கால நேர் காணல்
1.பிர்லா இல்லம்
கண்ணுக்கு தெரியாத ஒரு நுணுக்கத்திலிருந்து வெளியே வந்த கலாம் தான் எங்கே இருக்கிறோம் என்ற ஐய விழிகளுடனே நாற்திசையையும் சுற்றிப் பார்த்தான்.
தந்தை புதிதாக கண்டுபிடித்து வைத்திருந்த 'பெல்ட்' மாதிரியானதொரு சாதனத்தை மாட்டிக்கொண்டதும். அதிலுள்ள பொத்தான்களை காணாமலே அழுத்தியதும். பின் பலவிதமான மின்னல்கீற்று உலகினுக்குள் நுழைந்ததும். அங்கே பலகோடி துளைகளை கண்டதும் அதிலொரு துளையிலிருந்து வெளிப்பட்டதுமாகிய நினைவு அவனை தொட்டுச் சென்றது.
முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருந்த அவன் குர்தாவை தூக்கிப் பார்த்தான். இடுப்பில் அந்த பெல்ட் நீல நிற ஒளியை மினிக்கிக் கொண்டிருந்தது. அந்த ஒளி கந்தையின் தடுப்பையும் மீறி லேசாக கசிந்ததை அவன் குர்தாவை கீழிறக்கியதும் கவனித்தான்.
பின் மீண்டும் குர்தாவை மேலேற்றிப் பார்த்தான். இந்த முறை அதிலுள்ளவற்றை படித்துவிட்டு அழுத்துவோம் என்றவனுக்கு தோன்றிற்று.
அதில் மொத்தம் ஐந்து பொத்தான்கள் இருந்தது. முதல் மற்றும் இறுதி பொத்தானில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அதிலொன்று கருப்பாகவும் இன்னொன்று சிவப்பாகவும் இருந்தது. இடையிலிருந்த மூன்று பொத்தான்களிலும் மேற்படி T,O,S என்று எழுதப்பட்டிருந்தது.
கலாம் குழப்பமடைந்தான். அவன் தந்தையை நினைத்தவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று.
'மெத்த படித்து பிரயோஜனம் என்ன' என்று வாய்க்குள்ளே முணகிக் கொண்டான்.
அப்போது தூரத்திலோர் கட்டிடத்தின் வாயிலில் 'அல்பியோன்' கார் வந்து நிற்பதை அவன் கவனித்தான்.
கலாமிற்கு ஆச்சரியமாக இருந்தது. அல்பியோனை பற்றி அவன் நிறைய படித்ததுண்டு.
'இந்த வகை கார் அழிந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது. ம்யூசியத்தில் இருக்க வேண்டியது இங்கெப்படி வந்தது?
கலாமின் மனதில் பல்வேறு கேள்விகள் வந்து விழுந்தது. கூடவே சார்லி சாப்லினும் வந்தார்.
அந்த கட்டடத்தின் அருகே செல்ல வேண்டும் போல் அவனுக்கு தோன்றிற்று. அந்த கார் ஓனரிடம் கேட்டுப்பார்த்தாவது அல்பியோனை ஓட்டிவிடுவது என்ற ஆசையிலே வேக நடந்தான்.
கார் நிறுத்தப்பட்டிருக்கும் கட்டிடமானது பெரியதொரு முன் தோட்டத்தினை கொண்டிருந்தது. அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குழுமம் குழுமமாக தாங்கள் தங்களது பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
கிட்டே வந்த கலாமிற்கு அது பள்ளிக்கூடம் போலே தெரிந்தது. எல்லோரும் வெள்ளை அங்கியையும் வெள்ளை கால் சட்டையையும் வெள்ளை குல்லாவும் போட்டிருப்பதை பார்த்த அவன் இது ஏதோ ஆண் செவிலி பயிற்றுக் கூடமென்றே நினைத்துக் கொண்டான்.
கலாமிற்கு ஒரு விஷயம் அங்கே வியப்பாக இருந்தது. அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே மாட்டிவிடப்பட்டிருந்த பலகைகளில் வேற்று இந்திய மொழியொன்றில் எழுதப்பட்டிருந்தது.
அங்கே நின்ற மக்களை இன்னொரு முறை கூர்ந்து கவனித்தான். வயசான கிழவர்களும் ஒன்றிரண்டு வெள்ளையர்களும் கூட அவன் கண்ணில் பட்டார்கள்.
கலாம் அல்பியோனை மறந்தான். தான் இடுப்பில் போட்டிருக்கும் பெல்ட்டை மீண்டும் ஒருமுறை பார்த்தான். 'இது என்ன கருவியாக இருக்குமென்று அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
கட்டிடத்திற்குள் நுழைந்தான். பிரவேசம் செய்வதற்கு நடுவே வழியும் பக்கவாட்டில் தோட்டத்திற்கான நிலமும் பக்குவமாய் அமைக்கப்பட்டு அந்த வெள்ளை நிற கட்டிடம் எளிமை கூடி எழில்மிகு காட்சி தந்தது.
கையில் கூடையுடன் நின்ற கதர் சட்டைப்போட்ட ஒருவர் இந்த கலர் சட்டைப் பையனை விசித்திரமாக பார்த்தார். அவர் அருகே நின்ற இன்னொரு கதராடை மனிதர் அவரிடம் ஏதோ ஒன்றை சொன்னார்.
இவர்களின் பரிபாஷனை கலாமின் காதுகளுக்கு புரிந்தாலும் மூளைக்கு புரிந்ததாய் தெரியவில்லை.
'இது ஏதோ மொழி, ஆனால் என்ன மொழி….,' என்று மனதில் முணகிக் கொண்டிருக்கும் போதே இதுவரை லேசாக நீலத்தை கசித்து கொண்டிருந்த அவனது இடுப்புப் பகுதி 'க்கீங் க்கீங்' என்ற சப்தத்துடனே பச்சையை மினுக்கத் தொடங்கியது.
அவசர அவசரமாக கலாம் தன் உடலைத் திருப்பிக் கொண்டு சட்டையைத் தூக்கினான்.
பெல்ட்டில் மினிக்கி கொண்டிருந்த பொத்தானை சட்டென்று அழுத்தினான். ஒலி நின்றது. அந்த பொத்தானில் T என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கவனித்தான்.
'யார் இவர்? பார்க்க வெள்ளையன் மாதிரி இல்லை. ஆனால் வெள்ளையன் மாதிரி பூட்ஸ் போட்டிருக்கார்'
'அது பூட்ஸ் இல்லை… அது… அது… ஏதோ வேற வக செருப்பு'
இதுவரை வேற்று மொழியில் பேசியவர்களின் குரலை இப்போது தமிழில் மொழிப்பெயர்த்து கொடுப்பது இந்த பெல்ட் தான் என்பதை கலாம் கண நேரத்தில் புரிந்து கொண்டான்.
தன் தந்தையை எண்ணி பெருமிதம் கொண்டான்; புன்னகைத்தான்.
'தம்பி என்ன பாபுவ பாக்கனுமா?' தூரத்திலிருந்து ஒரு பெரியவரின் குரல் கேட்டது.
பாபு யாராக இருக்கும் என்ற சிந்தனையிலே கலாம் தலையை அசைத்தான்.
'நேராக போ அந்த கட்டடத்து கீழ் வலது பக்க அறையில் தான் இருப்பார்'
கலாமும் தயக்கத்தோடே அந்த கட்டிடத்தை நோக்கி நகரத்தொடங்கினான்.
முன்பு வேற்று மொழியில் எழுதப்பட்டிருந்த அப்பலகையின் எழுத்துகள் இப்போது அவனுக்கு தமிழிலே தெரிந்தது. தன் பெல்ட்டை ஒருமுறை தொட்டுப் பார்த்து கொண்டான்.
பின் அந்த எழுத்துகளை தன் வாயிலே மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
'பிர்லா இல்லம்'
கலாம் கட்டிடத்தினுள் நுழைந்தான். வலதுபக்க அறையானது சற்றே இரண்டடி தூரத்தில் தான் இருந்தது.
தன் உடலை முழுதும் காட்டாதவனாய். பாபு யார்? என்ற ஐயத்துடனே தலையினை மட்டும் சாய்த்து அறைக்குள் நோக்கினான்.
கலாமின் கண்கள் மின்னிற்று. உலகில் யாரும் காணாதவொரு அதிசியத்தை தான் கண்டதாய் அவன் உடல்கள் சிலிர்த்தது. இதயம் படபடத்தை அவனால் செவியுற முடிந்தது. இந்த அதிசியத்தை யாரிடமாவது சொல்லியே தீர வேண்டுமென அவன் கண்கள் சுற்றி ஜடவுயிர்களை தேடியது.
அறை வாயிலின் நடுவே வந்து நின்றான். அவனது இதழ்கள் பணிவு கொண்டு ஒரு பெயரை தன் இதயத்திலிருந்து வெளிப்படுத்தியது.
'மகாத்மா காந்தி'
ஆம், மகாத்மா காந்தி அவர்கள் கலாமின் எதிரே இந்தியாவின் தலைவர் என்றபடி இல்லாமல் ஓர் சாதாரண மனிதராய் அமர்ந்திருந்தார்.
கலாமிற்கு காந்தியின் பாதங்களை தொட வேண்டும் போலிருந்தது. அந்த நம்ப முடியா ஆச்சரியமே அவனை சிலையாக்கியும் விட்டிருந்தது.
தன் தந்தையின் கண்டுபிடிப்பு மகத்துவம் அப்போது தான் கலாமிற்கு புரிய வந்தது. அந்த நேரம் அவன் கண்கள் கண்ணீரை சுரந்தன.
கடிதங்களை படித்துக் கொண்டிருந்த காந்தி மெல்ல தன் கண்ணாடியை நிமிர்த்தியபடியே எதிரே நின்ற கலாமை நோக்கினார்.
'யாரப்பா நீ… பார்க்க மாணவன் போலிருக்கிறாய்' காந்தி மென்மையாக பேசினார்.
தாத்தா என் பெயர் கலாம். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன்.
நன்றாக ஹிந்தி பேசுகிறாய். காந்தி தொடர்ந்தார், நானும் தமிழ் கற்க முயற்சி செய்தேன். சிரமமான மொழி தான். இருந்தும் சில வார்த்தைகளை பயின்றுள்ளேன்.
கலாமிற்கு தான் பேசும் தமிழ் காந்திக்கு ஹிந்தியாக கேட்பது வியப்பாக இருந்தது.
தன் இடுப்பை தொட்டுக் கொண்டான்.
காந்தி மேலும் தொடர்ந்தார், 'திருக்குறள் படித்திருக்கிறாயா?'
'சில அதிகாரம்' கலாம் தயங்கினான்.
நான் மொழிப்பெயர்ப்பு படித்திருக்கிறேன். தமிழர்களின் ஞானத்திற்கு குறளே போதும். நான் அவைகளை தமிழிலே படிக்க ஆவல் கொள்கிறேன். இறைவன் நினைத்தால் அதுவும் ஓர் நாள் சாத்தியமாகும்.
காந்தி பேசிக்கொண்டே கடிதங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா, நானிங்கே அமரலாமா? உங்களோடு சிலவற்றை பேச விரும்புகிறேன்.
தாராளமாக பேசலாம், காந்தி இன் முகம் செய்தார்.
அப்போது அறைக்குள் ஆஜானுபாகுவான மனிதரொருவர் பிரவேசித்தார்.
'பாபுவுக்கு வணக்கம்! ஏதும் பணியுள்ளதா?' அந்த மனிதர் சேவகன் போல் பணிந்தார்.
'ராம் கோபால், இத்தனை நேரம் எங்கிருந்தாய் நம்மை காண தமிழகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் பார்' என்றார் காந்தி.
ராம் கோபால் கலாமுக்கு வணக்கம் செய்தார்.
'ராம் கோபால், நம் விருந்தினருக்கு ஏதும் கொண்டுவா' காந்தி அன்பாக சொல்ல அந்த பணியாள் அவ்வறையை விட்டு அகன்றார்.
'தாத்தா எனக்கொரு சந்தேகம். உங்களை ஏன் எல்லோரும் 'பாபு' என்று அழைக்கிறார்கள்?'
காந்திஜி சலனமின்றி சொல்லத் தொடங்கினார். 'நாம் பிறரிடம் எப்படி பரிவு காட்டுகிறோமோ அப்படியே பாவிக்கப்படுகிறோம். பாபு என்பதற்கு தந்தை என்று பொருள். என்னை சார்ந்தோர்கள் என்னை தந்தையாக பாவிக்கிறார்கள் நீ தாத்தாவாக பாவிப்பது போல்' காந்தி மென்னகை செய்தார், கலாமும் நகுதான்.
அந்த நேரத்தில் ராம் கோபால் அறையினுள் நுழைந்தார். சில வேக வைத்த பீட்ரூட் துண்டுகளையும் சப்பாத்தியையும் ஒரு பித்தளை தட்டில் வைத்து கலாமிற்கு பரிமாறினார்.
'உங்களுக்கு என்ன வயது?' ராம் கோபால் கலாமை பார்த்து அடக்கமாக கேட்டார்.
18 இப்போது 19 கூடிய விரைவில்.
18 க்கு நீங்கள் மிகவும் சிறுவனாக தெரிகிறீர்கள். எங்கள் ஊரில் 18 வயது இருப்பவன் தாடி மீசையோடு முரடனாக தெரிவான்.
காந்தி மெல்ல தொடர்ந்தார், 'ராம் கோபால்… உடலுக்குத் தான் வயதே அன்றி உயிருக்கு அல்ல. இங்கு எல்லோரும் உடலை கழட்டி எறிந்து விட்டால் ஒரே வயது தான்'
ராம் கோபால் பணிவுடன் அதை ஏற்றுக்கொண்டார்.
'தாத்தா….என் அம்மா என்னிடம் இரண்டொரு கதையை கூறியுள்ளார்கள். அந்த கதை உண்மையா பொய்யா என்பதை உங்களைத்தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது'
'என்னைப் பற்றிய கதையா? என்ன கதையது?' காந்தி ஆர்வமானார்
கலாம் கதையை தொடங்கினான்,
ஒருமுறை ஒருபெண்மணி அவர்களது பையனை உங்களிடம் அழைத்துவந்து, 'இவனுக்கு மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இவனை எப்படியாவது திருந்துங்கள் என்று வேண்டிக் கொண்டார்களாம். அதற்கு நீங்கள் அவர்களை ஒருவாரம் கழித்து வர சொன்னீர்களாம், அவர்களும் வந்தார்களாம். அப்போது அந்த பையனை கூப்பிட்டு நீங்கள் 'இனி மிட்டாய் சாப்பிடாதே' என்று அறிவுரை தந்தீர்களாம். அதற்கு அந்த பையனின் தாய், ஏன் காந்தி நீங்கள் அன்றே இந்த அறிவுரையை தர வேண்டியதானே என்று கேட்டார்களாம். அதற்கு நீங்கள், எனக்கே மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதனால் அவனுக்கு அறிவுரை செய்யக்கூடிய நிலையில் நானில்லை. இந்த ஒரு வாரத்தில் நான் மிட்டாய் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டேன். இனி அறிவுரை சொல்ல இயலும். அதனால் தான் உங்களை ஒரு வாரம் கழித்து வர சொன்னேன் என்றீர்களாம். இது உண்மையா?
நான் அந்த இன்னொரு கதையையும் தெரிந்து கொள்ளலாமா? காந்தி மேலும் விருப்பமுற்றவராய் கேட்டார்.
ஒருமுறை நீங்களும் சர்ச்சில் அவர்களும் சந்தித்து கொண்டீர்களாம். சர்ச்சில் உங்களிடம் வந்து ஒருபுறம் பணம் இருக்கிறது இன்னொரு புறம் ஞானம் இருக்கிறது எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்று கேட்டாராம். அதற்கு நீங்கள் பணத்தை தேர்வு செய்தீர்களாம். சர்ச்சில் உங்களை கேலி செய்தாராம். சர்ச்சில் சொன்னாராம், 'உனக்கு அறிவே இல்லை…. நானாக இருந்தால் ஞானத்தை தான் தேர்வு செய்திருப்பேன்' என்று. அதற்கு நீங்கள் சொன்னீர்களாம், 'ஆமாம் யாரிடம் எது இல்லையோ அதைத்தானே தேர்வு செய்யமுடியும்… என்னிடம் பணம் இல்லை, உன்னிடம் ஞானமில்லை' என்று.
கலாம் சொல்லி முடிக்க. காந்தி சிரித்தே விட்டார். காந்தி சிரிக்க ராம் கோபாலும் சிரிக்கத் தொடங்கினார்.
'இந்த கதைகளின் நோக்கத்தையும் கற்பனையையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக அந்த இரண்டாவது கதையை' காந்தி மேலும் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார், 'இங்கிலாந்தில் நான் கேள்வி கேட்பவனாகவும் சர்ச்சில் பதில் சொல்பவராகவோ கூட மாற்றம் பெற்றிருக்கலாம்'.
'தாத்தா… நான் உங்களை மிகவும் அமைதியானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லா நேரத்திலும் அமைதி உதவுமா? அப்பறம் ஏன் இயற்கை நமக்கு கோபத்தை கொடுத்திருக்கிறது? ரௌத்திரம் பழக வேண்டாமா?' சப்பாத்தியை பிய்த்துக் கொண்டே கலாம் வினவினான்.
'அமைதி தான் வெல்லும் என்பதற்கு என் கடந்த காலத்தை விட நல்லதொரு உதாரணம் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த அமைதியை நாம் தினசரி வாழ்வில் கடைபிடித்து நடக்க வேண்டும். எங்கு நம் எதிரிகள் தென்பட்டாலும் அவர்களை அன்பினாலே வெல்ல வேண்டும். ஆசையையும் இயற்கை தான் நமக்கு கொடுத்துள்ளது. அதை தூபம் போட்டு வளர்ப்பவன் மனிதன் தானே. நெருப்பை அணைக்க நெருப்பை ஊற்றுவதற்கு சமம் தான் கோபத்தை ஆயுதமாக்குவதும். அஹிம்சையே இப்பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு காணும்' என்றார் காந்தி.
எங்கள் தமிழகத்தில் வள்ளலார் என்ற மகானொருவர் வாழ்ந்தார். அவர் சொன்ன ஜீவகாருண்யமும் உங்களது அஹிம்சையும் ஏறத்தாழ எனக்கொன்று போல் தான் தெரிகிறது. நீங்கள் கேள்விப்பட்டதுண்டா தாத்தா?
ம்ம்… மதுரை வந்த போது என் வாழ்க்கை மாறியது. ஒருவேளை இப்பெயரை நான் கேள்விப்பட்டிருந்தால் எங்களது அஹிம்சா சங்கத்தின் பெயரும் மாற்றப்பட்டிருக்கலாம்.
காந்தி மெல்ல நகைத்தார்.
ராம் கோபால் இடை மறித்தார், 'பிள்ளாய்… ஒருமுறை எங்கள் பாபுவை ஒரு வெள்ளையன் தன் கருப்பு பூட்ஸ் காலால் முகத்திலே உதைத்து விட்டான்'
'அச்சச்சோ' கலாம் பதறினான்.
ராம் கோபால் மேலும் தொடர்ந்தார், அப்போது எங்கள் பாபுவின் இரண்டு பற்கள் விழுந்துவிட்டது.
அந்த கணத்திலே எங்கள் பாபு என்ன சொன்னார் தெரியுமா?
'ஒரு கருப்பன் உதைத்து இரண்டு வெள்ளையன் விழுந்துவிட்டான். இதுதான் உங்கள் அடிக்கும் எங்கள் அஹிம்சைக்கும் உள்ள வேறுபாடு' என்றார்
'அங்கேயே எங்களது பாபுவின் அஹிம்சை பிறந்துவிட்டது' என்று ராம் கோபால் பெருமையுடன் சொன்னார்.
'இல்லை ராம் கோபால்', காந்தி பேசத்தொடங்கினார்.
என் 18 ஆவது வயதிலே எனக்கு அஹிம்சை போதிக்கப்பட்டுவிட்டது. ஆம், நான் என் 13 வயதிலிருந்து 18 வயது வரை செய்யாத பாவமில்லை. எங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கூட நான் திருடியதுண்டு. ஒரு நாள் நான் என் தந்தையிடம் இதுவரை செய்த பாவங்கள் பற்றி சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் சொல்ல பயம் அதனால் என் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
'நான் செய்த பாவங்களுக்கு என்னை மன்னிக்கவும், என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்' என்று தான் ஆரம்பித்தே இருந்தேன். முழுதுமாக என் பாவங்களை பட்டியல் செய்து தந்தையிடம் கொடுத்த பின் அவர் செய்த காரியம் தான் எனக்கு அஹிம்சையை போதித்தது.
கடிதத்தை படித்த அவர் அழுதார், பின் அதை கிழித்தார். என்னை மன்னித்ததாய் சொன்னார்.
எல்லா தந்தைகளையும் போல் என் தந்தையும் என்னை அப்போது அடித்திருந்தால் நான் இன்றொரு அஹிம்சாவாதியாக இருந்திருக்க முடியாது. அவரது அஹிம்சை தான் என்னை திருத்தியது. மன்னிப்பின் சக்தியை அன்று உணர்ந்தேன்.
கலாம் நீயும் அஹிம்சை என்னும் ஒழுக்கத்தை கடைபிடி. இந்தியத்தாய்க்கு நீ செலுத்தும் அன்புக்கடனாக அதை நினைத்துக் கொள்.
காந்தி உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ராம் கோபால் சுவற்றோரமாக நின்று அழுதுக் கொண்டிருந்தார்.
ஓரிரு நிமிட மௌனத்திற்கு பின் காந்தி தொடர்ந்தார்.
'கலாம் உன்னை போன்ற இளைய சமூதாயத்திற்கு நான் சொல்வது என்னவென்றால், எல்லோர்க்கும் நன்றே நினை! நன்றே செய்! என்பதாக மட்டும் தான் அது இருக்க வேண்டும். அதுவே ஆன்மீகம் என்று உணர வேண்டும். நீ ஒருவருக்கு செய்யும் நன்மை உனக்கு தெரியாத ஒருவருக்கு தீமை தருமானாலும் கூட அதை ஒருகாலும் செய்யாதே! எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு! நல்லொழுக்கமிக்க மனிதர்களை இந்த காரணிகளாலே தயார் படுத்த இயலும் என்பதை நம்பு' காந்தி முடித்தார்.
கலாம் தன் நெஞ்சில் கைவைத்து, 'நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன் தாத்தா' என்று வாக்கு தந்தான்.
அப்போது காந்தியின் அறைக்குள் இரண்டு பெண்மணிகள் நுழைந்தார்கள்.
வாருங்கள் ஆபா, மனு. இவர் நம் விருந்தினர், பெயர் கலாம். தமிழகத்தை சேர்ந்தவர்.
கலாம் இவர்கள் என் பேத்திகள். இவர் ஆபா, இவர் மனு.
கலாம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தினான்.
தாத்தா இன்று 5 மணிக்கு பிராத்தனை இருக்கிறது. தயாரா?
நான் மறக்கவில்லை மனு. நான் தயாராகவே இருக்கிறேன். காந்தி சற்று கண்களை மூடி யோசித்தார்.
'ஆபா…. எல்லா காகிதங்களையும் கொண்டு வா நான் இன்றே எல்லா கடிதத்திற்கும் பதில் தந்தாக வேண்டும், இனி அது இயலாமல் கூட போகலாம்' காந்தி கட்டளை தொனியில் கூறினார்.
அப்போது எதேட்சையாக அங்கே மாட்டப்பட்டிருந்த ஒரு காலண்டரை கலாம் நோக்கினான்.
குஜராத்தி மொழியிலிருந்த அந்த காலண்டர் பெல்ட்டின் உதவியால் தமிழில் மொழிப்பெயரத் தொடங்கியது.
ஜனவரி 30, 1948
கலாமின் கண்கள் உறைந்த நிலைக்காயின. அவன் பள்ளியில் படித்தது நினைவேற்றது எல்லாம் அவன் நினைவிற்கு வந்தது.
'ஐயோ! அந்த கோர சம்பவம் இன்றைக்குத் தானா' கலாமின் நெஞ்சு கணத்தது.
'தாத்தா இன்று பிராத்தனைக்கு போக வேண்டாம்' என்று கூற முற்பட்டாலும் நா எழவில்லை. ஏதோவொரு சக்தி அவனை தடுப்பது போலிருந்தது.
காந்தி கடிதங்களை எழுதத்தொடங்கினார். ராம் கோபால், ஆபா, மனு ஆகியோர் அவ்வறையை விட்டு அகன்றனர்.
விதி காந்திக்கும் கலாமிற்கும் மட்டும் அந்த அறையை ஒதுக்கியிருந்தது போலும்.
கலாம் காந்திக்கு வரயிருக்கும் ஆபத்தை சொல்ல முயற்சிக்க முயற்சிக்க ஏதோவொரு காந்தம் அவனை அதிகம் இழுப்பது போன்றே அவனுக்கு தோன்றிற்று.
பெல்ட்டில் இருக்கும் நீல ஒளி வேகமாக துடிக்கத் தொடங்கியது. இத்தனை நேரம் உணர்வின் வழி செயல்பட்டுக் கொண்டிருந்த காந்தவிசை ஒரேடியாக கலாமை இழுத்தது.
காந்தியை சந்திக்கவிருக்கும் காலனை பற்றி சொல்ல முடியாமலே கலாம் மீண்டும் ஒரு கால சுழற்சியுள் சிக்கி நுண்ணியதோர் துளையொன்றை கணநேரத்தில் நெருங்கிக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் பிர்லா இல்லத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருந்த மகாத்மா தன் எதிரே இருந்த காலி இருக்கையை பார்த்து புன்னகைத்தார். (தொடரும்)
தீசன்
தீசனாரே, காந்தியிடமே கொண்டு சென்றுவிட்டீர். 👏👏அருமை...
பதிலளிநீக்குஅடுத்த கலாம் யாரை பார்க்க போகிறானோ!? ஆவலுடன் உள்ளோம்!
இரண்டு மூன்று கதாசிரியர்கள் சேர்ந்து எழுதியதை போன்ற stuff இருக்கிறது...
பதிலளிநீக்கு