புலமைப்பித்த பித்தர்களே சாந்தமடைவீர்காள்
"நான் யார்… நான் யார்…" என்று தன்னையே தான் வினா எழுப்பியது போல தன் முதல் புலமைவரிகளை தந்து திரையுலகில் பாடலாசிரியராய் புகுந்தார் புலமைப்பித்தன் எனும் ராமசாமி அவர்கள். இவர் பாடல்கள் ஒலிக்காத திருமண வீடும் மினி பஸ்சும் இருக்காது. சாமானியனுக்கு புரியும் வகையில் பாடல்களை அள்ளித் தந்தவர்.
தன் முதல் திரைபாடலசிரியர் அடியை குறித்து "எப்படி IAS படித்தவன் சாதாரண பியூன் வேலை போவது போல நான் தமிழை படித்துவிட்டு திரைபடபாடலாசிரியர் ஆகி இருக்கிறேன்" என்று வேடிக்கையாக சொன்னவர்.
எம்.ஜி.ஆர் அவர்களின் அரசியல் வெற்றி பயணத்துக்கு முக்கியமான பல பாடல்களை தந்தவர். எம்.ஜி.ஆர் கூட புலமை பித்தனை 'எனக்கு இன்னொரு பட்டுக்கோட்டை கிடைத்துவிட்டார்' என்று பாராட்டி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் நடித்த நேற்று இன்று நாளை படத்தில்
"நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும்
நாளை" என்று படத்தின் பெயரை குறிப்பிட்டே தன் முதல் பாடலின் வரிகளை துவக்கினார். இந்த பாடலின் வழியே அரசியலில் நடக்கும் கூத்துகளை அழகிய வரிகளை வீசி எடுத்துக் காட்டியிருப்பார்.
"இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்" என்றும்,
"தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு" என்ற வரிகளும் இப்போது இருக்கும் இணைய உலகத்திற்கும் பொருந்தும் வகையில் உண்மையை வரிகளாய் தீட்டி இருக்கிறார்.
இன்றைய அங்கிள்கள் மழை வரும் போது ஒரு முறையேனும் இந்த பாடலை அசை போட்டிருப்பர் அந்த பாடல் தான்
"மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே" என்ற பாடல்.
இது போன்று புலமைப்பித்தன் எழுதிய பல பாடலை வாலி இயற்றினார் என்று சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பாடலில்
"உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்கு சாட்சி" என்று வரிகளை போட்டு விளையாண்டிருப்பார் புலமைப்பித்தன் அவர்கள்.
அது மட்டும் இன்றி "நான் யார்… நான் யார்…" என்ற பாடலில் 'ரகர' வரிசை எழுத்தை பயன் படுத்தியே பாடலை எழுதி இருப்பார்.
"கல்யாண தேன் நிலா" என்ற பாடலில் 28 'லா' வைத்து அந்த பாடலை செதுக்கி இருப்பார். இந்த பாடல் குறித்து ரசிகை சொன்னதை புலமைப்பித்தன் வாய்மொழியாகவே தருகிறேன்
"மும்பையில் இருந்து அடிக்கடி எனக்கு ஒரு பெண் தொடர்பு கொள்வாள்! எனக்கு எழுபத்து ஆறு வயது ஆகிறது தொடர்பு கொள்வாள் என்பதை தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம்… (தொகுப்பாளர் - பாடகர் மோகன் சிரிக்க. மேலும்)
அதிலே 'உன் பார்வை தூண்டிலா? நான் கைதி கூண்டிலா? என்கிற வரிகளை சொல்லி அத்துமீறி என்னை பாராட்டினாள். மீரா என்பது அவர் பெயர். நீங்கள் மோசமான கீரிமினல் என்றாள் ஒருமுறை. எனக்கு அப்போது கூட கோபம் வரவில்லை. என்ன சொல்கிறாய்? என்றேன். என்னை மாதிரி இருக்கிற இளம் பெண்களை எல்லாம், இப்படி பாடல்களை எழுதி சித்திரவதை செய்கிறீர்களே! நீங்கள் கீரிமினல் இல்லாமல் வேறு என்ன? என்றாள். இதை விட வேறு என்ன பாராட்டு வேண்டும்." (தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புலமைப்பித்தன் அவர்கள் கலந்து கொண்டு பேசியது)
மறைந்த பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களின் முதல் பாடலான 'ஆயிரம் நிலவே வா…', 'அம்மாடி இதுதான்' , 'நீ ஒரு காதல் சங்கீதம்' , 'ஓ வசந்த ராஜா' போன்ற பாடல்கள் இவர் எழுதி ஹிட் அடித்த பாடல் வரிசையில் உள்ளவை.
அவர் கடைசியாக எழுதிய திரையுலக பாடல் வரிகள். தெறி படத்தில் வரும் இந்த பாடல் தான்.
"தாய்மை
வாழ்கென தூய
செந்தமிழ் ஆரிராரோ
ஆராரோ தங்க கை
வலை வைர கை
வலை ஆரிராரோ
ஆராரோ
இந்த நாளிலே
வந்த ஞாபகம் எந்த
நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும்
மௌன பாஷையில்
என்னவென்று கூறாதோ
தாய்மை
வாழ்கென தூயசெந்தமிழ் பாடல்
பாட மாட்டாயோ
திருநாள் இந்த
ஒரு நாள் இதில் பல
நாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன்
மனமே
விழி பேசிடும்
மொழி தான் இந்த
உலகின் பொது
மொழியே பல
ஆயிரம் கதை
பேசிடும் உதவும்
விழி வழியே"
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழி!
அடடா! வள்ளுவரின் கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்சொற்கள் என்ன பயனுமில என்னும் தேன் போன்ற வரியினை படித்தாற் போல உள்ளது.
இந்த நாளில் வந்த நியாபகம் எந்த நாளும் இனி மாறாதோ!
புலமை பித்தன் போய் விட்டார், அவர் சொன்னது படியே நாமும் இன்று வரிகளாலே வேண்டுகிறோம்
இந்த நாளில் வந்த நியாபகம் எந்த நாளும் இனி மாறாதோ! என்று
சிலர் தன்னை இளைஞராகவே காட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
சிலர் அருட்பழுத்த தோன்றத்துடன் புறப்படுகிறார்கள்.
பச்சை குழந்தை
பாடலுக்கு தவித்திருக்க
பெற்றவனை அந்த
பெருமான் அழைத்துவிட்டான்
கவிஞனையும் காலன்
வெல்கிறான்!
அக்கவிஞனோ
காலத்தையே
வெல்கிறான்!
புலமைப்பித்தனின் புலமையை போற்றி அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்...
வாழ்க கவிஞநின் மலர் பாதம்!
வாழ்க புலவன் புகழ் திறன்!
வாழ்க செந்தமிழ் சொல்லிசை!
வாழ்கஎம் புலவனின் மெல்லிசை!
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க புலவோர் வாழ்க!
குகன்
Tv..ரேடியோ ..நாளேடு என பிற எந்த ஊடகத்தைவிடவும் புலவருக்கு தென்றல் செலுத்திய
பதிலளிநீக்குபுகழஞ்சலியே உன்னதமாய் இருக்கிறது..
"சிலர் தன்னை இளைஞனாகவே காட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்..
சிலர் அருட்பழுத்த தோற்றத்துடன் புறப்படுகிறார்கள்...!"
மனதில் ஏனோ அம்பென பாய்ந்துவிட்டது.. இவ்வாசகம்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்....
பதிலளிநீக்கு"வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்.. காற்றில் ஏறி பயணம் செய்ய பாதை அங்கே இருக்கும்..!
பொன்னில் இன்பம் புகழில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும் - பூவை போல சிரிக்கும் உன்னை கண்டால் உண்மை விளங்கும்!
சிரித்துவாழ வேண்டும்! பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!"
என்றவரிகளில் கரைந்து போய் இதனை கண்ணதாசனால் மட்டுந்தான் எழுதியிருக்க முடியும் என்று ஆணித்தனமாக நம்பி இருந்தேன்.. ஆனால் இது புலமைபித்தருடையதே என நேரடியாக ஒரு விழாவில் அவர்முன்பு 'நெல்லை ஜெயந்தா' கூற கேட்டு நான் தோற்றபோது.. என் மனதை அவர் வென்றிருந்தார்!