அண்மை

நம்பிக்கை | குறுந்தொகை கதை

 குறுந்தொகை 21

நம்பிக்கை




"ஹலோ இன்ஸ்பெக்டர் சார், நான் ராஜதுரை பேசுறேன்"


"சொல்லுங்க சார்…?"


"அதான் காலைல சொன்னனே! கல்யாண விசயமா... கொஞ்சம்..."


"இல்ல சார், பர்மிசன் கொடுக்க கூடாதுனு ஆர்டர், கொரொனா வேற ஸ்பிரெட் ஆகிட்டு இருக்கு இல்லைங்களா?"


"என்ன நமக்கே இப்படி சொல்லுறீங்க, கோயில்ல தான் கல்யாணம் வச்சிருக்கோம். அது மட்டும் இல்லாம எங்க சைடு பத்து பேரு அவுங்க சைடு பத்து பேரு தான்!"


"கோச்சிகாதிங்க, இத லாக்டவுனுக்கு முன்னாடியே நீங்க ஏற்பாடு பண்ணி இருந்தா அத காரணமா வச்சி இப்ப கல்யாணத்த செய்யலாம், திடுதுப்புனு சொன்னா என்ன செய்றது? பேசாம அடுத்த மாசம் வச்சிக்கிட்டா என்ன சார், கொஞ்சம் லாக்டவுன தளர்த்துனாங்கனா, நீங்க கல்யாணத்த நல்லா தடபுடலாவே நடத்தலாம். யோசிச்சு பாருங்க!"


"அது சரியா வராது சார், சில விசயங்கள் நடந்துட்டு! அத நான் உங்களுக்கு நேர்ல வந்து சொல்லுறேன். அப்புடியே உங்கள் பலமா கவனிச்சிடுறேன்! என்ன சொல்றீங்க?"


"அப்படியா... சரி, நேர்ல வாங்க பேசிப்போம்"


"சரி சார், வச்சிடுறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் ராஜதுரை. அவர் பேசிய அனைத்தையும் திண்ணையில் அமர்ந்திருந்த முல்லை கேட்டுக்கொண்டிருந்தாள். வருத்தத்தில் அமர்ந்திருந்த அவளுக்கு, இதை கேட்டவுடன் மேலும் வருத்தம் அதிகரித்தது. 


வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்த ராஜதுரை, முல்லையை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு வெளியே சென்றார்.


அவர் சென்ற பின்னே கலையரசி பிரவேசித்தாள் முல்லையை சந்திக்க, சாதாரணமாகவே கலையரசி, முல்லையின் தந்தை ராஜதுரை வீட்டில் இருக்கும் போது வரமாட்டாள். ஏனென்றால் அவர் மிகவும் கோபக்காரர். ஆனால் முல்லையின் தாயார்  இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. முல்லை யின் தாய் சாந்த சொரூபிணி, யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவர் முல்லையுடன் கூட சொற்ப வார்த்தைகள் தான் பேசுவார். ஆகவே கலையரசிக்கு இப்போது ஒரு சங்கடமும் இல்லை.

முல்லையின் அருகில் அமர்ந்தவள் "என்ன, கல்யாணப்பொண்ணே! வாசல்ல உட்காந்து வருங்காலத்தப்பத்தி கனவா?" என்றாள்.


"சும்மா இருடி... நானே கவலைல இருக்கேன்!"


"ஏன்? என்ன ஆச்சு?"


"உனக்கு, எதுமே தெரியாத மாதிரி பேசாத, என் நிலமைல இருந்தா உனக்கு புரியும்"


"சரி... சரி... கோவப்படாத, இந்த தொல்லைக்கு தான் இந்த லவ்வு கிவ்வு எல்லாம் நான் பண்றது இல்ல, பேசாமா இருந்தோம்னா வீட்லயே கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்க!"


"ம்ம்… உனக்கு வாய்கிறவன் உன் மனசுக்கு புடிச்சவனா, நல்லவனா இருக்கனும்ல? வீட்ல கல்யாணம் பண்ணிவைக்கிறாங்கனு எவனவேனாலும் கல்யாணம் பண்ணிக்கிவியா? "


"நான் எது சொன்னாலும், ஏதாவது நீ தத்துவம் பேச ஆரம்பிச்சிடுவ!" 


சிறிது நேரம் அமைதியாக இருந்த முல்லை "அப்பா வேற போனை வாங்கி வச்சிக்கிட்டாரு, அன்னைக்கு உன் போன்ல அவன்ட செய்திய சொன்னதுதான். சரி நீ அசோக்குக்கு போன் போட்டு பாத்தியா?"‌என்று வருத்தத்துடன் கேட்டாள்.


"ரெண்டு நாளா டிரைப் பண்றேன், ஆனா ரிங் போறதுக்குள்ள கட் ஆகுது!"


"என்னடி சொல்ற!?, கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சி நாள் தான் இருக்கு" என்று சொல்லிய போதே முல்லையின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.


"முன்னடி நீ அவன் கூட பேசுனப்ப, என்ன சொன்னான்?"


"எப்புடியாவது கல்யாணத்துக்கு முதல் நாள் வந்துடுறேன், நீ எப்புடியாவது வீட்ட விட்டு வெளில வந்துடு நம்ம எங்கையாவது போயிடலாம்னு சொன்னான்" என்று மேலும் கண்ணீர் வடித்தாள். 

அந்நேரம் ராஜதுரை வீட்டிற்கு வந்தார். முல்லை தன் கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு சாதரணமாக முகபாவனையை வைத்தாள். கலையரசியும் பேச்சை நிறுத்திவிட்டு மௌனம் காத்தாள்.


ராஜதுரை அவர்கள் இருவரையும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு உள்ளே போக - கலையரசி, முல்லையிடம் விடைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள். முல்லை தனிமையில் தன் வருத்தத்தை மேலும் அதிகரிக்க தொடங்கினாள்.


அதே நேரம் சென்னையில்…


அசோக்கும் அவனுடன் வேலை பார்க்கும் அவன் நண்பன் சுந்தரும் இரவு உணவுக்கு பிஸ்கட் துண்டுகளை துணையாக்கினர். அது அன்றைய உணவுக்கு போதாது என்றாலும், ஒரு மாதங்களாக அதையே சாப்பிட்டதால் அவர்களுக்கு அது பழகிவிட்டது.  கொரோனாவின் கோர தாண்டவம் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்க இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?. ஒரு மாதமாக கம்பெனி மூடிக் கிடக்கிறது. கையில் இருந்த காசும் பைய கரைந்தது. அலைபேசியில் அழைப்புகளை பெற கூட காசு இல்லாது போனது. உதவிக்கரங்கள் தரும் ரொட்டி துண்டுகளே உணவானது. இந்த நிலைமையில் தப்பித்து ஊருக்கு போகலாம் என்றாலும் ஒரு வண்டி வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவு கடுமையான ஊரடங்கு. அவர்கள் தங்கி இருக்கும் தெருவில் அதிக மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் அவர்கள் தெருவில் யாரும் வெளியேறாதபடி, அடைத்து, போலீசாரும் காவலுக்கு இருந்தனர். ஏதாவது வேண்டும் என்றாலும் போலீஸ்காரரிடம் தான் கேட்க வேண்டும். 

 

இவ்வளவு சகித்துக் கொண்டு வந்த அசோக்குக்கு இரண்டு நாளுக்கு முன் காதலி சொன்ன செய்தி  கவலையை தந்தது. அன்றே தன் ஊருக்கு சென்று தன் காதலியை காப்பாற்ற வேண்டும் என்பது போல தோன்றியது. ஆனால் சுந்தர் 'இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிப்பு வரும் அப்போது நீ பேருந்திலேயே செல்லலாம். இப்போது நம் தெருவை கூட உன்னால் தாண்டமுடியாது' என்று கூறி அசோக்கை  தடுத்துவிட்டான்.


ஆனால் அறிவிப்பு அவனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது. ஊரடங்கு மேலும் வலுவானது. அதனால் நாளை காலைக்குள் எதாவது செய்து தன் ஊருக்கு புறப்பட வேண்டும் என்ற யோசனையிலேயே அசோக்குக்கு அன்றய இரவு துயிலற்ற துயர இரவானது. மறுநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அசோக் எங்கோ கிளம்புவது போல சுந்தருக்கு தெரிய "எங்க கிளம்புற?" என்று கேட்டான்.


"எங்க ஊருக்கு, இன்னும் கொஞ்ச நாள்ல அவளுக்கு கல்யாணம் இப்ப நான் கிளம்புனா தான் சரியா இருக்கும்"


"டே என்ன சொல்ற! எப்படி டா போவ!? எந்த பஸ்சும் இல்ல வண்டியும் ஓடாது, நம்ம தெருவ தாண்டுறதே கஸ்டம். என்ன, நடந்து போக போறியா!?"


"ஆமா, நடந்து தான் போறேன்…" என்று கூறி கிளம்பினான். அசோக் கூறியதை கேட்ட சுந்தருக்கு தலை சுற்றியது. ஏனென்றால், அசோக்கின் ஊர் சென்னையில் இருந்து தோராயமாக நானூற்று ஐம்பது கிலோமீட்டர் இருக்கும். அதை வாகனங்களில் செல்வதே கடினம்! அசோக் நடந்தே செல்லப்போகிறான் என்றதும் அவனுக்கு அப்படி ஆனது.

'காதலுக்கா ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்' என்று கேள்வி மட்டுமே பட்டவன் அப்போது தான் அதை நேரடியாக பார்த்தான். 



சில நாட்களுக்கு பிறகு…


முல்லையின் வீட்டில் அவ்வளவாக சொந்தங்கள் கூடவில்லை. ராஜதுரை தன் செல்வாக்கு, பணபலத்தைக் காட்டி கல்யாணம் செய்வதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார். தன் மகள், தன் தெருவை சேர்ந்த தோட்ட வேலைக்காரனின் மகனை காதலிப்பது தெரிந்து. அவசர அவசரமாக தன் மகளுக்கு வசதிபடைத்த மாப்பிள்ளையுடன் கல்யாணம் ஏற்பாடு செய்தார்.  கலையரசியிடம், முல்லையை இனி நீ சந்திக்க வர கூடாது - என்று ராஜதுரை கண்டிப்புடன் கூற, அவருக்கு பயந்து கலையரசி முல்லையின் வீட்டுப் பக்கமே தலை காட்டவில்லை. ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் தன் அம்மாவுடன் சேர்ந்து முல்லையை சந்திக்க கலையரசி வந்தாள்.

முல்லை கவலையில்லாது அனைவரிடமும் சிரித்து பேசி வந்தாள். ஆனால் கலையரசி தோழி குறித்து கவலை அடைந்திருந்தாள் . தன் வருத்தத்தை தெரிவிக்கவும் முல்லையின் மனதில் இப்போது என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முல்லையிடம் "என்னடி நாளைக்கு காலைல கல்யாணம், அசோக் இன்னும் வரல?, இப்பவே மணி பத்து ஆகுது! உன்ன நினைச்சா எனக்கு கவலையா இருக்கு" 


"நீ கவலைப்படாதே!"


"எப்படி கவல படாம இருக்க சொல்ற, அவன் உன்ன அழைச்சிட்டு போக இன்னும் வரல!, சென்னையில பஸ்லாம் இல்ல வண்டி கூட ஓட முடியாத அளவு  லாக்டவுனு. எனக்கு என்னமோ பயமா இருக்கு. ஒருவேள... அவன் வரமாட்டானு தோனுது… அவன் உன்கிட்ட பொய் சொல்லி இருக்கானு நினைக்கிறேன்"


"இல்ல... நிச்சயமா வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் சொன்ன சொல்ல காப்பாத்துவான். பஸ் எல்லாம் இல்லைனாலும் நடந்தே கூட அவன் என்னை தேடி வருவான்" என்றாள் தன் தோழி கலையரசியிடம். நிலமை கைமீறி போகும் போது எதாவது ஒரு வகையில் முழு நம்பிக்கை நிலையை மனது அடைந்துவிடும். நீச்சல் தெரியாமல் அருவியில் விழுந்தவனுக்கு ஒன்று கரையை அடைய முடியும் என்ற நம்பிக்கை வரும் அல்லது கடவுள் நம்பிக்கை வரும். அது நூறு சதவீதம் உண்மையான நம்பிக்கையாக இருக்கும்‌ அதுபோலவே காதலன் சொல்லிய சொல்லே, காதல் கடலை கடக்க அவளுக்கு நம்பிக்கை தந்தது‌.


அதே இரவு நேரம் அசோக் நாற்பது கிலோமீட்டர்க்கு அப்பால் உடல் வருத்தி நடந்து வந்து கொண்டிருந்தான். கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல்  காதலுக்காக காதங்கள் கடந்து வந்துக்கொண்டிருந்தான். தன் காதலியின் கண்ணீரையே இந்த மேகங்கள் மழை போல பிரதிபலிப்பதாக அவனுக்கு தோன்றியது.


குகன்


குறுந்தொகை  21 பாடல்


வண்டுபடத் ததைந்தகொடியிணர்இடையிடுபு

பொன்செய் புனையிழைகட்டியமகளிர்

கதுப்பிற் றோன்றும்புதுப்பூங்கொன்றை

கானங் காரெனக்கூறினும்

யாரோ தேரன்அவர்பொய்வழங் கலரே


ஆசிரியர் - ஓதலாந்தையார் 


7 கருத்துகள்

  1. நம்பிக்கை என்று ஆனபிறகு அதில் நல்லநம்பிக்கை மூடநம்பிக்கை என்றெல்லாம் கிடையாது என்பார் கண்ணதாசன்.

    மனிதனுக்கு நம்பிக்கை அவசியமா என்றால் அதைவிட்டால் அவனுக்கு வேறுகதி இல்லை என்பது நிதர்சனம்.

    இங்கு,
    ஓதலாந்தையார் கவியும் சரி குகனார் கதையும் சரி.. அதை உணர்வுபூர்வமாக்கி காட்டுகின்றன..

    பதிலளிநீக்கு
  2. நடை நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதி கதை எழுதும் ஆற்றலை வளர்த்து கொள்க! எதிர்காலம் உறுதியாக உண்டு.

    பதிலளிநீக்கு
  3. கதைக்கு தேர்ந்தெடுத்த ஓவியம் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை