குறுந்தொகை 19
இனி நான் யாரோ?
அன்றைய இரவு, வானில் மின்னல் கீற்றுகளின் கிறுக்கல்கள். அதனால் ஏற்பட்ட இடியின் ஒலி 'எமெரைட்ஸ்' விமானத்தில் சென்று கொண்டிருந்த பரணிக்கு இம்மி அளவும் கேட்கவில்லை. நல்லத் தூக்கம்; குளிர்தாங்கமல் கம்பளி போர்வையை உடலில் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து கண் திறந்தான். எதிர் நாற்காலியின் பின்புறம் அமைக்கப்பட்ட டிஸ்பிலேயில் விமானம் துபாயில் தரையிறங்க ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதை காட்டியது. சிசேல்ஸ் தீவிலிருந்து விமானத்தில் துபாய் செல்ல நாலரை மணி நேரம்தான் ஆனாலும் அந்த நேரம் அவனுக்கு விரைவாக கழியவில்லை. அந்த தீவுக்கு அவன் சென்று இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஒப்பந்தத்தின் படி சென்ற அவன் இரு மாத விடுமுறையில் தாய்நாடு செல்கிறான் - மீண்டும் இரண்டு ஆண்டுகள் அங்கு சென்று வேலை பார்க்க வேண்டும். அங்கு சூப்பர் மார்கெட்டில் கணக்கு எழுதும் வேலை பார்த்தாலும் மற்ற எடுபுடி வேலைகளையும் அவன் செய்து தான் ஆகவேண்டும். ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த தீவில் அவனுக்கு துணையாக ஒரு பத்தாயிரம் தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் நம் ஊரை விட, அந்த தீவில் வேலை செய்து பெறும் சம்பளம் அவனுக்கு அதிகமாகவே தோன்றியது. அதனாலே அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்து போனது. இப்போது கூட அரை மனதுடன் தான் ஊருக்கு செல்கிறான்.
துபாயில் விமானம் தரை இறங்கியது. ஒர் இரண்டு மணிநேரக் காத்திரப்புக்கு பிறகு மீண்டும் சென்னை செல்லும் விமானத்தில் பரணி ஏறியாக வேண்டும். அந்த நேரத்தில் தன் தந்தையிடம் பேச அவருக்கு செல்பேசி மூலம் அழைப்புவிடுத்தான்.
"ஹலோ அப்பா. நான் பரணி பேசுறேன்!"
"ஏளா, நீ எப்ப வருத?"
"இப்ப தான்பா துபாய் வந்துருக்கேன். இன்னும் இரண்டு மணிநேரம்...
சரியா ஒரு பன்னன்டு மணிக்கு பிளைட் ஏறி அங்க விடிகால அஞ்சி மணிக்கு வந்துடுவேன்!"
"சரிளா நான் விடிகால வந்து நிக்கேன்!.. நீ பைய வா"
"சரிங்கப்பா நான் வச்சிடுறேன்" என்று அழைப்பை துண்டித்தான். பின்பு தன் மனைவிக்கு கால் செய்தான்.
"எங்க தூங்கிட்டாளா?"
"ஆமா.. தூங்கவச்சிட்டேன். எத்தன மணிக்கு வறீங்க?"
"ஏர்போட்க்கு அஞ்சி மணிக்கு வந்துடுவேன் அங்க வர சாயுங்காலம் ஆகிடும். சரி நீ தூங்கு"
"ம்ம்…" இப்படியாக உரையாடல் முடிந்தது. இரண்டு மணி நேர முடிவில் சென்னை செல்லும் விமானத்தில் ஏறி புறப்பட்டு ஐந்து மணிநேர பிரயாண நிமிர்த்தமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தான். வெளியில் பரணியை எதிர்பார்த்து அவன் தந்தை வீரையன் காத்திருந்தார். பரணி விமானநிலயத்தை விட்டு வெளியே வந்தான். பரணியின் பார்வைக்கு அவன் தந்தை சற்று பொதுக்கனாகவே காணப்பட்டார். அவனை கண்ட வீரையன், தன் பெருத்த உடலை அசைய செய்து அவனிடம் ஓடிச்சென்று கட்டித் தழுவினார். மயிர்சிறைக்கப்பட்ட இவனது மொலுமொலு கண்ணத்தில் அவரது முறுக்கு மீசை குத்தியது. மேலும் அவன் கண்ணத்தில் முத்தியும் கொடுத்தார். பின்னர் அவனது பெட்டிகளை எல்லாம் ஓட்டுனர் உதவியுடன் காரில் வைத்தார்.
கார் கிளம்பி அருகில் இருந்த தேநீர் கடையில் நின்றது ஓட்டுனர் உட்பட மூவரும் தேநீரை சுவைத்தனர். பின் தந்தையும் மகனும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க ஓட்டுனர் மட்டும் கீழே ஏதோ தேடிக்கொண்டிருந்தார். "ஏலே என்னத்த தேடுத? தொறவாவ தொலச்சிட்டியா?" - "துறவாவா?" ; "சாவியத்தான் அப்பா அப்புடி சொல்லுறாரு!" - "ஆமாங்கையா" மூவரும் தேடி ஒரு வழியாக சாவி கிடைத்தது. திருநெல்வேலியை நோக்கி வண்டியும் பயணிக்க ஆரம்பித்தது. வண்டியின் புகைவாடையும் வெயிலின் வெப்பமும் தேநீரின் பிரட்டலும் அவன் உடலை என்ன என்னவோ செய்ய ஆரம்பித்தது. அனைத்தையும் கண்களை முடி பொறுத்துக் கொண்டு வந்தான். 'கோட்டி கார பைய எப்புடி குறுக்கால வாறான் பாரு' என்ற சத்தம் கேட்ட திடுக்கிட்டு எழுந்தவன் எதிரில் வரும் வாகனத்தை தந்தை திட்டுகிறார் என்று அறிந்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டு வந்தான். ஓட்டுனருக்கு வீரையனின் பாஷை சற்று புரியாததாகவும் கேளிக்கை பேச்சாகவும் இருந்தது. இப்படியாக மாலை நேரம் பரணி தன் ஊரை அடைந்தான். பரணியை வீட்டுக்குள் செல்ல சொல்லிவிட்டு பெட்டிகளை இறக்கி வாடகை காருக்கு பணம் தந்து கொண்டிருந்தார் வீரையன்.
வீட்டுக்குள் சென்ற அவனை தாயும் மனைவியும் புன்முகத்துடன் வரவேற்க அவன் உடல்நிலை சற்றே சீரானது போல இருந்தது.
வேகமாக அறையின் உள்ளே சென்று தூளியில் தூங்கி கொண்டிருந்த குழந்தயை முதன் முறையாக நேரில் பார்த்தான். ஏதோ இனம் புரியாத ஒர் இன்பம். இதற்கு முன்பு திறன்பேசி வழியே பார்த்திருந்தாலும் நேரில் பார்க்க அந்த குழந்தை அவன் காதல் மனைவியின் முகம் ஜாடையை ஒத்திருந்தது. பின்னர் சென்று குளித்து விட்டு வந்து அம்மா சுட்டு வைத்திருந்த இரண்டு தோசையில் வெறும் இரண்டே வாய் வைத்துவிட்டு பயண களைப்பால் கண்ணயர்ந்தான்.
மறுநாள் காலை பரணி வந்திருக்கும் செய்தி தெருவாசிகள் அறிந்து 'வெளிநாட்டு பண்டம் வீட்டுக்கு வரும்' என்றவாறு காத்திருந்தனர். சில பெண்களும், பெருசுகளும் 'கோடாரி தைலத்தை' எதிர்நோக்கி காத்திருந்தனர். கண்விழித்தவன் முகத்தை கழுவிட்டு முதல் வேலையாக சாக்லேட் மற்றும் தைல பாட்டில்களை வீடுவீடாக கொடுக்க பிரித்து வைத்து பின்னர் அவற்றை தெருவாசிகளிடமும் தெரிந்த நண்பர்களிடமும் கொடுத்தான். அன்றைய நாள் அவனுக்கு மற்றவர்களை குசலம் விசாரிக்கவே சரியாக இருந்தது.
இரவு தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தான் ஒரு விசயம் அவனுக்கு பொறிதட்டியது. வந்ததிலிருந்து அவன் மனைவி இவனிடம் பெரிதாக ஒன்றும் பேசாதது. அவள் கோபத்தில் இருப்பது போலவும் அவனுக்கு தெரியவில்லை.'என்னதான்னு கேட்டுடுவோம்' என்று நினைத்துக்கொண்டு அவளிடம் விஷயத்தை கேட்டான். அவளோ இவன் கையில் இருந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெளியே உள்ள மாடிக்கு சென்றாள்.
"மச்சிக்கு பாத்து போமா" என்று சாய் நாற்காலியில் சாய்ந்தபடியே வீரையன் சொன்னார். பரணியை கண்டவர் ''எளா அவ உங்கிட்ட சரியா அலத்துறாளா? இல்லியா?"
"ஹான்.. பேசாறாப்பா ஏன்? எதுக்குகேக்குறீங்க!?"
"இல்லளா... அவ ஏதோ உள்ளுக்குள்ள அமுக்கிகிட்டு இருக்குதா அடுத்த மாசம் சோலிக்கு போறத்துக்குள்ள விசயத்த சரிபண்ணு புரவாட்டி பண்ண முடியாது"
"சரிப்பா" என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து சிந்தித்தான். ஒன்றும் பிடிபடவில்லை. சட்டென எழுந்து மாடிக்கு சென்றான்.
பிள்ளை அவள் தோளில் சாய்ந்து தூங்கி விட்டது. பரணியை பார்த்த அவள் சற்றே விலகி நடந்தாள்.
"முல்லை.. ஏன் என்ட சரியா பேச மாட்டுற!? அப்பா என்னனா ரொம்ப நாளாவே நீ இப்புடித்தான் இருக்கனு சொல்லுறாரு! என்ன தான் உன் பிரச்சினை?" என்று சொல்லிக்கொண்டே அவள் அருகே சென்றான். மேலும் "உனக்கும் நம்ம புள்ளைக்குதான நான் நாடு தாண்டி போய் கஷ்டப்படுறேன்… நீ என்னனா?" என பேச்சை தொடர "நீங்க கஷ்ட படுறீங்க நான் இல்லனு சொல்லல ஆனா நான் இங்க தினம் தினம் கஷ்டபடுறேனே அது உங்களுக்கு புரியலையா?" என குறுக்கிட்டாள். சற்றே அமைதி நிலவியது.
"அம்மா ஏதாவது?" என்றான்.
"அதான கடைசி வரைக்கும் நீங்க தான் காரணம்னு ஒத்துக்க மாட்டுறீங்க?"
"ஏ… நான் என்ன பண்ணுன?"
"கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துல என்ன விட்டு போனீங்க… இப்ப தான் வரீங்க - சரி இனிமேலாவது என்னோட இருப்பீங்கனு பாத்தா அடுத்த மாசம் கிளம்புறீங்க? ; எங்கயாவது விசேசம் நடந்தா எல்லா தான் புருஷனோட வராங்க நான் மட்டும் தனியா போக வேண்டி இருக்கு. நம்ம பிள்ளை பொறந்ததுக்கு பக்கத்துல இல்ல.. இன்னும் நிறைய இருக்கு உள்ளுக்குள்ள..." என கண்களின் நீர் பெறுக கூறினாள்.
"ஏ என் நிலம அப்புடி. இந்த நாட்டுல வேலைக்கு போய் ஒன்னும் கட்டுபுடி ஆகாது எல்லாம் நம்ம குழந்த எதிர் காலத்துக்கு தான்! சொன்னா புரிஞ்சிக்க!"
"இனிமே நீங்க இங்கையே இருங்க. ஏதாவது தொழில் பண்ணி பொழச்சிகலாம். காசு தான் முக்கியம்னு போனீங்கன்னா என்னையும் பிள்ளையையும் மறந்துடுங்க!" என்று சொல்லி பிள்ளையின் முதுகை தாங்கி பிடித்தபடி வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள்.
பரணி முன்பே முடிவெடுத்துவிட்டான். வெளிநாட்டில் வேலை பார்க்கும் முடிவை அவன் மாற்றிக்கொள்வதாக இல்லை. அதே சமயம் முல்லை கூறிய வார்த்தைகள் இவன் மனதை காயப்படுத்தியது.
ஒரு மாத காலம் சென்றது. எப்படியும் நம் வழிக்கு அவளை வர வைத்து விடலாம் என்று யோசித்த பரணிக்கு ஏமாற்றமே!. இவனிடம் அவள் எதிர் வாதம் கூட வைக்கவில்லை - தன் முடிவை முன்பே அவள் கூறியதால்.
அன்று காலை வாடகை கார் அவன் வீட்டு வாசலில் நின்றது இவனை சென்னை விமான நிலையம் அழைத்து செல்ல.
இவனும் தந்தை, தாயிடம் ஆசிர்வாதம் பெற்றான். தன் அறையில் மெத்தையின் மீது படுத்திருந்த பிள்ளையின் கண்ணத்தில் முத்தமிட்டு அங்கு நின்ற தன் மனைவியிடம் பேச முற்பட்டான். அவளோ குளியல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
உடனே அங்கிருந்து சோகத்துடன் வெளிவந்தான்.
"ஏளா அவ கிட்ட சொல்லிட்டியா?"
"சொல்லிட்டன்பா"
"அப்ப பொரப்படுளா"
என்று கூறினார் வீரையன்.
காரின் சன்னலின் ஓரத்தில் வருத்துடன் அமர்ந்து சென்றான் பரணி. 'இனி ரெண்டு வருசம் கழிச்சி தான் இங்க வருவோம். அவ நம்மல புரிஞ்சுக்க மாட்டுறா! யாரோ மாதிரி நடந்துக்குறா! துக்கத்துனால ஏதாவது… இனி நமக்கு அவ என்ன உறவோ? நாம அவளுக்கு ஒரு அன்பான புருசனா இல்ல காசுகாக குடும்பத்தை தவிக்கவிட்டு போற ஒரு கொடுறனா இல்ல யாரோ ஒருத்தனா? ஐயோ…!
மனசே ஏன் இன்னும் நடிக்கிற? நல்லா அழு இன்னும் நல்லா வருத்தப்படு'என்று தன் நெஞ்சுக்கு ஆறுதல் தேற்றாமல், தானே துக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வைத்தான்.
குகன்
குறுந்தொகை 19
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
பரணர்
"எங்க தூங்கிட்டாளா? "
பதிலளிநீக்குஎன்ற சிறிய வார்த்தை மூலமே பிள்ளை இருப்பை புரிய வைத்த ஆசிரியருக்கு நூறு வராகன் கொடுக்கலாம்.
நன்றி தோழரே!
நீக்குகுகனின் குறுந்தொகை படைப்புகளுள் இது ஒரு master piece
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா
நீக்குசிறுகதை போட்டிக்கு பாயின்ட் தேடி கொண்டிருந்தேன்.இதையே ஒரு முடிச்சாக எடுத்துக்கொன்டேன்.
பதிலளிநீக்குஇதுவரை எழுதிய எல்லாமே இனிமை.எதிர்காலம் உறுதியாக உண்டு.
நன்றி...
நீக்கு