அண்மை

வந்தே மாதரம் வேண்டிலையோ?

 எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்



சொல்லிய சில விஷயங்கள் தான் எப்போதும் சர்ச்சை ஆகும்..! ஆனால் சொல்லாத ஒரு விஷயம் கூட சர்ச்சையை கிளப்புவது வேடிக்கையான ஒன்று..!


சமீபத்திய சட்டமன்ற ஆளுநர் உரையில்...,

முடிவில்.. 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லாமல் முடித்திருந்தார்.


இதுவே சர்ச்சை ஆனது!


இதை ஒரு உறுப்பினர் குறிப்பிட்டு காட்டி விவாதத்தை தொடங்கிவைத்தார்..., "எங்கள் அரசின் ஆளுநர் உரையில் "ஜெய் ஹிந்த்" என்றெல்லாம் சொல்லி முடிக்காமல் இருப்பதே ஒரு பாராட்டுக்குரிய விஷயம்" என்று சொல்லிவிட்டார்!

(அவர் அதை இன்னும் தெளிவாக சொல்லி இருந்திருக்க வேண்டும்..

மேலோட்டமாக கூறியதில் அனர்த்தமாகி விட்டது!)


உடனே தேசிய கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஏன் இந்த வார்த்தைகளுக்கு என்ன குறை? இதில் ஒன்றும் தவறான அர்த்தமில்லையே..! தேசபக்தி மிக்க மந்திர சொல் அல்லவா..இது?


ஆம்..! உண்மைதான்.

விடுதலை வீரர்களும் தியாகிகளும் உச்சரித்த புரட்சிகர முழக்கம் இது!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் க்கு அடையாளமாக கூறப்படும் இந்த வாசகத்தை அவருக்கே அறிமுகம் செய்த முன்னோடி நம் தென்தமிழ்நாட்டு மாவீரன் செண்பகராமன் ஆவார்!


அதனால்தான் அவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன் " என்றே வரலாறு குறிப்பிடுகிறது!!


அன்றைய ஆங்கிலேயரை எதிர்த்து இந்துமக்களை ஒன்றிணைப்பதற்காக அவர் அதனை பயன்படுத்தினார்.


அப்போது 'ஹிந்த்' என்ற பதம் பூரா இந்துஸ்தானத்தையும் குறித்து வழங்கப்பட்டது!


"The Hindu" என்கிற பிரபல ஆங்கில நாளேட்டைகூட நம் மதராஸ் மாகணத்து தமிழர்தான் தொடங்கி நடத்தினார்..!



ஆனால்.. நாடு மத ரீதியாக பிரிதலை சந்தித்தபோது அதன் பொருள் துரதிருஷ்டவசமாக மாறிவிடுகிறது..!


இப்போது பாகிஸ்தான் போல இந்துஸ்தானத்தை குறிப்பிட முடியாது..


இப்போது நாம் மதசார்பற்ற நாடு!


நாட்டிற்கு இரண்டே பெயர்கள் தான்!

இந்தியா.. அல்லது பாரதம்!


இனி இந்து என்றால் அது எல்லா இந்தியர்களையும் குறிக்காது! (அப்படி குறித்தால் தான் நாடு நல்லாயிருக்கும் என்று தனக்குதானே நினைத்து ஒரு கட்சி பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது..!)


அதிலும் 'ஹிந்த்' (Hind)என்பது மத அரசியல் ரீதியாகவும்

மொழி அரசியல் ரீதியாகவும் அதிக உள்நோக்கம் கொண்டிருக்கிறது!


Hind நேரடியாக இந்து மதத்தையும்


Hind நேரடியாக இந்தி மொழியையும் குறிக்குமே அன்றி..

நேரடியாக நம் முழுநாட்டை குறிக்காது.


முன்பும் கூட

இந்திய நாட்டை அது  மறைமுகமாகவே அதிலும் ஒரு ஆகுபெயர் போலத்தான் குறித்து வந்தது!!


அதை தான் அந்த உறுப்பினர் சொல்லவந்தாரே தவிர அந்த சொல் உணர்த்துகிற தேசப்பற்றை கண்டித்து அல்ல!


உங்களுக்கு ஒன்று தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சியில் கூட நாம் இத்தனை வரிகளை கட்டிக்கொண்டிருக்கவில்லை..!


சந்தேகத்திற்கிடமின்றி பேரிடர் சமயங்களிலும் கூட மக்களிடம் ஒன்றிய அரசு பகல்கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவரவர் உணர்ந்திருக்கிற நேரம் இது..!


இருந்தும் ஏன் நாம் அப்போது போல இப்போது போராடவில்லை?


ஏனெனில் அன்றைக்கு விடுதலை போராட்டம் வரியை எதிர்த்து அல்ல..


வரி வாங்கியவரை எதிர்த்தே நடந்தது..!


நோய்வந்து, தொழில்முடங்கி,

பட்டினிகிடந்து வரிகட்டி செத்தாலும் இன்று நாம் நம்முடைய அரசால் நோகிறோமே அன்றி..


அன்றுபோல யாரோ ஒரு அந்நியனிடம் அடிமையாக அல்ல..!


( இதற்காக சொந்தஅரசே மக்களை கொள்ளைஅடிப்பதை கிஞ்சுற்றும் ஏற்க முடியாது..! நிலைமை மாறும் என நம்புவோம். மாற்றுகிற அதிகாரம் நம்கைகளுக்கு வந்து பவள விழா கொண்டாடி வருகிறோம்..என்பதும் நினைவிருக்கட்டும்.)




கிட்டத்தட்ட இந்த பிரச்சனையும் இதுபோன்றதே..


தேசபக்தி க்கு எதிரான விவாதமல்ல இது..!


மொழிதிணிப்புக்கு எதிரான விவாதம்..!


தன் மொழி உரிமையை நிலைநாட்ட வேண்டி எழுந்த முழக்கம்..!


நமஸ்காரம் என்பதை வணக்கம் என்று சொல்லுவதால் அது அவமரியாதை ஆகிவிடுமா என்ன?


அதுபோன்றே..


ஜெய் ஹிந்த்!

பாரத் மாதா ஹி ஜே !

வந்தே மாதரம்!


முதலான புரட்சி வாசகங்களை தமிழ் படுத்தி கூறுவதில் தவறொன்றுமில்லையே!!


தமிழில் அதை கூறினால்  இங்கு யார் எதிர்க்க போகிறார்கள்..?


ஜெய் ஹிந்த் என்பதை 

"வெல்க நாடு " என்றோ

 "வெல்க இந்தியா "  என்றோ அல்லது 

"பாரத பொன்னாடு வாழ்க!"

 என்றோ கூறலாமே..! பாமர மக்களுக்கும் எளிதில் புரியுமல்லவா..?


"எங்கள் பாரத தாய்க்கே வெற்றி!!"


இதைதானே 'பாரத்மாதா ஹி ஜே'

என்கிறீர்கள்..!


தமிழில் சொல்வதனால் அந்த தாரகமந்திரங்கள் தரங்குன்றிபோய்விடுமா என்ன??


இந்த மாதிரி மொழிப்பெயர்த்து  பாடுவதை

 ஏதோ நான் கிறுக்குத்தனமாக முன்னெடுப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்!!


நம் மாநிலத்தின் மகாகவி யே இதனை தொடங்கி வைத்தார்...


"வந்தே மாதரம்...!" எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் தெரியும்??

கூறுங்கள்...


அநேக பாரதியார் கவிதை புத்தகங்களில் எடுத்த உடன் இருக்கிற முதல்பாடலின் முதல்வரியிலேயே இதற்கு விடை இருக்கிறது..!!


"வந்தே மாதரம் என்போம்! - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்..!"


அவ்வளவு தான்..


முதல் வரி வெறும் வாக்கியம். மறுவரிதான் அதற்கான பொருள்!!


அதுதான் பாரதி..!!


"தாயகமே உனை வணங்குகிறேன்.!"


ஆங்கிலத்தில் சொல்வதாயின்..


" Salute my Motherland..!"


இதுமட்டுமல்ல..  பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பார் வடமொழியில் நனைத்து எடுத்து தன் தாய் மொழியாம் வங்காளத்தில் இயற்றிய ஆனந்த மடம் கவிதை நூலில் வருகிற "வந்தே மாதரம்" பாடலை கூட பாரதி மொழிபெயர்ப்பு செய்து தந்துள்ளார்... அதுவும் இரண்டு விதமாக..!!


நான் சுருக்கமாக சில பத்திகளை மட்டும் தருகிறேன்..


************


வந்தே மாதரம்..!

"வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்

சஸ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்.."


என மூல பாடல் நீளும்...




*************

மகாகவியின் மொழிபெயர்ப்பு!!



(முதலாவது)


வந்தே மாதரம்...!!


இனிய நீர்ப் பெருக்கினை!

இன்கனி வளரத்தினை!

தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை.!

பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!


(வந்தே மாதரம்..!)



வெண்ணிலா கதிர்மகிழ் விரித்திடும் இரவினை..!


மலர்மணி பூத்திகழ் மரன்பல செறிந்தனை..!


குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை..!


நல்குவை இன்பம்! வரம்பல நல்குவை..!


(வந்தே மாதரம்..! )



இதை விட சிறப்பாக அடுத்த முறை மொழிபெயர்த்தார்..பாரதி!


(இரண்டாவது..)


நளிர்மணி நீரும்... நயம்படுகனிகளும்...


குளிர்பூந் தென்றலும்.. கொழும்பொழிற் பசுமையும்..


வாய்ந்துநன் கிலகுவை 

வாழிய அன்னை..!!


தெண்ணில வதனில் சிலிர்த்திடும் இரவும்


தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்


புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்


வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. 



திருநிறைந்தனை, தன்னிகரொன்றிலை!


தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை


மருவு செய்களின் நற்பயன் மல்குவை


வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை


பெருகு மின்ப முடையை குறுநகை

பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.


இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,


எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! 


**********


உப தகவல்...


நாம் நாட்டுப்பண் (தேசிய கீதம்)

என்று பாடுகிறோமே "ஜனகனமன.". அதை பாடவே தேவையில்லை..! இசைத்தால் போதுமானது.. (கீதம் = சங்கீதம்/இசை)ஆனால் நாம் அதை பாடவும் தெரிந்துவைத்திருக்கிறோம்..!


ஆனால் பாட வேண்டிய  தேசிய பாடலான "வந்தே மாதரம்" நம்மில் எவருக்குமே தெரியாது..! ஏன் பார்த்துகூட சரளமாக பாட /படிக்க முடியாது!!


(எதையுமே முரண்பட செய்வதுதானே நம்மவர் வழக்கம்!)


நீங்கள் வங்க மொழியில் அதை படிக்க வேணாம்..!

பாரதி கரும்புத்துண்டை தேன்குழைத்து தந்திருக்கிறானே அதை படித்து வைத்துக்கொண்டாலே போதும்!!

பாரதி அப்படி நினைத்துதான் இதை வடித்திருப்பார்..!


(அதிலும் இரண்டு variety வைத்திருக்கிறான்.. பாருங்கள்...!நாட்டில் வேறு எந்த புலவன் செய்வான் இதை??)


மொழிப்பற்றை விட்டுக்கொடுத்து ஒரு தேசபற்றை வளரக்க வேண்டியதில்லை..


மொழிப்பற்றோடு நாட்டுப்பற்றும் சேர்ந்தே செழித்தோங்கட்டும்....!!


வாழிய செந்தமிழ்..!

வாழ்க நற்றமிழர்..!

வாழிய பாரத மணித்திரு நாடு!!


சூரியராஜ்


கருத்துரையிடுக

புதியது பழையவை