அறன் வலியுறுத்தல்
குறள் 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
கவியுரை
பேறும்
பொருளும்
தருமறத்தை
பெறுவதிலும்;
பெரும் பேறு
உயிர்கட்கு
வேறேது?
உரை
சிறப்பும் செல்வமும் தரும் அறத்தை காட்டிலும் ஆக்கம் தரும் அதாவது பெரும் சிறப்பை தரும் பேறு வேறு எதுவாக இருக்க முடியும்?
பதவுரை
சிறப்பு-பெருமை; ஈனும்-பெற்றுத் தரும்; செல்வமும்-செல்வமும். பொருளும்; ஈனும்-அளிக்கும்; அறத்தின்-அறத்தைக் காட்டிலும்; ஊ(உ)ங்கு-விஞ்சிய, மேற்பட்ட; ஆக்கம்-மேல் மேல் உயர்தல்; எவனோ-யாதோ?, எதுவாக இருக்க முடியும்?; உயிர்க்கு-உயிருக்கு, (மாந்தர்க்கு)
குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
கவியுரை
அறமில்லையேல்
பேறு இல்லை;
அதை
மறத்தலைவிட
கேடு இல்லை
உரை
அறத்தின் வழியாய் பெறுவதே ஆக்கம். அவ்வறம் இல்லையேல் ஆக்கமும் இருக்காது. அப்படிபட்ட சிறப்பை தரும் அறத்தை மறத்தலைவிட கேடு இருக்காது
பதவுரை
பதவுரை: அறத்தின் -நல்வினையைக் காட்டிலும்; ஊ(உ)ங்கு-மேற்பட்ட; ஆக்கமும்-மேன்மேல் உயர்தலும்; இல்லை-இல்லை. அதனை-அதை; மறத்தலின்-மறத்தலைவிட; ஊங்கு-மேற்பட்ட; இல்லை-இல்லை; கேடு-அழிவு.
குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்
கவியுரை
ஆனதிறத்தால்
அறனை,
அகலாது
ஆக்கவேண்டும்
அதனை!
உரை
செல்லும் வகையான் - ஆன திறத்தால் அதாவது இல்லறவான் பொருள் வழியிலும் துறவறவான் அருள் வழியிலும் அறம் செய்தல் சரியாகும். அவ்வறனை இடைவிடாது செய்தலே சிறப்பாகும்
பதவுரை
பதவுரை: ஒல்லும்-இயலும்; வகையான்-திறத்தால், வழிகளில்; அறவினை-அறச்செயல்; ஓவாதே-ஒழியாமல், இடைவிடாமலே; செல்லும்-இயலும், செய்யத்தகும், எய்தும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; செயல்-செய்க.
குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
கவியுரை
மனமாசு
அற்றவனே
அறவோன்;
பிறவோன்
பகட்டாசை
பற்றும்
போலி!
உரை
மனத்தின்கண் மாசு இல்லாதவனே அறவோர் என்று புகழப்படுகிறார்கள். அதுவே அறமும் ஆகும். பிறவோர் எல்லாம் ஆரவாரத்திற்கு பிறர் மத்தியில் புகழ் பெற்று வாழவேண்டுமென்பதற்காக அறம் செய்வது போல் நடிக்கும் வேஷதாரிகள்.
பதவுரை
மனத்துக்கண்-உள்ளத்தில்; மாசு-குற்றம்; இலன்-இல்லாதவன்; ஆதல்-ஆகுதல்; அனைத்து-எல்லா, அந்தஅளவு; அறன்-அறம்; ஆகுல-ஆரவாரம், ஆடம்பரம், இரைச்சல், வெளிப்பகட்டு; நீர-தன்மையுடையன; பிற-மற்றவை.
குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
கவியுரை
பொறையின்மை
மோகமென்று
கோபந்தீ
சொல்லையெல்லாம்
புறந்தள்ளி
செய்வதே
அறமாகும்!
உரை
பிறரிடத்து பொறாமை கொள்ளும் போது அவர் மீது கொண்ட பொறாமை அவர் கொண்டது போலவே தம்மையும் கொள்ளச்சொல்லி ஆசையை தூண்டுகிறது. ஆசையே கோபத்திற்கு காரணமாகும். ஆசை கோபத்தை தூண்டுகிறது. நமது ஆசைக்கு இணங்காமல் நிகழ்வானது நிகழுமெனில் அவ்வாசையின் மீதோ அல்லது அதற்கு உரியவர் மீதோ நமக்கு கோபம் ஏற்படுகிறது. மகா பெரியவா கருத்தும் இஃதே. அந்த கோபத்தால் கடுஞ்சொல்லை உதிர்க்கிறோம். (துறவிக்கு 'சினம் கணமேயும் காத்தல் அரிது' அறிக)
மேற்சொன்ன இவை அனைத்தையும் புறந்தள்ளி செயல்களை செய்வோரே அறவோர் ஆவர். அதுவே அறமும் ஆகும்.
பதவுரை
அழுக்காறு-(பிறர் ஆக்கம்) பொறாமை; அவா-பேராசை; வெகுளி-சினம்; இன்னாச்சொல்-தீயமொழி; நான்கும்-(இவை) நாலும்; இழுக்கா- இழுக்கி அதாவது விலக்கி; இயன்றது-நடந்தது; அறம்-நல்வினை
குறள் 36
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
கவியுரை
பின் முடிப்போம்
என்றில்லாமல்
இன்றே செய்க
அறம் - அது
ஊழியிலும்
அழியாது
உதவுங்கரம்!
உரை
நாளை செய்வோம் என்று தள்ளிப்போடாது அறம் செய்வோமேயானால், அதுவே நம் அழியும் காலத்திலும் அழியாது வந்துதவும் துணையாகும்.
பதவுரை
அன்று-பின்நாளில்; அறிவாம்-நாம் அறிந்து செய்வோம்; என்னாது-எனக் கருதாமல்; அறம்-நல்வினை; செய்க-செய்யவேண்டும். மற்று-(அசைநிலை); அது-அஃது; பொன்றுங்கால்-அழியும் காலத்தில்; பொன்றா-அழிவில்லாத; துணை-உதவி.
குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
கவியுரை
அறபலனை
அளக்காதே,
சிவிகை
சாய்ந்தவன்
சுமந்தவன்
நிலைகண்டு
உரை
சிவிகையில் அமர்பவனையும் சுமப்பவனையும் கொண்டு அறம் தரும் இடம் இது தான் என ஆராய்தல் கூடாது.
பதவுரை
அறத்தாறு-அறத்தினது வழி; இது என-இது என்று; வேண்டா-வேண்டாம்; சிவிகை-பல்லக்கு (பணியாட்கள் அதில் பயணம் செல்வோரைத் தூக்கிச் செல்வர். (இன்று கோயில்களில் தெய்வ உருவச்சிலைகளைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தப்படுவது.); பொறுத்தானோடு-சுமப்பவனோடு; ஊர்ந்தான்-பயணிப்பவன்; இடை-இடம்.
குறள் 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
கவியுரை
வீண்நாளே
இல்லாது
அறமாற்றும்
ஒருவர்க்கு,
வாழ்நாளே
முற்றுபெற
முக்தி தரும்
உரை
அறம் செய்ய தவறிவிட்ட நாட்களையும் அறம் செய்து சரிகொண்ட படியும் அறம் செய்யவே தவறாத ஒருவன் இருப்பானேயானால், அவன் வாழ்க்கை இந்த ஒரு பிறவியோடு முற்றிக்கும் வகையில் அறமானது வாழ்நாள் வழியடைக்கும் கல்லாகும்.
பதவுரை
வீழ்நாள்-வீணாகின்ற நாள்; படாஅமை-உண்டாகாமல்; நன்று-நல்லவை, அறம்; ஆற்றின்-செய்தால்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; வாழ்நாள்-(பயனின்றி) உயிரோடிருக்கின்ற நாள்; வழி-பாதை; அடைக்கும்-மூடுகின்ற; கல்-கல்.
குறள் 39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில
கவியுரை
அறமுற்றதே
இன்பம் உற்றது;
மற்றது
இன்பப்புகழை
அற்றது!
உரை
அறத்தில் விளைவதே இன்பமாகும், அறச்செயலினால் கிடைப்பதே இன்பத்தை தரும். பிறவற்றையெல்லாம் இன்பத்தை தருவனவல்ல புகழுக்குரியதும் அல்ல.
பதவுரை
அறத்தான்-அறத்தால், அற வழியால், அறவழி வாழ்வினால், அறத்தோடு பொருந்தி; வருவதே-வருவதே, நிகழ்வதே; இன்பம்-மகிழ்ச்சி; மற்றெல்லாம்-(அறமல்லாத வழியில் வரும்) பிறவெல்லாம்; புறத்த-புறம்பாவன, அறத்துக்குப் புறம்பாவன, நீக்கத்தக்கன, (இன்பத்துக்கு) வேறாயுள்ளவை; புகழும்-புகழும்; இல-இல்லை.
குறள் 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
கவியுரை
வினை செய்ய
தகுந்தது
நல்வினை;
தகாதது
தீவினை!
உரை
ஒருவன் தன் காலம் முடிகின்ற வரையிலும் செய்ய தகுந்த ஒன்று சேமிக்க வேண்டிய ஒன்று அறன் ஆகும். செய்யாமல் இருக்க வேண்டியது சேர்க்க கூடாதது பழியாகும்.
பதவுரை
செயல்-செய்தல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-குறிக்கொண்டு கருதும்; அறனே-நல்வினையே; ஒருவற்கு-ஒவ்வொருவர்க்கு. உயல்-ஒழிதல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-ஆராய்ந்துணரும்; பழி-தீவினை.
(பாயிரவியல் முற்றிற்று)
- தீசன்
இனி, திருக்குறளுக்கு சிறந்த உரை என்றால் அது தீசனாரின் கவியுரை! மேலும் தொடர்க👍
பதிலளிநீக்குமிக்க நன்றி! ஆனால் உரைக்குரிய இலக்கணம் இல்லாத இந்த கவியுரையை நானே சிறந்த உரையாக ஏற்று கொள்ளமாட்டேன். பல பெரியோரின் உரைக்கு மத்தியில் அடியேனின் உரை மிகு சிறிதே
நீக்கு