அண்மை

அநுமன் அர்ச்சனை | கம்பர் என்றொரு மானுடன்

 அநுமன் அர்ச்சனை




உதய கால சூரியனையோ..

அந்திம கால ஆதவனையோ பார்க்கையில் உங்களுக்கு என்னதோன்றும்....?


அனுமானுக்கு என்ன தோன்றியது தெரியுமா..?

 "ஆஹா எத்தனை அழகாக பழுத்திருக்கிறது இந்த பழம்..! வானத்தில் அந்தரத்தில் காய்த்து தொங்குகிறதே..! யார் கண்ணிலும் படவில்லையோ..? சரி பரவாயில்லை  நாமே விரைந்து சென்று முதல் ஆளாக புசித்துவிடலாம்.." என்று பறந்து போனார் பிறந்து சில மாதமே ஆன பாலகன் ஹனுமான்!


தன்னை நோக்கி ஒரு பாலகன் பறந்துவருவதை அறிந்த ஆதவன் எத்தனையோ தடைகளை தந்தபோதிலும் அவற்றை தகர்த்தெறிந்து அந்த ஒளி சுடர் கனியை புசித்தே தீருவது என்ற முடிவில் முன்னேறிக்கொண்டிருக்க..



விஷயம் தேவசேனாதிபதி இந்திரனை செவிகளை எட்டியது..

"யாராடா இந்த திடீர் வானர வித்து?" என்று திகைத்தவன் மறுகணம்.. முப்பதுகோடி இடிமின்னல்களின் ஆற்றலை பெற்ற தன் வஜ்ராயுதத்தை எடுத்து வீசினான்..! பாவம் பால ஹனுமனின் பிஞ்சு உடல் வெந்து விழுந்தது!!!


தன்மகனை ஈவு இரக்கமின்றி தாக்கியதால் வெகுண்டெழுந்த வாயுபகவான் வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டார்...! 


அவ்வளவுதான்...

அவணியே ஸ்தம்பித்து போனது!


உணவின்றி ஒருமாதம்.. இருக்க முடியும்..!


நீரின்றி சில தினங்கள்.. இருக்கலாம்..!


ஆனால் காற்றின்றி எத்தனை நிமிடங்கள் கடக்க முடியும்??


அக்னி எரியவும் காற்று வேண்டுமே..!


எரிகதிர் சூரியனே கூட எரிகிற ஹீலியம் வாயுதானே..!


உடனே அவசர அவசரமாக வானுலக கடவுளர்கள் ஒன்றுகூடி பேசி,, உடனடியாக அனுமனை உயிர்பெற்றெழ செய்ததோடு.. தவறுக்கு பிராயசித்தமாக ஆளாளுக்கு வரங்களை ஒரு வரைமுறை ஏதுமின்றி வாரிவழங்கினர்.


தன் பொருட்டு நேர்ந்த விபரீதம் என்பதால் சூரியபகவானே அனுமானின் ஞானகுருவாக இருந்து சகல வித்தைகளையும் கற்றுதந்தார்..!


ஒரு உயிரினம் மரணிக்க காரணமாகிய எந்த சந்தர்ப்பமும் இதனால் அநுமனை நெருங்க வாய்ப்பின்றி போனதால் அவன் என்றென்றும் வாழ்கிற சிரஞ்சீவி ஆனான்!!


வயதுக்கு மிஞ்சிய வரங்களை பெற்றதால் அதன் மகத்துவம் தெரியாமல் 'குரங்கு கையில் பூமாலை' போல வானர குட்டியாம் அனுமான் சுட்டித்தனமான அட்டகாசம் செய்துகொண்டிருக்க.. அதனால் பாதிக்கபட்ட ஒரு முனிவன் 'பெற்ற வரம் யாவும் உனக்கு மறந்து போக கிடவது!' என்று சாபமிட்டுவிட்டார்..!!


அந்நாள் தொட்டு, யானை எப்படி தன்பலம் அறியாதோ.. அவ்வாறே அநுமாரும் தன் வலு உணராது திரியலானார்..!!



******. *******.  ****** *******


கிஷ்கிந்தா காண்டம்!


(மயேந்திர படலம்)



சுக்ரீவன் ஆணை ஏற்று சீதை இருக்குமிடம் தேடிவந்த வானரபடை ,, 'சம்பாதி' எனும் கழுகின வேந்தன் மூலம் சீதை இலங்கையில் சிறைப்பட்டிருப்பாள் என்றும் ஆனால் அந்த இலங்கையோ பரந்த கடலுக்கு அப்புறமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டனர்.



நீலன் முதலான முதல்ரக வீரர்களும்கூட அலைகடலை பார்த்து பிரம்மித்து நின்றிட..


வாலி ஈன்ற வெம்புலி அங்கதனோ..


"வேலை கடப்பென்.. மீள மிடுக்கு இன்று!"


(கடலை எளிதாக கடந்துவிடுவேன்; ஆனால் அங்கிருந்து மீண்டுவருகிற தைரியம் எனக்கில்லை..!)

என கைநழுவி விட்டான்.


பிறகு எல்லோரும் அநுமனை நோக்கினர்..


மற்றவர்களை போல் அன்றி தன்னால் எதுமுடியும் என்றே சொல்ல தெரியாமல் குழம்பி நின்றான் அநுமான்..!


பின்னர் ஜாம்பவான்(கரடி) வந்து அனுமனின் பழைய கதையையும் அவனது ஆற்றலையும் யாவரும் அறிய எடுத்துக்கூறினார்... 



அது ஒரு அற்புதமான இசைகோர்த்த துதிபாடல்...!



"

வெப்புறு செந் தீ,  நீர் வளியாலும் விளியாதீர்..!


செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்..!


ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது இல்லீர்..! - ஒருகாலே


குப்புறின், அண்டத்து அப் புறமேயும் குதிகொள்வீர்..!!"



(பொருளுணர..)


"அநுமான்...! நீ சுட்டுப்பொசுக்கும் நெருப்பாலோ, ஆழ்கடல் நீராலோ, புயல்காற்றாலோ ஒருபோதும் பாதிக்கப்படமாட்டாய்..!


பெரிதாய் கூறப்படும் எந்த ஒரு படைக்கருவிகளாலும் (சிவனின் திரிசூலமோ/ திருமாலின் சக்கராயுதமோ/ இந்திரனின் வஜ்ராயுதமோ/ பிரம்மாஸ்திரமோ/ அமெரிக்காவின் அணு ஆயுதமோ/ வடகொரிய ஏவுகணையோ/ சீனாவின் பட்டாசோ அல்லது வைரஸோ....) உன் உடலை சிதைத்துவிட முடியாது!!



ஒன்னு சொல்லவா..? உனக்கு ஒப்பான இன்னொரு உவமை சொல்லனும்னா அதற்கு உன்னை விட்டா வேறு ஆள் இல்லை! (தன்னிகரற்றவன்)


ஒரே ஒரு தடவ நீ 'தம்'கட்டி உந்திஎழுந்தா போதும் நொடிப்பொழுதில் நேராக போய் அண்டத்தின் அந்தாண்ட பக்கமா போய் விழுந்திருவ..! "

(கேட்டீர்களா கதையை...)



அதோடு அவர் நிறுத்தவில்லை அடுத்தடுத்த பாடலில்.....


"அனுமனே..!, நீ மேருவைவிடவும் உயர்ந்த பெரிய மேனியை எடுக்க வல்வனடா... !


அதேநேரம் உன் உருவை சுருக்கி,

பொழிகிற மழைத்துளிகளின் இடையிலும்,, சிந்திவிழும் நீர்த்தாரைகளின் நடுவிலும் ஏன் இண்டுஇடுக்குகளிலும் கூட புகுந்து வரும் வரம் பெற்றவனடா.. நீ ! ( கொசுவுக்கு இந்த திறமை இருப்பதாக விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளனர்)



உலக உருண்டையையே தூக்கி நிறுத்தும் பயில்வானடா நீ!  (ஹெர்குலஸ்../ அட்லஸ் மாதிரி)


பழி இல்லாதவன்..நீ..!


சூரியனை வெறுங்கையில் தொட்டுப்பிடிக்க வல்ல ஒரே ஒருவனும் நீ தான்..!!"


என்கிறார்.. இதோ அந்த பாடல்,,



"மேரு கிரிக்கும் மீதுஉற நிற்கும் பெரு மெய்யீர்;


மாரி துளிக்கும் தாரை இடுக்கும், வர வல்லீர்;


பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர், பழி அற்றீர்;


சூரியனைச் சென்று, ஒண்கை அகத்தும் தொட வல்லீர்..!"




இவ்வளவும் சொல்லிவிட்டு, மேலும்


"வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர். "

(நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் முடிப்பவன்!)


'இலங்கையை இடந்து வேரொடு  இவ் வயின் தருக'


என்றாலும் கொண்டு வந்து தந்திடும் ஆற்றல் உடையவனப்பா நீ..!".. என்று ஜாம்பவான் அனுமன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக..,


அனுமன் ஓரளவுக்கு தன்னை உணருகிறான்..!



கடலை தாவுகிறான்..!

(அதற்கென தனி படலமே இருக்கிறது!!)


***********************


சமீபத்தில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றொரு வரவேற்கத்தக்க அறிவிப்பு "அன்னைத்தமிழில் அர்ச்சனை" என்ற பெயரில் திட்டமாக வந்திருப்பதை யாவரும் அறிவீர்கள்..!


அரசு, வாழைப்பழத்தை உரித்து ஊட்டியே விட்டாலும் அதை நாம்தான் மென்று தின்ன வேண்டும்.. அறிவிப்பு வெறுமனே கோயில் பலகையோடு நிற்பதில் பயனில்லை.. நடைமுறைபடுத்தவேண்டியது நாம்தான்.


அர்ச்சனை = வழிபாடு/துதிபாடு  

என்பது நாம் விரும்புகிற தெய்வத்தின் பெயர்களை கூறி வாயார புகழ்பாடுவதே அன்றி வேறில்லை.. 


இன்னும் சொல்லப்போனால் தெய்வங்களை நாம்தான் அவரவர் மந்திரம்சொல்லி உச்சரித்து வழிபட வேண்டும்.. அதை அதிகம் படித்திராத அக்கால வெகுஜன மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அர்ச்சகர் சொல்ல சொல்ல அதை காதில் வாங்கி கேட்டு பிறகு சொல்லி வந்தனர்... இன்றோ கற்றறிந்த நாமும் பொருளறிவதில்லை.. சொல்வதையும் கேட்டு திருப்பி சொல்லுவதில்லை... என்றால் பிறகு எதற்கு அந்த அர்ச்சனை?? அதை செய்ததற்கு ஏன்  தட்டில் தட்சனை?


நம் இந்தியமரபில்

மூவகை தவ வழிபாட்டு முறைகள் உள்ளன.. "மன மொழி மெய்" என அழகுத்தமிழிலும்.. (உம்மைத்தொகை)


மானசம்

வாசிகம்

காயகம்


என வடசொல்லிலும் கூறுவதுண்டு..


மனதால் உருகி வழிபடுவது = மானசம்.


வாய்விட்டு ஓதி, பாடி வழிபடுவது= வாசிகம்


உடல்காரியங்களால் வழிபடுவது = காயகம்

(அதாங்க..

 காவடி எடுப்பது/உருண்டு புரள்வது/ பாத யாத்திரை/ பட்டினி கிடப்பது/ தீ மிதிப்பது.....)


அவரவருக்கு ஏற்ற ஏதோ ஒரு வழியில் வழிபடல் செய்யலாம்..


 மனதால்தான் வழிபட போகிறீர் என்றால் அங்கு அர்ச்சனைக்கு வேலை இல்லை...!


அர்ச்சனை செய்வதென்றால்.. மனசுக்குள் வேண்டுவதில் அர்த்தமில்லை!

வாய்விட்டு போற்றுங்கள்.


மனசுக்குள் ஒருவரை பாராட்டி அவருக்கு என்ன தெரியபோகிறது?


சரி நாம் ஆஞ்சநேயரை வழிபடுவதாக எடுத்துக்கொண்டால்....


 வடமொழியில் பல ஸ்லோகங்கள் உள்ளன.. பொருளறிந்தால் பாடுங்கள் குறைசொல்லவில்லை...,


தெரியலையா..?


இருக்கவே இருக்கிறான் நம் கம்பன்...!


 மேற்கண்ட மயேந்திரமலை படல வரிகளில்.. ஜாம்பவான் அனுமனின் பெருமைகளை எடுத்துரைப்பதாக வருகிற பாடல்யாவுமே அநுமனை துதிபாடி வழிபடும் ஆகச்சிறந்த தமிழ் செய்யுள்களாக இருக்கின்றன...!!


 (அருகில் "போற்றி..! போற்றி..! வாழ்க வாழ்க..!! காக்க காக்க.!! " என எதாவது இட்டு நிரப்பி வணங்கிக்கொள்ளுங்கள்...! அவ்வளவுதான்.. இதற்கெதற்கு ஒரு இடைத்தரகர்..? )


அநுமனை குறிக்கிற பெயரையோ அவன் ஆற்றலை பெருமையை 


உதாரணமாக,,


ஓம் மாருதியே போற்றி போற்றி!

ஓம் வானர வீரா போற்றி போற்றி!!

ஓம் வாயுபுத்திரா போற்றி போற்றி!!


ஓம் அஞ்சனை மைந்தா வாழ்க! வாழ்க..!

ஓம் ஆஞ்சநேயனே வாழ்க வாழ்க!

ஓம் சொல்லின் செல்வனே வாழ்க வாழ்க..!


ஓம் தடந்தோள் பெரு வீரா எமை காக்க...!

ஓம் தருமத்தின் தனிமை தீர்ப்பான் உலகை காக்க...!


வேண்டிய போதே வேண்டிய எய்தும் வினைவல்லீர்.. போற்றி! போற்றி!



( தமிழே ஆயினும் பொருளறியாது ஓதி பலனில்லை..! )



*******. ******. ******


கவிஞர் வாலி.. !


கண்ணதாசன் மருதகாசி பட்டுக்கோட்டை என பெரும் பெரும் நாவாய்களுக்கு மத்தியில் கட்டுமரம் செலுத்தியவர்..! மெல்ல மெல்ல தன் கவித்திறனால் உயர்ந்து அவரதுகாலத்தில் விமானம்தாங்கி போர் கப்பலாக  விஸ்வரூபம் எடுத்தவர்..!

தன் கடைசிகாலத்திலும் மவுசு குறையாத சொகுசு கப்பலாக உலாவந்தவர்..!


 ராமாயண வாலியை போல எதிரியின் பாதிபலம் தனக்கு கிடைக்கட்டும் என அவரே அப்பெயரை விரும்பி புனைந்துகொண்டாராம்!


வானரங்களை குறித்து "கவி" என்ற சொல்லும் தமிழில் உண்டு.

வாலி வானர அரசர் தானே!

ஆதலால் இவரும் "கவி அரசர்" தான்!!



'கோபுர வாசலிலே' படத்தில் அவரது நயமிகு பாடல் வரி.. ஒன்று..!!


( பாடல்:  தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது தம்பி..!)


சீதாவை பிரித்தது 

மான்தான்...- புள்ளி

மான் தான்..!


தோதாக சேர்த்தது

மான்தான்..!-- ஹனுமான் தான்!


நாங்கள் அனுமான்கள்..

வாழ்க இளமான்கள்...!"


90 களில்...

அநேக கல்யாண வாழ்த்து போஸ்டர்களில் இவ்வரிகள் இடம்பெற்ற வரலாறு !


சூரியராஜ்


6 கருத்துகள்

  1. அப்படியானால் ஹனுமானை சீனா வைரஸ் ஒன்றும் செய்ய முடியாது.RT PCR,RAPID TEST எதுவும் தேவையில்லை.
    கோவாக்ஸினும் வேண்டாம்.கோவிஷீல்டும் வேண்டாம்.நல்ல கற்பனை அய்யா உமக்கு!

    பதிலளிநீக்கு
  2. (பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா )

    இடைத்தரகர் இல்லாமல் விநாயகரை அப்போதிலிருந்து வழிபடுகிறேன். இந்த பாடலை பாடி. அந்த வகையில் விநாயகரிடமே எனது அப்ளிகேஷன் நேரடியாக சென்றுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. ஏதோ என்னால் முடிந்த எளியதொரு துதியை வாசகர்களுக்கு வழங்குகிறேன்..

    ******

    அஞ்சலை பெற்றெடுத்த அண்ணலே போற்றி
    ஆலவாய் வண்ணமாய் வந்தாய் போற்றி
    வடம்வால் பெற்ற வஜ்ரமே போற்றி
    வாயு வலியானே போற்றி போற்றி

    ஆகம உரத்தை கொண்டான் போற்றி
    வாகனம் அன்றிச் சென்றான் போற்றி
    மாஅகம் குணமிக்க குரங்கே போற்றி
    தெள்வலி தடந்தோளே போற்றி போற்றி

    இம்மை மறுமை தெளிந்தான் போற்றி
    இராமன் வழிநின்று வாழ்ந்தான் போற்றி
    காமன் கொள்வினை கொன்றான் போற்றி
    காலன் இல்லானே போற்றி போற்றி

    ஈண்டறம் பூண்டோரை பகைத்தான் போற்றி
    தேவினை சாபத்தை ஏற்றான் போற்றி
    வாழ்வினை மறந்த வானரம் போற்றி
    வல்பெறும் அனுமானே போற்றி போற்றி

    உன்னத பண்பகம் கொண்டான் போற்றி
    உண்மையன் நடைநின்று சென்றான் போற்றி
    இலக்குவன் உயிரினை காத்தான் போற்றி
    சிரஞ்சீவி சுமந்தானே போற்றி போற்றி

    ஊகையை நெருப்பிடம் கற்றான் போற்றி
    ஈகையின் வடிவினை கொண்டான் போற்றி
    தாயையே மாரிலே தயைத்தான் போற்றி
    பூவை ஒத்தானே போற்றி போற்றி

    எத்திறம் எதிரியும் எதிர்த்தான் போற்றி
    முத்திறம் உணர்ந்த முனியே போற்றி
    கற்றோர் ஏற்றும் கோலனே போற்றி
    வீர அனுமானே போற்றி போற்றி

    ஏகன் அநேகன் வடிவான் போற்றி
    போகன் பாகத்தை வென்றான் போற்றி
    பாரிலும் பெருங்கணம் கொண்டான் போற்றி
    மாலடி பணிந்தானே போற்றி போற்றி

    ஐயன் கேசரி குணத்தான் போற்றி
    அடியிலே வானம் அளந்தான் போற்றி
    அஞ்சலை நெஞ்சிலே நின்றான் போற்றி
    ஆகாய மார்கனே போற்றி போற்றி

    ஒக்க இயலாத வரத்தான் போற்றி
    பக்கமா பறந்தே விரிந்தான் போற்றி
    நிற்க இயலாத அறத்தான் போற்றி
    பெரிய தாடையே போற்றி போற்றி

    ஓதுவான் பாடும் தலைவா போற்றி
    ஓத வடிவத்தின் உறைவா போற்றி
    கலையாகி நின்ற காற்றே போற்றி
    கயிலை பணிந்தானே போற்றி போற்றி

    ஔடதம் போன்ற அனுமான் போற்றி
    மாயையை விலக்கும் மாருதி போற்றி
    தாயினை ஒக்கின்ற நேயனே போற்றி
    எனதன்பு அனுமானே போற்றி போற்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைத்துவிட்டேன்...!

      சனிபிடிக்காத அனுமனுக்கு இவ்வளவு ஐஸ் வைத்தால் சளிபிடித்துவிடும்..!

      இதில் அகரவரிசை வேறு அழகாக அணிவகுத்துவருவதை என்னவென்று சொல்லி பாராட்டுவது?

      நீக்கு
புதியது பழையவை