அண்மை

பந்தா பரமசிவம் - சிறுகதை

 பந்தா பரமசிவம்



அக்ரஹாரத் தெருவில் இருந்து பரமசிவம் கால்நடையாக பேருந்து நிலையத்தை நோக்கி விறுவிறுவென சென்று கொண்டிருந்தார். முடித்துச் சொருகிய குடிமி அதில் நரைமுடியின் பலத்த பார்வை. நெற்றியை நிறைத்த வீபூதி, கழுத்தில் ருட்த்ராக்ஷ மாலையும் பனி வெள்ளை படிக மாலையும் ஒன்றை ஒன்று பிண்ணிக்கொண்டிருந்தது. மூக்கை முழுவதும் மூடிய முககவசம். கையில் மர புடி போட்ட குடை, இடையில் பட்டை கறை கொண்ட பட்டு வேஷ்டி. இப்படியான தோற்றத்தில் வந்த அவரை ஒரிரு பேர்  தலையசைத்து விசாரித்தபடி சென்றனர். இவரும் நலமுடன் இருப்பதாக தலையசைத்து புன்னகை பதில் தந்து சென்று கொண்டிருந்தார். 

பரமசிவம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதற்கு முன்பாகவே வழியில் பேருந்து வந்து விட்டதால் கையில் இருந்த குடையை நீட்டி பேருந்தை வழிமறைக்க பேருந்தும் நின்றது. கையில் வைத்திருந்த குடையை கக்கத்தில் சொருகிக்கொண்டு பேருந்தின் இரும்பு பிடியை இறுக்க பிடித்தபடி அவர் ஏற, பேருந்தின் பின் பகுதி சற்றே இறங்கி ஏறியது. உடனடியாக படிகளுக்கு முன்புறமாக இருக்கும் இருக்கையில் அமர்ந்தார். இருவர் உட்காரும் அந்த இருக்கையில் முக்கால் வாசி இடத்தை பரமசிவத்தின் உடலே நிரப்பிக்கொண்டது. குடையை இரு கால்களுக்கும் இடையில் சாய்த்து வைத்தார்.  பேருந்தும் கிளம்பியது. நடத்துனரிடம் பயண சீட்டை பெற்றுக்கொண்டு, நடத்துனர் கொடுத்த மீதி சில்லறையில் அந்த பயணசீட்டை சுற்றி சட்டை பையில் போட்டு ஒருமுறை அதை தொட்டு உறுதிபடுத்திக்கொண்டார். 

பின்பு, கழுத்தை நிமிர்த்தியபடி யாரையோ தேடினார். ஒரு சில அறிந்த ஜனம் அகப்பட்டாலும், முக்கியமான ஆளை காணாதவார் போல மேலும் தேடினார். இவருக்கு வலது புறமாகவே இவர் தேடிய ஆள் கையில் வண்ணதாள் சுற்றியதொரு பெட்டியை மடியில் வைத்துக்கொண்டு சன்னல் புறமாக வேடிக்கை பார்த்த படி அமர்ந்து கொண்டிருந்தார். 


அவரை பார்த்த பரமசிவம்  தொண்டையை இருமுறை கனைக்க சன்னல் புறம் திருப்பியிருந்த தலையை பரமசிவம் பக்கம் திருப்பினார் அவர்; பரமசிவமோ கனைத்த மறு நொடியே சன்னல் பக்கம் திரும்பிக்கொண்டு அவரை அலட்சியம் செய்தார்.


பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பெருத்த கூட்டம் பேருந்தில் ஏறியது. பரமசிவத்துக்கு பழக்கமான ராமசாமியும் கூட்டத்தோடு கூட்டமாக ஏற முற்பட பரமசிவம் தன் வலது கையை இருக்கையின் மீதி இடத்தில் வைத்துக்கொண்டு ராமசாமிக்கு  சமிக்ஞை காட்டினார். உள்ளே வந்து ராமசாமியும் இவர் விட்டு வைத்த கால்வாசி இடத்தில் ஒடுக்கி உட்கார்ந்தார். அவரும் முதல் வேலையாக பயணசீட்டை வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார். பேருந்து மெல்ல வேகமெடுத்து செல்ல ராமசாமியும் மெல்ல பேச்சை தொடங்கினார்.


"ஐயா பாத்திங்களா பொம்பளைகளுக்கு பஸ்ல ஃப்ரீனு சொன்னது தான் போதும் ஒரே பொம்பளைங்க கூட்டம், பின்னாடி படியில கூட ஏற முடியல ச்சை.." 


"அவா ஆர்டர் போட்டுட்டா, அத தட்டாமா இவா பாலோ பண்ணுறா! உனக்கென்னவோய்"


"அது சரிதான். பேசாம தனியா ஒரு லேடிஸ் பஸ் விட்டு ஃப்ரீனு சொன்னா நல்லா இருக்கும். நம்ம தொல்ல இல்லாம போகலாம் பாருங்க!"


"ஏற்கனவே நட்டத்ல ஓடிண்டு இருக்கு! இதுல பொம்னாடிக்கு ஃப்ரீனு வேற சொல்லிட்டா!. நீரு தனியா வேற பஸ்விட சொல்றேளே?"


"நட்டத்துலயா!? என்ன சொல்றீங்க சாமி, எத்தன கோடி பேரு பஸ்ல போறாங்க வராங்க அது எப்படி நட்டம் ஆகும்?"


"அடோய்! ஒன்னுந்தெரியதவாவா இருக்கேளே, லேட்டஸ்டா கவர்மெண்ட் ஒரு அறிக்க விட்டுறுக்கா அதுல மொத்த தமிழ்நாடு கவர்மண்ட் பஸ் எல்லாத்து வரவு செலவையும் கூட்டி, ஒரு கிலோ மீட்டரா கண்வட் பண்ணி, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பஸ்சோட வரவு செலவு என்ன வருதுன்னு சொல்லிருக்கா. அதுல பாத்தேள்னா, வரவு முப்பத்து ஏழுரூபா அறுவது காசுதான், ஆனா செலவு தொண்ணூத்து ஆறுவா எழுவத்து அஞ்சி காசு!  அப்ப நட்டந்தானே வரும்!"


"ஓகோ… அப்ப இன்னும் கொஞ்ச நாள்ல பஸ் எல்லாத்தையும் நிறுத்தி புடுவாங்கனு சொல்லுங்க."


"அத எப்படி நிறுத்துவா! மக்களுக்கு பயன் தர திட்டம் இல்லியோ, அதுனால வேற ஏதாவது ஒரு வரிய ஏத்தி இத சரிகட்டிடுவா!  நம்மலால யாருக்கும் நட்டம் வர கூடாதுனு தான் இந்த பஸ்ல எங்க வீட்டு பொம்மனாட்டிகள ஏத்தின்டு வரல"


"ம்ம்… ஆமா முன்னாடியே கேக்கனும் நனச்சேன், எங்க பயணம்?"


"ரிலேஷன் மேரேஜ் ஒன்னு, அதுக்கான்டி போயின்டிருக்கேன்"


"வீட்டுகாரங்களையும் அழைச்சிக்கிட்டு போகலாம்ல?"


"அதான் சொன்னேனே! சிலர் தான் ஓசின்னோன ஊரே கூட்டின்டு கிளம்பிர்ரா" என்று கூறிக்கொண்டே ராமசாமியின் முகத்தையும் தாண்டி ஒரு முகத்தை பார்த்தார். அது வரையில் பரமசிவத்தின் முகத்தையே பார்த்துக் பேசிக்கொண்டிருந்த ராமசாமிக்கு, பரமசிவத்தின் தம்பி கணபதியும் பேருந்தில் அமர்ந்து வருவது தெரிந்தது. பேருந்தின் முன்பக்கம் கணபதியின் குடும்பமும் நிற்பதை கண்டு கொண்டார். 


பரமசிவத்துக்கும் அவர் தம்பி கணபதிக்கும் தங்களது பாட்டனாரின் பூர்வீக கோயிலின் அர்ச்சக பொறுப்பிற்கோர் பிரச்சினை. பரமசிவத்துக்கு நிலபுலன்களுக்கு பஞ்சம் இல்லாததால் தம்பியின் கையில் தான் பொறுப்பு சேரும் என்ற நிலை, ஆகவே கௌரவமாக பரமசிவம் நிர்வாகத்தை விட்டு கொடுத்துவிட்டார். ஆனால் பிரச்சினையின் காரணமாக தம்பியுடன் பேச்சு வார்த்தையை நிறுத்திக்கொண்டார்.


"கணபதி ஐயா… நல்லா இருக்கீங்களா?"

"ஷேமமா இருக்கேன்"


"என்ன கையில? கலர் ஜவுத்தாள் சுத்துன பொட்டி மாதிரி இருக்கு?"


"வெள்ளி குடம், மேரேஜ் ஒன்னு, அதான் கிஃப்ட் பேக் பண்ணி எடுத்துன்டு  போறேன்"


"சரிங்க.. சரிங்க.." என்று கணபதியை விசாரித்துவிட்டு பின், பரமசிவத்தை நோக்கி மெல்லிய குரலில்

 "ஐயா உங்க தம்பியும் அவர் குடும்பமும்…"


"ஆமா, அதே கல்யாணத்துக்கு தான் வரா"


"சரிங்க, உங்க கிட்ட தான் கார் இருக்கே அதுல போகலாம்ல?"


"அது… அது வந்து ஓய், ஒவ்வொரு குடும்பமும் கார் எடுத்துண்டு போனா எவளோ பொலியூசன் ஆறது! அதனால இது மாதிரி பஸ்சு டிரெயினு மக்களோட மக்களாக போறச்ச பொலியூசன் குறையறதாம். நான் இத சொல்லல ஓய்! சயின்டிஸ்டும் இதத்தான் சொல்லுறா!"

"ஆகா… சாமி, நீங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! 


எல்லாத்துலையும் நூறு பர்சன்டேஜ் கரக்டா இருக்குற ஒரே மனுசன் நீங்க தான் போங்க!"


முனவல் சிரிப்புடன் "அது யாருக்கும் உபத்திரவோம் செய்ய கூடாது பாருங்கோ. அது எவாளா இருந்தாலும் சரி, என்ன சொல்றேள்!?" என்றார்.


"வாஸ்தவமான வார்த்தை! சாமி" என்றார் ராமசாமி. சில நிமிடங்கள் இருவருக்கும் இடையில் வாய்மொழி ஏதும் இல்லாமல்  இருந்தது. ராமசாமி வேறு எதை பற்றி பேசலாம் என்றவாறு சிந்தித்துக் கொண்டே வந்தார். பேருந்து முக்கால் வாசி ஊரை கடந்து  பயணித்துக்கொண்டிருந்தது. சட்டென ராமசாமிக்கு ஒரு கேள்வி பொறிதட்டியது உடனே "இப்ப தமிழ்ல தான் அர்ச்சனை பண்ணனும்னு சொல்றாங்களே அது என்ன? அது... சரிபட்டு வருமா?" என்று பரமசிவத்திடம் கேட்டார்.


"சமஸ்கிருதத்துலே மந்திரம் ஓதுரதுனால, ஏதோ சுவாகா சுவாகானு சொல்லி ஏமாத்தின்டு இருக்கானு பக்தாலாம் நனச்சின்டு இருக்கா. இப்ப தமிழ ஓதுரதுனால அவாளுக்கும் புரியும், தமிழும் வளரும்! நேக்கு இதுல ஏதும் ஆட்சேபனை இல்ல ஓய், அரைகுறை கேஸ் தான் மாட்டிண்டு பேந்த பேந்த முழிக்க போறா" என்று தன் தம்பியை நோக்கி விழிகளை திருப்ப, அவரை காணமுடியாதவாறு பயணிகளின் கூட்டம் வழிமறைத்து நின்று கொண்டிருந்தது. இப்படியாக இவர்களது சம்பாஷனை இருக்கையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வாய்ப்பில்லாமல் பேருந்தில் நின்றுகொண்டு வந்தவர்களுக்கு சுவாரஸ்யமாக பொழுதை கடத்தியது. பேருந்தும் பேருந்து நிலையத்தில் வந்து நிற்க. உடனடியாக பரமசிவத்திடம் விடைபெற்றுக்கொண்டு ராமசாமி அடுத்த பேருந்தை பிடிக்க கூட்டத்தொடு கூட்டமாக அடித்து பிடித்து இறங்கினார். ஆனால் பரமசிவம், தன் தம்பியும் அவர் குடும்பமும் இறங்கி சென்ற பிறகு, தன் பூத உடலை கிளப்பிக்கொண்டு கடை தெரு பக்கம் ஊர்வலம் போனார். 


''அப்பா...பரமசிவா! கடை தொறந்து ஒரு வாரந்தான் ஆகுது; அதுவும் இந்த கொரோனா காலத்துல கடைய கடன உடன வாங்கி வச்சிருக்கேன்! யாவாரம் ஒன்னும் சரியில்ல. வரவங்க பூறா என்ன விட கஞ்சனா இருக்கானுங்க, எல்லாரும் டிஸ்பிளே-ல உள்ள விலைய பாத்துட்டு ஓடிடுறானுங்க. ஏகப்பட்ட கடன் அடைக்கனும் கொஞ்சம் கருண காட்டுப்பா? சொன்ன விலைக்கே வாங்குற மாதிரி மக்கள கூட்டிட்டு வாப்பா! நான் சொல்லுற விலைய ஒரு பர்சன்டேஜ் கூட குறைக்காம அப்படியே வாங்கிட்டு பேசாமா பொய்டனும். யாரும் வரலைனாலும் பரவாயில்லை. ஆனா கஞ்சத்தனமான ஆள மட்டும் வரவைக்காத, ஏன்னா வர விலைக்கே வாங்கிட்டு போயிடுறானுங்க. எல்லா கடையும் பத்து மணிக்குத்தான் தொறக்குறாங்க, நான் ஏழு மணிக்கே தொறக்குறேன். நல்ல வழி காட்டு" என்று புலம்பிய படியே சிவபெருமானின் புகைப்படத்துக்கு முன் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தார் புதிதாக நகை கடை திறந்திருந்த பெருமாள்.

 

நடைபயணமாக வந்த பரமசிவம். அந்த கடையின்  படியில் ஏறிக்கொண்டே தொண்டையை கனைத்தார். அவரை கண்ட உடனேயே கடைக்காரர் "வாங்க… வாங்க… உட்காருங்க.." என்று நாற்காலி இழுத்து போட்டார். "என்ன வேணும் சார்?" என்றார் பணிவுடன்.


"ஒரு காஸ்ட்லியான வெள்ளி குடம் எடுத்து தாங்கோ"


"ஒரு ஏழாயிரத்த தாண்டியா சார்?"


"ம்ம்.. ஒரு பத்தாயிரத்துக்குள்ள வர மாதிரி எடுத்து காட்டுங்கோ? கல்யாணத்துக்கு வச்சி தர மாதிரி; நன்னா காஸ்லியா!"என்றார் பரமசிவம். 


உடனே உள்ளே சென்று மூன்று விலைமதிப்பு உள்ள குடங்களை கடைக்காரர் எடுத்து வந்து பரமசிவத்திடம் காட்ட அதில் ஒன்பதாயிரம் விலையுள்ள குடத்தை பரமசிவம் தேர்வு செய்தார். "உ. பரமசிவ ஐயர்னு நல்லா கொட்ட எழுத்தா அடிங்கோ",


"ஐயா அதுக்கு தனி காசு. கிப்ட்டும் பேக் பண்ணி தந்துடுறேன்",


"எவ்வளோ ஆனாலும் பரவாயில்ல, பெயர மட்டும் நன்னா போடுங்கோ"


உடனே பரமசிவத்தின் தொலைபேசி ஒலித்தது. அதை எடுத்து காதில் வைத்தார்.


"ஏன்னா நான் வர்ரத்துக்குள்ள போயிட்டேளா? எங்க இருக்கேள்?"


"வெள்ளி குடம் வாங்க வந்தேன்!"


"என்ன சொல்றேள்! ஏதாவது கிப்டு வாங்கி வக்கிறதாள்ள சொன்னேள்?"


"சொன்னேன் டி, ஆனா அவன் வெள்ளி குடம் வாங்கி வைக்குறதா இருக்கான். அதான் நான் அவன விட காஸ்ட்லியான குடமா வாங்க வந்தேன்"


"சரின்னா, பாத்து வாங்குங்கோ, கொஞ்சம் காத்திருந்தேள்னா சேந்தே போயிருக்கலாம்.சரி... நானும் ஐஷூவும் பஸ் டான்டுல தான் நிக்கிறோம். இப்ப வர பஸ்ல ஏறி வந்துடுறோம்"


"இல்ல, வேணாம்டி நான் ஏறி வந்த பஸ் ரிட்டன் வருது அதுல ஏறின்டு வா


"இப்ப வரதுல ஏறி வந்துடுறேன்னா"


"ஏ மண்டு, சொல்றத கேளுடி அந்த பஸ்ல வந்தா ஆளுக்கு இருபத்து அஞ்சிரூபா ஆகும். பேசாம ஆத்துக்கு போய். அந்த பஸ் வர நேரத்துக்கு பஸ்டான்டுக்கு வா!"

"ஏற்கனவே கல்யாணத்துக்கு நாழி ஆயிடுத்துன்னா!"


"காசென்ன ஒன் தோப்பனார் ஆத்து மரத்துலயா காய்கறது? அஷடு சொல்லுறத கேளுடி" என்று சொல்லி அழைப்பை துண்டித்தார்.

பரமசிவம் பேசியதை கேட்ட கடைக்காரர்,  "ஆயிரமா செலவு செய்றவனும் சில்லறைக்கு கஞ்சபுடி கட்டுவான் போல, இவனுக்கு நேத்தி குடம் வாங்குனவரு தேவலாம் " என்று தன் மனதில் நினைத்தபடியே 'உ பரமசிவ ஐயர்' என்று பாத்திரத்தில் பெயரடிக்கத் தொடங்கினார்.


வேண்டியதை நிறைவேற்றிய பரமசிவம் ஆடாமல் கடை சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தார். 


குகன்


3 கருத்துகள்

  1. என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால் இதனை குறும்படமாக எடுக்க முயலுங்கள்.. சர்வலக்ஷணங்கள் பொருந்திய நாடக பாங்கு இழையோடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கதையை மீண்டும் இதழில் மறுஒலிபரப்பு செய்யலாம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை