அண்மை

தந்திர உலகம் - 11.தீர்க்க தரிசனம்..!

 ( முதல் பாகம் ) புகைக்கூண்டு

11. தீர்க்க தரிசனம்..!




காரிருள் படர்ந்த அர்த்த யாம நேரம்...  திமுதிமுவென சூழ்ந்து திரண்ட மேகபுயல்களால் வானின் இருள்மட்டும் வெட்டும் மின்னொளியில் மிளிர்ந்து மிளிர்ந்து தன் கோர முகத்தை காண்பித்தது...  மழை ஆக்ரோஷமாக கொட்டவில்லை. ஆனால் பெய்து கொண்டிருந்தது..! அடர்வனம் சூழ்ந்திருந்த பரந்த மைதானம் மழைநீரால் ஈரம் தேங்கி நனைந்துகொண்டிருந்தது. அவ்வபோது பிரளயகால பேரொலி வடகிழக்கு திசையிலிருந்து ஆரம்பித்து

 'டம்.... டும். டடும்... டம டம டமா..' லென 

நாலாபுறத்தையும் நடுநடுங்க செய்துகொண்டிருந்தது.. ஒவ்வொரு முறை மின்னல் வெட்டும்போதும் அந்த நொடிப்பொழுது நேரம் மட்டும் ஒருசில காட்சிகள் கண்ணில் அவ்வபோது தோன்றி மறைந்தன..!


சேறாகி போயிருந்த மைதான நிலத்தில் அந்த மின்னல் ஒளியில் ஏராளமான மண்டை ஓடுகள் சிதைந்தும் நொறுங்கியும் அரைகுறையாக அமிழ்ந்தும் விழியற்ற இரு கருந்துளை கண்குழிகளுடன் ஆங்காங்கே சிதறி கிடந்தன.. மனித மற்றும் கால்நடை மிருகங்களின் எலும்பு சட்டகங்களும் அநேக தொலைவிற்கு அந்த இருள் சூழ்ந்த மைதானத்தின் புதைசேற்றிலிருந்து புலப்பட தொடங்கின... 


மழைசற்றே ஓய்வதுபோல தோன்றும் போதெல்லாம் "ஹோ......ஓ...ஓ.." என்ற ஓசையோடு தூரத்து மரக்கிளைகள் பேயாட்டம்போட.. சூறைகாற்று சுழன்று வீசி வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருந்தது..!


துர்நாற்றம் வீசுகிற இந்த சகிக்க முடியாத இடத்தை நோக்கி பத்து, பன்னிரண்டு ஆதிவாசிகள் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலம் போல வரிசையாக வந்து கொண்டிருந்தனர். காற்றிலும் மழையிலும் அவர்களில் ஒருசிலரின் தீப்பந்தம் அணைய நேரிட்டபோதில் மற்றவர்களின் எரிகிற பந்தங்களில் காட்டி தனது அணைந்த தீயை மீண்டும் பற்றவைத்து ஏந்திக்கொண்டு மீண்டும் நடந்தனர். பலமான இடி இடித்து,, தரையில் கண்முன்னே காற்றையும் இருளையும் கிழித்துக்கொண்டு இடி இறங்கும்போதெல்லாம் ஒருகணம் நின்று நடுங்கி பிரம்மித்து விக்கித்தவர்கள் ,,, பிறகும் விடாபிடியாக தங்கள் பயணத்தை  தொடர்ந்தனர். 


அவர்களில் இரண்டு இரண்டுபேர் நீண்ட வாழை இலைகளை கொண்டு எதையோ சுருட்டி கட்டி தூக்கிவந்தனர். பள்ளமான அந்த சேற்றுமைதானத்தின் தெற்குமூலையில் மேடானா ஒரு நிலப்பரப்பு இருந்தது.. அங்கிருந்த ஆத்து பூவரசு மரத்தின் வேர்கள் அந்த இடம் மண்ணரிப்பு ஏதும் ஏற்பட்டிராமல் காப்பாற்றி அதனை மேட்டுநிலமாகவே பத்திரப்படுத்தி வைத்திருந்தது.


மின்னல் கீற்றொளி தோன்றும்போதெல்லாம் அந்த ஆத்துபூவரச மரத்தடியில் மேடான இடத்தில் ஒரு மனிதன் உக்காந்திருப்பது தெரிந்தது.. அவன் தன் எதிரே அந்த மழைநேரத்திலும் கொழுந்து விட்டெரியும் வண்ணம் பிரமாதமான தீயை மூட்டி வளர்த்திருந்தான்..


அவன் மேனி முழுக்க... முகம் உட்பட செந்நிற வண்ணம் பூசப்பட்டிருந்தது. ஒருவித விஷேஷ அரக்கு மெழுகினால் அவ்விதம் பூசியிருக்க கூடும். நெற்றியில் கண் இமைகளில் கருஞ்சாந்து மை எடுத்து கோடுகள் வரைந்திருந்தான். தலையில் முடித்து கட்டிய ஜடாமுடி முதுகுவரை தொங்கிபுரண்டது. இடையில் மட்டும் ஏதோ மிருகத்தோல் அணிந்திருந்தான்..

அந்த மனிதனின் முகத்தில் பைசாந்தியனின் முகஜாடை இழையோடியது...!


கொண்டுவந்த வாழைஇலை சுற்றிய இரண்டு கட்டுகளை அவன்முன்னால் போட்டார்கள்.. அவர்களில் ஒருவன் அவற்றை கட்டவிழ்த்து திறந்தான். அதில் ஒவ்வொன்றிலும் உயிரற்ற மனித பிரேதம் சவமாக இருந்தது..!


"இலைகளை நெருப்பில் போடுங்கள்... ! " அந்த சிவப்பு மனிதன் உரக்க சொன்னான்.


வாழை இலைகளை நெருப்பில் போடவும் ... தீ யின் உயரம் குறைந்தது.. ஆனால் அணையவில்லை!  இலைகள் தான் விரைவில் கருகி வாடின.. 


பிறகு ஒரு கலசத்தில் ஏதேதோ பொடிகளை மூலிகைகளை கலந்து வைத்திருந்ததை எடுத்து,, வந்திருந்த பத்து பன்னிரண்டு ஆட்களுக்கும் சிறிதளவு தந்து கைகளை கழுவச்சொல்லி.. சில மந்திரங்களை உச்சாடனம் செய்தான். அவன் சொன்னதை அவர்கள் எல்லாருமே கேட்டு வாங்கி திருப்பி ஓதினர்.



"பானை தாழி எதுவும் கொண்டுவரவில்லையா...?"



"இல்லை..யே"



"அப்படியானால் இதை அடக்கம் செய்வதற்கில்லை.. எரியூட்டப்படும்!"


"ஓ..! என்னமோ செய்யுங்கள்! ஆனால் வழக்கம்போல சிரத்தை கொய்து தந்துவிடுங்கள். அதற்கு மட்டும் சடங்கு செய்து கொள்கிறோம்..!"


"பாவ புண்ணியங்களை நம்புகிற வரை பயமும் சந்தேகமும் உங்களை விடப்போவதில்லை!  மூட வழக்கத்தில் ஊறிய உங்களை ஒருபோதும்திருத்தவும் முடியாது..! சற்று பொறுங்கள் தந்துவிடுகிறேன்..!"


"ஆ..! சீக்கிரம் தந்துவிடு.. காலநிலையே சரியில்லை..! வழியெல்லாம் மழை..இடி!  விடிவதற்குள் சடங்கை முடித்து இருப்பிடத்துக்கு திரும்பியாக வேண்டும்"


அவன் அந்த இரு பிரேதங்களின் தலைகளை மட்டும் கற்கருவி கொண்டு இருதுண்டாக்கி தனியே எடுத்து  அவர்களிடம் தந்தான். 


அவர்கள் அதை இரு மூங்கில் குச்சிகளில் சொருகி எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்..  வெகு தொலைவில் வெவ்வேறுவிதமாக ஓநாய்கள் மாறிமாறி ஊளையிடும் சத்தம் கேட்டது.. அந்த நள்ளிரவு வேளையில் இந்த ஊளைச்சத்தம் நெஞ்சம் பதைபதைக்கிற திகில் நாதமாக இருந்தது. மழையும் மறுபடி தொடங்கி விட்டது. 


போகும் போது அவர்களுள் ஒருவன் இன்னொருவனிடம்.. "அந்த ஆளுக்கு வீடு இருப்பிடம் எதுவும் கிடையாதா? இதோ மழை தொடங்கிவிட்டதே எங்கு சென்று ஒதுங்குவான்..?" என்று கேட்டான்.


சற்றே வயதான ஒருவர் அதற்கு பதில்சொன்னார்.. " அவர்களுக்கு வசிப்பிடம் என்று எதுவும்இல்லை..!

கொட்டும் மழையும் கொடிய வெயிலும் இவர்களுக்கு ஒன்றுதான்..! ஈம காரியங்களின்போது இங்கு வரும்படி முன்னரே கூறினால் வந்து செய்துகொடுப்பார்கள். அநேகநேரம் அவர்கள் மலைகுகைகளிலோ மரப்பொந்துகளிலோ யோகநிலையில் ஆழ்ந்துவிடுவார்கள்.. ஆனால் அங்கு அவர்கள் உறங்குவதோ ஓய்வெடுப்பதோ இல்லை.. அதற்கெல்லாம் வெட்ட வெளிதான்...!"


"அடேயப்பா பயங்கரமான பிறவிகள்..! இந்த இடமும் பயங்கரமானது தான் !"


"அதனாலேதான் சிறுவர்களை யாரும் இங்கு அழைத்து வருவதில்லை..!"


"ஆனால் அந்த மனிதருக்கு பின்னாலிருந்த மரத்தின் அருகில் ஒரு பிள்ளை இருந்தானே!??"


"என்ன..? அப்படியா.. நான் கவனிக்கவில்லையே ?"


"ஆம்.. இருந்தான்... அதிலும் சின்ன பிள்ளை அவன்!"


"ஓ..! அப்படியானால் அது... அந்த அரக்கனின் மகனாகத்தான் இருக்கும்!

இருந்தாலும் அந்த பிள்ளை இச்சமயம் அங்கிருப்பது நல்லதல்ல... பாவம் பயந்திடுவான்!"


"பாவம்.. பயம் பற்றி அந்த ஆள்கூட ஏதோ சொன்னானே..! "


"ஆம்! அந்த ஆள் சரியாகத்தான் சொன்னான். ஆனால் நம்மால் அவன் சொல்கிற எல்லாவற்றையும் பின்பற்றத்தான் நடைமுறையில் முடிவதில்லை! சரி.. மேற்கொண்டு எதுவும் பேசாதே... கீழே பார்த்து நட."


அவர்கள் நகர்ந்துபோன பிறகு.. ,

சிவப்பு அரக்கன் அந்த தலையில்லாத உடல்களை மரத்தடியில் கிடத்தி சுற்றிலும் விறகு கொள்ளிகளை வைத்தான். பிறகு அவனும் அதற்குள் சென்று அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கி கர்ஜித்தான். தன்கையில் கூரிய கற்கருவி ஒன்றை எடுத்து அந்த பிரேதங்களின் அங்கக பாகங்களை துளைத்து கீறினான். இதயத்திலும் வயிற்றிலும் உள்ளவற்றை எடுத்து அப்புறபடுத்தினான். அவற்றை அதிசயபொருளாக ஆர்வமோடு நோக்கினான். தன் உடலிலும் அதுபோல இருக்குமா என கைவைத்து பார்த்துகொண்டான். சவங்களின் உதிரம் உறைந்துபோயிருந்ததால் அவை சிந்தவில்லை.. இவனாக அதை செஞ்சாந்தென அள்ளி எடுத்து நெற்றியில் திலகம் போல இட்டுக்கொண்டான். பிறகு எழுந்து வந்து எல்லா விறகுகளையும் சுள்ளிகளையும் அள்ளிப்போட்டான்.. மழை விடாமல் பெய்தபடியால் தற்போது நனைந்து போன விறகுகள் நன்றாக எரியவில்லை.. நீண்ட பிரயத்தனம் செய்தும் தன் முயற்சி பலிக்காததால் வெகுண்ட அவன்,, அவ்விரு சடலங்களை மேலும் பல துண்டங்களாக்கி அவற்றை அப்படியே அள்ளி நேரடியாக எரிகிற அக்னியில் அள்ளி வீசினான்.. அவை விறகோடு விறகாக தனலோடு தனலாக எரிந்தன..!


ஒருகணம் எதேச்சையாக திரும்பி பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது!! 


அங்கே விழிபிதுங்க வெறித்தபடி வயதுக்கு ஒவ்வாத ரணகோல காட்சியை கண்ட அதிர்ச்சியில் மிரட்யோடு நின்றிருந்தான் பேச்சு மூச்சின்றி ஒரு பிள்ளை! அவன் அத்தனைநேரமும் அங்கு நடந்தவற்றை சத்தமின்றி கண்கொட்டாமல் பார்த்தேவிட்டான்..!!


"ஆ... ஐயோ.. ஆக்கூபா! நீயா? நீ இங்கே என்ன செய்கிறாய்?.. அடாடா!! எப்போது வந்து தொலைத்தாய்? "


"........ .........  .........."


அந்த சின்னஞ்சிறு பாலகன் ஆக்கூ 

பிரம்மை பிடித்தாற் போல சிலைபோல நின்றிருந்தான்...!


அவன் தோளில் கைவத்து அந்த அரக்க மனிதர் அவனை சத்தமாக கத்திக் கூப்பாடுபோட்டு  உலுக்கினார்...


உடல்முழுவதும் குலுங்க.. குலுங்க.. தலையும் மரத்துப்போன மூளையும் குலுங்கிடவே கொஞ்சம் கொஞ்சமாக அந்த கூப்பாடு குரலை செவி உணர்ந்தது... அவர் கூப்பிட கூப்பிட இடியும் மின்னலும் சத்தமாக பிரகாசமாக கொட்டி வெட்டின.. மீண்டும் அந்த கூப்பாடு கேட்கிறது....,

 ஆனால்  அந்த குரல்.. அவருடையது அல்ல அது தனக்கு நன்கு பரீட்சையமான வேறு ஒருவனின் குரல் என்பதை ஆக்கூவின் ஆழ்மனம் சொன்னது..!


தான் குலுங்க குலுங்க.. கண்பார்வையும் சுவாசமும் மெல்ல சீரடைந்தது... கண்ணெதிர ஆழ்ந்த இருள்திரையில் காட்சிதந்த ஆத்துபூவரசமரமும் மழையும் மின்னலும் சேறுபடிந்த மண்டைஓடுகள் நிறைந்த மைதானம் போன்ற அந்த மயான பூமியும் வேகமாக சுழன்றன... சுழன்றபடியே அவை மெல்ல மறைந்து காணாமல் போயின.....


தலைசுழன்றது... காணும் யாவும் சுழன்றன..!  உலகம் சுழன்றது...!


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ருத்ரதாண்டவம் ஆடி முடித்து நீண்டநேரமாக முதுகைகாட்டி திரும்பி நின்றிருந்த ஆக்கூவை சென்னி, நன்னன், நந்து மூவரும் பதைபதைப்போடு முதலில் பார்த்தனர்...


பிறகு நன்னன் மட்டும் அவனருகே சென்று பார்த்தான். பேய்பிடித்ததுபோல பெருமூச்செறிந்து மதிகலங்கி நிற்கும் இவனிடம் எதை பேசுவது, என்ன வென்று தொடங்குவது?? என புரியாமல் தயங்கினான். 


எனினும் சற்று துணிவை கூட்டிக்கொண்டு மெதுவாக பேச்சை தொடங்கினான்.


"ஆக்கூ ! நீ அதகள படுத்திவிட்டாய். நீ சொன்னதுபோல இவர்கள் உனக்கு இணையானவர்களே இல்லைதான்...! இருந்தாலும் பரவாயில்லை.. இதுவும் பராக்கிரம செயல்தான்... ! "


ஆக்கூ இதை காதில் வாங்காதவனாய் வேறு ஏதோ கனவுலகில் சஞ்சரித்தபடி இருந்தான்.. அவன் சுவாசமும் தலையசைவும் சீரற்று அலைவுற்றன..


நன்னன் மெதுவாக பின்னால் இருந்தபடி அவன் தோளில் கைவைத்து வேகமாக உலுக்கினான்....


"ஆக்கூ..! ஆக்கூ..! என்ன ஆயிற்று உனக்கு?"


நிகழ்உலகிற்கு திரும்பிவந்த ஆக்கூ சற்றே உள்ளதை உள்ளபடி உணர மிகவும் தடுமாறி போனான். அதுவரை காரிருள் உலகத்தில் நள்ளிரவு வேளையில் சஞ்சரித்த..

அவனது கண்கள்,, வெளிச்சமான பிற்பகல் பொழுதை கண்டன. தன்னை சுற்றி எல்லாரும் அடிபட்ட காயங்களுடன் இருப்பதை பார்த்து பதறினான்.


"ஆ..! நன்னா, சற்றுமுன் இங்கு என்ன நேர்ந்தது? நான் ஏதும் அனர்த்தம் விளைவித்து விட்டேனா? சொல்.."



"இல்லை! பெரிதாக ஏதும் அசம்பாவிதம்  நிகழவில்லை...! இனி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

 ம்....மம்... அப்பறம்,, சண்டையிட்டதில் உன் உடல் மட்டும் அழுக்காகிவிட்டது.. நீ அங்கே சென்று நீராடிவிட்டு வாயேன்...!"


(உண்மை காரணம் அழுக்கு நீங்க அல்ல.. அக்னிபிழம்பாய் கொதிக்கும் ஆக்கூவின் கோபத்தீயை தணிக்கும் நோக்கில் நன்னன் அவ்விதம் சொன்னான்.)


உடனடி சலனம் ஏதுமின்றி சிலைபோல நின்றிருந்த ஆக்கூ பின் மெதுவாக நடந்து நதி அருகே போனான். கரையில் மண்டியிட்டு அமர்ந்து தன் பிம்பத்தை நீரலையில் பார்த்தான்.. சிவந்திருந்த கண்கள் அதில் தெரிந்தன. நீரை அள்ளி முகத்தில் தெளித்து அலசி கழுவினான்.. கொஞ்சம் அள்ளிப் பருகினான். கண்மூடி சில நாழி அமர்ந்திருந்து பிறகு மீண்டும் விழிதிறந்து பார்த்தான். பழையபடி விழிவெண்படலம் ஓரளவு தென்பட்டது...! அந்த கரையோர நதிநீரில் எங்கிருந்தோ வந்து விழுந்த.. ஒரு சிற்றெறும்பு தத்தளித்துக்கொண்டிருந்தது..! ஆக்கூ அதை பார்த்தான்... தன் விரல்களை தத்தளித்து நீந்தும் எறும்பின் அருகே நீட்டினான். அது சட்டென அவன் விரலை பற்றியபடி ஊர்ந்தது.. தன் விரலை நீரிலிருந்து வெளியே எடுத்து நிலத்தை நோக்கி உதறினான் எறும்பு எங்கோ போய் விழுந்தது... இனி அது எப்படியும் பிழைத்துக்கொள்ளும்...! கொலைநிகர் பாவத்தை செய்துவிட்டதால் தன்மீதே ஆக்கூ கொண்டிருந்த கட்டுக்கடங்கா கோபம் இந்த சிற்றெறும்புக்கு செய்த நன்மையை நினைத்து ஓரளவு சமநிலை எய்தியது.. பிறகு எழுந்து நின்று இரண்டடி முன்னேறி.. பின்,  நதியில் சீறி பாய்ந்தான்.. அவன் உடல் உஷ்ணமும் சின கொதிப்பும் அந்த குளிர்ந்த நீரலை நீரோட்டத்தில் வெகுவாக தணிந்தது..! ஆக்கூ ஆசைதீர அந்த ஆற்றுநீரில் ஆனந்த குளியல் போட்டான்.


*******.  *******.   *******


உச்ச வானிலிருந்து வழுக்கி வழுக்கி மொள்ள சரிந்து

மேற்குவானின் மேகங்களிடையே புகுந்து ஆதவன் மெல்ல மெல்ல புதைந்து கொண்டிருந்தான்..!


ஓவியக்குகை வாயிலில் நின்றபடி நால்வரும் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படி ஆக்கூவும் நன்னனும் இரவு காவலிருக்க.. சென்னி இப்போது விடைபெற்று  காலையில் குகைக்கு வந்து இவர்களை விடுவிப்பதாக சொல்லிவிட்டு புறப்பட்டான். நந்துவை சரியாக காலையில் குடியிருப்பின் காவல்மரத்தின் அருகே வந்து நிற்குமாறுகூறி.. அவனை அங்கிருந்து நேரடியாக வேதியர் குடிலுக்கு அழைத்துச்செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. ஆதலால் சென்னியும் நந்துவும் ஒன்றாக சேர்ந்து குடியிருப்பை நோக்கி விரைந்தனர். கிளியும் அவர்களுடன் சென்றது.


இரவு நன்றாக அரும்பியது..


 ஓவியக்குகை வாயிலருகே அருவி கண்ணாடிபோல விழுந்துகொண்டிருக்க அதன்பின்னால் குகைக்கு உள்ளிருந்து மங்கலான தீப்பந்த வெளிச்சம் ஜெகஜ்ஜால பிம்பமாக ஒளிர்ந்தாடிக்கொண்டிருந்தது..!


குகைக்குள்ளே நன்னன் தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கைகளை மடக்கி பின்தலைக்கு தலையணை போல வைத்தபடி ஏதோ பெரிதாக சாதித்தவனை போல கால்மேல் காலிட்டு அட்டணக்கால் தோரணையில் படுத்தவாறே ஆட்டிக்கொண்டிருந்தான்.


ஆக்கூ இருகைகளை பின்பக்கமாக கட்டிக்கொண்டு  இங்கும் அங்குமென அலைந்துகொண்டிருந்தான்..


"இப்போ எதற்காக வீணே அலைந்துகொண்டிருக்கிறாய் ஆக்கூ? நாளை நெடுந்தூரம் நடக்கவேண்டியிருக்கிறது.. தெரியுமல்லவா? உன் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு தர கூடாதா என்ன?"


"முடியவில்லை நன்னா..! அலையும் கால்களுக்கு ஓய்வுகொடுத்தாலும் அலைபாயும் மனதிற்கு ஓய்வுதர என்னால் துளிகூட முடியவில்லை..! ஆனால் நீ எப்படி எதுவுமே நடவாதது போல இப்படி அட்டணக்கால் போட்டு படுத்துக்கிடக்கிறாய்??"


"இது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல ஆக்கூ முதலில் படு பிறகு ஒருகாலை மடக்கி இன்னொரு கால் மேல் போட்டுக்கோ அவ்வளவுதான்..ஹ..ஹா!"

( சொல்லியபடி ஒரு முறை செய்தும் காண்பித்தான் நன்னன்)


"அட விளையாடாதே நன்னா..! இதை யார் கேட்டார்கள்..? உனக்கு நிஜமாகவே நம்மை தேடி வந்தவர்கள் மீது சந்தேகம் வரவில்லையா?"


"இல்லையே.. உனக்கென்ன சந்தேகம்..?"


"இல்லையா..? அப்படியானால் அவர்கள் சொல்லியபடி யாரோ ஒரு வணிகன் ஏவியதன் பேரில்தான் நம்மை துரத்தியதாக நம்புகிறாயா என்ன?.."


"ஆமாம்! அதுமட்டுமல்ல அந்த வணிகன் யாரென்றும் கூட எனக்கு தெரியும். அவனுக்கு நம்மை பற்றியும் நம் இருப்பிடம் குறித்தும் சகல சங்கதிகளை சொன்னது யாரென்றும் கூட தெரியும்..!"


"யார்... நன்னா? யார்?.. யார்?"


"அந்த வணிகன் தலைப்பாகை அணிந்தவன். கடல்கடந்து வாணிபம் செய்ய கூடியவன்... ! 

அவனிடம் நம்மை பற்றி கூறியவன் உன் ஆருயிர் இளவல் பைசாந்தியன்!"


"பைசாந்தியனா...?" ஆக்கூ ஏற்கமுடியாத ஐயத்தோடு நன்னனை நோக்கினான்..



"ஆம்! உன் தம்பி பைசாந்தியனே தான்.."


"கொஞ்சம் புரியும்படி விளக்கமா கூறு நன்னா..! ஏற்கனவே பாதி பைத்தியம் பிடித்தாற்போல இருக்கிறது.. நீ என்னை முழு பைத்தியமாக்கி விடாதே...!"


"அந்த வணிகனை பற்றி மேலதிக விபரம் தெரியவில்லை ஆக்கூ. ஆனால் இன்று காலை சென்னி குடியிருப்புக்கு சென்று திரும்புகையில் உன் தம்பி பைசாந்தியனை சந்தித்திருக்கிறான். முன்பின் தெரியாத சிலர் நேற்று பைசாந்தியனிடம் வந்து நம்மை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அவனிடம் மட்டுமல்ல குடியிருப்புவாசிகள் பலரிடமும்..


அதிலொருவன் தலைப்பாகை அணிந்திருந்ததாகவும் சிலர் பேசிக்கொண்டதாக சென்னி என்னிடம் சொன்னான்.


நீ குளிப்பதற்காக ஆற்றுக்கு போன பிறகு மரத்தில் கட்டிவைத்திருந்த அந்த முரடர்களில் ஒருவனுக்கு சுயநினைவு திரும்பியது. இறுக பிணைத்த நெருஞ்சி முள் குத்தி அலறினான். எங்களிடம் விடுவிக்கும்படி வேண்டினான். அவனை மிரட்டி உண்மையை கரக்க பாத்தோம். ஆனால் பாவம்..! அந்த மூன்று தடியர்களையும் அந்த வணிகன் தான் வாழ்நாள் அடிமையாக விலைக்கு வாங்கினானாம். அவர்களிடம் நம்மிடமிருக்கும் அத்தனை பொருட்களையும்.. முடிந்தால் நம்மையும் சேர்த்து தூக்கிவர சொல்லியிருந்தானாம். அப்படி செய்தால் அவர்களுக்கு பூரணவிடுதலை தருவதாகவும் ஆசை காட்டியிருந்திருக்கிறான்...! அவர்களின் கெட்டநேரம் அது முடியாமல் போயிற்று!"


"நீ அவர்களை விடுவித்திருக்கலாமே நன்னா..! சென்னி மறுத்துவிட்டானோ?"


"இல்லை ஆக்கூ!  அவர்களே மறுத்துவிட்டார்கள்.. காரணம் இப்போது அவர்கள் தப்பித்தாலும் அந்த வணிகன் மறுபடி அவர்களின் பூர்வீக தேசத்திற்கு போகும்போது அங்குள்ள எஜமானர்களிடம் புகார் அளித்துவிட்டால்,,  அங்கே வாழ்ந்துவரும் இந்த மூவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடும்தண்டனை வழங்கிவிடுவார்களாம்...! தங்களால் அவர்கள் பாதிக்கபட்டிட கூடாது என அவர்கள் வருந்தினர். 

நான் அந்த மூவரையும் விடுவித்து விட்டேன்.. ஆனால் அவர்கள் மீண்டும் அந்த வணிகனிடம்தான் செல்வார்களாம்..!  ... ஹூம் கேட்டாயா கதையை... என்னை வேறு என்ன செய்ய சொல்கிறாய்?"


"ஏதேது நீ சொல்வதை கேட்டால் ஒரு தேசத்தையே ஒருவன் அடிமையாக்கி அந்த மக்களை வந்து போகிற  வணிகர்களுக்கு விற்பனை செய்கிறான் போலிருக்கே...?"


"மனிதனை மனிதனே அடிமையாக்கி விற்கிறதெல்லாம் நம்பவே முடியவில்லை.. ஆனால் நேரிலேயே பார்த்த பிறகு எதுவும் மறுப்பதற்கு இல்லை!"


"இவ்வளவு விஷயங்களை நான் நீராட போன நேரத்திற்குள்ளாக கரந்துவிட்டீர்களா.. பலே பலே.."


" உன்னை ஆற்றில் நீராடிவா என்று சொல்லி அனுப்பினால் நீ காட்டெருமைகள் சேற்றில் புரள்வதுபோல ஊறிக்கொண்டிருந்தாய்.. ஒருவேளை முதலையைபோல ஆற்றிலேயே உறங்கிவிட்டாயோ என்றுகூட நினைத்தேன்..."


(ஆக்கூ சிறிது முகம்கடுத்து... பேச்சை மீண்டும் மாற்றினான்)


"அதுசரி அந்த வணிகனுக்கு நம்மிடமிருந்து என்னதான் வேணுமாம்??"


"இதை கேள்...! அந்த ஆளிடம் ஒரு குட்டி குரங்கு ஒன்றும் இருக்கிறது.. அதை நன்றாக அவன் பழக்கி வைத்திருக்கிறான்.. அது சென்னியிடமிருந்து சரியாக மரகதகற்கள் நிறைந்த அந்த தோல் பையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறது..! நல்லவேளையாக சென்னி அதை அதனிடமிருந்து மீட்டுவிட்டான்."


"அப்படியானால் அந்த வணிகனுக்கு நம்முடைய மரகதகற்கள்தான் தேவைப்படுகிறதோ..?"


"நான் அப்படி நினைக்கவில்லை ஆக்கூ..! உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த மூன்று அடிமைகளையும் அந்த வணிகன் 700 வெள்ளி கட்டிகள் கொடுத்து வாங்கி இருக்கிறான். சந்தையில் 4 மரகத கற்களுக்கு மாற்றாக ஒரே ஒரு வெள்ளி கட்டிதான் தருவார்கள். அப்படி பார்த்தால் அவன் கட்டாயம் ஒரு  பெருவணிகனாகதான் இருக்கவேண்டும். அவனது செல்வத்திற்கு நம்மிடம் உள்ளதுபோல ஆயிரம் மடங்கு மரகத கற்களை வாங்கிட இயலும்.. ஆக, அவன் வேறு எதையோ நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான்...!"


"எனில் அவனை மறுபடியும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்கிறாய் அப்படித்தானே...!"


"ஆம் ! அதுவும் அடுத்தமுறை அவனே நேரடியாக நம்மை சந்திக்ககூடும்.. வணிகனல்லவா..அவன் ? நம்மை மசியவைப்பதற்காக பேரம் பேசுவான்..!"


"நாம் அவனது பேரத்துக்கு மசியாவிட்டால்..?"


"சாம தான பேத தண்டம் என நான்கிலும் முயல்வான் ஆக்கூ...!

முதல் மூன்றிலும் பணியாவிட்டால் முன்பைவிட கடினமாக தண்டத்தை பிரயோகிப்பான்..! முப்பது அடிமைகளை கூட விலைக்கு வாங்கி அனுப்புவான்..! அனுப்பட்டுமே... அதனாலென்ன...?

அதான் அசகாய சூரன் நீ எங்கள் அருகில் இருக்கிறாயே..!! ஹ..ஹா!!"


"ஓஹோ..! நன்னன் மகராஜா அந்த தைரியத்தில்தான் காலாட்டி படுத்திருக்கிறாரா..?

(ஆக்கூ கீழே கிடந்த சென்னியின் பை மூட்டையை தூக்கி நன்னன் மீது விட்டெறிந்தான்)


"அடே பாவி.. இதில் முக்கியமான பொருட்கள் எல்லாம் இருக்கின்றனடா.. நாம் இரவு காவலிருப்பதே இதற்கு வேண்டிதான். இதையே வீசுகிறாயே..!"


"அதை உன் தலைமாட்டிலேயே வைத்துக்கொள்..! நான் என் நினைவில் தோன்றிய காட்சிகளை ஓவியமாக வரைய போகிறேன்.."


"ஏது..  சின்னவயசில் நீ நேரில் பார்த்ததாக சொல்வாயே அந்த ஈமச்சடங்கு கொடூரத்தையா..?"


".......  .......,......"



"ஏய் உன்னைத்தான் கேட்கிறேன்...

நீ எத்தனையோ ஈமச்சடங்குகளை  தந்தையுடன் அருகில் இருந்து பார்க்கிறாய் தானே.. இன்றுவரை அப்படி ஏதும் விசித்திரமாக நடந்ததா என்ன..? நான் உறுதியாக சொல்கிறேன் நீ சிறுவயதில் கண்டது ஒரு பொய்சம்பவம். ஆனால் அதை ஆணித்தனமாக நீ நம்புவதால்தான் அடிக்கடி உன்னை அது பாதிக்கிறது. பகல்கனவே பொதுவாக பலிக்காது ... இதில் நீ விழித்த நிலையிலேயே கனா காண்பவனாக இருக்கிறாய்.. முடிந்தால் நாளை வேதியரிடம் இதுபற்றி விசாரித்து தீர்வு காணலாம் என்றிருக்கிறேன்.."


"நீ என்னை நம்ப வேண்டாம் நன்னா...! அதற்காக நடந்தது பொய் என்று ஆகிவிடாது! இதற்குமேல் உன்னிடம் நான் விவாதிக்க விரும்பவில்லை..!"


"சரி.. எப்படியோ போ... உன் இஷ்டம்!"



அதன்பிறகு எதுவும் பேச்சு எழவில்லை.. ஆக்கூ தான் நினைத்ததை வரைந்து முடித்தான் ஆனால் வண்ணம் தீட்ட வில்லை.

மறுபடியும் இருவரும் தங்கள் பால்யகால சம்பவங்களை மாற்றி நினைவுகூர்ந்தார்கள்.. இவ்விதம் சில நாழிகை நேரம் வெவ்வேறு விதமாக உரையாடி கதைத்து பின் களைத்துபோய் தூங்கிவிட்டார்கள்...! அந்த பந்தமும் எரியூட்ட ஆளின்றி அணைந்துபோனது.. குகை இருண்டது. அருவிக்கரை தண்ணீர் திரைச்சீலையும் காட்சிகள் முடிந்தபடியால் இருள்விரவி மூடிக்கொண்டது. 



*******.  *******. *******.     ********.   



இருதினங்களில் பௌர்ணமி வரயிருப்பதால் அன்றைய இரவுவானில் முக்கால்நிலவு லேசானதொரு கோணல் வட்டமாக மந்தகாசமான ஒளியுடன் மேகங்கள் ஏதுமில்லாத தெளிந்தவானில் ஏறிநின்று எட்டிப்பார்த்தது...


நிலவொளியில் காட்டின் ஒற்றையடி பாதைவழியே இருவர் மெதுவாக போய்க்கொண்டிருந்தனர்.  ஒருவன் தன் புல்லாங்குழல் கொண்டு இரவுநேரத்திற்கே உரித்தான உன்னதமான கானத்தை இசைத்தபடி வந்துகொண்டிருந்தான். நடந்தபடி வாசிப்பதால் இசையில் ஒருசில நெருடல்கள் உண்டான போதிலும் இரவில் நிலவொளியில் கானகபாதையில் நடப்பதற்கு அந்த இசை நிகரற்ற உறுதுணையாக இருந்தது..


"ஆஹா..! அட.. அட..!  நந்து! நீ குரலில்லாதவன் என்று எவனாவது சொன்னால் இந்த புல்லாங்குழலாலேயே ஓங்கி வாயில் அடி...! குழல் வழியே நீ பேசுவது போல இந்த ஜகத்தில் இன்னொருவனால் பேசமுடியுமா என்பது சந்தேகமே..! நான் கூட இத்தனை நாள் உன் அருகிலேயே இருந்தும் உன் அருமை தெரியாமல் போயிற்று...!"


சென்னி இவ்வாறு புகழும்வரை குழல்இசைப்பதை நிறுத்தி இருந்த நந்து,, சென்னி சொன்னதை கேட்டு நாணம் கலந்த பெருமிதமுடன் சிறு புன்னகை மட்டும் புரிந்துவிட்டு மீண்டும் குழல் ஊதினான்..


இரவில் புதரருகே குடும்பமாக மந்தை மந்தையாக படுத்திருந்த கலைமான்கூட்டம் தங்கள் தலையை திருப்பி அந்த கந்தர்வ கானத்தை ஒரு நாழிகைநேரம் பதற்றம் ஏதுமின்றி மெய்மறந்து கேட்டு துஞ்சின...


சற்று நேரத்திற்கெல்லாம் காவல்மரத்தடியை இருவரும் அடைந்தனர். நந்துவின் குடில் வேறுபக்கமாகவும் சென்னியின் குடில் சற்று அருகிலும் இருப்பதால் நந்து விடைபெற்றுகொண்டான். 


"நந்து! காலையில் சரியாக இங்கு வந்துவிடு ! நான் சென்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைக்கிறேன்..!" என்றான் சென்னி.


நந்து தலையசைத்துவிட்டு அகன்றான்.


அதன் பிறகு வீடுவரையில் சென்னிக்கு துணையாக வந்தது அந்த கோணலான வட்ட நிலாதான்!


குடிலருகே வந்ததுமே சென்னி தன்தந்தையோடு உரையாட தன்னை ஆயத்தபடுத்திக்கொண்டு பிறகு உள்ளே போனான். 


உள்ளே போனபோது மீனுக்குட்டி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். அவளது ஒருகை கட்டைவிரல் வாயில் சூப்பிக்கொண்டும்.. இன்னொரு கையில் சிறு 'மரப்பாச்சி' பொம்மையை இறுக பற்றியபடியும் இருந்தது. அன்னை தடங்கண்ணி நான்கு புதிதான கலன்களை எடுத்து வைத்து அதிலே கம்பு , வரகு, சோளம் முதலிய தானியங்களை தனிதனியாக அளந்து கொட்டிக்கொண்டிருந்தாள்..


"அட.. இதெல்லாம் ஏதம்மா..?"


"வா சென்னி..! இதென்ன பிரமாதம் அதோ அங்கே பார் அணிகலன்களும் புதியவகை கருவிகளையும் கூட வாங்கிவந்துவிட்டார் உன் தந்தை..!

உனக்காக ஒரு வில் கூட இருக்கிறது..!" என்று கூறியபடி அதை எடுத்துவர நகர்ந்தாள்.


"அப்பா இல்லையா...?"


"அதோ பின்கட்டில் இருக்கிறாரே..!"

சொல்லிக்கொண்டே அன்னை ஏணியை போட்டு பரணில் ஏறினாள்.

சென்னி குடிலின் பின்பக்கம் போனான். அங்கே தந்தை கோமுகன் எரிந்து முடிந்த அடுப்பின் இதமான அனலில் குளிர்காய்ந்தபடி..., ஒரு குச்சியால் பல்லை குத்திக்கொண்டிருந்தார்.


"அப்பா..! ஓ...இங்கே இருக்கிறீர்களா..! காலையில் உங்களுக்கு நல்ல வேட்டையோ? வாங்கிவந்த பொருள்களை வைக்க இடமின்றி அம்மா திணறுகிறார்களே..! "


"அட...!  வா சென்னி..! ம்... நீண்ட நாளுக்கு பிறகு நல்ல வேட்டைதான்..! வேட்டையை விட அதை கூலக்கூற்றில் நல்ல விலைக்கு நபி வந்து பேரம்பேசி விற்றதுதான் சாமர்த்தியம்..! இல்லாவிட்டால் இத்தனை பொருள் கிடைத்திருக்காதே...!"


"நபி மாமா வும் வந்திருந்தாரா? மீனுவும் கூட சொன்னாள்.!. அவர் எப்படி இருக்கிறார் அப்பா ? நான் பார்த்தே பலநாள் ஆகிறது..!"


"ம்... நல்லாதான் இருந்தான் பிற்பகல் திரும்பி வரும்போதுதான் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போயிற்று.. அதனால் அவனை அவன் வீட்டுக்கு அனுப்பியாச்சு! விற்றுவாங்கிய எல்லா பொருளுமே இங்கு கொண்டுவர வேண்டியதா போச்சு! நாளை இதில் பாதியை அவன் வீட்டிலே கொண்டுபோய் கொடுக்கணும்.  நீ போய் வருகிறாயா சென்னி?"


"இல்லை அப்பா! மன்னித்துவிடுங்கள் நாளைக்கு என்னால் முடியாது..!"


"ஏன்.. என்னாயிற்று உனக்கு? காலையில் வரச்சொல்லி சொல்லியிருந்தேன்.. அங்கும் நீ வரவில்லை..! இப்போதும் மறுத்து பேசுகிறாய்..! ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?"


"அது.. அதுவந்து நானும் என் நண்பர்களும் நாளைக்கு பெருமணல் தீவிற்கு போவதாக திட்டமிட்டுள்ளோம்... நிலவு விழாவையும் அங்கே சென்று காண ஆசைபடுகிறோமப்பா..!"


"பெருமணல் தீவிற்கா....?......"

கோமுகன் சென்னியை உற்று நோக்கியவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார்...

(அதற்குள் இதையெல்லாம் கேட்டுக்கொண்டே அங்கு வந்த அன்னை தடங்கண்ணி சென்னியை ஏசினாள்.. அவளது கையில் அழகிய எடுப்பான வில் ஒன்றும் இருந்தது!)


"ஏண்டா பாவி! இன்னும் அதையேதான் உளறிக்கொண்டிருக்கிறாயா.. இங்கே இந்த பொருள்களை எல்லாம் பார்த்தும்கூடவா உனக்கு மனம் மாறவில்லை.. இதோ பார் இந்த வில் கூட உனக்காகத்தான் வாங்கி வந்திருக்கிறார் அப்பா!"


"அடடே அற்புதமாக இருக்கிறதே..! எங்கே இங்கு கொடு பார்க்கிறேன்..!"


(தடங்கண்ணி வெடுக்கென அதனை பின்னால் மறைத்துக்கொண்டாள்)


"அப்படியானால் உன் பிராயண புராணங்களை இப்போதே குழிதோண்டி புதைத்துவிட்டு எங்களுடன் நிலவுவிழா விற்கு வருவதாக சொல்.. நான் இந்த வில்லை தருகிறேன். இல்லையெனில் இது உனக்கு கிடைக்காது..!"


"ஓ..! அப்படி யா ..? சரிதான்! எனக்கு அது வேண்டவே வேணாம். அதை நீங்களே வைத்துக்கொண்டு மீனுகுட்டிக்கு அம்பெய்த கற்றுகொடுங்கள்..!" திட்டவட்டமாக சொல்லிவிட்டு கைகளையும் மடக்கி கட்டிக்கொண்டான் சென்னி.


"அவனுக்காக வாங்கியதை அவனிடமே தந்துவிடு தடங்கண்ணி..!"

கோமுகன் உதிர்த்த இந்த திடீர் வார்த்தைகளால் ஆச்சரியமடைந்தாள் தடங்கண்ணி. பிறகு அதை மீற மனமின்றி தடங்கண்ணி அந்த வில்லை சென்னியிடமே நீட்டினாள்.


ஆனால் அவன் அதை வாங்க முயலாமல் தந்தையை நோக்கி, 

 " இல்லை நீங்கள் என்னை பெருமணல் தீவிற்கு செல்ல முழுமனதோடு அனுமதித்தால் தான் இதை வாங்கிக்கொள்வேன்! இல்லாவிட்டால் இது எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்! "


"மறுபடி மறுபடி அடம்பிடிக்காதே சென்னி! உனக்கு பெருமணல்தீவை பற்றி யாரோ இல்லாததை எல்லாம் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்.. நான் சொல்வதை கேள்! அங்கே நீ அள்ளி தின்ன ஆற்றுமணல் கூட இருக்காது! வெறும் உப்புமணல்தான்.. எங்குமிருக்கும்..!" என தடங்கண்ணி கத்தினாள்.


அன்னை சொல்வதை சிறிதும் அசட்டை செய்யாமல் சென்னி, தந்தையின் வாயையே உற்று எதிர்நோக்கி இருந்தான்..


ஒரு கணம் எதையோ யோசித்துவிட்டு பிறகு கோமுகன் சொன்னார் "சரி...சென்னி! போய் வா! ஆனால் ஜாக்கிரதையாக இருந்துகொள்.. என்ன புரிகிறதா?"


கோமுகனின் இந்த சொற்கள் சென்னியை வானத்துக்கும் பூமிக்குமாக தலைகால் புரியாமல் குதிக்க செய்தன.. அவனால் நம்பவே முடியவில்லை தந்தை இத்தனை சுலபத்தில் சம்மதிப்பார் என்பதை..

 

அவனைவிடவும் அவன் தாய் தடங்கண்ணி அதிகம் வியப்படைந்தாள்.. 'என்ன இந்த மனிதர் உடனே சம்மதித்துவிட்டாரே..! இவன் என்ன மாயம் செய்தான்.. வந்ததுமுதலே இவரது போக்கும் விசித்திரமாகவே இருக்கிறது..' என மனதில் எண்ணியபடி..,,

"நீங்கள் நிச்சயமாக சொல்கிறீர்களா என்ன? இவன்தான் ஏதோ சிறுபிள்ளை உளறுகிறான் என்றால்...?..."


"இல்லை தடங்கண்ணி ! சென்னி வளர்ந்துவிட்டான். இனியும் அவனை அதிகம் கட்டுப்படுத்தாதே.. இனி அவன் போக்கில் இந்த உலகைபற்றி அவன் தெரிந்து கொள்ளட்டும்.. "


என்றவர்.. மறுபடி சென்னியை பார்த்து ,"சரி எப்போது போவதாய் உத்தேசம்..?" என்றார்.


"நாளையே புறப்படுகிறோம்.. சரியாக நாளை மாலை அருவிக்கரையிலிருந்து... ஆனால் நான் நாளை காலையிலேயே இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் அப்பா..!"


"ம்... அப்படி யானால் இப்போது சீக்கிரம் போய் உறங்கேன்..! ஏன் இப்படி ஆடிக்கொண்டு இருக்கிறாய்.. "


"ஓ..! சரிப்பா இதோ போறேன்..!"


சென்னி மகிழ்ச்சி துள்ளலில் குடிலுக்குள் நுழைந்தான்.. பிறகு சட்டென திரும்பிவந்தவன் தன் தாயின் கையில் வைத்திருந்த வில்லை வெடுக்கென பிடுங்கி கொண்டான்..!


"இதை கொடு என்னிடம்! இன்னும் ஏன் நீயே வைத்திருக்கிறாய்..!"


ஏமாற்றமான சிரிப்பை மட்டும் பதிலாக தந்து தலையசைத்த தடங்கண்ணி பிறகு


 உறங்க போன சென்னியிடம் "சென்னி எதாவது சாப்பிட்டாயா..? காலையிலும் வந்து எதுவும் சாப்பிடாமலே போய்விட்டாயே..!" 


"பகலில் கொஞ்சம் கிழங்குகளை அவித்து சாப்பிட்டோம் அம்மா..! நந்து கொண்டுவந்திருந்தான்.. அப்பறம் எதுவும் சாப்பிட நேரமில்லை.. இப்போ ஏதும் இருக்கிறதா என்ன..? "


"இல்லாமலா..? சரி போய் உட்கார் எடுத்து வைக்கிறேன்..!"


சென்னி ஆவலோடு போய் சமணமிட்டு அமர்ந்தான் ஒருபானை சட்டியில் கூழ்போல கொஞ்சமும் இன்னொரு இலையில் மாமிச ஊனும் பறிமாறினாள். அப்போது எதார்த்தமாக சென்னியின் முதுகு முழங்கைகளில் காயமிருந்ததை கண்டாள்..


"ஆ..! இதென்ன காயம்.. காலையில் நன்றாகதானே இருந்தாய்?"


சென்னி தனக்கு நேர்ந்ததையெல்லாம் சற்றே எண்ணி ஒருதடவை எச்சில் விழுங்கிகொண்டான். பிறகு அன்னையிடம் ," மூன்று கொழுத்த காட்டு பன்றிகளை துரத்தின.. கையில் ஆயுதமில்லாததால் தப்பிஓடி உருண்டு புரண்டு இப்படி ஆயிற்று.. ஆனால்  நல்லவேளையாக ஆக்கூ வந்து அவற்றை அடித்து விரட்டி விட்டானம்மா..!"


"ஓ..! நல்லவேளை! ஆமாம் ஆக்கூ 

உங்களிடம் இயல்பாக பழகுகிறானா..? இருந்தாலும் அவனிடம் சற்று விலகியே இருங்கள்.. அவன் பரம்பரையே ஒருமாதியான பிறவிகள்!"


"அப்படியெல்லாம் ஏதுமில்லை அம்மா..! அவனும் எங்களை போலத்தான். "


சென்னி சாப்பிட்ட படியே குடிலை இன்னொருமுறை சுற்றி நோட்டமிட்டான்..  அநேக புதுப்பொருட்கள் குவிந்து கிடந்தன..


"அடேயப்பா..! இன்னும் விழாவே வரவில்லை சந்தைகள் தொடங்கவில்லை அதற்குள் இவ்வளவு பொருட்களா..? அப்படி எதையம்மா அப்பாவும் நபி மாமாவும் பிடித்தார்கள்?"



"அதுவும் ஏதோ காட்டுபன்றி தானாம். ஆனால் இது ஏதோ அரிதான ரகமாம். கடைசியாக இருபது வருஷங்களுக்கு முன்பு யாரோ வேட்டையாடினார்களாம்.

அதன் பிறகு இப்போதான் கண்ணில் பட்டிருக்கிறது. விடுவார்களா என்ன? நம்குடியிருப்புமட்டுமல்ல பக்கத்து குடியிருப்பிலும் விஷயம் காட்டுத் தீயாய் பரவி.. நிறையபேர் ஆசையாக வந்து வாங்க போட்டிபோட்டு விதவிதமாக பொருட்களை தந்து இறைச்சியை பெற்றுசென்றார்களாம்..! பொதுவாக நாளைஇரவுதான் நிலவு விழா சந்தை தொடங்கும்.. ஆனால் இப்போதெல்லாம் ஏராளமான வணிகர்களும்  சந்தை பணியாட்களும் முன்கூட்டியே வந்து திரிகிறார்கள்.. அதனால் மக்களிடம் இப்போதே புதிய பொருட்கள் ஏராளமாக புழங்க தொடங்கிவிட்டன... அதான் இத்தனை பொருள்கள் இப்போது நம்மிடமும் புழங்குகிறது.."


"ஆமாம்... போ! எல்லாம் அந்த பன்றி உயிரை கொடுத்து போட்ட பிச்சை !  அரிதான பன்றி என்கிறீர்.. இப்படி கண்டதும் கொன்றுபோட்டால் அருகிதான் போகும்..! அப்படி என்னதான் சுவை இருக்கிறதோ..அதில்?"


"ஏன் நீயே சொல்லேன்.. நீ இவ்வளவு நேரமாக உண்பதே அதனுடைய ஊனைத்தான்.. சென்னி!"

சொல்லிவிட்டு தடங்கண்ணி லேசாக சிரித்தாள்.


சென்னி தலையில் கைவைத்து நொந்துகொண்டான்..!



பிறகு அவனும் மீனுக்குட்டி அருகில் சென்று படுத்துக்கொண்டான்.

படுத்த சில நாழிக்குள் அவனை அறியாமல் உறக்கம் ஆட்கொண்டுவிட்டது!



தடங்கண்ணி மெதுவாக கோமுகனிடம் சென்று மறுபடி உரையாடினாள்.


"நீங்கள் ஏன் அவனை போக சம்மதித்தீர்கள்..? 


கோமுகன் சற்றே நீண்ட பெருமூச்சு விட்டு கூறத்தொடங்கினார்,


"சொல்கிறேன் கேள் கண்ணி!

இன்று பகலில் நபி மிக அருமையாக பேரம் பேசி நல்ல விலைக்கு விற்றுகொண்டிருந்தான். பலரும் அவன் பேச்சுக்காகவே மனமுவந்து தந்து தங்கள் பண்டத்துக்கு மாற்றாக குறிப்பிட்ட அளவு இறைச்சி யை பெற்று சென்றனர்.. 


திடீரென உச்சி வேளையில் நபிக்கு ஏதோ ஆகிவிட்டது. எழுந்து நின்று ஆ..!  ஊ..! என கத்த தொடங்கினான். நானே பதறிபோயிட்டேன். அவனுக்கு உடலில் வேறுயாரோ புகுந்துவிட்டது போல ஏதேதோ உளற தொடங்கிவிட்டான். அவனே அவனுக்குள்ளாக பேசினான். பிறகு அக்கம்பக்கத்தில் இருந்த எல்லாரும் அவனை தாங்கி பிடித்து அமரவைத்து அவனிடம் ஆசிவேண்டினர்.. அவன் என்ன செய்தான் தெரியுமா? ஒவ்வொருக்குமாக குறி சொல்ல தொடங்கிவிட்டான்!!  சிலருக்கு கடந்த காலம்.. சிலருக்கு நிகழ்காலம்.. ஒவ்வொருவரையும் பற்றி உள்ளது உள்ளபடி அப்படியே சொல்லியதாக எல்லாருமே வியந்தார்கள்.. நானும் அவன் முன்னால் போய் நின்றேன். அவன் என்னை வேறு யாரையோ போல் பார்த்தான்.. அவன் கண்களை பார்க்கவே எனக்கு கூச்சமாக இருந்தது.. பிறகு அவன் நான் கேட்காமலேயே சொன்னான்.. 'உன் மகன் சீக்கிரமே உன்னை விட்டு நீண்டதூரம் பிரிந்து போவான். அவனும் அவன் உடன்போவோரையும் தவிர ஏனைய இந்த மொத்த குடியிருப்பு வாசிகளும் மிகப்பெரிய இன்னலை எதிர்கொள்வார்கள்! போகும் உன் மைந்தன் திரும்பி வரும்வரை இவர்களின் இன்னல் தொடரும்.. ஆனால் அவன் திரும்பிவர பல ஆண்டுகள் பிடிக்கும்..!' என்று சொல்லினானே பார்க்கலாம். நான் அப்படியே உதறிபோய்விட்டேன்.. வேறு எதுவும் கேட்கவும் துணிவு வரவில்லை.. சிலர் ஒரு கலசத்தில் 

தண்ணீரை கொண்டுவந்து அவன்மேல் ஊற்றினார்கள்.. நபி மயங்கிபோனான். பிறகு அவனை அவனது குடிலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பினோம். அவன் சொன்னது போலவே சென்னி இப்படி வந்து கேட்கிறான்..! என்னை என்ன சொல்ல சொல்கிறாய்..?"


"ஐயோ...! என்ன இப்படி சொல்கிறீர்களே..? முன்னமே சொல்லவில்லையே..! அவர் ஏன் அப்படி சொல்லினார்? நான் கூட சென்னி நிலவுவிழா முடிந்ததும் இருநாட்களில் திரும்பி வருவான் என்று நினைத்தேனே..! இது என்ன புது சங்கடம்..! ஐயோ வனவாச்சி! எங்களை ஏன் இப்படி சோதிக்கிறாய்..?"


"தடங்கண்ணி நிறுத்து..! சத்தமாக புலம்பாதே..! உண்மையில் சென்னியும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு போகிறான். அவனுக்கு திரும்பிவர பல ஆண்டுகள் ஆகும் என்பது தெரியாது! தெரிந்தால் அவனே போகமாட்டான்..!"


"அப்படி யானால் கூறிவிடவேண்டியதானே..! ஏன் அவனை அனுப்ப வேணும்?"


"என்ன புரியாமல் பேசுகிறாய்..! முழுசாக கேட்டாய்தானே..! உண்மையில் இங்கிருப்பவர்களுக்குதான் ஏதோ இன்னல்கள் வரப்போவதாய் நபி மொழிந்தான்!  சென்னி வெளியில் இருப்பதே அவனுக்கு நலம்! ஆதலால் அவன் விருப்பப்படி போகட்டும். அதுதான் விதியின் விருப்பமும் போல.."


"என்ன பெரிய இன்னல்..? எதுவானாலும் எல்லோரும் சேர்ந்து அநுபவிக்க போவதுதானே.. அவனை பிரிய என்மனம் சம்மதிக்காது..!"


"இல்லை கண்ணி! வேறு வழியில்லை..!  வீணே கவலைபட்டு பயனில்லை. சென்னி இன்னும் சிறுபிள்ளை அல்ல.. அவன் எப்படியும் தனியே பிழைத்துக்கொள்வான். அவனுக்கு சில நல்ல தோழர்களும் உடனிருக்கிறபடியால் அவ்வளவாக அச்சப்பட தேவையில்லை! இனி நீ நமது மீனுவை நன்றாக பார்த்துக்கொள். அவள் மீது அன்பு செலுத்து. நாம் வரப்போகிற இன்னலை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.. நாம் மட்டுமல்ல நம் மொத்த குடியிருப்புவாசிகளையும் தயார் படுத்தியாக வேண்டும்...!"



" நீங்கள் ஆயிரம் சொன்னாலும்... எனக்கு எதை ஏற்பது, எதை நம்புவது என்றே குழப்பமாயிருக்கிறது..!"


"எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.. கண்ணி ! நபி சிறுவயதில் இப்படி எப்போதாவது குறி சொல்வதாக கேள்வி பட்டிருக்கிறேன்.. ஆனால் நேரில் பார்த்ததில்லை ! இதுதான் முதல்தடவை! ஆனால் அவன் சொன்னது எதுவும் தவறாக இருக்காது என்பது பலரும் உறுதியாக சொல்கிறார்கள். பெரும்பாலும் நடந்த /நடக்கிற சம்பவங்களைதான் எல்லாருக்கும் சொல்லி இருக்கிறான். ஆனால் எனக்கு அவன் சொன்னவை இனி நடக்க போகிறவை! எதிர்கால சம்பவத்தை முன்கூட்டியே முன்னறிவிப்பதற்கு 'தீர்க்க தரிசனம் ' என்று பெயர். பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று!


தடங்கண்ணி உள்ளூர ஏதோ சிலிர்த்துபோனாள். 


"என்னமோ.. போங்கள்! அந்த வனவாச்சிதான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்!!"


என்று காவல்மரம் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டாள். பிறகு

மெல்ல கோமுகன் அருகே வந்தமர்ந்துகொண்டு அவன் கைகளை கெட்டியாக பற்றிக்கொண்டாள்.

கண்மூடி அவன் தோளில் சாய்ந்தாள். கோமுகன்  அண்ணாந்து வானத்தை பார்த்தான்.


வானில் சில விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன.. சற்றே தள்ளி அந்த கோணல் நிலா வும் கொட்டாவி விட்டது..!


சூரியராஜ்


 மேலும் படிக்க

2 கருத்துகள்

புதியது பழையவை