அண்மை

அதிகாரம் 3 - நீத்தார் பெருமை | திருக்குறள் கவிதையில்

 அதிகாரம் 3 - நீத்தார் பெருமை



குறள் 21


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு


கவியுரை


ஒழுக்கத்தில்

நின்றே

பற்றுகளை

வென்றவரை,

பாடநூல்கள்

பாட

வேண்டும்!


மணக்குடவர் உரை


ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். அதை மொழிதலே சிறப்பு.


பதவுரை


ஒழுக்கத்து-ஒழுக்கத்தின் கண்ணே, ஒழுக்கத்தின் பொருட்டு, ஒழுக்கத்திற்காக; நீத்தார்-பற்றுக்களைத் துறந்தவர்; பெருமை-உயர்வு, சிறப்பு; விழுப்பத்து-விழுமத்தின் பொருட்டு; வேண்டும்-விரும்பும்; பனுவல்-நூல். துணிவு-முடிவு, முடிவு காட்டுதல், தெளிவு, உறுதியாகக் கொள்ளுதல்.


குறள் 22


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


கவியுரை


இறந்தோர்

அளப்புக்கு

ஒப்பாகும்,

துறந்தோர்

புகழ்

உரைப்பு!


பரிமேலழகர் உரை


துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.


பதவுரை


துறந்தார்-பற்றினை விட்டவர்; பெருமை-உயர்வு; துணை-அளவு; கூறின்-சொன்னால். வையத்து-உலகத்தில்; இறந்தாரை-செத்தவரை; எண்ணி-எண்ணிக்கையிட்டு; கொண்டு-கொள்வது; அற்று-அத்தன்மைத்து.


குறள் 23


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 

பெருமை பிறங்கிற்று உலகு


கவியுரை


இம்மை மறுமை

உண்மையறிந்து,

அறந்தரும்

துறவறம்

ஏற்றோர் புகழே

போற்றும் உலகு!


உரை


இம்மை மறுமை உண்மை உணர்ந்து இருப்பதையெல்லாம் விடுத்து (இழந்தபின்னே ஏற்பது துறவாகாது) எவன் அறவாழ்வில் ஈடுபடுகிறானோ அவனையே போற்றும் உலகு.


பதவுரை


இருமை-இரண்டிரண்டு, இருநிலைகள், இரட்டைத் தன்மைகள்; வகை-கூறுபாடு; தெரிந்து-ஆராய்ந்தறிந்து; ஈண்டு-இங்கு, இப்பிறப்பில்; அறம்-அறச்செயல்கள், நல்வினை; பூண்டார்-மேற்கொண்டவர்; பெருமை-சிறப்பு, உயர்வு; பிறங்கிற்று-விளங்கித் தோன்றுகிறது, உயர்ந்தது; உலகு-உலகம்.


குறள் 24


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


கவியுரை


அடக்கமென்ற

அங்குசத்தால்

ஐம்புலனை

ஆள்பவனே!

துறவென்ற

வயலுக்கோர்

விதையாவான்….


உரை


அடக்கமென்ற வலிமையான அங்குசத்தால் ஐம்புலனை அடக்கத்தெரிந்தவனே! துறவென்ற வயலுக்கோர் விதையாகிறான். அவ்விதை பல விதைகளை தயார் செய்யவும் தகுதி பெறுகிறது.


விரிஉரை


உரன் என்பதை பல்வேறு உரையாசிரியர்கள் திண்மை வலிமை அறிவு என்ற பொருளில் கையாண்டுள்ளார்கள். அது சரியாக இருப்பினும். அதிகாரம் உணர்த்தக்கூடிய உள்ளார்ந்த பொருளாக அது இல்லை.


திண்மை வலிமை இவ்விரு சொல்லும் பொருளாய்ந்து பார்க்கையில் ஒரே பொருளைத்தான் குறிக்கும். உவமையை இக்குறளில் கையாண்ட வள்ளுவர் உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் என்கிறார்.


ஓர் ஐந்து இங்கு ஐம்பொறியினை குறிக்கும். அவ்வண்ணம் உரன் என்பது வலிமையானாலும் அது மனவலிமை கொண்டு அடக்கத்தையே கொடுக்கிறது. அவ்வடக்கமே ஓர் ஐந்தை காக்கிறது. அறிவாகினும் அது மனவலிமை பெற்று இறுதியாக அடக்கத்தையே தருகிறது.


மனவலிமை மனதடக்கத்தை தருகிறது. அவ்வடக்கத்திற்கு அறிவே மூலமாகிறது. 


ஏனைய பிற உரையாசிரியர்கள் கூறியது வெளிப்படையாக சரியாகினும். உள்ளார்ந்த பொருள் நெஞ் உரம் தரும் அடக்கத்தையே குறிக்கும்.


குறள் 25


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 

இந்திரனே சாலுங் கரி


கவியுரை


புலனாசை

அவித்தோரின்

ஆற்றல் நாம்

அறிதற்கு,

வானமேற்ற

கோமானே

சான்றாவான்!


உரை


ஐம்புலனையும் வென்றோரின் திறனை நாம் அறிவதற்கு, அவ்வடக்கத்தாலே பல்வேறு தவஞ்செய்து வான பதவியை ஏற்ற இந்திரனே சான்றாகிறான்


விரிஉரை

அதாவது இந்திரபதவியை அடைய பல தவங்களை செய்தல் வேண்டும். தவஞ்செய்ய புலனடக்கம் வேண்டும் அதனால் ஐந்து அவித்தான் ஆற்றல் அறிய நாம் இந்திரனை சான்றாக காணுகிறோம்


பதவுரை 


ஐந்து- ஐந்து (புலன்கள்); அவித்தான்-பக்குவப்படுத்தியவன், அடக்கியவன், அறுத்தவன்; ஆற்றல்-வலிமை; அகல்-விரிவான; விசும்புளார்-வானிலுள்ளவர்கள்; கோமான்-மன்னவன்; இந்திரனே- இந்திரனே; சாலும்-அமையும்; கரி-சான்று


குறள் 26


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 

செயற்கரிய செய்கலா தார்


கவியுரை


அரியன

செய்வோர்

பெரியோர்,

அல்லாதோர்

சிறியோர்!


உரை


வேடமணிந்தோர் எல்லாம் துறவியல்லர். அரியனவற்றை நிகழ்த்தல் வேண்டும் அது பற்றில்லா வினையாதல் வேண்டும். அவரே பெரியோர் அல்லாதோர் சிறியோரே. 


பதவுரை 


செயற்கு-செய்தற்கு; அரிய-அருமையானவைகளை, எளிதில் செய்யமுடியாதவைகளை; செய்வார்-செய்பவர்கள்; பெரியர்-பெரியவர், பெருமையுடையவர்; செயற்கு-செய்தற்கு; அரிய-அருமையானவைகளை; செய்கலாதார்-செய்ய முடியாதவர்; சிறியர்-சிறியர்.


குறள் 27


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் 

வகைதெரிவான் கட்டே உலகு


கவியுரை


மெய் வாய்

கண் மூக்கு

செவியென்று,

புலன்வகை

புரிந்தவனுக்கே

புவனமும்

புரிகிறது!


உரை


மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலனையும் பக்குவபடுத்துவதோடு மட்டுமன்றி அதன் கூறுகளும் தெரிந்தவனுக்கே உலகின் உள்ளார்ந்த தத்துவமும் புலப்படுகிறது.


பதவுரை


சுவை-சுவை, உண்டல்; ஒளி-பிரகாசம், காணல்; ஊறு-தொடுதலுணர்ச்சி, மெய்யுறுதல்; ஓசை-ஒலி, கேட்டல் ; நாற்றம்-மணம், முகர்தல்; என்று-என; ஐந்தின்-ஐந்தனது, ஐந்தைப் பற்றிய; வகை-கூறுபாடு, தன்மை, விவரம்; தெரிவான்- ஆராய்ந்து தெளிந்தவன்; கட்டே-கண்ணதே; உலகு-உலகம்.


குறள் 28


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 

மறைமொழி காட்டி விடும்


கவியுரை


ஆன்றோர்

பெருமையை

அவர் நிலத்து

அறநூல்

காட்டிவிடும்!


உரை


நிறையறிவுடைய மெய்ஞானியின் பெருமையை அவர் நிலத்து ஒழுக்கம் அளிக்கும் அறநூல் (மறைநூல் - வேத நூல் என்பது ஒழுக்கத்தை போதிப்பதாகும்) காட்டிவிடும்.


பதவுரை


நிறை-நிரம்பிய, நிறைந்த; மொழி-சொல்; மாந்தர்-மக்கள்; பெருமை-சிறப்பு, உயர்வு; நிலத்து-பூமியின் கண்; மறை-மறை; மொழி-சொல்; காட்டிவிடும்- காண்பிக்கும்.


குறள் 29


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது


கவியுரை


ஒழுக்கமென்ற

சிகரத்தில்

நிற்போரின்

சினம்;

கணம் கூட

நிலைக்காது!


உரை


குணமாகிய ஒழுக்கத்தின் கண் உயர்ந்து நிற்போருக்கு எழும் சினமானது, ஒரு கணப்பொழுது கூட நிலைப்பதில்லை. 


விரிஉரை


வெகுளி கணம் ஏகினால் காத்தல் அரிது என சில தொல்லாசிரியர்கள் உரைப்பதை காண்கிறோம். அதிகாரத்தின் கண் பார்த்தோயேமானால் 'சிறப்பினை நோக்குவதே சிறப்பாகும்'


அவரது வெகுளியால் ஒருவரை பாதுகாப்பது அரிது என்பதை விட அவரது வெகுளியே அவரால் காத்தல் அரிது என பொருள்படுதல் சிறப்பாகும். வள்ளுவர் கருத்தும் அஃதே.


பதவுரை 


குணம்-நற்பண்பு; என்னும்-என்கின்ற; குன்று-சிறுமலை; ஏறி-ஏறி; நின்றார்-நின்றவர்; வெகுளி-சினம்; கணமேயும்-நொடிப்பொழுதேனும்; காத்தல்-தன்கண் வைத்திருத்தல்; அரிது-அருமையானது.


குறள் 30


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்


கவியுரை


எவ்வுயிருக்கும்

தீங்கிழைக்காத

அறவோனே

துறவோன்

ஆவான்!


உரை


துறவோர் என்போர் அறவோர். அவர் எவ்வுயிரையும் செம்மையான குளிர் தன்மை பொருந்திய கருணையோடு காத்து ஒழுகுவார்.


விரிஉரை


துறவோர் என்போர் அறவோர் - அறவோர் என்போர் துறவோர் 


அந்தணரின் மிக சரியான ஒழுக்கநெறிகளை ஆய்ந்து பார்த்தோமானால் துறவிகளுக்குரிய பக்குவத்தை அந்நெறிமுறைகள் கூறுகிறது. (மறுவேளை உணவிற்கு மடியில் சேர்க்க கூடாது, ஜீவகாருண்யம், பற்றில்லா கர்மம் கொள்ளும் நிலை, ஜீவ சாந்தம், சலனம் சபலமற்ற நிலை)


இது பிறப்பால் வரும் பெயராகவும் ஆகாது. இந்நிலை அடைந்தோர் அப்பெயரால் வழங்கப்படுவர்.


அதனால் அந்தணர் என்போர் அறவோர் என்றும் அவ்வறவோரை துறவோர் என்றும் கூறுதல் சரியாகும். வள்ளுவரே அக்காரணத்தினால் தான் அந்தணர் என்னும் இச்சொல்லினை இவ்வதிகாரத்தில் காட்டியுள்ளார்.


பதவுரை


அந்தணர்-அழகிய தட்பத்தையுடையவர்; என்போர்-என்று சொல்லப்படுபவர்; அறவோர்-அறநெஞ்சம் கொண்டோர்; மற்று-(அசைநிலை - மற்ற-ஏனைய; எவ்வுயிர்க்கும்-எந்த உயிர்க்கும்; செந்தண்மை-செவ்விய தண்ணளி, அருள் தன்மை; பூண்டு-மேற்கொண்டு; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.


தீசன்


கருத்துரையிடுக

புதியது பழையவை