வான் சிறப்பு | கவியுரை
குறள் 11
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
கவியுரை
விண்ணானது
மண்ணுக்கு
விடாது
வழங்குதலால்,
அம்மழையே
அமிழ்தாகிறது!
உரை
வானம் அகலாது உயர்ந்து நின்று கொண்டே மறுக்காது வழங்கி கொண்டே இருப்பதால், அதை அமிழ்தம் என்று அழைப்பதில் ஒரு தவறும் இல்லை.
பதவுரை
வான்- விண்ணுலகம், மழை; நின்று-(இடையறாது)நிற்ப, இருந்து; உலகம்-நிலவுலகம்; வழங்கி -நிலைபெற்று, இயங்கி, நடைபெற்று; வருதலால்-தொடர்வதால்; தான்-தான் (அதாவது- மழை); அமிழ்தம்-சாவாமருந்து; என்று- என்பதாக; உணரல் பாற்று-அறியத் தக்கது, தெரிதல் தன்மையுடையது.
குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
கவியுரை
உண்போர்க்கு
உணவேற்ற
உணவுக்கே
உணவாகி
உதவும்
மழை….
உரை
உண்போர்க்கு உணவாக மட்டுமல்லாது, அவர் உண்ணும் உணவுக்கும் உணவாக வந்து உதவுகிறது மழை.
பதவுரை
துப்பார்க்கு-உண்பவர்க்கு; துப்பு-வலிமை (சத்து); ஆய-ஆகிய; துப்பு-உணவு; ஆக்கி-ஆகும்படி செய்து; துப்பார்க்கு-உண்பவர்க்கு (இங்கு 'குடிப்பவர்க்கு'); துப்பு-உணவு (இங்கு 'நீர்'); ஆயதூஉம்-ஆவதும் (தூவும் அதாவது பெய்யும் என்றும் ஓர் உரை உள்ளது); மழை-மழை.
குறள் 13
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.
கவியுரை
மண்நீர்
வாய்த்தும்
விண்நீர்
பொய்த்தால்
பசி கண்ணீர்
நம்மை
மாய்த்துவிடும்
உரை
பரந்த இவ்வுலகம் விரிந்த திக்கெல்லாம் திரவத்தாலே திகழ்கிறது. அப்படியிருந்தும், வான் மழை பெய்யாது பொய்த்துவிட்டால் பசி என்றே பணியே நம்மை மாய்த்துவிடும். (வள்ளுவர் காலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் எந்திரம் இல்லை)
பதவுரை
விண்நின்று-வானம் நிலைநிற்க (விண்இன்று-மழை இல்லாமல்); பொய்ப்பின்-பொய்க்குமானால்; விரிநீர்-அகன்று பரம்பிய நீர் (கடல்); வியன்-பரந்த; உலகத்துள்-உலகத்தில்; உண்இன்று-உணவின்மையால் (உள்நின்று-நிலைபெற்று); உடற்றும்-வருத்தும்; பசி-பசித்தல்
குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
கவியுரை
உயிர் தழைக்கும்
மழையே
விழமாட்டால்,
பயிர் விளைக்கும்
உழவோர்
உழமாட்டார்!
உரை
வான் தன் கொடையான மழையை வாரி வழங்கவில்லையானால், ஏர் உழும் வேளார் உயிர் காக்கும் பயிரை உழுவது சந்தேகத்திற்குரியது தான்.
பதவுரை
ஏரின்-கலப்பை(உழவுக் கருவி)யால்; உழாஅர்-உழமாட்டார், உழுதலைச் செய்யார்; உழவர்-உழுபவர், உழவுத் தொழில் செய்பவர்; புயல்-மழை; என்னும்-என்கின்ற; வாரி-வருவாய்; வளம்-வளம்; குன்றிக்கால்-குறைந்தால். .
குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கவியுரை
பெய்யாது
கெடுப்பதும்,
கெட்டார்க்கு
பெய்து
கொடுப்பதும்
மழையே
ஆகும்.
உரை
வானம் பெய்யாது பஞ்சத்தை கொடுக்கிறது பின் பெய்தே பஞ்சத்தை கெடுக்கிறது. பெய்யாது கெடுத்து பின் பெய்து கொடுப்பது மழையின் இயல்பாகும்.
பதவுரை
கெடுப்பதூஉம்-இடர் உண்டாக்குவதும்; கெட்டார்க்கு-துயருற்றவர்க்கு; சார்வாய்-துணையாய், ஆறுதலாக; மற்று-பின், ஆனால்; ஆங்கே-அதுபோல; எடுப்பதூஉம்-மேலோங்குவிப்பதும், தூக்கி விடுவதும், உண்டாகுவதும், வாழ்விப்பதும்; எல்லாம்-அனைத்தும்; மழை-மழை.
குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
கவியுரை
வான் மழை
கொட்டாது
போனால்,
புல் தலை
காட்டாது
போகும்!
உரை
மழைத்துளி உலகில் விழாமல் போனால், சிறு புல் கூட மண்ணில் தலைக்காட்ட (வளர)வாய்ப்பில்லை.
பதவுரை
விசும்பின்-வானத்தின், வானத்தினின்றும்; துளி-மழைத்துளி, மழை; வீழின்-விழுந்தால்; அல்லால்-அன்றி; மற்று-ஆனால், பின்; ஆங்கே-அவ்விடத்தே; பசும்-பசிய; புல்-புல்; தலை-முடி; காண்பு-காணல்; அரிது-அருமையானது.
குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
கவியுரை
நெடுங்கடலும்
வற்றும்,
பெருமுகில்கள்
நிற்றால்!
உரை
தடித்த(பெருத்த) மேகங்களெல்லாம் தன்னிடமுள்ள நீரை தராது போனால், பெருங்கடல்களெல்லாம் தன் நீர் வளத்தை இழந்துவிடும். (குறள் நேரடி பொருள் இதுதான்)
(தடிந்தெழிலி என்னும் சொல்லை சில உரையாசிரிய பெருமக்கள் 'நீரை முகர்ந்த மேகம்' என்னும் பொருளில் கொள்வதால் (அதுவும் சரியே), மழைக்கான அறிவியல் காரணத்தையும் இக்குரல் தெளிவுபடுத்துகிறது என்பதையும் உணரலாம்)
"கடலிலிருந்து நீரை முகர்ந்த மேகமானது மீண்டும் கடலுக்கே/உலகுக்கே அந்நீரை தராது போனால் நெடுங்கடலும் வற்றிப்போகும்"
பதவுரை
நெடுங்கடலும்-ஆழமும் அகலும் உள்ள அளவில்லாத கடலும்; தன்நீர்மை-தன் இயல்பு, தன் தன்மை; குன்றும்-குறையும், குறைவுபடும்; தடிந்து-பூரித்து, பெருத்து, குறைத்து (முகந்து); எழிலி-முகில்; தான்நல்காது-தான் தராதது, தான் பெய்யாதது; ஆகிவிடின்-ஆகிவிட்டால்
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கவியுரை
வானவரை
போற்றுவோரும்
தூற்றுவர்,
வானின் இரை
வற்றிவிட்டால்!
உரை
வானம் நல் மழையை தரவில்லையானால், அம்மழையை தரும் இயற்கைக்கு (அன்றைய நம் மக்கள் இயற்கை தருவிக்கும் வினையினையே உருவங்களாய் வடித்து கடவுளென வழிப்பட்டனர்) சிறப்பாக செய்யப்படும் எந்தவித வழிபாடுகளும் நடக்காது.
பதவுரை
சிறப்பொடு- சிறப்பான விழாவுடன்; பூசனை-வழிபாடு; செல்லாது-நடவாது, நடைபெறாது; வானம்-முகில்; வறக்குமேல்-வறண்டுபோனால் (பெய்யாதாயின்); வானோர்க்கும்-விண்ணவர்க்கும்; ஈண்டு-இங்கு, இவ்வுலகின் கண்.
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
கவியுரை
இல்லறமளிக்கும்
தானத்தையும்
துறவறமடக்கும்
தவத்தையும்
இயற்கை பொழிய
மறுத்துவிட்டால்;
நிறுத்திவிடும்
இவ்வையகமே.
உரை
வானம் மழையை வழங்கவில்லையானால், உலகில் அறங்கள் நிலைக்கவே சாத்தியமில்லை. எனில், இல்லறம் வழங்கும் தானமும் துறவறம் ஏற்று அடக்கும் விரதமான தவமும் எப்படி நிலைக்கும்?
பதவுரை
தானம்-கொடை; தவம்-நோன்பு; இரண்டும்-இரண்டும்; தங்கா-நிலைத்து நிற்கா, உளவாகமாட்டா; வியன்-அகன்ற, விரிந்த; உலகம்-நிலவுலகம்; வானம்-முகில், வானிலிருந்து பொழியும் மழையை இங்கு குறிக்கும்; வழங்காது- நல்காது, பெய்யாது; எனின்-என்றால்.
குறள் 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
கவியுரை
உலகின்றி
வானில்லை!
வானின்றி
நீரில்லை!
நீரின்றி
நாமில்லை,
நல்லொழுக்கமும்
இல்லை!
உரை
நீர் இல்லாமல் இவ்வுலகம் ஒருபோதும் நிலைக்காது. அதுபோல அம்மழை நீர் இல்லாமல் இவ்வுலகத்தாரிடம் ஒழுக்கமும் ஒருபோதும் இருக்காது.
பதவுரை
நீர்-நீர்; இன்று-இன்றி, இல்லாமல்; அமையாது-நிலைபெறாது, முடியாது; உலகு-உலகம்; எனின்-என்றால்; யார்யார்க்கும்-எவருக்குமே, எவ்வகைப்பட்டவர்க்கும்; வான்-வானம், மழை; இன்று-இல்லாமல்; அமையாது-இருக்காது; ஒழுக்கு-ஒழுக்கம்.
தீசன்
👏🏻👏🏻👏🏻
பதிலளிநீக்கு👌👌👌
பதிலளிநீக்கு13 மற்றும் 14 வது குறட்பா கவியுரை மாதிரி இனி அதிகம் வரணும் என எதிர்பார்க்கிறேன்.. அவை தனித்து மிளிர்கின்றன
பதிலளிநீக்குFirst plan தான்டா best plan என்று நடிகர் வடிவேலு சொல்வது போல,
நீக்குநொடிப்பொழுதில் சமைக்கப்படுவதே அனைவரையும் கவர்கிறது.
கருத்துக்கு நன்றி
அருமை அருமை... மேலும் தொடர்க👌👌
பதிலளிநீக்கு