காரையில் ஒலித்த குரல்
காலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ஏதோவொரு வகையில் நமக்கு சிலரை வழங்கிவிட்டு செல்கிறது.
இந்தியா விடுதலைக்காக வீர சுவர்கம் செல்வதற்கும் துணிந்திருந்த நேரங்களில், நம் பாரத மாதா பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான காலச்சம்பவங்களுக்கு மத்தியில் விடுதலை வேட்கை கொண்ட பல பிள்ளைகளை பிரசவித்துக் கொண்டிருந்தாள்.
அத்தனை பிள்ளைக்கும் வீரமென்ற வித்திருக்குமாயின் அதிலொரு பிள்ளையின் கதை தான் இது.
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து ஈடுபட்ட காலம்.
இங்கிலாந்திடம் நாம் அடிமைப்பட்டு கிடந்ததால், இந்திய வீரர்களும் அப்போரில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எந்த நேரத்திலும் ஜப்பான் ராணுவ படையோடு இந்தியாவில் வந்து இறங்குவார் என்ற பேச்சு.
வெள்ளையர்கள் வெளியேறும் வரை நாடு முழுவதும் அமைதி வழியில் போராடும் என்று மேன்மையுற சொன்னார் காந்தி.
பாக்கிஸ்தானை பிரித்து கொடுவென்று அங்கே ஜின்னா முழங்கிக்கொண்டிருந்தார்.
பிரித்தால் இந்தியாவையே இரத்தமாக்குவோம் என்று கத்தியை தீட்டியபடியே இங்கே சீக்கியர்கள் உறுமிக்கொண்டிருந்தனர்.
நாடே ஒரே அல்லோகலப்பட்டிருந்தது.
அப்போது ஆங்கிலேய அரசு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது.
'தலை இருந்தால் தான் வால் ஆடும்' அதனால் தலையை எடுத்து விடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
காவல் மற்றும் இதர தனி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இந்த உத்தரவால், நாட்டின் விடுதலை போரட்டங்களுக்கு மூலமான பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
மும்மையில் காந்தி கைது செய்யப்பட்டார்.
ஆங்கில அரசு நினைத்தது ஒன்று ஆனால் நடந்ததோ வேறொன்று.
தலையை நீக்கினால் வால் ஆடாது என்று முடிவு கட்டிய ஆங்கில அரசு,
நீக்கிய பின்பு வாலெல்லாம் தலையாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கவில்லை.
எல்லா தலைவர்களும் கைது செய்யப்படப்போகிறார்கள் என்பதை முன்பே அறிந்த காந்தி, மும்மையில் உரை நிகழ்த்திய போது, "இந்த போராட்டத்தில் உங்களுக்கு நீங்கள் தான் தலைவர்" என்று கூறினார்.
அதை கூட்டத்தில் ஒருவராய் இருந்து தழல் தெறிக்கும் கண்களுடன் கேட்டுக்கொண்டிருந்தார் கல்லூரி மாணவி உஷா மேத்தா.
அவரது மனதில் பல்வேறு கேள்விகள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அந்நியனை வெளியேற்ற இதோ அனைத்து தலைவர்களும் உள்ளே போகிறார்கள்.
இனி நாம் எங்கே போவது? கிழக்கிலா? மேற்கிலா? வடக்கிலா? தெற்கிலா?
அல்லது பாதாளத்திலா?
உஷா மேத்தா ஒரு முடிவுக்கு வந்தார்.
நாம் இனி பாதாளத்துக்கு சென்று போராடுவது தான் சிறந்தது.
ஆனால் எப்படி? உள்ளே இருந்து கொண்டு மக்களின் உள்ளத்திலே விடுதலை உணர்ச்சியை விதைப்பது எப்படி?
அதே நேரத்தில் உஷா மேத்தாவின் வீட்டில் அகில இந்திய வானொலி ஒலித்தது.
அவருக்கு என்ன செய்வதென்று புரிந்துவிட்டது.
நாம் all India radio போல ஒரு வானொலி ஒன்றை உருவாக்குவோம் என்று முடிவு செய்தார்.
அப்போது all India radio வை சுதந்திர வேட்கை உள்ள மக்கள் anti india radio என்று அழைப்பார்கள்.
ஆங்கில அரசுக்கு நேரடி கீழாக AIR செயல்பட்டதால், ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுக்கவென்று ஒரு வானொலியும் பாரதத்தில் இல்லை.
காலம் தன் தேவையை பூர்த்தி செய்தது.
பாரதத்தாய் வானொலிக்கென்றே ஒரு கல்லூரி மாணவியை பிரசவித்தாள்.
ரேடியோ கிளப் ஆஃப் பாம்பே தான் முதன் முதலில் இந்தியாவில் ரேடியோவை அறிமுகம் செய்திருந்தது.
ஆனால் பின்பதற்கு பெருந்த நஷ்டம் வந்தபடியால், சில ஆண்டுகளிலேயே தன் வியாபாரத்தை நிறுத்திக்கொண்டது.
ரேடியோ ஆரம்பிக்க டிரான்ஸ்மீட்டர் வேண்டும்.
உஷா மேத்தா தன் தாயை திரும்பிப்பார்த்தார்.
அன்று எந்த தாய்க்கு தான் தன் தாய்நாட்டை காக்க மனம் இல்லாமலிருந்தது?
உஷா மேத்தாவின் தாயார் தன் கழுத்தில் இருந்த தங்கமொன்றினை கழற்றிக் கொடுத்தார்.
1942 ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு, "This is Congress Radio Calling on 42.34 meters Somewhere in India என்று உஷா மேத்தா தன் காந்தக்குரலால் இந்தியாவையே செவிமடுக்க வைத்தார்.
அன்று ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில அரசுக்கு எதிராக குரல் கொடுக்க பத்திரிக்கை மற்றும் வானொலிகளுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது
அந்நியர்களின் அக்கரமங்கள் அனைத்தும் இந்த சுதேசி வானொலியில் வெளிவந்து கொண்டிருந்தபடியால் மக்கள் அதை காதுகொடுத்து கேட்க தொடங்கினார்கள்.
அரசாங்கமும் இதை கேட்காமலில்லை.
இந்திய வானொலியின் துணை கொண்டு உஷா மேத்தாவின் வானொலி இருப்பிடத்தை துழாவ ஆரம்பித்தது.
உஷாவும் தன் குழுவினர்களுடன் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து எழுச்சி மருந்தினை ஊட்டிக் கொண்டிருந்தார்.
தன்னுடனே பணிபுரிந்த ஒரு துரோகியின் காட்டி கொடுத்தலால்,
கல்லூரி மாணவியான உஷா மேத்தா ஆங்கில அரசிடம் பிடிபட்டார்கள்.
இருந்தாலும் சுதேசி வானொலி 88 நாட்கள் இயங்கி மக்களுக்கு தீராத சுதந்திர தாகத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டிருந்தது.
உஷாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.
நாம் சுதந்திர தாகத்தில் இருந்தோரை படிக்கிறோம். அவர்களது புகழை பாடுகிறோம். அவர்களின் வலியினை எண்ணிப்பார்க்கும் போதுகூட நமக்கும் அது வலி தராமல் இருப்பதில்லை.
பாரதி பாடினார், என்று தணியும் இந்த சுதந்திர தாகமென்று
அந்த தாகம் இன்றில்லை. அதனால், "நாட்டை நலம் செய்தல் வேண்டும், அது நம் வேலை என்றெண்ணம் எப்போதும் வேண்டும்"
தீசன்
(காரை பண்பலையில் ஒலித்த தென்றல் கட்டுரை)
தென்றல் வானம் தாண்டி வீசியதா...! ஆஹா மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஅருமை 👏...
பதிலளிநீக்கு