கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்
நுண்மாண் நுழைபுலம்..!
ஹனுமான் புஜபலம்..!
"கண்ணால் எடை போடுவது" என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
பார்வையால் எடைபோடும் பக்குவம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வாய்க்காது..! நுண்ணிய புத்திக்கூர்மையும் ஏராளமான அனுபவங்களையும் கொண்டவர்களுக்கே அது ஈடேறும்.
அனுமன் அந்த அசாத்திய திறம்கொண்டவன்! அனுமனை அறிமுகப்படுத்துவதற்காக கிஷ்கிந்தா காண்டத்தில் 'அனுமப்படலம்' என்ற தனிப்படலமே இருக்கிறது!
சீதையை தொலைத்துவிட்டு காட்டில் திரிந்துகொண்டிருக்கும் ராம லஷ்மணர் கிஷ்கிந்தைக்கு வருகிறார்கள்.. கிஷ்கிந்தை என்பது கர்நாடக - ஆந்திர எல்லைகளில் பரந்துவிரிந்த (ஹம்பி to திருப்பதி) மலைகளின் குன்றுகளில் ஏதோ ஒன்று! அதுதான் அனுமன் முதலானோர் பிறந்த இடமென கூறி அதற்கான காப்புரிமையை (patent rights) வாங்க இருமாநிலங்களும் சண்டைபோட்டுவருவது தனிக்கதை!
திடீரென பிரவேசிக்கும் மானிட வில்லாளிகளை பார்த்து சுக்ரீவன் எனும் வானர தலைவன் தன் அண்ணன் வாலிதான் தன்னை தீர்த்துகட்ட அடியாட்களை ஏவியிருக்கிறான் போலும் என அஞ்சி ஓடி ஒளிந்துகொள்கிறான்.. அவனுக்கு அடைக்கலம் தந்து புதிதாக புகுந்தவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளும் 'கெத்'தான வீரனாக இதிகாசத்தில் intro ஆகிறார் நம் ஆதர்ச நாயகன் ஆஞ்சநேயன்....!
பாடலை பாருங்கள்...,,
"அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்..!"
(பொருளுணர...)
அஞ்சனைக்கு பிறந்த ஒரு சிறுவன் இருந்தான் அவன் அஞ்சன(கருத்த) நெடுங் கிரி மைந்தனைபோன்ற ராமனை நெருங்கி ,, ஒரு மாணவனை போல வேடம்பூண்டு அயல்மறைந்து நின்று வேவு பார்த்தான்.... ' யார் இவர்கள்? துறவிபோல மரவுரி தரித்து தவக்கோலம் பூண்டிருக்கிறார்கள்.. ஆனால் திருவோடுக்கு பதிலாக கையில் ஏன் வெஞ்சமர் வீரரை போல வில்லினை(வரிசிலை) ஏந்தி இருக்கிறார்கள்??' அனுமனுக்கு நெஞ்சு அரிக்கிறது.. அவன் தன் யூக கற்பிதங்களை கொண்டு பார்வையாலேயே அவர்களை எடைபோட்டுக் கணித்தான்..!
பிறகு அவர்களின் தோற்றப்பொலிவை கண்டு இவர்கள் மும்மூர்த்திகளோ? இந்திரதேவனோ? என்றெல்லாம் சந்தேகிக்கிறான். அப்புறம் பார்த்தால் காட்டின் மயில்கள் இவர்களுக்கு தோகையை யால் கவரிவீசுவதையும்.. வெண்மேகங்கள் இவர்களுக்குமட்டும் தனியே பன்னீர்போல தூவுவதையும் கண்டு அதிசயிக்கிறான்..!
அதைவிட... வெயிலில் காய்ந்து சுட்டெரிக்கும் பாறாங்கல் கூட இவர்களின் செங்கமலபாதம் பட்டதும் குழைந்து கள்ஊறும் மலர்களாக மாறி குளிர்வதும்..
ஓரறிவே உடைய புற்களும் மரங்களும் இவர்கள் போகும்வழிதோறும் சாய்ந்து வணங்கிதொழுவதையும் பார்த்து... 'ஆஹா! சந்தேகமே இல்லை... தருமம் தருமம் என்று எல்லாரும் சொல்கிறார்களே அது இவர்கள் தான் போலும்!'.. என்று முடிவுகொள்கிறான். (அதாவது பொல்லாதவர்கள் அல்ல. அறவழி நடப்பவர்கள் நல்லவர்கள்..! அதனால் பயப்பட தேவையில்லை.)
இதோ அதற்கான பாடல்,,
"காய் எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்களேபோல்,
தூய செங் கமல பாதம் தோய்தொறும், குழைந்து தோன்றும்;
போயின திசைகள்தோறும், மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும், தொழுவபோல்; இங்கு, இவர்களோ தருமம் ஆவார்? "
அதன்பிறகு நேராக அவர்களிடம் சென்று "தீங்கு ஏதுமின்றி உங்கள் வரவு நல்வரவு ஆகுக..!" என்கிறான்..!
ராமன் முதல்தடவையாக அனுமனை கண்டு முகமலர்ந்து "யாரப்பா நீ? திடீரென எங்கிருந்து வந்தாய்?" என வினவ..
அநுமனின் பதிலை பாருங்களேன்!
"யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்..!"
அதோடு நிறுத்தாமல் இன்னும் சொல்கிறான்...
" இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன்' என்றான்-
எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான்...!"
அதாவது,,
நான் இந்தமலையில் வாழும் சூரியபுத்திரன் சுக்ரீவருக்கு ஏவல்செய்பவன்... தேவரீர்! உங்கள் வரவால் விம்மலுற்று எங்கள் தலைவன் உங்களை பார்த்து விசாரித்துவர சொல்லி அனுப்பினார்.. அதன்பொருட்டு வந்தேன்.. என்றான். யார் சொல்றது? அநுமன். இங்கு கம்பன் அவனை புகழ்வதை நோக்குங்கள்..
உலகின் எந்த மலையும் , எத்தகைய உயர்வான குலங்களும் கூட தாழ்ந்துபோகுமளவு மிக உயர்ந்த புகழ்சுமந்த தோள்களை உடையவனாம்.. அநுமன்!!
"எம்மலைக் குலமும்தாழ இசைசுமந்து எழுந்த தோளான்!!"
அட அட அட..!!!
அநுமனின் அன்பும் பண்பும் பணிவும் குழைந்த பேச்சால் மயங்கிபோன ராமனும்.. பதிலுக்கு அனுமனை மெச்சி பாராட்டுகிறான்..!
எப்படி??
"யார் இந்த சொல்லின் செல்வன்?
இவன் கல்லாத கலையோ வேதகடலோ ஏதும் மிச்சமே இல்லை.. என உலகமே சொல்லும் புகழை உடையவனாக இருக்கிறானே!! இதை இன்னொருவர் சொல்லியா தெரியனும்? இவனது சொல்லிலேயே அது தெரிகிறதே!!
என்பதாக அனுமனை பற்றி இலக்குவனிடம் உரைக்கிறான்..
(மிக முக்கியமான பாராட்டு இது! அனுமனுக்கு "சொல்லின் செல்வன்" என்று ஸ்ரீராமரே தந்த இந்த பட்டம் முப்பதினாயிரம் முனைவர் பட்டங்களுக்கு இணையானது!!)
அந்த பாடலையும் படியுங்கள்..
"இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே" என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?"
(பொருள்கோள் இலக்கணப்படி 'இல்லாத' என்ற சொல்லை... "இவன் கல்லாத கலையும் வேத கடலுமே -இல்லாத" என்றவாறு கொண்டுகூட்டி பொருளைப் புரிந்துகொள்க..)
அனுமானின் விஸ்வரூபம்...!*
ராமனின் கதைகேட்ட அநுமன் பொசுக்குனு அவரதுகாலில் விழுந்திட.. ராமன் பதறுகிறான்..
"ஐயோ ! என்னாப்பா நீ வேதசாஸ்திர அந்தணர் வீட்டு பிள்ளையாட்டம் தெரியுற சத்ரியனான என் காலில்போய் விழுகிறாயே??"
"தேவா! மன்னிக்கனும் இது மாறுவேடம்.. நானும் ஒரு வானரன் தான்.. " என்று தன் சுய ரூபத்தை விஸ்வரூபம் கொண்டு எடுத்து காண்பிக்கிறான்..!
அது எப்படி இருக்கிறதாம்??
மின்னலை போல் ஒளிர்கிற இரு வில்லாளிகள் வியக்க,,
அளக்க முடியாத வேத நன்னூல்கள் கூட அடங்கி சிறிதாகி அதன் வானுயர் பெருமையும்கூட தாழ்வாய் தோன்றுமாறு..
பொன் மயமான மாமேரு மலையை உதாரணம் கூறினால் கூட போதாதோ எனுமளவு
தன் உருவத்தை காட்டி நின்றானாம் அனுமன்!
அந்த கடிகமழ் பாடல் இதோ..!
" மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நன்நூல்
பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்..!"
பாடலின் கடைசி வரியில் தான் கம்பன் கைச்சித்திரம் மிளிர்கிறது!!
விண்ணளவு வளர்ந்து நின்றான் அநுமன் என்று முடிக்காமல்..
"தருமத்தின் தனிமை தீர்ப்பான்!" என்று போட்டார்.. பாருங்கள்!
உலகில்,,, தருமம் தன்னிகர் எதுவுமின்றி பாவமாக தனிமையில் வாடுகிறதாம்..! அதற்கு துணையாக அநுமனும் இருந்தான் என்று நயம்பட தீட்டியுள்ளார்..!
இன்னும் நுட்பமாக பார்க்கபோனால் ஏற்கனவே முந்திய ஒரு பாடலில் ராம இலக்குமணரை தருமத்தின் மறுஉருவமாக கூறிவிட்டபடியால் இப்போது அவர்கள் அருகில் சென்று தனிமை நீக்கி அனுமனும் கூடுதல் துணையாக இருந்தான் என்றும் நயம்பாராட்டலாம்...!
------------------
சரி இப்போது நேராக சுந்தர காண்டத்துக்கு தாவி...,,
அங்கே அனுமனின் அதிரடி பராக்கிரமங்களை பட்டியல் போட்டு காண்போம்..!
அசோகவனத்தில் ஒருகுரங்கு புகுந்து சர்வநாசம் செய்துகொண்டிருப்பதாக பேரரசன் ராவணனுக்கு செய்தி எட்டுகிறது..
"ச்சீ..! ஒரு குரங்கை விரட்டி துரத்த என்னிடம் வந்து கேட்பதா? " என சினந்தவனிடம் 'அது சாதாரண குரங்கல்ல.. சக்திவாய்ந்த தாக தெரிகிறது..' என அங்குள்ளோர் விவரிக்கவே..
திசைகள் நடுங்கும் தன் கிங்கரர் படைகளை அனுப்பி அந்த குரங்கை பிடித்து உயிருடன் கொண்டுவர ஆணையிட்டான் லங்கை மா நகரின்வேந்தன்!
கட்டுக்கடங்காத அந்த கிங்கரர்படைகள் பவனிவருவதையே கம்பன் பலபாடல்களில் விவரிக்கிறான்..!
உதாரணமாக ஒன்று,
" 'தெரு இடம் இல்' என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும்,
புருவமும் சிலையும் கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர் முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும்,
'விரிவு இலது இலங்கை' என்று, வழி பெறார் விளிக்கின்றாரும்...,"
(பொருளுணர..)
தெருவில் இடம் போதாமல் கிங்கரர் பாதிபேர் வானில் ஏறி வந்தனராம்
தகிக்கும் கோபத்தால் புருவத்தையும் வில்லையும் வளைத்து சினத்தீ மூட்டிவரும் பெரும்படை பெருமூச்செறிவதால் அங்கே தீ உண்டாகி புகைந்ததாம்!!
ஒருவரை ஒருவர் முந்தி வழிமறித்து கும்பலாக,, கால்வைக்கவே இடமின்றி செல்கின்றனராம்..!
இதனால் போவதற்கு வழிகிடைக்காத ஏனைய கிங்கரர்கள்.., "ச்சே என்னப்பா இலங்கை இத்துணூண்டா இருக்கு.. கொஞ்சம் பெரிசா இருக்ககூடாதா? நடக்கவே இடமில்லையே' என விளித்து வருந்தினராம்!!
இப்படி...
அணை போல் திரண்டு வந்த படையை அநுமன், கயிலை மா மலை போல நின்று பார்த்தானாம்!!
இங்ஙனம் வந்த கிங்கரர் பெருவெள்ளம்.. அநுமனால் தூசுபோல ஊதித்தள்ளப்படுவதையும்...
அட்டகாச சண்டை காட்சிகளையும் 'கிங்கரர் வதை படலம் ' திகட்ட திகட்டத் தருகிறது...
எல்லாமே ஆக்க்ஷன் அதிரடி வார்த்தைகள் தான்... படிக்கும்போதே fight சத்தம் உங்கள் செவிகளில் டங் டங் என கேட்கும்...!
(வாலினால் அரக்கரை பம்பரமாய் சுற்றி வீசினான் அனுமன்)
"கொற்ற வாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச்
சுற்றி வீசலின், பம்பரம் ஆம் எனச் சுழன்றார்...! "
( 'பொளந்து கட்றது' என்பதை கம்பன் கால தமிழ்நடையில் 'இற்றன இற்றன' என வாசியுங்கள்...)
"வாள்கள் இற்றன இற்றன வரி சிலை; வயிரத் -
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழுச் சூலம்;
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்;
தாள்கள் இற்றன இற்றன படையுடைத் தடக் கை..!"
( அரக்கரின் அங்கங்களை ஆஞ்சநேயன் 'தெறிக்க' விட்டதையும் படியுங்கள்...!)
"தெறித்த வன் தலை; தெறித்தன செறி சுடர்க் கவசம்;
தெறித்த பைங் கழல்; தெறித்தன சிலம்பொடு பொலந் தார்;
தெறித்த பல் மணி; தெறித்தன பெரும் பொறித் திறங்கள்;
தெறித்த குண்டலம்; தெறித்தன கண்மணி சிதறி..!. "
( பகைவர் பற்களை பதம்பார்த்தும் எலும்பை எண்ணியும்...அநுமன் உகுத்து கொட்டியதை உக்கன உக்கன என பாடுங்கள்..)
"உக்க பற் குவை உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று;
உக்க முற்கரம் உக்கன, முசுண்டிகள் உடைவுற்று;
உக்க சக்கரம் உக்கன, உடல் திறந்து உயிர்கள்;
உக்க கப்பணம் உக்கன, உயர் மணி மகுடம். "
இங்கு... முற்கரம்/முசுண்டி/சக்கரம்/கப்பணம் எல்லாமே பழங்கால படைக்கருவிகள் என அறிக..
(அநுமனின் கரங்களால், கால்களால் ,தோள்களால் அவன்விட்ட குத்துகளால்... ஏன் அவன் சுடர்விழியாலும்கூட பலர் செத்துமடிந்ததை படியுங்கள்..!
'கத்தி தேவையில்லடா கண்பார்வையிலேயே உன்னை குத்தி கொன்னுடுவேன்!' என்ற திரைப்படவசனம் எவருக்கேனும் ஞாபகம் வருகிறதா?)
"தாள்களால் பலர், தடக் கைகளால் பலர், - தாக்கும்
தோள்களால் பலர், சுடர் விழியால் பலர், - தொடரும்
கோள்களால் பலர், குத்துகளால் பலர், - தம் தம்
வாள்களால் பலர், மரங்களினால் பலர் மடிந்தார்...! "
அன்று (1919-ஆம் ஆண்டில்)
ஜாலியன் வாலா பாக் சந்து பொந்துகளில் ஜெனரல் டயரின் துப்பாக்கி தோட்டக்களுக்கு பயந்து அப்பாவி ஜனங்கள் சிதறி ஓடியதை போல..
இன்று (2021 இல்) தாலிபான் படைகளுக்கு பயந்து ஆப்கான் நாட்டுமக்கள் ஆகாயவிமானங்கள் அடியினில் அடைக்கலம் நாடியதை போல...
அனுமனின் ஆக்ரோஷத்திலிருந்து தப்பிக்க கிங்கரர்கள் வழிதேடி ஓடி ஒளிந்தனராம்..!
ஆனால்...!
(வாயுவின் புத்திரன் பேயின்புத்திரன் போல மாறி கிங்கரர்களை தேடி தேடி , ஓடி ஓடி ஒருவர் மிச்சமின்றி கொன்று குவித்தான்..! செத்த பிணங்களையும் உயிர்இருக்குதா என தடவி தடவி கொன்றானாம்!)
"ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை கறங்கு எனத் திரிவான். ".
(கறங்கு = காற்று/காற்றாடி)
-------------------
அடுத்த முறை அனுமான் வேருடன் நெடுங்கிரி ஏந்திவந்த வரலாற்றை காண்போம். அதற்கு முன் ஒரு சிறு முன்னோட்டம் போல...
சிலகாலம் முந்தி sun tv யில் ஜெய் அனுமான் என்றொரு பக்திநாடகத்தில்.... எனக்கு பிடித்த இந்த வரிகளை கொண்ட பாடல்வரும்.. அதை தந்து விடைபெறுகிறேன்...
"ஆருயிர் ராமனின் ஓருயிர் காத்திட வானுயர் சஞ்சீவி வேருடன் தந்தவன்...!
தானுயர் சீதையை தன்னிடம் மீட்டிட ராமனின் தாளிடை நாளுமே
இருந்தவன்...!
வானர படைகளை மாணுற செய்தவன்.....!
நாளும் ராமனின்
நாமங்கள் சொல்லிய அனுமான்..!"
- சூரியராஜ்
கம்பனின் கவித்திறனை வார்த்தைகளை கொண்டு வரைந்து கொடுக்கும் உனது திறன் அனைவருக்கும் கிடைக்க,இதுவரை எழுதிய,எழுத போகிற அனைத்தையும் நூலாக தொகுத்து,கல்வித்தறையின் கண்களுக்கு கொண்டு சென்றால் நூலகங்கள் பதினைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் படிகள் வரை வாங்க வழியேற்படும்.எழுதியவரை விட படிப்பவர்களுக்கு அதிக பயன் ஏற்படும்.கரும்பை துண்டாக வெட்டிக்கொடுப்பவர்கள் உண்டு.நீ சாறாக பிழிந்து கொடுக்கிறாய்.மேலும் வளர்க!
பதிலளிநீக்கு🙏🙏
நீக்குவாழ்க வாழ்க...சிறப்பு
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை... நான் சமீபத்தில் hotstar ல் அனுமன் சித்திர படத்தை பார்த்தேன் அதிலும் ராமனை அனுமன் காணும் காட்சி வரும் அதில் பெரிதா ஒன்றும் இல்லை. ஆனால் கம்பர் அப்பப்பா!! ஆயிரம் MARVEL STUDIOUS வந்தாலும் கம்பன் காட்டிய கவி காட்சிக்கு நிகர் ஆகாது... அனுமனை பற்றி தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏
பதிலளிநீக்குஉங்கள் ஆவலால்தான் நானுமே அனுமனை அதிகம் அணுகி ருசிக்க நேர்ந்தது..
நீக்கு