத்தட்ட ஆக்கூ ஒரு பிசாசு போல மாறிவிட்டான்...!
இருந்த இடத்திலிருந்து ஒரு தவளையை போல வெடுக்கென தாவி தன்னை பலமாக அடித்தவனின் மீது பாய்ந்தான்... அவன் பாய்ந்த வேகத்தில் அவனை கயிறால் இழுத்துபிடித்திருந்த இருவரும் நிலைகுலைந்து கீழே சரிந்தனர். ஆக்கூ எவன் மீது பாய்ந்தானோ அவன் நிலைமை சொல்லமுடியாத இன்னல்களை சந்தித்தது.. எடுத்த எடுப்பிலேயே அவனது இரு விழிகளை கட்டை விரல் நகத்தால் பிடுங்கி எறிந்தான் ஆக்கூ. அலறிய அவனது வாயை அவன் கையிலிருந்த கட்டையையே பிடுங்கி ஒரே அடியாக அடிக்க,, ஒரு
சில பற்கள் தெறித்து விழுந்தன.. அதோடு அவன் ஆட்டம் முடிந்தது..!
இன்னொருவன் ஓடிவந்து ஆக்கூவை முதுகுபுறமாக பிடிக்க முயன்றான்.. அவன் மேல் அடுத்தடுத்து இடியென ஆக்கூவின் கரங்கள் நொடிக்கு நாலுமுறை "படார்..தடார்..டமார்" என விழுந்ததில் அவன் தேக எலும்புகள் சுக்கல் சுக்கலாக நொறுங்கி..போனது. நிற்க கூட சக்திஇன்றி பொத்தென விழுந்தான் அவன்!
இருவரின் நிலையைக் கண்டு மூன்றாமவன் ஆக்கூ வை பார்க்கவே அஞ்சி நடுங்கி அலறியபடி ஓடினான்.. ஆனால் ஆக்கூ அவனையும் விடாமல் பாய்ந்து தாக்கியதோடு அவன் கால்களை பிடித்து இருமுறை பக்கவாட்டில் முழுமையாக சுற்றி ஒரு மரத்தின் மீது வேகமாக வீசி எறிந்தான்.... மிகுந்த விசையினில் மரத்தில் மோதியதில் அவன் உடல் மரத்தினோடு மரமாக சொருகி கொண்டது போல் ஆயிற்று..! சுயநினைவும் இழந்தான் அவன். அதோடும் ஆக்கூ நிறுத்தவில்லை. கீழே கொடிபோல ஓடிவிரவி படர்ந்திருந்த நெருஞ்சி முள் கொடியை மடமடவென உருவி உறுதியான அதன் தண்டுகொடியால் அந்த மனிதனை மரத்தோடு மரமாக இறுக பிணைத்துக்கட்டினான்.. அதன் அநேக பசும் முட்கள் அவன் நினைவுதிரும்பி அசைந்தாலோ புரண்டாலோ உடலை சல்லடையாய் துளைத்துவிடுமாறு கட்டப்பட்டிருந்தது...
வெறியாட்டம் போட்டுவிட்டு செய்வதறியாது நின்றிருந்த ஆக்கூவின் அருகில் லேசான நடுக்கமோடு நன்னன் சென்றான்.
முதுகைகாட்டி நின்றிருந்த ஆக்கூ வேகமாக தொடர் பெருமூச்செறியும் ஓசை கேட்டு நன்னன் மேனி புல்லரித்துப்போனது!
- சூரியராஜ்
இந்த அத்தியாயம் எனக்கொரு புது அனுபவம்,
பதிலளிநீக்குGoogle Go மூலம் ஒலி புத்தகமாக இந்த அத்தியாயத்தை ரசித்தேன்.
கணினி குரலில் கூட, ஆக்கூவின் அதகளம் மிகவும் அதிரடியாக இருந்தது.
"வாசகர்கள் இனி,,
ஒரு சாண் உயர உலகிலிருந்து... எண்சாண் உயர உலகிற்கு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு, இனி வரும் காட்சிகளை காணலாம்"
"ஆகா.. என்னதொரு வரி...அனுபவித்தது போன்றொரு உணர்வு"
இது தந்திர உலகமல்ல,
வாசகனை கட்டுவிக்கும் மந்திர உலகம்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇயற்றிய பொழுதின் பெரிதுவக்கும் தன்கதையை போற்றியது கேட்ட கதைசொல்லி
நீக்கு