மொத்த கடலின் 100 துளிகள்
வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே
நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர் உவந்தே சொல்வது வந்தே மாதரம்
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்
செப்பு மொழி பதினெட்டுடை யாள்எனிற் சிந்தனை ஒன்றுடையாள்
பேயவள் காண்எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை
பிறநலங்கள் எண்ணற்றன பெறுவார் இந்தியா என்றநின்றன் கண்ணொத்த பேருரைத்த கால்
திண்ணங் காணீர்! பச்சை வண்ணன் பாதத் தானை! எண்ணம் கெடுதல் வேண்டா திண்ணம், விடுதலை திண்ணம்.
சுடுதலும் குளிரும் உயிர்க்கில்லை; சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே
நெஞ்சு பொறுக்கு திலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
ஆத்திரங்கொண்டே இவன் சைவன் இவன் அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்
ஒலியிழந்த குரலினாய் போ போ போ! ஒளியிழந்த மேனியாய் போ போ போ!
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை
இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல பான்மை கெட்டு, நாமமது தமிழரென கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்பு கண்டார்
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டி பிழைப்பாரோ?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளை பரங்கியை துரையென்ற காலமும் போச்சே
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிதுமுண்டோ? வீடு காக்க போடா அடிமை வேலை செய்ய போடா!
காலர் முன்னிற்பினும் மெய்தவறா எங்கள் பாலர் தமக்கொத்த அடிமை காண்
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? பன்றி சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது நீதமோ? பிடி வாதமோ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற பெண்களின் கூட்டமடி! கிளியே பேசி பயனென்னடி
நாலு திசையும் ஸ்வாதந் தர்ய நாதம் எழுகவே! நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
என்றன் பாட்டு திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட வேண்டும்
அசைவறு மதிகேட்டேன் இவை அருள்வதில் உனக்கெதுங் தடையுளதோ?
எண்ணிய முடித்தல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும்
ஓம் சக்திதனையே சரணங்கொள்ளு என்றும் சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு
இந்திரியங்களை வென்று விட்டேன், எனதென் ஆசையை கொன்று விட்டேன்
நரை கூடி கிழப்பரும் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
ஞான மோங்கி வளர்ந்திட செய்வேன், நான் விரும்பிய காளி தருவாள்
நித்தமுனை வேண்டிமனம் நினைப்ப தெல்லாம் நீயாய் பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டோ?
வானெனும் ஒளிபெறவே நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடவே
தெய்வம் யாவும் உணர்த்திடும் தெய்வம், தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
பொறிசிந்தும் வெங்கனல் போற் பொய்தீர்ந்து தெய்வ வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்
சுகத்தினை நான் வேண்டி தொழுதேன், எப்போதும் அகத்தினிலே துன்புற் றழுதேன்
ஜயமுண்டு பயமில்லை மனமே, இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு
ஆவியினுள்ளும் அறிவி னிடையிலும் அன்பை வளர்த்திடுவோம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதிலும்
பயமென்னும் பேய்தனை யடித்தோம், பொய்ம்மை பாம்பை பிளந்துயிரை குடித்தோம்
விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்த சிட்டுக்குருவியைப் போலே
மனதிலுறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்
சாக துணியிற் சமுத்திர மெம்பட்டு மாயையே இந்த தேகம் பொய் யென்றுணர் தீரரையென் செய்வாய் மாயையே
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவரா மென்றிங் கூதேடா சங்கம்
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ இந்த ஞாலமும் பொய் தானோ?
பக்தியினாலே இந்த பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
பூட்டை திறப்பது கையாளே நல்ல மனந்திருப்பது மதியாலே
நிறுத்து வண்டியென்றே கள்ளர் நெருங்கி கேட்கையிலே எங்கள் கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா
ஊனுடலை வருத்தாதீர், உணவியற்கை கொடுக்கும்
உங்களுக்கு தொழிலிங்கே! அன்பு செய்தல் கண்டீர்
புகைநடுவினில் தீயிருப்பதை பூமியிற் கண்டோமே நன்னெஞ்சே பூமியிற் கண்டோமே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே வழி காண்ப திலாவகை செய்திடுவோம்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிகு விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொல்
ஒற்றுமை வலியாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
பொய்சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே
நாலு வகுப்பும்இங் கொன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானுட சாதி
ஒற்றை குடும்பந்தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை மற்றை கருமங்கள் செய்தே மனை வாழ்திட செய்பவள் அன்னை
கண்ணில் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ?
தெய்வம் பல பல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்
உடன்பிறந்தார்களை போலே இவ்வுலகினில் மனிதரெல்லோரும்
வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர்! இங்கு வாழும் மனிதரெல்லார்க்கும்
நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! ஞான நல்லறம் வீர சுதந்திரம்; பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!
வலிமை சேர்ப்பது தாய்முலைப்பாலடா, மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
நல்ல விலைகொண்டு நாயை விற்பாரந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே! பரத நாட்டியம் கூத்திடு வீரே!
வெட்டி யடிக்குது மின்னல் கடல் வீர திரை கொண்டு விண்ணை யிடிக்குது
தனிமை கண்டதுண்டு! அதிலே சாரமிருக்குதம்மா
அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு
இன்றும் இருக்க உளங்கொண்டாய்! இன்பத் தமிழுக்கிலக்கியமாய், இன்றும் இருத்தல் செய்கின்றாய்
மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே
எனக்குமுன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானுவந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!
பாரதியார்
குறிச்சொல்:
கவிதை
மகாகவி நாளில் முதல்வரின் முத்தான அறிவிப்புகளில் ஒன்று..
பதிலளிநீக்கு"திருக்குறளை போல மகாகவி வரிகளும் பேருந்துகளிலும் பள்ளிகல்லூரி சுவர்களிலும் அரசு அலுவலகங்களிலும் இன்னம்பிற இடங்களிலும் கற்றோர் படித்துபயன்பெறும்வண்ணம் எழுதிட வகைசெய்யப்படும்"என்பது.. அந்த முயற்சிக்கு இந்த தொகுப்பின் அநேக வரிகள் உதவியாய் இருக்கும்..!