கம்பனும் கடவுளும்
கடவுள் உண்டா?
மனித குலம் தோன்றிய காலம் தொட்டு விடைதேடி வரும் கேள்வி இது..!
விடை உறுதியாக கிடைக்காது என்ற போதிலும் தேடுகிற ஆர்வம் எந்த காலத்திலும் குறைந்தபாடில்லை!
பரதகண்டம் முழுவதிலும் பக்தி இயக்கத்தை படைநடத்தி கொண்டுசென்ற பெருமை நம் தென்னகத்துக்கு உரியது. பல்லவர் காலத்திலேயே அதற்கு பிள்ளையார் சுழி போட்டாலும் தெற்காசியா முழுமையும் ஒருகுடை நிழலில் ஆண்ட சோழர்களின் காலத்தில்தான் அது விஸ்வரூபம் எடுத்தது! சைவமும் வைணவமும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்த்திய தத்துவ மோதல்களில் சிந்தித்தெறித்தவை எல்லாமே மெய்ஞானம் தேடுவோர் அள்ளி அள்ளிப் பருகவேண்டிய வேண்டிய அமுதம் ததும்பும் பொற்கலசங்கள்..!
மதமோதல்களும் தத்துவ விசாரணங்களும் தர்க்க சாத்திரங்களுமே முழுநேர தொழிலாய் கொண்டு பொழுதை போக்கிவந்த பண்டிதமணிகள் சுற்றிவந்த பூமியில்தான் நம் கம்பன் எனும் பெரும்புலவனும் திரிந்துகொண்டிருந்தான். ஆக, அவனும் அந்த அந்த அறிஞர்களின் தத்துவசாரத்தினை கரைத்து குடித்திருக்க கூடும்..! இறைவன் பற்றிய சிந்தனை விவாதங்கள் அவர்களிடமும் எழுந்திருக்கும். கடவுள் உண்டா இல்லையா? ஒருத்தரா பலபேரா? உன் சாமி பெருசா என் சாமி பெருசா? என அப்போதும் பட்டிமன்றங்கள் நடந்திருக்கும்.(கண்டிப்பாக இப்போது உள்ளதை விட அவை தரமானதாக நடந்திருக்கும்..!)
பொதுவாக எந்த ஒரு படைப்பாளியும் தன்
சமகால அறிவோட்டத்தை தன்னை அறியாமல் தன்படைப்பின் சாரத்தில் தெளித்துவிடுவான். அதிலும் கம்பன் மாதிரி ஒரு தரமான புலவன் அதை எங்ஙனம் விடுவான்?
கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களும் ஆறு அழகிய கடவுள் வாழ்த்துப்பாடலோடு தொடங்குகின்றன..!(பால காண்டத்தில் மட்டும் ஒன்றிரண்டு கூடலாம் )
அவை ஒவ்வொன்றுமே புடம்போட்ட தங்கமாக காவியத்திலிருந்து தனித்து தெரிகின்றன.
மற்ற இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து பா பொதுவாக கடவுளின் உருவத்தையும் புராணங்கள் வருணிக்கும் வடிவத்தையுமே எடுத்தோதிவிட்டு போகிற காலத்தில் கம்பர்மட்டும்தான் கடவுள் வாழ்த்தை தத்துவ பார்வையில் அணுகுகிறார்...
பாலகாண்ட பாயிரத்தில்....,
"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்...."
என்று முதல்பாடலிலேயே தன்முத்திரையை பதித்துவிட்டு...,,
அயோத்யா காண்டத்தில்...
"வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப..."
என தர்க்க (logical) ரீதியிலான தத்துவ விசாரணை செய்கிறார்!
பிறகு... ஆரண்யத்தில்,,
"பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ."
என திடீரென வைதீகத்தை வைதுவிட்டு (வள்ளுவர்போல) சமணத்தை நெருங்கிவிட்டு நகர்கிறார்..!
கிஷ்கிந்தையில்,,,,
"மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் - முதல்
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு,
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்."
என உளவியல் (சைக்காலஜி) பாடத்தை சாமர்த்தியமாக சொல்லிவிட்டு....
சுந்தர காண்டத்தில் நுழைந்து...,
"அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்...."
என்று பிரபஞ்சவியலை (cosmology) தொல்காப்பியர் வழிநின்று ஓதிவிட்டு..
முடிவாக யுத்தகாண்டத்தில் பிரவேசிக்கிறார்...!
மற்ற ஐந்தை விடவும் கடைசியாக யுத்தகாண்டத்தில் வருகிற கடவுள்துதிபாடல்... முற்றுணர்ந்த மெய்ஞானி ஒருவனுக்கு சித்தம் கலங்கிவிட்டால் எப்படி பேசுவானோ அதுபோல இருக்கிறது!!
கடவுள் வாழ்த்தாக வருகிறதே தவிர இதில் கடவுள் பற்றிய ஒருசொல்லும் இல்லை...!
( 'நம்பி' என்கிற பதம் மட்டும் கொஞ்சம் விவாதிக்கப்பட வேண்டியது..)
இன்னொன்று கடவுளை உயர்திணை வழக்கில்தான் இலக்கியங்கள்/இலக்கணங்கள் பொதுவாக கையாளும். ஆனால் கம்பன் அஃறிணை வழக்கையே குறிப்பிட்ட இப்பாடலில் பயன்படுத்துகிறான்..!
நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை, நன்கு பழகியவர்களை, குழந்தைகளை, நடிகர்களை, பிரபலங்களை நாம் ஒருமையிலும் அஃறிணை வழக்கிலும் அழைப்பதில்லையா?
அவ்வகையில் இது 'வழுவமைதி' என கொள்ளலாம்! ( அற்பனாகிய நான் கம்பரை அவன் இவன் என்பதும் இந்த பழக்கத்தினால் தான்..)
பள்ளி பாட நூலில் இந்த பாடல் முதலில் அறிமுகமானபோது படித்துபார்த்துவிட்டு பலரை போல நானும் "அப்பாடா..! செய்யுள்ங்கிற பேரில் தமிழை... வெச்சி செஞ்சிவிடாமல்.. பயபுள்ள ஈஸியா எதையோ திருப்பி திருப்பி எழுதி வைத்திருக்கான்.. டக்குனு மனப்பாடம் பண்ணிடலாம்..!" என்றுதான் நினைத்து மனனம் செய்தேன்.
அந்த ஆண்டுமுழுவதிலும் நடந்த பல தேர்வுகளில்... இதே பாடல் வினாத்தாளில் வந்து, எனக்கு மதிப்பெண் எகிறவும் வழிசெய்தது.
பசுமாடுகள் மேய்கிற பொழுதில் அவசர அவசரமாக நுனிப்புல்லை மேய்ந்து இரைப்பையை நிரப்பிக்கொண்டு பிறகு ஓய்வாக உக்காரும்போதினில் சரியாக மெல்லாமல் விழுங்கியதை வயிற்றிலிருந்து மீண்டும் வாய்க்கு வரச்செய்து அசைபோடுமாம்.. அது போல பதின்ம வயதில் விவரம்தெரியாமல் படித்த சில தமிழ் செய்யுள்கள்..,, பல ஆண்டுகளுக்கு பிறகு நினைவுக்கு வந்து சொல்லிப்பார்க்கையில்... இப்போதுதான் உண்மையாக அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்துகொண்ட திருப்தி உண்டாகிறது..! ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் போனால் மேலும் அர்த்தங்கள் ஊறுமோ என்னவோ..?
பிரசித்தி பெற்ற அந்த பாடல் இதோ......
"ஒன்றே என்னின் ஒன்றேயாம்..!
பலவென்று உரைக்கின் பலவேயாம்..!
அன்றே என்னின் அன்றே யாம்
ஆமே என்னின் ஆமே யாம்..!
இன்றே என்னின் இன்றேயாம்!
உளது என்றுரைக்கின் உளதேயாம்!
நன்றே நம்பி குடிவாழ்க்கை ! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா..? "
பாரதியார் பாடலுக்கே விளக்கவுரை கேட்கிற அப்பாவி தமிழ்ப்பிள்ளைகள் உலவுகிற இணைய உலகம் என்பதனாலும்..
கூடுதலாக என் மனதில் படுகிற கருத்தை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதாலும்..
விளக்க உரையாக நானும்
கொஞ்சம் உளறுகிறேனே தவிர..,,
மேற்காணும் பாடலை எளிய தமிழில்,, படித்தோர் எவரும் படிக்கிறபோதே அறிந்திடும் வண்ணம் ஒரு மழலைப்பாடல் தொணியில்தான் கம்பர் இதை இயற்றி வைத்திருக்கிறார்..! என்பதை உணர்க.
இனி ,, உங்கள் பொன்னான நேரம் வீணான என் விளக்க உரையில் விரயம் ஆகட்டும்...!
*****. ******. ******. ******
கிபி 12ஆம் நூற்றாண்டு பிற்பகுதி.. சோழமண்டல கடற்கரை சிற்றூர்..! சன்னதி வீதி... ஒரு ஓட்டுவீட்டு திண்ணை அருகில்... நடக்கிறதொரு உரையாடல்..!
நம்பி:
"ஐயா.. கம்பரே! சற்று இங்கு வாருமய்யா..
உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும்..,
நீ 'அத்வைதியா?' இல்லை 'த்வைதியா?'.. "
கம்பன்:
"........????...!!!!!!...."
நம்பி:
"ஏன்யா முழிக்கிற.. புரியலயா? கடவுள் ஒற்றை மூலத்திலிருப்பவர்னு நம்புறியா? இல்ல இருவேறு ஆத்ம குணபேதங்களுக்கு உட்பட்டவர்னு நினைக்கிறியா? னு கேட்டேன்."
கம்பன்:
"ஓ... கடவுள் ஒருத்தர் தானானு கேக்குறீங்களா? ஒருத்தர்தான்!"
காண்கிற காணமுடியாத ஒவ்வொன்றுமே அதற்கு முன்னிருந்த ஏதோ ஒன்றிலிருந்துதானே வருகிறது.. அதன்படி மொத்த அண்டசராசரமும் ஏதோ ஒரு மூலத்திலிருந்துதானே வந்திருக்கும்! பார்ப்பதற்கு வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே மூலப்பொருள்தான்.. ஆக கடவுள் ஒருவர் தான்!
நம்பி:
"யோவ் கம்பா! என்னயா பொசுக்குனு நீ ஆதிசங்கரர் கோஷ்டில சேந்துட்ட... அவங்களாம் சைவ மரபுயா.. ஜடத்துக்கும் ஜனனத்துக்கும் வித்யாசம் தெரியாதவங்க.. 'ஆன்மா'வ தவிர மத்தது எல்லாமே மாயை னு சொல்லிட்டுதிரியுறாங்க.. நீ ராமபிரானை தானே வணங்கி காவியம் படைக்கிற.. ஆழ்வார் பாசுரம் தானே படிக்கிற.. ராமானுஜரின் 'விசிஷ்டாத்வைதம்' படிச்சியோ இல்லியோ?? 'மத்துவாச்சாரி' னு ஒரு இளந்துறவி துளுநாட்டிலே உதித்திருக்கிறார் தெரியுமோ தெரியாதோ நோக்கு..?
அவரென்ன சொல்றாரு தெரியுமோ? 'படைத்தவன் வேறு படைப்புகள் வேறு. படைப்புகள் ஒருபோதும் படைத்தவனாகிவிட முடியாது. உடல், ஆன்மா, எண்ணம், குணம் என எல்லாமே படைப்புதான் ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனி!' என்கிறார் புரிகிறதா..? இப்போது சொல்..!"
கம்பர்:
ஓ பரம்பொருள் பலதரப்பட்டது என்று சொல்கிறீர்களா? அப்படியானால் சரி.. பரம்பொருள் பல்வகைபட்டது தான்..! காணும் ஒவ்வொரு பொருளிலும் கடவுள் இருக்கிறார் எனும்போது அது எப்படி மாயை ஆகும்? அதுபோல சிந்திப்பவனும் சிந்திக்கப்படுபவனும் எப்படி சமமாக முடியும்? ஆயிரம் சொன்னாலும் பக்தன் வேறு பரமன் வேறுதான்!
கடவுளே ஆன்மா கடவுளே குணம் கடவுளே எண்ணம் கடவுளே சகலமும் என்றுஆகிவிட்டால் பிறகு நம் கர்மங்களும் பலனும் மட்டும் எப்படி தனிப்பட்டு நம்மை பிறவிசுழற்சிக்கு கொண்டுபோய் வித்திடும்? ஆக கடவுள் வேறு அவரது ஆற்றல் வேறு! குணங்களும் எண்ணங்களும் கூட வெவ்வேறே..! மனிதன் முயன்றால் கடவுள் நிலையை அடையலாம். அதற்காக அவனே கடவுளாகிட முடியாது. 'சிவசக்தி' சொரூபமாக தான் யாவும் பிறக்கின்றன. சிவன் மட்டுமோ அல்லது சக்தி மட்டுமோ தனித்து இருந்து ஒரு அணுவைகூட உருவாக்க முடியாது. ஆக பிரபஞ்சம் பன்மயமானது. பகவானும் பல்வயப்பட்டவரே...!"
நம்பி:
"என்ன ஓய்! நான் சொன்னதும் இப்படி உடனே மாறிவிட்டாய்? உன்னை நம்ப முடியலையே! இரண்டுக்குமே ஆமாம் என்கிறாய்!
இப்போ நான் சொன்னதையெல்லாம் நானே மறுத்து சொன்னால் என்ன செய்வாய்?
கம்பன்:
"ஓ முன்பு சொன்ன இரண்டுமே அல்ல என்கிறீரா..? ஆமாம் இரண்டுமே அல்ல..தான்!
ஏனெனில்..,
கடவுள் ஒருவரே என்று ஒருவன் எண்ணும் போதுதான் மனசுக்குள்,, ஒருவேளை அவர் பலராக இருப்பாரோ
என்கிற ஐயமும் எழுகிறது..! அதேபோல பலராக இருக்கிறார் என்று நினைக்கும்போது உள்ளுக்குள்,,, ஒருவேளை அவர் ஒருவர்தானோ என்று எண்ண தோன்றுகிறது.. இக்கரைக்கு அக்கரை பச்சை!
ஆக.. பரம்பொருள் ஒன்று என்றால் அது அவ்வாறுஅன்று!
பல என்றாலும் அது அவ்வாறும் அன்று!
எதை நினைத்தாலும் அதற்கு மாற்றாக கடவுள் இருக்கிறார்...!
நம்பி:
"யோவ் கம்பா! இப்படி சொன்னால் எப்படிய்யா? எதாவது ஒருபக்கமாக சொல்லுயா! இரண்டையுமே மறுக்கிறியே! 'நாஸ்திகன்' மாதிரி எல்லாத்தையும் மறுக்காமல் 'ஆஸ்திகன்' போல எதனாச்சும் ஒன்னுக்கு 'ஆமா' னு சொல்லுயா!"
கம்பன்:
ஆமாம் என்று சொல்ல சொல்கிறீர்கள் அப்படிதானே..! அப்போ 'ஆமாம்' தான்...!
அல்ல அல்ல என்பவருக்கு,, ஆம்! எல்லாம் அல்லதாகவே போய்விடுகிறது. (சுகமோ துக்கமோ இரண்டுமே)
ஆம் என்று நினைப்பவருக்கோ,, ஆம்! எல்லாமே அமைந்துவிடுகிறது!( இன்ப துன்பம் இரண்டும்)"
நம்பி:
"அடாடா..! கம்பரே ஆரம்பத்திலிருந்தே நீ குதர்க்க மாகவே பேசி வருகிறாய்! எனக்கு நீ ஒரு உண்மையை சொல். நீ நாஸ்திகன் தானே! எங்கே கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? அதை முதலில் சொல் பார்க்கலாம்!
கம்பன்:
" என்னைக்கேட்டால் கடவுள் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது! அதிலும்
நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி யான கடவுள் இருப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை!
கடவுள் வானத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு ஞானபார்வையில் இங்கு நடப்பவற்றை மோப்பம்பிடித்துகொண்டிருப்பார் என்று நினைப்பீர்களேயானால் அப்படி ஒரு கடவுள் இல்லை!
எங்கோ அண்டத்திற்கு அப்பால் ஒரு பரலோகத்தில் இருந்துகொண்டு இறந்தவர்களை வரவேற்றும் பிறப்பவர்களுக்கு விடைகொடுத்துகொண்டும் வாழ்வோருக்கு பாவ புண்ணிய கணக்கு வழக்கு பார்த்து தீர்ப்பு எழுதிகொண்டும் இருப்பார் என்று நினைத்தால் அப்படி ஒருவர் இருக்க நியாயமான எக்காரணமும் ஏதும் இல்லை!
காணும் எவற்றிலும்/ உணரும் எவையுமாக/ உள்ளுக்குள் இருந்து இயங்கும் ஆற்றலாகவும் இருப்பதே கடவுள் என்பீரானால் தனியாக கடவுள் என்று ஒன்றை பற்றி நினைக்கவோ துதிக்கவோ வணங்கவோ தேவையே இல்லை!
மனித புலனுணர்வுகளுக்கு எட்டாத பொருள்கள் எத்தனையோகோடி வகையறாக்கள் இந்த பூமியிலேயே இருக்ககூடும்... அவை நம்மை பாதிக்கிறதோ பாதிக்கவில்லையோ தெரியவில்லை. அப்படியிருக்க எல்லையில்லாத பேரளவில் ஒன்றை கடவுளாக கருதிகொண்டு அதோடான நமது பிணைப்பைமட்டும் ஆராய்வது எதற்காக...?
சரி நம்மை படைத்தவன் தான் கடவுள் என்று வைத்துக்கொள்வோம். படைத்தவனுக்கு நம்மை பாதுகாக்கவும் தெரியும் தானே. மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்தனுமே.. ! அது அவன் கடமை அல்லவா?
வேண்டினால் தான் தருவான்.. உருகி உருகி புகழ்பாடினால்தான் இரக்கம் கொண்டு தருவான் என்றால் ,, நாம் எடுப்பது பிச்சை , வணிகம் மாதிரி அல்லவா இருக்கும்?
முதற்பாவலர் சொன்னதுபோல "இரந்தும் உயிர் வாழ்தல்வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்" என்றல்லவா சொல்ல தோன்றுகிறது.
அறிவு தற்காலிகம் தான். அறியாமையே நிரந்தரம்! பிரபஞ்சத்தில் ஒளி என ஒன்று உணரப்படுவதே இருளில்தான்!
எல்லாவற்றிலும் மூலமுதல்வன் ஒருவன் 'தான்தோன்றி'யாக தோன்றினான் என்று எடுத்துக்கொண்டாலும் அவன் தோன்றுவதற்கு முன்பு அங்கு எதுவுமே இல்லாமல்தானே இருந்திருக்கிறது. கோடிக்கு முன் லட்சமும்,, லட்சங்கள் ஆயிரங்களாகவும்,, ஆயிரங்கள் நூறாகவும்,, நூறு சில பத்தாகவும்,, அந்த பத்துமே ஒன்றிலிருந்துதான் உருவானது என்றுஎடுத்துக்கொண்டால் அந்த ஒன்றும் கூட ஒன்றுமற்ற சூன்யத்திலிருந்தல்லவா ( 0 ) வந்திருக்க வேண்டும்? எனில் இல்லை என்பதே ஆதிக்கும் ஆதி என்றாகிறது!
'இல்லை' என்பதற்கு என்னவெல்லாம் கற்பனை செய்ய முடியுமோ அத்தகைய அத்தனை குணங்களும் கடவுளுக்கும் இருக்கிறது. ஒருவேளை இல்லை என்பதைத்தான் கடவுள் என்கின்றனரோ என்னவோ!"
நம்பி:
"ஆஹா! கம்பா நான் நினைத்தது சரியா போச்சு! நீ 'நாஸ்திகவாதம்' பேசுகிறாய்! ஐயோ! போயும் போயும் நீயா ராமபிரான் கதையை எழுதுகிறாய்? சடையன் என்ன மடையனா? அவனுக்கு
வேறு ஆளே கிடைக்கவில்லையா!
கடவுளுக்கு இங்கு தேவையே இல்லை என்கிறானே இந்தமகாபாவி!
ஏண்டா பாவி! ஸ்ரீ ராமன் கதையை தினமும் எழுதுகிறாயே ஒரு தடவை ராம நாமம் சொல்லி மனதால் நினைத்திருந்தால் கூட உனக்கு இறை நம்பிக்கை வந்திருக்குமே!
இத்தனைகாலம் பிறந்துவளர்ந்து வந்திருக்கிறாயே ஒரு முறைகூடவா நீ , தெய்வம் உண்டு என உணர்ந்ததில்லை?
கம்பன்:
"ஏன் இல்லை? நன்றாக உணர்ந்திருக்கிறேனே!! உணர்ந்தது என்ன அன்றாடம் கவிபுனைவதற்கு முன் ஒருமுறையேனும் ராம தரிசனம் கிடைக்காமல் எழுத்தாணியை தொடுவேனா என்ன? தெய்வம் உளது என்று உறுதியாக நம்பினோருக்கு அது காட்சிதராமலா போய்விடும்..?
எத்தனைதடவை என்னை இக்கட்டான சூழலில் இருந்து என்தாய் கலைமகள் வந்து என்னை காப்பாற்றி இருக்கிறாள் தெரியுமா??"
நம்பி:
"ஐயோ..! எனக்கு பைத்தியமே பிடித்துவிடுமய்யா உம்மோடு...போராடி!! கடவுளே இல்லை என்றீர்! இப்போது என்னவென்றால் அவரை நேரில் கண்டேன் என்கிறீரே..?"
கம்பன்:
"கடவுள் முதலில் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் நாம் நினைத்தால் அவரை உள்ளத்தால் உளதாக்கி நிஜத்திலும் உண்டாக்கி கொள்ளலலாம்!!
எப்படி என்கிறீரா..?
நம்மூரில் கடவுளை பார்த்தவன் என்று எவனையேனும் விசாரியுங்கள்.. அப்படி எவனும் இருக்கமாட்டான். ஆனால் அதே நேரம் பேய்/ பிசாசு/ காத்துகருப்பு கண்டவன் என விசாரித்துபாருங்கள் தெருவுக்கு ஒருவரேனும் வந்து அநுபவ சாட்சி சொல்வான்!
மனித மனம் எளிதாக எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்படுவதால்,,, அது, தான்உருவாக்கி வைத்திருக்கிற எதிர்மறை விஷயங்களுக்கு உடனடியாக உருவகம் கற்பித்துக்கொள்கிறது!! தனிமையில் இரவில் வீட்டின் மூலையில் இருக்கிற சாதாரண சாக்கு மூட்டைகூட மனத்தினால் விசித்திரமாக பல உருவங்களாக இருளில் கற்பனை செய்யப்படுகிறது. கயிறை பாம்பாக.. எண்ணி குழம்பி அஞ்சுவதுபோல்...! அங்கு நிஜத்தில் பாம்பு இருந்தால் என்னென்ன உணர்வு /பயம் தோன்றுமோ அத்தனையுமே அந்த மாய கயிற்றினாலும் உண்டாகிவிடுகிறதல்லவா?
அறிவு பரவசப்படும்போது நமது
மனம் கற்பிதம் செய்கிற அந்த உருவங்களை ஐம்புலனாலும் உணரக்கூடமுடியும்!! அதனிடமிருந்து தாக்கங்களை உட்கிரகிக்கவும் முடியும். பேய் அடிப்பதும் பூதம் பிடிப்பதும் இப்படி நிகழக்கூடியவையே...!
இது மனிதனுக்கு மட்டுமல்ல நாய் பூனை மாடு பறவைகளுக்கும் உண்டு அவையும் எதிர்மறை குணங்களான அச்சம் அதிர்ச்சி மயக்கம் முதலியவற்றாலேயே அதிகம் ஆட்கொள்ளப்படுகின்றன.
இதே மனத்தோற்றத்தை நல்ல குணங்களின் வாயிலாக விரும்பத்தக்க நிகழ்வுகளின் அரங்கேற்றமாக நாம் விரும்புகிற வடிவத்தில் நிஜத்திலேயே உருவகப்படுத்தி கொண்டுவர இயலும்..! அதற்கு ஒரு பக்குவம் வேண்டும். ஈசனும் கிருஷ்ணனும் மாரியம்மனும் அப்படித்தான் பலருக்கு ஆழ்ந்த பக்திநிலையில் தரிசனம் தருகிறார்கள். உண்மையில் அவர்கள் தங்களையறியாமல் தாங்களே தரிசனப்படுத்திக்கொள்கிறார்கள். கட்டற்ற நிலையில் மனதின் ஒரு வகை அனிச்சைசெயல் அது..! இது ஒன்றும் வாழ்நாள் தவமிருந்து
மலைமேடுகளில் ஏறிசுற்றி யாரோ ஒருவரை சந்தித்து உபதேசம்பெற்று பெறக்கூடிய கல்வி ஞானமோ, விலைகொடுத்து வாங்குகிற வணிக பண்டமோ, விண்ணுலக பயணமோ அல்ல..!
இயற்கையில் ஒவ்வொருவருக்குள் உறைந்துகிடக்கும் ஆன்மீக உணர்வு... தார்மீக கனவு... ஏக்கங்களின் தாக்கம்..! தன்னைநோக்கி தான் சிந்தித்து தேடும்போது தான் எழுப்புகிற கேள்விகளுக்கு தானே கண்டடைகிற விடை!
சிலருக்கு இது எதிர்பாராத விபத்தாக கூட நேரலாம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்"
நம்பி:
"ஐயா கம்பரே! அப்போ கடவுள்குறித்து நான் கேட்டதற்கு உம் முடிவான பதில்தான் என்ன?"
கம்பன்:
"மனித வாழ்க்கை சக்கரம் நம்பிக்கையை தான் ஆதாரமாக கொண்டு இயங்குகிறது...
ஏற்பதை முழுமனதோடு ஏற்கப்பழகுங்கள்.
மறுப்பதை முழுமனதோடு மறுத்து பழகுங்கள்..
மன மாற்றமிருந்தால் தயங்காமல் துணிந்து மாறிக்கொள்ளுங்கள்.
நம் வாழ்க்கை மிக நன்று!
அது துயரத்தில் மிதந்தாலும் நன்றே..! பன்னெடுங்காலமாக இந்த துயரசேற்றிலிருந்து கொண்டுதான் நாம் பிழைத்துவாழ்கிறோம்.
எத்தனை கேடுகள் எதிர்கொண்டபோதிலும்கூட அதனூடும் நம் குடிவாழ்க்கை நடந்துகொண்டுதான் இருக்கிறது!
மனநலம் பாதித்த புத்தி சுவாதீனமே இல்லாத எத்தனையோ பேர் தேசம்தேசமாக திரிகிறார்கள்.. அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கடவுள் பற்றி சிந்திக்க முடியுமா?..
ஆனால் அவர்களுக்கும் 'பிழைப்பு' என்பது இருக்கிறது.. உயிர்வாழ அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.. போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
நமக்கும் சரி அவர்களுக்கும் சரி குடிவாழ்க்கை இயல்பிலேயே இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இதெல்லாம் எதற்காக..?
நாம் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்..?
அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விடைகாண கூடிய ஆயிரம் பொற்கழஞ்சு (மில்லியன் டாலர்) கேள்வியே தவிர..
கடவுள் இருப்பை குறித்து அல்ல!!!"
(கூறி முடித்ததும் முன்பிருந்த அதே தெளிந்த மனத்தோடு சலனமின்றி கம்பர் நேராக கோவிலை நோக்கி சென்றார்.
நம்பி தன் நம்பிக்கைகளின் கொந்தளிப்புகளால் திண்ணையில் சரிந்தார்...)
சூரியராஜ்
தேர்வுக்காக விழுங்கிய இந்த பாடலில், இவளவும் மறைந்திருப்பது இப்போது தான் தெரியவந்தது!... மிக்க நன்றி 🙏
பதிலளிநீக்கு🙏🙏🙏
நீக்குஆசிரியருக்கு ஆசிரியராக இருக்கிறாய்.M A தமிழ் படிக்க முயற்சி செய்யவும்.
பதிலளிநீக்குஅமீர்கான் நடித்து இந்தியில் வெளியான " Pk " என்கிற திரைப்படமும்..
பதிலளிநீக்குஇந்திய மத உளவியலை உலகத்தர உயர் தொழில்நுட்பத்தில் மாயத்திரைகொண்டு காட்டியருளிய "Life of pie" ஆங்கிலத்திரைப்படமும் காணும் வாய்ப்பு கிடைத்தால் மறுயோசனைசெய்யாமல் பார்த்துவிடுங்கள்.. அவ்விரு படங்களும் நமக்கிருக்கும் ஆன்மீக புரிதலை அப்பட்டமாய் தோலுரித்து காட்டும்.. அதோடு தெளிவுக்கு வழிகாட்டும்.