இலங்கை எரிந்தது..!
மகாத்மா காந்தி ஒருமுறை லண்டனில் வசித்த போது அங்கிருந்த லண்டன் வாசி ஒருவர்... "பார்த்தீர்களா மிஸ்டர் காந்தி! எங்கள் லண்டன் மாநகரம் எத்தனை ரம்யமாக இருக்கிறது..! பூமியில் நீங்கள் இதுபோன்றதொரு ஆடம்பரமான நகரை எங்குமே காணவாய்ப்பில்லை!" என்று பெருமைபீற்றி இருக்கிறார்.
காந்தி அமைதியாக சொன்னாராம், " உண்மைதான்..நண்பரே! ஆனால் இந்த வளங்கள் எல்லாம் இங்கிருந்தே உருவானவை அல்லவே..! பெரும் பெரும் காலனிநாடுகளை சுரண்டிக்கொண்டுவந்து சேர்த்ததுதானே?
இங்கிலாந்து போன்ற சிறிய தீவில் இருக்கிற ஒரேஒரு லண்டன் மாநகரை ஆடம்பரமாக கட்டமைப்பதற்கே இந்தியா, ஆப்பிரிக்கா என்ற இரண்டு கண்டங்கள் தேவைப்படுகிறதென்றால்.... இந்தியர்களாகிய நாங்கள் முழு இந்திய நாட்டையும் ஆடம்பரபடுத்த முயன்றால் அதற்கு எத்தனை கோள்கள்/கிரகங்கள் தேவைப்படும்??.."
அன்று காந்தி சொன்னதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.. எனினும் இந்தியமக்களாகிய நாம் புத்தரை செய்தது போலவே காந்திய கொள்கையையும் சுலபமாக கைகழுவி விட்டோம்! அவர் ஒவ்வொரு நகரங்களையும் தற்சார்புடைய கிராமிய மயமாக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் நாமோ ஒவ்வொரு கிராமத்தையும் கொன்றுவிட்டு நகரம் என்றபெயரில் கொடிய நரகங்களை உருவாக்கிவருகிறோம். பொருள்வளத்தின் அடிப்படையில் பார்த்தாலும்கூட இந்திய நகரங்களில் 70% குப்பைகள்தான்.. ஆக்கிரமித்துள்ளன..!
நாகரீகம் என்பது அறிவில் பண்பாட்டில் சுய ஒழுக்கத்தில் மேம்படுவதே தவிர ஆடம்பரத்திலோ அடுத்தவனைகாட்டிலும் தம்மை அதிகபிரசங்கியாக காட்டிக்கொள்வதிலோ அல்ல என்பதை எல்லாரும் உணரவேண்டும்..
தெளிவாக நேரம் காட்டும் தரமான கடிகாரங்கள் முந்நூறு ரூபாய்க்கு கிடைக்கும் போது,, வெறும் ஆடம்பரத்துக்காக மூவாயிரம் முப்பதாயிரம் என தேவையின்றி செலவழிப்பவர்களை என்னவென்று சொல்வது..?
அறிவு உள்ள எவனும் ஆடம்பரத்தை நாடவே மாட்டான்! ஆசை தவறில்லை.. அது இயற்கை! பேராசைதான் தவறு.. அதைவிட பெருந்தவறு 'தாம் அடுத்தவனை பேராசைபட வைக்கணும்' என்கிற நினைப்பு.
இன்றைக்கு இணைய உலக சந்தையே அடுத்தவனின் பேராசையை தூண்டுவதை வைத்துதான் நகர்ந்துகொண்டிருக்கிறது..
ஒரு ஓவிய கலைஞன் தனது சித்திரப் படைப்பை வெளிக்காட்டுவது நியாயமானதுதான். அவ்வாறே எல்லாவகை கலைஞர்களும் தமது படைப்புகளை பகிர்வதும்..
ஆனால் தான் அணிந்திருக்கிற விலையுயர் ஆடையையோ... அணிகலனையோ..
தான் சென்று வந்த சொர்க்கபுரியையோ.. சுற்றுலா தலங்களையோ.. தான் சாப்பிடுகிற கண்ட கண்ட பண்டங்களையோ..
படமெடுத்து அதனை முகநூலிலும் கட்செவி(whats app)அஞ்சலிலும்
அனுப்புவது என்ன மாதிரியான பண்பாடு..?
நம் சந்தோஷ தருணங்களை நெருங்கிய உறவினர் / பழகிய நண்பர்களோடு வேணுமானால் பகிர்ந்து கொள்லலாம். அது அவர்களையும் மகிழச்செய்யும். (உறவை நீட்டிக்க அதுவும் ஒரு வழி) ஆனால் சம்மந்தமே இல்லாத இணையவெளி உலகுக்கும் அறிமுகமில்லா நபர்களுக்கும் வலிய சென்று அனுப்பி பார்க்க வைப்பதில் என்ன நன்மை இருக்கிறது..?
மார்கோபோலோ, வாஸ்கோடகாமா போன்றோர் அப்படித்தான் இந்தியாவை சுற்றிப்பார்த்தோமா போனோமா என்றில்லாமல்,, இல்லாத பொல்லாததையும் சேர்த்து கதைகட்டி எழுதி அந்நிய பேய்களுக்கு பேராசை எனும் தீயை மூட்டி இங்கு வரவழைத்துவிட்டார்கள்..!
விலைஉயர்ந்தவை என்று நாம் வாங்கிவைத்த எத்தனையோ பொருட்கள் (ஆடை/அணிகலன்) சிறிதும் பயன்படாமல் கணப்பொழுதில் காணமல்போயிருக்கும்.. அல்லது உடைந்துபோயிருக்கும்..!
ஆனால்..,
அற்பமானவை... ஏதோ அவசரத்துக்கு பயன்படும் என்று உள்ளூர் சந்தையில் என்றோ பேரம்பேசி வாங்கிய எளிமையான பொருட்கள் இன்றளவும் வீடுகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கும்..!
ஆடம்பரங்கள் (தேவைக்கு மிஞ்சியவை) நிலைப்பதில்லை என்பதைவிடவும் அது முழுமையாக பயன்படுவதில்லை என்பதுதான் செல்வக்கேடு.
இராவணன் வரம்பிலா வலிமை கொண்டவன்.. அவன் தவம் புரிவதிலும் ஈடிணை இல்லாதவன்..! மனதை அடக்காமலா தவமியற்றியிருப்பான்? இருந்தும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை..!
எவை எல்லாம் தன் கண்ணை பறித்ததோ.. எதுவெல்லாம் தம்மை உலகில் தலைசிறந்தவையாக காட்டிக்கொண்டிருந்ததோ அதையெல்லாம் தேடித்தேடி தன் இலங்கையில் கொண்டுவந்து சேர்த்தான் ராவணன்!
ஈரேழு பதினான்கு லோகங்களும்.. இலங்கைக்கு கட்டுண்டு
கிடந்தன.!
சுந்தர காண்டத்தில்... கடல்தாவி,,
இரவில் இலங்கையை அடைந்த அனுமன்.. பின்இரவில் மெல்ல எழுந்த நிலவொளியில்...
இலங்கையை முதன்முறையாக கண்டு அதன் அளப்பரிய ஆடம்பர வளத்தை பார்த்து எப்படியெல்லாம் வியந்தான் என்பதை ஊர்தேடுபடலம் நமக்கு படம்பிடித்து காட்டுகிறது..
இலங்கை வீடுகள் சிமெண்ட் கொண்டு அல்ல காய்ச்சிய பசும்பொன்னை கொண்டு இழைத்துக்கட்டப்பட்டவை!
செங்கல் கொண்டு அடுக்கியவை அல்ல.. அவை நவமணி ரத்தினங்களால் கட்டியெழுப்பப்பட்டவை!
சுண்ணாம்பு /பெயிண்ட் பூசப்படவில்லை... மாறாக மின்னலை பூசி வைத்திருந்தனர் அல்லது கதிரவனின் ஆயிரமாயிரம் வண்ண வெயில் ஒளியையே கொண்டு சமைத்திருந்தனர்.. இரண்டில் எது என்று சரியாக சொல்ல முடியவில்லை!
வன்கொண்டல் மேகங்களை தாண்டி சென்று, சந்திரமண்டலத்தை முட்டிக்கொண்டு நின்றன அரக்கர்தம் மாடமாளிகைகள்...!
அனுமனின் இந்த கண்ணோட்டத்தை கம்பனின் கவியோட்டத்தில் காணுங்கள்...
"பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத-
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்! "
அடுத்து ஒரு காட்சியை பாருங்கள்..
இலங்கை வாழ் அரக்க குல மகளிர்.. வீடுகளில் வாருகோல் கொண்டு பெருக்கி வாசல்தெளித்ததை அனுமன் பார்க்கிறான்.. இதிலென்ன அதிசயம்? எல்லா ஊரிலும் நடப்பதுதானே.. என்கிறீர்களா?
இல்லை.. செயல் என்னமோ அதுதான். ஆனால் அதை செய்தவிதம்.. மந்திர ஜாலமானது!
நம்ம ஊரில் வாருகோல்/ விளக்குமாறு பொதுவாக தென்னங்கீற்றின் ஈக்குச்சியை கொண்டு தோகையாக தொகுத்திருப்பார்கள்.. ஈழத்து பெண்டீர் என்ன செய்தனர் தெரியுமா? வானத்து மின்னலை ஒவ்வொன்றாக உருவி எடுத்து அடுக்கி விளக்குமாறு செய்திருந்தனராம்!
எதை பெருக்க? குப்பையையா? இல்லை..
உயர்ந்த விகாரங்களின் மாடியில் அதைவிட உயரமாக வளர்ந்த செழிப்பான மரங்களின் நறுமண மலர்களிலிருந்து சிந்திய மகரந்த துகள்கள் 'டன் 'கணக்கில் குப்பையாக கொட்டிகிடந்தனவாம்.. அதைத்தான் அவர்கள் கூட்டிபெருக்கி அப்புறப்படுத்தி சுத்தம் செய்திருக்கிறார்கள்..
ஒருவழியாக பெருக்கியாச்சு.. அப்புறமென்ன தண்ணி தெளிக்க வேண்டியதுதானே..! இதற்காக அத்தனை உயர மாடியிலிருந்து கீழே இறங்கி ஏறி நீரை கொண்டு வர முடியுமா? ( Lift வேற அப்போ கண்டுபுடிக்கல.. பாவம்)
அதனால் அவர்கள் அலட்டிக்கொள்ளாமல்,, வானத்தில்இருந்த ஆகாய கங்கை நீரை அலேக்காக அள்ளி.. மிக அழகாக பாகுபோல.. செம்மொழி பேசியபடி தெளித்து வீசினராம்..!
நிகரிலா கற்பனை சிந்திக்கிடக்கும் அப்பாடல் இதோ..
"மா காரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி,
மீகாரம் எங்கணும் நறுந் துகள் விளக்கி,
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி,
பாகுஆய செஞ் சொலவர் வீசுபடு காரம்..!. "
அரக்கர்களின் இந்த மாடமாளிகையை மட்டிலும் கருதினாலே.. அதனை இந்திரனின்
சொர்க்கபுரிக்கு உவமையாக கூறலாம்.. அதுவும் கூட குறைவுதான்.
அப்படி இருக்கும்போது அரக்கர்களின் மொத்த செல்வவளத்தை அளந்து கூறுவதாயின் அது நடக்கிற கதையா? அதை மனதால் நினைக்க முடியுமே தவிர இன்னொரு உவமை கூறி விளக்கமுடியாது..! என நொந்துகொள்கிறான் அநுமன் வாயிலாக நம் கம்பன்.
"இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர - எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசுண்ணும்;
அனையது ஆம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை
நினையலாம்? அன்றி, உவமையும் அன்னதாய் நிற்கும்! "
இவ்வளவு செல்வமும் இத்தனை மாயவித்தைகளும் இத்தனை மகோன்னத பிறவிகளும் இருக்கிற பூமி எத்தனை பாதுகாப்போடு இருக்கும்....?
இலங்கையை சுற்றி ஒரு மதில் அரண் இருக்கிறது..!
அது எப்படி பட்டது தெரியுமா?
காற்றின் கால் புகமுடியாது!
கதிரவன் ஒளி புக முடியாது!
மறலி ஆகிய எமனின் வீரம்கூட அங்கு எடுபடாது!
வான் உள தேவ தேவியர் எவராலும் புகமுடியாது..!
இப்படியே வீணாக சொல்லிக்கொண்டிராமல் ஒரே வரியில் அதன் வலிமையை எடுத்துக்கூற வேண்டுமாயின்...,,
கொடிய ஊழிக்காலத்தில் பிரபஞ்சமே சின்னாபின்னமாகி உருக்குலைகிற போதிலும் தான் சிதையாமல் கடவுளை காட்டிலும் ஒப்பற்றதாய் நிற்கிறதே.... அறம்!!!
அப்பேர்பட்ட அந்த அறத்தினால் கூட அந்த மதிலை கடந்துஉள்ளே புக முடியாது!.
விலைமதிப்பற்ற அந்த பாடலையும் படியுங்கள்....
"கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி-
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா-
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!"
அடேயப்பா...! ஆடம்பரத்துக்கே ஆடம்பரம் செய்தாற்போல.. பொறாமைக்கே பொறாமையை ஏற்படுத்தும் இலங்கையின் வனப்பையும் வளத்தையும் பிரம்மிப்பையும் பார்த்தீர்கள் அல்லவா...?
இதோ இனி,, அந்த ஆடம்பரகோட்டை அக்னிக்கு இரை ஆனதையும் பாருங்கள்....
காற்று நுழையாத அவ்விடத்தினுள் எப்படியோ நமது காற்றின் மைந்தன் நுழைந்துவிட்டான்...! சீதையை தேடி கண்டதோடு அசோகவனத்தை விநாசமாக்கி... அதை தடுக்கவந்த.. கிங்கரர், சம்புமாலி படைகளையும்
சம்ஹாரம்செய்து அடுத்தபடியாக இளவரசன் அக்ககுமாரனையும் வதம் செய்துவிட்டான் வீர அனுமான்!
கொதித்தெழுந்த ராவணன் இந்திரஜித்தனை ஏவ.. அவன் பிரம்மாஸ்திரம் தொடுத்து அநுமனை கட்டி இழுத்துவந்து ராவணன் முன்பு நிறுத்தினான்.
ஒரு சில விவாதங்களுக்கு பிறகு "அந்த வானரத்தின் வாலில் தீ வைத்து கொளுத்துங்கள்..!" என ஆணையிட்டான் ராவணன். அதன்படி அரக்க வீர்கள் அநுமனை இழுத்துச்சென்று வாலில் தீ வைக்க..., இத்தகவலை கேள்விபட்ட சீதை .. தன் தவ வலிமையால் "அக்னி தேவ! நீ அநுமனை சுடாதே..! " என வேண்டிக்கொண்டாளாம்! அதுபோலவே வாலில் பற்றிய தீ தன்னை சுடவில்லை. தன்னை தீ சுடவில்லை என்பதை அறிந்த அநுமன் மீண்டும் தன் லீலைகளை அரங்கேற்றி அதகளம் செய்ய ஆரம்பித்தான்..
மாடமாளிகை கூடகோபுரம் ஆலயம் அரண்மனை நந்தவனம் என ஒரு இடம் விடாமல் பாய்ந்து குதித்தோடி
சென்றிட அநுமன் போன இடமெல்லாம் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது..
(இலங்கை எரியூட்டு படலம்)
அநுமன் பற்ற வைத்த தீ இலங்கை முழுவதிலும் பரந்து கிளர்ந்து புகைமூடி கனன்றது....
வீரர் பலர் வெந்து மாய்ந்தனர். இறந்தவர்களின் ஆவி மேலே போவதை கூட காணமுடியாதபடி நெருப்பு புகைமூட்டம் எழுந்ததால் திக்கு தெரியாமல் கீழே கிடந்து புலம்பினராம்.. தேன்கொண்ட மலர் போன்றும் கானக மயில்போன்றும் இருக்கிற ஈழத்து மகளிர்!
"வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்,
போன திக்கு அறியாது புலம்பினார்-
தேன் அகத்த மலர் பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியார்."
கடல் தழுவும் இலங்கையை தீ தழுவிக்கொண்டதால்..
கடல்நீர் உலைபோல மாறிவிட்டது.
தீ தழல் நா சுட்டதில்
நகரின் மேலே சென்ற குளிர்ந்தமேகம்கூட கொதித்தது!
"தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல,
வழு இல் வேலை உலையின் மறுகின;
எழு கொழுஞ் சுடர்க் கற்றை சென்று எய்தலால்,
குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே..!"
பூ கருகியது.. மொட்டு கருகியது.. அடைஅடையாய் இலை கருகியது.. கிளை காம்பு முதலான சினை கருகி சாம்பலானது! மிகமிக கருகிய சோலைகளும் நெடும் பணைகளும் வேருடன் எரிந்து கரிகட்டையாய் ஆயின..!
"பூக் கரிந்து, முறிபொறி ஆய், அடை
நாக் கரிந்து, சினை நறுஞ் சாம்பராய்..,
மீக் கரிந்து நெடும் பணை, வேர் உறக்
காக் கரிந்து, கருங் கரி ஆனவே...!"
புராண ரசனை இழையோடும் இந்த பாடலை பாருங்கள்...
இலங்கை எரிந்து தகனமானதில் உண்டான கரும்புகை உலகெங்கும் சென்று படிந்ததால்...,
ஈசன் உறையும் வெள்ளியங்கிரி கைலாயமலை மற்ற சாதாரண மலைகளைபோலவே கரிபடிந்து நிறம்மாறிற்று..!
அன்னப்பறவைகள் காக்கை போல மாறிவிட்டன.
பாற்கடலும் தன் பக்கத்துகடலான கருங்கடல்போல ஆகிவிட்டது!
எண்திசைகளை தாங்கிநிற்கும் யானைகளில் வெண்ணிற யானையான ஐராவதத்தையும் மற்ற சாதாரண கரியானையையும் வேறுபடுத்தமுடியாதபடி நிலைமை மோசமாயிற்று..!
"மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
ஒக்க வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ;
பக்க வேலையின் படியது பாற்கடல்; முடிவில்-
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா..!"
சிவபக்தனான ராவணன் நகரெங்கிலும் நீண்டுயர்ந்த பல ஆலயங்களை எழுப்பிஇருந்தான். அவை பொன்னால் ஆனவை என்பதால் அவற்றில் பற்றி எரிந்த தீ ஜூவாலை உயரமானது... தெற்கிலும் ஒரு மேருமலை உண்டாகியிருக்கிறது போல தோன்றியதாம்!
"பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலைக் கோயில்,
நின்று சுற்று எரி பருகிட, நெகிழ்வுற உருகி,
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த...!"
ஊரையே உண்டுகளித்த அந்த
தீ விரைவில் ராவணன் அரண்மனையிலும் பரவியது...!
"நீரை வற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
தாருவைச் சுட்டு, மலைகளைத் தழல்செய்து, தனி மா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெங் கனல்போல்,
ஊரை முற்றுவித்து, இராவணன் மனை புக்கது - உயர் தீ..!
யுகம்யுகமாய் தவமிருந்து... போராடி யுத்தம்புரிந்து சர்வலோகத்தையும் நடுநடுங்கசெய்து தான் கட்டிஎழுப்பிய வெற்றிக்கொடி பறக்கும் கடிமதில்நகரமாம் பொற்பூமி இலங்கை....., "கொழுந்துவிட்டு எரிகிறது....!" என்று எவரேனும் கூற கேட்டால் லங்கைவேந்தனுக்கு எப்படி இருக்கும்?
"மன்னவா! இலங்காபுரி எரிகிறது!"
அவ்விதம் சொன்ன அரக்கர்களை அழல் என தகிக்கும் கோபவிழியால்
நோக்கி,
"அடுக்கிய ஏழேழ் உலகமும் அழிக்கிற ஊழிக்காலம் வந்துவிட்டதா என்ன? இல்லாமல் பிறகு எப்படி பாழுந் தீ சுட்டு என் நகர் எரியும்??" என்று கர்ஜித்தான்...
"ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி,
'ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ?
பாழித் தீச் சுட வெந்தது என் நகர்?' எனப் பகர்ந்தான். "
அகிலபுகழ் கொண்ட நம் திருவாரூர் திருத்தலத்தின் இன்றைய
"ஆழித்தேர்" கூட முன்பு பல தடவை சிதைந்து.. ஒரு தடவை முழுதாக எரிந்து பிறகு எஞ்சியதை கொண்டு மீட்டுருவாக்கம் செய்ததுதான்..!
எரிந்து மிஞ்சியதே இன்றைக்கு இத்தனை பெரிதென்றால்.... அன்றைக்கு அது விண்ணை விஞ்சியதாக அல்லவா இருந்திருக்கும்..! அதைத்தான் நம் கம்ப நாடன், தச சிரங்களுடன் அரியணையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ராவணனுக்கு உவமை கூறுகின்றான்... "ஆழித்தேர் அவன்" என்பதாக..,
இலங்கை எரிவதற்கான
காரணம் அறிய காட்டுமிராண்டி போல கத்துகிற ராட்சதன் ராவணனிடம்....போய்,,
ஒரு வானரத்தின் வாலில் தீ வைத்ததுதான் வானளாவிய மாடமாளிகை கொண்ட இலங்கை மாநகரமே வாடியபயிரென வெந்து வீழ்ந்துகொண்டிருக்க காரணம் என்பதை எப்படி சொல்லி அவனுக்கு புரியவைக்கமுடியும்..? (நீங்கள் யாரவது முடிந்தால் நயமாக கூறி புரியவையுங்கள்..!)
உப தகவல்....
தூதுவந்த தனக்கு சரியான ஆசனம் அளித்து மரியாதை தராததினால் தன் வாலையே பல யோஜனை தூரம் நீளும்படி செய்து பின் சுருட்டி ஆசனமாக்கி ராவணனைவிட உயர்ந்த பீடத்தில் அமர்ந்துகொண்டு அனுமன் பதிலளித்தான் என்பதாக ஒரு கதை வழக்கில் உண்டு. ஆனால் அது கம்பகாவியத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை!
என்றாலும் அதுஒரு சுவையான சம்பவம்தான்.. அதை ஒப்பிட்டே,,,
முடியாமல் தொடர்ந்து நீளுகின்ற விஷயத்தை "என்ன இது அனுமார் வால் மாதிரி நீண்டுபோய்கிட்டே இருக்கே..!" என்று சிலர் கூறும்வழக்கு இன்னும் இருக்கிறது.
நாமும் அநுமன் கதையை அநுமன் வால் போன்று நீட்டிக்கொண்டே போகாமல்.... மாருதிக்கு இத்துடன் ஓய்வளித்து விட்டு மற்ற பாடல்களை இனிவருங்காலங்களில் அலசுவோம்..!
சூரியராஜ்
இதை படமாக்க இராஜமவுலி கூட செட் ஆக மாட்டார்.ஹாலிவுட்தான் போகனும்.
பதிலளிநீக்குஹாலிவுட்டிலும் இதை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..., கம்பனின் ரசனையை அப்படி.
நீக்குசாவு வீட்டில் ஞானம் படுத்திருப்பது போல ஆசிரியரின் முதல் சில பத்திகளில் ஒளிந்திருக்கும் உள்ளார்ந்த ஞானத்தை நான் காண்கிறேன்.
பதிலளிநீக்கு"அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கைநின்று அகத்தின்!"
என்னும் வரிகளில் கம்பர் இராமாயணத்தையே காட்டிவிட்டார்...
அறம் புகுந்திருந்தால் அனுமன் லங்கையுள் புக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
பிரமாதமான சிந்தனை..
நீக்கு