அண்மை

போனஸ் புத்தி - தீபாவளி சிறப்பு சிறுகதை

 தீபாவளி சிறப்பு சிறுகதை



அரவிந்த் ஃபேப்ரிக் எக்ஸ்போர்ட்டர்ஸ் திருப்பூரில் ஓரளவு பெரிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனம். 200 பேர் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு நாள் ஆச்சரிய செய்தி ஒன்று வந்தது. முதலாளி எல்லோர்க்கும் சனி கிழமை விருந்து வைக்க போகிறாராம். விருந்துக்கு முன் சில விஷயங்களை மனம்விட்டு பேச போகிறாராம். எத்தனையோ வருடங்களாக வேலை செய்கிறார்கள். இதுபோல் என்றும் நடந்ததில்லை. சனிக்கிழமை மாலை.


விருந்து நடைபெறும் அரங்கத்தில் அனைவரும் கூடி விட்டார்கள். முதலாளி பேசினார்,


"கொரோனா அச்சுறுத்தலால் கம்பெனி இரண்டு வருடங்களாக ஒழுங்காக திருக்க முடியவில்லை, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருந்தோம். நம்முடைய நல்ல நேரம் அமெரிக்க நிறுவனம் ஒன்று கொரோனா உதவியாக ஜவுளிகளை சில ஏழை நாடுகளுக்கு வழங்க வழக்கமான ஆர்டரை காட்டிலும் மூன்று மடங்கு கொடுத்தார்கள். நம்முடைய பேங்கும் நமக்கு ஒத்துழைத்தது. நீங்களும் மூனு ஷிப்டில் ரெண்டு ஷிப்டு ஒவ்வொருவரும் வேலை செய்து சொன்னபடி தயாரித்து கொடுத்ததால் ஜவுளிகளை அனுப்பிவிட்டோம். மேலும் ஆர்டர் கிடைத்துள்ளது. எல்லா செலவும் போக இருபது கோடியாக இருந்த கம்பெனி வருமானம் அறுபது கோடியாக உயர்ந்துள்ளது. எல்லாம் உங்களால் தான். காலம் நேரம் பார்க்காமல் உழைத்து இந்த சாதனையை செய்துள்ளீர்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால் தான் இந்த விருந்து. விருந்து உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குடும்பத்துக்கும் உண்டு. எல்லோரும் சாப்பிட்டு விட்டு உங்கள் வீட்டுக்கு உள்ள பார்சலையும் வாஙகிச் செல்லுங்கள். அதுமட்டுமல்ல இன்னொரு நல்ல செய்தியும் சொல்ல விரும்புகிறேன். வழக்கமாக தீபாவளிக்கு கொடுக்கும் போனஸ் ஒருமாத சம்பளம் தீபாவளி அன்று இரவில் தான் கொடுப்பேன் இந்த முறை பத்து நாள் முன்பாக இன்றே கொடுக்கிறேன். குறைந்தபட்சம் ஒவ்வொருவருக்கும் போனஸ் பதினைந்தாயிரம் இன்றே உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சிதானே" என்றார்.


தொழிலாளர்களை தக்க வைக்க வேறு ஐடியா அரவிந்த்க்கு தெரியவில்லை.


எலக்ட்ரிக்கல் பிரிவில் வேலை செய்யும் மெக்கானிக் ரவி எழுந்தான். 


"ஐயா, நான் சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. கடந்த ரெண்டு வருடமா பத்து மாததத்துக்கு மேல் வேலை இல்லை. சம்பளமும் இல்லை. படிக்கிற பையனுக்கு பீஸ் கட்ட முடியாமலும். வளர்ந்த பெண்ணுக்கு கல்யாணம் முடிக்க முடியாமலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் நம்முடைய கம்பெனியில் முக்கால்வாசி பேர் கஷ்டப்படுகிறார்கள். எட்டுமணி நேரம் வேலை செய்யும் தொழிலாளிகள் பணங்காசுக்கு ஆசைப்பட்டு தான் உடம்பை பற்றி கவலைபடாமல் பதினாறு மணி நேரம் ரெண்டு ஷிப்டு வேலை செய்தார்கள். ஒருவேளை சுவையான விருந்து எங்கள் இரண்டு வருட வாழ்க்கையை மாற்றி விடுமா? நீங்களே உங்கள் வாயாலே சொன்னீர்கள். இருபது கோடியாக இருந்த லாபம் அறுபது கோடியாக கிடைத்ததென்று. ஒரு மாதம் கொடுக்கும் போனஸை இரண்டு மாதமா கொடுத்தீங்கனா எல்லோருக்கும் உதவியா இருக்கும். அவங்க கடன் குறையும். இருநூறு பேருக்கும் இன்னொரு பதினைந்தாயிரம் கொடுத்தால் மேற்கொண்டு மூனு கோடி ஆகுமா? கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கய்யா" என்றான்.


"என்ன எனக்கு பெரிய மனசு இல்லங்குறியா? உங்களுக்கு தான் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதே" என்று கோபப்பட்ட அரவிந்த் விருந்தை கூட உண்ணாமல் விறுவிறுவென வெளியே நடந்தான்.


அவருடைய கோபத்தை பார்த்தவர்களுக்கு சொன்னபடி கொடுப்பாரா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் இடையில் ரவி கெடுத்துவிட்டானே என்று அவன் மீது பாய்ந்தார்கள். விருந்து முடிந்தது.


ரவியை மட்டும் மேனேஜர் அழைத்தார். "ரவி உன் மீது முதலாளி கோபமாக உள்ளார். தொழிளாளர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கியதற்காகவும் கம்பெனிக்கு துரோகம் செய்ததற்காகவும் உன்னை வேலை விட்டு நீக்க சொல்லி இருக்கார். உனக்கு இதுவரை சேர்ந்துள்ள சம்பளம் இதோ. உன் குடும்பத்துக்கு உள்ள உணவு பார்சல் இதோ. எடுத்துக்கொண்டு முதலில் கிளம்பு" என்றார் மேலாளர்.


தளர்வோடு நடந்து வீட்டுக்கு வந்தான். ரவிக்கு திருமணம் ஆகவில்லை. அம்மா மட்டும் தான். உணவு பார்சலை அம்மாவிடம் கொடுத்தான். "இது ஏது" என்றாள்.


"முதலாளி தான் கொடுத்தார்" என்ற ஒற்றை வரியை சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் படுக்கைக்கு சென்று படுத்துவிட்டான். 


கம்பெனியில் ஒவ்வொரு நாளும் நடப்பதை ஒன்றுவிடாமல் சொல்லும் ரவி. இன்று அமைதியாக சென்று படுத்ததை பார்த்த அவன் அம்மா, கம்பெனியில் ஏதோ நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்துகொண்டாள். அவன் அறைக்கு சென்றாள். அவன் தூங்காமல் தான் இருந்தான்.


"என்னப்பா நடந்தது" என்றாள். நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னான்.


"அம்மா இதையெல்லாம் எனக்காகவா செய்தேன். எனக்கு என்ன பொண்டாட்டியா புள்ளையா… .மத்தவங்களுக்காகத்தானே கேட்டேன். பத்தாயிரம் இருந்தா உனக்கும் எனக்கும் தீபாவளி ஓடிவிடாதா? இதை கூட என்னோடு வேலை செய்பவர்கள் புரிந்துகொள்ளவில்லையே" என்றான்.


"உன் மீது எந்த தவறும் இல்லை… உன் முதலாளிக்கு தான் புத்தியில்லை, நல்ல புத்தியை கடவுள் அவருக்கு கொடுப்பார். நீ தூங்கு என்றாள்"


அதேநேரம் அரவிந்த் படுக்கையில் படுத்து இருந்தாரே தவிர தூக்கம் வரவில்லை. ரவியை வேலையை விட்டு நீக்கியது அவர் மனதுக்கு பாரத்தை தந்தது. 'என்ன இருந்தாலும் அவன் அப்படி பேசிருக்க கூடாது, இதுபோல நடவடிக்கை எடுக்காவிட்டால் யூனியன் ஆரம்பித்து விடுவார்கள்… ஒன்று பத்தாகும். பத்து நூறாகும். முளையிலேயே கிள்ளி எறிவது தான் சரி' என்றது ஒரு மனம். 'இரண்டு மாத போனஸ் தானே கேட்டான் அதற்காக வேலையை விட்டு நீக்குவதா?' என்றது இன்னொரு மனம்.


படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார். லேசாக கண் அயர்ந்த போது, ஒரு பயங்கர கனவு. மூனு ஷிப்டு தொடர்ந்து ஓடுவதால் மின்சார ஒயர்கள் எல்லாம் உருகுகிறது. நெருப்பு பொறி பறக்கிறது. தீ பரவுகிறது. நூற்றுக்கணக்கான மின்சார தையல் இயந்திரங்கள். தீயில் கருகுகிறது. புகை சூழ்கிறது. உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும் இங்கும் எல்லோரும் ஓடுகிறார்கள். துறைமுகத்துக்கு எடுத்து செல்ல கண்டைனரில் ஏற்றப்பட்ட உடைகள் எல்லாம் சாம்பலாகிறது. குறித்த காலத்தில் சரக்கு வராததால் அமெரிக்க நிறுவனம் ஆர்டரை கேன்சல் செய்கிறது. வங்கிக்கு பணம் வராததால் கம்பெனியை பேங்க் ஜப்தி செய்கிறது. அரவிந்த் நடுதெருவில் நின்று கதறுகிறார். கனவு நின்றுவிட்டது.


திடீரென கண்விழித்தார் அரவிந்த். உடம்பெல்லாம் வியர்வை. இது கனவு தானா. இல்லை உண்மையிலேயே நடந்துவிட்டதா! சுற்றும் முற்றும் பார்க்கிறார். உடல் நடுங்குகிறது. கண்ணதாசன் கனவுகள் பற்றி எழுதிய கட்டுரையை படித்திருக்கிறார். கடன் கொடுத்த ஒருவன் வயிறு எரிந்த போது அவனை ஏமாற்றியவன் ஸ்டுடியோ எரிந்த கதையெல்லாம் படித்திருக்கிறார். கண்டிப்பாக இது கடவுளின் எச்சரிக்கை தான். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ரவி வீட்டுக்கு செல்ல வேண்டும். 


காலையில் எழுந்து பரபரப்பாக கம்பெனிக்கு வழக்கமாக செல்லும் ரவி. வேலையை இழந்ததாலோ என்னமோ எப்போதோ வாங்கி வைத்த பெயிண்ட் டப்பாவை வைத்து கொண்டு வாசல் கேட்டில் பெயிண்டை அடித்து கொண்டிருந்தான்


திடீரென்று வாசலில் கார் வந்து நின்றது. முதலாளி தான். ரவிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 


"ஐயா நீங்களா? சொல்லி அனுப்பிருந்தா நானே வந்துருப்பனே" என்றான்


அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டாள். முதலாளியை உள்ளே அழைத்து சென்று அப்போது தான் போட்டு முடித்த காப்பியை கொடுத்தாள்.


"என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. உங்கள் பிள்ளை மூலம் எனக்கு நல்ல புத்தியை கொடுத்துவிட்டார் கடவுள். அவர்கள் ஆசைப்பட்ட படி இரண்டு மாத போனஸ் இன்றே கொடுத்து விடுகிறேன். ரவியை கம்பெனிக்கு அனுப்புங்கள்" என்றார்.


"ஐயா என் பிள்ளை எதையும் அவனுக்காக செய்யவில்லை. என் கணவர் உயிரோடு இருந்த போது, இருநூறு ரூபாய் சம்பாதித்தால் கூட அதில் இருபது ரூபாய் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்பார். பணத்திற்கு கஷ்டபடுபவர்கள் யாரும் தருமம் செய்ய வேண்டியதில்லை. மிதமிஞ்சி சம்பாதிப்பவர்கள் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும். கொரோனா காலத்தில் நீங்களே கஷ்டப்பட்ட போது என் மகன் உங்களிடம் சம்பளமாவது கேட்டிருப்பானா? இந்த வருடம் உங்கள் வாயலேயே நாப்பது கோடி வருமானம் என்று சொன்னதால் அதில் மூன்று கோடி கொடுக்கக்கூடாதா என்று கேட்டான். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கொடுப்பதால் உங்கள் காசு ஒன்று குறைந்து விடாது. இருபது அறுபதாகி அறுபது நூறாகுமே தவிர குறையாது. யாருக்கு கொடுக்க வேண்டும் யாரிடம் எடுக்க வேண்டும். என்று கடவுளுக்கு தெரியும் இதுவும் கடவுளின் விளையாட்டு தான். என் வயிற்றில் பிறந்தவன் உங்களுக்கு துரோகம் செய்யமாட்டான். இதை நீங்கள் புரிந்து கொண்டதே எனக்கு மகிழ்ச்சி தான்" என்றாள்


ஜெ. மாரிமுத்து


 இந்த வார தென்றலை பெற

 இங்கே தொடவும்


2 கருத்துகள்

புதியது பழையவை