கம்பரும் வீரமும்
பூ பூத்தது..!
இதை எப்படிலாம் வேறமாதிரி சொல்லமுடியும் யோசியுங்கள்..?
தண்டியலங்கார பாடல் ஒன்றை பாருங்களேன்..
"அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா..,
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை; விரிந்தன கருவிளை;
கொண்டன காந்தள் குலை...!"
(இதில் வருகிற தோன்றி, காயா, முல்லை , கொன்றை, கருவிளை, காந்தள் ஆகியன வெவ்வேறு மலர்கள்..
அதேவேளை.. அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன (விள்ளல்), விரிந்தன, கொண்டன(கொள்ளல்) என்பன
எல்லாமே "பூத்தது"/ "மலர்ந்தது" என ஒரே பொருள்படுபவை..)
ஒவ்வொன்றும் பூத்தது.. என சொல்லாமல் அதே பொருள்தருகிற வெவ்வேறு சொற்களை கொண்டு ஒரு 'கதம்ப பா மாலை' தொடுத்திருக்கிறான் பாருங்கள் தமிழ் புலவன்! (இது பொருள்பின்வரு நிலையணி )
"நவராத்திரி" என்கிற திரைப்படத்தை பார்த்த ஒரு சிவாஜி ரசிகன், அதில் ஒன்பது வேடங்களில் சிவாஜி நுட்பமாக நடித்ததை... இப்படி சொன்னானாம்.,
நடந்தார்.. ஒருவர்.!
அசைந்தார்.. ஒருவர்.!
வந்தார்.. ஒருவர்,
வாழ்ந்தார்.. ஒருவர்!
பாடினார் ஒருவர்; பாடிக்கொண்டே
ஆடினார் ஒருவர்..!
அன்புற அணைத்தார் ஒருவர்
அனலெனவே பகைத்தார் ஒருவர்..! - மற்றும்
ஒருவர் புகைத்தார்..! - அவரை பார்த்தா ரெல்லாம் அக்கணமே திகைத்தார்.! மலைத்தார்..!வியந்தார்..! புகழ்ந்தார்..!
இதில் வெவ்வேறு செயல்பாவனைகள் சொல்லப்பட்டாலும் எல்லாமே சிவாஜி அவ்விதம் பிரமாதமாக நடித்தார் என்பதையே சுட்டுகிறது..!
தமிழில் இதுமாதிரி வார்த்தை ஜாலங்கள் செய்வது அன்றுதொட்டு என்றும் இருக்கிற ஒரு நயத்தகு நாகரீகம்..!
இதை கம்ப காவியத்தில் அநேக இடங்களில் கண்டுகளிக்க முடியும்!
******************
சுந்தர காண்டம்
(சம்புமாலி வதைப்படலம்)
ஏற்கனவே கிங்கர பெரும்படைகளை ஏதோ கிலுகிலுப்பைபோல உலுக்கி தவிடுபொடிஆக்கிய அநுமனை.. அடக்கி சிறைபிடிக்க வேண்டி,, அடுத்ததாக சம்புமாலி தலைமையில் ரத கஜ துரக பதாதிகளை அண்டம் நடுநடுங்க அணிவகுத்து அனுப்புகின்றான் ராவணன்..
திரண்டுவரும் படைகளை சுக்கல் சுக்கலாக துவம்சம் செய்யும் அநுமனை விதம்விதமான விருத்த செய்யுள்களால் கம்பன் வருணிக்கிறான்...
வெறும் வினைமுற்று சொற்களைக்கொண்டே முழு செய்யுளையும் யாத்து அசத்தியிருப்பான் அமானுஷ்ய கம்பன்..! அதை முதலில் பாருங்கள்..
"ஒடிந்தன; உருண்டன; உலந்தன; புலந்த;
இடிந்தன; எரிந்தன; நெரிந்தன; எழுந்த;
மடிந்தன; மறிந்தன; முறிந்தன; மலைபோல் -
படிந்தன முடிந்தன கிடந்தன - பரிமா...!"
(கடைசியாக வருகிறதே..
பரிமா = குதிரை/குதிரைப்படையை குறிக்கிறது..! அநுமனோடு மோதிய குதிரை சேனையைத்தான்... ஒடிந்தன உருண்டன உலைந்தன புலைந்தன எரிந்தன நெரிந்தன மடிந்தன முறிந்தன மலைபோல் படிந்தன.. என அடுக்கிக்கொண்டே போகிறான் கம்பன். சினிமா பாணியில் சொல்வதென்றால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி shot வைக்கலாம்!)
அதே பாணியில் காலாட்படை அழிந்த கதையையும் கேளுங்கள்...
அனுமன் புஜபலம் கண்டு வந்திருந்த அரக்கர்கூட்டம் வெருண்டு வியந்து விழுந்து எழுந்தோடிவிட்டனராம்.
சிலர் மருண்டு மயங்கி குறுக்கே மறிந்துவிழ இறந்தே விட்டனராம்.
யாரெல்லாம் உருண்டு புரண்டு உடல்நோக உழைப்பதுபோல நடித்தார்களோ அவர்கள் மட்டும் பிழைத்தார்களாம்..!
மலைத்து நின்ற ஏனையோர் சுருட்டிவீசப்பட்டனர்.. புரட்டிஎடுக்கபட்டனர்... அதில் சிலர் தொலைந்தே போய்விட்டனர்..!
அந்த பாடல்..,
வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்..!
மருண்டனர், மயங்கினர், மறிந்தனர், இறந்தார்..!
உருண்டனர், உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்..!
சுருண்டனர், புரண்டார், தொலைந்தனர் மலைந்தார்..!
இதேநடையில் இன்னும் பிற பாடல்களை வேறுசில படலங்களில் பின்பொருநாள் காண்போம்..
இப்போது...
அடுத்ததாக நால்வகை படைகளையும் அனுமன் நாசம்செய்த நறுங்கவியை காணலாம்..
"கரிகொடு கரிகளைக் களப் படப் புடைத்தான்..!
பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்..!
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்..!
நிரை மணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான்...!"
(பொருளுணர...
கரியானை ஒன்றை கொண்டு மற்ற யானைகளை ஓங்கிஅடித்து களத்தோடு களமாக நையப்புடைத்தான்.!
குதிரைபரிவாரங்களை அந்த குதிரைகளை கொண்டே அள்ளிவீசி தரையொடுதரையாக சாய்த்தான்.!
மிக்கதேர்ச்சிபெற்ற விற்படை வீரர்களை அவ்வீரர்களின் உடலோடு உடலாக நசுக்கி மடித்துப்போட்டான்!
நிரைமணி நிறைந்த தேர்களையெல்லாம் ஒன்றோடொன்று மோதிஉருக்குலைத்து போட்டான்!)
இளகிய இதயம்கொண்டோர் யாரும் அடுத்த பாடலை படிக்க வேணாம்..! (நேரடியாக அதற்கடுத்த பாடலுக்கு போய்விடுங்கள்..)
சம்புமாலிபடைகளை அநுமன் சம்ஹாரம்செய்த கோரமான களம் எப்படி இருந்ததாம் தெரியுமா?
களிமண் சதுப்புநிலத்தில் மழைநீர் கலந்தால் அங்கு புதைசேறு உருவாவதுபோல...
தலைசிதறி இறந்த அரக்கர்களின் மூளைகளோடு சூடானஉதிரம் பெருக்கெடுத்து கலந்து கொழ கொழவென யுத்த மைதானமே கொதிக்கிற புதைகுழி ஆகிவிட்டதாம்! உருவான திடீர்புதைகுழியில் சிக்கி பல பெரும் பெரும் கரியானைகள் மீளவழியின்றி அழுந்தி மூழ்கி இறக்குமாறு அதன் ஆழம் இருந்ததாம்!
ஏதோ மலையோ குன்றோ என கூறும்படிக்கு துண்டான அரக்கர்(நிருதர்) தலைகளும் கால்களும் குவிந்துகிடந்ததாம்!
தலைவேறு கால்வேறாக கொய்ததோடு அன்றி ஏந்தியவாளோடும் அவர்தம் தோள்களையும் பிய்த்து எறிந்து ருத்ரதாண்டவம் ஆடினானாம் அனுமன் என்கிற சண்டமாருதி..!
"மூளையும் உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய்
மீள் இருங் குழைபட, கரி விழுந்து அழுந்த,
தாளொடும் தலை உக, தட நெடுங் கிரிபோல்
தோளொடும் நிருதரை, வாளொடும் துகைத்தான்...!"
அடுத்த பாடல் இதுதான்...
"மல்லொடு மலை மலைத் தோளரை, வளை வாய்ப் -
பல்லொடும், நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள்...
வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும்...
சொல்லொடும், உயிரொடும், நிலத்தொடும்.. துகைத்தான்..!"
அதாவது,,
மல்யுத்த வீரரைபோல மலைமலையாக தோள்களையுடைய அரக்க சேனையை ,
வாயினில் நீண்டு வளைந்த அவர்தம் கோரப்பற்களோடும்..
பகட்டான கொடுங்கரங்களோடும்..
ஏந்திய வில்லோடும்.. அயில்(வேல்)களோடும்..
ஆ..! ஓ..! என கதறும்(விளிக்கும்) ஒலியோடும்.. உயிரோடும்.. சேர்த்து அந்த நிலத்தோடு புதைத்தான்..!
இன்னொரு பாடலையும் பார்த்துவிட்டு இந்த படலத்தை முடித்துக்கொள்வோம்..!
கனன்று எரிகிற நெருப்பின்புகை எப்படி எல்லா திசைகளிலும் விரவுமோ அவ்வாறு பார்க்குமிடமெல்லாம் அனுமன் ஆக்ரோஷ action அவதாரம் எடுத்து பொலிந்தானாம்..!
சிகைபோல சிகரம்போல உயர்ந்தோங்கிய கொடிகள்பறக்கும் தேர் ரதங்களை சுட்டெரித்தபடி போய்க்கொண்டிருந்தானாம்..!
ஒப்பற்ற மதயானைகளையும் குதிரை பரிவாரங்களையும் சரித்தவண்ணம் உலாவிக்கொண்டிருந்தான்..!
எந்த கூட்டம் சற்றுமுன்பு தன்னை அற்ப குரங்கு என கூறி பகடி செய்ததோ,, எள்ளி நகைத்த அப்படையினரின் அத்தனைபேருடைய தலைகளையும் தரையில் உருளவிட்டபடி அதன்வழியே நடந்தானாம் வீர அனுமன்..!
பாடல் இதோ...
"புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்;
சிகை நெடுஞ் சுடர் விடும் தேர்தொறும் சென்றான்;
தகை நெடுங் கரிதொறும், பரிதொறும், சரித்தான்;
நகை நெடும் படைதொறும், தலைதொறும், நடந்தான்...!"
********
கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படபாடல்கள் எந்த அளவிற்கு தரம்குன்றி போயிருக்கிறது என்பதை யாவரும் அறிவீர்..! புகழ்பெற்ற ஒருவர் இசையமைத்தார் என்பதற்காகவே கேட்க காதுகூசுகிற ஒலிகளை கொண்டாடி வருவதும் இளையதலைமுறைகளின் கோமாளித்தனங்களில் ஒன்றாய் இருக்கிறது..
என்றாலும்கூட சேற்றில் மலரும் செங்கமலம் போல.. எப்போதாவது திடீரென சில புதுப்பாடல் வரிகள் நெஞ்சை தைப்பதை அரிதாக அனுபவித்திருக்கிறேன். அப்படி ஒன்று "வீரம்" என்ற பிரபல திரைபடந்தனில் வரும் இறுதிப்பாடல்.. "ரத கஜ துரக பதாதிகள்.." என தொடங்குகிற இந்த பாடல் முறுக்கேற்றும் இசையோடு நறுந்தமிழ் வரிகளில் வெகுநாட்களுக்கு பிறகு வெளியான திரைப்பாடலாக தனித்து மிளிர்ந்தது..! அந்த வரிகளை இயற்றிய கவிஞர் விவேகா -வை மனதார பாராட்டுகிறேன்..!
(ஆனால் பைத்தியக்கார படக்குழு அந்த பாடலை ஏதோ கிளைமாக்ஸ் சண்டைக்கான BGM மாதிரி பயன்படுத்தியிருக்குமே தவிர தனி பாடலாக இருக்காது..)
அந்த வரிகள் தருகிறேன்.. பாடலையும் தெம்பு இருந்தால் இன்னொருமுறை கேட்டுப்பாருங்கள். வீரம் பிறக்கும்.
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருகளம் சிதறிடும் வீரம்..!
சக மனிதன் ஒரு துயரெனக் கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துகளளவும் பகை புகலிங்கு தவறெனக்
காப்பரணாய் நிற்கும் வீரம்
தனி அரிமா போல எந்தத் தருணமும்
தாக்கிடும் பெரும் வீரம்..!
சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணையில்லா வீரம்..!
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்..!
எரிதழலாய் நின்று
எதிரிகள் அலறிட
சமரினில் திமிறிடும் வீரம்..!
பயம் எனும் சொல்லிங்கு பரிச்சயம் இலையடா
பரம் பொருள் வரம் தந்த வீரம்..!
கடும் புனலே மோத வரும் வேளையில்
களிப்புறும் தனி வீரம்..!
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருகளம் சிதறிடும் வீரம்..!
******
சூரியராஜ்
சமீபத்தில் ஒரு புத்தக கடைக்கு சென்று, 'கம்பரமாயணம் வேண்டும்' என்று கேட்டேன்
பதிலளிநீக்குஅந்த கடைக்காரப் பெண்ணால் அந்த சொல்லையே புரிந்து கொள்ள முடியவில்லை
காம்போ...ராமாயணமா.? என்கிறாள்
'கம்பராமாயணம்' என்று நிறுத்தி அழுத்தி கூறிய பின் தான் தேடத்தொடங்கினாள்.
பத்து நிமிடத்திற்கு பிறகு...
கடை முதலாளியிடம் கேட்டாள்.., 'அப்பா கம்ப ராமாயணம் இருக்கு'
முதலாளி, 'இருக்கு என்று கூறிக்கொண்டே வந்து அவர் ஒரு இரண்டு நிமிடங்கள் ராக்கைகளை அலசி ஒரு புத்தகத்தை என்னிடம் வந்து நீட்டினார்
அதில் ராஜாஜி ராமாயணம் என்று எழுதி யிருந்தது.
'இது இல்லை.. எனக்கு கம்பராமாயணம் வேண்டும்' என்றேன்
'அட இதுதான் தம்பி அது' என்று அடித்து கூறினார் அவர்
எனக்கு வேடிக்கையாகவும் எரிச்சலாகவுமே இருந்தது.
அந்த நூல் வியாசர் விருந்து என்பது எனக்கு நன்றாகவே தெரியும்
எத்தனை சுகமான விருத்தங்களை கம்பர் படைத்திருக்கிறார். ஆனால் ஒரு புத்தக கடைக்காரருக்கே அவரது பெயர் கூட தெரியாமல் இருக்கிறது.
நன்றாக படித்த பெண் போல் அவளிருந்தால்.. ஆனால் அவளுக்கோ கம்பர் என்ற சொல்லே வாயிலில் நுழையவில்லை
பிறகு விளக்கமாக அவர்களுக்கு 'கம்பர் என்பவர் கிபி.... என்று தொடங்கி செய்யுள் சிலவும் சொல்லி புரிய வைத்த பின்னும் அந்த கடைக்காரர் என்னிடம் என்ன கேட்டார் தெரியுமா
'அது எதுக்கு உனக்கு?'
அந்த கடைசி கேள்வி பலவிஷயங்களில் இன்னமும் என்னை துரத்துகின்றது..!😔
நீக்குபுதிதாக வந்த தமிழ் ஆசிரியர் 10 வகுப்புக்கு பாடம் எடுக்க வகுப்பில் நுழைகிறார். ஒருவனை நோக்கி
நீக்கு"அடே தம்பி எழுந்திரு! ராமாயணத்தின் கதாநாயகன் யார்?"
"அது... வந்து சார்... தெரியல சார். இப்பதான் சார் இப்படி படத்தொட பெயரையே கேள்விப்படுறேன். ஆமா யாரு சார் ஹிரோ?"
"தம்பி உன் பெரு என்ன?'
"சீதாராமன் சார்..."
இதுதான் இன்றைய நிலமை!
ரத கஜ என்ற அந்த பாடலை இதுவரை நான் எங்கேயும் கேட்கவில்லை.
பதிலளிநீக்குகேட்டிருப்பீர்கள்.. ஆனால் வரிகளை கவனித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.. படமாக்கப்பட்ட விதம் அப்படி... இசையில் கொஞ்சம் இரைச்சல் மிகுதிதான்..! you tube ல் ரதகஜ என வரிகளை அடித்தாலே வந்துவிடும்..
நீக்குநயமிகு வரிகள் இன்றைய நவீன இரைச்சல் இசையில் நசுங்கி போகின்றன...
பதிலளிநீக்கு