பொதுவாக அறிவை மூன்று விதமாக பிரிக்கின்றனர். அவை இயற்கை அறிவு (பிறக்கும் போதே அமையும் அறிவு), செயற்கை அறிவு (கல்வி மற்றும் நூல்களின் மூலமோ அல்லது பார்த்து கேட்டு அறிவது), உலக அறிவு (இயற்கை மற்றும் செயற்கை சேர்ந்தது). முதல் இரண்டு அறிவையும் முழுமையாக பெறுவதே உலக அறிவு. இந்த உலகத்துடன் அமைந்து வாழ்வதே உலக அறிவு அதை பற்றியே வள்ளுவர் அறிவுடைமை அதிகாரத்தை தருகிறார்.
முன்னோர் பொன்மொழி “அறிவு வளர் அகிலம் ஆழ்” என்பது. பகுத்து அறியும் ஆற்றலாலே தான் அனைத்து உயிரினங்களிடமும் இருந்து மானுடன் தனித்து காணப்படுகிறான்.
நான் பார்த்த உலகத்தில் திருக்குறள் எப்படி பயன்படுகிறது என்பதையே இந்த பதிவில் பார்ப்போம்...
காட்டிற்குள் ஒருவன் நடந்து செல்ல அங்கே அவனை ஓநாய் ஒன்று நெருங்கியது. அப்போது அவன் பயத்தில் அருகிலிருந்த கம்பை எடுத்த ஒரு வீசுவீசுகிறான். கம்பில் ஓநாய் அடிபட்டு ஓடிவிடுகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் மனிதனுக்கு இயல்பான நிலையில் மூளை வேலை செய்வதை விட ஆபத்தான நேரத்தில் அதிக ஆற்றலுடன் வேலை பார்க்குமாம். அதே போல நம்மிடம் பண பலமோ, படை பலமோ இருந்தால் அதை எதிரி வென்று விட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அறிவாற்றலை யாராலும் அழிக்க முடியாது. இதேயே வள்ளுவர்.
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். (குறள்-421)
இப்பதிவில் முக்கியமாக ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். பல திரைப்படங்களில் 'என் மனதிற்கு பிடித்திருக்கிறது அதனால் செய்கிறேன்', 'என் மனசுல பட்டத சொல்கிறேன்' என்றும், பாடல்களில் 'மனம் போன போக்கிலே.. மனிதன் போகலாமா?' என்றும், இவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு, அறிவுரைகள் கூறும்போது கூட 'மனசு சொல்வதை கேட்காதே, அறிவு சொல்றத கேளுனு' சொல்லுவாங்க.
மனசு எங்கே இருக்கிறது? மனது நமக்கு எப்படி கூறுகிறது?
எல்லாமே அறிவு மட்டும் தான். மனது என்பது காற்று போல கூட கிடையாது. அது வெறும் கற்பனையான ஒன்று, இல்லாத ஒன்று தான் மனது. அறிவு மட்டுமே நமக்கு சிந்திக்கும் திறனைக் கொண்டுள்ளது.
எனது நண்பன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் இறந்து போன அக்காவின் ஆவி உலாவிக்கொண்டு இருப்பதாக பயமூட்டினான். அப்போது அதை நம்பினேன். இப்போது வருகின்ற பல திரைப்படங்களில் கூட அதையே கதையாக வைத்து பல பாகங்களை வெளியிடுகிறார்கள்.
நம் அறிவின் வழி பார்த்தோமேயானால், அது அப்பட்டமான பொய் என்பதை அறியலாம். ஆவி என்பது ஆத்மா என்று கூறுகின்றனர். மூளை என்பது உடலில் உள்ளது. ஆத்மாவில் அல்ல.
நாம் காண்கின்ற மற்றும் கற்கின்ற அனைத்துமே மூளையில் தான் சேமிப்பாகும். அப்படியிருக்க ஆத்மா எப்படி? அதே போல யோசித்தீர்களேயானால் இறந்த பிறகு நம் ஆத்மா உடலிலிருந்து வெளிவந்தாலும் கூட நமக்கு எந்தவித நினைப்பும் இருக்காது. அதாவது அம்மா அப்பா மனைவி மக்கள் என நம்மை கூடி அழுதாலுமே கூட நமக்கு ஒன்றும் தெரியாது காரணம் நம் அறிவோடு கூடிய உடல் ஆங்கே படுத்தல்லவா கிடக்கிறது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்-423)
ஐந்து நண்பர்கள் இருக்கும் போது அதில் ஒருவன் மட்டும் எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் இருப்பான். அவனை மற்ற நால்வரும் உதவாதவன் என்றும், கோழை என்றும் 'உனக்கெல்லாம் வாழ்கையை என்ஜாய் பண்ணவே தெரியல' என்றும் கூறுகின்றனர். உண்மையில் இக்காலத்தில் புகைப்பிடித்தால் 'கெத்து' மது அருந்தினால் 'கெத்து'... என்ன பெரிய கெத்து?
நன்கு சிந்நித்தால் அந்த கெத்து தான் ஒன்றுக்கும் உதவாதது மற்றவர்க்கும் துன்பம் தருவது.
ஒருவரை துன்புறுத்தவோ, தீய செயல்கள் செய்யவோ, பயப்படுபவன் இக்காலத்தில் கோழையனாக கருதப்படுகிறான். ஆனால் வீரனாக இங்கு மதிக்கப்படும் சிலரே அப்படி கோழையாக கருதப்படுபவதற்கு உகந்தவர்கள். முன்னவனை கோழையாக எண்ணி தவறுகளை செய்பவர்களே உண்மையான கோழைகள்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். (குறள்-428)
தற்போதய காலகட்டத்தில் பல தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு பல நோய்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்கிறோம். பலர் அதைப் போடாமல் வருந்துகின்றனர். இப்போது கூட கொரோனா என்ற நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி போடுகிறோம். ஏன்? அதுவே அறிவு.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். (குறள்-429)
இந்த அதிகாரத்தில் இல்லாத இன்னொரு ஒரு குறளையும் உதாரணம் காட்டுகிறேன்.
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது (குறள் - 843)
பொருள் என்னவென்றால், அறிவில்லாத ஒருவன் தம்மை தாமே துன்புறுத்தும் துன்பம் அவன் எதிரி கூட அவனுக்கு அப்படி ஒரு துன்பத்தை கொடுக்க மாட்டானாம். இதற்கு இப்போது பரவலாக காணப்படும் போதை பழக்கத்தை கூட சொல்லலாம். அந்த பழக்கம் துன்பத்தை தரும் என அந்த பெட்டியிலே படத்துடன் பெரிதாக போட்டிருப்பார்கள் அதை அறிந்தும் அறிவில்லாது செய்வதால் அவனுக்கு துன்பம் மட்டும் வருவதன்றி அவன் குடும்பத்துக்கும் பெரிய துன்பத்தை கொடுக்கிறான். 'அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரண்டு சக்கரங்கள்' என்று ஜப்பானிய பழமொழி உண்டு.
சுவாமி விவேகானந்தர் கூட அறிவை பற்றி இப்படி சொல்கிறார் "அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்,அறிவுதான் சக்தி" என்று.
'அறிவுடமை' அதிகாரம் மட்டும் அல்ல இன்னும் பல அதிகாரங்கள் நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றது இனியும் உதவப் போகிறது! ஆகவே முன்னோர் நல்வழி நடப்போம்...
குறள்மகன்
இந்த வார தென்றலை பெற |
அருமையாக உள்ளது.தொடர்ந்து எல்லா குறளுக்கும் எழுதவும்.
பதிலளிநீக்குSuper🔥🔥
பதிலளிநீக்கு