குறுந்தொகை 20
மரத்த மனது
கல்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்பி இருசக்கர வாகனத்தில் பாண்டிச்சேரிக்கு செல்லும் இ.சி.ஆர் ரோட்டின் வழியே வேகமாக சென்று கொண்டிருந்தான் ஆதித்தன். அந்த நேரத்திலும் வாகனங்களுக்கு பஞ்சம் இல்லாமல் அந்த சாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
இவன் சென்ற வேகத்தில் காற்றின் பலத்த ஒலி இவன் காதுகளை அடைத்தது. கண்கள் சாலையை பார்க்க, கையும் காலும் வாகனத்தை இயக்க, மனம் மட்டும் பயணமுடிவில் ஏற்படப்போகும் எதிர்கால நிகழ்ச்சியை எதிர்பார்த்தபடி வந்தது. அதிக முறை இவன் இந்த சாலை வழியே பயணித்திருக்கிறான் - தன் காதலியை காண. ஆனாலும் ஒரு இருமாதமாக அவன் அவளுடன் செல்பேசியில் கூட உரையாட முடியாத சூழல். இன்றைக்கு அவளை சந்தித்து பேசாவிட்டால், இனி இரண்டு வருடங்களுக்கு அவளை நேரில் சந்திக்க முடியாது. தொலைபேசியிலாவது பேசலாம் என்றாலும் இன்று அவளை சந்தித்து, அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் அதற்க்கும் வாய்ப்பு. எனவே தான் அவன் மனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. பயண முடிவில் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த நோனாங்குப்பம் ஶ்ரீ அங்காளம்மன் கோவிலை அடைந்தான். அங்கு அவன் தந்தையும் தாயுமே அமர்ந்திருந்தனர். உடனே அவர்களை நெருங்கியவன் "என்ன நீங்க மட்டும் உட்கார்ந்து இருக்கீங்க?" என்று கேட்டான்.
"இப்பதான், மாமா வீட்ல இருந்து ஆட்டோல வந்தோம்!. மாமா பின்னாடி வருவாரு" என்றாள் அவன் அம்மா.
அம்மா அருகில் அமர்ந்தான். பயணக் களைப்பில் பசி எடுக்கவே, கம்பு பையில் இருந்த ஒரு சீப்பு வாழைப்பழங்களில் இருந்து ஒரு வாழை பழத்தை பிய்த்தான். சட்டென அவன் அம்மா அவன் கையில் ஒன்னு போட்டு "சாமிக்கு படைக்குறது டா!" என்றாள்.
"அம்மா பசிக்குதுமா, கால்லேந்து டீ கூட குடிக்கல!"
"போ கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட்டுட்டு வா"
"பையன் பசிக்குது சொல்லுறான அந்த பழத்த தான் சாப்புடட்டுமே?"
"நீங்க சும்மா இருங்க" என்றாள்.
பிய்த்த பழத்தை பையிலேயே போட்டுவிட்டு கடைத்தெரு பக்கம் கால்நடையாக போனான். அங்கு ஒரு தேநீர் கடையில் தேநீரை அருந்திவிட்டு ஒரு அரைமணி நேரம் கழித்து கோயிலுக்கு திரும்பினான். தூரத்தில் இருந்து பார்க்க, பட்டு தாவணி உடலில் தவழ, மல்லிகை அவள் அழகு மிகு கூந்தலை மேலும் அலங்கரிக்க பின்னால் திரும்பிய படி தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பெண் ஒருத்தி. அவனது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. ஒரு முறை கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டு அருகில் சென்றான். அருகில் செல்லும் போது தான் அவன் கண்கள் அவன் மனதை ஏமாற்றியது தெரிந்தது. ஆம்; அவன் காதலி அங்கு வரவில்லை. அவள் தங்கையே நின்றாள். அவளின் ஜாடையில் தான் அவள் தங்கையும் இருப்பாள். இதை கண்ட அவன் ஏமாற்றத்தினால் தலைக்குணிந்தான். பூசாரியிடம் பேசிக்கொண்டிருந்த அவனது மாமா ஆதித்தனை நெருங்கினார். "எப்ப வந்த?"
"இப்பதான் ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடி வந்தேன் மாமா"
"ம்ம்… சரி" என்று கூறிவிட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய மீண்டும் பூசாரியை நோக்கி அவர் சென்றார்.
இவனோ பிரமை பிடித்தவன் போல எதையோ யோசித்துக்கொண்டே கோயில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்.
அவனுக்கு நா வரண்டது. தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. "சொன்னது போலவே செய்து விட்டாளே!" என்று மனதுக்குள் புலம்பினான். கண்களில் சற்றே நீர் சுரந்தது. அதை துடைத்துக்கொண்டு செல்போனை எடுத்து அவளுக்கு அழைத்தான். எப்போதும் போல அழைப்பு அவளுக்கு செல்லவில்லை. அவள் வராத உண்மையான காரணத்தை அறிய அவள் தங்கை ராதையிடமே கேட்போம் என்று அவளை நெருங்கினான். "தேவி வரலையா?" என்றான்.
"அவளுக்கு உடம்பு சரியில்ல, அவள பாத்துக்கறத்துக்காக தான் உன் அத்த இன்னக்கி கோயிலுக்கு வரல!" என்று ராதை கூறுவதற்கு முன்னால் ஆதித்தனின் அம்மா கூறினாள். இதை கேட்ட அவன் மீண்டும் அதே இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான். 'இனி இரண்டு வருடம் கழித்து தான் அவளை சந்திக்கமுடியும்' என்று நினைத்தபோது அவனுக்கு உயிரே போனது போல இருந்தது.
ஒரு வருடத்திற்கு முன்…
அன்று மதிய நேரம். ஆதித்தன் வழக்கம் போல வீட்டில் தொலைக்காட்சியை கண்டவாறே உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.வீட்டிற்கு அவன் மாமா வந்தார். "வாங்க மாமா…" என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.
"உட்காரு... உட்காரு..." என்றபடியே அவர் நாற்காலியில் அமர்ந்தார். உள்ளே இருந்து அவன் அம்மா வந்தாள். "அண்ணே வாங்க, என்ன தீடீர்னு ஒரு ஃபோன் கூட பண்ணாம!?"
"இல்ல, தொழில் விசயமா மெட்ராஸ் போனேன். சரி அப்புடியே உங்கள ஒர் எட்டு பாத்துட்டு போய்டுவோம்னு தான் இங்க வந்தேன்"
"சரி, வாங்க சாப்பிடலாம்" என்றாள்.
"இல்லமா நான் சாப்பிட்டுடேன். சாயுங்காலம் ஒரு ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பிடுவேன்"
"இருந்துட்டு நாளைக்கு போங்க!"
"இல்லமா… இன்னொரு நாள் வந்து தங்கிட்டு போறேன்" என்று கூறிவிட்டு தொலைக்காட்சியை பார்க்கப் ஆரம்பித்தார். சாப்பிட்டு முடித்த ஆதித்தன் கையை கழுவிட்டு உடனடியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு விளையாட சென்று விட்டான். பிறகு மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தவன். கைகால் முகங்களை கழுவி தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தான்.
அருகில் இருந்த அவன் மாமா அவனை நோக்கி "தம்பி… உனக்கு வயசு என்ன ஆகுது?" என்று கேள்விச்சரங்களை தொடுக்க ஆரம்பித்தார். அவனும் வம்பில் மாட்டியதாக நினைத்துக்கொண்டு "இருப்பது மூனு" என்றான்.
இவன் வீட்டில் சும்மா இருப்பது தெரிந்தும் "வேலைக்கு எங்கயாவது போறியா?" என்று கேட்டார்.
"இல்ல... வேல தேடிக்கிட்டு இருக்கேன்"
"படிச்சி முடிச்சி எத்தன வருசம் ஆகுது?"
"ஒன்றரை வருசம் ஆகுது. மாமா"
"மச்சான் ஒரு ஆளா இருந்து கஷ்டப்படுறாரு நீ இத்தன வயசு ஆகியும் சும்மா இருக்க?" என்றார். அவரிடம் அதிகம் வசை சொற்கள் வாங்கியே பழக்கம் ஆனதால், இதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளமல் மௌனகித்தான். மேலும் அவர் "சரி… சீக்கிரம் இவனுக்கு பாஸ்போட் எல்லாம் ஏற்பாடு பண்ணுமா! ஒரு ஆறுமாசத்துக்குள்ள" என்றதும் அவன் அம்மா "ஏன் அண்ணே?" என்று கேள்வி எழுப்பினாள்.
"துபாய்ல எனக்கு தெரிஞ்சவரோட பையன் ஹோட்டல்ல வேல பாக்குறான். அவனும் இன்ஞ்சிநியரிங் தான் படிச்சான். இங்க வேல கிடைக்கிறது மாதிரி இல்ல. உடனே தூபாய் ஹோட்டலுக்கு வேலைக்கு போனான். இரண்டு வருசம் கழிச்சு இந்த வருசம் கடைசில வரான். அங்கு ஆள் சேக்குரதா சொன்னான். அதான் அவன் கூடவே இவனையும் அனுப்பிவிடுவோம்னு. இரண்டு வருசம் இருக்கனும், இடையில வர முடியாது. நல்ல சம்பளம். சென்னை தான் அந்த பையனுக்கு. நல்ல பையன். பத்தரமா இவன பாத்துப்பான்,, என்ன சொல்ற?"
"சரி அண்ணா, ஆனா இவன் சின்ன பையன்!…"
"ஆமா கழுத வயிசு ஆகுது. இன்னும் உனக்கு சின்ன பையன்! என்ன தம்பி?" என்று ஆதித்தனை பார்த்து கேட்டார். ஆதித்தனோ "இல்ல… " என்று மேலும் பேச தொடங்க அவர் குறுக்கிட்டு "என்ன இல்ல?, போய்தான் ஆகனும்!, மச்சானுக்கும் வயசு ஆகிட்டு!. இனிமே நீ தல எடுத்தால்தான் உண்டு. உனக்கும் வயசு இவளோ ஆகுது ஏதாவது சம்பாத்தியம் இருந்தாதான் இந்த காலத்துல பொண்ணு கொடுப்பானுங்க. இப்பெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளையா இருந்தாதான் கல்யாணம் பண்ணி தரானுங்க!" என்று உரையாடலை முடித்தார். அவர் சொன்னது 'இந்த வேலைக்கு போனால் தான், என் பொண்ணு உனக்கு' என்று சொல்லுவது போல இருந்தது. அவரின் நீண்ட நேர அறிவுரைக்கு பிறகு ஒப்புக்கொண்டான். அவரும் ஆகவேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு அவர் ஊருக்கு கிளம்பினார். அன்று இரவு மாமாவின் மகள் கோப்பெருந்தேவிக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னான். அவளுக்கு அதிலே சந்தோஷம் என்றாலும் இரண்டு வருட பிரிவை எண்ணி கவலைப்பட்டாள். இவனோ பிரிவுக்கு பிறகு ஏற்பட போகும் நெருக்கத்தைச் சொல்லி ஆறுதல் தேற்றினான். இப்படியே பல மாதங்கள் சென்றது. ஆதித்தனின் மாமாவுக்கு இவர்கள் காதல் விஷயம் முன்பே தெரியும். ஆனால் அவர் அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. விஷயம் தந்தைக்கு தெரிந்தும் ஏதும் சொல்லாதது, கோப்பெருந்தேவிக்கு அவள் தந்தை மீது சற்றே சந்தேகம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆதித்தனை தாழ்மைபடுத்தியே தன் வீட்டில் பேசிய அவர். சட்டென அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து வைப்பது கூறித்து சந்தேகம் அடைந்தாள். அதிலும் 'வெளிநாட்டு வேலைக்கு ஏன் அனுப்ப வேண்டும்?' இதில் ஏதோ சதி திட்டம் இருப்பதாக நினைத்தாள். ஒர் நாள் அவர் தந்தை யாருடனோ தொலைபேசியில் பேசுவதை எதர்ச்சியாக கேட்டாள். அவர் அரசு வேலை பார்க்கும் நல்ல மாப்பிள்ளையாக தனது மூத்த மகளுக்கு தேடும்படியும், தோஷம் இருப்பதால் இரண்டு வருடத்திற்குள் அவளுக்கு திருமணம் செய்யும் முடிவில் இருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தார். இதை கேட்ட கோப்பெருந்தேவிக்கு தந்தையின் சூழ்ச்சி அம்பலமானது. இதை ஆதித்தனுக்கு எடுத்துச் சொன்னாள். ஆனால் அவன் இரண்டு வருடங்களுக்கு பிறகு நானே வந்து உன்னை திருமணம் செய்கிறேன் என்றான். அவள், நீ வெளிநாட்டுக்கு செல்லும் முடிவை கைவிடும் வரை உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
அன்றிலிருந்து இன்றுவரை, இரண்டு மாதங்களாக அவளை இவன் பார்க்கவும் இல்லை. தொலைபேசியில் கூட பேச முடியாத நிலமை ஏற்பட்டது.
கோயிலில் பூஜை தொடங்கியது. உடனே அவன் தந்தை, ஆதித்தனை நோக்கி, சாமியை வணங்க வரும்படி சைகை செய்தான். சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு தீபம் கொண்டீவரப்பட்டது. அதை கண்களில் ஒத்திக்கொண்டு திருநீறும் குங்குமம் பூசினான். பின்னர் மெல்லிய குரலில் "அம்மா இப்ப மாமா வீட்டுக்கு போய்டு தான வீட்டுக்கு போறிங்க?" என்று கேட்டான்.
"இல்ல, கோயிலுக்கு வந்துட்டு எங்கயும் போக கூடாது. அதுனாலதான் தான் நாங்க நேத்தே வந்தோம்! நீ தான், இன்னும் ஒரு நாள் தான் ஊர்ல இருப்பேன், பிரண்ட்ஸ்ச பாக்கனும் சொல்லிட்டு இப்ப வர!"
"ஆமா நேரா ஊருக்கு தான் போகனும். இல்லனா இவ்வளவு தூரம் வந்து சாமி கும்பிட்டத்துக்கு பலனே இல்லாம போய்டும்!. அதுமட்டுமில்லாம இப்ப கிளம்பினாதான் தேவையான பொருள எடுத்து வைக்க முடியும்" என்ற தன் கரகரப்பு குரலில் சொன்னார் ஆதித்தனின் மாமா. உடனே அவன் அமைதியானான்.
பூஜை எல்லாம் முடிந்தது. கோயிலில் இருந்து அனைவரும் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர். அவன் தந்தையும் தாயும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர். இவனும் ஊருக்கு செல்வதற்காக கோயில் கிடந்த தன் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தான். அங்கு அவன் மாமா கோயிலின் உள்ளே பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ராதை தனியாக கோயிலின் படியில் நின்று கொண்டிருந்தாள். உடனே அவளை நெருங்கி "ராதை, உங்க அக்காக்கிட்ட என்ன மன்னிச்சிட சொல்லு. எனக்கு வேற வழி தெரியல. அவ சொன்னா; அவளுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணுறாங்கனு. ஆனா அவள நான் கல்யாணம் பண்ணும்னா இங்கையே இருந்தா சரி வராது. நான் போய்டு வந்து மாமா கிட்ட கல்யாணத்த பத்தி பேசலாம்னு சொல்லு. அவள பாத்து பேசனும்னு தான் - நான் இந்த பூஜை ஏற்பாடே பண்ண சொன்னேன். என் விதி, அவள நான் இன்னக்கி பார்க்கக்கூடாதுனு இருக்கு" என்று பேசும் போதே அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. அவனது மாமா உள்ளிருந்து வர, கண்களை துடைத்துக் கொண்டு அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு ஆதித்தன் தனது இருசக்கர வாகனத்தில் தன் ஊரை நோக்கி புறப்பட்டான்.
ராதை வாயடைத்து இருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தனது அக்காவின் வாழ்க்கையில் இனி என்ன நடக்குமோ என்ற எண்ணங்கள் தோன்றியது.
வீட்டிற்கு திரும்பிய ராதை உடனடையாக படுக்கையில் சாய்ந்திருந்த தனது அக்கா கோப்பெருந்தேவியை எழுப்பினாள். காய்ச்சலின் காரணமாக அவளது உடலும் முகமும் சோர்ந்து இருந்தது. "அக்கா நாளைக்கு ஆதி மாமா துபாய்க்கு போறாரு. அவர் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு. அங்கு போய்டு வந்தாதாம் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியும்னு சொன்னாரு, அவரு வேற ஏதோ சொல்லுறத்துள்ள அப்பா வந்ததால அவர் கிளம்பிட்டாரு" என்று கூறி முடித்தாள் ராதை.
இதை கேட்ட கோப்பெருந்தேவி "ரொம்ப நல்லது. நான் இவ்ளோ சொல்லியும்… நல்ல புத்திசாலி தனமான முடிவு தான் அவரு எடுத்துருக்குறாரு!. நான் தான் அறிவுகெட்டவ!. சரி நீ போ..." என்று சொல்லிய படியே கட்டிலில் சாய்ந்தாள். இன்று அவனை சந்தித்து அவனின் முடிவை மாற்ற விரும்பினாலும் அவள் உடல் ஒத்துழைக்கவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லது என்று நினைத்தாள். அதுவே அவனது முடிவை மாற்றும் என்றும் எண்ணினாள். ஆனால் விதி அவர்கள் காதலுக்கு சதி செய்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. கவலையின் அளவு கையளவு தாண்டி கடலளவு ஆனாதால் அவள் மனம் மரத்துபோய் கண்ணீர் வர கூட மறுத்தது.
குறுந்தொகை 20
அருளும் அன்பும்நீக்கித்துணைதுறந்தது
பொருள்வயிற் பிரிவோர்உரவோர்ஆயின்
உரவோர் உரவோர்ஆக
மடவம் ஆகமடந்தைநாமே.
கோப்பெருஞ்சோழன்
கதை என்னவோ காவியத்தொனியில் இருந்தாலும்... கதைக்கான உங்கள் களம் படு யதார்த்தமாக சக்கைப்போடு போடுகிறது..!
பதிலளிநீக்குநன்றி 🙏
நீக்குசேரமான் காதலி படிக்கும் நேரம்...
பதிலளிநீக்குகையளவு தாண்டி கடலளவு ஆனாதால் அவள் மனம் மரத்துபோய் கண்ணீர் வர கூட மறுத்தது.
அப்போது இவ்வரி எனக்கு ஏதோ சோக உணர்ச்சியை மட்டும் சொல்வதாய் பட்டது.
ஆனால் குகன் இஃதை கண்ணிலே காட்டிவிட்டார்..
ஆஹா...அருமை
இது சோகத்தையும் கடந்ததொரு இயலாமை எனலாமா? இதை எப்படி விவரிப்பது?
கவிஞர் கண்ணதாசன் அவர்களையே சாரும்...
நீக்கு