அண்மை

இல்வாழ்க்கை - அதிகாரம் 5 | திருக்குறள் கவிதையில்

 இல்வாழ்க்கை - அதிகாரம் 5



குறள் 41


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 

நல்லாற்றின் நின்ற துணை


கவியுரை


வீட்டோர்க்கும்

நாட்டோர்க்கும்

வறியோர்க்கும்

மனையோரே

துணையோர்

ஆவர்!


உரை


குடும்ப வாழ்வு மேற்கொண்டவனே அற இயல்பு கொண்ட மூவர்க்கும் நல் செய்ய உற்ற துணையாகிறான்.


(இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் - இந்த தொடரில் வள்ளுவர் இயல்புடைய மூவர் யார்? என்பதை தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஆசிரியரது கருத்து குடும்பியோடு பொருந்தக்கூடிய ஏதும் ஒன்றாக இருக்கக்கூடும்)


பதவுரை


இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன், குடும்பவாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; இயல்புடைய-(அறத்தோடு கூடிய) தன்மையுடைய; மூவர்க்கும்-மூன்று திறத்தார்க்கும்.; நல்லாற்றின்கண்-நல்ல நெறியின்கண்; நின்ற-நிலைபெற்ற; துணை-உதவி, ஆதரவு.


குறள் 42


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை


கவியுரை


பற்று, பொருள்,

பாதுகாப்பு

அல்லோர்க்கு

இல்லோரே

நல்லதுணை

உள்ளோராவர்


உரை


பற்றற்று அலைகின்ற துறவிகளுக்கும் பொருளற்று அலைகின்ற பசித்தார்க்கும் அரணின்றி அலைந்து தம்மிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறவோன்களே நல்ல துணைவர்களாக இருப்பார்கள்; இருக்கவேண்டும்.


பதவுரை


துறந்தார்க்கும்-துறவிகளுக்கும்; துவ்வாதவர்க்கும்-ஏழைகட்கும்; இறந்தார்க்கும்-நிலை கெட்டுப்போனவர்களுக்கும். இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; துணை-உதவி.


குறள் 43


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


கவியுரை


மறைந்தோர், இறைவன்,

விருந்தோர், உறவன்,

தன் பணியும்

போற்றுதலே

இல்லறத்தின்

நல்லறமாம்!


உரை


தெற்கு திசையில் மக்கள் கடற்கோளால் அழிந்த பிற்பாடு அவர்களை தொழுத நம் தமிழ் மக்கள் தென்புலத்தாரை/தென்புலத்தை வணக்கத்திற்குரிய மரபாக கொண்டனர். அது இல்லறவானுக்கும் உகந்ததாக இருந்தது. இறைவனையும் வருந்தி உணவேற்க வந்தோரையும் உறவினர்களையும் தமது பணியினையும் வணக்கத்திற்குரிய மரபாக போற்றுதலே இல்லறவானுக்கு சிறப்பாகும்.


பதவுரை


தென்புலத்தார்-இறந்த முன்னோர், தென்திசை இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை); ஐம்-ஐந்து; புலத்து-இடத்தின் கண்; ஆறு-நெறி; ஓம்பல்-போற்றுதல், காத்தல், பேணுதல், வழுவாமற் செய்தல்; தலை-சிறப்பு, முதன்மையானது.


குறள் 44


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


கவியுரை


குறைக்கஞ்சி

கொடுத்துண்ணும்

குடும்பங்கள்

யாவும்

குறைவின்றி

வாழும்!


உரை


பழிக்கு பயந்து கிடைப்பதை பகுத்து உண்ணும் குடும்பங்கள் அனைத்திற்கும் குறை என்பதே எப்போதும் ஏற்படாது. 


பழிக்கு பயந்து என சொல்லக்காரணம் அறநெறியை தவறுபவன் பழி சொல்லுக்கு ஆளாக்கப்படுவான் எனக்கூறி அறநெறிக்குற்பட்ட வாழ்வை வள்ளுவபிரான் போதிக்கிறார் என்பதை அறிக.


பதவுரை


பழி-தீவினை, குற்றம்; அஞ்சி-நடுங்கி; பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்; வாழ்க்கை-வாழ்தல்; வழி-நெறி, ஒழுங்கு, குடிவழியினர்; எஞ்சல்-மிஞ்சுதல், ஒழிதல், இறத்தல், குறைதல்; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.


குறள் 45


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது


கவியுரை


அன்பும் அறனும்

பிறக்கும்

இல்வாழ்வில்

பண்பும் பயனும்

இருக்கும்


உரை


குடும்பவாழ்வில் அன்பு உண்டானால் கருணையும் தானே உண்டாகிறது. அதுவே அறத்தினை செய்ய தூண்டும் சாத்திய காரணமாகிறது. அந்த அறன் குடும்பத்தில் விளைகின்ற பண்புக்கும் பயனுக்கும் மூலக்காரணமாகிறது.


பதவுரை


அன்பும்-அன்பும்; அறனும்-நல்வினையும்; உடைத்தாயின்-உடையதானால்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; பண்பும்-குணமும்; பயனும்-பயனும்; அது-அது.


குறள் 46


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 

போஒய்ப் பெறுவது எவன்?


கவியுரை


அறமாற்ற

மணவாழ்வு

இருக்க

துறவேற்ற

வனவாழ்வு

எதற்கு?


உரை


இல் வாழ்க்கையே அறம் செய்ய உற்ற கருவியாக இருக்கும் போது இல்லமேற்ற உனக்கு துறவேற்ற வன வாழ்வு எதற்கு?


பதவுரை


அறத்து=அறத்தினது; ஆற்றின்-நெறியின்கண்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; ஆற்றின்-செய்தால். புறத்து-புறமாகிய; ஆற்றில்-நெறியின்கண்; போஒய்ப்-சென்று; பெறுவது-அடைவது; எவன்-யாது?.


குறள் 47


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை


கவியுரை


நிலையோடு

நல்வாழ்வு

வாழ்பவனே

இல்வாழ்வில்

நுழைகின்ற

எல்லோர்க்கும்

தலையாவான்!


உரை


நெறி நிலையோடு இல்வாழ்க்கை நடத்துபவன் என்பவனே, இனி இல்வாழ்விற்குள் புகவிருக்கும் அனைத்து மக்களுக்கும் தலையாகிறான் (தலைவனாகிறான்)


பதவுரை


இயல்பினான்-இயல்போடு, இயற்கைப்படி, இயற்கை உந்தும் வழி; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; முயல்வாருள் எல்லாம்-முயற்சி செய்பவர் எல்லாருள்ளும்; தலை-முதன்மை.


குறள் 48


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 

நோற்பாரின் நோன்மை உடைத்து


கவியுரை


அறமுள்ள

வினை மறவா

மனையுறவே;

உரமுள்ள

துறவிலும்

உயர்வு!


உரை


அறனை என்றும் மறக்காமல் பின்பற்றி வாழுகின்ற இல்வாழ்வானே; மனவலிமை கொண்ட துறவியை விடவும் உயர்ந்தவனாவான்.


பதவுரை


ஆற்றின்-நல்நெறியின்கண், வழியின்கண்; ஒழுக்கி-பிறரை ஒழுகச் செய்து, ஒழுக்கநெறி நிற்க உதவி, நடத்தி, செலுத்தி, ஒழுகப் பண்ணி; அறன் இழுக்கா-அறநெறியினின்று மாறுபடாத; இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கை; நோற்பாரின்-தவஞ்செய்வாரின் நிலையைவிட; நோன்மை-வலிமை, பொறுமை, தவச்சிறப்பு, தாங்கும் தன்மை; உடைத்து-(மிகுதியும்) கொண்டது.


குறள் 49


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று


கவியுரை


இல்லறமே

நல்லறமாம்!

அவ்வறத்தில்

நிந்தைசொல்

இல்லானால்

இனிது!


உரை


அறன் எனப்படுவதே இல்வாழ்க்கை ஆகும். அந்த இல்வாழ்க்கை நடத்தும் குடும்பம் அறநெறி தவறி பிறர் பழி சொல்லுக்கு ஆட்படும் வகையில் இல்லாது இருத்தல் சிறப்பாகும்.


பதவுரை


அறன்-அறம், அறநெறி; எனப்பட்டதே-என்று சொல்லப்பட்டதே; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; அஃதும்-அதுவும்; பிறன்-மற்றவன்; பழிப்பது-தூற்றுவது; இல்லாயின்-இல்லையானால்; நன்று-நல்லது.


குறள் 50


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்.   


கவியுரை


வையத்தில்

வாழ்வாங்கு

வாழ்பவரே

வானத்தில்

வானவராய்

வைக்கப்படுவார்


உரை


உலகத்தில் ஒழுக்கம் தவறாது அறத்துடன் வாழ்பவரே வானகத்தில் வானவரான தெய்வத்துள் ஒருவராக சேர்க்கப்படுவார்.


பதவுரை


வையத்துள்-நிலவுலகத்துள்; வாழ்வாங்கு- வாழும் முறைப்படி; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; வான்-விண்ணுலகம்; உறையும்-தங்கும்; தெய்வத்துள்-தெய்வத் தன்மையில்; வைக்கப்படும்-மதிக்கப்படும்.


தீசன்


2 கருத்துகள்

  1. அனைத்தும் அருமை!, 45, 46 மேலும் அருமை 👏

    பதிலளிநீக்கு
  2. அறமுள்ள வினைமறவா மன உறவே உரமுள்ள துறவினும் உயர்வு.. ! ஆஹா ஆறு சீர்களில் இன்னொரு இணைகுறட்பா படைத்துவிட்டாய்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை