அண்மை

பாரதியின் பிள்ளைக்காதல் கதை

 பாரதியின் பிள்ளைக்காதல்



காதல் யாருக்குத்தான் கிடையாதில்லை? எனக்கும் கிடைத்தது. பிஞ்சுமொழிக் காதலெல்லாம் பேதைத்தனம் அல்ல. ஆனந்த சுகமனைத்தும் அதிலும் கிட்டும்.


இஃது என் பாலக்கதை. அதுவும் காதல் கதை.


அவ்வினிய கனவினை, நான் எப்படி இங்குரைப்பேன்?


ஆனால் இது உறக்கப்பொழுதில் வந்த கனவன்று. நிகழ்பொழுதில் நிகழ்ந்த கனவு, நினைவை விட்டு நீங்கா கனவு.


ஆம், கனவு தான்.


நம் ஏக்கமே தூக்கத்திரையில் தெரிகிறது. அந்த ஏக்கம், ஏக்கமாகவே இருந்து தூக்கத் திரைதனிலே தினம் ஒளிப்பரப்பானால் என்னவென்பது?


அவளே என் ஏக்கம்.


மறக்க முடியா அவள் நினைவை இன்று கனவு போன்றே காண்கிறேன். 


ஆஹா! எத்தனை சுகமானதொரு காலமது.


மென்னடை அவள் நடை, கனி போல் அவள் குரல், கருவிழி கொண்டவள் மேனி, நல் நறுமலர் வீசும் கன்னி என்றால் அது சரியான சொல்லாடலாக இருக்காது.


அவள் தெய்வ மகளீருக்கு ஒப்பானவள்.


அன்பென்னும் வெள்ளம் நம்மை இழுக்குமேல் அதில் இலகுவாக பிழைத்திடல் எளிதோ?


கண்ணடி பட்டேன் காலடி தொடர்ந்தேன்.


இன்ப காதலோ! தூய காதலோ! எக்காதலானாலும் அது முதல் காதலே!


சிறுபிள்ளை காதலிலே தெய்வீகம் இருக்கும். மோகமில்லா அன்பினையே குழவிக்காதல் கொடுக்கும்.


காதலென்றால் என்னவென்று உரைப்பது மிகு எளிது.


"நயம் மிகுந்த அவள் கண்ணையே நாள் முழுதும் காண வேண்டும்" என்ற எண்ணம் மேலிட்டாலே அது காதல் தான்.


அவள் தினமும் நீரெடுக்க வேண்டி ஆற்றங்கரைக்கு வருவாள். அவளது புன்னகை வீசிடும் பார்வையை காண நானும் அங்கு போவேன். அவள் வரவுக்கு முன்னாலே வந்திடுவேன்.


சுதந்திர நற்பயிர் நடவேண்டிய மன்னவர்கள் நாட்டினிதம் பற்றுள்ளோரை காண வேண்டி காத்துள்ளது போல், அவளை கண்டு களிக்க நானும் காத்திருப்பேன்.


அவளும் வருவாள். அம்மென்னடை நிழல்போல தூரத்திலே தெரிந்தாலும் அறிந்திடுவேன் அது அவளென்று.


நீரையெடுத்தவள் குனிந்து நிமிர்கையில் பின்னல் பறக்க வதனத்தை திருப்பும் போது, ஜீவிதமாய் புலனனைத்தும் புத்துயிர் பெறுவது போலிருக்கும்.


அவள் என் விழியிலிருந்து மறையும் வரை அசைவற்ற சிலைபோலே களிப்பது என் வழக்கம்.


நான் ஞானத்தெளிவை பெற முயல்கிறேன். ஞானர்களின் வாய்ப்பேச்சை நின்று கேட்கிறேன்.


"உடல் மனம் புலனோடு நிதம் உறவாடும் மானுடரெல்லாம் ஞானத்தெளிவினை அடைவது கடினம்" என ஞானியர்கள் சொல்வதை நான் கேட்டதுண்டு.


நானும் மெய்யெது? பொய்யெது? என்பதில் தேர்ந்துள்ளேன்.


பாழாய் போன பசி பிணி காரணத்தால் வழியில்லாது பட்டினி இருப்போரை சாத்திரங் கண்டோர் கூடி அழைத்து "எல்லாம் மாயா", "எல்லாம் விதி தான்", "எல்லாம் உன் முன் வினை பயன் தான்" என மொழிதலில் நான் சோர்வுற்றேன்.


தாழ்ந்த உள்ளத்தாரே விதியினை நோவர்! பிறர் மேல் பழியிடுவர்! சினத்தின் காரணமாய் பகைவரை நிந்திப்பர்! சதிகள் செய்வர்! பொய் சாத்திரம் பேசுவர்! இதில் அழுக்குடைய மதிகொண்டோர் நாத்திகமும் பேசுவர்!


மாயாத மனம் சூழ்ந்த விருப்பமே கதியென்றும், அக்கதியே பலனைத்தும் தருமென உணர்ந்திடாதோர் கண்ணில்லாதவர்களாய் தான் இருத்தல் வேண்டும்.


என் மனம் சூழ்ந்த விருப்பம், அவள் தான். அவ்விருப்பத்தின் விளைவினிலே கவி வடிக்கிறேன்.


கன்னி மீது வந்த காதல் விளைவு ஒருபுறம். ஞான தெளிவை தந்திடும் நல் பக்தி ஒருபுறம்.


எண்ண விண்ணில் எந்த விண்கல் முதல் வந்ததோ?


என் மனதில் என்னவளின் இனிமை வந்தது.


காதல் என்னும் ஓர் உயிர் வளராது இருக்குமானால் அதனை கைக்கிளை என்பது சாலப்பொருந்தும்.


ஒருதலையாய் ஒரே இடத்தில் நிற்கும் போது அது கடலில் வீழ்ந்த உப்பினை போலாகிறது.


எனக்கும் அவளுக்கும் அதான் தொடர்பு. சான்றோர் அதனை ஒருதலைக்காதல் என்பர்.


என் தலை அவளின் கண் பார்க்கும் காலம் சென்று, கண்ணோடு கண் ஒக்கும் காலம் வந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.


துன்பமில்லா காதலென்று ஒன்று உண்டா?


மொய்க்கும் மேகத்தின் வாடிய நிலவு போல் ஆனது என் முகம். பனியால் சாய்ந்த மலர் போல் ஆனது என் உடல். சிந்தை அவளை ஆற்றங்கரை தனிலே கண்டிருக்க காட்சியற்ற கண்ணானது என் கருவிழி.


இது தான் என் கைக்கிளை பெருந்துயர்.


பெருவாழ்வு வாழ்ந்த தேவர் மன்னரின் வறுமை கதையை போலே, என் கைக்கிளை தந்த காலத்துயரை நானுரைக்க விரும்பவில்லை. 


ஆசை தந்த என்னந்த கன்னி, அன்பென்ற கானத்தாலே எனை களியாட வைத்திருந்தாள்.


அவளுக்கேதும் காவல் இல்லை. கட்டு, வழக்கென்று அவளை நானும் காணாமலில்லை.


கானகத்தில் இரு குருவிகள் கொஞ்சி குழைவது போலவும்! வானகத்தில் ஆடவரும் பெண்டீரும் மையல் கொண்டு மயங்குதல் போலவும்!


மேனியை மனத்துள்ளே ஊட்டும் அன்பு தான் உலகிலுள்ள உயிரனைத்திலும் ஒற்றுமையாய் இருக்கிறது.


என் கனவொத்த காலமும், தேன் போன்ற அவளாலே தெய்வ நாளாய் ஆனது.


அன்று ஆதிரை திருநாள்.

சங்கரன் ஆலயத்தில் நான் சோதிமான்களோடு சொற்களாடி கொண்டிருந்தேன்.


விழி தொடுகின்ற அளவிலே அவள் பேசி மறைந்து கொண்டிருந்தாள்.


நானும் அவளை ரசிக்கின்ற சாக்கினிலே தலையினை திருப்பிக் கொண்டிருந்தேன்.


இடையிடையே தெரியும் அவள், எதிரே நின்றாள்.


'மை' கொணர்ந்த கையுடனே 'ஒரு சேதி' என்றாள்.


புருவத்தினை நிமிர்த்தி கொண்டே 'என்ன' வென்றேன்.


'பொட்டுவைப்பேன்' எனச் சொல்லிக் கொண்டே திலகமிட்டாள்.


நானோ மூர்ச்சையுற்றேன்.


( பாரதியின் சுயசரிதை கவியிலிருந்து உரையாக்கப்பட்டதொரு உண்மை சம்பவம்)


- தீசன்


4 கருத்துகள்

  1. சத்தியமாக சொல்கிறேன்... பாரதி உயிரோடிருந்து இதை வாசித்திருந்தாரேயானால்...

    நம் தீசனை அள்ளி அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொண்டிருப்பார்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியொரு சம்பவம் என் கனவிலே வந்தாலுங்கூட

      இந்த நூற்றாண்டின் அதிஷ்டசாலி நானாகத்தான் இருப்பேன்

      நன்றி

      நீக்கு
  2. காலம் பார்த்து கனிந்த படைப்பு இது..!

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் நீர் திருத்தக்கதேவர் தான்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை