அண்மை

கடவுள் காட்டிய வழி - சிறுகதை

 கடவுள் காட்டிய வழி



“என்னங்க இன்னைக்காவது பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் கட்ட ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க ஸ்கூல்ல என்ன சொல்றாங்களோ தெரியல அதுக முகத்தை பார்க்கவே பாவாமா இருக்கு" என்றாள் அமுதா கணவன் முருகவேலுவிடம்.  முருகவேலு, ஆட்டோ டிரைவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஆட்டோ ஓட்டி சர்வ சாதாரணமாக தினமும் இரண்டாயிரம் வரை சம்பாதித்தவன். திருச்சி ஜங்சனில் யூனியனுக்கு பணம் கட்டி ஆட்டோ போட்டிருந்தான்.


அப்போது ரயிலுக்கும் பஞ்சமில்லை வருமானத்துக்கும் பஞ்சமில்லை.  காலையில் ஸ்கூல் சவாரி வேறு போவான். தனியார் பள்ளியில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகள் பதினைந்து பேர்தான் அவனுடைய வாடிக்கை என்றாலும் மாதம் இருபதாயிரம் வரை சம்பாதித்து விடுவான்.  கொரானா வந்தது. பள்ளிகளை மூடிவிட்டார்கள். பெரும்பாலான ரயில்கள் ஓடவில்லை. ஆட்டோக் காரர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து காலத்தை ஒட்டும் நிலை. வருமானம் அதிகம் வந்த போது நம்வீட்டு பிள்ளைகளும் பெரிய வீட்டு பிள்ளைகளைபோல பிரைவேட் ஸ்கூலில் படிக்கடுமே! பணம் தானே பார்த்துக் கொள்வோம் என் அசட்டுத் துணிச்சலில் பிள்ளைகள் இரண்டு பேரையும் சி பி எஸ் இ ஸ்கூலில் சேர்த்து விட்டான்.


இரண்டு பேரும் சுமாராகத்தான் படிப்பார்கள்.  இருந்தாலும் பணக்கார வீட்டு பிள்ளைகளோடு தன் பிள்ளைகளும் சேர்ந்து படிப்பதில் அவனுக்கு ஒரு பெருமை.  போன வருடம் ஸ்கூலே நடக்கவில்லை. இருந்தாலும் ஆன்லைன் கிளாஸ் அது இது என்று சொல்லி அறுபது ஆயிரத்தை கட்ட வைத்து விட்டார்கள்.  ஆன்லைன் கிளாஸ்க்கு இருவருக்கும் மொபைல் தேவைப்பட்ட போது அதையும் தவணையில் தான் வாங்கி கொடுத்தான். ஏற்கனவே ஆட்டோக்கு மாதம் எட்டாயிரம் கட்ட வேண்டும் இடையில் எப்ஃ சி வந்து பதினைந்தாயிரம் காலி ஆகிவிட்டது.  மூன்று மாதம் தொடர்ச்சியாக ஆட்டோவுக்கு பைனான்ஸ் கட்ட முடியவில்லை. எப்போது வண்டியை தூக்கு வார்களோ என்ற பயம் வேறு, ஆட்டோ போவது பற்றி கூட கவலையில்லை. அவமானத்தை எப்படி துடைப்பது? சாலையில் நடந்து வருபவர்கள் எல்லோரிடமும் ஆட்டோ வேண்டுமா சார் என்று வெட்கத்தை விட்டு கேட்கின்ற நிலை.


வருமானம் அதிகம் வந்தபோது சீட்டெல்லாம் போட்டு சேமித்தவன், வருமானம் குறைய குறைய அந்த வேதனையில் குடிக்கவும் ஆரம்பித்துவிட்டான்.  சிலர் குடித்தால் அரக்கர்களாகி விடுவார்கள். சிலர் குழந்தையாகி விடுவார்கள். இவன் வேறு ரகம் குடித்து விட்டு வந்தால் அமைதியாக படுத்து விடுவான்.  அமுதாவும் அதை புரிந்து கொள்வாள். குடும்பம் தடுமாறிய போது, தன்னிடமுள்ள எல்லா நகைகளையும் ஒவ்வொன்றாக அடமானத்துக்கு கொடுத்துவிட்டாள் அமுதா. இனி அவளால் அவன் நிலையை பார்த்து வேதனை பட மட்டும்தான் முடியும். 


கண்ணில் பட்ட எல்லோரிடமும் கடன் வாங்கி முடித்துவிட்டான்.  இதில் பெரிய அதிசயம் ஒன்று உண்டென்றால் போன வருடம் சேவிங்ஸ் அக்கொவுண்டில்  பிள்ளைகளுக்காக சேர்த்த இருபதாயிரத்தை அவன் தொடவேயில்லை. இன்னும் நாற்பது ஆயிரம் புரட்டிவிட்டால் பாதி கட்டணத்தை இருவருக்கும் கட்டி விடலாம்.  ஆறு மாதம் கழித்து மீதி பணத்தை கட்டிவிடலாம். பாதி பேருக்கு தடுப்புசி போட்டுவிட்டார்கள். மூன்றாவது அலை வரபோவதில்லை. இனி எப்படியாவது சமாளித்துவிடலாம்.  இதுதான் அவன் எண்ணம்.


அன்று காலையிலேயே குளித்துவிட்டு சாமி படத்துக்கு பூ போட்டு விளக்கேற்றி கடவுளே இன்று மாலைக்குள் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு என்று வேண்டிக் கொண்டான்.  நெற்றி முழுதும் விபூதியை அள்ளி பூசிக்கொண்டு வெளியில் வந்தான். “என்னங்க காலையிலேயே கிளம்பிட்டீங்க!” என்றாள் அமுதா. நான் இன்று ஒரு பெரிய மனிதரை பார்க்க போகிறேன்.  அவர் யார் என்று நான் வந்ததும் சொல்கிறேன். என்று கூறிக்கொண்டே ஆட்டோவில் ஏறி வண்டியை ஸ்டாட் செய்தான்.   


அவனுடைய ஆட்டோ நகருக்கு நான்கு கிலோ மீட்டர் வெளியே உள்ள மணிவாசகம் வீட்டில் நின்றது.  மணிவாசகம் மருந்து மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பவர். பெயரளவிற்கு தான் செட்டியார் முதலாளி.  மற்றபடி மணிவாசகம்தான் நிர்வாகம் எல்லாம். உண்மையாக உழைப்பதால் மணிவாசகத்துக்கு மதிப்பும் அதிகம், ஊதியமும் அதிகம். அவருடைய மகள் ஜனனியை சிறுவயது முதலே பள்ளிக்கு ஆட்டோவில் முருகவேல்தான் அழைத்து செல்வான்.  ஜனனியும் அவளை ஆட்டோமாமா ஆட்டோமாமா என சொந்த மாமாவாகவே கருதினாள். ஜனனிக்கு அவள் அம்மா ஸ்கூலுக்கு உணவு கொடுக்கும் போதுகூட மாமாவுக்கும் கொடு என அடம்பிடிப்பாள் ஜனனி. 


திரும்ப வரும்போது ஜனனிக்கு ஏதாவது ஜஸ்கிரீம், சாக்லேட் என தன்  செலவில் வாங்கிக் கொடுப்பான் முருகவேலு. மாதம் சம்பளம் அவன் எதிர்பார்த்தை விட அதிகம். தீபாவளி  பொங்கல் வந்தால் வற்புறுத்தி ஒரு தொகையை அவன் கையில் திணித்துவிடுவார் மணிவாசகம். அதையெல்லாம் நினைத்து பார்த்த முருகவேல் நமக்கு தேவைப்படும் நாற்பதாயிரம் ரூபாயய் அவரிடம் கேட்டால் என்ன?  பிறகு கொடுத்து விடலாம் என நினைத்தான். 


மணிவாசகம் வீடு  தாழ் போடாமல் சாத்தி இருந்தது   லேசாக கதவை தட்டினான். மணிவாசகம் மனைவி ரேணுகாதேவி யாரென்று பார்த்தாள்.  ”அட வாப்பா முருகா இப்பத்தான் உனக்கு தெரியுமா?” என்றாள். ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைந்தான் முருகவேலு.  முதல் அறையில் கட்டிலில் அசைவற்று படுத்து கிடந்தார் மணிவாசகம். ”என்னம்மா ஆச்சு அய்யாவுக்கு” என்று பதறினான் முருகவேலு.  முருகவேல் குரல் கேட்டு எழுந்து உட்கார முயன்றார் மணிவாசகம் முடியவில்லை. அவர் கைகளை பற்றிக் கொண்டான். கண்களை துடைத்துக் கொண்டே ரேணுகாதேவி, அந்தக் கதையை கூறத் தொடங்கினார்.


”போன மாதம் கம்பெனி வேலையாக பேங்கிற்கு டூவீலரில் போனபோது யாரோ ஒரு படுபாவி அவர் மீது மோதிவிட்டான்.  கூட்டத்தில் தடுமாறி விழுந்துவிட்டார். முதுகில் அடிபட்டு தண்டுவடம் பாதித்து விட்டது. முதலாளி சென்னை வரை கொண்டு போய் மூன்று லட்சம் செலவு செய்து பார்த்துவிட்டார்.  ஒன்றும் நடக்கவில்லை. இனி மேலும் அவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்று அவரை அழைத்து வந்துவிட்டேன். மகளும் மாப்பிள்ளையும் இரண்டு முறை வந்து பார்த்துவிட்டு போனார்கள்.  கையில் இருந்த பணமெல்லாம் செலவாகி விட்டது. கையில் காசு இருந்தபோது தாம்தூம் என்று செலவு செய்து விட்டார். இன்று பாலுக்கும், பருப்புக்கும் கூட காசில்லாமல் தவிக்கிறேன்.”


”பெண்னைக் கட்டி கொடுத்த இடத்தில் கேட்பது மரியாதை இல்லை.  எங்க அம்மா விட்டு சொத்து விற்றதில் கொஞ்சம் பணம் என் தம்பிகள் எனக்கு தரவேண்டும்.  அதுவும் வர லேட்டாகுது எங்களுக்கு இந்த நிலை வரும் என்று நாங்கள் நினைக்கவே இல்லையே” என முகத்தை முடிக் கொண்டு அழுதாள் ரேணுகாதேவி.   


அதை பார்த்த முருகவேலுக்கு கண்களில் நீர் துளித்தது “வாழ்ந்தவர்கள் யாரும் கெடக் கூடாது“  அழாதீங்க அம்மா! என்னிடம் ஒரு இருபது ஆயிரம் ரூபாய் பேங்கில் சும்மாதான் கிடக்குது. அதை இப்போதைக்கு உங்களுக்கு தருகிறேன் என்றான்.  வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்து தெரு ஏடிஎம்ல இருபதாயிரத்தை எடுத்து ரேணுகாதேவியின் கைகளில் கொடுத்தான் முருகவேலு. வாங்க கூச்சப்பட்டு கொண்டே கை நீட்டி வாங்கிக் கொண்டாள் ரேணுகாதேவி.


ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டான் முருகவேலு.   சமச்சீர் கல்வி என்று ஆன பிறகு, தனியார் பள்ளியானால் என்ன அரசு பள்ளியானால் என்ன ஒரே கல்விதானே!    இதற்கு ஏன் தனியாரில் லட்சங்களைக் கொட்டி அழ வேண்டும். நேராக வீட்டுக்கு வந்தான் முருகவேலு, அவனை எதிர்பார்த்து காத்திருந்த அமுதாவையும் அவன் இரு பிள்ளைகளையும்,  ஆட்டோவில் ஏற்றி கொண்டான். ஆதார் கார்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டான். அவனது ஆட்டோ அரசு மேல் நிலைப் பள்ளியை நோக்கி சென்றது.


தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தான்.  அந்த அறையில் அரசு பள்ளியில் தாய் மொழியில் படித்த அப்துல் கலாம் படமாக இருந்தார்.


“அய்யா என் பிள்ளைகளை உங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளனும்”


“சந்தோஷமா சேர்த்துக்கிறோம்.  ஏற்கனவே எங்கே படிச்சாங்க? டிசி எல்லாம் வாங்கியாச்சா?”


“பணம் கட்டாமல் அங்கே டிசி வாங்க முடியாது. என் நிலை இப்படி”


“சரி ஆன்லைன் கிளாஸ் படிச்சுருக்காங்கல்ல அதற்கு நெட் சென்டருல ஒரு அட்டேன்டென்ஸ் சர்டிபிகேட் நாளை எடுத்துக் கொடுத்துருங்க.  நான் இன்றே அட்மிஷன் போட்டுக்கிறேன்”


அட்மிஷன் போட்டு இருவருக்கும் எல்லா பாடத்துக்கும் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் கொடுத்தார்.  புது புத்தகங்களை பார்த்ததும் மகிழ்ச்சியோடு பிள்ளைகள் வாங்கிக் கொண்டார்கள்.  


”அய்யா இந்த வருட கட்டணம் எவ்வளவு”  என்றான். அரசு பள்ளியில் கட்டணம் குறைவுதான்.  கொரானா காலமாக இருப்பதால் அதையும் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து நாங்களே  கட்டி விடுகிறோம், என்றார் தலைமை ஆசிரியர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செய்யப்போகும் உதவிகளையும் பட்டியலிட்டார்.    நன்றி சொல்லி வெளியே வந்தான்.


ஒரு மாதத்துக்கு பின் பிள்ளைகளின் முகமும், கணவரின் முகமும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள் அமுதா.


கடவுள் கைவிடவில்லை!


 -மாரிமுத்து ஜெகநாதன்


4 கருத்துகள்

  1. வீதிதோறும்.. ஏன்...ஒவ்வொரு வீடுதோறும் சென்றடையவேண்டிய விழிப்புணர்வு கதை..!

    பதிலளிநீக்கு
  2. இந்த காலகட்டத்தில் தேவையான ஒர் அருமையான விழிப்புணர்வு கதை

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அரசு பள்ளியில் படித்தால் கௌரவ குறைச்சலாக நினைப்பவர்களை சிந்திக்க வைக்கும் ஓர் அற்புதமான படைப்பு. அருமை

    பதிலளிநீக்கு
புதியது பழையவை