ஐயா அப்துல் கலாம் அவர்கள் தன் 'அக்னி சிறகு' முதல் அத்தியாயத்தில் ஒரு வரி எழுதிருப்பார், "நான் இந்த பழம்பெரும் நாட்டில் நன்றாகவே இருக்கிறேன்".
வாழ்வின் சோகமான தருணத்தில் தனிமையிடம் சென்று முகாரி கேட்டால் சோகாம்சம், கௌசிகம் கேட்டால் சந்தோஷம், தன்யாசி கேட்டால் அருள் வாசம்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நம் வாழ்க்கை அமைகிறது.
மலையின் விளிம்பை பற்றி கொண்டு உயிரை ஊசலாட்டி தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் ஒரு நொடி 'நாம் இறந்துவிடுவோமோ' என்று நினைத்துவிட்டாலே போதும், அந்த மலையின் ஒட்டுமொத்த கனமும் அவன் தலையிலே ஏறிக்கொள்ளும்.
இரவின் மர அசைவுகளை பேய் என்பது, சுவர்கோழியை பெரியாச்சு என்பது, வாசரை கூட ரூபாய் என நினைத்துக் கொள்வது, பின்னாடி நடந்து வரும் நாயை கடிக்க வருவதாகவே நினைத்து ஓடுவது என மனித நம்பிக்கை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் முல்லாவின் கதைகளை போல சுவாரஸ்யம் அதிகம்.
மனிதனிடம் இருக்கும் தெய்வாம்சம் நம்பிக்கை. அது நினைத்ததை நிகழ்தக்கூடியது.
கல்கத்தாவின் சமீபத்தில் இருந்த லஹிரி மஹாசயரை தேடி வரும் பக்தர்களெல்லாம் குறை இன்றி அவரை காண வருவதில்லை. அப்படி வந்த ஒருவர் தன் தந்தை மரணப்படுக்கையில் இருப்பதாக குரு லஹிரி மஹாசயரிடம் சொல்கிறார். குருவும் அவருக்கு சில முதலுதவி செய்கைகளை சொல்ல, அதற்கு வந்த பக்தர் சொல்கிறார், "இவை எல்லாம் வேண்டியதில்லை குருதேவா, உன் தந்தை பிழைத்திடுவார் என்று மட்டும் சொல்லுங்கள் போதும்"
யாருடைய நம்பிக்கை உச்சத்தில் இருக்கிறதோ அதுவே வெல்லும் வலு கொண்டது. பக்தரின் நம்பிக்கை தன் குருவிடம் இருந்தது. குருவின் நம்பிக்கை இறையிடம் இருந்தது. இறுதியில் நம்பிக்கை வென்றது.
நம்பிக்கையை பற்றுவதற்கும் நமக்கு ஏதும் தேவைப்படுகிறது. நடுகடலில் மாட்டிக்கொண்ட ஒருவன் நீஞ்சியும் சோர்வுற்றபோது ஒரு பிடியை தேடுவான் அல்லவா…. அதுபோல!
நாம் எல்லோரிடமும் ஏமாறுகிறோம், எங்கும் நமக்கு நோவு, நலிவு, அமைதியின்மை, அவதி எனின் அங்கே நம்பிக்கையின் உறுதியின்மையே எனக்கு தெரிகிறது.
கி.பி 622 ஆம் ஆண்டு. மக்கத்தில் முகமது நபி நன்கு பிரபலமடைந்துவிட்டார். அவரது தூய்மையான மனதையும் உண்மையான சொல்லையும் உணர்ந்த மக்கத்து ஜனங்கள் அவரது மார்க்கத்தில் சேரலாயினர். நபிகள் பின்னே கூட்டம் சேர்ந்தது.
சிலை வழிபாட்டிலே உறுதியாக இருந்த மக்கத்து ராஜா, நபிகள் நாயகத்தையும் அவரை சேர்ந்தோர் அனைவரையும் சிறைபிடிக்குமாறு உத்தரவிட்டார்.
இதை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் தன் ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்கு புறப்பட்டார். வழியில் அடர்ந்த காடு.
இவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு புலம்பெயர்வதை அறிந்த மக்கத்து ராஜா நபிகள் செல்லும் வழியிலே ஒரு குதிரை படையையும் அனுப்பி இருந்தார்.
அந்த படை இவர்கள் காட்டு வழியில் செல்லும் அதே நேரத்தில் காட்டுக்குள் புகுந்தது.
"ஸல்லல்லா ஹூ அலை ஹி வஸல்லம் அவர்களே எனக்கு குதிரையின் குளம்படி சத்தம் கேட்கிறது. ஐயோ இனி நாம் ஏதும் தப்புதல் சாத்தியம் இல்லை. நம்மை வெட்டி கொலை செய்ய போகிறார்கள்"
என்று தன் சீடன் சொல்ல அப்போது ஸல்லல்லா ஹூ அலை ஹி வஸல்லம் என்ற நபிகள் நாயகம் சொல்கிறார்,
"கேளாய் நண்பனே, நான் இந்த உலகத்தில் அல்லாவின் உற்ற பணியாளாய் வேலை செய்து வருகிறேன். மனுஷ்யர்களுக்கு உதவியாய் அல்லாவின் துணையோடு நான் செய்ய வேண்டியிருக்கும் காரியங்கள் எவ்வளவோ உள்ளது. அவையெல்லாம் முடியும் வரை இந்த உலகத்து ராஜாகள் எல்லாம் ஒன்று கூடி என்னை கொல்ல முயன்றாலும் அவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது. ஏன், ஆயிரம் இடிகள் என் தலையில் சேர்ந்து விழுந்தாலுமே கூட எனக்கு மரணம் ஏற்படாது. அல்லா எல்லா சக்திக்கும் அப்பாற்பட்டவர். அவர் என்னை காப்பார். ஆதலால் எனக்கு ஒரு பயமும் இல்லை. நீ என்னுடன் இருக்கும் வரை உனக்கும் ஒரு தீங்கும் ஏற்படாது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை"
சிறிது நேரத்திலே அந்த குதிரைபடையின் குளம்படி சத்தம் மெலிவுற்றது. பிறகு இவர்களை பாராமலே அப்படை மக்காவிற்கு திரும்பிவிட்டது.
'நம்பிக்கை' இப்படி தான் இருத்தல் வேண்டும்.
எவனொருவன் சீரிவரும் பாம்பை பார்த்து சலனமற்று நிற்கிறானோ அவனது நம்பிக்கையே அவனை காக்கும் என்கிறார் மகாகவி.
இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஒன்றுதான், செயல்படுவது இறையா? நம்பிக்கையா?
தூய்மையான மனங்கொண்ட ஒருவன் பச்சை மரத்தில் ஆணி அடித்தார் போல ஒரு விஷயத்தை நம்புகிறானெனில் அது நடந்தே தீருகிறது.
மனவலிமையை நீக்குங்கள். சோர்வறுங்கள். நாமெல்லாம் இந்த பிரபஞ்சத்து குழந்தைகள். நமக்கு ஒன்றும் ஆகாது. நாம் வாழ்வோம்.
காணும் பொருளிடத்தே காண முடியாது நீக்கமற நிறைந்துள்ள இறைவன் மரமாக செடியாக கொடியாக ரூபம் அரூபமாக அல்லாவாக இயேசுவாக ஈசனாக திருமாலாக புத்தனாக ஆணாக பெண்ணாக பிள்ளையாக ஈயாய் எறும்பாய் நாயாய் நரியாய் ஏன் பன்றியின் மலமாய் கூட இருக்கிறான்.
வடிவத்தை கடந்த இறை நம்பிக்கை தன்னம்பிக்கையை விடவும் வலுவானது. மனதின் மாசற்ற நம்பிக்கை உங்களிடத்தே அவனை அழைத்துவரும் வல்லமை கொண்டது. ஆதலால் மனதின் ஸ்திரத்தை அதிகப்படுத்தி கொண்டு அனைவரும் 'நம்பிக்கை' கொள்ளுங்கள்.
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
இந்த நொடி துன்பத்தில் இருக்கும் மனிதர்கள் இனி நலம் பெறுவார்கள். உண்ண வழியில்லாத நாடுகளெல்லாம் இனி வளம் பெறும். இந்த உலகம் நன்றாக இருக்க நான் நம்பிக்கை கொள்கிறேன்.
இறை நம்பிக்கை எப்படி இருக்க வேண்டுமென்பதின் ஐயம் எனக்கு தெளிவடைகிறது.
இப்போது அப்துல் கலாம் அவர்களின் வரியினை படித்து பார்க்கிறேன்,
"நான் இந்த பழம்பெரும் நாட்டில் நன்றாகவே இருக்கிறேன்"
ஈசதாசன்
இந்த வார தென்றலை பெற |
மழை வேண்டி பிரார்த்தனை ஒரு இடத்தில் நடக்கும்.எல்லோரும் பிரார்த்தனை மட்டும் செய்ய மட்டும் வரும் போது ஓருவன் மட்டும் குடையோடு வந்திருப்பான்.பிரார்த்தனை செய்தால் கடவுள் மழையை தருவார் என்று நம்பியன் அவன்.நம்பினோரா கடவுளால் கைவிட பட மாட்டார்.
பதிலளிநீக்குஆகா அருமை
நீக்கு👍
நீக்கு