அதிகாரம் 6
வாழ்க்கை துணைநலம்
குறள் 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
கவியுரை
பதியக
பண்பும்
நிதிவள
நிலையும்
புரிந்தாள்பவளே
மனையாவாள்
பொருள்
(மனை என்பது வீடு என்ற பொருளில் மட்டுமல்லாது குடும்பம் என்ற பொருளிலும் இவ்வதிகாரத்தில் ஒலிக்கும்) குடும்பத்திற்கு தக்க மாண்பு உடையவளாகி அதன் சிறப்பிற்கும் பண்பிற்கும் ஏற்ப வகையில் செயல்பட்டு கணவனின் நிதி நிலை அறிந்து அக்குடும்பத்தை நடத்துபவளே சிறந்த துணையாக இருக்க முடியும்.
பதவுரை
மனை-மனையறம்; தக்க-தகுந்த; மாண்பு-மாட்சிமை; உடையள்=உடையவள்; ஆகி-ஆய்; தன் -தன்னை; கொண்டான்-கொண்டவன்; வளத்தக்காள்-(பொருள்)வளத்துக்குத் தகுதியாக (வளத்துக்கேற்றபடி) வாழ வல்லவளே; வாழ்க்கைத் துணை- வாழ்க்கைத் துணை.
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்
கவியுரை
பண்பில்லா
மனைவி
பெற்றவன்,
பேறுகள்
பெற்றும்
அற்றவன்
பொருள்
மனை மாட்சி இல்லாள் கண் இல்லாயின்- இதில் குடிப்பெருமை தான் கூறப்பட்டுள்ளது. குடிப்பெருமை இல்லாதவள் நம் இல் ஆள் ஆகிவிட்டால் வாழ்க்கை எல்லாம் இருந்தும் இல்லாது போனது போல் ஆகும். குடி பெருமை இருந்தால் வரும் பெண்ணுக்கு நற்பண்பு இருக்கும் என்பது அன்றைய கால நடத்தை. 'தாயை பார்த்து பெண் எடு'. அந்த குடிப்பெருமை பண்பையே தருவதால் 'பண்பு' என எடுத்து கொள்ளுதலே இக்கால நடத்தைக்கு ஏற்றது. இனி குடிப்பெருமை அவசியம் இல்லை.
பதவுரை
மனை-மனையறன்; மாட்சி-பெருமை; இல்லாள்கண்-மனைவியிடத்தில்; இல்லாயின்-இல்லாவிடில். வாழ்க்கை-வாழ்தல்; எனை-எவ்வளவு பெரிய; மாட்சித்து-பெருமையுடையது; ஆயினும்-ஆனாலும்; இல்-உடைத்தன்று.
குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
கவியுரை
பண்பு
உள்ளவளால்
அல்லதெது?
பண்பு
அல்லவளால்
உள்ளதெது?
பொருள்
பண்பு உள்ள மனைவி உங்களுக்கு கிடைப்பாரேயானால், அவரது அனுசரிப்பு குணத்தால் உங்களுக்கு 'அல்லது' எதுவும் நேராது. பண்பற்ற மனைவி கிடைப்பாரேயானால், உங்களிடம் உள்ளதும் நிலைப்பது சந்தேகம் தான்.
பதவுரை
இல்லது-இல்லாதது; என்-யாது? இல்லவள்.மனைவி; மாண்பு-நற்குண்நற்செய்கை; ஆனால்-ஆயினால். உள்ளது-இருப்பது; என்-என்ன?; இல்லவள்-மனைவி; மாணாக்கடை-சிறவாதபோது.
குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
கவியுரை
கற்பு என்ற
வலிமை எழ
பெண்மை விட
பெரிது இல
பொருள்
(பெண்ணுக்கோ ஆணுக்கோ கற்பானது திருமணம் பின்னே அல்லது கலவிக்கு பின்னே தான் உதிப்பதாய் என் அபிப்பிராயம்) அந்த கற்பானது தோன்றிவிட்டால் பெண்மையை விட உலகில் போற்றுதலுக்குரிய படைப்பு இருக்காது. அவர்கள் உயர்கிறார்கள். (சாத்கமும் இதையே கூறுகிறது)
பதவுரை
பெண்ணின்-மனைவியைவிட, பெண்ணைக் காட்டிலும், பெண்ணைப்போல்; பெருந்தக்க-பெருமை மிக்க, பெருந் தகைமையான; யாவுள-எவை இருக்கின்றன; கற்பு-கற்பு; என்னும்-என்கின்ற; திண்மை-கலங்கா நிலைமை; உண்டாகப்பெறின்-இருக்கப் பெறுமானால்
குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கவியுரை
தலைவனை
இறைவனாய்
தொழுதெழும்
தாரம்
சொல்லுக்கே
வானம்
மழையினை
தாரும்
பொருள்
தெய்வம் தொழாஅள் - அதாவது அதற்கு மாற்றாய் என்பதே இங்கு கருத்தாகும். நேரடியாக தெய்வத்தை வணங்கி கொண்டிருந்த பெண், கணவனையே தெய்வமாய் கருதி வணங்கி துயிலெழுகிறாள் எனில், அவள் பெய் என்றாலே வானம் மழையை கொட்டித் தீர்க்குமாம்.
பதவுரை
தெய்வம்-கடவுள்; தொழாஅள்-வழிபடாதவள்; கொழுநன்-கணவன்; தொழுது-வழிபட்டுக்கொண்டு; எழுவாள்-எழுந்திருப்பவள்; பெய்-பொழிவாய்; என-என்று சொல்ல; பெய்யும்-பொழியும்; மழை-மழை.
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
கவியுரை
தன் காத்து,
தன்னவன்
நிலை காத்து,
தம் புகழ்
சொல் காத்து
தளர்வறுப்பவளே
தலைவி
பொருள்
தன்னை பேணி, தன் கணவன் நிலையறிந்து அவனையும் பேணி, குடியின் புகழ் அறிந்து சொல் பேணி சோர்வுறாமல் இயங்குபவளே மனைவியாவாள்.
பதவுரை
தற்காத்து-தன்னைக் காப்பாற்றி; தற்கொண்டான்-தன்னைக் கொண்டவன் அதாவது கணவன்; பேணி-நலன் போற்றி வளர், காப்பு அளி, அக்கறை காட்டு; தகை சான்ற-பெருமை அமைந்த; சொல்- சொல் (இங்கு புகழ் எனப்பொருள்படும்); காத்து-காப்பாற்றி; சோர்வுஇலாள்-தளர்வு இல்லாதவள்; பெண்-(இல்வாழ்க்கைக்குரிய) பெண், மனைவி.
குறள் 57
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
கவியுரை
மதில் காப்பு
வழக்கெல்லாம்
செய்தும்,
மகளிர்க்கு
மதி வழங்கும்
காப்பே
சிறப்பு!
பொருள்
சிறை காப்பு தன் மனைவிக்கு எந்த கணவன் செய்தாலும், அம்மனைவியின் நிறை(மதி) காக்கும் காப்பே சிறப்பாகும்.
பெண்ணுக்கு நிறை இங்கு பல்வேறு உரையாசிரியர்களால் கற்பு என கையாளப்பட்டுள்ளது. 'ஈசன் பெண்ணுக்கு அறிவை அதிகம் வைத்தான்; கற்பை இருபாலுக்கும் பொதுவில் வைத்தான்'. பெண்ணுக்கு மதியே காப்பு என்பதே என் துணிபு.
பதவுரை
சிறை-சிறை செய்து, கட்டுப்படுத்தல், காவல்; காக்கும்-காப்பாற்றும்; காப்பு-காவல்; எவன்-என்ன, யாது; செய்யும்-செய்யும்; மகளிர்-மகளிர், இல்வாழ்க்கைக்குரிய பெண்; நிறை-கற்பு, நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல்; காக்கும்-காப்பாற்றும்; காப்பே-காவலே; தலை-முதன்மை.
குறள் 58
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
கவியுரை
கணவனை
கொண்டிரும்
பெண்டீர்
எல்லாம்
வானகப்பேற்றை
வையகப்பெறுவர்
பொருள்
விறலிக்கு அஞ்சி மனைவிமார்கள் தடார் தடார் என்று வீட்டின் கதவை தாழிட்ட செய்தியை சங்க இலக்கியங்களில் படித்தறியமுடிகிறது.
விறலி ஆண்களை கவரக்கூடிய ஆடையை புனைந்திருப்பாள். ஊர் நற்குடி பெண்களுக்கு அவள் எதிரி. ஆண்களின் கண்ணுக்கு அவள் இனியவள்.
அந்த பெண் போல கணவனை கொண்டிரும் பெண்டீர் எல்லாம் வானகப்பேற்றினை இந்த வையகத்திலே பெறுவர்.
பதவுரை
பெற்றான் -அடைந்தவன்; பெறின்-அடைந்தால் பெறுவர்-அடைவர்; பெண்டிர்-பெண்கள்; பெரும்-பெரியதாகிய; சிறப்பு-பெருமை; புத்தேளிர்-வானவர்; வாழும்-வாழ்கின்ற; உலகு-உலகம்.
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
கவியுரை
புகழேற்ற மனை
இல்லை;
பகை முன்,
நெஞ்சேற்ற நடை
இல்லை!
பொருள்
மனை என்பது குடும்பம் - புகழில்லா குடும்பம் இல்லாதவருக்கு இகழும் பகைவோர் முன்னே நெஞ்சை நிமிர்த்தி ஏறு போல் பீடு நடை போட முடியாது.
பதவுரை
புகழ்-புகழ்; புரிந்த-விரும்பிய; இல்-இல்லாள், இல்லம்; இலோர்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; இகழ்வார்முன்-தூற்றிப் பேசுவோர்முன், பழித்துரைப்போர்முன்; ஏறு-ஆண்சிங்கம், காளை; போல்-நிகராக; பீடு-பெருமிதம்; நடை-நடத்தல்
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
கவியுரை
நல் சிறப்பே
நல் குடும்பம்
அதன்
நல் அணி
நல் பிள்ளை
பேறு
பொருள்
மங்கலம் என்பது நல்ல குடும்பம் ஆகும். அதன் நல்ல அணிகலன் நல்ல குழந்தை பேறு ஆகும்.
பதவுரை
மங்கலம்-பொலிவு, அழகு, நன்மை, நல்வாழ்வு, மங்கல அணி (தாலி); என்ப-என்று சொல்லுவர்; மனை-இல்லறம், மனையாள், இல்லம்; மாட்சி-மாண்பு, பெருமை, சிறப்பு; மற்று-(அசைநிலை); அதன்-அதனுடைய; நன்-நல்ல; கலம்-அணி; நன்-நல்ல; மக்கள்-மக்கள்; பேறு-பெறுதல்.
தீசன்
கற்பை உறுதியாக கடைபிடிக்கும் பெண்ணுக்கு அதைவிட பெருமை தரும் யாதொன்றும் இல்லை என்றே வள்ளுவர் கூறுகிறார்.கவி உரையில் ஏதோ ஒரு குழப்பம் உள்ளது போல் தோன்றுகிறது.
பதிலளிநீக்குமகளிர் நிறை காக்கும் காப்பே தலை - கற்பு இருபாலுக்கும் பொதுவாக இருக்கும் போது 'மகளிர் நிறை' எதுவென சிந்தனை செய்தல் வேண்டும்.
நீக்குபெண்ணின் நிறை மதி யாகும். அம்மதி மனதடக்கத்தை தருமானால் அதுவே கற்பையும் உறுதிபடுத்தும்.
அதனால் மகளிரை காக்கும் நிறை எதுவெனில் அறிவு தான்.
காரணம் மகளிருக்கு நிறை அதுதான்.
நல்ல வரிகள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு