அண்மை

காளமேகர் தந்த சாபம் | குறள் கதை - சிறுகதை

 காளமேகப்புலவரின் சாபம்



திருவரங்கத்தில் அரங்கனின் அருந்தொண்டராய் ஆலயப் பரிசாரகராய் இருந்த வரதன் என்னும் வடிவழகன் வைணவத்தை விட்டு சைவத்தை ஏற்று திருவானைக்காத் திருக்கோவிலில் திகழும் சம்புகேசுவர் ஆலயத்தில் பரிசாரகர் பணியேற்கிறார் . இது ஒரு வியப்பின் உச்சி வைணத்தில் ஆழ்ந்து அரங்கனை சேவித்த வரதன் அனுதினமும் அவனையே எண்ணி வாழ்ந்தவன். திருவானைக்கா சிவனே சரணம் என தன் சீர்மிகு உடலில் சிவத்தை ஏற்றினான். வைணவ சின்னம் அவனுக்கு மறந்து போனது. இது எதன் பொருட்டு நடந்தது எனில் இதனை ஊழ்வலி என்று உரைக்கினும் தவறல்ல.சமணத்தை உயர்த்திய நாவுக்கரசர் தன் தமக்கை திலகவதியாரால் சைவத்தை தழுவி உலகெலாம் பின்னாளில் சைவத்தைப் பரப்பினார் இது உண்மை வரலாறு. ஆனால், திருவரங்கப் பெருமானை சேவித்த வரதன் திருவானைக்கா சிவனை எப்படிச் சார்ந்தான் இதுவே புதுமை இதற்கு காரணம் சிவாலயத்தின் ஆடற்பெண்டிரின் அழகு தேவதை மோகனாங்கி என்னும் மூன்றாம் பிறையே காரணம் அவள் அழகில் வரதன் அடிமையானான் அவளும் மயங்கினாள் - ஓர் ஆடற்களத்தில் இருவரும் சந்தித்தலால் - இணைந்து போயினர் மதத்தால் எதுகை மோனையாய் இருந்த இவர்கள் - காதலால் கைகோர்த்து இணை மோனையாயினர் . 


திருவானைக்கா சிவத்தை தன் சிந்தையுள் அடைக்கும் தேவதாசிகள் - மோகனாங்கியின் மூர்க்கக் காதலை மூளி எனச் சொன்னார்கள். மோகனாங்கி, உன் காதலன் வரதன் அரங்கனின் தொண்டன் - அவன் வைணவன் . நாம் சைவத்தின் மீது தனியாத காதல் கொண்டவர்கள் - எப்படி வரதனை ஏற்றுக் கொண்டாய்?. 


நாம் சிவனைத் தொழும் போது நம் உள்ளத்தில் வைணவம் இருக்கலாமோ ? உடனே நீ வரதனை மறந்து விடு. என ஆடற்பெண்டீர் அனைவரும் வேண்டினர் . காதலன் வரதன் கதவைத் தட்டினான் . மோகனாங்கியோ தளை நீக்காது தடுமாறி நின்றாள் . 


பெண்னே மோகனா ! - பெரும் காதல் தீயே உன்னை இழந்தால் உயிர் தரியேன் யான் என மண்ணில் புரண்டான் தாளை நீக்கினான் தன் காதலன் தரையில் கிடப்பதைக் கண்டு கண்ணீர் உகுத்தாள் - தன் காதல் வரதனை மடியில் சுமந்து மாளாத தன் கண்ணீரை வரதன் உடம்பில் சுமத்தினாள் உருகாதே பெண்ணே ! என்ன காரணம் என்பதனை நான் எப்படி அறிவேன் , என வரதன் அழுதான் 


மோகனாங்கி - தன் அழுகையை நிறுத்தி , அன்பே ! தாங்கள் வைணவர் நானோ சைவம் - இருமதம் எப்படி இயையும் , ஆடற்பெண்டீர் அனைவரும் நகைப்பது எனக்கு மாளாப் பெருந்துயர் என்றதும் வரதன் இடியின் சாயலில் கடகடவென சிரித்தான் . பெண்ணே ! நாளை வருவேன் நீ நன்முல்லையாய் - நறும் பூவாய் மலர்ந்து என்றன் மடியில் இருப்பாய் இது உறுதி என எழுந்து சென்றான் வரதன் . 


வைணவன் வரதன், சிவனை தழுவ சைவப்பெரியோரை வேண்டினான் . 


சமயம் சார்ந்தோர் - வரதனை சைவமாக்கினார் சிவத்தின் சின்னத்தை வரதன் உடம்பில் சுமத்தி - சைவத் தொண்டனாய் சமயம் ஏற்றது . இதனைக் கண்ட மோகனவல்லியோ முழுமதி ஆனாள் தன் காதலன் வரதனை கட்டி அணைத்தாள் நாட்கள் நகர்ந்தன. ஓர் நாள் திருவானைக்காவின் உலகாளும் உமையாள் - வரதன் நாவில் தன் நாவின் எச்சிலால் எழுதி முடித்தாள். 


நீயே பெருங்கவி ! நீண்ட உலகில் உன் புகழ் நிலைத்து வளரும் உன் பெயர் - காளமேகம் எனைப்போற்றி கவிபாடு எனக் கூறி அமர்ந்தாள் . 

காலை ஆலயப் பெருங்கதவும் திறந்தது - காளமேகம் உமையாளை உயர்த்திப் பாடினான் ஆலயம் காப்போர் அறநெறியாளர்கள் ஒதுவார் பலர் - சிவத்தை உணர்த்த பெரியோர் காளமேகத்தைக் கண்டு களித்தனர் - உடலில் மாற்றம் - உலகலாம் ஏற்றுக் கவியில் தேவியின் கருணை விளக்கம் - அனைத்தையும் கேட்டு - தம்மையே மறந்தனர் . 


வரதன் காளமேகமாய் வடிவம் பெற்றதை மன்னர் ஓரி வாயாரப் புகழ்ந்தான் . தன் நாட்டின் அவைக்களப் புலவர் அவனே என செங்கணிவாயார் தன் மோகனாங்கியிடம் விடைபெற்றான் . அடுத்து திருமலைராயன் பட்டிணத்தைச் சேர்ந்தான் . 


திருமலைராயன் எனும் மன்னன் , நாயக்கர் மரபில் வத்தவன் - தெலுங்கன் , தமிழ்மீது மாறாத காதல் கொண்டவன் - தமிழ்கற்றுச் சுவையறித்து கவிபாடும் புலமை பெற்றவன் - திருக்கோவல் நகரைச் சார்ந்த புலவர் பெருமகனை அதிமதுரக் கவிராயர் என்னும் அடைமொழி அளித்து அவரை தன் அவைக்களப் புலவராக ஏற்றுக் கொண்டவர் திருமலைராயன் சிலேடை பாடுவதில் மிகச்சிறந்த கவியை மன்னர் எனும் தன் இனப் பெயருடன் இணைத்து கவிராயர் என அழைத்தான் திருமலைராயன் - தமிழ் மீது மாளாத காதல் கொண்ட மன்னருள் இவனே தலை சிறந்தவன் . 


மூவேந்தருக்கு இணையாக தமிழ்மீது மாளாக் காதல் கொண்ட இந்த மன்னன் - சந்தக் கவியை சரமாகப் பாடும் வல்லமை பெற்றதால் புலவர்கள் இவனைப் போற்றிப் புகழ்ந்தனர் - அறுபத்து மூன்று புலவரோடு - தலையாயப் புலவர் அதிமதுரம் தண்டிகையில் தினம்தினம் நகர்வலமாய் அவை நோக்கி புறப்பட்டு அரசவையில் மன்னரோடு அரியாசனத்தில் அமர்வார் . மக்கள் இந்த தண்டிகைப் புலவர்கள் அரசவை செல்லும்போது புலவர்களை வணங்கி தண்டிகைப் புலவர்கள் வாழ்க என வாழ்த்து முழக்கம் செய்வது அந்நாட்டின் வழக்கமாயிற்று.  வாழ்த்து கூறாதவர் தண்டிக்கப்படுவார் இது மன்னரின் ஆணை . திருமலைராயன்பட்டிணம் சேர்ந்த காளமேகம் அந்நாட்டின் வழக்கம் அறியாதவர். இன்னிசை முழங்க இறைவனைப் போல் தண்டிகையில் வலம் வரும் புலவர்களை இதுவரை பார்த்தறியா காளமேகம் கட்டியம் கூறுபவன், தண்டிகைப் புலவர்கள் தமிழ்க்கடல் தலையாயப் புலவர் அதிமதுரக் கவிராயர் வாழ்க என முழங்குவதும் மக்கள் அனைவரும் வணங்கி வாழ்க வாழ்க என வாழ்த்துரை கூறுவதும் இந்த வையத்துள் காணாத புதுமையாய் இருந்ததாய் தன்னை மறந்து. அந்த நாட்டின் மன்னன் திருமலைராயனை நினைத்து தமிழ்மீது இத்தனைப்பற்று கொண்ட மன்னரைக் காண வேண்டும் என்ற மயக்கம் கொண்டு ஆடா சிலைபோல் அசைவற்று நின்றான் . 


சேவகன் ஒருவன் சினந்து வந்து ஈட்டியால் எட்டி அடித்தான் . காளமேகம் வீறு கொண்ட புலிபோல் விரைத்து நின்று ஈட்டியாளைப் பார்த்து என்ன தவறு செய்தேன் என்று கேட்க , கவிச்சிங்கம் அதிமதுரக்க விராயர் தண்டிகையில் செல்லும்போது அவரை வணங்கி வாழ்த்தொலி முழங்க வேண்டும் . நீர் மரம்போல் நின்றீர் . இதற்கு என்ன தண்டனை தெரியுமா ? 


சிரித்தார் காளமேகம் . அவர் சினம் மறைந்தது நானும் புலவர்தான் உம்மன்னரைக்காண திருவரங்கத்தில் இருந்து வந்துள்ளேன். பொதுவாக , எந்தப் புலவரும் மரியாதை கேட்டுப் பெறுவதில்லை , உம் புலவர் இதில் விதிவிலக்காக இருக்கிறார் . காளமேகத்தின் வாதத்தை காவலன் மறுத்தான் நீர் எவராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை . எம் புலவர் வாழ்க வாழ்க என வாழ்த்தொலி முழங்குங்கள் . இல்லையாயின் நீர் தண்டிக்கப்படுவீர் . 


காளமேகம் இதைக்கேட்டதும் நெருப்பாய் எரிந்தார் . ஓர் ஓலையெடுத்து - அதிமதுரம் வெறும் கடைச்சரக்கு காய்ந்த சரக்கு எனும் பொருள் கொண்ட பாடலை எழுதி காவலனிடம் கொடுத்து தான் உம் புலவரை வணங்கேன் - வாழ்த்தையும் கூறேன் . நீர்போய் என் நிலையைக் கூறும் . நீர் வரும்வரை இங்கேயே நிற்பேன் . ஓடி ஒளியும் பழக்கம் காளமேகத்திடம் கடுகளவும் இல்லை என்று கூறுயனுப்பினார்.


காவலன் விரைந்து அதிமதுரக்கவி ராயர் முன்நின்று நடந்த வற்றைக் கூறி இந்த கவிச் சீட்டை கையில் கொடுத்தான் . அதிமதுரம் படித்தார் அந்த பாடலை எழுதிய கயவனை இடியெனும் ஓசையுடன் இழுத்துவா என இசைத்தார் . வரமறுத்தால் அவனை கட்டி இழுத்து வந்து சிறையில் அடை நாளை அவனை அவையில் சந்திப்போம் என்று கடுமையாக ஆணயிைட்டான் . ஐந்தாறு வீரர்கள் ஆயுதம் தாங்கி பறந்தனர் . காளமேகம் சிறைப்பட்டார் . 


மறுநாள் காலை , திருமலைராயன் அவையில்; மன்னர் திருமலைராயன் , அமைச்சர் , அறுபத்து மூன்று புலவர்கள் , மன்னருக்கு அரியாசனத்தில் இருக்க கவிச்சிங்கம் அதிமதுரக் கவிராயர் காளமேகம் குற்றவாளியாக சிறையில் இருந்து அழைத்து வரப்படுகிறார் . காளமேகம் அவைக்குள் நுழைந்ததும் மன்னரைப்பார்த்து வணங்கி , தமிழன்னையின் தவப்புதல்வரே ! தனித்தமிழே ! புலவர்கள்போற்றும் புலவரே ! நீதிவழுவா நெறிமுறை காக்கும் வளையா செய்கோல் வாழும் வேந்தே வாழ்க நீவீர் புலவர்கள் சென்றுவர தண்டிகை , அவர்களுக்கு அரியாசனம் , மன்னருக்கு இணையாக கட்டியம் , இவற்றையெல்லாம் காணும்போது தாங்கள் தமிழ் மீது கொண்ட காதல் வெளிப்படுகிறது . இனிய தமிழ் வாழும் வரை தாங்கள் சிறப்புற வாழ்வீர்கள். என காளமேகம் மனப்பூர்வமாய் வாழ்த்தினார் . வாழ்த்திய புலவரை மன்னன் வரவேற்கவில்லை. மாறாக குற்றவாளியாய் தன் கொற்றவையில் நிறுத்தி வைத்திருந்ததால் அமைச்சர் மனம் வேதனைப்பட்டது . தம் மன்னர் திருமலைராயன் நீதியை நீக்கி அநீதியை தன் மனதில் ஆட விட்டிருக்கிறானே இது என்ன முறையற்ற செயல் என்பதால் மன்னரைப்பார்த்தார் . அமைச்சரின் பார்வையின் பொருள் புரிந்தும் அதை அலட்சியப்படுத்தினான் . 


அமைச்சர் , வந்திருப்பவர் யாரென்று அறியாமல் அலட்சியப்படுத்துவது மன்னருக்கு அழகல்ல என எண்ணி இந்த நாடு கேடு சூழ காத்திருக்கிறது என உணர்ந்தார் .


காளமேகத்தை நோக்கி, புலவரே! உம் பெயர்? எங்கிருந்து வருகிறீர் ? வந்ததின் நோக்கம் ? இவற்றை தான் செய்து கூறுங்கள் என்றார். 


என் பெயர் காளமேகம்! ஊர் திருவரங்கம் . உம் மன்னரைப்பார்த்து பாடிப்பரிசு பெறவே இங்கு வந்தேன் . காளமேகம் சிறையில் அடைக்கப்பட்டீர் , இன்று விடுவிக்கப்பட்டீர் எதனால் என்று அறிவீரோ? மன்னரைப் பார்த்து காளமேகம் புன்முறுவல் பூத்தார் . மன்னா ! என்னை சிறையில் அடைத்ததற்காக நான் வருத்தம் கொள்ளவில்லை. இதை கேட்ட அறுபத்து மூன்று புலவர்களும் அதிமதுரமும் கடகடவென சிரித்தனர் . மன்னர் அமைதியாக இருந்தார் . மன்னா நான் கூற வந்ததைக் கூட உம் புலவர்கள் குற்றம் என எண்ணுகின்றனர் . 


புலவர்களே ! அனைவரும் சிறையில் இருந்துதான் வெளியில் வந்திருக்கிறோம் இதற்கேன் சிரிக்கிறீர்கள் ஒருக்கால் நீங்கள் அன்னையின் வயிற்றுச் சிறையில் இல்லாது ஆகாயத்தில் இருந்து வந்திருக்கலாம் . 


மன்னா! உம் அவை நாடி வந்த புலரை இப்படித்தான் மதிப்பீரோ ! இது உமது பண்பாடு என்று எண்ணுகிறேன் .. நல்ல நாடு .. 


திருமலைராயன் தீக்குழம்பை கக்கினான் . நாட்டைப்பற்றி உமக்கென்ன தெரியும் ? காளமேகம் கனிவாக சொன்னார் மன்னரைப்பற்றி தெரியும் ? 


ஒரு கற்றறிந்த பெரும்புலவரை சொல்லால் தாங்கள் காயப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் . எம்மால் அதிமதுரம் எனும் விருது பெற்ற எம் நாட்டின் அவைக்களப் புலவரை காய்த்த கடைச்சரக்கு என்று எள்ளி நகைத்துள்ளீர் மன்னனின் முதலில் எம் புலவர் பெருமானிடம் மன்னிப்புகேள் ஆணை கண்டிப்புடன் வெளியானது . 


காளமேகத்தின் தன்மானம் தலையெடுத்தது மன்னரைப் பார்த்து கேட்டான் என்னை சிறைவைத்தது யார் ? நான் செய்த குற்றம் என்ன ? மன்னன் கடகடவென சிரித்தான் , இது கூடவா உமக்குத் தெரியவில்லை , நீர் யாரை அவமதித்தீரோ அவர்தான் உம்மை சிறைவைத்தார் . உடன் காளமேகம் கேட்டார் இங்கு எல்லாம் அவர்தானோ ? பாவம் மன்னன் ... 


அதிமதுரக்கவிராயர் தன் ஆசனத்தை விட்டு எழுந்தார் . காளமேகம் எம் மன்னரை அவமதிப்பது பெருங்குற்றம் , இதற்கு என்ன தண்டளை தெரியுமா ? 


சொல்லுங்களேன் இங்கு எல்லாமே எல்லாமும் நீர்தான் என்பதை, உம்மன்னரே ஒத்துக்கொண்டார் காளமேகம் எதிர்வாதம் செய்தார் . அமைச்சர் காளமேகத்தை நோக்கி , புலவரே தாங்கள் எம் நாட்டின் தலையாய புலவரை ஒன்றும் தெரியாதவர் என்று பொருளில் கவியெழுதி அனுப்பியது குற்றம் தானே என்று கேட்டார் . காளமேகம் அமைச்சர் முகம் நோக்கி சொன்னார் அமைச்சரே நான் உம் நகருக்குள் நுழைகிறேன் . தண்டிகைகள் வரிசையாக வருகின்றனர் . மக்கள் திரளாக ஆங்காங்கே நின்று , பணிந்து , தண்டிகைப் புலவர்கள் வாழ்க ! அதிமதுரக்கவிராயர் வாழ்க என வாழ்த்து முழக்கம் செய்கின்றனர் நான் வியப்பில் ஆழ்ந்து போனேன் புலவர்களுக்கு இந்த நாட்டில் இத்தனை மரியாதையா என்று பூரித்து போனேன் இந்த நாடும் மன்னரும் நீடு வாழ்க என்று என் மனம் வாழ்த்தியது . அந்த நேரத்தில் சேவகன் ஒருவன் தன் ஈட்டிமுனையால் என்னைத் தட்டி ஏன் எம் புலவரை வணங்காது நிற்கிறாய் வணங்காதது பெரும் குற்றம் என்றான் காவலாளியிடம் நானும் புலவன்தான் என்றேன் என்னையே மறந்த இந்த நிகழ்வை எண்ணி இருந்து விட்டேன் . இது குற்றமா ? சரி நான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த காவலரை கேட்கிறேன் . நீர் உடன் சென்று எம்புலவரை வணங்கி வாழ்த்துக்கூறி நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிய காவலனிடம் நான் சொன்னேன் , மரியாதை கேட்டுப் பெறுவது அல்ல அப்படிக் கேட்டுப் பெறுவது புலவர்களுக்கு அழகல்ல , என்று கூறினேன் . காவலன் கைது செய்வேன் எனக் கடுமையாக கூறினான் . என் தன்மானம் இதை ஏற்க்காது போயிற்று செய்யாத குற்றத்திற்கு தண்டனையா உம் புலவர் காய்ந்த கடைசரக்கு நான் காளமேகம் என்று கூறி இக்கருத்தை பாடலாய் எழுதி உம் புலவரிடம் கொடு, பின்வந்து என்னை கைது செய் என்று கூறி அனுப்பினேன் இதுதான் நடந்தது . இதற்குத்தான் சிறை தண்டனை இந்த நாட்டில் , காளமேகம் கூறியதை கேட்டபின் அமைச்சர் மனம் வேதனைப்பட்டது . மெனனமானார். அமைச்சரைப் பார்த்து சொன்னார் . அமைச்சரே ! என்னிலும் சிறந்த புலவர் இவரென்றால் இவர் கால்களில் விழுந்து பணியக் காத்திருக்கிறேன் . வெறும் தம்பட்டம் அடிப்போர்க்கு என்தலை வணங்காது . 


உடன் காளமேகத்தை பார்த்து அரசன் , இது அரசவை , புலவர் சபையல்ல வார்த்தைகளை வாரி இறைக்காதீர்கள் என எச்சரித்தான் . 


அமைச்சர் மன்னனைப் பார்த்து சொன்னார் , மன்னா! வத்திருப்பவரும் புலவர் என்பதை மறவாதீர் . நம் புலவரை அவர் வணங்காதது அவர் விருப்பம் அவர் உம் நாட்டவர் அல்ல , உம் ஆணைக்கு கட்டுப்பட . அதிமதுரம்தான் இந்த உலகில் பெருங்கவி என்பது உமதெண்ணம் . அதைவிட பெருங்கவிகள் ஆயிரம் பேர் இருக்கலாம் . ஒரு புலவரை சிறையிடுவதும் அவரை மரியாதை இன்றி நடத்துவதும் பெருத்த வேதனைக்குரியதாகும் . இதே அவமரியாதை தங்கள் அவைக்களப்புலவருக்கு உண்டானால் அவர் சகிப்பார் ? எண்ணிப் பாருங்கள் அமைச்சரின் அறிவுரையால் அதிமதுரக் கவிராயர் கொதித்தார் . அமைச்சரே , மூச்சு விடுமுன்னே ஆச்சுதென இங்கு முன்னூறு கவியை அளிப்பேன் . இப்புலவனால் ஆகுமா என கொக்கரித்தார் . இதைக் கேட்ட காளமேகம் அமைதியாக சொன்னார் . அதிமதுரக் கவிராயரே அடியேன் ' உம் ' மெனும் முன்னே ஓராயிரம் கவிதை உம் முன்னே கொடுப்பேன் எம் அன்னை என்நாவில் எப்போதும் இருப்பாள் . மன்னா , என்னை உணர்வற்றவனாய் ஊமையாய் எண்ணிவிட்டீர் . நீவீர் அறியாமையினாலும் , அன்னைத் தமிழ்மீது கொண்ட பற்றாலும் என்னை உதாசீனப்படுத்தி விட்டீர் இனியும் பொறுமையாய் இருக்க என்னால் இயலாது 


அதிமதுரம் என்னை சோதிக்க நீர் தயாரா ? என பொங்க , அதிமதுரம் நீர் அரிகண்டம் பாடுவீரோ என்று ஆர்ப்பரித்தார் . அமைச்சர் இடையில் அமைதிபடுத்தினார் . கற்றறிந்த புலவர் முன்னிலையில் நாளை நீங்கள் போட்டியைத் தொடங்கலாம் என்று முடித்தார் . இத்துடன் அவை கலைந்தது . 


திருமலைராயன்பட்டிணம் திருவிழாக்கோலம் பூண்டது அதிமதுரக்கவிராயரை வெல்வது அரிது . இளைஞன் ஒருவன் எதிர்க்கிறான் . பாவம்தன் தலையை இழக்கப் போகிறான் என நகர்முழுதும் புலம்பியது . 


மன்னர் அமைச்சர் அண்டை நாட்டுப் பெரும் புலவர்கள் அனைவரும் அமர்த்திருந்தனர் . அதிமதுரம் தம் அரியணையில் அமர்ந்தார் . அவரது கனத்த குரல் அவை முழுதும் கேட்டது . 


அவையோரே என்னை இந்த காளமேகம் எதிர்க்கிறார் , என்னைவெல்லாது போனால் இவரது தலை வெட்டப்படும் . இது மன்னரின் ஆணை . 


காளமேகம் அவையோரை பார்த்து கேட்டார் . தான் வென்று விட்டால் அதிமதுரத்தின் தலை வெட்டப்பட வேண்டும் . இதுவும் மன்னரின் ஆணைதானே புலவர் பெருமக்கள் ஆம் ஆம் என்றனர் . 


அதிமதுரம் பற்களைக் கடித்தபடி அரிகண்டம் பாட வேண்டும் என்றதும் அதிமதுரமே! செறுக்கால் ஒருவன் சிறப்பதில்லை , புலவருக்கு அடக்கம் வேண்டும் . நீர் கேட்பது அரிகண்டம் , நான் எமகண்டம் பாடுகிறேன் அதிமதுரம் விழிக்கிறார் . எமகண்டம் என்றால் .. 


காளமேகம் சிரித்தார் அஞ்சாதீர் அதிமதுரம் பாடப் போவது தான் உமக்கேன் அச்சம் 16 அடி நீளம் அகலம் ஆழம் உள்ள குழியை வெட்டி அதில் பாதிவரை நெருப்பை நிரப்ப வேண்டும் . குழியின் மேல் பரப்பில் நான்கு மூலையிலும் --- நான்கு யானைகள் நிறுத்தவேண்டும் , அதன் துதிக்கையில் சங்கிலிகள் இருக்கும் , அதன் பிணைப்பில் ஒரு பலகை அது நெருப்புக்குழிக்குள் இருக்கும் . அதன்மீது நான் அமர்த்திருப்பேன் புலவரும் கேட்கும் தலைப்பிற்கு நான் செய்யுள் இயற்றி என் கழுத்தைச் சுற்றிலும் கர் கத்திகள் தொங்கும் . நீரும் உம் தரவேண்டும் . பாடலில் பிழை இருந்தால் அல்லது பாடாது நின்றாலோ சங்கிலி பலகையை யானையின் துதிக்கை குழியில் விழும் , கூரிய வாள் என் கழுத்தை வெட்டி எரியும் இதுதான் எமகண்டம் . 


இதைக் கேட்டதும் - பெரும் புலவர்கள் அனைவரும் அஞ்சினர் . அதிமதுரம் மனத்துக்குள் ஆனந்தக் கூத்தாடினார் . போட்டி தொடங்கியது மரணக்குழிக்குள் காளமேகம் அமர்த்தார் . அதிமதுரமும் அவர் சீடர்கள் அறுபத்து மூவரும் வஞ்சக நெஞ்சத்தோடு பொருந்தாத் தலைப்பை கொடுத்து பாடல் கேட்டனர் நடுவராக இருக்கும் புலவர்கள் இதை தவறென சுட்டிக்காட்ட மன்னன் உறுதியாக நின்றான் . போட்டி என்றால் இப்படித்தான் இருக்கும் . இயலாது போனால் காளமேகத்தை எரிகுழியில் விழவைப்பேன் என எச்சரித்தான் . காளமேகம் சிரித்துக்கொண்டே செய்யுளை  தொடுத்துக் கொண்டே இருந்தார் . அதிமதுரம் அறிவு காய்ந்து போகும் வரை பாடல் கேட்டுக் கொண்டிருக்க காளமேகம் பாடலை பிழையின்றி வாரி வாரி இறைத்தார் . திருமலைராயன் மயங்கினாள் அமைச்சர் திடுக்கிட்டார் . அதிமதுரம் ஆணவம் அடங்கி வாயடைத்துப் போனார் . தீர்ப்பை வழங்க வந்த பெரும் புலவர்கள் அனைவரும் சிலேடை நூற்றையும் செதுக்கிய மேகம் கார்போல் பெய்யும் கவிமழை என போற்றி புகழ்ந்து அவரே வென்றார் . அதிமதுரம் தோற்றார் என முடிவு கூறினர் . பொறுக்க வில்லை மன்னன் காளமேகம் வென்றதாய் கூற மறுத்து விட்டான் . மாறாக காளமேகத்தைப் பார்த்து உம் மீது உள்ள குற்றத்தை நீக்கி விட்டேன் நீர்போகலாம் என ஆணவத்துடன் கூறினான் . 


புலவர்கள் அவன் கூற்றை வெறுத்தனர் . அதிமதுரத்தின் தலையை வெட்டாது போனாலும் காளமேகம் வென்றார் எனக் கூறலாமே என்றனர் . என் நாட்டின் அவைக்களப் புலவரை என்னால் அதிமதுரம் என விருது பெற்றவரை தண்டித்தால் இந்த நாடு ஏற்காது , நானும் ஏற்க மாட்டேன் . எம் புலவரை காளமேகம் அவமானப்படுத்தியவர் . இதோ எமகண்டத்தை எம் அதிமதுரக் கவிராயரும் பாடி முடிப்பார் . பாடல் காளமேகத்தின் பாடலைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் அதனால் எம் கவியாரும் வென்றவர்தான் எப்போதும் எம் கவிராயர் தோற்கமாட்டார் . இது உறுதி என்று முடித்தார் . 


காளமேகம் வேதனை விளிம்பில் நின்றார் . அறம் பிழைத்த மன்னனே! உம்மைப் பாடிப்பரிசில் பெற வந்த எம்மை சிறையில் அடைத்து எமகண்டம் பாடவைத்து, வென்ற என்னை இழிவு படுத்தி விட்டீர் இதுவரை அமைதிகாத்த என்னை புயலாக மாற்றியவனே! என் பாடலை சீர் இல்லா பாடலென இழிவு படுத்தியவனே! உன் நாடு அழியும் என்று கடுஞ்சினம் கொண்டார் . 


அவர்கண்கள் எரிந்து உன் நாட்டின் மீது மண்மாரி பொழியட்டும் என்றும் , கோளார் இருக்கு மூர் கோள்வரவு கற்றவூர் என ஆரம்பித்து நாளையே வண்மாரியற்று வெறுத்து மிகக் கறுத்து மண்மாமியை கவிந்தவான எனப்பாடினார் காளமேகம் . உடன் சூறாவளி சுழன்று எழுந்து வீசியது திருமலைராயன்பட்டிணம் முழுதும் மண்மாரி பெய்தது . மண் மேடாயிற்று . மன்னரும் மக்களும் மாண்டனர் இதைத்தான் வள்ளுவர் பாடல் தெளிவுர  விளக்குகிறது . 


குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி  
கணமேயும் காத்தல் அரிது - ( குறள் - 29 ) 


நல்ல பண்பு நலன்களாகிய மலையின் மேல் ஏறிநின்ற பெரியோர் ஓர் கணநேரமே கோபம் கொள்வார் . ஆயினும் அத்தக் கோபத்திலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும் . 


நிறை குணம் கொண்டோர் கடுஞ்சினம் பெறின் அதன்விளைவு பெரும் அழிவைத் தரும் என்பது ஐயன் கூற்று என்றும் அழியாது என்பதே உண்மை .


- உதியன்


கருத்துரையிடுக

புதியது பழையவை