முதல் பாகம் - புகைக்கூண்டு
12) பிச்சாடனார் பிரவேசம்
பாதாள உலகம்...!
தரையிலிருந்து ஈராயிரம் அடிஆழத்தில் அல்ல.. வெறும் இரண்டடி ஆழம்தான். செறிந்த ஈரமண் நிறைந்த இருண்ட பகுதியின் ஊடாக பல்வேறு மரஞ்செடி கொடிகளின் வேர்கள் ஊடுருவி போய்க்கொண்டிருந்தன.. சில ஆழம்நோக்கி விரவின சில கிடைமட்டமாக விரவி ஓடின. அரிதாக சில மேல்நோக்கி ஓடி மறைந்து சிறிதுதூரத்தில் மீண்டும் புவியாழம் நோக்கி சீராக புகுந்து வந்தன.. அந்த வேர்களை போன்றே சில தாவரங்களின் தண்டுகளும் மண்ணுக்கடியில் போவதும் பிறகு மேலெழுந்து கிளைத்துவிட்டு சற்றுதள்ளி மறுபடியும் மண்ணுக்குள்ளேயே வருவதுமாக பரவி ஓடின. அதனால் அவற்றுக்கு 'தரைகீழ் ஓடுதண்டு' என்றே பெயர்!
அந்த உலகத்தை பொருத்தவரை ஒளி இருள் என்ற பாகுபாடு கிடையாது.. எப்போதாவது திடீரென தோன்றும் துவாரங்களால்.., நில விரிசல்களால்.. ஒளி உட்புக நேரிடலாம். ஆனால் பாவம்..! அதை காண்பதற்கு அங்கு வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளுக்கு நான்காவது அறிவான கண்பார்வை கிடையாது.
என்றாலும் எல்லா ஜீவராசிகளை போல அவற்றினாலும் வெப்பம் எது குளிர்ச்சி எது என்பதனை பகுத்துணர முடியும். பகல்பொழுதில் அவ்வுலகம் வெப்பமாகவும் இரவில் குளிரையும் அவை கொண்டிருக்கும். ஆனால் அடி ஆழம் செல்ல செல்ல வெப்பநிலை மாறுபடுவது உண்டு..!
எத்தனையோ எறும்பின் வகைகள், பலவண்ண சிறுபாம்பின் வகைகள், தேள் , பூரான் முதலான கணுக்காலிகளின் கடைக்குட்டி இனங்கள்.. தேரைகள், பாதாள எலிகள் என இன்னும் எத்தனை எத்தனை ஊருகின்ற போழ்திலும் மண்ணுக்கு கீழ் வாழும் மகாராஜா யாரெனில் அது மண்புழு தான்!
மண்புழுக்கள் வளைதசை உடலிகள்.. கண்டம் கண்டமாக உடலை கொண்டவை அதிலும் ஒவ்வொரு புழுவின் உடலிலும் ஆண் - பெண் என இருபாலின அங்கங்களும் உடைய அதிசயமான ஒற்றை உயிரினம்! ஆயினும் அது இனப்பெருக்கத்திற்கு இன்னொரு மண்புழுவின்துணையை கட்டாயம் எதிர்நோக்கித்தான் ஆகவேண்டும்..!
இன்னொரு அதிசயமும் உண்டு... எப்படி பல்லியின் வால் துண்டானால் அது மறுபடி வளர்ந்துவிடுகிறதோ அது போல மண்புழுவின் உடலும் சேதமானால் மீண்டும் வளர்ந்துவிடும்..! சில அரியவகை மண்புழு இனங்களில்
தலைவெட்டுபட்டால் கூட திரும்ப வளர்ந்துவிடுகிறது..! அதைவிட நம்பமுடியாத ஒன்று என்னவெனில் துண்டான ஒவ்வொரு உடல்கண்டமும் நாளடைவில் ஒவ்வொரு தனிமண்புழுவாக ஊருவெடுத்து ஓடுமாம்..! ஒரு அப்பாவி ஜீவனுக்கு இயற்கை அள்ளி வழங்கியிருக்கும் வரம்தான் உண்மையில் எத்தனை மகத்துவமானது.. பார்த்தீர்களா!!
இதோ.... வெளிச்சம் புகாத இருண்ட இடத்தை துளைத்தபடி ஒரு மண்புழு நகர்ந்தவண்ணம் இருக்கிறது.. அடடா மண்புழுவின் இயக்கமும் தான் எத்தனை விசித்திரமாய் இருக்கிறது..! சித்தர்கள் போற்றும் அட்டமா சித்திகளுள் அணிமா மகிமா என இரண்டு உண்டு.. உடம்பை வேண்டிய மட்டும் குறுக்கி சிறிதாக்குவது ( அணிமா = அணுவாக்குதல்). மற்றொன்று உடம்பை பேருருவாக நீட்டிக்கொள்வது (மகிமா = மகா பெரிது).
இவ்விரண்டையும் தன் அன்றாட இயக்கத்தில் இந்த அற்ப மண்புழு அநாயசமாக செய்துகொண்டு முன்னேறுகிறதை என்னவென்றுரைப்பது?. அதன் உடலின் முதல் சரிபாதி இயக்கமின்றி இருக்க.. பின்பாதி மிகமிக குறுகி நெருங்கி சிறிதாகிறது.. பிறகு முன்பாதி நீண்டு முன்னேறும்போது சுருங்கிக்கிடந்த பின்பக்கம் அடேயப்பா இன்னொரு முழு மண்புழுவின் அளவிற்கு நீண்டுகொண்டுவிட்டதே..!!
பின்புறம் நீள நீள,, அங்கே இப்போது முன்பாதி உடற்கண்டங்கள் சுருங்கி நெருங்கி சிறிதாகி போயின... இவ்விதமாக அது உடலை நீட்டி முடக்கி குறுக்கிமடக்கி நகர்வதை நோக்கினால்.. வெறும் ஓரடி தொலைவை கடக்கவே அது ஓரிருநிமிடங்கள் எடுத்துக்கொள்ளுமோ என தோன்றும். அது உண்மைதான். ஆனால் அந்த ஒருநிமிடத்தில் அது ஆற்றுகிற மகத்தான பணிகள் எத்தனை எத்தனை தெரியுமா..?
மண்ணைத் துளைத்தவண்ணம் அது நகர்ந்து போவதால் அங்கே ஒரு துளை உண்டாகிறது. இந்த துளை இடைவெளியில் அவசியமான காற்றோட்டமும்.. போதுமான ஒளியூட்டமும் கிடைக்கிறது! அந்த மண்புழு என்னவோ ஒளியை விரும்பாதுதான்... என்றபோதும்,, நுண்ணோக்கி கொண்டு நோக்கினாலும் நோக்க அரிதானவையாய் அம்மண்ணிலேயே இரண்டற கலந்துவாழும் நுண்ணுயிர் ஜந்துக்களாம் பூஞ்சைகளுக்கும் அடிமண் பாசிகளுக்கும் காளான்களுக்கும் ஆதிதோற்றமாம் ஒரு செல் ஜீவராசிகளுக்கும் சில நன் நுண்மிகளுக்கும்..
இந்த காற்றோட்டமும் ஒளியூட்டமும் அதிஅத்யாவசியமாகும்!
மேலும் இந்த இடைவெளி மண்ணின் இறுகதன்மையை குறைத்துவிடுவதால் தாவரவேர்களும் சுலபமாக விரவிபடர இடமளிக்கிறது.
அதனோடு அந்த மண்புழு வெறுமனே மண்ணை நகர்த்திவிட்டு மட்டும் போவதில்லை.. மண்ணை விழுங்கி சாப்பிட்டவாறு போகிறது.. மண்ணோடு இறந்து அழுகிசிதைந்த தாவர கழிவின் மட்கிய இலை எச்சங்களும் அதன் வாய்வழி நுழைந்து வயிற்றில் செரித்து பின்புறமாக வெளியேறிவிடுகிறது. உலகில் ஜனித்த எல்லா உயிரினங்களும் உணவை உண்டு கழிவை வெளியேற்றும்... ஆனால் மண்புழு ஒன்றுதான் கழிவை தின்று உணவை வெளியேற்றுகிறது..!! அதுவும் சகலஜீவன்களுக்கும் உணவளிக்கும் தாவரங்களுக்கே மண்புழு தான் உணவளிக்கிறதாகிறது..! மற்றபடி நீர்கூட அதை வேருக்கு கடத்துகிற ஒரு ஊடக சாதனம் போலத்தான். ஆக, தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் மண்புழுக்களின் பங்களிப்பு ஐயத்திற்கிடமின்றி அளப்பரியது.
இவ்விதம் தன் உலகியல் கடனை ஆற்றியவாறு நகர்ந்து போய்க்கொண்டிருந்த அந்த புழுவிற்கு திடீரென மூச்சு தட்டியது!
தன் இயக்கத்தை நிறுத்தி அது திகைத்தது. புழுவுக்கே அச்சமயம் சற்று புழுக்கமாய் தோன்றியது! அட ஆமாம் நிஜமாகவே திடீரென காற்றோட்டம் குறைந்திருக்கிறது.. ஐயோ..! மூச்சு திணறல் அதிகரிக்கிறது -அந்த மண்புழுவிற்கு.! ஒன்றை கவனியுங்கள்... நம்மைப் போல மண்புழுவிற்கு நுரையீரல் சுவாசம்கிடையாது... அது தோல் மூலம் சுவாசிக்கும்! நீருக்குள்ளும் தாக்குபிடிக்க அதனால் இயலும்.. ஆனால் நீண்ட நேரத்திற்கு முடியாது! அடடா..! அது பயந்தவாறே குபு குபுவென எங்கிருந்தோ நீர்உட்புகுகிறதே..
முதலில் அது உண்டாக்கிய துளைவழியாக ஊடுருவிய நீர் பிறகு படிபடியாக அந்த முழு மண்ணுலகின் மேற்பரப்பிலிருந்து சலியத்தொடங்கியது.. நீர் இல்லாத இடமாக பார்த்து துளைத்துக்கொண்டு போகமுயன்றும் பயனில்லை.. நீர் திடீரென அபரிமிதமாக உட்புகுந்து பாய்கிறது. மண்புழுக்கள் பொதுவாக எறும்பை போல மழைவருவதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் உடையவை. மழை ஒருபோதும் இப்படி ஒரேயடியாக நீரை பூமிக்குள் பாய்ச்சிவிடாது. ஒருவேளை இப்போது ஆற்றுப்பெருக்கோ வெள்ளமோ உண்டாகியிருந்தால் இப்படி ஆகக்கூடும்! அதுசரி இதையெல்லாம் சிந்திக்க அந்தபுழுவுக்கு ஏது அவகாசம்..? அதீத சேற்றுநீரும் கூட அதற்கு ஆபத்துதரும். ஆதலால் அது நீரோடு போராடி பாதாளத்திலிருந்து மேலே கிளம்பி வந்தது.. சொல்லப்போனால் அந்த நீர்ப்பெருக்கே அந்த புழுவை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவந்து சேர்த்தது. மேலே வந்த பிறகு ஓரளவு சுவாசம் சீரானது. ஆனால் உடலை பொசுக்குகிற பளிச் வெயிலை அது எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அந்த புழுவை போலவே இன்னும் சில புழுக்கள் தரைக்குமேல் வந்து துடித்துக்கொண்டிருந்தன.. தரைபரப்புநிலம் மிக ஈரமாய் இருந்தாலும் தண்ணீர் அவ்வளவாக தேங்காமல் பூமி உறிஞ்சிவிட்டது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வந்தது? வெளியில் வெயில் அல்லவா பொசுக்கி வாட்டுகிறது.. மண்புழுக்கள் மண்ணுக்குள் அசாத்தியவேகத்தில் ஊடுருவிவிடும்.. அதன் வழவழப்பான உடல் திரவமும் மிகநுண்ணிய மயிர்க்கால்களும் அதனை நேர்த்தியாக உராய்வு ஏற்படுத்தி முன்னேறிட வாய்ப்பளிக்கும். எனினும் தரைப்பரப்பில் அவற்றால் அத்தனை வேகமாக நகர முடியாது. உடலை சுருக்கி விரித்து அது நகருவதற்கு மிகவும் சிரமப்படும்..!
எலும்பு இல்லாத கொழகொழப்பான சதைப்பிண்டம் ஒன்று உருண்டு புரள்வதை சட்டென மோப்பம் பிடித்த சில சிவப்பெறும்பு கூட்டம் திரண்டு வந்து உயிரோடு அதை கடித்து மொய்த்து மேலும் துன்பப்படுத்தியது..!
அந்த புழு துடிதுடித்தது..!
********. ********. *********
"பதுமா..! அந்த நீரை இங்கு கொண்டுவா..!"
"ஏன் தாத்தா? இப்போது தான் அந்த செடிக்கு ஒரு பானை நீரை முழுதாக ஊற்றினேன்..? போதாது என நினைக்கிறீர்களா..?"
"செடிக்கு அதுவே போதும் தான்..!. ஆனால் இன்னொருவருக்கு அது.. இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது.! கொஞ்சம் விரைந்து எடுத்துவா!" வேதியர் உதிர்த்த வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பதுமன் கையிலிருந்த ஒரு பானை நீரை சிரமப்பட்டு எடுத்துக்கொண்டு 'அவரைசெடி'யின் அருகில் அமர்ந்திருக்கும் அவரை நோக்கி வந்தான்.
"இதோ.. முழுதாக நிரம்பியிருக்கிறது தாத்தா! நானே ஊற்றிவிடவா? "
"இல்லை..! இல்லை! அவ்வளவும் தேவை இல்லை.. அதை இப்படி என்னிடம் கொடு!"
பானை ததும்ப இருந்த நீரில் ஒரு கையை விட்டு, அளாவி மொண்டு.. சிறிதளவு நீரை அங்கே அவரைசெடி அருகினில், தரையில் எறும்புகளிடம் சிக்கி துடித்துக்கொண்டிருக்கும் அந்த மண்புழுவின் மீது வேதியர் ஊற்றினார்... அவர் அப்படி செய்ததும் எறும்புகள் எல்லாம் விறுவிறுவென கலைந்து ஓடின.. மண்புழு ஓரளவு நிதானம் அடைந்தது. பிறகு வேதியர் சிறிதாக கையினால் ஒரு குழிபறித்து அதில் இந்த புழுவை எடுத்து விட்டுவிட்டு அதை மண்ணை நிரப்பி மூடிவிட்டார்.. இன்னும் அருகில் சில புழுக்கள் இவ்வாறு துடித்தபடி இருந்தன அவற்றுக்கு நிலத்தில் எளிதாக புகுவதற்கு வசதியாக சிறுகுச்சி ஒன்றை எடுத்து ஈரமான அந்த இடத்தை குறுக்கும் நெடுக்குமாக உழுவதுபோல கீறிவிட்டார். அவர் நினைத்தபடி அவை ஒவ்வொன்றாக அந்த கீறுண்ட மண்தடம்வழியாக எளிதாக மறுபடி தரைக்குள் புகுந்துபோயின..
இதை அப்படியே கவனித்து பார்த்தபடி இருந்த பதுமன் வேதியரிடம்..
"இதெல்லாம் என்ன தாத்தா..? எதனால் இப்படி நேர்ந்தது..?"
"பழக்கம் இல்லாத உன்னிடம் நான் பணி ஏவியதன் பிழையால் வந்தது!"
"ஐயோ! நான் ஏதும் தவறாக செய்துவிட்டேனா தாத்தா? பிழை என்று தாங்கள் சொல்வது எனக்கு வருத்தமாய் இருக்கிறது.."
"இரு பிள்ளாய்.. ! இரு..! பதற வேண்டாம்.. வருத்தப்படுகிற விஷயமல்ல.. இது
திருத்திக்கொள்கிற விஷயம் தான்."
"ஓ! நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை சொல்கிறீர்களா தாத்தா..? ஏன்... அதிகமாக ஊற்றிவிட்டேனோ..?"
"ஆம் பதுமா! மிதமிஞ்சி ஏதேனும் செய்கிற போதெல்லாம் நாம் சற்று கூடுதல் கவனத்துடனும் செயல்பட வேண்டும்..! நீ ஒரு பானை நீரை ஒரேயடியாக இப்படி ஊற்றுவது இந்த தரைக்கு கீழே வாழும் சின்னஞ்சிறு புழுபூச்சிகளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும். அவற்றை தேவையில்லாமல் சலனப்படுத்த கூடாது! மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி செடிகளுக்கு நீர்வார்க்க வேண்டும். அதுதான் அந்த செடிகளுக்குமே நல்லது. "
"ஏன் தாத்தா! நம் அன்றாட கடமைகளுக்கும் ஆற்றவேண்டிய பல பணிகளுக்கும் மத்தியில் இப்படி புழுபூச்சிகளிடத்தெல்லாம் இரக்கபட்டால் வேலை ஆகுமா? "
"இரக்கப்பட வேணாம் பதுமா..! இரக்கம் கருணை அன்பு எல்லாம் இயல்பில் வரவேண்டும். அவை
இன்னொருவர் அறிவுறுத்தி வருவதற்கில்லை.. இங்கு நான் கூறவருவது முன்னெச்சரிக்கை என்பதை பற்றி...!"
"இதில் என்ன தாத்தா முன்னெச்சரிக்கை வேண்டிகிடக்கு? ஒரு அற்ப புழுவால் நமக்கு என்ன நேர்ந்திட போகிறது..?"
"அப்படி நினைக்காதே பதுமா! இவ்வுலகில் எதுவுமே அற்பமானதுமல்ல... எதுவும் ஆகச்சிறந்ததுமல்ல! இதை நீ வளர வளர உணர்ந்து கொள்வாய்..! அருவருக்கத்தக்கதாய் தோன்றுகிற சில ஜீவராசிகள்தான் நம்மால் நினைத்துகூட பார்க்கமுடியாத அற்புதகாரியங்களை நிகழ்த்திவருகின்றன.. அவற்றின் வாழ்வியலை பாதிக்கும் சிறுசலனங்கள் கூட நம்மை பேரழிவுபாதைக்கு இட்டுச்சென்றுவிடும்..!"
"அட... நீங்கள் கூறுவதைபோலவே எங்கள் மகாகுரு மற்கலியும் அடிக்கடி கூறுவார் தாத்தா...! ஆனால் ஏன்தாத்தா நிறைய விஷயங்களை பெரியவன் ஆன பிறகுதான் உணரமுடியும் என்கிறீர்கள்..? இப்போதே சொல்லினால் என்னால் விளங்கிகொள்ள முடியாதா..என்ன?"
"பிள்ளாய்! இப்போதே தெரிந்து கொள்ள ஆவலுறும் உன்னை நான் பாராட்டுகிறேன். ஆனால் உன் குரு
மற்கலியை விட உயர்ந்த இரு ஆசான்கள் இருக்கிறார்கள்..! அதில் ஒருவரின் பெயர்தான் அனுபவம்...! எந்த ஒரு விஷயமும் அனுபவத்தில் அறியும்போது தான் அதிகம் ஆழமாக மனதில்பதியும். சொல்லப்போனால் விஷயங்களை விளங்கிகொள்வதை விட அதை உணர்ந்துகொள்வதுதான் மிக முக்கியமானது..! அனுபவத்திற்கு ஒரு வரம்புஎல்லை எதுவுமில்லை.. எவ்வளவுக்கு எவ்வளவு அனுபவபடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஒருவிஷயத்தை அதிகம் உணர்ந்துகொள்ள முடியும்...!"
"அப்படியானால் அதிகம் வயதுடையவர்கள்தான் அதிகம் அனுபவசாலிகளா தாத்தா..?"
"அப்படி பொத்தாம்பொதுவாக கூற முடியாது பதுமா..! எவ்வித கர்மங்களிலும் ஈடுபடாமல் வயதோடிபோன ஒரு மாமுனிவனை காட்டிலும்,, தான் விரும்பி ஆடும் விளையாட்டில் சில செயல் நுணுக்கங்களை செய்ய
பழகியிருக்கும் ஒரு சிறுவனே அதிக அனுபவசாலி ஆவான். நூற்றுக்கணக்கான கலைகளை ஐயமின்றி கேட்டுகற்றவனை விடவும் அதில் ஒரேஒரு கலையேனும் செய்ய கற்றவனே அதிக அனுபவசாலி ஆவான்..!"
"எனில் அதிக அனுபவங்கள் பெற வேண்டுமாயின் நான் என்ன செய்யணும் தாத்தா..?"
"ஏராளமான கலைகளையும் தொழிலையும் செய்துபார்த்து கற்க வேண்டும் பிள்ளாய்! அதைவிட பலபேருக்கு உன்னால் ஆன உதவிகளை செய்து பழகவேண்டும்... அதில் தான் அரிதான அனுபவங்கள் பொதிந்து கிடக்கிறது.. எல்லாவற்றுக்கும் மேலாக உன்னால் எத்தனை தொலைவு பயணம் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்... உடலில் வலுவும் மனதில் ஆவலும் இருக்கும்போதே இதை நிறைவேற்றிக்கொள்வது கூடுதல் நலம்..!"
(நீண்ட நேரமாக வேதியர் ஆற்றிய அறிவுரைகளை பதுமன் ஆசையாகவும் விடாபிடியாகவும் கேட்டுக்கொண்டிருந்தான்.. அவர் கூற கூற இவனது விழிகள் ஆகாயத்தைநோக்கி அலைபாய்ந்து கொண்டிருந்தன.. அதை கவனித்த வேதியர்.. மெல்ல பேச்சை நிறுத்தினார்)
"ஏன் தாத்தா..நிறுத்திட்டீங்க.? நான் கவனமாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்..!"
"அதனால்தான் நிறுத்தினேன். பதுமா! நீ இப்படி கேட்டு கொண்டே இருந்தால் செடிகளுக்கு நீர்வார்ப்பது எப்படி நடக்கும்..? கேட்டது போதும் வா வந்தவேலைய முடிப்போம்..!"
"சரிங்க தாத்தா! ஆனா எனக்கு இந்த பெரிய பானையில் நீரை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தெளிக்க சரிபடவில்லை.. வேணும்னா குடில்வரைக்கும் போய் வேறு சிறிய கலனாக கொண்டு வரட்டுமா..?"
"அதுவும் சரிதான்! சரி பார்த்து பத்திரமா போய் எடுத்து வா..! அதுவரைக்கும் நான் ஊத்திகிட்டு இருக்கேன்.. கீழ கவனமா பார்த்து நடக்கணும்..பதுமா!"
"ஓ.. ! இதோ சற்று நாழிக்குள் திரும்பி வந்திடுறேன் தாத்தா!"
பதுமன் தோட்டத்தைவிட்டு கணப்பொழுதில் ஓடி மறைந்தான்..
குதித்து குதித்து ஓடியவன் தான் எத்தனை முறை பாதங்களை தரையினில் வைக்கிறோம் என்பதை எண்ணிக்கொண்டே ஓடினான்..
"283... 284.. 285.. 286....!"
அடுத்து எண்ணுவதற்குள் அவனுக்கு வேறு ஏதோ மனிதர்களின் குரல் கேட்டதுபோல இருந்தது.. எண்ணுவதை நிறுத்தி கூர்ந்து கேட்டான்.. ஆம் நிஜமாகவே ஏதோ பேச்சுகுரல் கேட்கிறது..! ஆனால் தூரமாக.. அதேநேரம் வேதியர் குடிலும் கண்ணெதிரே தெரியும் அளவு வந்துவிட்டிருந்தான்... குடிலுக்குள் போகாமல் அதன் வாசல்தாண்டி வந்து நின்று எட்டி பார்த்தான் பதுமன். கண்ணை சுருக்கி விழியை கூராக்கி பார்த்தான்.. அங்கே மூன்று பேர் கூப்பிடு தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள்.. நல்ல சத்தமாக எதையோ பற்றி பேசிக்கொண்டே வந்தனர்..
நெருங்கி வர வர அவர்களில் ஒருவன் நன்னன் என்பதையும் இன்னொருவர் ஆக்கூ என்பதையும் பதுமன் தெரிந்துகொண்டான். ஆனால் மூன்றாவதாக வருபவனை பற்றி பதுமனால் யூகிக்க முடியவில்லை. அந்த மூன்றாமவன் அவர்களோடு
சம்பாஷிப்பதாக தோன்றவில்லை.. அவனது தோளில் ஒரு அழகிய கிளி அமர்ந்திருந்தது..!
(பதுமனுக்கு அந்த மூன்றாவது நபர் புதிதாக தோன்றலாம்... ஆனால் வாசகர்களுக்கு,, பஞ்சவர்ணகிளியோடு பவனிவரும் அவன் நம் நந்து என்பது தெரிந்திருக்கும்)
ஓரளவு நெருங்கி வந்தபிறகு பதுமன் கையை அசைத்து சைகை செய்தான்.. நன்னனும் ஆக்கூவும் பதிலுக்கு சைகை செய்து புன்முறுவல் பூத்தனர்..
நன்றாக அருகில் வந்ததும்..
பதுமன் மூவரையும் வரவேற்றான்
"வாருங்கள் அண்ணா! வாருங்கள்! நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கும் உங்களை வேதியர் சார்பாக வரவேற்கிறேன்!"
"ஏதேது.. பதுமா! நாங்கள் வருவதை முன்பே அறிந்து வரவேற்க தயாராக வாசலில் வந்து நிற்கிறாயே எப்படி?" நன்னன் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிகாசமாகவும் கேட்டான்.
"உங்களுக்கு தான் தெரியுமே நன்னன் அண்ணா.. நான் எல்லாவற்றையும் அறிந்தவன்..என்று!" பதுமன் வேடிக்கையாக சொன்னான்.
"அடடே ஆமாம் ஆமாம் அதை மறந்து போனேனே!! சரி இருக்கட்டும்.. வேதியரை கூப்பிடு அவருக்கு ஆச்சரியமான ஒரு பரிசு காத்திருக்கிறது என்று சொல்!"
"தாத்தா இங்கு இல்லை நன்னன் அண்ணா! அவர் தோட்டத்தில் இருக்கிறார்.."
"ஓ.. அப்படியா! உன்னை தனியே விட்டு விட்டா சென்றிருக்கிறார்?"
" இல்லை அண்ணா! நானும் தாத்தாவோடு அங்குதான் இருந்தேன்... இன்னொரு சாமானை எடுக்க இங்கு வந்தேன்.. இப்போது மீண்டும் அங்கேதான் போகிறேன்.. வாருங்களேன்! கொஞ்சதூரம் தான்.. உங்களையும்
அழைத்துச்செல்கிறேன்..!"
"என்ன ஆக்கூ போகலாமா? " என்று நன்னன் கேட்க..
மிகுந்த சலிப்புடன்.. "இன்னும் நடக்கனுமா? ஐயோ சரி வா போவோம்!" என்றான் ஆக்கூ..
"சற்றுபொறுங்கள் அண்ணா ! தாத்தா ஒரு கலனை எடுத்துவர சொல்லினார். இதோ எடுத்து கிட்டு வந்திடுறேன்..!" என்றபடி பதுமன் குடிலுக்குள் ஓடினான்.
அவன் 'தாத்தா' ..'தாத்தா'.. என்று சொல்வதை நந்து ஏக்கமிகு உணர்ச்சியோடு பார்த்தான்.
அதுவரை அவன்தோளில் அமர்ந்திருந்த பஞ்சவர்ணகிளி ஏதோ அசூயை உணர்ந்ததுபோல கழுத்தை நாலாபுறமும் சுற்றி சுற்றி பார்த்தது.. பிறகு பறந்துபோய் அங்கிருந்த மரக்கிளையில் சென்றமர்ந்தது.
சிறிது நேரத்தில் கையில் சிறிய பானை ஒன்றை இலகுவாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் பதுமன்..
"வெறும் கலனையா எடுத்துக்கொண்டு வருகிறாய்? நீர் எங்கே பதுமா?" ஆக்கூ கேட்டான்
"தேவையான தண்ணீர் அந்த தோட்டத்திலேயே இருக்கிற குட்டையில் இருக்கிறது... ஆக்கூ அண்ணா! மேலும் நீரை இந்த சிறு பானையில் கொண்டுபோவதாய் இருந்தால் அது அங்கிருக்கும் ஒரு சிறுசெடிக்குகூட போதுமானதாக இருக்காது...அண்ணா!"
"ஓ அப்படியா? நீ கூறுவதைபார்த்தால் வேதியர் ஏராளமான கனிமரங்களை உண்டாக்கி வைத்திருப்பார் போலிருக்கே..!"
"வந்துபாருங்கள் அண்ணா..! நிச்சயம் அசந்து போவீர்கள்..!"
"அதானே போய் பார்த்தால் தெரிகிறது..! சரி வாருங்கள் போகலாம்...!" என்று நன்னன் சொன்னதும் எல்லோரும் வேதியர்குடிலுக்கு தென்கிழக்கே கால் காத தூரத்தில் இருக்கும் அவரது தோட்டத்தை நோக்கி நடந்தனர்.
நந்துவை பற்றி பதுமனும் ஏதும் கேட்கவில்லை. அவர்களாகவும் ஏதும் கூற வில்லை..
சிறிதுநாழி நடைபோட்டதில் நால்வரும்
தோட்டத்தை வந்தடைந்தனர்..!
பின்னாலேயே அவர்களின் கிளியும் பறந்துவந்து கீழே இருந்த ஒரு நிலப்பொந்தினில் தன் அலகை விட்டு துழாவிக்கொண்டிருந்தது.
"இது பேசுமா நன்னன் அண்ணா?"
பதுமன் கேட்டான்.
"ஓ..! எப்போதாவது.!"
ஆக்கூ குறுக்கிட்டு , " இது பேசாவிடினும் இது சொல்வதை இவனால் புரிந்து கொள்ளமுடியும்! " என்றவாறு நந்துவை கைகாட்டினான்.
நந்துவும் பதுமனும் ஒருதடவை ஒருவரைஒருவர் பார்த்துவிட்டு சட்டென முகத்தை திருப்பிக்கொண்டனர்.
வேதியர் உருவாக்கிய தோட்டம் நேர்த்தியான வடிவமைப்போடு விளங்கியது. நல்ல அகலமான பரந்த பரப்பு.. அது சிறிதாக தோன்றுமாறு எல்லைகளில் உயர்ந்த மரங்களும்.. குட்டையான பரந்தகிளைவடிக்கும் நிழல்தரு மரங்களும் இருந்தன. நடுவில் வரவர வளர் இளஞ்செடிகளும் கொடிகளும் இருந்தன.. மையத்தில் அழகிய குட்டை இருந்தது. பாசியில்லாத தெளிந்த நீர் நல்ல வெயிலில் படும்படி இருந்தது.. வேதியர் அதில் இறங்கி பானையில் நீர்நிரப்பி எழுந்து வந்தார்..
"ஐயா வேதியரே ! எப்படி இருக்கிறீர்கள்..?" ஆக்கூ சத்தமாக கேட்டான்.
சட்டென திரும்பி திகைத்த வேதியர்..
"அடடே ! நீங்களா பிள்ளைகளா! வாங்க வாங்க! எல்லாம் நலம் தான்! இன்று நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என எதிர்பார்த்தேன்..!" என்றார்.
(சொல்லிவிட்டு.. அவர்களை கவனித்த வேதியர் அப்போதுதான் இன்னொரு பையன் புதிதாக வந்திருப்பதை பார்த்தார்..)
"இந்த பிள்ளை யார்..? தெரிந்த முகமாய் இருக்கிறதே..! "
"சரியா போச்சு! போங்கள்.. ஐயா வேதியரே இவன்தான் உங்கள் செல்ல பேராண்டி.. நந்து..!" என்றான் ஆக்கூ.
"ஆ..! ஐயோ..! நந்து நீயா.? எப்படி வளர்ந்துவிட்டாயடா..! பார்த்து எத்தனை வருடங்களாயிற்று..! எங்கே என் அருகில் வா.."
நந்து கையிலிருந்தவற்றை கீழே போட்டு விட்டு ஓடிச்சென்று வேதியரை கட்டி அணைத்துக்கொண்டான்! நாள்பட்ட அவரது தாழ்ந்த வெண்தாடி பஞ்சுபொதிபோல இருந்தது அவன் கன்னங்களுக்கு...
பதுமன் இக்காட்சியை சொல்லவொண்ணா உணர்ச்சிபெருக்கோடு பார்த்தான்.
நன்னனும் ஆக்கூவும் பெருமிதம் கொண்டபடி நோக்கினர்.
வேதியர் பதுமனிடம், " பதுமா ! ஓடிச்சென்று.. அந்த கொய்யா, மதுரம், முள்ளிப்பழம், காட்டு வாழை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு வா.. நந்துவுக்கு கொடுக்கணும்!" என்றார்.
பதுமன் ஏவலை ஏற்று ஓடினான்
ஆக்கூ உடனே... "நில் பதுமா! நானும் வருகிறேன்..!" என்று பின்னால் ஓடினான்.
வேதியர் நந்துவின் தாடையில் கைவைத்து உயர்த்தி,, "உனக்கு இன்னும் பேச்சு வரவில்லையா நந்து?" என்றுகேட்டார்.
இல்லை என்பதாக தலையசைத்தான் நந்து.
"காலம் கடந்துவிட்டது.. என்ன செய்வது? ஐந்து வயதிற்குள் சரிசெய்திருக்க வேண்டும்! பரவாயில்லை... பேச்சு இல்லாவிடினும் என் மீது பாசம் இருக்கிறதே அது போதும் எனக்கு!"
என்றவாறு மீண்டும் இறுக அணைத்து தழுவிவிட்டு பிறகு அவனை விட்டார் வேதியர்.
"நன்னா! உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! நன்னன் என்ற பெயருக்கேற்ப நல்லவானாக இருக்கிறாய்!"
"அட.. இது என்ன பிரமாதம் வேதியரே! அடுத்த முறை உங்களை நந்துவின் வீட்டுக்கே அழைத்து போகலாம் என்றிருக்கிறேன்..!"
"ஐயோ! அதுமுடியாது நன்னா! அதில் விருப்பமும் இல்லை எனக்கு! என்னை புரிந்துகொள்ளாதவர்களின் முன்பு நான் போய் நிற்க விரும்பவில்லை!"
"அதற்கில்லை.... வேதியரே!.."
"வேணாமப்பா! இந்த உபகாரமே எனக்கு போதும். மகனை இழந்து நீண்ட நாள் கொண்டிருந்த பழி ஏக்கம் இன்றுதான் பேரனால் தீர்ந்திருக்கிறது... காலம் முடியும்வரை இதை எண்ணியே களித்திருப்பேன்! "
அதற்குள் போனவர்கள் திரும்பி வந்தார்கள்.. கையில் சில பழங்களுடன்..
"அதிகமில்லை தாத்தா..! அளவோடு தான் கனிந்திருக்கிறது.. மீதம் எல்லாம் காய்தான்..!" என்றான் பதுமன்.
"சரி பரவாயில்லை இப்படி கொடு! நந்து.. நீ இதை சாப்பிடுப்பா.. !"
என்று எல்லா கனிகளையும் நந்துவின் முன் வேதியர் நீட்ட அவன் அவற்றை வாங்கிக்கொண்டான்.
"இது என்ன நியாயம் வேதியரே ! அழைத்து வந்த எங்களுக்கும் பறித்துவந்த பதுமனுக்கும் ஏதுமில்லை..! பேரனை கண்டதும் எங்களை மறந்துவிட்டீரே!" என்று ஆக்கூ வினவினான்.
"உனக்கு இல்லாததா ஆக்கூ..? இவை எல்லாமே உன்னுடையதாகவே நீ கருதிக்கொள்ளலாம்..! கருதுவதென்ன.. இவை உன்னுடையது தான்.! வேண்டும் மட்டும் பறித்து சாப்பிடு. ஆனால் ஒன்று.., சாப்பிடுவதோடு நம் கடமை முடிந்துவிடாது.. உண்ண கனிதந்த அவற்றை நீ நேசிக்கவும் கற்க வேண்டும்.. நீ இவற்றுக்கு கடன்பட்டவனாவாய்! நீ இவை நன்றாக முதிரும் வரையில் பராமரிக்க வேண்டும்..!"
"ஆனால் வேதியரே ! பரந்த இந்த காட்டிலிருந்து எத்தனையோ பொருட்களை நாம் எடுத்து பயன்படுத்துகிறோமே.. அதற்காக இதை நேசித்து பராமரிக்கிறோமா என்ன? அப்படி ஏதும் தெரியவில்லையே..?"
"வளர்ந்த மரங்களுக்கு நம் பராமரிப்பு அவசியமில்லை.. ஆக்கூ! அடர்ந்த காட்டின் இளஞ்செடிகளுக்கும்கூட அது அவசியமில்லைதான்! ஆனால் இது இயற்கையாக வளர்ந்தது இல்லை. இயற்கை இத்தனை கனிமரங்களை இங்கு கொணர்ந்து சேர்த்திருக்காது..! இது என் முன்னோர் முயற்சியாலும் என்னுடைய சிரத்தையாலும் உண்டானது.. இவை சாதகமற்ற இடத்தில் வளரும் இளம்பிள்ளைகள்..! இவை தாமாக தாக்குபிடிக்கும் அளவிற்கு பராமரித்து வளர்த்துவிடவேணும். இல்லாவிடில் இவை சோபிக்காமல் போய்விடும்..! வேண்டுமானால் நீ இப்படி செய்யேன்...
இங்கிருந்து சிறிது தூரம் போனால் எனது பழைய தோட்டம் ஒன்று இருக்கிறது.. அவை நன்றாக முதிர்ந்தவை.. நமது கைம்மாறு தேவைபடாத அந்த மரங்களிடம் நீ விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்.. இருந்தாலும் சிக்கல் எதுவெனில்... அவை எட்டா உயரத்தில் நெடுக வளர்ந்தோங்கி இருக்கும்..! ஏறிப்பறிப்பதற்கு சரிபடாது..!"
"இருக்கும் இடத்தை மட்டும் காட்டுங்கள் வேதியரே! எங்களிடம்
வாழைமரத்திலும் மூங்கில் மரத்திலும் கூட ஏறுவதற்கு ஆள் இருக்கிறது..!" என்றபடி ஆக்கூ நந்துவை நோக்கினான்.
நந்து லேசாக சிரித்துவிட்டு ஆம் என்பதாக தலையசைத்தான். (சென்னியும் நந்துவும் எத்தகைய மரத்திலும் நுனிகொம்புவரை ஏறும் திறன் பெற்றவர்கள்.. இருவரில் 'யார் சிறந்தவர்' என அடிக்கடி பந்தயம் கூட நடந்ததுண்டு)
வேதியர் திசையை காட்ட பதுமன் அவர்களை அழைத்துக்கொண்டு போனான்.
அங்கு..
ஆஹா ! அடடா ! என்று எண்ணுமளவு அநேக கனிமரங்கள்
விண்முட்டுகிற உயரத்தில் வளர்ந்தோங்கி இருந்தன. பெரும்பாலும் காயாக பிஞ்சாக இருந்தது மட்டுமே ஏமாற்றம். மற்றபடி உண்ணத் தகுந்த செங்காய் பதார்த்தத்தில் ஆக்கூ திருப்தி படுமளவிற்கு நந்து ஒவ்வொரு மரத்திலும் ஏறி பறித்து கீழே போட்டான்..
நன்னன் இங்கு வரவில்லை அவன் வேதியருடன் உதவியாக பேசிக்கொண்டிருந்தான்.
நீண்டநேர உரையாடலின் முடிவில்..
"ஐயா.! அப்பறம் அந்த கல் விஷயம்..?"
"ஓ..! நானே அதுபற்றி பேச நினைத்திருந்தேன்.. உனக்கு அது எங்கிருந்து கிடைத்ததாக சொன்னாய்? நான் அந்த இடத்தை பார்க்கவேண்டுமே..! உண்மையில் இந்த ஒரு கல்தான் கிடைத்ததா..?
இதனோடு வேறு ஏதேனும் மரகத கற்களை கண்டெடுத்தீர்களா..?"
"அட! ஆம் வேதியரே! உங்களிடமிருந்து மறைத்ததற்காக மன்னியுங்கள்.. ஆனால் எப்படி கண்டறிந்தீர்கள்..?"
"சொல்கிறேன் நன்னா! ஆனால் இப்போது வேணாம்.. அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள்...!"
ஆக்கூ வயிற்றை தள்ளியபடி பற்களில் விரலால் சிக்கு எடுத்துக்கொண்டு வந்தான்.. பதுமன் கையில் ஒருசில கனிகளும்.. நந்துவின் கையில் சில விதைகளும் இருந்தன..
"குடிலுக்கு போலாமா வேதியரே? இவ்வளவு தூரம் வந்ததற்கு என் வாயும் வயிறும் பலனடைந்து விட்டன..! பிறகென்ன?" ஆக்கூ கேட்டான்.
"நீங்கள் போய் ஓய்வெடுங்கள் பிள்ளைகளா.. நானும் பதுமனும் இந்த செடிகளுக்கு நீர் ஊற்றிவிட்டு வந்துவிடுகிறோம்..!"
"ப்பூ..! இதெல்லாம் ஒரு பெரிய வேலையா? என்னிடம் விடுங்கள் நொடியில் முடித்துகாட்டுகிறேன்.."
என்றபடி ஆக்கூ நீர் நிரம்பிய பெரிய பானையை ஒரு கையால் தூக்கி அநாயசமாக ஒரு செடியில் ஊற்ற போனான்....
"ஐயோ.. இருங்கள் ஆக்கூ அண்ணா..! சற்றே இருங்கள்..!" என்று பதுமன் பதறவே ஆக்கூ பானையை கீழே வைத்தான்.
"நீங்கள் இத்தனை வேகமாக ஊற்றினால் அவை வேரொடு பெயர்ந்துவிடும்..! நீங்கள் நிஜமாகவே உதவ நினைத்தால் அந்த குட்டையிலிருந்து நீரை மட்டும் மொண்டுகொடுங்கள் நீரை நானே இறைத்துக்கொள்கிறேன்..!"
என்றான்.
ஆக்கூவும் அதற்கு உடன்படவே தோட்டத்தின் மையத்திலிருந்த குட்டையில் போய் இறங்கி கொண்டான். பெரியபானையிலும் பதுமன் எடுத்துவந்த சின்ன பானையிலும் மாற்றி மாற்றி நீரை நிரப்பித் தர அதனை நன்னனும் நந்துவும் எடுத்துவந்து வேதியரிடமும் பதுமனிடமும் தந்தார்கள்.. இவர்கள் அதை வாங்கி செடிகளுக்கு நீர் ஊற்றினார்கள். வேலையை பகிர்ந்து கொண்டதால் மிக சில நாழிக்குள் முழுத்தோட்டமும் ஈரமாகி அந்த நண்பகல் பொழுதிலும் நல்ல குளிர்காற்றை பரப்பியது..! ஆக்கூ அந்த குட்டையிலேயே உருண்டு புரண்டு குளித்தான்..
எல்லோருமாய் பிறகு குடிலுக்கு போய் சேர்ந்தனர். மறுபடியும் அந்த பஞ்சவர்ணகிளி முரண்டுபிடித்தது...
"ஏய் நந்து! உன் கிளிக்கு என்னவாம்..?கேளு!" என்றான் ஆக்கூ
நந்து கிளிக்கு வருடிவிட்டான். ஆயினும் அது படபடத்தபடி மரத்தில்போய் அமர்ந்தது..
நந்து புரியாமல் தவித்தான். வேறு ஏதோ அச்சுறுத்தும் பறவை வரப்போகிறது.. என்பதாக அவனது உள்ளுணர்வு கூறியது. அதை அவர்களிடம் நந்து சைகையால் நடித்து காட்டினான்.
மற்றவர்களுக்கு அது சீக்கிரம் விளங்கவில்லை... புதிராக இருந்தது..! "பகல்பொழுதில் அபாயகரமான பறவைகள் வருவதற்கு வாய்ப்பில்லையே..!"
ஆனால் பதுமன் சட்டென அந்த புதிரை விடுவித்தான்.
"தாத்தா! ஒருவேளை அந்த பாறைகழுகு...?"
"அடடே.. ஆமாம். அதுதான் காரணமாக இருக்கும்... நானும் யோசிக்க வில்லை பார்..!" என்று கூறிகொண்டே குடிலுக்குள் ஓடினார் வேதியர்.
நன்னனும் ஆக்கூவும் போனமுறை புகையினால் மயங்கி வந்துவிழுந்த கழுகை ஞாபகபடுத்திக்கொண்டனர். நந்துவுக்குதான் நடப்பவை புரியவில்லை!
வேதியர் சற்று நேரத்தில் கூடையை எடுத்துவந்து எல்லோரின் முன்பும் திறக்க...
அந்த பாறைகழுகு பொத்தென கீழே வந்து விழுந்து.. தத்தி தத்தி ஓடி.. பிறகு ஒரு மரத்தில் தாவியது. உடனே கிளி பதறிக்கொண்டு வந்து நந்துவின் தோளில் அமர்ந்தது. அவன்அதை தடவிகொடுத்தான். பாறைகழுகு தலையை சுற்றுமுற்றும் திருப்பி இறகை தன் அலகால் சொரிந்துகொண்டது. சட்டென எவரும் எதிர்பாரா கணத்தில் விரிசிறகை அசைத்து விண்ணில் பறந்தது..!
வேதியர் சொன்னார்.. "அது மறுபடியும் வரும்!"
அவர் ஏன் இப்படி சொன்னார் என்று எவருமே எதிர்கேள்வி கேட்கவில்லை. அவர்களும் அதையே விரும்பினார்கள்...!
பிறகு வேதியர் வித்யாசமான ஒரு கண்டிப்பு குரலில்...,
"நன்னா நீ மட்டும் உள்ளே வா!" என்றபடி குடிலுக்குள் புகுந்தார்.
நந்து பதுமன் ஆக்கூ மூவரும் ஏமாற்றத்தோடு குழம்பி ஒருவரை பார்த்தனர். நன்னனும் திகைப்போடும் குழம்பிதான் உள்ளே போனான். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. வேதியர் நன்னனிடம் அந்த கருப்புக்கல்லை குறித்து ஏதோ ரகசியமாக உரையாடினார்.
ஆக்கூ பதுமனிடம் சென்று ," அந்த கருப்புக் கல் பற்றி ஏதும் சொன்னாரா உன்னிடம்?" என்று கேட்டான்.
"இல்லை ! ஆக்கூ அண்ணா..! ஆனால் இரவுபகலாக அதனை சுரண்டி நெருப்பில் காட்டி ஏதேதோ திரவங்களில் போட்டு எடுத்து பச்சை நிறமாக்கினார். பிறகு வேறு உலோகத்தோடு அதனை உருக்கி அதன் நிறத்தையே இப்போது வெண்ணிறமாக்கி வைத்திருக்கிறார்..!"
பதுமன் இவ்விதமாக சொன்னபிறகு... " நீங்கள் இப்போது உள்ளே வரலாம்..!" என்ற அழைப்பு வந்தது.
படியிறங்கி குடிலுக்குள் போனார்கள்.. நல்ல வெயில் வெளிச்சத்திலிருந்து இருண்ட குடிலுக்குள் போனதால் கண்ணே தெரியவில்லை மூவருக்கும்..
பிறகு மெல்ல மெல்ல.. பார்வை புலப்பட்டது.
அங்கே நன்னன் கைகளில் வெண்ணிறமான பொருளுடன் நின்றான். அது உலையின் தீ கனல் செந்நிறத்தை வாங்கி எதிரொளித்து பிரகாசித்தது.
நன்னன் வேதியரை நோக்கி, " ஐயா! நாங்கள் பதுமனை இன்று எங்களுடன் அழைத்து போகலாம் என்று ஆசைபடுகிறோம்..!" என பேச்சை தொடங்க..
"என்ன விளையாடுகிறீர்களா..? அவன் எங்கும் வரமாட்டான்! " என்றார் வேதியர்.
பதுமன் ஆச்சரியமும் குழப்பமும் எய்த.. மௌனமாய் இருந்தான்.
"ஏன் வேதியரே ! நாங்கள் அவனை பத்திரமாக பார்த்துக்கொள்ள மாட்டோமா என்ன?"
"இல்லை நன்னா..! இல்லை. குடியிருப்பு வாசிகள் புதியவனான இவனை காண்பது வீண் குழப்பத்தையே உண்டாக்கும். என்னையே ஏதோ பித்தன் என்று நினைக்கும் இந்த மக்கள்... இவன் ஒசகுமலைவாசி என தெரிந்தால்..? அப்பப்பா பெரிய விபரீதமாகிவிடும்! வேணாம்!"
"ஓ..! இதுதான் உங்கள் கவலையா? கேளுங்கள் வேதியரே நாங்கள் குடியிருப்புக்கே போவதாக இல்லை! நாங்கள் நாளைய நிலவு விழா வை கொண்டாடி களிக்க பெருமணல் தீவுக்கு போகிறோம்..! அங்கு நாங்களே புதியவர்கள்தான். அதோடு இவனை ஒசகுமலையில் இருந்து வந்தவனாக யாரிடமும் கூறமாட்டோம்! பிறகென்ன?.. எங்களுடன் ஒரு நல்ல விழாவை ரசித்துவர வேண்டியதுதானே?"
"என்ன பெருமணல் தீவா? ஏன் அங்கு.. போகணும்?"
"நீங்கள் தானே வேதியரே 'அங்கு நாவாய் வரும்.. அதில் கடல்கடந்த தேசத்து வணிகர்கள் மக்கள் வருவர்..' என்றெல்லாம் அன்றைக்கு கூறினீர்கள்..!"
"ஆம்..! சொன்னேன் தான்.. அதனால் அடுத்த நாளே கிளம்பி விடுவதா?"
"என்ன செய்வது..! நிலவு விழா நாளையே கொண்டாடுகிறார்களே..!"
வேதியர் ஆழ்ந்து யோசித்த பிறகு.. பதுமனை பார்த்து.., " நீ என்ன நினைக்கிறாய் பதுமா? போய்வர இஷ்டமா..?"
"நேற்று வரை அப்படி ஏதுமில்லை தாத்தா! ஆனால் இன்று காலை நீங்கள் அதிக அனுபவத்தை பெற வேண்டுமாயின் அதிக இடங்களுக்கு பயணம் செய்யணும் என்றீர்கள் அல்லவா..? அதுதொட்டு சிறிய ஆசை அரும்பி இருக்கிறது தாத்தா..! நான் என்ன செய்யட்டும்?"
நன்னனும் பதுமனும் தன் கூற்றினாலேயே தன்னை மடக்கியதை எண்ணி வேதியர் வியந்து நாணினார். பிறகு பல சமரசங்கள் கட்டுப்பாடுகள் அறிவுரைகளுக்கு பிறகு அவர்களின் கோரிக்கை யை ஏற்றார். பதுமனை அனுப்பி வைத்தார்!
"நன்னா ! உறுதியாக நீங்கள் குடியிருப்பு பக்கம் போகமாட்டீர்கள் தானே?"
"போகவேண்டிய அவசியமே இல்லை வேதியரே..! நேராக எங்கள் அருவிக்கரை குகைக்குபோய் எங்கள் இன்னொரு நண்பன் சென்னியை கூட்டிக்கொண்டு
சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு புறப்படவேண்டியதுதான்.. வழியும் விசாரித்துவிட்டோம்.!" என்றவாறு தங்கள் திட்டத்தை நன்னன் சொல்லவும் வேதியர் விடைகொடுத்து அனுப்பினார்...!
குறிப்பாக நந்துவுக்கு சில பிரத்யேக பரிசுகளும் மணிகளும் தந்தனுப்பினார்!
போவதற்கு முன் பதுமன் வேதியரிடம் தனியாக சென்று , "தாத்தா ஒரு சந்தேகம்.!. எங்கள் மகாகுருவை காட்டிலும் சிறந்த ஆசான் இருவர் உண்டு என்றீர்களே.. அதில் ஒன்று அனுபவம். அந்த இன்னொன்று எது.. தாத்தா?" என்றான் ஆவலாக.. வேதியர் புன்னகை ததும்ப அவனை வருடியபடி சொல்லினார்.. "அதுதான் காலம் பதுமா..!".
***********
பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. ஆதவன் மேற்கில் அஸ்தமிக்கு முன்னரே கிழக்கில் நிலவு உதயமாகி இருந்தது... நாளைதான் பௌர்ணமி. ஆனால் இன்றே வட்டமாக தெரிந்தது.
அருவிக்கரை குகை வழக்கமான அமைதியை இழந்து கலகலப்பான உரையாடல்களால் இரைச்சலாக இருந்தது..
நன்னன் ஆக்கூ நந்து பதுமன் ஆளாளுக்கு ஒரு கதையை சென்னியிடம் அளந்து விட்டுக்கொண்டிருக்க... சென்னி தன்னை பதுமனிடம் அறிமுகப்படுத்தி கொண்டான்.
பிறகு எல்லோருக்கும் தான் முன்பே ஏற்பாடு செய்திருந்த கிழங்கு உணவை சென்னி எடுத்து தந்து தானும் சாப்பிட்டான்..
எல்லாரும் சாப்பிடும்போது சென்னி மட்டும்,,, பொடியனான பதுமனையும் அவனைப்போலவே அசலாக குகை சுவரில் ஆக்கூ வரைந்திருந்த ஓவியத்தையும் ஒப்பிட்டு பார்த்து சிரித்தான்.
பிறகு சாவகாசமாக தங்கள் பயணத்தை இனிதே தொடங்கினர் அந்த ஐவரும்...! பின்னாலேயே பறந்துவந்து ஆறாவதாக அந்த கிளியும் சேர்ந்துகொண்டது...
நதியோரமாக வடகிழக்கு நோக்கி நடந்தவர்களிடம் பஞ்சமில்லாமல் பேசி கழிக்க ஆயிரம் ஆயிரம் கதைகள் கருத்துகள் சம்பவங்கள் இருந்தன...!
பாதி தொலைவில்... இருள் கிளம்பி வரும் அந்தியில், கானக நடுவினில்.. அவர்கள் அதிசயமான ஒரு காட்சியை கண்டனர்.
அங்கே
பத்து பன்னிரண்டு கலைமான் இனங்கள் குட்டியும் பெரியதுமாக கூடிநின்று யாரோ ஒரு மானிடன் தருகிற புற்களை அவசர அவசரமாக மேய்ந்துகொண்டிருந்தன..
அந்த மானிடன் முற்றிலும் விசித்திரனாய் இருந்தான். உடல்முழுவதும் வெண்ணிற சாம்பலை பூசிவைத்திருந்தான்.. முகத்தில் தாடியும் மீசையும் கருகருவென வளர்ந்து தொடைவரையில் தொங்கிதவழ்ந்தது.. அடர்ந்த தலைமுடி.. அது முதுகு பின்புறமாக ஜடாமுடியாக கட்டி தொங்கியது.. நெற்றியில் விசித்திர கருப்பு மைப்பொட்டு வைத்திருந்தான்..! அவன் கால்களில் மிக வசீகரமான காலணி பாதுகை அணிந்திருந்தான்.. கழுத்திலும் மணிக்கட்டிலும் ஒன்றிரண்டு மணிமாலை அணிந்திருந்தானே அன்றி உடம்பை மறைக்கிற ஆடை கிடையாது! கட்டுறுதி கொண்ட உடல்.. கண்ணிலே காந்தம் கொண்டவனாய் தோன்றினான்!
அவனை பார்த்ததில் மதிமயங்கி போன இவர்கள் ஐவரும் அவனை கண்டுகொள்ளாததுபோல நகர முயன்றனர்..
ஆனால் அவன் இவர்களை அழைத்தான்..
"நீங்கள் தானே வடதிசை பயணம் போகிறீர்கள்..?" என்றான் பொதுவாக...
ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பின்.. நன்னனே பதில்சொன்னான்
"வடதிசை அல்ல.. வடகிழக்கில்..! பெருமணல் தீவு வரை..!"
"ஓ..! அது ஒரு தொடக்கப்புள்ளி.. ஆனால் நீங்கள் போகவிருப்பது வெகு தூரத்தில் வடக்கு நோக்கி தான்..!"
ஆக்கூ மெதுவாக நன்னன் காதில் சொன்னான் "இவன் என்ன பைத்தியமா? இவனிடம் தேவையின்றி பேசிக்கொண்டிராதே வா போகலாம்..!"
நன்னன் திருப்பி கேட்டான்,
"சரி நாங்கள் வடதிசை போவதாகவே இருக்கட்டுமே..! அதனால் உங்களுக்கு என்ன வந்தது?"
"எனக்கு நீங்கள் ஒரு உபகாரம் செய்ய வேண்டுமே..! எனக்கு வேண்டிய ஒருவருக்காக ஒரு பொருள் வைத்திருக்கிறேன். வடக்கில் நீங்கள் அவரை பார்த்தால் அதை ஒப்படைக்க வேண்டும்..!"
"வடக்கில் எந்த இடம்.. யார் அந்த நபர்..? அவனை எங்கே என்று தேடுவது? முதலில் நீங்கள் யார்?"
அதுவரை அமர்ந்தபடி பேசியவன் மான்களை நகர்த்திவிட்டு கையில் தன் மண்டைஓட்டால் ஆன பாத்திரத்தையும்.. இன்னொரு கையில் சூலம்போன்ற முக்கூர் ஈட்டியுடனும் எழுந்து அவர்களின்அருகில் வந்தான்.
"நான் பிச்சாடன்...! வடக்கில் உங்கள் பயணம் ஓரிடத்தில் திக்கு தெரியாமல் நின்றுவிடும் சமயத்தில் அந்த பொருளுக்கு உரியவனே வந்து உங்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வான்..!"
"அது எப்படி? எங்களை அவனுக்கு தெரியுமா? என்ன?"
"இன்னுமில்லை.. கூடியவிரைவில் தெரிந்து கொள்வான்.. எங்குபோனாலும் பத்திரமாக உடன் வைத்துக்கொள்ளுங்கள்.. அவன் கேட்கும் போது தந்தால் போதுமானது...!"
"சரி ! நீங்கள் இன்னும் அந்த பொருளை கண்ணிலேயே காட்டவில்லையே!"
என நன்னன் கேட்டதும் பிச்சாடனார் நன்கு பழுத்துகாய்ந்த இலைமடிப்பினால் ஆன ஒரு பொட்டலத்தை நீட்டினார்.
நன்னன் அதை உடனே வாங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தான்... அதில் பொடிசாம்பலாக இருந்ததை கையினால் சிறிது எடுத்து விரல்களில் உரசி மோந்தான்.
"இது என்ன வெறும் சாம்பல் தானே இருக்கிறது...!"
"ஆம்.. ! வெறும் சாம்பல் தான்!"
"இதை எதற்காக அத்தனை தூரம் எடுத்துச்செல்லவேண்டும்.. இது எங்கும் எளிதாக கிடைக்ககூடிய ஒன்றுதானே..?"
"எளிதாக கிடைக்ககூடிய சில அற்பங்கள் தான் பலநேரம் எளிதாகவும் மறந்துபோய்விடுகிறது...! இது அப்படி மறந்துபோன சிலவற்றை நினைவுபடுத்திட உரியவருக்கு உதவும்.."
" ஏது,, இந்த வெற்று சாம்பல் பொடியா உதவபோகிறது? அதுசரி..! இது எதை நினைவூட்டும் என்று எங்களிடம் இப்படி சுற்றிவளைத்து பொடிபோடுகிறீர்கள்..?"
" 'நாம் மலைத்து மலைத்து பேராச்சரியமோடு பார்க்கிற இனிமேல் பார்க்கப்போகிற மிகப்பெரிய பருப்பொருள்கள் எல்லாம்கூட முடிவில் ஒருநாள் இப்படி வெறுமனே சாம்பலாகி பொடிபொடியாக போகக்கூடும்...!' என்பதை இது நினைவூட்டும்."
"... ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ..."
( ஐவருமே திகைப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. அவர் சொன்னதன் உட்பொருளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கற்பிதம் செய்துகொண்டனர்...)
"சரி ஐயா! இதை பத்திரமாக வைத்துக்கொள்கிறோம். உரியவரை இது சென்றடையும் எங்களை நம்பலாம்..!" என்று பதுமன் ஒரே பதிலில் பேச்சை முடித்தான்.
"நல்லது ! அளவிட முடியாத அனுபவங்களை மற்ற எவரைவிடவும் ஒரு யாத்ரீகன் அதிகம் பெறுவான். நீங்களும் உங்கள் வருங்கால நண்பர்களும் அந்த பெறற்கரிய பேற்றினை பூரணமாய் பெறுவீர்களாக...!
நான் புறப்படுகிறேன்!"
இவ்விதம் ஆசி வழங்கி விடைபெற்றுகொண்டு பிச்சாடனார் புறப்பட்டார்.. அவர் பின்னாலேயே அந்த மான்களும் மான்குட்டியும் துள்ளி துள்ளி ஓடின..!
கண்கொட்டாமல் அவர் போய் மறையும்வரை பார்த்திருந்த ஐவருக்கும் தாங்களும் அந்த மான்குட்டியாக பிறந்து அவர்பின்னாலேயே செல்லவேண்டும்' என்ற எண்ணம் பிறந்தது!
"பார்ப்பதற்கு பிச்சாண்டி போல இருந்தாலும் அவர் எல்லாம் நிறைந்த போகக்காரராக இருக்கிறார்..!" சென்னி தன்னை அறியாமல் முனுமுனுத்தான்.
"ஆம்! உண்மையிலேயே அவரொரு யோகக்காரர்தான்..!" நன்னனும் வழிமொழிந்தான்.
அவர்களின் அசூயயை மிகு ஏக்கத்தை பஞ்சவர்ணகிளி படபடத்து கலைத்தது. சிறகை விரித்து அது பறந்த திசையில் பெருமணல் தீவிற்கு போகவேண்டிய பாதையும் கண்முன் விரிந்தது..!
தடைபட்ட தங்கள் பயணத்தை மேலதிக ஆர்வமொடு அவர்கள் மீண்டும் தொடர்ந்தனர்...!
பன்னெடுங் காடுகளை நதிகளை மலைகளை கடல்களை.... யூகிக்க முடியாத யோஜனாதி யோஜனை தூரங்களை கடந்து
உலகவலம் வரப்போவதற்கான தங்களது முதல் சிறுஅடியை ஐவரும் அடுத்தடுத்து எடுத்து வைத்தனர்...!
சூரியராஜ்
கடந்த அத்தியாங்களிலிருந்து ஆசிரியர் உன்னதமான காருண்ய கருத்துகளை புரிய வைப்பதில் அதிக சிரத்தை எடுக்கிறார் என்பதிலே அவரது உயிர்நேயத்தை எண்ணி மகிழ்வுறமுடிகிறது.
பதிலளிநீக்கு"அவர் ஏன் இப்படி சொன்னார் என்று எவருமே எதிர்கேள்வி கேட்கவில்லை. அவர்களும் அதையே விரும்பினார்கள்...!"
ஆஹா! எத்தனை ஜீவிதம் இந்த வார்த்தைகளில்,
இந்த அத்தியாயம் என்னை மேலும் மேலும் மென்மை படுத்தியதாய் உணர்கிறேன்.
பெருமான் கட்டிய கடையை தென்றல் திறக்கும் என்பதிலே இன்றெனக்கு ஐயமில்லாமல் போனது.
மிக்க நன்றி.. கொள்வார் இல்லாது போனாலும் நான் இதை அப்படியே போட்டுவிட்டு போவேனே அன்றி கட்டிசுருட்டிக்கொண்டு போவதாக இல்லை!
நீக்கு